Search This Blog

6.12.14

பார்ப்பனியம்,முதலாளித்துவம் இரண்டு எதிரிகள்-அம்பேத்கர்

இந்நாட்டுத் தொழிலாளர்கள் இரண்டு எதிரிகளுடனும் போராட வேண்டும்!
{(டிசம்பர்-6) அம்பேத்கர் நினைவு நாள் சிந்தனையாக இக்கட்டுரை பதிவு செய்யப்படுகிறது.}

நண்பர்களே! தாழ்த்தப்பட்ட வகுப்பினர் இதுவரையில் சமூகக் குறைபாடுகளை நீக்குவதற்காகத்தான் போராடினார்கள்; பொருளாதாரக் குறைபாடுகளை நீக்குவதற்கான முயற்சிகளை அவர்கள் மேற்கொள்ளவில்லை. இந்த மாநாடு தான் பொருளாதாரக் குறைபாடுகளை அலசுவதற்காக முதன்முறையாகக் கூட்டப்பட்டுள்ளது. இதுவரை, பறையர்கள் என்ற அடிப்படையில் தீண்டத்தகாதவர்கள் பிரச்சினைகளை சந்தித்து வந்தனர். இப்போது தொழிலாளர்கள் என்ற அடிப்படையில் அவர்கள் பிரச்சினைகளை சந்திக்கிறார்கள். சமூகக் குறைபாடுகளை வலியுறுத்துவதில் நாம் தீவிரமாக இருந்ததில் எந்தத் தவறும் இல்லை. நமது மனிதமே நசுங்குமளவுக்குப் பெரும் சுமைகளை சுமந்தோம் என்னும் குறைபாடு, நமக்கு இருப்பதை எவரும் மறுப்பதற்கில்லை. நமது போராட்டத்தால் எந்தப் பயனும் விளையவில்லை என்று எவரும் சொல்ல முடியாது. அதே நோக்கில் தீண்டாமையை ஒழிப்பதில் நாம் வெற்றி பெற்று விட்டோம் என்பதும் உண்மையில்லை.

மனிதர்களுக்குத் தேவையான சில அடிப்படைத் தேவைகளைப் பெறுவதில் நாம் இன்னும் வெற்றியடையவில்லை என்பது உண்மைதான். அரசியல் அதிகாரத்தைப் போராட்டத்தின் மூலம் பெற்றிருக்கிறோம் என்பதும் உண்மை. அதிகாரம் இருக்குமானால், விடுதலையும் இருக்கும் என்னும் கூற்றில் உண்மை இருக்கிறது. அதிகாரம் ஒன்றின் மூலம் மட்டுமே விடுதலை பெற முடியும். தடைகளைக் கடந்து தளையிலிருந்து விடுபட முடியும். அரசியல் அதிகாரம் அத்தகைய வீரியம் கொண்டது. மத, பொருளாதார அதிகாரத்தைப் போல் அத்தனை வலிமை அரசியல் அதிகாரத்திற்கு இல்லையென்றாலும், அரசியல் அதிகாரமும் உண்மையில் பலன் தரக் கூடியதாகும்.

புதிய அரசமைப்பின் மூலம் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் வென்றெடுத்த அரசியல் அதிகாரம், சிலரால் பறிக்கப்படுவதும் உண்டு, வீணாகப் போவதும் உண்டு. இதற்கு பகைவர்களின் சூழ்ச்சி, நம்முடன் உள்ள சில தான்தோன்றிகளின், சுயநலப் பேராசைக்காரர்களின் சீர்குலைப்பு நடவடிக்கைகளும் ஒரு காரணம். பின்னணியில் ஓர் அமைப்பு இல்லாத அதிகாரமும், பின்னணியில் ஓர் மனசாட்சியில்லாத அதிகாரமும் அதிகாரமே அல்ல. தாழ்த்தப்பட்ட வகுப்பினர் அமைப்பு ரீதியாகத் திரளும் நாள், தங்கள் அதிகாரத்தை உணரும் நாள், அதை அறிவார்ந்த முறையிலும் திறன் வாய்ந்த முறையிலும் பயன்படுத்தி, சமூக விடுதலையை வென்றெடுக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை!

நம்முடைய முயற்சிகள் திசை தவறிப் போகின் றன என்று சொல்ல நான் தயாராக இல்லை. சமூகப் பிரச்சினைகளில் கவனம் செலுத்துவதைப் போல, பொருளாதாரப் பிரச்சனைகள் மீது உரிய கவனம் செலுத்த நீண்ட காலமாக நாம் தவறி விட்டோம் என்பதை ஒப்புக் கொள்கிறேன். எனவே, தீண்டத்தகாதோர் என்பதைக் காட்டிலும், தொழிலாளர்கள் என்னும் அடிப்படைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து, நாம் இன்று திரண்டிருக்கிறோம் என்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. இது ஒரு புதிய திருப்பம். ஆனால், சிலர் இந்தத் திருப்பத்திற்கு ஒரு தீய உள்ளர்த்தம் கற்பிக்கிறார்கள். இதில் நான் பங்கேற்பதற்காக என் மீது எதிர்மறை விமர்சனம் செய்தார்கள். தொழிலாளர் தலைவர்கள் அல்லாமல் வேறு இடத்தில் இருந்து இந்த விமர்சனம் வந்திருந்தால், நான் அதை லட்சியம் செய்திருக்க மாட்டேன். இத்தகைய மாநாட்டைக் கூட்டுவதன் மூலம் நாம் தொழிலாளர்களைப் பிளவுபடுத்துகிறோம் என்று தொழிலாளர் தலைவர்கள் விமர்சனம் செய்கிறார்கள்.

என்னைப் பொறுத்தவரை, இந்நாட்டுத் தொழிலாளர்கள், இரண்டு எதிரிகளோடும் போராட வேண்டியுள்ளது. ஒன்று பார்ப்பனியம்; மற்றொன்று முதலாளித்துவம். தொழிலாளர்கள் பார்ப்பனியம் என்னும் பகைமைச் சக்தியுடனும் போராட வேண்டியுள்ளது என்பதை நமது விமர்சகர்கள் புரிந்து கொள்ளத் தவறுவதால், இத்தகைய விமர்சனங்கள் வருகின்றன. பார்ப்பனியம் என்னும் எதிரியை நாம் சமாளிக்க வேண்டும் என்று சொல்லும்போது, என்னைத் தவறாகப் புரிந்து கொள்ளக் கூடாது. பார்ப்பனர்கள் ஒரு வகுப்பினர் என்ற அடிப்படையில் அதிகாரம், உரிமைகள், நலன்கள் ஆகியவற்றைப் பெறுவதை நான் பார்ப்பனியம் என்று சொல்லவில்லை. அந்தப் பொருளில் நான் பார்ப்பனியம் என்ற சொல்லைப் பயன்படுத்தவில்லை.

சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய உணர்வுகளின் எதிர்மறைதான் பார்ப்பனியம் என்று சொல்கிறேன். இந்த எதிர்மறை உணர்வு, எல்லா வகுப்பினரிடையிலும் உண்டு, பார்ப்பனர்களோடு அது நின்று விடவில்லை. பார்ப்பனர்கள் அதைத் தோற்றுவித்தவர்கள் என்ற போதிலும், அது எல்லா வகுப்பினரிடையிலும் ஊடுருவி உள்ளது என்பது உண்மை. பார்ப்பனியம் எங்கும் பரவி எல்லா வகுப்பினரின் சிந்தனை, செயல்களில் ஆதிக்கம் செலுத்துவது மறுக்க முடியாத உண்மை. இந்தப் பார்ப்பனியம், சில வகுப்புகளுக்கு உரிமை மிகுந்த உயர்வுகளை வழங்குகிறது என்பதும் மறுக்க முடியாத உண்மை. பிற வகுப்புகளுக்கு சம வாய்ப்புகளை மறுக்கிறது என்பதும் உண்மை. பார்ப்பனியம் சேர்ந்துண்ணல், கலப்பு மணம் ஆகிய சமூக உரிமைகளை மறுப்பதோடு நின்று விடுவதில்லை. அப்படி நின்றிருந்தால், யாரும் அதைப் பற்றிக் கவலைப்பட்டிருக்க மாட்டார்கள். அது, சிவில் உரிமைகளையும் பதம் பார்க்கிறது.

----------------------------பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு: 17(3), பக்கம்:175

15 comments:

தமிழ் ஓவியா said...

1956 அக்டோபர் 14 ஆம் நாள் பார்ப்பன ஆதிபத்திய வருணாசிரம இந்து மதத்திலிருந்து 5 லட்சத்துக்கும் அதிகமான தாழ்த்தப்பட்ட தோழர்களும் பவுத்தம் தழுவியபோது அண்ணல் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் அவர்களும், மற்றவர்களும் எடுத்துக் கொண்ட உறுதி மொழிகள் இதோ:

1. பிரம்மனையோ, விஷ்ணுவையோ, சிவனையோ நான் கடவுள் என்று கருத மாட்டேன். அவர்களை வழிபாடு செய்யவும் மாட்டேன்.

2. இராமனையோ, கிருஷ்ணனையோ நான் கடவுள் என்று கருதமாட்டேன்; அவர்களை வழிபாடு செய்யவும் மாட்டேன்.

3. இந்துத் தெய்வங்களான கவுரி, கணபதி, இத்தியாதிகளை நான் கடவுள் என்று ஏற்க மாட்டேன்; அவைகளை வழிபாடு செய்யவும் மாட்டேன்.

4. கடவுள் பிறவி எடுத்ததாகவோ, எந்தவொரு உருவத்தில் அவதாரம் செய்ததாகவோ நான் நம்பமாட்டேன்.

5. பகவான் புத்தர்; மகா விஷ்ணுவின் அவதாரம் என்பதை நான் நம்பமாட்டேன். அப்படிப்பிரச்சாரம் செய்வது விஷமத்தன மானது, தவறானது என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

6. சாவு சம்பந்தப்பட்ட இந்து மதச் சடங்கான சிரார்த்தத்தை நான் ஒருபோதும் செய்யமாட்டேன்; இறந்தவர்களின் பெயரால் நான் பிண்டம் கொடுக்கவும் மாட்டேன்.

7. பவுத்தத்தின் கோட்பாடுகளுக்கு எதிராக நான் என்றுமே நடக்க மாட்டேன்.

8. பார்ப்பனர்களால் நடத்தப்படும் சமஸ்காரங்கள் எதனையும் நான் என்றுமே ஏற்றுக்கொள்ளமாட் டேன்.

9. அனைவரும் சமம் என்ற கொள்கையை நான் நம்புகிறேன்.

10. சமத்துவத்தை நிலைநாட்ட நான் முயல்வேன்.

11. பகவான் புத்தர் காட்டிய எட்டு அம்ச வழியை நான் பின்பற்றுவேன்.

12. தம்மதத்தின் 12 பரமிதங்களையும் நான் பின்பற்றுவேன்.

13. எல்லா உயிர்ப் பிராணிகளிடத்தும் நான் கருணை காட்டுவேன்; அவைகளைக் காக்க முயலுவேன்.

14. நான் பொய் சொல்லமாட்டேன்.

15. நான் திருட மாட்டேன்.

16. காமத்தில் நான் உழல மாட்டேன்; பாலுணர்வில் அத்துமீற மாட்டேன்.

17. போதைக்குக் காரணமான குடியையோ, மதுவையோ நான் அருந்த மாட்டேன்.

18. ஞானம், கருணை, அறிவுரை ஆகியவற்றின் அடிப்படையிலான புத்தரின் போதனைகளுக்கு இணங்க என் வாழ்வை உருவாக்க நான் முயலுவேன்.

19. பார்ப்பனர் தவிர்த்த பிற மனிதர்களை கீழான பிறவிகள் என்று கருதுவதும், சமத்துவமற்ற நிலையில் நம்பிக்கை உடையதும், மனிதர்களின் விடுதலைக்குக் கேடாக இருப்பதுமான இந்து மதத்தை நான் கைவிட்டு விட்டு இன்று புத்த மதத்தைத் கைக் கொள்ளுகிறேன்

20. புத்த தம்மமே சிறந்த மார்க்கம் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

21. இன்று புதிய பிறவி எடுக்கிறேன் என்று நான் நம்புகிறேன்.

22. புத்த தம்மத்துக்கு இணங்கவே இன்று முதல் நான் செயல்படுவேன் என்று உறுதி கூறுகிறேன்.

நான் இந்துவாக சாக மாட்டேன் என்று சொன்னவர் தம் வாழ்நாளில் அதனைச் சாதித்துக் காட்டினார்.

- “விடுதலை” 16-2-2012

தமிழ் ஓவியா said...

இந்த நினைவு நாளில்...

அண்ணல் அம்பேத்கர் பிம்பமல்ல பின்பற்றப்பட வேண்டியவர்!

சமூகப் புரட்சியா ளரும், தலைசிறந்த சிந்தனையாளருமான அண்ணல் அம்பேத்கரின் நினைவு நாள் இன்று. வரலாற்றுச் சுவடான இந்த நாளைத்தான். சங்பரிவாரக் கும்பல், 450 ஆண்டு பழைமை வாய்ந்த பாபர் மசூதியை, இராமன் பிறந்த இடத்தில் பாபர் மசூதி கட்டலாமா? என்று பொய்யுரை புகன்று, அன்றைய மத்திய - மாநில ஆட்சிகளின் கண் ஜாடையோடு, இடித்து, இந்தியாவில் மதக் கலவரத்திற்கு வித்தூன்றினர்.

ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்து 1992ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதி நடந்த அந்தக் குற்றத்தினைச் செய்தவர்கள் இன்றும் மார்தட்டி நிற்கின்றனர். சட்டம் ஊமையாக, ஆமையாக உள்ளது!

எத்தனையோ கமிஷன்களும், வழக்குகளும் மவுன ராகங்கள் வாசிக்கின்றன! தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி என்ற அறிவுரைகள் ஒரு புறம் - இந்த லட்சணத்தில் அண்ணல் அம்பேத்கரின் நினைவு நாளை (டிச.6) அவர்கள் தேர்வு செய்ததே, அவரின் நினைவை திசை திருப்பவே.

