Search This Blog

9.12.14

பகவத்கீதை தேசிய நூலா?என்ன சொல்லுகிறது கீதை?--கி. வீரமணி

நெருப்பை அணைக்கலாம் எரிமலையை அணைக்க முடியுமா?
சேலம் பொதுக் கூட்டத்தில் தமிழர் தலைவர் சங்கநாதம்!
சேலம், டிச.8- நெருப்பை அணைக்கலாம் எரிமலையை அணைக்க முடியுமா? என்று அக்னிக் குழம்பாகத் தகித்து உரையாற்றினார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள்.

அவர் உரையில் வெடித்த அனல் வீச்சு சுருக்கமாக வருமாறு:

தந்தை பெரியார் மண்ணில், திராவிட இயக்கத்தால் உழுது பக்குவப்படுத்தப்பட்ட இந்த மண்ணிலே காலூன்றிக் காவிக் கொடி அதிகாரத்தைப் பிடிக்கலாம் என்று மனப்பால் குடிக்கும் காவிகளுக்கு எச்சரிக்கை! எச்சரிக்கை!!


அஞ்சா நெஞ்சன் அன்று சொன்னது

பட்டுக்கோட்டை அஞ்சா நெஞ்சன் எங்கள் அண்ணன் அழகிரி பேசுவார்.
ஈட்டி எட்டிய வரை பாயும், பணம் பாதாளம் வரை பாயும் என்பார்கள். ஆனால், எங்கள் தலைவர் பெரியார் இராமசாமியின் குரல் அண்ட பிண்ட சராசரங்களையும் தாண்டி அதற்கப்பாலும் பாயும் என்று சிங்கமெனக் கர்ச்சிப்பார். அதனைக் காவிக் கூட்டத்திற்கு நினைவூட்ட விரும்புகிறோம்.
காவிக் கூட்டமே! எக்கட்சியில் இருந்தாலும் தமிழன், தமிழன்தான்! திராவிடன் திராவிடனே!  பெரியார் மறைந்து விட்டார் என்று கொக்கரிக்கிறாய். பெரியார் உடலால் மறைந்திருக்கலாம் - ஆனால் எல்லாக் கட்சி தமிழர்களின் உணர்விலும் பெரியார் இருக்கிறார் - இருக்கிறார் -மறந்து விடாதே!
நெருப்பை நீர் ஊற்றி அணைத்து விடலாம் - எரிமலையை அவ்வாறு அணைக்க முடியுமா?

நாங்கள் யார்?

நாங்கள் யார்? நாங்கள் மிகப் பெரிய வரலாற்றுக்குச் சொந்தக்காரர்கள் இல்லையா! மூத்த நாகரிகம் திராவிடர் நாகரிகம் அல்லவா! அமெரிக்கா வரை சென்று ஆள்பிடித்து  அவர்கள் மூலம் மரபணு ஆராய்ச்சி செய்து அறிவிக்கிறாயே!

எந்த அடிப்படையில் ஆரியர் - திராவிடர்

ஆரியர் திராவிடர் ரத்த அடிப்படையிலா? எங்கள் தந்தையும், அண்ணனும் இதற்கு எப்பொழுதோ பதில் சொல்லி விட்டார்களே!

ரத்தக் கலப்பு ஏற்பட்டது உண்மைதான். அதே நேரத்தில் கலாச்சாரத்தால், பண்பாட்டால் ஒன்றுபட்டு இருக்கிறோமா? அப்படி ஒன்றுபட்டு இருந்தால் சமஸ்கிருதத்தை ஏன் திணிக்க ஆசைப்படுகிறாய்? சமஸ்கிருதம் ஆட்சி மொழியா?

இந்தியாவுக்கே ஆட்சி மொழியாக சமஸ்கிருதம் தான் என்பதுதானே உங்கள் கொள்கை? அதனைத்தானே உங்கள் குருநாதர் கோல்வால்கர் ஞானகங்கையில் குறிப்பிட்டுள்ளார். இன்றைக்கும் விசுவ ஹிந்து பரிஷத்தின் அகில உலகத் தலைவர் அசோக்சிங்கால் இப்பொழுதுகூட அதனைத்தானே கூறுகிறார்?

அரசமைப்புச் சட்டம் எட்டாவது அட்டவணையில் இடம் பெற்றுள்ள 22 மொழிகளுக்கும் சம உரிமை இருக்க வேண்டாமா! அவற்றை ஆட்சி மொழியாக்க என்ன தயக்கம்? செத்துப் போன சமஸ்கிருதம் இந்தியாவின் ஆட்சி மொழியாம். நீங்கள் சொன்ன தெய்வபாஷை ஏன் செத்துப் போனது? எத்தனைப் பேர்கள் சமஸ்கிருதத்தைப் படிக்கிறார்கள்? புள்ளி விவரம் சொல்ல முடியுமா?

அண்ணல் அம்பேத்கர் அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கி நமக்குக் கொடுத்துள்ளார். மதச் சார்பின்மையை அரசு வலியுறுத்துகிறது. அதற்குச் சத்தியம் செய்து தானே அமைச்சர்களாகப் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள் கிறீர்கள்? இந்தச் சட்டத்தை இவர்கள் ஏற்க மாட்டார்களாம் -  அதற்குப் பதில் மனுதர்மம்தான் அரசியல் சட்டமாம்.

என்ன சொல்லுகிறது மனுதர்மம்?

அப்படிச் சொல்லுவதற்கு எவ்வளவுத் துணிச்சல் வேண்டும்! இந்த 21ஆம் நூற்றாண்டிலும் நாங்கள் சூத்திரர்களா! அவர்கள் போற்றும் மனுதர்ம சாஸ்திரம் என்ன  சொல்லுகிறது?

அந்தப் பிர்மாவானவன் இந்த உலகத்தைக் காப்பாற்றுவதற்காக தன் முகம், தோள், தொடை, பாதம் இவைகளினின்று உண்டான பிராமண, சத்திரிய, வைசிய, சூத்திர வருணத்தாருக்கு இம்மைக்கும், மறுமைக்கும் உரிய உபயோகமான கருமங்களைத் தனித்தனியாகப் பகுத்தார் என்று கூறப்பட்டுள்ளதே!

அந்த அசல் மனுதர்மத்தை நாங்கள் வெளியிட்டு இருக்கிறோமே அத்தியாயம் ஒன்றில் 87ஆவது சுலோகம் இதைத்தானே கூறுகிறது. அதன் 8ஆவது அத்தியாயம் 415 ஆவது சுலோகம் சூத்திரர்கள் என்றால் விபசாரி மகன் என்று சொல்லுகிறதே - அந்த மனுதர்மம்தான் இந்தியாவின் அரசியல் சட்டமா!?
பெரும்பான்மை மக்களைத் தூண்டி விட வேண்டாம் - எச்சரிக்கின்றோம்!

திருக்குறளும் காவிகளின் சூழ்ச்சியும்

திருக்குறளை வைத்து ஏமாற்றப் பார்க்கிறீர்கள்? உங்கள் சூழ்ச்சி எங் களுக்குப் புரியாதா? எப்பொழுது நீங்கள் வென்று இருக்கிறீர்கள்? வீரத்தால், விவேகத்தால் வெற்றி கொண்டது உண்டா?  தந்திரத்தாலும், சூழ்ச்சியாலும் தானே கொல்லைப்புற வழியில் வெற்றி பெற்றுள்ளீர்கள்.


