Search This Blog

7.12.14

ராஜபக்சேவுக்கு வாழ்த்து சொன்ன பிரதமர் மோடிக்குக் கண்டனம்!திராவிடர்கழகப் பொதுக்குழு தீர்மானங்கள்

  • இயக்கப் பிரச்சாரத்தில் 5 அம்ச திட்டங்கள்!  
  • 2000 திராவிட விழிப்புணர்வு வட்டார மாநாடுகள்
  • ராஜபக்சேவுக்கு வாழ்த்து சொன்ன பிரதமர் மோடிக்குக் கண்டனம்!
இந்துத்துவா நோக்கோடு திட்டங்கள் வகுக்கும் மத்திய அரசின் போக்கை முறியடிப்போம்! சேலம் பொதுக் குழுவில் நிறைவேற்றப்பட்ட எழுச்சிமிகு தீர்மானங்கள்
சேலம், டிச.7- இந்துத்துவா நோக்கோடு திட்டங்களை வகுத்துச் செயல்படும் மத்திய அரசின் போக்கை முறியடிப்போம் என்றும், நாடு தழுவிய அளவில் 2000 பிரச்சாரக் கூட்டங்களை நடத்துவது என்றும் சேலத்தில் இன்று நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக் குழுவில் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.


7.12.2014 ஞாயிறு அன்று சேலம் அம்மாப்பேட்டை - கொங்கு வெள்ளாளக் கவுண்டர் திருமண மண்டபத்தில் திராவிடர் கழக செயலவைத் தலைவர் மானமிகு சு.அறிவுக்கரசு அவர்களின் தலைமையில் நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக்குழுக் கூட்டத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

1. இரங்கல் தீர்மானம் தீர்மானம் எண் (2)
இயக்கப் பணியில் - 5 அம்ச திட்டங்கள்

1. தமிழ்நாடு தழுவிய அளவில் கிராமங்களைக் குறியாகக் கொண்டு திராவிட விழிப்புணர்வு வட்டார மாநாடுகளை ஊராட்சி ஒன்றியம் ஒன்றுக்கு 4 திசைகளில் 4 கிராமங்கள் - ஒரு நகரம் என்ற அடிப்படையில் குறைந்த பட்சம் 2000 பிரச்சார  திராவிட விழிப்புணர்வு வட்டார மாநாடுகளை நாடு தழுவிய அளவில் நடத்துவது என்று தீர்மானிக்கப்படுகிறது.

2. ஜாதி - தீண்டாமை ஒழிப்புத் தீவிரப் பிரச்சாரக் கூட்டங்கள். (முதலில் கிராமப்புறப் பிரச்சாரம் - மாவட்ட வாரியாக - தனியே இணைக்கப்பட்டுள்ளது) - கோடைக் காலங்களில் தீக்குண்டம் இறங்கும்  செயல் விளக்கம் நிகழ்ச்சி, கிராமப் பிரச்சாரத்தின்போது  கழகக் கொடிகளை ஏற்றுதல்.


3.களப்பணிக்கு இளைஞர்களை களத்தில் இறக்கும் திட்டம். பெரிதும் மாணவர்கள், இளைஞர்கள் (முதியவர் களின் கண்காணிப்போடு). ஒரு குழு: வீடுகள்தோறும், கடைகள்தோறும் துண்டறிக்கைகளை வழங்குதல்.
மற்றொரு குழு: பெரியார் உலகத்திற்கான உண்டியல் வசூல் மற்றும் 5 ரூபாய், 10 ரூபாய் என்ற வகையில் நன்கொடை ரசீதுகள் மூலம் நிதி திரட்டுதல்.

4. கழக இளைஞர், மாணவர் பயிற்சிப் பட்டறை (இரண்டு நாட்கள்)
(முதல் பட்டறை - டிசம்பரில் ஒகனேக்கல்லில் தொடக்கம்)

5. மகளிர் அமைப்புகளை உருவாக்குதல் - பிரச்சாரம், கழக ஏடுகளுக்குச் சந்தா சேர்த்தல், பெரியார் உலகத்திற்கு நன்கொடை திரட்டுதல்.

பிரச்சாரம்

1. பிரச்சார நூல்கள் பற்றிய கருத்தரங்குகள் (பகுத்தறி வாளர் கழகம் - மற்றும் கழக அணியினர் இணைந்து)

2.    பெரியார் நகர்வுப் புத்தகச் சந்தை, விற்பனைக்குப் புத்தகக் கண்காட்சி - (இந்தச் சந்தர்ப்பத்தில் அனைத்துக் கட்சிப் பிரமுகர்களையும் அழைத்துச் சிறப்புச் சொற் பொழிவுகள்)

3.பெரியார் ஆயிரம் வினா - விடைப் போட்டிக்கு நிரந்தரத் தொண்டறப் பணிக்குழு - (க்ஷிஷீறீஸீமீமீக்ஷீ சிஷீக்ஷீஜீ)


4. இணையதளம் மூலம் பிரச்சாரம் - பெரியாரை உலக மயமாக்கும் முயற்சி - புதுப்புது யுக்திகளில்.

5. கலை, இலக்கியம், நாடகம், குறும்படங்கள்.

6. ஒத்தக் கருத்துடையோர் ஒருங்கிணைப்பு.

7. கழகத் தலைவரின் சிறப்புக் கூட்டங்கள் (நுழைவுக் கட்டணத்துடன் - பெரியார் உலகத்திற்காக - நாடு தழுவிய அளவில்) ஆகிய பணிகளைத் தீவிரமாக மேற்கொள்வது என்று தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம் எண் 3 (அ)

அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை - போராட்டம் அறிவிப்பு மாநாடு

தந்தை பெரியார் அவர்களால் தம் வாழ்நாளில் இறுதியாக அறிவிக்கப்பட்ட தமிழர் சமுதாய இழிவு ஒழிப்பு கொள்கையான அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்ற செயலாக்கம் உச்ச நீதிமன்றத்தின் முட்டுக் கட்டையால் தடைபட்டு நிற்கிறது. அர்ச்சகர் பயிற்சி பெற்றவர்கள் 200 பேர்களுக்கு மேல் பணியாற்றத் தயாராகவிருந்தும், உச்ச நீதிமன்றம் இதுகுறித்த இறுதித் தீர்ப்பினையும் வழங்காத நிலையில், மக்கள் கருத்தை உருவாக்கும் வகையிலும், பிறப்பின் அடிப்படையிலான ஜாதியை ஒழிக்கும் சீரிய கொள்கை நோக்கிலும், இத்திட்டம் செயல்படுத்தப்பட வேண்டியது மிகவும் அவசியமாகும்.