இன்றோ அதே கூட்டம் அம்பேத்கரையும் முகத்திரையாக வாக்கு அறுவடைக்குப் பயன்படுத்த திட்டமிடுகின்றனர்!

இந்துமதம்தான் ஜாதி - தீண்டாமையின் ஊற்று - பாதுகாவல் அரண் என்ற அவரது கருத்துக்கு நேர் எதிரானவர்கள் அவரைத் தங்கள் முகபடாமாக அணிந்து பவனி வந்து அப்பாவி தாழ்த்தப்பட்டோரை ஏமாற்றிட முயலுகின்றனர்!

சில இளைஞர்களை - அவர்தம் குடியிருப்புப் பகுதிகளுக்குச் சென்று பசப்பு மொழிகளால் ஈர்க்க முயலும் கொடுமை, பக்தி மயக்க மருந்து மூலம் நடைபெறுகிறது.

ஒடுக்கப்பட்டோர் உரிமை அமைப்புகள் எச்சரிக்கையுடனும், விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டிய முக்கிய தருணம் இது!

இராமனையும், கிருஷ்ணனையும், மனு தர்மத்தையும், ஏற்காதவர் அம்பேத்கர்.

அவரை வெறும் படமாக்கி - பிம்பமாக்கி - பெருத்தமாலைகள் சிலைகளின் முகத்தை மறைப்பது போல், அணிவித்து, போலிப் பாராட்டுகளால் அவரது கொள்கையை மறைத்து அழித்து விட முயலு கிறார்கள்!

அண்ணல் அம்பேத்கர் வெறும் சிலை அல்ல. சீலத்தைத் தந்தவர் அவர் பிம்பமல்ல - பின்பற்றப்பட வேண்டியவர்!

மறவாதீர்!


சென்னை
6-12-2014

- கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்

Read more: http://viduthalai.in/e-paper/92474.html#ixzz3L83SUfgU

தமிழ் ஓவியா said...

மருந்து, மாத்திரை களின் பெயர்களை புரியும் படியும், தலைப்பு எழுத்து களிலும் எழுத வேண் டும் என்று மருத்துவர் களுக்கு உத்தரவிடும் வகையில், இந்திய மருத் துவக் கவுன்சில் விதி முறைகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித் துள்ளது.

Read more: http://viduthalai.in/e-paper/92468.html#ixzz3L846iYY6

தமிழ் ஓவியா said...

பாபாசாகிப் அண்ணல் அம்பேத்கர் நினைவு நாள்- டிசம்பர் 6


அண்மையில் மகாராஷ்டிரா நவநிர்மாண் கட்சியின் தலை வரும், பால் தாக்கரேயின் தம்பியின் மகனுமான ராஜ்தாக் கரேயின் மகள் ஊர்வசி தாக்கரே, தனது டிவிட்டரில் பாபாசாகிப் அம்பேத்கரைச் சிறுமைபடுத்தி, கருத்து தெரிவித்திருந்தார்.

தாழ்த் தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த பங்கி அதாவது தோட்டி சமுதாயத்தைச் சேர்ந்த அம்பேத்கருக்கு நினைவகம் இருக்கும்போது, பால் தாக்கரே போன்ற மிகப்பெரிய தலைவருக்கு ஏன் நினைவகம் அமைக்கக்கூடாது எனக் கூறியிருந்தார்.

இந்திய அரசியல் சட்டத்தை இயற்றிய அம்பேத் கரை, சுதந்திர இந்தியாவின் சட்ட அமைச்சராக இருந்த அம்பேத்கரை, பொருளாதாரத் துறையில் எனது தந்தை என நோபல் பரிசு பெற்ற அமர்தயா சென்னால் போற்றப்பட்ட அம்பேத்கரை, பழமைவாதிகளான ஷ்யாம் பிரசாத் முகர்ஜியின் பேச்சைக் கேட்டு, இந்து சட்ட திருத்த மசோதாவை அம்பேத்கர் விரும்பியபடி கொண்டு வர மறுத்த நேரு அமைச்சரவையிலிருந்து கொள்கைக்காக விலகிய அம்பேத்கரை, 1935இ-ல் உருவான ரிசர்வ் வங்கி அமைவதற்கு காரணமான அம்பேத்காரை, தாமோதர் பள்ளத்தாக்கு, ஹிராகுட் திட்டம் அமைவதற்கு அடித்தளம் இட்ட அம்பேத்காரை, தொழிலாளர்களின் வேலை நேரத்தை 12 மணி நேரத்திலிருந்து 8 மணி நேர வேலை என மாற்றப் படுவதற்குக் காரணமான அம்பேத்கரை விட, மக்களிடையே மத வெறியைத் தூண்டி அரசியல் செய்த பால் தாக்கரே சிறந்த தலைவர் என மராட் டியத்தில் இன்று கூற முடிகிறது என்றால், மதவெறி ஆட்சிகள் அமைந்தது தானே காரணம்.

ஆனால், அம்பேத்கர் மறைவு குறித்து, தந்தை பெரியார் வெளியிட்ட அறிக்கையில் அம்பேத்கரின் சிறப்புகளை எவ்விதம் கூறியுள்ளார் என்பதை இன்றைய தலைமுறை அறிந்து கொள்ள வேண்டும்.

பெரியாரின் அறிக்கை 8.12.1956-இல் விடுதலையில் வெளியானது. அந்த அறிக்கையில், இந்தியாவின் சிறந்த அறிஞர்களில் முன்னணியிலுள்ள அறிஞரும், ஏராளாமான விஷயங்களைக் கற்றுத் தேர்ந்த கலாநிதியுமான அம்பேத்கர் அவர்கள் முடிவெய்தி விட்டார் என்று செய்தி கேட்டவுடன் திடுக்கிட்டுப் பதறிவிட்டேன்.

உண்மையில் சொல்ல வேண்டு மானால், டாக்டர் அம்பேத்கருடைய மறைவு என்னும் ஒரு குறைபாடானது எந்தவிதத்திலும் சரி செய்ய முடியாத ஒரு மாபெரும் நஷ்டமேயாகும். அவர் சிறப்பாகத் தாழ்த்தப்பட்ட சமுதாயத்துக்குத் தலைவர் என்று சொல்லப்பட்டாலும், பகுத்தறிவுக்கு எடுத்துக்காட்டாகவுள்ள ஒரு பேரறிஞராக விளங் கினார். எப்படிப்பட்டவரும் எடுத்துச் சொல்லப் பயப்படும்படியான புரட்சிகரமான விஷயங்களை எல்லாம் வெகு சாதாரணத்தன்மையில் எடுத்துச் சொல்லும்படியான வீரராகவும் விளங்கினார்.

உலகத்தாரால் மதிக்கப்படும் மாபெரும் தலைவரான காந்தியாரை, வெகு சாதாரணமாக மதித்த தோடு, அவருடைய பல கருத்துக்களைச் சின்னா பின்னமாகும்படி மக்களிடையில் விளக்கும் மேதாவியாக இருந்தார்.