பெரியார் உலகத்திற்கு ரூ.30 லட்சம்
பெரியார் உலகத்திற்காக ரூ.30 லட்சம் நிதியை, கழகத் தலைவரிடம் கழகப் பொறுப்பாளர்கள் அளித்தனர். திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி. பூங்குன்றன், பொருளாளர் டாக்டர் பிறைநுதல் செல்வி, செயலவைத் தலைவர் சு. அறிவுக்கரசு, பொதுச் செயலாளர்கள் டாக்டர் துரை. சந்திரசேகரன், வீ. அன்புராஜ், இரா. செயக்குமார், இரா. குணசேகரன், மாநில சட்டத்துறை செயலாளர் ச. இன்பலாதன், தலைமைச் செயற்குழு உறுப்பினர் பழநி. புள்ளையண்ணன், சேலம் மாவட்ட தலைவர் ஜவகர், செயலாளர் கடவுள் இல்லை சிவகுமார், மேட்டூர் மாவட்டக் கழகத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி, செயலாளர் கா.நா.பாலு முதலியோர் உள்ளனர். (சேலம் - 7.12.2014).அப்படி நீங்கள் வெற்றி பெற்றது அந்தக் காலம்.

வரலாற்றில் ஓர் உண்மை உங்களுக் குத் தெரியுமா?

பெரியார் காலத்திற்கு முன்பு - பெரியார் காலத்திற்குப் பின்பு என்ற வரலாற்றைத் தெரிந்து கொள்ளுங்கள்.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பது திருக்குறள். உங்கள் மனு தர்மமோ, கீதையோ இதனை ஏற்றுக் கொள்கிறதா! பிறவிப் பேதம் தானே ஆரிய இந்து மதம்? மறுக்கமுடியுமா?

பகவத் கீதை தேசிய நூலா?

இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கூறி இருப்ப தாக சில மணித் துளிகளுக்குமுன் சொன்ன கருத்து என் கையில்  இருக் கிறது; பகவத் கீதையை இந்தியாவின் தேசிய நூலாக அறிவிக்க வேண்டுமாம்.
ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து, மனிதனைக் கடிக்கப் பார்க்கிறார்கள்; கீதை என்ன சமத்துவ நூலா? குறளைப் போல பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற தத்துவத்தைப் போதிக்கும் நூலா?

என்ன சொல்லுகிறது கீதை?

கீதை என்ன சொல்லுகிறது? எதையும்  ஆதாரத்துடன் சொல்லக் கூடியவர்கள் நாங்கள். கீதையின் மறுபக்கம் என்ற நூலையே வெளியிட்டுள்ளோம். தமிழில் மட்டுமல்ல; ஆங்கிலத்திலும் வெளியிட் டுள்ளோம். அதில் என்ன, கூறப்பட் டுள்ளது?

ஒரே ஒரு வரியை நீங்கள் மறுக்க முடியுமா?

வைசியர்களும், சூத்திரர்களும், பெண் களும் பாவ யோனியில் பிறந்தவர்கள் என்று எழுதப்பட்டுள்ளதே - இந்தக் கீதைதான் இந்தியாவின் தேசிய நூல் ஆக்கப்பட வேண்டுமா?
திருக்குறளை இப்பொழுது கையில் எடுத்துக் கொண்டுள்ளீர்களே- அந்தத் திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்கத் தயாரா?
குறள் இந்து நூலாம்
திருக்குறளைப் பற்றி உங்கள் குரு நாதர் கோல்வால்கரின் கருத்து என்ன? கோல்வால்கர் எழுதிய பஞ்ச் ஆஃப் தாட்ஸ் (தமிழில் - ஞான கங்கை)யில் திருக்குறள் ஓர் இந்து நூல் என்று குறிப் பிட்டுள்ளாரே! இப்பொழுது புரிகிறதா - இவர்கள் ஏன் திருக்குறளைக் கையில் எடுத்துக் கொண்டுள்ளார்கள் என்பது? திருக்குறளிலும் திரிபுவாதம் செயயத் திட்டமா?

இது இந்த வாரம் விஜயபாரதம் அதில் என்ன எழுதியிருக்கிறார்கள்.

பாரதியார் பாட்டுக்கு விபரீத வியாக்கியானம்

பள்ளித்தல மனைத்தும்
கோயில் செய்குவோம்!

என்று பாரதியார் பாடியுள்ளார். பள்ளிகளைக் கோயில்களாக மதிப்போம் என்று இதுவரை கருத்துக் கூறி வந்தனர். இப்பொழுது ஆர்.எஸ்.எஸ். அதன் அதிகாரப் பூர்வ இதழான விஜயபாரதம் என்ன சொல்லியிருக்கிறது?

பாரதியார் சொன்ன அந்தப் பள்ளி என்பது இஸ்லாமியர்களின் பள்ளி வாசலாம்; அவற்றை இடித்து விட்டு இந்துக் கோயில்களைக் கட்டுமாறு பாரதியார் கூறி இருக்கிறாராம்.

இப்பொழுது புரிகிறதா - மகாகவி பாரதியாரை இந்தியா முழுமையும் கொண்டு செல்லவிருப்பதாக அவர்கள் கூறும் கூற்றுக்கு உண்மையான பொருள்? பாரதியாரைத் தூக்கிப் பாடுபவர்கள் - பாரதிதாசனை ஏன் கணக்கில் கொள்ள வில்லை?

அதிகாரப் பலம் உங்கள் கைகளில் இருப்பதால் நீங்கள் எதையும் பேசலாம் செய்யலாம் என்று நினைக்கிறீர்களா?

வைகோ நடமாட முடியாதா?

எங்கள் சகோதரர் மதிமுக பொதுச் செயலாளர் விமர்சித்தார் நரேந்தி ரமோடியை என்கிறபோது, நடமாட விட மாட்டோம் - வீட்டுக்கு நீ உயிரோடு திரும்பிப் போக மாட்டாய் என்று எந்தத் தைரியத்தில் பேசுகிறீர்கள்? ஆணவத் தின் உச்சிக் கொம்பில் ஏறிக் கொக்கரித் தவர்கள் எத்தனையோ பேர் இருந்த இடம் தெரியாமல் முகவரியில்லாமல் போயிருக்கிறார்கள் என்ற வரலாறு தெரியுமா?

சில பிரச்சினைகளில் சகோதரர் வைகோவுக்கும் எங்களுக்கும் மாறுபாடு இருக்கலாம். கடந்த தேர்தலில்கூட உங்கள் அணியில் இருந்தார் - அதில் எங்களுக்குக் கருத்து மாறுபாடு உண்டு. நாங்கள் அன்று சொன்னதுதான் இன்று நடந்திருக்கிறது.

உங்களை யாரும் விமர்சனம் செய்யக் கூடாதா? உங்களின் வன்முறைப் பேச்சை சகோதரர் வைகோ அலட்சியப்படுத்தி இருக்கலாம். அவரைப் பொறுத்தவரை அது சரியாகக்கூட இருக்கலாம். நாங்கள் பொறுத்துக் கொண்டு இருக்கவேண்டிய அவசியமில்லை.

எல்லாக் கட்சிகளிலுமே திராவிடர் கழகம்

திராவிடர் கழகம் எல்லாக் கட்சியின் பெயர்களிலும் இருக்கிறது. தி.மு.க.விலும் இருக்கிறது. ம.தி.மு.க.விலும் இருக்கிறது. தேசிய முற்போக்குத் திராவிடக் கழகத் திலும் இருக்கிறது. ஏன் அண்ணாவைப் பொம்மையாக வைத்திருக்கும் அண்ணா திமுகவிலும் திராவிடர் கழகம் என்ற பெயர் இருக்கிறது. திராவிடர் இயக்க உணர்வுள்ள, சுயமரியாதை இயக்கக் கொள்கை உள்ளவர்கள் எல்லாக் கட்சிகளிலுமே இருக்கிறார்கள்.

இராமனை செருப்பாலடித்த ஊர்!

