Search This Blog

7.3.09

ஈழத்தமிழ் இளைஞர்கள் ஆயுதங்களை ஏந்தியது எந்தச் சூழ்நிலையில்?

இலங்கைப் போக்கை இந்தியா கவனிக்குமா?

பாகிஸ்தானுக்குக் கிரிக்கெட் விளையாடச் சென்ற இலங்கைக் கிரிக்கெட் வீரர்களைப் படுகொலை செய்யும் முயற்சி பாகிஸ்தானில் அரங்கேறியது. தீவிரவாதிகள் இந்த அடாத செயலைச் செய்தனர் என்று கூறப்படுகிறது. இந்தியாவைத் தொடர்புபடுத்தி பாகிஸ்தான் பழிசுமத்த முயன்று அது தோல்வியில் முடிந்தது.

இன்னும் சிலருக்கு இதில் விடுதலைப்புலிகளை இணைத்திட ஒரு ஆசை. விடுதலைப்புலிகளை அதன் மூலம் பயங்கரவாதிகள் என்ற ஒரு பிரச்சாரத்தை உலகளவில் கட்டவிழ்த்துவிடலாம் என்ற நப்பாசைதான் இதற்குக் காரணம்.

அதிகாரப்பூர்வமாக விடுதலைப்புலிகள் அமைப்பு அதனை மறுத்துவிட்டது. ஒரு செயலைச் செய்தால் நாங்கள்தான் செய்தோம் என்று ஒப்புக்கொள்கிற அறிவு நாணயம் எப்பொழுதும் அந்த அமைப்புக்கு உண்டு.

இந்த நேரத்தில் ஒன்றைக் கவனத்தில் கொள்ளவேண்டும். இந்திய கிரிக்கெட் ஆட்டக்காரர்கள் இலங்கைக்குச் சென்று ஆடினார்கள். ஈழத் தமிழர்ப் பிரச்சினையில் இந்தியா ஆதரவாக நடந்துகொள்ளவில்லை என்று காரணம் காட்டி அல்லது கோபம் கொண்டு விடுதலைப்புலிகள், பாகிஸ்தானில் நடந்ததுபோல் நடந்துகொண்டார்களா? என்பதை எண்ணிப் பார்க்கவேண்டும்.

அதுபோன்ற அடாவடித்தனங்களில் அவர்கள் ஈடு பட்டது கிடையாது. இந்தியாவை அவர்கள் அதிகமாகவே நேசிக்கிறார்கள் - இந்தியாவுக்கு எதிராக நடந்துகொள்ள வேண்டும் என்பது அவர்களின் எந்த நடவடிக்கையிலும் தென்படவில்லை.

அவர்களின் குறிக்கோள் எல்லாம் ஈழத் தமிர்களின் வாழ்வுரிமையை மீட்கவேண்டும், சிங்களப் பேரினவாதத்தின் பிடியிலிருந்து தமிழர்களை மீட்டு, தமிழர்களின் தன்மான வாழ்வு, தன்னுரிமை நிலைநாட்டப்பட வேண்டும் என்பதே!

அதற்காகத்தான் தங்களின் வாலிப வயதை ஒவ்வொரு நொடியிலும் மரணத்தின் நடுவில் ஒப்படைத்துள்ளனர்.

ஆயிரக்கணக்கான இளைஞர்கள், இளமைக்குரிய வேனிற்காலத்தையெல்லாம் உதறி எறிந்துவிட்டு, இன மீட்சிக்காக தங்களை ஒப்படைத்துக் கொண்டுள்ளனர்.




சிங்களச் சேனை இனவாதத்துடன் எவ்வளவுதான் அத்துமீறி மூர்க்கத்தனமாக நடந்துகொண்டிருந்தாலும், சிங்கள மக்களைத் தாக்கும் வேலையில் அவர்கள் ஈடுபட வில்லை என்பது அடிக்கோடிட்டுக் கவனிக்கத்தக்கதாகும்.

தமிழர்களைக் கொன்று குவிக்கும் சிங்கள இராணுவத்தை வீரத்துடன் சந்திப்பதுதான் அவர்களின் போர் முறை. அதைக்கூட நிறுத்தி சமாதான வெண்புறாவை அவர்கள் பறக்கவிட்டனர்.

நார்வே நாட்டின் முயற்சியால் மேற்கொள்ளப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஒருதலைப்பட்சமாக முறித்தது ராஜபக்சேயின் சிங்கள இனவாத அரசுதான்.

எந்த நிலையிலும் வெளிநாட்டுக்காரர்களைத் தாக்கியதோ, ஊடகங்களை அடித்து நொறுக்கியதோ, ஊடகக் காரர்களைத் துன்புறுத்தியதோ இந்தப் போராளிகளின் தரப்பில் இருந்ததில்லை. அதுபோலவே, சிங்கள இனப் பெண்களிடம் ஒழுக்கக்கேடாக நடந்துகொண்டனர் என்கிற குற்றச்சாற்றும் அவர்கள்மீது கிடையவே கிடையாது.