இந்த வழக்கில் மூத்த வழக்குரைஞர்களை நியமித்து உரிய வகையில் வாதாடி வெற்றிபெற ஆவன செய்யுமாறு தமிழ்நாடு அரசை இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது. இது ஒருபுறம் இருக்க, இதில் ஒத்த கருத்துடைய அனைவரையும் அழைத்துப் போராட்ட அறிவிப்புடன் கூடிய மாநாட்டினை சென்னையில் வரும் மார்ச்சு மாதத்தில் நடத்துவது என்று தீர்மானிக்கப்படுகிறது. அதற்கு முன்னோட்டமாக நாடு தழுவிய அளவில் தீண்டாமை - ஜாதி ஒழிப்புப் பிரச்சாரத்தை முடுக்கிவிடுவது என்று தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம் எண் 3 (ஆ)

கவுரவக் கொலையைத் தடுக்கும் வகையில் வரைவு மசோதாவை மத்திய அரசு தயாரித்து, மாநில அரசுகளின் கருத்தினைக் கேட்டு அதனை மத்திய அரசு மாநில அரசுகளுக்கு அனுப்பியுள்ளது. 21 மாநிலங்கள் ஆதரித் துள்ளன. இதுவரை தமிழ்நாடு அரசு பதில் அளிக்கவில்லை என்பது வருத்தத்திற்கும், கண்டனத்திற்கும் உரியதாகும். இதில் காலங்கடத்தாமல் மசோதாவை ஆதரித்து மத்திய அரசுக்கு கருத்துத் தெரிவிக்குமாறு தமிழ்நாடு அரசை இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண் (4) 

பெண்களுக்கான இடஒதுக்கீடு -விரைவுபடுத்துக!

சட்டப் பேரவைகளிலும் நாடாளுமன்றத்திலும் பெண்களுக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு என்பது 1996 முதல் நிலுவையில் இருப்பதற்கு - கட்சிகளைக் கடந்த ஆண் ஆதிக்க மனநிலையே காரணம் என்று இப்பொதுக்குழு உறுதியாகக் கருதுகிறது. இதற்கு மேலும் காலம் கடத்துவது பெண்களைச் சிறுமைபடுத்தும் தன்மையது என்பதால், உடனடியாக இந்த நாடாளுமன்றத் தொடரிலேயே அதற்கான உள் ஒதுக்கீட்டுடன் கூடிய சட்டத்தை நிறைவேற்றுமாறு இப்பொதுக்குழு மத்திய அரசை வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண் (5)

தனியார்த் துறைகளில் இடஒதுக்கீடு அரசுத் துறைகள், பொதுத் துறைகள் சுருங்கி, தனியார் துறைகள், பன்னாட்டு நிறுவனங்கள் நாளும் பெருகி வரும நிலையில், இனி சமூகநீதி என்பது தனியார்த் துறைகளில் இடஒதுக்கீட்டுக்குச் சட்டரீதியாக உறுதிபடுத்தப்பட வேண்டியது அவசியமாகும்.
இதுகுறித்து மத்திய அரசு சட்டத் திருத்தத்தைக் கொண்டுவருமாறு இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது. தனியார் நிறுவனங்களில் இயக்குநர்கள் 92.6 சதவீதம் (Economic and Political Weekly - 11.8.2012) உயர் ஜாதியினராக இருக்கும் நிலையில், தனியார் துறைகளில் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் வேலைவாய்ப்புப் பெறுவது குதிரைக் கொம்பே எனும் நிலை இருப்பதால், தனியார்த் துறைகளில் இடஒதுக்கீடு வழங்கப்படுவதற்கு விரைந்து செயல்படுமாறு மத்திய அரசை இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.
மாநில அரசுகளும் சட்டப் பேரவைகளில் தீர்மானங்களை நிறைவேற்றி, மத்திய அரசுக்குப் போதுமான வகையில் அழுத்தம் கொடுக்குமாறு இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண் (6)

ஜாதிவாரி கணக்கெடுப்பை விரைவுபடுத்துக!

தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மை மக்களுக்கான இடஒதுக்கீட்டுக்கு ஜாதி வாரியான புள்ளி விவரம் தேவைப்படுவதால், ஜாதிவாரிக் கணக்கெடுப்பை விரைவுபடுத்துமாறு மத்திய அரசை இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.

ஜாதி ஒழிப்பு இணையர்களின் வாரிசுகளுக்கு இட ஒதுக்கீடு தேவை
ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டவர்களின் வாரிசுகளுக்குத் தனியே இடஒதுக்கீடு அளிக்கும் வகையில் சட்டத்திருத்தம் ஒன்றைக் கொண்டு வருமாறு மத்திய அரசை இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.


தீர்மானம் எண் (7):
சுயமரியாதைத் திருமணமும் - உயர்நீதிமன்ற தீர்ப்பும்!

சுயமரியாதைத் திருமணங்களை வழக்குரைஞர்கள் நடத்தக் கூடாது என்று எந்தக் காரணத்தை முன்னிறுத்தி சென்னை உயர்நீதிமன்றம் (17.10.2014) கூறியிருந்தாலும், அதன் விளைவு சுயமரியாதைத் திருமணங்கள் நடை பெறுவதற்கு ஒரு வகையில் தடையை ஏற்படுத்துவதாக உள்ளது.
எங்காவது தவறு நடந்தால் அதனைத் தனிமைப்படுத்தி, உரிய முறையில் விசாரித்து, சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுக்கவேண்டுமே தவிர, ஒட்டு மொத்தமாக வழக்குரைஞர்கள், சுயமரியாதைத் திருமணங் களை நடத்தக்கூடாது என்பது ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல; வழக்குரைஞர்கள் இந்தப் பிரச் சினையில் மேல்முறையீடு செய்து, தங்களின் உரிமையை நிலைநாட்ட வேண்டு மென்று இப்பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் எண் : 8 (அ)

அய்.நா.வை அவமதிக்கும் ராஜபக்சேமீது நடவடிக்கை தேவை!