இங்கு விழுதுகளும், வேர்களும் பலமாகவே இருக்கின்றன. இதே ஊரில் ராமனை செருப்பாலடித்தோம் என்று தேர்தல் பிரச்சாரம் செய்யவில்லையா? அதன் முடிவு என்ன?

ராமனை செருப்பால் அடிப்பதற்கு முன்பு 1967 சட்டப் பேரவைத் தேர்தலில் திமுக வெற்றி பெற்றது 138 என்றால் ராமனை செருப்பாலடித்த பிறகு 1971 தேர்தலில் 184 இடங்களில் திமுக வெற்றி பெறவில்லையா? இதுதான் பெரியார் மண் என்பதை மறந்துவிட வேண்டாம்!

ஏகலைவன் காலமல்ல இது

இது ஏகலைவனின் கட்டை விரலைக் காணிக்கையாகக் கொண்ட துரோணாச் சாரி காலமல்ல! இப்பொழுது கட்டை விரலைக் கேட்டுப் பார்க்கட்டும் - அப்படிக் கேட்பவர்களின் கைகளே இருக் காது - அந்த அளவுக்கு எங்கள் மக்கள் விழிப்புணர்ச்சி பெற்று விட்டார்கள்  - என்பதை மறக்க வேண்டாம்!
கறுப்புச் சட்டையே ஒரு போர் ஆயுதம்தான் - எதிர்ப்பின் சின்னம் தான். இப்பொழுதுகூட எதிர்ப்பைத் தெரி விப்பது என்றால் அனைத்துக் கட்சியின ரும் அணியும் ஆடை எது? கருப்புச் சட்டைதானே?

எச்சரிக்கை மணி அடிக்கிறோம்

எச்சரிக்கை மணி அடிக்கிறோம்! எச்சரிக்கை மணி அடிக்கிறோம் தமிழர் களே எச்சரிக்கை! எச்சரிக்கை!! மனுதர்மம் மீண்டும் மகுடம் பூணத் துடிக்கிறது.
நமது தலைவர் தந்தை பெரியார் நமக்கு அளித்து சென்ற அந்த சுயமரி யாதைத் தத்துவத்தை - இனவுணர்வுத் தீபத்தைக் கையில் ஏந்துவோம்! மதவா தத்தை முறியடிப்போம்! முறியடிப்போம்! என்று முழங்கினார் தமிழர் தலைவர்.
ஒரு மணி நேர பேச்சு பகுத்தறிவு அனல் வீச்சாக, இனநல எரிமலையாக சுயமரியாதைச் சூறாவளியாக மிகக் கனத்தோடு வீசியது; கூடியிருந்த ஆயிரக்கணக்கானோரும் உணர்ச்சிப் பிழம்பாக கொள்கை உணர்வின் வடிவ மாக காணப்பட்டனர்.

ஆம் அண்ணா எழுதிய அந்த சேலம் செயலாற்றும் காலம்! என்பது நேற்று நடந்த கழகப் பொதுக் குழுவும் சரி, பொதுக் கூட்டமும் சரி இன்றைக்கும் மிகப் பொருத்தமாகவே இருந்தது.
சேலம்: பொதுக்குழு தீர்மான விளக்கப் பொதுக்கூட்டத்தில் தமிழர் தலைவர் உரை கேட்கத் திரண்டிருந்தோர் (7.12.2014)
                           ------------------------”விடுதலை”  8-12-2014
Read more: http://viduthalai.in/page-2/92551.html#ixzz3LMZmMGqN

10 comments:

தமிழ் ஓவியா said...

சேலம் படைத்த சீலம்

சேலம் செயலாற்றும் காலம் என்று அறிஞர் அண்ணா அவர்கள் திராவிடநாடு இதழில் (13.8.1944) எழுதினார்.

70 ஆண்டுகளுக்குப் பின் சேலத்தில் அத்தகு ஒருசூழலைப் பார்க்க முடிந்தது; நேற்று சேலம் அம்மா பேட்டையில் நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக் குழுவில் குமரி முதல் திருத்தணி வரை உள்ள தோழர்கள் 600க்கு மேல் மிகுந்த ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

பொதுக்குழு நடக்கிறதா, மாநாடு நடக்கிறதா என்று வியக்கும் வகையில் சேலம் மாநகரம் முழுவதும் எங்கு நோக்கினும் கழகக் கொடிகள் பட்டொளி வீசிப் பறந்து கொண்டிருந்தன. அவை எல்லாம் பொதுக் குழு மாலை முப்பெரும் விழாப் பொதுக் கூட்ட நிகழ்ச்சிகளைப் பறைசாற்றின.

தமிழ் ஓவியா said...

பேருந்து, நிலையங்கள், இரயில்வே நிலையம் எங்குப் பார்த்தாலும் கருஞ்சட்டைத் தோழர்களைக் காண முடிந்தது.

இந்தப் பொதுக்குழுவின் முக்கிய அம்சம் என்பது நிறைவேற்றப்பட்ட 16 தீர்மானங்களாகும். (இரங்கல் தீர்மானம் தனி) கழகத்தின் 5 அம்சப் பிரச்சாரத் திட்டம், தமிழ்நாடு தழுவிய அளவில் 2000 விழிப்புணர்வு வ ட்டார மாநாடுகள் என்பவை குறிப்பிடத்தக்கவை; கிராமங்களைக் குறியீடாகக் கொண்டதாக இருக்கும்; தீண்டாமை ஒழிப்பு, ஜாதி ஒழிப்பு, மூடநம்பிக்கை ஒழிப்பு, எதிர்கால சமுதாயத்தைத் தாக்கி அழிக்கும் மதுப் போதை எதிர்ப்பு உள்ளிட்டவை முக்கிய இடம் பெறும்.

நூல்கள் விற்பனை, நூல்கள் பற்றிய கருத்தரங்கம், புத்தகக் கண்காட்சிகள், இணையதளம் மூலம் கருத்து பரப்புதல், பெரியார் ஆயிரம் வினா விடைப் போட்டி நடத்துவதற்கான நிரந்தரப் பணிக்குழு (Volunteer Corps) கலை, இலக்கியம், நாடகம், குறும்படங்கள், கழகத் தலைவரின் சிறப்புக் கூட்டங்கள் (நுழைவுக் கட்டணத்துடன்) என்பவை பெரும் பாய்ச்சலாக நடைபெறும்.

தந்தை பெரியார் இறுதியாக அறிவித்த, களத்தில் நின்ற தீண்டாமை, ஜாதி ஒழிப்புப் போராட்டமான அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமையை செயல்படுத்த வைப்பதற்கான பிரச்சாரக் கூட்டங்களும் வரும் மார்ச்சு (2015) மாதத்தில் ஒத்த கருத்துள்ளவர்களை அழைத்து சென்னையில் மாபெரும் மாநாடும் நடை பெறும் என்பது முக்கியமானதோர் தீர்மானமாகும்.

தந்தை பெரியார் காலத்தில் எழுந்த இப்பிரச்சினை இடையிலே பல்வேறு களங்களைச் சந்தித்து வந்திருக்கிறது. 2006 சட்டப் பேரவைத் தேர்தலில் எந்த அணியை ஆதரிப்பது என்பதில்கூட இதுதான் நிபந்தனையாக வைக்கப்பட்டது திராவிடர் கழகத்தால்.

தி.மு.க. தலைவர் கலைஞர் தன் ஆதரவுக் கரத்தை நீட்டினார். சொல் தவறாத கலைஞர் அவர்கள் ஆட்சிப் பொறுப்புக்கு 5ஆவது முறையாக வந்த நிலையிலே இதற்கான ஆதரவை சட்டப் பேரவையில் அதிகாரப் பூர்வமாக நிறைவேற்றினார்.

நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையிலே குழு அமைத்துப் பரிந்துரைகளை ஏற்று இடஒதுக்கீட்டின் அடிப்படையில் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, பல முக்கியமான கோயில்களில் அர்ச்சகர் பயிற்சிகளும் அளிக்கப்பட்டு அவர்களுக்குப் பணி நியமனம் அளிக்கப்படவிருந்த ஒரு கால கட்டத்தில், மறுபடியும் பார்ப்பனர்கள் உச்சநீதிமன்றம் சென்று விட்டனர். அந்த வழக்கு தீர்ப்பை நோக்கி நிலுவையில் இருக்கிறது.

இந்த நிலையில் தான் திராவிடர் கழகம் - அதன் இறுதி நிலையை எட்டும் வகையில், மக்கள் கருத்தைத் திரட்டும் வகையில் பிரச்சாரங்களைப் பெரு வெள்ள மாகப் பாய்ச்சி சென்னையில் வரும் மார்ச்சில் மிகப் பெரிய மாநாட்டை நடத்துவது என்று தீர்மானிக்கப்பட் டுள்ளது. அந்த மாநாடு வெறும் தீர்மானங்களை மட்டும் நிறைவேற்றும் ஒன்றாக அமைந்திடாமல், போராட்ட அறிவிப்பு மாநாடாக அமையும் என்று சேலம் பொதுக் குழு அறிவித்துள்ளது.

தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்கள் சென்னையில் நிகழ்த்திய நுழைவுக் கட்டணத்துடன் கூடிய சிறப்புக் கூட்டத்திற்கு மிகப் பெரிய வரவேற்பு இருந்தது. அய்.நா. மன்றம் தந்தை பெரியார் அவர்களுக்கு அளித்த விருதில் அடங்கி இருந்த வாசகங்களை மய்யப்படுத்தி நான்கு நாள் சொற்பொழிவாக நிகழ்த்தினார்; அது என்றும் பேசப்படும் சாசனமாக அமைந்திருந்தது.

ஒரு கால கட்டத்தில் திராவிடர் இயக்க செம்மல் களின் உரைகளைக் கட்டணம் செலுத்தி மக்கள் கேட்கும் பேரவா இருந்ததுண்டு. இடையில் அது எப்படியோ நின்று விட்டது; இப்பொழுது மீண்டும் அதற்குப் புத்துயிர் கொடுத்து, தந்தை பெரியாரியல் கருத்துக்களை, திராவிட இயக்கச் சிந்தனைகளை, ஆரியப் பண்பாட்டுப் படையெடுப்பின் மூலங்களை மக்கள் மத்தியில் கொண்டு செல்லும் சிறப்புக் கூட்டங் களாக இவை அமையும்.

மதவாதம் - ஆட்சி அதிகாரப் பலத்துடன் உயர்ஜாதி ஊடகங்களின் பெரும் உதவிகளுடன் தந்தை பெரியார் அவர்களால் புரட்சி விதைகள் தூவப்பட்ட தமிழ் மண்ணில் தன் நச்சுச் செடிகளை விவசாயம் செய்ய லாம் என்ற நினைப்பை அதன் கருவிலேயே அழிக்கக் கூடிய எழுச்சிப் பணியிலே கழகம் புது வேகத்துடன் களம் காணப் புறப்பட்டுள்ளது.

தந்தை பெரியார் என்ற கூர் ஈட்டி முன் காற்றடைத்த பலூனாக பறக்க ஆசைப்படும் மெகா பலூன் வெடித்துத் தூள் தூளாகும் என்பது நான்கும் நான்கும் எட்டு என்பது போன்ற உறுதி படைத்ததாகும்.

சேலம் செயலாற்றும் காலம் என்று அறிஞர் அண்ணா சொன்னது - மீண்டும் புத்துயிர்ப் பெற் றுள்ளது. பொதுக்குழுவையும் அதன் தொடர்ச்சியாக மாபெரும் பொதுக் கூட்டத்தையும் பொலிவு வீசிய ஒளியுடன் மகத்தான வகையில் நடத்திக் காட்டிய கழகத் தோழர்கள் அனைவரையும் பாராட்டுகிறோம் - பாராட்டுகிறோம்.

Read more: http://viduthalai.in/page-2/92554.html#ixzz3LMdBT963

தமிழ் ஓவியா said...

எளிய உணவு பொருட்களின் மருத்துவ குணங்கள்


மிக எளிய உணவு பொருள்களில் உள்ள மருத்துவ குணங்களால் உடலில் உண்டாகும் பல்வேறு நோய்களை தீர்க்கின்றன.

1. சர்க்கரை நோய்க்கு தினமும் காலையில் வெறும் வயிற்றில் சிறிது வெந்தயத்தை வாயில் போட்டு விழுங்க வேண்டும். சர்க்கரை நோய்க்கு முருங்கை கீரை கண் கண்ட மருந்து பாகற்காயை கழுவி, வட்டவட்டமாக நறுக்கி விதையை நீக்கி, நிழலில் காய வைத்து, மிக்ஸியில் அரைத்து பொடியாக்கி பாட்டிலில் அடைத்து வைத்துக் கொண்டு தினமும் ஒரு தேக்கரண்டி சாப்பிட்டால் குணமாகும். குறிஞ்சாக் கீரையும் சர்க்கரை நோய்க்கு நல்ல மருந்தாகும்.

2. மாங்கொட்டையின் விதையை உலர்த்தி, நன்றாகப் பொடி செய்து, தேன் சேர்த்து சாப்பிட்டு வந்தால், வயிற்றி லுள்ள நாக்குப் பூச்சிகள் மலத்துடன் வெளி வந்து விடும். மூல நோயும் குணமாகும். மாத விடாய் அதிகமாக போவதும் நின்று விடும். கொசுக்களை விரட்ட மாம்பூக் களைப் பொடி செய்து, சாம்பிராணி போல புகைபோட்டால் கொசுக்கள் ஓடும்.

3. இஞ்சியை கற்கண்டுடன் சேர்த்துச் சாப்பிடுவதால் சர்க்கரை நோய் கட்டுப்படும். இஞ்சி சாற்றையும் வெங் காயச் சாற்றையும் சமமாகக் கலந்து குடித்தால் வாந்தி நிற்கும். அஜீரணத்துக்கு இஞ்சி சாற்றை தொப்புளைச் சுற்றித் தடவலாம்.

4. கொத்துமல்லி தழையை அரைத்து சர்க்கரையுடன் பால் சேர்த்து தினம் 100 கிராம் சாப்பிட மன நோய் நீங்கும். மல்லி நீரால் கண்களைக் கழுவ கண்கள் பளிச்சிடும். தாகத் தைத் தணிக்கும். பல் வலி, ஈறு வீக்கம் ஆகியவையும் கட்டுப்படும். இதன் விதை எண்ணெய் சுளுக்கு நீக்கி யாகப் பயன்படும்.

5. பூண்டைச் சேர்த்து எந்த வகை உணவு சாப் பிட்டாலும் வாயுத் தொல்லை, வயிற்று அடைப்பு குறையும். இதனை தேங்காய் எண்ணெய் விட்டு காய்ச்சி, அதைத் தேய்த்தால் வாத வலி போகும். பூண்டுத் தழையை உப்பிட்டு அரைத்து சாற்றைப் பிழிந்து தசைப் பிடிப்புக்குத் தடவ, தசைப் பிடிப்பு விட்டுப் போகும்.

6. சிரங்கு தொல்லை தீர: சிரங்கு : 100மி.லி., தேங்காய் எண்ணெய்யில் 5 வெற்றிலைகளைப் போட்டு நன்றாகக் காய்ச்சி அந்த எண்ணெயைத் தடவ நல்ல குணம் கிடைக்கும்.

7. நாள்தோறும் ஒரு கைப்பிடி அளவு கொத்த மல்லிக்கீரையை மண்ணில்லாமல் சுத்தம் செய்து, பச்சையாகவே மென்று சாப்பிட்டு வர கண் பார்வை தெளிவாகும். பித்தமும் நீங்கும்.