இந்துமதம் என்பதான ஆரிய ஆத்திக மதக்கோட்பாடுகளை வெகு அலட்சி யமாகவும், ஆபாசமாகவும், அர்த்தமற்றதாகவும் மக்கள் கருதும்படியாகப் பேசியும், எழுதியும் வந்தார்.

உதாரணம் சொல்ல வேண்டுமென்றால், காந்தியாரையே ஒரு பத்தாம்பசலி, பிற்போக்குவாதி என்றும், அவரால் பிரமாதமாகப் படிக்கப்பட்டுவந்த கீதையை, முட்டாள்களின் உளறல்கள் என்றும் சொன்னதோடு, காந்தியாரின் கடவுளான இராமனை மகாக் கொடியவன் என்றும், இராமாயணக் காவியம் எரிக்கத் தகுந்தது என்றும் சொல்லி, பல்லாயிரக் கணக்கான மக்களிடையில் இராமாயணத்தைச் சுட்டு எரித்துச் சாம்பலாக்கிக் காட்டினார்.

இந்துமதம் உள்ளவரையிலும் தீண்டாமையும் சாதிப் பிரிவும், அவற்றால் ஏற்பட்ட கொடுமையும் ஒழியவே ஒழியாது என்றும் ஓங்கி அறைந்தார். மேற்கண்ட இந்தக் கருத்துக்கள் தவழும்படியாக ஏராளமான புத்தகங்களை எழுதி வெளியிட்டார். இப்படியாக அனேக அரிய காரியங்களைச் செய்த ஒரு மாபெரும் பகுத்தறிவுவாதியும், ஆராய்ச்சி நிபுண ரும், சீர்திருத்தப் புரட்சிவீரருமான டாக்டர் அம் பேத்கர் முடிவு எய்தினது இந்தியாவுக்கும், தாழ்த் தப்பட்ட மக்களுக்கும், பகுத்தறிவு வளர்ச்சிக்கும் எளிதில் பரிகரிக்க முடியாத பெரியதொரு குறைவேயாகும்.

அம்பேத்கரின் மறைவு என்னும் செய்தி திடீரென்று மொட்டையாக வெளியானதிலிருந்து அவருடைய மரணத்துக்குப் பின்னால் சில இரகசியங்கள் இருக்கலாமென்று கருதுகிறேன். அதாவது, காந்தியார் மரணத்துக்கு உண்டான காரணங்களும், அதற்கு ஆதாரமான பல சங்கதிகளும் டாக்டர் அம்பேத்கர் மரணத்துக்கும் இருக்கக் கூடும் என்பதே ஆகும். அண்ணல் அம்பேத்கரின் மறைவு நாளில், பெரியார் சுட்டிக்காட்டியபடி, பாசிச இந்துக் கும்பல் குறித்து அம்பேத்கரின் கருத்துக்களை நெஞ்சில் ஏந்தி போராட உறுதி ஏற்போம்.

-_-குடந்தை கருணா

Read more: http://viduthalai.in/page-3/92439.html#ixzz3L87JBL51

தமிழ் ஓவியா said...

சுயமரியாதை உதயம் பெண்கள் சுதந்திரம் சொத்து உரிமை


மைசூர் சமஸ்தானத்தில் பெண் மக்களுக்குச் சொத்து உரிமை அதாவது தகப்பன் சொத்தில் பெண்களும் பங்கு பெறவும், சொத்துக்களை வைத்து, சுதந்திரமாய் அனுபவிக்கவும் உரிமை பெற்று விட்டார்கள். கல்யாண ரத்து

பரோடா சமஸ்தானத்தில் ஆணும், பெண்ணும் கல்யாண ரத்து செய்து விலகிக் கொள்ள சட்டம் கொண்டுவர அனுமதிக்கப்பட்டாய் விட்டது.

அதாவது, தம்பதிகளில் ஆணோ, பெண்ணே 7வருஷ காலம் இருக்குமிடம் தெரியாமல் பிரிந்து இருந்தாலும், வேறு மதத்தைத் தழுவிக் கொள்வதால் இஷ்ட மில்லாவிட்டாலும், சன்னியாசியாகி விட்டாலும், 3 வருஷ காலம், ஒற்றுமை யின்றி சதா குடும்பத்தில் கண்டிப்பாயிருந்தாலும், வேண்டாம் என்று பிரிந்து போய்விட்டாலோ, குடியில் மூழ்கினவர்களாயிருந்தாலோ, சதா பிறர் மீது காதலுள்ள வர்களாக இருந்தாலோ ஆகிய காரணங்களால் துன்பப் படும் புருஷனோ, மனைவியோ தங்கள் விவாகங்களை சட்ட மூலம் ரத்து செய்து கொள்ளலாம்.

மற்றும் கல்யாணமாகும் சமயத்தில் தம்பதிகளில் யாராவது செவிடு, ஊமை, வியாதி, குருடு, பைத்தியம், ஆகியவைகள் இருந்ததாகவோ அல்லது மைனராக இருந்ததாகவோ தெரிய வந்தாலும், இஷ்டப்படாதவர்கள் தன்னைக் கல்யாணப்பந்தத்தில் இருந்து விலக்கிக் கொள்ளலாம். இந்தப்படி விலக்கிக்கொண்ட 6 மாதம் பொறுத்து அவரவர்கள் இஷ்டப்படி வேறு கல்யாணம் செய்து கொள்ளலாம்.

மைசூரில் கல்யாண வயது

மைசூர் சமஸ்தானத்தில் பெண்களுக்கு 14வயது ஆனபிறகு தான் கல்யாணம் செய்ய வேண்டும் என்று சட்டம் கொண்டு வர ஏற்பாடாயிருக்கிறது.

செங்கல்பட்டு தீர்மானங்களைப் பார்த்த கனவான்கள் - ஜஸ்டிஸ் பேப்பர் உள்பட சுயமரியாதை இயக்கம், மத சமூகத்தைக் கட்டுத்திட்டமில்லாமல் செய்கின்றது என்று சொல்லிக் கொண்டிருப்பவர்கள் இப்போது இந்திய சமஸ்தானங்களைப் பார்த்தாவது புத்தி பெறுவார்கள் என்று கருதுகின்றோம்.

குடிஅரசு - செய்திக்கட்டுரை - 21.06.1931

Read more: http://viduthalai.in/page-7/92443.html#ixzz3L87d8bd1

தமிழ் ஓவியா said...

"என் வாழ்வு - மூச்சு - சர்வமும் என் இன மக்கள், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப் பட்ட, ஒடுக்கப்பட்ட மக்கள், முன்னேற முடியாமல் அழுத்தி வைக்கப்பட்ட மக்கள் மனிதத் தன்மை அடையவேண்டும்; மானம் உடையவர்களாக ஆக வேண்டும் என்பதைத் தவிர வேறு சுயநலம் என்ன?"

- தந்தை பெரியார்

Read more: http://viduthalai.in/page-7/92443.html#ixzz3L87r6xWj

தமிழ் ஓவியா said...

யார் செயல்? யாருக்கு நன்றி!