மனித உரிமை ஆணையத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி அய்.நா.வால் இலங்கைக்கு அனுப்பப்பட்ட விசாரணைக் குழுவை அனுமதிக்காத இலங்கை அதிபர் ராஜபக்சேமீது அடுத்த கட்ட உரிய நடவடிக்கையை எடுக்குமாறு அய்.நா.வை இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சார்க் மாநாட்டில் இலங்கை அதிபர் தேர்தலில் ராஜபக்சே வெற்றி பெற வாழ்த்துகிறேன் என்று தெரிவித்ததானது, ராஜபக்சே தமிழர்களுக்கு எதிராக நடத்திய கொடிய இனப் படுகொலையை அங்கீகரிப்பதாக - வரவேற்பதாகத்தான் பொருள்படும் என்று இப்பொதுக்குழு உறுதியாகக் கருதி, பிரதமர் மோடிக்குத் தன் கண்டனத்தை கடும் அதிருப்தியைத் தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம் எண் : 8 (ஆ)

தமிழக மீனவர் பிரச்சினை கடலில் மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள், தமிழ்நாட்டு எல்லைக்குள் மீன் பிடிக்கச் சென்றாலும், அத்துமீறித் தாக்கப்படுவதும், சிறைப் பிடிக்கப்படுவதும், படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் தொடர்ந்து கொண்டேதான் உள்ளன. இதற்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில் கச்சத்தீவை மீட்பதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளுமாறு மத்திய அரசை இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.
இது தொடர்பாக தமிழ்நாடு சட்டப்பேரவையில் (5.12.2014) அனைத்துக் கட்சிகளின் ஒத்துழைப்புடன் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை  இப்பொதுக்குழு வரவேற்கிறது. இதற்குமேல் தொடர் முயற்சிகளையும் மேற்கொள்ளுமாறு தமிழ்நாடு அரசை இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது. இலங்கைச் சிறையில் இருக்கும் 38 தமிழக மீனவர்களை உடனடியாக விடுதலை செய்யவும், பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளை மீட்கவும் இலங்கை அரசுக்கு உரிய அழுத்தம் கொடுக்குமாறும் மத்திய அரசை இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண் 9 (அ)

பண்பாட்டுத் தளத்தில் நமது பணிகள்

(அ)    பார்ப்பனப் பண்பாட்டுப் படையெடுப்பை முறியடிக்கும் வகையில் தமிழ்ப் புத்தாண்டு தை முதல் நாளை திராவிடர் திருநாளாக பொங்கல் பொன்னாளைக் கோலாகலமாகக் கொண்டாடுவது என்றும், ஆங்காங்கே கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட தமிழர் பண்பாட்டு உணர்வுடன் கூடிய இனவுணர்வுத் திருவிழாவாக நடத்து வது என்று தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம் எண் 9 (ஆ)

கரிகாலன் பெருவளத்தானுக்கு விழா

(ஆ)    19 நூற்றாண்டுகளுக்கு முன் காவிரியில் கல்லணை கட்டி, வேளாண்மை வீச்சுக்குப் பெரும் சாதனையைப் புரிந்த வீரத் தமிழன் கல்லணை கொண்டான் கரிகோற் சோழன் பெருவளத்தானுக்கு - உழவர் பண்பாட்டு வாழ் வுரிமைத் திருவிழாவாக நடத்துவது என்று தீர்மானிக் கப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரியில் கல்லணையில் இயல், இசை, நாடக முத்தமிழ் விழாவாக திராவிடர் கழகத்தின் சார்பில் சீரும் சிறப்புடனும் நடத்துவது என்று தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம் எண் 10 (அ)
வஞ்சிக்கப்படும் தமிழ் நாட்டின் உரிமைகளைக் காப்போம்!

தமிழ்நாட்டுக்குரிய நதி நீர் உரிமைகள் தொடர்பாக உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புகளை மீறும் வகையில் நடந்துவரும் கருநாடகம் மற்றும் கேரள அரசுகளைக் கட்டுப்படுத்தும் வகையில் உண்மையான மத்திய அரசாக செயல்பட வேண்டும் என்று தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசை இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண் 10 (ஆ)

மத்திய இரயில்வே நிதிநிலை அறிக்கையில் தமிழ் நாட்டுக்கென்று அறிவிக்கப்பட்ட இரயில் திட்டங்களைப் பொருளாதாரக் காரணம் காட்டி ரத்து செய்துள்ள மத்திய அரசை இப்பொதுக்குழு கண்டிக்கிறது.
ரத்து செய்யப்பட்ட திட்டங்களைக் காலதாமதமின்றி புதுப்பித்துச் செயல்படுத்த வேண்டும் என்று மத்திய அரசை இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண் (11)
ஊடகங்களின் மூடநம்பிக்கைப் பிரச்சாரம்

அறிவியல் சாதனங்களான காகித ஊடகங்களும், மின் ஊடகங்களும் மக்கள் மத்தியில் பகுத்தறிவு, அறிவியல், சமத்துவம், சமதர்மம், பெண்ணுரிமை முற்போக்குச் சிந்தனைகளை விதைப்பதற்குப் பதிலாக, மூடநம்பிக்கை களையும் பிற்போக்குத்தனங்களையும், ஆபாசங்களையும், தீயப் பழக்கங்களையும் பதிவு செய்யும்  கேடு கெட்ட காரியங்களைச் செய்து வருவதற்கு இப்பொதுக்குழு தனது வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.

இந்திய அரசமைப்புச் சட்டம் 51A(h) வலியுறுத்தும் விஞ்ஞான மனப்பான்மையையும், சீர்திருத்த உணர்வையும் வளர்க்க வேண்டியது ஒவ்வொரு குடிமகனின் கடமை என்ற சரத்துக்கு முரணாக, ஊடகங்கள் செயல்படுவதால் அவற்றை ஒழுங்குபடுத்தும் ஏற்பாட்டுக்கான ஓர் அமைப்பை உருவாக்க வேண்டும் என்றும், அந்த அமைப்பில் மதச்சார்பின்மையில் நம்பிக்கையுடைய, பகுத் தறிவுச் சிந்தனையாளர்களை,  அறிவியல் மனப்பான்மை கொண்டவர்களை நியமிக்க வேண்டும் என்றும் இப் பொதுக்குழு மத்திய  மாநில அரசுகளை வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண் 12 (அ)