8. இரவில் பூவன் வாழைப்பழத்தை செங்குத்து வாக்கில் இரண்டாகப் பிளந்து, அதில் சீரகத்தை வைத்து மூடி வைத்து, அதிகாலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர மூலநோய் நீங்கும்.

9. சீரகத்தை நல்லெண்ணெயில் காய்ச்சி தலையில் தேய்த்து குளித்து வந்தால், தலைவலி, பித்த மயக்கம் நீங்கும்.

10. வாழைப்பூவை இடித்து சாறு பிழிந்து பசுமோர் கலந்து அருந்திவர வயிற்று வலி தீரும்

11. முகச் சுருக்கம் நீங்க பச்சைக் கற்பூரத்துடன் புதினா இலைச் சாறை கலந்து மூட்டு வலி உள்ள இடத்தில் தடவி வர மூட்டு வலி குணமாகும்.

12. தோலில் உள்ள கரும்புள்ளிகளின் மேல் தக்காளிப் பழத்தைத் துண்டாக்கிக் தேயுங்கள். அதில் உள்ள அமிலத்தினால் கரும்புள்ளிகள் மறையும்.

13. கருவுற்ற மகளிர் நெல்லிக்காய், முருங்கைக் கீரை, முள்ளங்கி ஆகியவற்றை உணவில் சேர்த்துக்கொண்டால் கை, கால், முகம், பாதம் வீக்கம் வராது. குழந்தைப் பேறு எளிதாக அமையும்.

14. தக்காளி, கோஸ், கேரட் ஆகியவற்றை சாப்பிட்டால் முக சுருக்கம் நீங்கும்.

15. கசகசாவை நன்கு அரைத்து குழந்தையின் தொப்புளைச் சுற்றி தடவினால் குழந்தையின் அழுகை நின்றுவிடும்.

16. மெலிந்த உடல் பருக்க: . கற்கண்டை, வெண் ணெயோடு சேர்த்து நாற்பது நாள்கள் சாப்பிட மெலிந்த உடல் பருக்கும்.

17. தொண்டை கட்டிக்கொண்டு குரல் வராமல் சிரமப் படுபவர்கள் கற்பூர வல்லியை சாறெடுத்து பனங்கற்கண்டு சேர்த்துப் பருக குரல் சரியாகும்.

18. வெள்ளை வெங்காயத்தை நெய்யில் வதக்கி, பனங்கற்கண்டு சேர்த்து காலை, மாலை ஒரு தேக்கரண்டி சாப்பிட, வயிற்றின் சுற்றளவு குறையும்.

19. சுக்கை நீர் விட்டு அரைத்து கொதிக்க வைத்து மூட்டுகளில் தடவ மூட்டுவலி குறையும்.

20. கருணைக் கிழங்கை தொடர்ந்து வாரம் இரு முறை உணவுடன் சேர்த்து சாப்பிட மூலம் தீரும்.

21. இஞ்சி, எலுமிச்சை சாற்றை தண்ணீரில் கலந்து காலையில் அருந்த சுறுசுறுப்பு ஏற்படும். எலுமிச்சை சாறைத் நாள்தோறும் பருகி வந்தால் காலரா அண்டாது.

22. சாப்பிடும் முன் இளநீர் அருந்தினால் பசிக்காது. சாப்பிட்டபின் அருந்தினால் பித்தம் நீங்கும் மலச்சிக்கல் தீரும். நாள் பட்ட இளநீரை குடித்தால் சளி ஏற்படும்.

23. துவரம் பருப்பை வேகவைத்த தண்ணீரை ஒரு குவளை எடுத்து, சிறிது வெல்லம் சேர்த்து ஏழு நாள்கள் சாப்பிட பூச்சிகள் வெளியேறும்.

Read more: http://viduthalai.in/page-7/92530.html#ixzz3LMdrDrEa

தமிழ் ஓவியா said...

நலம் தரும் அமிலங்கள்


நமது அன்றாட வாழ்க்கையில் பல வகையான சத்துகளும், வைட்டமின்களும் சேர்ந்துதான் நம்மை ஆரோக்கியமாக செயல்பட வைக்கின்றன. ஒவ்வொரு உணவில் இருந்து பெறப்படும் சத்துக்களும் ஒவ்வொரு உறுப்பைப் பாதுகாக்கிறது. சில வைட்டமின்கள் அமிலங்களாக உடலுக்குச் சத்துக்களை வழங்குகின்றன.

இவை இயற்கையாகவே சுரக்கும் தன்மை கொண்டிருந்தாலும், இவற்றில் சில மாறுபாடுகள் ஏற்படும் போது அதாவது அதிகமாகவோ அல்லது குறைவாகவோ சுரக்கும் போது பாதிப்புகள் ஏற்பட ஆரம்பிக்கிறது. உடல்நலனுக்கு இன்றியமையாத சில முக்கியமான அமிலங்கள், பயன்கள் எந்த வகையான உணவு மூலம் பெறலாம் என்பதையும் அறிந்துகொள்வோம்.

நிக்கோடிக் அமிலம்

இரத்தத்தில் சர்க்கரை மற்றும் கொழுப்பின் அளவை நிலைப்படுத்த நியாசின் பெரிதும் உதவுகிறது. இந்த அமிலத்தின் அளவு குறையும்போது அதிகப்படியான மனக் கொந்தளிப்பு, சத்துக்குறைபாடு, எரிச்சல், ஞாபகமறதி, போன்ற பாதிப்புகள் தாக்கக்கூடும்.

இதை அதிகரிக்க முட்டையின் மஞ்சள் கரு, ஆட்டு ஈரல், பாதாம் மற்றும் பருப்பு வகைகள், முழு தானியங்கள், போன்ற உணவுகளை அதிகம் சேர்த்துக்கொள்வதால் அமிலத்தின் அளவை அதிகரிக்கலாம். ஒரு மனிதனுக்கு அமிலத்தின் அளவானது நாள் ஒன்றுக்கு 18மில்லி கிராம் வரை தேவைப்படுகிறது.

போத்தொடெனிக் அமிலம்

உடலுக்குத் தேவையான சத்துக்களை உற்பத்தி செய்ய போத்தொடெனிக் அமிலம் தேவை. இது மனிதனின் மூளை, நரம்பு மண்டலங்களின் செயல்பாடுகளுக்கு மிகவும் உதவி புரிகிறது. கவனமின்மை, பல்வலி, வாந்தி மற்றும் சத்து குறைபாடு, போன்ற பாதிப்புகள் போத்தொடெனிக் அமிலம் குறைவதனால் ஏற்படுகிறது.

இதை அதிகரிக்க முழு தானியங்கள், பருப்பு வகைகள், முட்டை, மஞ்சள் கரு, ஆகிய உணவுகளை உணவில் சேர்த்தால் சரி செய்து விடலாம். ஒரு மனிதனுக்கு அமிலத்தின் அளவானது நாள் ஒன்றுக்கு 6 மில்லி கிராம்வரை தேவைப்படுகிறது.

ஆஸ்கார்பிக் அமிலம்

வைட்டமின் சி தான், அஸ்கார்பிக் அமிலம். பி, காம்ப்ளெக்ஸ், வைட்டமின்களில் முக்கியமான வைட்டமின் இது. இந்த வைட்டமின்கள் தசை வளர்ச்சிக்கும், நோய் எதிர்ப்புச் சக்தியை உருவாக்குவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. இது இரும்புச்சத்தை உணவிலிருந்து உறிஞ்சுவதற்கும், புற்றுநோய் மற்றும் இதய நோய்களில் இருந்து பாதுகாக்கவும் உதவுகிறது.