காங்கிரசில் உள்ள பார்ப்பனர்கள் அனைவரும், வருணாசிரம தருமத்தையும், மதத்தையும், கடவுளையும், வேதங்களையும், புராணங்களையும் பிரசாரம் புரிந்து, நமது இயக்கத்தால் சிறிது கண்திறந்து வருகின்ற பாமர மக்களை மீண்டும் மூட நம்பிக்கையில் கட்டுப்படுத்தி வைக்கவே காங்கிரசை உபயோகப்படுத்திக் கொண்டு வருகின்றனர் என்று நாம் அடிக்கடி கூறிவருவதில் சிறிதும் தவறில்லையென்பதற்கு மற்றொரு உதாரணம் கிடைத்திருக்கிறது.

தென்னாட்டுக் காந்தி எனக் காங்கிர கூலிகளால் கொண்டாடப்படும் திரு.சி. இராஜகோபாலாச்சாரியார் அவர் களைப் பற்றி நாம் ஒன்றும் அதிககமாகக் கூற வேண்டியதில்லை. அவர் ஒரு பழுத்த வருணாசிரம தருமவாதியாகிய கடவுள் பக்தர் ஆக விளங்குகிறார் என்பது பலருக்கும் தெரிந்த விஷயமாகும். குடுகுடுப்பைக்காரன் போகுமிடந்தோறும், தனது குடுகுடுப்பை யையும், தன் தோளின் மேல் ஒரு மூட்டைக் கந்தைத்துணியையும் சுமந்து கொண்டு போவதைப்போல, திரு. ராஜகோபாலாச்சாரி யாரவர்களும் எங்கே போனாலும் புராணங்களையும், கடவுளையும் சுமந்தே தான் செல்லுவார். அவர் எந்த அறிக்கை வெளியிட்டாலும், எங்கே என்னென்ன பேசினாலும், கடவுளைப் பற்றியும் புராணங்களைப்பற்றியும் பேசாமல் விடவே மாட்டார். அவருடைய அரசியல் பிரச்சாரத்துடன் கூடவே கடவுள் பிரச்சாரமும், புராணப்பிரசாரமும் நடந்து தான் தீரும். அவருடைய சகாக்களாகிய மற்ற அய்யர், அய்யங்கார், ஆச்சாரியார்களும் இம்மாதிரியே பிரச்சாரம் பண்ணிக்கொண்டே வருகின்றனர். இதற்கு உதாரணமாகச் சமீபத்தில் அவர் வெளிட்டிருக்கும் ஒரு அறிக்கையைக் கவனிக்க வேண்டுகிறோம். அவ்வறிக்கை வருமாறு:-

நாளது டிசம்பர் மாதம் 28ஆம் தேதி மகாத்மா காந்தி பம்பாய் வந்து சேருவார். அன்றையதினத்தைத் தமிழ்நாடெங்கும் திருநாளாகக் கொண்டாட வேண்டுமென்று கேட்டுக்கொள்ளு கிறேன். அன்று மாலை ஜாதி, மத கட்சி பேதங்கள் எல்லா வற்றையும் மறந்து, தமிழ்நாட்டில் உள்ள ஆண்கள், பெண்கள் அனைவரும் பொதுக் கூட்டத்தில் கூட வேண்டும். நமது ஒப்பற்ற தலைவர் அளவில்லாத தேக சிரமங்களுக்கு உள்ளாகியும், சௌக்கியமாகத் திரும்பி வந்ததைக் குறித்து ஆண்டவனுக்கு நன்றி செலுத்திப் பிரார்த்தனை செய்யவேண்டும். அன்றைய தினம் நமது மகிழ்ச்சிக்கு அறிகுறியாகச் சொந்த வீடுகள், பொதுக்கட்டடங்கள் எல்லாவற்றிலும் தேசியக்கொடி பறக்க விடண்டுமென்று கேட்டுக்கொள்ளுகிறேன். (இந்தியா) என்பது அவ்வறிக்கையாகும். இந்த அறிக்கையின் சுருக்கமான கருத்து, திரு. காந்தியவர்கள் பிரயாணஞ் செய்த காலத்தில் உடம்பு சௌக்கியமாக இருந்தது ஒன்று, பிரயாணஞ் செய்து திரும்பி வந்தது ஒன்று, ஆகிய இந்த இரண்டு காரியங்களைச் செய்து விட்டார். இதற்காக ஆண்டவன் என்பவனுக்கு நன்றியும் பிரார்த்தனையும் செய்வது ஒன்று, தேசியக்கொடி பறக்க விடுவது ஒன்று. ஆகிய இந்த இரண்டு காரியங்களையும் செய்ய வேண்டும் என்பதாகும்.

தமிழ் ஓவியா said...


உண்மையிலேயே திரு. காந்தியவர்களுக்கு ஒருவித ஆபத்தும் உண்டாகாமல் இருந்ததற்குக்காரணம் ஆட்டுப்பாலும் பேரீச் சம்பழங்களும், நிலக்கடலைகளும், டாக்டர்களும், ஆங்கில அரசாங்கத்தார் அவருக்கெனத் தனியாகப் பாதுகாப்புக் கென ஏற்படுத்தியிருந்த போலீசுமேயாகும்.

இரண்டாவது, குறிப்பிட்ட இடங்களுக்குப் பிரயாணம் செய்து குறிப்பிட்ட இடத்திற்குத் திரும்பி வந்ததற்குக்காரணம் ரயில், கப்பல், மோட்டார் முதலியவைகளேயாகும்.

ஆகவே திரு. காந்தி அவர்கள் சௌக்கியமாகப் பிரயாணஞ் செய்து திரும்பியதற்காக நன்றி செலுத்த வேண்டுமானால் ஆங்கில அரசாங்கத்தார் போலீஸ்காரர்கள், ரயில்வே அதிகாரிகள், கப்பல் அதிகாரிகள், மோட்டார் ஓட்டிகள் ஆகிய இவர்களுக்கும், அவருக்குப்பால் சப்ளை செய்த ஆடுகளுக்கும், பேரீச்ச மரங்களுக்கும், நிலக்கடலைகளுக்குமே நன்றி செலுத்த வேண்டும், இதுதான் உண்மையும், அறிவுடைமையுமாகும். இதை விட்டு விட்டு ஒன்றுமில்லாத ஏதோ ஒன்றைச்சொல்லி அதற்காக நன்றி செலுத்துங்கள்; பிரார்த்தனை செய்யுங்கள் என்று கூறுவதும், தேசியக்கொடி பறக்கவிடுங்கள், என்று சொல்லுவதும் மக்களை மூட நம்பிக்கையில் முழுகவைக்கவா? அல்லவா? என்றுதான் கேட்கின்றோம்.

தேசியக்கொடி பறக்கவிடுவதில் ஒரு குறும்புத்தனமான விஷயமும் அடங்கி யிருப்பதையும் எடுத்துக்காட்ட விரும்பு கிறோம். சொந்த வீடுகளில் தேசியக்கொடி பறக்கவிடுவதைப் பற்றி யாரும் ஆட்சேபிக்கமாட்டார்கள். ஆனால் பொது இடங்களில் பறக்க விடுவதைப்பற்றி தான் மக்களுக்குள் மனவேற்று மைகளும், தகராறுகளும், விரோதங்களும் விளையக்கூடும். ஆகவே இவ்விஷயத்தின் மூலம் சிறிது கிளர்ச்சியும் உண்டாகக்கூடும் என்பதும் நிச்சயம்.