சமஸ்கிருதத் திணிப்பும் அதன் பின்னணியும்

இந்தியாவில் உள்ளவர்கள் எந்த மதத்தைச் சார்ந்தவர் களானாலும், மத நம்பிக்கையற்றவர்களானாலும் அனை வரும் இந்துக்களே என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ள கருத்து பிற்போக்குத்தன மானதும் - பார்ப்பனீயத் தன்மை கொண்டதும் கண்டிக்கத் தக்கது மாகும். மத்திய பி.ஜே.பி.யை ஆட்டுவிக்கும் ஆர்.எஸ்.எஸின் மனப்போக்கு பச்சையான இந்துத் துவாவைக் கொண் டுள்ளதை மக்கள் மத்தியில் தொடர் பிரச்சாரத்தின் மூலம் முறியடிப்பது என்று தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம் எண் 12 (ஆ)

மத்தியில் உள்ள பி.ஜே.பி. அரசு சமஸ்கிருதத் திணிப்பைப் பலவகைகளிலும் மேற்கொண்டு வருகிறது. சமஸ்கிருதத் திணிப்பு என்பது பார்ப்பனர்களின் தாய்மொழி வழி அவர்களின் கலாச்சாரத்தைத் திணிக்கும் சூழ்ச்சி என்பதை இப்பொதுக்குழு தெரிவித்துக் கொள்கிறது. இந்தியாவின் மொழிப் பிரச்சினைக்கு ஒரே தீர்வு சமஸ்கிருதமே என்று கோல்வால்கர் கூறி இருப்பதை இந்த இடத்தில் நினைவுகூர்ந்து, மத்திய அரசின் சமஸ்கிருதத் திணிப்பைக் கடுமையாக எதிர்த்து முறியடிப்பது என்று இப்பொதுக்குழு தீர்மானிக்கிறது.

பாடத் திட்டங்களில் இந்துத்துவாவைத் திணிக்கும் மத்திய அரசின் நிலைப்பாட்டை முறியடிக்கத் தேவையான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வது என்றும் தீர்மானிக்கப் படுகிறது. ஆர்.எஸ்.எஸ். அமைப்புகளைச் சார்ந்தவர் களையே துணைவேந்தர்களாகவும், வரலாற்றுத்துறை தலைவராகவும், பாடத் திட்டக்குழு  பொறுப்பாளர் களாகவும் முக்கியத் துறைகளில், கேந்திரப் பதவிகளில் அமர்த்துவது நாட்டின் மதச்சார்பின்மைக்கு எதிரானதாகும் என்பதில் அய்யமில்லை.
கல்வியைப் பொதுப் பட்டியலிலிருந்து மீண்டும் மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வருவதன் மூலமாகத் தான், மதச்சார்பின்மையையும், சமூகநீதியையும், விஞ்ஞான மனப்பான்மையையும் ஊட்டுவதற்கும், மாநில மக்களின் அச்சத்தைப் போக்குவதற்குமான ஒரே வழி என்பதை இப்பொதுக்குழு தெளிவுபடுத்துகிறது. மாநில அரசுகள் இது தொடர்பாக போதிய அழுத்தம் கொடுத்து, இழந்த உரிமையை மீட்க வேண்டும் என்றும் இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண் (13)
மதவாதப் போக்கினைக் கைவிடுக!

மாநிலங்களிலும், மத்தியிலும் உள்ள பி.ஜே.பி. ஆட்சியில் இடம் பெற்றுள்ள அமைச்சர்களும், கட்சியின் நிருவாகிகளும், சங் பரிவார்க் குழுமத்தைச் சேர்ந்தவர் களும் இந்துத்துவா வெறியைத் தூண்டும் வகையில் பகிரங்கமாகவே மேடைகளில் பேசி வருவதும், மதச் சார்பின்மைக்கு எதிராக நடந்து கொள்வதும், செயல்பட்டு வருவதும், தங்களோடு உடன்படாதவர்களை, தலைவர் களைத் தரக்குறைவாகவும், வன்முறையைத் தூண்டும் வகையிலும் பேசுவதும், கருத்துத் தெரிவிப்பதும், கண்டிக்கத்தக்கதாகும். ஆளும் பொறுப்பில் உள்ளவர்கள் பொறுப்புணர்ச்சியுடன் நடந்து கொள்வதற்கு மாறாக, கண்ணாடி வீட்டிலிருந்து கல்லெறிதல் போல மக்களைத் துண்டாடும் போக்கிலும், கலவரங்களைத் தூண்டும் நோக்கிலும் நடந்து கொள்வதற்கு இப்பொதுக்குழு வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.

இந்தப் போக்கில் மாற்றம் ஏற்படாவிட்டால் மதச் சார்பற்ற சக்திகளும், இடதுசாரிகளும் ஒன்றிணைந்து கடும் நெருக்கடியை பி.ஜே.பி. சங்பரிவார் குழுமத்திற்கும், மத்தியில் உள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கும் (என்.டி.ஏ.) கொடுப்பது என்றும் தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம் எண் (14)
திருக்குறளும் - மத்திய அரசும்

திருவள்ளுவர் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சமத்துவத் தத்துவத்தையும், எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப் பொருள் காண்பதறிவு என்று பகுத்தறிவுச் சிந்தனையையும், அறிவினான் ஆகுவதண்டோ பிறிதின்நோய்  தந்நோய்ப் போல் போற்றாக்கடை என்று மனித நேயத்தையும் பறைசாற்றும் வாழ்வியல் நூலாகும். அத்தகு நூலைத் தந்த திருவள்ளுவர் பற்றி இந்தியா தழுவும் அளவில் கொண்டு செல்ல திருவள்ளுவர் நாள் கொண்டாடவிருப்பதாக மத்திய அரசு அறிவித்திருப்பதை இப்பொதுக்குழு வரவேற்கிறது.

மதங்களுக்கு அப்பாற்பட்ட அந்த நூலை ஒரு மதக் குடுவையில் அடக்கும் தன்மையிலும், ஆர்.எஸ்.எஸின் குருநாதர் என்று கூறப்படும் எம்.எஸ்.கோல்வால்கர் கருத்தி யல்படி திருக்குறள் ஓர் இந்து நூல் என்று திரிபுவாதம் செய்யும் வகையிலும் அது கொண்டு செல்லப்படக் கூடாது என்பதில் தமிழர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸை காலூன்றச் செய்ய தமிழர்களின் உள்ளத்தில் இடம் பிடிக்க - திருக்குறள் ஒரு கருவி என்ற நோக்கத்தில் தந்திரமான வகையில் இதனைக் கையில் எடுத்துக் கொள்ள முயன்றால், கடுமையான எதிர்வினையை மத்திய அரசு சந்திக்க வேண்டியிருக்கும் என்பதை இப்பொதுக்குழு எச்சரிக்கிறது. அதன் மதவாத தந்திரத்தின் முகமூடி அதன்மூலம் அம்பலப்படத்தான் பயன்படும் என்பதையும் இப்பொதுக்குழு எச்சரிக்கிறது.