இந்த அமிலமானது குறையும்போது ஈறுகளில் ரத்தம் வடிதல், இரத்தசோகை போன்ற பாதிப்புகள் ஏற்படுகிறது. இதை அதிகரிக்க மிளகை அதிக அளவு உணவில் எடுத்துக் கொண்டால் இந்தப் பாதிப்பை தவிர்க்கலாம்.

மேலும் ஆரஞ்சு, எலுமிச்சை, சாத்துக்குடி, முருங்கைக்கீரை, தக்காளி, கிவி பழம், முந்திரி, நெல்லிக்காய் போன்ற உணவுகளிலும் இந்த அமிலமானது நிறைந்து காணப்படு கிறது. ஒரு நாளைக்கு மனிதனுக்கு தேவையான அளவு 40 மில்லி கிராம் ஆகும்.

Read more: http://viduthalai.in/page-7/92531.html#ixzz3LMe3gW9t

தமிழ் ஓவியா said...

மருத்துவ தன்மை கொண்ட அத்தி


செந்நிற கோடுகளுடன் அமைந்து பளபளப்புடன் சிவந்த நிறத்தில் துவர்ப்பும், இனிப்பும் கலந்த சுவையுடைய பழம் இது. இதன் நடுவில் ஒரு துளையுடன் அமைந்திருக்கும். துவர்ப்புச் சுவையுடையது.

அத்திபிஞ்சு மூலவாயு, மூலக்கிராணி, ரத்தமூலம், வயிற்று கடுப்பு ஆகியவற்றை நீக்கும். காயங் களில் வடியும் ரத்தப் போக்கை உடனடியாக நிறுத்த வல்லது. வாய்ப்புண், ஈறுகள், சீழ்பிடித்தல் போன்றவைகளுக்கு அத்தி இலைச்சாறால் வாய்கொப்பளிக்க பலன் கிடைக்கும்.

அத்தியின் பட்டை, பிஞ்சு, பால், காய், பழம் ஆகியவை மருத்துவப் பயன் உடையன. சதை, நரம்பு ஆகியவற்றை சுருங்கச் செய்தல், மலமிளக்கி, காமம்பெருக்கி, சீதக்கழிச்சல், வயிற்றுக்கடுப்பு, நீரிழிவால் உண்டாகும் தாகம், வறட்சி உடல் வெப்பம் முதலிவை நீங்கும். பால் பித்த நோய், நீரிழிவு, சூலை, இவற்றைப் போக்கும்.

பட்டையானது கீழ்வாய்க்கடுப்பு, குருதிப்பெருக்கு, சீதக்கழிச்சல், நாற்றமுள்ள புண்கள், வெள்ளைப்படுதல் ஆகியவற்றை போக்கும். அத்திப்பால் 15மிலியுடன் வெண்ணெய், நாட்டுச் சர்க்கரை கலந்து காலை, மாலை குடித்து வந்தால் நீரிழிவு, ரத்தம் கலந்த வயிற்றுப்போக்கு, பெரும்பாடு, சிறுநீரில் ரத்தம் வருதல் தீரும். அத்திப் பழத்தை 10 முதல் 20 வரை காலை, மாலை சாப்பிட்டு பால் குடித்து வந்தால் தாது விருத்தி உண்டாகும். ஆண்மை ஆற்றல் அதிகரிக்கும்.

ஆண்களின் மலடும் நீங்கும். நிழலில் காய வைத்து, தேனில் ஊறவைத்தும் சாப்பிடலாம். பொடியை சூரணமாக்கி 15 கிராம் சாப்பிடலாம். அத்தி மரத்தை வெட்டினால் பால் வடியும். இது துவர்ப்பு மிக்கதாக இருக்கும். அடிமரத்தின் கீழ் வேரை பறித்து நுனியை சீவிவிட்டால் பால் வடியும். இதுவே அத்தி மரத்தின் சிறப்பாகும்.

தென்னை, பனையில் பாளையில் பால் சுரக்கும். இதற்கு வேரில் சுரக்கும். இதை 300 மில்லி முதல் 400 மில்லி வரை நாள்தோறும் குடித்து வந்தால் மேக நோய் நீங்கும். நீரிழிவு குணமாகும்.

பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப் படுதல் நிற்கும். உடலுக்கு சிறந்த ஊட்டச்சத்து மிக்க உணவாகும். எதிர்ப் பாற்றல் பெற்று உடல் வனப்பு பெறும். இதன் அடிமரப் பட்டையை பசுமோர் விட்டு இடித்து சாறெடுத்து 30 முதல் 50 மில்லி நாள்தோறும் இரவில் குடித்துவர பெரும்பாடு குணமாகும். மேக நோய் புண் குணமாகும்.

கருப்பை கோளாறுகள் நீங்கும். அத்தி மரத்தின் துளிர்வேரை அரைத்து 10 கிராம் பாலில் சாப்பிட நீர்த்தாரை எரிச்சல், சூடுபிடித்தல் குணமாகும். உடல் வெப்பம் குறையும். மயக்கம் வாந்தி குணமாகும்.

Read more: http://viduthalai.in/page-7/92529.html#ixzz3LMeE3UR8

தமிழ் ஓவியா said...

சேலத்து மாம்பழத் துளிகள்


சேலத்தில் நேற்று (7.12.2014) நடைபெற்ற பொதுக் குழுவுக்கு வருகை தந்த திராவிடர் கழகத் தலைவருக்கு சேலம் ரயில்வே சந்திப்பில் கழகத் தோழர்கள் எழுச்சிமிகு வரவேற்பை அளித்தனர்.

பொதுக்குழு தொடங்கும்முன் சேலத்தில் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா சிலைகளுக்குப் பெரு முழக்கத்துடன் தமிழர் தலைவர் மாலை அணிவித்தார்.

அம்மாப்பேட்டையில் நடைபெற்ற கழகப் பொதுக் குழுவுக்கு வருகை தந்த கழகத் தலைவருக்கு குடும்பம் குடும்பமாக வருகை தந்த கருஞ்சட்டைக் குடும்பத்தினர் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர். 82 ஆம் ஆண்டு பிறந்த நாள் கண்ட தலைவருக்கு அனைவரும் எழுந்து நின்று பலத்த கரவொலி எழுப்பி, உற்சாகத்துடன் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனர்.

மேடையில் இருந்த தலைவருக்கு வரிசையாக அணி வகுத்து வந்து நன்கொடைகளையும், சந்தாக்களை யும் அளித்த வண்ணமேயிருந்தனர்.

பொதுக்குழு மேடை, பொதுக்கூட்ட மேடைகளில் தி.மு.க., ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சி, பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த பிரமுகர்கள் தமிழர் தலை வருக்குச் சால்வை அணிவித்து வாழ்த்துகளைக் கூறினர்.

சேலம் அம்மாப்பேட்டை - கொங்கு வெள்ளாளக் கவுண்டர் திருமண மண்டபத்தில் 7.12.2014 காலை 11 மணிக்கு திராவிடர் கழகப் பொதுக்குழு தொடங்கப்பட்டது அனைத்து மாவட்டங்களிலிருந்தும் பொதுக் குழு உறுப் பினர்கள் வருகை தந்தனர்.

ஆத்தூர் மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் விடுதலை சந்திரன் கடவுள் மறுப்புக் கூறினார். தலைமைச் செயற்குழு உறுப்பினர் பழனி. புளளையண்ணன் அனை வரையும் வரவேற்றார். பொதுக் குழுவுக்குத் தலைமை வகித்த செயலவைத் தலைவர் சு. அறிவுக்கரசு தலைமை யுரையாற்றிட, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

சேலத்தில் நடைபெற்ற பொதுக்குழுவில் பங்கேற்ற கழகப் பொறுப்பாளர்கள் (7.12.2014)

தொடர்ந்து திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் வீ. அன்பு ராஜ், பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அருள்மொழி, பொதுச்செயலாளர் முனைவர் துரை. சந்திரசேகரன், தலை மைச் செயற்குழு உறுப்பினர் ராஜகிரி கோ. தங்கராசு, திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி. பூங்குன்றன் ஆகி யோர் உரைக்குப்பின் வழிகாட்டும் தலைமையுரையைக் கழகத் தலைவர் ஒரு மணிநேரம் நிகழ்த்தினர்.