அன்றியும் இம்மாதிரி பிரார்த்தனை செய்வது, நன்றி செலுத்துவது, தேசியக்கொடி பறக்க விடுவது என்பவைகளின் மூலம் இதுவும் ஒரு பண்டிகையாகவும், திரு விழாவாகவும், கொண்டாடப்பட வேண்டுமென்பதும் திரு. ராஜகோபாலாச் சாரியார் அவர்களின் கருத்தாகும். நாம் திருவிழாக்களும், பண்டிகைகளுமே ஒழிய வேண்டுமென்று பிரசாரஞ் செய்து வருகின்ற காலத்தில் காங்கிர பார்ப்பனர்கள் இம்மாதிரி அரசியலின் பேரால், திரு. காந்தியின் பெயரால் - காங்கிரசின் பெயரால் புதுப்புதுப் பண்டிகைகளை ஏற்படுத்தி வருகிறார்கள் என்பதைக்காட்டவே இதை எழுதினோம். ஆகையால் இவைபோன்ற முட்டாள்தனமான செயல்களுக்கு ஏமாறாம லிருக்குமாறு பொது ஜனங்களுக்கு எச்சரிக்கை செய்கிறோம்.

- குடிஅரசு - துணைத்தலையங்கம் - 20.12.1931

Read more: http://viduthalai.in/page-7/92444.html#ixzz3L881Kdrg

தமிழ் ஓவியா said...

உண்மையிலேயே திரு. காந்தியவர்களுக்கு ஒருவித ஆபத்தும் உண்டாகாமல் இருந்ததற்குக்காரணம் ஆட்டுப்பாலும் பேரீச் சம்பழங்களும், நிலக்கடலைகளும், டாக்டர்களும், ஆங்கில அரசாங்கத்தார் அவருக்கெனத் தனியாகப் பாதுகாப்புக் கென ஏற்படுத்தியிருந்த போலீசுமேயாகும்.

இரண்டாவது, குறிப்பிட்ட இடங்களுக்குப் பிரயாணம் செய்து குறிப்பிட்ட இடத்திற்குத் திரும்பி வந்ததற்குக்காரணம் ரயில், கப்பல், மோட்டார் முதலியவைகளேயாகும்.

ஆகவே திரு. காந்தி அவர்கள் சௌக்கியமாகப் பிரயாணஞ் செய்து திரும்பியதற்காக நன்றி செலுத்த வேண்டுமானால் ஆங்கில அரசாங்கத்தார் போலீஸ்காரர்கள், ரயில்வே அதிகாரிகள், கப்பல் அதிகாரிகள், மோட்டார் ஓட்டிகள் ஆகிய இவர்களுக்கும், அவருக்குப்பால் சப்ளை செய்த ஆடுகளுக்கும், பேரீச்ச மரங்களுக்கும், நிலக்கடலைகளுக்குமே நன்றி செலுத்த வேண்டும், இதுதான் உண்மையும், அறிவுடைமையுமாகும். இதை விட்டு விட்டு ஒன்றுமில்லாத ஏதோ ஒன்றைச்சொல்லி அதற்காக நன்றி செலுத்துங்கள்; பிரார்த்தனை செய்யுங்கள் என்று கூறுவதும், தேசியக்கொடி பறக்கவிடுங்கள், என்று சொல்லுவதும் மக்களை மூட நம்பிக்கையில் முழுகவைக்கவா? அல்லவா? என்றுதான் கேட்கின்றோம்.

தேசியக்கொடி பறக்கவிடுவதில் ஒரு குறும்புத்தனமான விஷயமும் அடங்கி யிருப்பதையும் எடுத்துக்காட்ட விரும்பு கிறோம். சொந்த வீடுகளில் தேசியக்கொடி பறக்கவிடுவதைப் பற்றி யாரும் ஆட்சேபிக்கமாட்டார்கள். ஆனால் பொது இடங்களில் பறக்க விடுவதைப்பற்றி தான் மக்களுக்குள் மனவேற்று மைகளும், தகராறுகளும், விரோதங்களும் விளையக்கூடும். ஆகவே இவ்விஷயத்தின் மூலம் சிறிது கிளர்ச்சியும் உண்டாகக்கூடும் என்பதும் நிச்சயம்.

அன்றியும் இம்மாதிரி பிரார்த்தனை செய்வது, நன்றி செலுத்துவது, தேசியக்கொடி பறக்க விடுவது என்பவைகளின் மூலம் இதுவும் ஒரு பண்டிகையாகவும், திரு விழாவாகவும், கொண்டாடப்பட வேண்டுமென்பதும் திரு. ராஜகோபாலாச் சாரியார் அவர்களின் கருத்தாகும். நாம் திருவிழாக்களும், பண்டிகைகளுமே ஒழிய வேண்டுமென்று பிரசாரஞ் செய்து வருகின்ற காலத்தில் காங்கிர பார்ப்பனர்கள் இம்மாதிரி அரசியலின் பேரால், திரு. காந்தியின் பெயரால் - காங்கிரசின் பெயரால் புதுப்புதுப் பண்டிகைகளை ஏற்படுத்தி வருகிறார்கள் என்பதைக்காட்டவே இதை எழுதினோம். ஆகையால் இவைபோன்ற முட்டாள்தனமான செயல்களுக்கு ஏமாறாம லிருக்குமாறு பொது ஜனங்களுக்கு எச்சரிக்கை செய்கிறோம்.

- குடிஅரசு - துணைத்தலையங்கம் - 20.12.1931

Read more: http://viduthalai.in/page-7/92444.html#ixzz3L881Kdrg

தமிழ் ஓவியா said...

தமிழர் தலைவர் வாழிய நீடு!


அய்யா அடிச்சுவடே ஆயுளுக்கும் நெஞ்சினிலே
பொய்யா அரிச்சுவடி என்றிட்டீர்! - மெய்ம்மை
வகுத்த நெறிகளை வாழ்விக்க வந்த
பகுத்தறிவே! வாழிய நீடு!
திருவள் ளுவரின் குறள்போல் புவியில்
பெரியார் குரலாய் ஒலித்தீர் - வரிப்புலியுன்
வேட்டையில் வீழும் விலங்காய் மடமையிருள்
ஓட்டிடவே வாழிய நீடு!
சுமையாம் மடத்தைச் சுடும்நின் அறிவே;
இமய மனமும் இறங்கும் - உமதாம்
அறிவுச் சுரங்கத்தை ஆளுகின்ற தந்தை
பெரியார் ஒளிவாழி நீடு!
மண்ணையும் மண்ணின் மொழியையும் காத்திடும்
திண்தோள் தமிழர் தலைவரே! - கண்ணை
இமையெனக் காக்கும் இனமானச் சிங்கத்
தமிழுணர்வே! வாழிய நீடு!
அறிவுலக மேதை பெரியார் தமக்குப்
பெரியார் உலகமொன்று கண்டீர்! - நிறைநிலா
மண்வந் திறங்கி மதிஒளி தந்து வாழ்த்தும்
நின்பெயர் நிற்கும் நிலைத்து

Read more: http://viduthalai.in/page3/92418.html#ixzz3L8A1BvLC

தமிழ் ஓவியா said...