திருக்குறள் மீது உண்மையிலேயே மதிப்பும், ஈடுபாடும் மத்திய அரசுக்கு இருக்குமேயானால், திராவிடர் கழகம் நீண்ட காலத்திற்கு முன்பிருந்தே வலியுறுத்தி வருவதான திருக்குறளைத் தேசிய நூலாக அறிவிக்க முன்வர வேண்டும் என்று மத்திய அரசை இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண் (15)
கிரிக்கெட் சூதாட்டத்தைத் தடை செய்க

ஆண்டுக்கொரு முறை கிரிக்கெட் சூதாட்டம் அய்.பி.எல். என்ற பெயரில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. லாட்டரிச் சீட்டை ஒழித்த அரசு, முக்கிய சூதாட்டக் களமாக நடைபெறும் அய்.பி.எல் கிரிக்கெட்டை எப்படி அனுமதிக்கிறது என்பது நியாயமான முக்கியமான கேள்வியாகும். எனவே, அய்.பி.எல் கிரிக்கெட் போட்டியை தடை செய்ய வேண்டும் என்று இப்பொதுக்குழு வலி யுறுத்துகிறது. கபடி (சடுகுடு), கால்பந்து, கைப்பந்து, கூடைப்பந்து, ஹாக்கி போன்ற உடல் நலனுக்கும் திறனுக்கும் வழி வகுக்கும் விளையாட்டுகளை ஊக்குவிக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளை இப்பொதுக் குழு வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண் (16)
பாலியல் கல்வி

மாணவர்களுக்குப் பாடத் திட்டத்தில் பாலியல் கல்வியை அறிவியல் பூர்வமாக கற்பிப்பது - பல்வேறு பிரச்சினைகளுக்கு அறிவுப் பூர்வமாக தீர்வைக் கொடுக்கும் என்பதால், இதுபற்றி அரசு கல்வியாளர் களுடனும், மருத்துவ நிபுணர்களுடனும் கலந்து ஆலோ சித்து தக்க ஏற்பாட்டினைச் செய்யுமாறு இப்பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது. பாலியல் குற்றத் தூண்டுதலுக்கு சின்னத்திரை, பெரிய திரைகளும் ஒரு வகையில் காரண மாக இருப்பதால், எந்த அளவு ஒழுங்குபடுத்த முடியுமோ, அதனைச் செய்யுமாறும் மத்திய, மாநில அரசுகளை இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.

கழகத் தலைவரே முன்மொழிந்த தீர்மானம்

தீர்மானம் எண் (17)

மதுவிலக்குத் தேவை என்ற அவசியமான காலகட்டம்

இன்றுள்ள நிலையில் உயர்நிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள்கூட மது அருந்தும் அவலம் தலைதூக்கி நிற்பதாலும், திராவிடர் இயக்கத்தின் அயரா முயற்சியால் கிடைத்த இடஒதுக்கீட்டின் காரணமாக கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் ஓரளவு இடங்கள் பெற்று தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்டவர்கள் வளர்ந்துவரும் நிலையில், இந்த நவீன குடிப் பழக்கம் வளர்ச்சியைத் தலை கீழாக்கி, குடும்பங்களைச் சீரழிக்கும் நிலை கண்கூடாகத் தெரியவருகிறது.

தமிழ்க் குடும்பங்கள் சீரழிந்து வருகின்றன; குறிப்பாக பெண்கள் பெரும் பாதிப்பிற்கும்,  அமைதியற்ற சூழலுக்கும், மன உளைச்சலுக்கும், பொருளாதார நெருக்கடிகளுக்கும் ஆளாக்கப்படுகின்றனர்.

மது என்பது பல்வேறு இரசாயனக் கலவையின் கொள்கலனாக இருப்பதால் பொருளாதார இழப்போடு, இளைஞர்கள் தங்கள் உடல்நலனையும் பலி கொடுக்கும் நிலைக்கு முற்றுப் புள்ளி வைக்கப் பிரச்சாரம் உள்ளிட்ட விழிப்புணர்வுப் பணியை மேற்கொள்வது என்று தீர்மானிக்கப்படுகிறது. இந்திய அளவிலும், முதற் கட்டமாக தமிழ்நாடு அளவிலும் முழு மது விலக்கை அமல்படுத்துமாறு மத்திய மாநில அரசுகளை இப் பொதுக்குழு வலியுறுத்துகிறது.

கழக சட்டத்துறைத் தலைவர் வழக்குரைஞர் த. வீரசேகரன் தமிழர் தலைவரின் 82ஆம் பிறந்தநாள் சிறப்பு வெளியீடான தி மாடர்ன் ரேசனலிஸ்ட் ஆண்டு மலரை (The Modern Rationalist  Annual Number 2014)’ வெளியிட்டார்.   (சேலம் 7-12-2014)
சவுத் இந்தியன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் சிந்தாமணியூர் சவுந்தரராஜன் ஆசிரியர் கி. வீரமணியின் வாழ்வியல் சிந்தனைகள் (தொடர் -10) நூலை வெளியிட்டார். (சேலம் 7-12-2014)
சேலம் பொதுக்குழுவில்  அனைவரும் எழுந்து நின்று தமிழர் தலைவர் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக் கூறி கரவொலி எழுப்பி மகிழ்ந்தனர் (7.12.2014)
----------------------

6 comments:

தமிழ் ஓவியா said...

புராணங்கள் வரலாறு ஆகாது நிகழ்வுகளே வரலாறு வரலாறை வரலாறாகவே பதிவு செய்யுங்கள் தமிழர் தலைவர் ஆசிரியர் வரலாற்றாளர்களுக்கு அறைகூவல்


சென்னை, டிச.7- சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பழைமை வாய்ந்த சென்னைப் பல்கலைக் கழகத்தில் உள்ள பெரியார் அரங்கில் இந்திய வரலாற்றுத் துறையின் சார்பில் சிறீ நாராயண குரு அறக்கட்டளையின் சார்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. வைக்கம் போராட்டத்தில் வரலாற்றுப் பரிமாணங்கள் என்கிற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கைத் தொடங்கி வைத்து திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி தொடக்கவிழாப் பேருரை ஆற்றி னார்கள்.