தமிழ் ஓவியா said...

சேலம் மாநகர திராவிடர் கழகச் செயலாளர் அ.ச. இளவழகன் நன்றி நவில பிற்பகல் 2.45 மணிக்குப் பொதுக் குழு நிறைவுற்றது. 600க்கும் மேற்டோர் வருகை தந்தனர். வருகை தந்த அனைவருக்கும் சிறப்பான மதிய விருந்து அளித்து உபசரிக்கப்பட்டது.

தீர்மானங்களை முன்மொழிந்தோர்:

1. தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி 2. முனைவர் துரை. சந்திரசேகரன் (பொதுச்செயலாளர்), 3. தஞ்சை இரா. ஜெயக்குமார் (பொதுச்செயலாளர்), 4. உரத்தநாடு இரா. குணசேகரன் (பொதுச்செயலாளர்), 5. அ. அருள்மொழி (வழக்குரைஞர்) (பிரச்சாரச் செயலாளர்), 6. வழக்கறிஞர் த. வீரசேகரன் (மாநில வழக்குரைஞரணித் தலைவர்), 7. வழக் குரைஞர் குமாரதேவன் (பகுத்தறிவாளர் கழகம்), 8. வா. நேரு (மாநில ப.க. தலைவர்), 9. அ. கலைச்செல்வி 9. மாநில மகளிரணிச் செயலாளர்), 10. அகிலா எழிலரசன் (திருப்பத் தூர் மாவட்ட திராவிடர் கழகத் தலைவர்), 11. சிவ. வீரமணி (புதுவை மாநிலத் தலைவர்), 12. ச.பிரின்ஸ் என்னாரெசு பெரியார் (மாநில மாணவரணிச் செயலாளர்), 13. இல. திருப்பதி (மாநில இளைஞரணி செயலாளர்), 14. குடியேற்றம் சிவக்குமார் (மாநில இளைஞரணி துணை செயலாளர்), 15. த. வீரன் (வழக்குரைஞர் (மாநில இளைஞரணி துணை செயலாளர்), 16. ச.அஜிதன் (மாநில மாணவரணி துணை செயலாளர்), 17. சி. காமராஜ் (திருச்சி மண்டலச் செயலாளர்), 18. வெ.செயராமன் (தஞ்சை மண்டல தலைவர்), 19. தே. எடிசன்ராஜா (தலைமைச் செயற்குழு உறுப்பினர்).

தி மாடர்ன் ரேஷனலிஸ்ட் ஆண்டு மலர்

இந்த மலரை திராவிடர் கழக வழக்குரைஞரணித் தலைவர் வழக்குரைஞர் த. வீரசேகரன் வெளியிட சட்டத்துறை செயலாளர் வழக்குரைஞர் ச. இன்பலாதன், வழக்குரைஞர்கள் குமாரதேவன், சித்தார்த்தன், பாலு ஆகியோர் பெற்றுக் கொண்டனர். இம்மலர் குறித்து மாநிலப் பகுத்தறிவாளர் கழகப் பொதுச் செயலாளர் வீ. குமரேசன் அறிமுக உரை ஆற்றினார்.

நான் பெற்ற பயன்

கழகத் தலைவர் எழுதிய வாழ்வியல் சிந்தனைகள் 10ஆவது தொடரை கல்வியாளர் சவுந்தரராசன் வெளி யிட்டார்.

அவர் தமது உரையில் தமிழர் தலைவர் எழுதிய வாழ்வியல் சிந்தனைகளைத் தொடர்ந்து படித்து வருகிறேன். அதனால் தனிப்பட்ட முறையில் நான் பயன் பெற்றேன். அடுத்தவர்களைத் திருப்திபடுத்துவதற்காக எதையும் செய்யக் கூடாது என்று ஆசிரியர் அவர்கள் எழுதி இருந்தார்.

அந்த வகையில் ஒருவருக்கு கொடுக்க நினைத்திருந்த 3 லட்சம் ரூபாயைக் கொடுக்கவில்லை. ஆசிரியர் எழுத்தால் 3 லட்சம் ரூபாய் தனிப்பட்ட முறை யில் பலன் பெற்றேன் என்று கூறி பெரியார் உலகத்திற்கு ரூ.10 ஆயிரம் நன்கொடையை ஆசிரியரிடம் பலத்த கரவொலிக்கிடையே வழங்கினார்.

தமிழ் ஓவியா said...


ஆசிரியரின் வாழ்வியல் சிந்தனை 10ஆவது தொடரை அவரே வெளியிட பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத் தின் தலைவர் பொத்தனூர் க. சண்முகம், சேலம் மண்டல திராவிடர் கழகத் தலைவர் கவிஞர் சிந்தாமணியூர் சுப்பிரமணியம், மேட்டூர் மாவட்டக் கழகத் தலைவர் க. கிருட்டிணமூர்த்தி மாவட்டச் செயலாளர் கா.நா. பாலு ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

பாராட்டு!

சேலத்தில் விடுதலை நாளேட்டை மிகுந்த முயற்சி எடுத்து நாள்தோறும் வழங்கும் செயல் வீரர் இராவண பூபதி அவர்களைப் பயனாடை அணிவித்துப் பாராட்டினார் கழகத் தலைவர்.

570 சதுர அடி நிலம் நன்கொடை

எடப்பாடியில் வி.கே.மெய்வேல், கை.இ.கைலாசமுத்து நினைவு பெரியார் படிப்பகம், தந்தை பெரியார் சிலை, தமிழர் தலைவர் கி.வீரமணி நூலகம் அமைப்பதற்கு ரூ.20 லட்சம் மதிப்புள்ள 570 சதுர அடி நிலத்தை, பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனத்திற்கு எம்.செல்வமணி முகிலன் அவர்கள் சேலத்தில் 7.12.2014 அன்று நடைபெற்ற கழகப் பொதுக்குழுவில், தானமாக தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் வழங்கினார். பொதுக்குழு உறுப் பினர் கை.முகிலன், காமராஜ் - சுந்தரம்பாள், பேரா.கை.மு. அறிவுச்செல்வன் - வனிதா ஆகியோர் அளித்தனர்.

பலே! பலே!!

கடைக்குக் கடை சென்றுநிதிவசூல் செய்ததன் மூலம் கிடைத்த நன்கொடை ரூ. ஒரு லட்சத்து இரண்டாயிரம். இந்த முறையை வெகுவாகப் பாராட்டினார் கழகத்தலைவர். பணம் வரவு மட்டுமல்ல. இதன் மூலம் பிரச்சாரம் நடைபெறுகிறது - நமது செயல்பாடுகளையும் பொது மக்கள் அறிய முடிகிறது.

கழகப் புதிய பொறுப்பாளர்கள்

திருப்பத்தூர் மாவட்டம்: தலைவர்: அகிலா எழிலரசன்; செயலாளர்: வி.ஜி. இளங்கோ.

காஞ்சிபுரம் மண்டலம்: மண்டலச் செயலாளர் கல்பாக்கம் இராமச்சந்திரன்.

தூத்துக்குடி மாவட்டம்: தலைவர் ஆசிரியர் காசிராஜன்.

விழுப்பும் மாவட்டம்: மாவட்டச் செயலாளர் சே.வ. கோபண்ணா.