புராணம் என்றால் புருடா என்று பொருள்


860,00,00,000 (860 கோடி) ஆண்டு களுக்கு ஒரு முறை எந்த நோக்கத் திற்காக பகவான் சிறீ கிருஷ்ணர் இவ்வுலகத்திற்கு வருகிறாரோ அந்த நோக்கத்திற்கு சிறைப்பட்ட ஜீவாத்மாவை வழி நடத்துவதற்காக, பகவத் கீதையை உள்ளது உள்ளபடி அளிப்பதே எமது ஒரே லட்சியமாகும்.- இந்த செய்தி, பகவத் கீதை உண்மை யுருவில் என்ற; பக்தி வேதாந்த புத்தக நிறுவனம் வெளியிட்ட; அ. ச. பக்தி வேதாந்த சுவாமி பிரபுபாதா (ஸ்தாபக ஆசாரியர்: அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம்) (சமஸ் கிருதத்திலிருந்து ஆங்கிலத்தில்) எழுதி, ஆத்ம தத்வ தாஸ் தமிழாக்கம் செய்த 1971 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட நூலில் (முன்னுரையில்) உள்ளது. சத்ய யுகம் 172800ஆண்டுகள் திரேதாயுகம் 1296000ஆண்டுகள் துவாபரயுகம் 864000ஆண்டுகள் கலியுகம் 4,32,000 ஆண்டுகள் மொத்தம் 43,20,000 ஆண்டுகள்தான். எனும்போது, நமது 860,00,00,000 (860 கோடி) ஆண்டுகளுக்கு ஒரு முறை சிறீ கிருஷ்ணர் இவ்வுலகத்திற்கு வருகிறார் என்பது எப்படி சரியாகும்?

கடவுள் கதை என்றால் ஆராய்ந்து பார்க்கக் கூடாது என்று சொல்லி விடுவதால் யாரும் யோசிப்பதில்லை. ஆனால் நாம் யோசிப்போமே?!

- க.அருள்மொழி குடியாத்தம்

Read more: http://viduthalai.in/page3/92419.html#ixzz3L8A9fihR

தமிழ் ஓவியா said...

ஆர்.எஸ்.எஸ். பற்றி காமராஜர்

குறிப்பாக அவர்களுக்கு (ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனர்களுக்கு) பயம் என்னைப் பற்றித்தான். இந்த காம ராஜ்தான் சோசியலிச சமுதாயத்தினை அமைத்தே தீருவேன் என்று சொல் கின்றான். அவன்தான் அதிலே தீவிர மாக இருக்கின்றான் என்று நினை கின்றார்கள். என் வீட்டுக்கு தீ வைக் கின்றான். ஆனால் நான் இதற்கெல் லாம் பயப்பட மாட்டேன். கடமையை நான் செய்தே தீருவேன்....

- 11.12.1966 சேலம் பேருரையிலிருந்து நவசக்தி - 15.12.1966

Read more: http://viduthalai.in/page3/92420.html#ixzz3L8AJ2BSt

தமிழ் ஓவியா said...

தமிழின் பிறந்த நாள்!


எண்பத்தி சிந்திக்காத
மனிதர் என்பதால்தான்
எண்பத்திரண்டு
அகவைகூட
கண்பொத்தியே
நாணிச் செல்கிறது!
தமிழ்மண் பற்றிச் சதாநேரம்
சிந்திக்கையில்
தமிழ்இனம் பற்றியே
துயிலையும் சந்திக்கையில்
எண்பத்தி எண்ண
ஏது எண்ணம் உமக்கு!
விழுப்புண் பட்டுப்போன
வாழ்க்கையின் பக்கங்கள்...
அழும் தமிழினம்
அகம் மலர வைத்த
அத்தியாயங்கள்...
நான் புரட்டும்
பக்கங்களில் எல்லாம்
தமிழின் வரலாறு
வீர மணி யெனவே
ஒலிக்கிறது!
இந்த ஒலியின் நாதம்
இடையறாது தொடர்ந்து
ஒலிக்க வேண்டும்
இளமை மனத்தோடு
இனிமை வாழ்வு;
தமிழ் வாழ
முரசாய் இசைக்க வேண்டும்!
காரணம் நீங்கள்
கணக்குகளுக்கு
கட்டுப்படாத தலைவர்!

- மஸ்கட் மு. பஷீர்
மஸ்கட் 2.12.2014

Read more: http://viduthalai.in/page1/92486.html#ixzz3LJ2repHj

தமிழ் ஓவியா said...

புராணங்கள் வரலாறு ஆகாது நிகழ்வுகளே வரலாறு வரலாறை வரலாறாகவே பதிவு செய்யுங்கள் தமிழர் தலைவர் ஆசிரியர் வரலாற்றாளர்களுக்கு அறைகூவல்
எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, டிச.7- சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பழைமை வாய்ந்த சென்னைப் பல்கலைக் கழகத்தில் உள்ள பெரியார் அரங்கில் இந்திய வரலாற்றுத் துறையின் சார்பில் சிறீ நாராயண குரு அறக்கட்டளையின் சார்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. வைக்கம் போராட்டத்தில் வரலாற்றுப் பரிமாணங்கள் என்கிற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கைத் தொடங்கி வைத்து திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி தொடக்கவிழாப் பேருரை ஆற்றி னார்கள்.

புராணங்கள் வரலாறு ஆகாது. நிகழ்வுகளே வரலாறு. வரலாறை வரலாறாகவே பதிவு செய்யுங்கள்.வரலாற்றில் இருக்கின்ற வைரங்களைத் தேடுங்கள், கோமேதகங்களை வரலாற்றில் தேடுங்கள், குப்பைகளில் தேடாதீர்கள். குப்பை யைக் கொட்ட வேண்டிய இடங்களில் கொட்டுங்கள் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் சென்னைப் பல்கலைக் கழகத்தில் துவக்கவிழாப் பேருரையில் குறிப்பிட்டார்.

தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்து சிறப்பு செய்யப்பட்டது

சென்னை பல்கலைக் கழகத்தின் இந்திய வரலாற்றுத் துறைத் தலைவர் முனைவர் எஸ்.குப்புசாமி தலைமையில் நடந்த விழாவிற்கு முனைவர் ஏ.சந்திரசேகர் வரவேற்றார். சிறீ நாராயணகுரு அறக்கட்டளைத் தலைவர் ஈ.வி.வாசவன், இந்திய வரலாற்றுத்துறைப் பேராசிரியர் கருணானந்தன் அறிமுக உரை ஆற்றினார்.

இந்திய வரலாற்றுத்துறை பேராசிரியை பானுமதி தருமராசன் இணைப்புரை வழங்கி நன்றி கூறினார்.