புராணங்கள் வரலாறு ஆகாது. நிகழ்வுகளே வரலாறு. வரலாறை வரலாறாகவே பதிவு செய்யுங்கள்.வரலாற்றில் இருக்கின்ற வைரங்களைத் தேடுங்கள், கோமேதகங்களை வரலாற்றில் தேடுங்கள், குப்பைகளில் தேடாதீர்கள். குப்பை யைக் கொட்ட வேண்டிய இடங்களில் கொட்டுங்கள் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் சென்னைப் பல்கலைக் கழகத்தில் துவக்கவிழாப் பேருரையில் குறிப்பிட்டார்.

தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்து சிறப்பு செய்யப்பட்டது

சென்னை பல்கலைக் கழகத்தின் இந்திய வரலாற்றுத் துறைத் தலைவர் முனைவர் எஸ்.குப்புசாமி தலைமையில் நடந்த விழாவிற்கு முனைவர் ஏ.சந்திரசேகர் வரவேற்றார். சிறீ நாராயணகுரு அறக்கட்டளைத் தலைவர் ஈ.வி.வாசவன், இந்திய வரலாற்றுத்துறைப் பேராசிரியர் கருணானந்தன் அறிமுக உரை ஆற்றினார்.

இந்திய வரலாற்றுத்துறை பேராசிரியை பானுமதி தருமராசன் இணைப்புரை வழங்கி நன்றி கூறினார்.

பங்கேற்றோர்

நிகழ்வின்போது திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், கேரள மாநிலத்தின் முதன்மைச் செயலாளர் (பணிநிறைவு) சுதாகரன் அய்.ஏ.எஸ்., பகுத்தறி வாளர் கழகப் பொதுச்செயலாளர் வீ.குமரேசன், அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் கோ.கருணாநிதி, திராவிட வரலாற்று ஆய்வு மய்ய செயலாளர் பேராசிரியர் மங்களமுருகேசன், சத்திய நாராயணசிங் இந்திய வரலாற்றுத் துறை பேராசிரியர்கள், மாணவர்கள், ஆய் வாளர்கள் பங்கேற்றனர்.

தொடக்க விழா உரையில், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் சிறீநாராயணகுரு அறக்கட்டளைத் தலைவர் ஈ.வி.வாசவன், கேரள மாநில அரசின் முதன்மைச் செய லாளராக பணிபுரிந்து பணிநிறைவுபெற்ற சுதாகரன் அய்ஏஎஸ் மற்றும் ஆய்வுரை வழங்குபவர்களான முனைவர் ரசியா பர்வீன், திருக்குறள் பிரச்சார இயக்கம் சத்தியசீலன் ஆகி யோரைப் பாராட்டிப் பயனாடை அணி வித்தார். திருவொற்றியூர் சிறீ நாராயணகுரு மந்திர் தலைவர் பாஸ்கரன், இந்திய வரலாற்றுத்துறைத் தலைவர் முனைவர் எஸ்.குப்புசாமி தமிழர் தலைவர், ஆசிரியர் அவர்களுக்குப் பயனாடை அணிவித்து சிறீநாராயணகுரு வாழ்க்கை வரலாற்று நூலை வழங்கினார்கள்.

தமிழ் ஓவியா said...

தமிழர் தலைவர் உரை

தமிழர் தலைவர் ஆசிரியர் தமதுரையில் குறிப்பிட்டதாவது:

ஜாதி ஒழிப்பு, தீண்டாமை அழிப்பு மிகவும் தேவையான காலக்கட்டத்தில் சிறீநாராயணகுரு பெயரில் கருத்தரங்கம் நடத்துவது பாராட்டுதலுக்குரியது. சமூக மாற்றத்துக்கான கருத்துகளை இனிவரும் தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டியது அவசியமான பணியாகும்.

ஆண்டுதோறும் நினைவூட்டக்கூடிய வகையில் அறக் கட்டளை அமைத்து கருத்தரங்குகள் பல்கலைக்கழகங்களில் நடைபெறுவது என்பது வெறும் சடங்காக இருந்துவிடக்கூடாது.

சமூகப்புரட்சி, சமுதாய சமத்துவம் உருவாக்க, மேடு பள்ள மற்ற சமநீதி எல்லோருக்கும் எல்லாம் என்கிற தந்தைபெரியார் தத்துவத்தை முதலில் தெரிந்து கொள்வது இரண்டாவது புரிந்துகொள்வது வேண்டும்.

நெல்சன் மண்டேலா நினைவுநாள் (5.12.2014). சமூக நீதி, மனித உரிமைப் போரைத் துவக்கி 27 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டு, மனித உரிமைக் கருத்துக்குப் புரட்சி யாளராகத் திகழ்ந்தவர். சமூகப்புரட்சியாளர் தந்தை பெரியார் தத்துவம் மனித உரிமைப்போரில் வரலாற்றை உருவாக்கிய வரில் ஜோதி பாபுலேவுக்குப்பிறகு அண்ணல் அம்பேத்கர் நினைவுநாள் நாளை (6.12.2014) உள்ளது.

இல்லாத பாலத்தை இருப்பதாகக் கூறி இருக்கின்ற மசூதியை இடித்தார்கள். அம்பேத்கர் நினைவுநாளையே மறைப்பதற்காக மசூதி இடிப்பு நாளாக ஆக்கிவிட்டார்கள்.

வைக்கம் போராட்டம்தான் இந்திய வரலாற் றில் முதல் மனித உரிமைப்போராட்டம். வரலாற்று பேராசிரியர்களால் இருட்டடிப்பு செய்யப்பட்டது.

ஒரு கட்டத்தில் வைக்கம் போராட்டம் மறைக்கப்பட்டது. They also run என்பதுபோல் உரிய முக்கியத்துவம் கொடுக்காமல் இருந்தார்கள். 1924 ஆம் ஆண்டில் வைக்கம் போராட்டம் நடைபெற்றது. வைக்கம் வீரர் என்று தந்தை பெரியார் அழைக்கப்படுகிறார்.