விருத்தாசலம் மாவட்டம்: மாவட்டச் செயலாளர் முத்து கதிரவன்.

மதுரை மாநகரம்: கழகச் செயலாளர் மீ. அழகர்சாமி.

தருமபுரி மாவட்டம்: மாணவரணி புதிய பொறுப்பாளர்கள்:

தலைவர்: காசி பாஸ்கர்,செயலாளர்: தீ. ஏங்கல்ஸ், அமைப்பாளர்: பா. ஆதவன், துணைத் தலைவர்: த. திலீபன்.

இளைஞரணி: மாவட்ட துணைத் தலைவர் சி. பகத்சிங், மாவட்ட துணைச் செயலாளர் காமலாபுரம் கிருஷ்ணன்.

தருமபுரி நகரம்: நகரச் செயலாளர் பாசி. காமராஜ்,

பட்டுக்கோட்டை மாவட்ட வழக்குரைஞர்கள் அணிச் செயலாளர்: மன்னை வழக்குரைஞர் சிங்காரவேல்.

நீலமலை - குன்னூர் நகர அமைப்பாளர் வேணுகோபால்.

தமிழ் ஓவியா said...


நீலமலை - கோத்தகிரி அமைப்பாளர் திருமதி அருணா வெங்கேடசன்.
பொதுக் குழுவில் மேற்கண்ட அறிவிப்பினை கழகத் தலைவர் அனுமதி பெற்று கழகத் துணைத்தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் அறிவித்தார்.

கோட்டை மைதானப் பொதுக்கூட்டத்தில் பகுத்தறிவு இன்னிசை மாமழை!

உறந்தை கருங்குயில் கணேசன், கலைமாமணி திருத்தணி பன்னீர்செல்வம், பல்லிசை கலைஞர் குடந்தை செல்வம், தபேலா கலைஞர் ஆனந்த், பேட் கலைஞர் கோபி, பக்கவாத்திய கலைஞர் குரு ஆகியோர் பங்கேற்ற பல்சுவை இசை நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடைபெற்றது.

நிகழ்ச்சியை மாநில கலைத்துறை செயலாளர் தெற்கு நத்தம் சித்தார்த்தன் ஒருங்கிணைத்தார். இவர்களுக்கு திராவிடர் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் பயனாடை அணிவித்துப் பாராட்டினார்.

புதிய வரவு

சேலம் வித்யா நகர் ஓய்வு பெற்ற காவல்துறை ஆய்வாளர் கே.ராஜீ, தமிழர் தலைவர் தலைமையில், திராவிடர் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்.

வழக்காடு மன்றம்

சேலம் கோட்டை மைதானத்தில் மாலையில் நடை பெற்ற பொதுக்கூட்ட மேடையில், தந்தை பெரியார் வழி செல்லாத தமிழன் குற்றவாளியே! எனும் தலைப்பில் கழகப் பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி அவர்களை நடுவராகக் கொண்ட வழக்கு மன்றம் மிகவும் கலகலப்பாக நகைச்சுவை விருந்துக்குப் பஞ்சமில்லாமல் நடைபெற்றது.

வழக்கினை முனைவர் அதிரடி அன்பழகன் தொடுக்க, கழகச் சொற்பொழிவாளர் இராம.அன்பழகன் மறுத்தார். நடுவர் தன் தீர்ப்பில், அப்பாவி தமிழர்கள்மீது குற்றம் சுமத் துவதைவிட, பெரியார் கொள்கைகளைக் கொச்சைப்படுத்தி திரிபுவாதம் செய்து வருபவர்கள்தான் குற்றவாளிகள் என்று நச்சென்று தீர்ப்பு வழங்கினார். இதில் கலந்துகொண்ட அனைவருக்கும் கழகச் செயலவைத் தலைவர் சு.அறிவுக் கரசு பயனாடை அணிவித்தார்.

பொதுக்கூட்டம்

சேலம் கோட்டை மைதானத்தில் நடைபெற்ற பெரு விழாவில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்றனர். கழகக் குடும்பங்களும் சங்கமித்தன. ஏராள இளைஞர்கள் கூடியிருந்தது சிறப்பு அம்சமாகும்.

சேலத்தில் 7.12.2014 அன்று நடைபெற்ற தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களின் 82ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா, தந்தை பெரியார் பேருருவ சிலை உள்ளிட்ட பெரியார் உலகத்திற்கு நிதியளிப்பு விழா, திராவிடர் கழக பொதுக்குழு - தீர்மான விளக்கப் பொதுக்கூட்டம் ஆகிய விழா சிறக்க உழைத்தவர்களும், கடை வீதி வசூலில் 1 லட்சத்து 2 ஆயிரத்து இருநூற்று அறுபத்து அய்ந்து ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்த தோழர்களையும் கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் அவர்கள் பாராட்டினார். உடன் கழகப் பொதுச் செயலாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் உள்ளார். (சேலம், -அம்மாபேட்டை).

திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் பழனி.புள்ளையண்ணன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவிற்கு வருகை தந்த அனைவரையும் சேலம் மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் கே.ஜவகர் வரவேற்று உரையாற்றினார்.

சி.பூபதி (மண்டலச் செயலாளர், திராவிடர் கழகம்), விடுதலை சந்திரன் (ஆத்தூர் மாவட்டத் தலைவர், திராவிடர் கழகம்), க.கிருட்டிணமூர்த்தி (மேட்டூர் மாவட்டத் தலைவர், திராவிடர் கழகம்), கோபிநாத் இமயவரம்பன் (ஆத்தூர் மாவட்டச் செயலாளர், திராவிடர் கழகம்), கா.நா.பாலு (மேட்டூர் மாவட்டச் செயலாளர், திராவிடர் கழகம்), பி.வடிவேல் (சேலம் மாநகரத் தலைவர், திராவிடர் கழகம்), அ.ச.இளவழகன் (சேலம் மாநகரச் செயலாளர், திராவிடர் கழகம்) ஆகியோர் முன்னிலையேற்றனர்.

கவிஞர் சிந்தாமணியூர் சி.சுப்பிரமணியன் (மண்டலத் தலைவர், திராவிடர் கழகம்) வாழ்த்துப்பா பாடினார்.

திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் தொடக்கவுரையாற்றினார். மேட்டூர் மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் க.கிருட்டிணமூர்த்தி, மேட்டூர் மாவட்டச் செயலாளர் கா.நா.பாலு, திராவிடர் கழகப் பொதுச் செயலாளர்கள் தஞ்சை இரா.ஜெயக்குமார், உரத்தநாடு இரா.குணசேகரன், முனைவர் துரை.சந்திரசேகரன், செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு, கழகப் பொருளாளர் டாக்டர் பிறைநுதல் செல்வி, கழக துணைத் தலைவர் கலி.பூங்குன்றன், ஆகியோர் உரை நிகழ்த்திய பின், நிறைவுப் பேருரையாக தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி ஆகியோர் கருத்துரையாற்றினார்.

சேலம் மாநகர கழக செயலாளர் அ.ச.இளவழகன் நன்றி கூறிட, இரவு 10 மணிக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு நிறைவு பெற்றது.

Read more: http://viduthalai.in/page-8/92550.html#ixzz3LMeYW7Qg

தமிழ் ஓவியா said...

அறிவு விளக்கம் இல்லாதவர்கள்


கக்கூஸ் எடுப்பவர்களுக்கும், ஜலதாரை அள்ளிக் கொட்டுகிறவர்களுக்கும் எப்படி நாற்றம் தெரியாதோ, அதுபோலக் கடவுள் நம்பிக்கைக்காரர்களுக்கு அறிவு விளக்கமே இருக்க முடியாது என்றுதான் சொல்ல வேண்டியதாயிருக்கிறது. - (விடுதலை, 20.10.1967)