பங்கேற்றோர்

நிகழ்வின்போது திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், கேரள மாநிலத்தின் முதன்மைச் செயலாளர் (பணிநிறைவு) சுதாகரன் அய்.ஏ.எஸ்., பகுத்தறி வாளர் கழகப் பொதுச்செயலாளர் வீ.குமரேசன், அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் கோ.கருணாநிதி, திராவிட வரலாற்று ஆய்வு மய்ய செயலாளர் பேராசிரியர் மங்களமுருகேசன், சத்திய நாராயணசிங் இந்திய வரலாற்றுத் துறை பேராசிரியர்கள், மாணவர்கள், ஆய் வாளர்கள் பங்கேற்றனர்.

தொடக்க விழா உரையில், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் சிறீநாராயணகுரு அறக்கட்டளைத் தலைவர் ஈ.வி.வாசவன், கேரள மாநில அரசின் முதன்மைச் செய லாளராக பணிபுரிந்து பணிநிறைவுபெற்ற சுதாகரன் அய்ஏஎஸ் மற்றும் ஆய்வுரை வழங்குபவர்களான முனைவர் ரசியா பர்வீன், திருக்குறள் பிரச்சார இயக்கம் சத்தியசீலன் ஆகி யோரைப் பாராட்டிப் பயனாடை அணி வித்தார். திருவொற்றியூர் சிறீ நாராயணகுரு மந்திர் தலைவர் பாஸ்கரன், இந்திய வரலாற்றுத்துறைத் தலைவர் முனைவர் எஸ்.குப்புசாமி தமிழர் தலைவர், ஆசிரியர் அவர்களுக்குப் பயனாடை அணிவித்து சிறீநாராயணகுரு வாழ்க்கை வரலாற்று நூலை வழங்கினார்கள்.

தமிழ் ஓவியா said...

தமிழர் தலைவர் உரை

தமிழர் தலைவர் ஆசிரியர் தமதுரையில் குறிப்பிட்டதாவது:

ஜாதி ஒழிப்பு, தீண்டாமை அழிப்பு மிகவும் தேவையான காலக்கட்டத்தில் சிறீநாராயணகுரு பெயரில் கருத்தரங்கம் நடத்துவது பாராட்டுதலுக்குரியது. சமூக மாற்றத்துக்கான கருத்துகளை இனிவரும் தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டியது அவசியமான பணியாகும்.

ஆண்டுதோறும் நினைவூட்டக்கூடிய வகையில் அறக் கட்டளை அமைத்து கருத்தரங்குகள் பல்கலைக்கழகங்களில் நடைபெறுவது என்பது வெறும் சடங்காக இருந்துவிடக்கூடாது.

சமூகப்புரட்சி, சமுதாய சமத்துவம் உருவாக்க, மேடு பள்ள மற்ற சமநீதி எல்லோருக்கும் எல்லாம் என்கிற தந்தைபெரியார் தத்துவத்தை முதலில் தெரிந்து கொள்வது இரண்டாவது புரிந்துகொள்வது வேண்டும்.

நெல்சன் மண்டேலா நினைவுநாள் (5.12.2014). சமூக நீதி, மனித உரிமைப் போரைத் துவக்கி 27 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டு, மனித உரிமைக் கருத்துக்குப் புரட்சி யாளராகத் திகழ்ந்தவர். சமூகப்புரட்சியாளர் தந்தை பெரியார் தத்துவம் மனித உரிமைப்போரில் வரலாற்றை உருவாக்கிய வரில் ஜோதி பாபுலேவுக்குப்பிறகு அண்ணல் அம்பேத்கர் நினைவுநாள் நாளை (6.12.2014) உள்ளது.

இல்லாத பாலத்தை இருப்பதாகக் கூறி இருக்கின்ற மசூதியை இடித்தார்கள். அம்பேத்கர் நினைவுநாளையே மறைப்பதற்காக மசூதி இடிப்பு நாளாக ஆக்கிவிட்டார்கள்.

வைக்கம் போராட்டம்தான் இந்திய வரலாற் றில் முதல் மனித உரிமைப்போராட்டம். வரலாற்று பேராசிரியர்களால் இருட்டடிப்பு செய்யப்பட்டது.

ஒரு கட்டத்தில் வைக்கம் போராட்டம் மறைக்கப்பட்டது. They also run என்பதுபோல் உரிய முக்கியத்துவம் கொடுக்காமல் இருந்தார்கள். 1924 ஆம் ஆண்டில் வைக்கம் போராட்டம் நடைபெற்றது. வைக்கம் வீரர் என்று தந்தை பெரியார் அழைக்கப்படுகிறார்.

பல அறிஞர்கள் மத்தியில் வெளிநாட்டில் ஜாதி, தீண்டாமை குறித்து விளக்கினால், அவர்களால் விளங்கிக்கொள்ள முடிவதில்லை. வைக்கம் போராட்டம் ஏன் தேவைப்பட்டது? தேசிய அவ மானமாக இருந்தது நெருங்காமை. காட்டு மிரு கங்களிடம் நெருங்காமை இருந்தால் பாதுகாப்பு. Untouchability. Unseeable இதைவிட வேதனை யான சூழல் வேறு உண்டா? வைக்கம் போராட்டத்தில் பெரியார் பங்கேற்றாரா? பாதியில் திரும்பி விட்டார் என்றெல்லாம் கூறிவருகிறார்கள்.

பங்கேற்காமல் பாதியில் திரும்ப முடியுமா? என்று கேட்ட தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் வைக்கம் போராட்டத்தின் பல்வேறு வரலாற்றுக் குறிப்புகள், போராட்டக்குழுவில் பாரிஸ்டர் ஜார்ஜ் ஜோசப், கேசவ மேனன், டி.கே.மாதவன் உள்ளிட்ட பலரும் போராட்டக்குழுவினராக இருந்து சத்தியாக்கிரகப் போராட்டத்தைத் தொடங்குவதற்கு, இந்திய தேசியக் காங்கிரசின் தேசியத் தலைவரான காந்தியிடம் அனுமதி கோரியது, அதற்கு காந்தி அளித்த பதில்கள் ஆகிய விவரங்கள், பின்னர் ராஜாஜியிடம் தலைமை ஏற்று நடத்தித் தரக் கோரியபோது, அவர் உடல்நிலை சரியில்லை என்று ஒதுங்கிக் கொண்டதும்,

பின்னர் போராட்டக் காரர்கள் போராட்டத்தை நடத்தி அனைவரும் சிறையில் அடைக்கப் பட்டபோது, குளித்தலை மாநாட்டில் இருந்த தந்தை பெரியார் அவர்களை போராட்டத்தை நடத்திட அழைப்பு விடுத்த போது, தந்தைபெரியார் அங்கு சென்றார் என்பது உள்ளிட்ட பல்வேறு கருத்துகளை விரிவாக ஆசிரியர் அவர்கள் தம் உரையின்போது எடுத்துரைத்தார்.

தமிழர் தலைவர் ஆசிரியர் உரையைக்கேட்க வரலாற்றுத் துறை மட்டுமன்றி பிற துறைகளிலிருந்தும் பேராசிரியர்கள், மாணவர்கள் பெரிதும் ஆர்வத்துடன் கேட்டு மகிழ்ந்தனர்.

Read more: http://viduthalai.in/page1/92511.html#ixzz3LJ4Bc4NF