பல அறிஞர்கள் மத்தியில் வெளிநாட்டில் ஜாதி, தீண்டாமை குறித்து விளக்கினால், அவர்களால் விளங்கிக்கொள்ள முடிவதில்லை. வைக்கம் போராட்டம் ஏன் தேவைப்பட்டது? தேசிய அவ மானமாக இருந்தது நெருங்காமை. காட்டு மிரு கங்களிடம் நெருங்காமை இருந்தால் பாதுகாப்பு. Untouchability. Unseeable இதைவிட வேதனை யான சூழல் வேறு உண்டா? வைக்கம் போராட்டத்தில் பெரியார் பங்கேற்றாரா? பாதியில் திரும்பி விட்டார் என்றெல்லாம் கூறிவருகிறார்கள்.

பங்கேற்காமல் பாதியில் திரும்ப முடியுமா? என்று கேட்ட தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் வைக்கம் போராட்டத்தின் பல்வேறு வரலாற்றுக் குறிப்புகள், போராட்டக்குழுவில் பாரிஸ்டர் ஜார்ஜ் ஜோசப், கேசவ மேனன், டி.கே.மாதவன் உள்ளிட்ட பலரும் போராட்டக்குழுவினராக இருந்து சத்தியாக்கிரகப் போராட்டத்தைத் தொடங்குவதற்கு, இந்திய தேசியக் காங்கிரசின் தேசியத் தலைவரான காந்தியிடம் அனுமதி கோரியது, அதற்கு காந்தி அளித்த பதில்கள் ஆகிய விவரங்கள், பின்னர் ராஜாஜியிடம் தலைமை ஏற்று நடத்தித் தரக் கோரியபோது, அவர் உடல்நிலை சரியில்லை என்று ஒதுங்கிக் கொண்டதும்,

பின்னர் போராட்டக் காரர்கள் போராட்டத்தை நடத்தி அனைவரும் சிறையில் அடைக்கப் பட்டபோது, குளித்தலை மாநாட்டில் இருந்த தந்தை பெரியார் அவர்களை போராட்டத்தை நடத்திட அழைப்பு விடுத்த போது, தந்தைபெரியார் அங்கு சென்றார் என்பது உள்ளிட்ட பல்வேறு கருத்துகளை விரிவாக ஆசிரியர் அவர்கள் தம் உரையின்போது எடுத்துரைத்தார்.

தமிழர் தலைவர் ஆசிரியர் உரையைக்கேட்க வரலாற்றுத் துறை மட்டுமன்றி பிற துறைகளிலிருந்தும் பேராசிரியர்கள், மாணவர்கள் பெரிதும் ஆர்வத்துடன் கேட்டு மகிழ்ந்தனர்.

Read more: http://viduthalai.in/page1/92511.html#ixzz3LJ4Bc4NF

தமிழ் ஓவியா said...

ஒழுக்கக்கேடே வளர்கிறது

நீ இன்ன காரியம் செய்தால், உன் பாவம் மன்னிக்கப்படும்; பரிகாரமாகி விடும்; நீ பாவமற்றவனாக ஆகி-விடுவாய் என்று சொல்வதால் ஒழுக்கக்கேடே வளர்கிறது.

(விடுதலை, 23.8.1961)

Read more: http://viduthalai.in/page-2/92555.html#ixzz3LMdQjo22

தமிழ் ஓவியா said...

நலம் தரும் அமிலங்கள்


நமது அன்றாட வாழ்க்கையில் பல வகையான சத்துகளும், வைட்டமின்களும் சேர்ந்துதான் நம்மை ஆரோக்கியமாக செயல்பட வைக்கின்றன. ஒவ்வொரு உணவில் இருந்து பெறப்படும் சத்துக்களும் ஒவ்வொரு உறுப்பைப் பாதுகாக்கிறது. சில வைட்டமின்கள் அமிலங்களாக உடலுக்குச் சத்துக்களை வழங்குகின்றன.

இவை இயற்கையாகவே சுரக்கும் தன்மை கொண்டிருந்தாலும், இவற்றில் சில மாறுபாடுகள் ஏற்படும் போது அதாவது அதிகமாகவோ அல்லது குறைவாகவோ சுரக்கும் போது பாதிப்புகள் ஏற்பட ஆரம்பிக்கிறது. உடல்நலனுக்கு இன்றியமையாத சில முக்கியமான அமிலங்கள், பயன்கள் எந்த வகையான உணவு மூலம் பெறலாம் என்பதையும் அறிந்துகொள்வோம்.

நிக்கோடிக் அமிலம்

இரத்தத்தில் சர்க்கரை மற்றும் கொழுப்பின் அளவை நிலைப்படுத்த நியாசின் பெரிதும் உதவுகிறது. இந்த அமிலத்தின் அளவு குறையும்போது அதிகப்படியான மனக் கொந்தளிப்பு, சத்துக்குறைபாடு, எரிச்சல், ஞாபகமறதி, போன்ற பாதிப்புகள் தாக்கக்கூடும்.

இதை அதிகரிக்க முட்டையின் மஞ்சள் கரு, ஆட்டு ஈரல், பாதாம் மற்றும் பருப்பு வகைகள், முழு தானியங்கள், போன்ற உணவுகளை அதிகம் சேர்த்துக்கொள்வதால் அமிலத்தின் அளவை அதிகரிக்கலாம். ஒரு மனிதனுக்கு அமிலத்தின் அளவானது நாள் ஒன்றுக்கு 18மில்லி கிராம் வரை தேவைப்படுகிறது.

போத்தொடெனிக் அமிலம்

உடலுக்குத் தேவையான சத்துக்களை உற்பத்தி செய்ய போத்தொடெனிக் அமிலம் தேவை. இது மனிதனின் மூளை, நரம்பு மண்டலங்களின் செயல்பாடுகளுக்கு மிகவும் உதவி புரிகிறது. கவனமின்மை, பல்வலி, வாந்தி மற்றும் சத்து குறைபாடு, போன்ற பாதிப்புகள் போத்தொடெனிக் அமிலம் குறைவதனால் ஏற்படுகிறது.

இதை அதிகரிக்க முழு தானியங்கள், பருப்பு வகைகள், முட்டை, மஞ்சள் கரு, ஆகிய உணவுகளை உணவில் சேர்த்தால் சரி செய்து விடலாம். ஒரு மனிதனுக்கு அமிலத்தின் அளவானது நாள் ஒன்றுக்கு 6 மில்லி கிராம்வரை தேவைப்படுகிறது.

ஆஸ்கார்பிக் அமிலம்

வைட்டமின் சி தான், அஸ்கார்பிக் அமிலம். பி, காம்ப்ளெக்ஸ், வைட்டமின்களில் முக்கியமான வைட்டமின் இது. இந்த வைட்டமின்கள் தசை வளர்ச்சிக்கும், நோய் எதிர்ப்புச் சக்தியை உருவாக்குவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. இது இரும்புச்சத்தை உணவிலிருந்து உறிஞ்சுவதற்கும், புற்றுநோய் மற்றும் இதய நோய்களில் இருந்து பாதுகாக்கவும் உதவுகிறது.

இந்த அமிலமானது குறையும்போது ஈறுகளில் ரத்தம் வடிதல், இரத்தசோகை போன்ற பாதிப்புகள் ஏற்படுகிறது. இதை அதிகரிக்க மிளகை அதிக அளவு உணவில் எடுத்துக் கொண்டால் இந்தப் பாதிப்பை தவிர்க்கலாம்.

மேலும் ஆரஞ்சு, எலுமிச்சை, சாத்துக்குடி, முருங்கைக்கீரை, தக்காளி, கிவி பழம், முந்திரி, நெல்லிக்காய் போன்ற உணவுகளிலும் இந்த அமிலமானது நிறைந்து காணப்படு கிறது. ஒரு நாளைக்கு மனிதனுக்கு தேவையான அளவு 40 மில்லி கிராம் ஆகும்.

Read more: http://viduthalai.in/page-7/92531.html#ixzz3LMe3gW9t

தமிழ் ஓவியா said...

மருத்துவ தன்மை கொண்ட அத்தி


செந்நிற கோடுகளுடன் அமைந்து பளபளப்புடன் சிவந்த நிறத்தில் துவர்ப்பும், இனிப்பும் கலந்த சுவையுடைய பழம் இது. இதன் நடுவில் ஒரு துளையுடன் அமைந்திருக்கும். துவர்ப்புச் சுவையுடையது.

அத்திபிஞ்சு மூலவாயு, மூலக்கிராணி, ரத்தமூலம், வயிற்று கடுப்பு ஆகியவற்றை நீக்கும். காயங் களில் வடியும் ரத்தப் போக்கை உடனடியாக நிறுத்த வல்லது. வாய்ப்புண், ஈறுகள், சீழ்பிடித்தல் போன்றவைகளுக்கு அத்தி இலைச்சாறால் வாய்கொப்பளிக்க பலன் கிடைக்கும்.

அத்தியின் பட்டை, பிஞ்சு, பால், காய், பழம் ஆகியவை மருத்துவப் பயன் உடையன. சதை, நரம்பு ஆகியவற்றை சுருங்கச் செய்தல், மலமிளக்கி, காமம்பெருக்கி, சீதக்கழிச்சல், வயிற்றுக்கடுப்பு, நீரிழிவால் உண்டாகும் தாகம், வறட்சி உடல் வெப்பம் முதலிவை நீங்கும். பால் பித்த நோய், நீரிழிவு, சூலை, இவற்றைப் போக்கும்.

பட்டையானது கீழ்வாய்க்கடுப்பு, குருதிப்பெருக்கு, சீதக்கழிச்சல், நாற்றமுள்ள புண்கள், வெள்ளைப்படுதல் ஆகியவற்றை போக்கும். அத்திப்பால் 15மிலியுடன் வெண்ணெய், நாட்டுச் சர்க்கரை கலந்து காலை, மாலை குடித்து வந்தால் நீரிழிவு, ரத்தம் கலந்த வயிற்றுப்போக்கு, பெரும்பாடு, சிறுநீரில் ரத்தம் வருதல் தீரும். அத்திப் பழத்தை 10 முதல் 20 வரை காலை, மாலை சாப்பிட்டு பால் குடித்து வந்தால் தாது விருத்தி உண்டாகும். ஆண்மை ஆற்றல் அதிகரிக்கும்.

ஆண்களின் மலடும் நீங்கும். நிழலில் காய வைத்து, தேனில் ஊறவைத்தும் சாப்பிடலாம். பொடியை சூரணமாக்கி 15 கிராம் சாப்பிடலாம். அத்தி மரத்தை வெட்டினால் பால் வடியும். இது துவர்ப்பு மிக்கதாக இருக்கும். அடிமரத்தின் கீழ் வேரை பறித்து நுனியை சீவிவிட்டால் பால் வடியும். இதுவே அத்தி மரத்தின் சிறப்பாகும்.

தென்னை, பனையில் பாளையில் பால் சுரக்கும். இதற்கு வேரில் சுரக்கும். இதை 300 மில்லி முதல் 400 மில்லி வரை நாள்தோறும் குடித்து வந்தால் மேக நோய் நீங்கும். நீரிழிவு குணமாகும்.

பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப் படுதல் நிற்கும். உடலுக்கு சிறந்த ஊட்டச்சத்து மிக்க உணவாகும். எதிர்ப் பாற்றல் பெற்று உடல் வனப்பு பெறும். இதன் அடிமரப் பட்டையை பசுமோர் விட்டு இடித்து சாறெடுத்து 30 முதல் 50 மில்லி நாள்தோறும் இரவில் குடித்துவர பெரும்பாடு குணமாகும். மேக நோய் புண் குணமாகும்.

கருப்பை கோளாறுகள் நீங்கும். அத்தி மரத்தின் துளிர்வேரை அரைத்து 10 கிராம் பாலில் சாப்பிட நீர்த்தாரை எரிச்சல், சூடுபிடித்தல் குணமாகும். உடல் வெப்பம் குறையும். மயக்கம் வாந்தி குணமாகும்.

Read more: http://viduthalai.in/page-7/92529.html#ixzz3LMeE3UR8

தமிழ் ஓவியா said...

அறிவு விளக்கம் இல்லாதவர்கள்


கக்கூஸ் எடுப்பவர்களுக்கும், ஜலதாரை அள்ளிக் கொட்டுகிறவர்களுக்கும் எப்படி நாற்றம் தெரியாதோ, அதுபோலக் கடவுள் நம்பிக்கைக்காரர்களுக்கு அறிவு விளக்கமே இருக்க முடியாது என்றுதான் சொல்ல வேண்டியதாயிருக்கிறது. - (விடுதலை, 20.10.1967)