அவர்கள் ஆயுதங்களை சிங்கள இராணுவத்துக்கு எதிராகத் தூக்கியதுகூட தங்கள் மக்களைக் காப்பாற்ற வேண்டும் என்கிற சீரிய நோக்கத்தோடுதான்.

தந்தைக்கு எதிரில் மகளையும், அண்ணனுக்கு எதிரில் தங்கையையும், கணவன் பார்வையில் மனைவியை யும் சிங்களக் காடையர்கள் பாலியல் வன்கொடுமையை நிகழ்த்தும்போது தன்மானம் உள்ளவன் எவன்தான் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பான்? உணர்ச்சிக் கொந்தளிப்புக்கு ஆளாகாமல் எவன்தான் இருப்பான்? பன்றிகளுக்குமுன் முத்துகளை உதிர்த்து என்ன பலன்?

தமிழின இளைஞர்கள் ஆயுதங்களை ஏந்தியது இந்தச் சூழ்நிலையில்தான்.


தங்கள் நாட்டைச் சேர்ந்த கிரிக்கெட் ஆட்டக்காரர்கள் பாகிஸ்தானில் தாக்கப்பட்ட ஒரு சூழ்நிலையில், இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் ரோகிதா பகோலமா அவசர அவசரமாக பாகிஸ்தான் சென்று, பாகிஸ்தான் பிரதமரை யும், வெளியுறவுத் துறை அமைச்சரையும் சந்தித்து கூட்டறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

எங்கள் கிரிக்கெட் அணியை மீண்டும் வரும்படி பாகிஸ்தான் அழைத்தால், அதை நாங்கள் புறக்கணிக்க மாட்டோம். மிக முக்கியத்துவம் கொடுத்து அதைப் பரிசீலிப்போம் என்று கூறியிருக்கிறாரே, அதற்குள் ஒளிந்திருக்கும் உண்மை என்ன?

இலங்கை இராணுவத்துக்கு பாகிஸ்தான் அளித்து வரும் இராணுவ உதவிதான் இதற்குள் மறைந்திருக்கும் இரகசியம். தங்கள் நாட்டு விளையாட்டு வீரர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் இருந்தாலும்கூட, அதனைத் தூக்கி ஒரு பக்கத்தில் வைத்துவிட்டு, பாகிஸ்தான் உறவை மேம்படுத்துவதில் இலங்கை அரசு ஈடுபடுகிறது என்றால், இதன் பின்னணியைப் புரிந்துகொள்ளவேண்டும். இதனை ராஜ தந்திர ரீதியாகவும் இந்தியா புரிந்து கொண்டால் - இந்தியா என்ன செய்யவேண்டும் என்பதற் கான விடை நிச்சயம் கிடைக்கும்!

-------------------"விடுதலை" தலையங்கம் 6-3-2009

5 comments:

Unknown said...

//தந்தைக்கு எதிரில் மகளையும், அண்ணனுக்கு எதிரில் தங்கையையும், கணவன் பார்வையில் மனைவியை யும் சிங்களக் காடையர்கள் பாலியல் வன்கொடுமையை நிகழ்த்தும்போது தன்மானம் உள்ளவன் எவன்தான் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பான்? உணர்ச்சிக் கொந்தளிப்புக்கு ஆளாகாமல் எவன்தான் இருப்பான்? பன்றிகளுக்குமுன் முத்துகளை உதிர்த்து என்ன பலன்?

தமிழின இளைஞர்கள் ஆயுதங்களை ஏந்தியது இந்தச் சூழ்நிலையில்தான்.//

படிக்கும் போதே கண்ணீர் வருகிறது நேரில் பார்க்கிறவர்களின் மன நிலை எப்படி இருந்திருக்கும்?

Unknown said...

//ஒரு செயலைச் செய்தால் நாங்கள்தான் செய்தோம் என்று ஒப்புக்கொள்கிற அறிவு நாணயம் எப்பொழுதும் அந்த அமைப்புக்கு உண்டு.//

தமிழனின் த்னித்தன்மையே இது தான்.

vasu balaji said...
This comment has been removed by the author.
vasu balaji said...

தனக்கு வந்தால் தான் தலைவலியும் காய்ச்சலும் என்பார்கள். அடுத்திருந்து பார்க்கிறவர்களுக்கு இந்த வக்கிரத்தின் வலி புரியாது. தனக்கு நடக்கும்போது பேச்சு வார்த்தையில் தீர்வு என்றால் தான் தெரியும். எப்படி இருப்பினும் புலிகளைப் பற்றிய உண்மையான விளக்கம். நன்றி

Anonymous said...

சிங்கள இனவாத அரசின் கொலை செயல்பாடுகள் இருக்கட்டும்; இந்திய மற்றும் தமிழ் அரசியல் அதிகாரிகளின் ஆசிர்வாதத்துடன் தான் இந்த இனபடுகொலையே அரங்கேறிக்க்கொண்டிருக்கிறது. சாட்டிலைகளையும் தொலைகாட்சிகளின் மூலமும் உலகத்துடன் தனது தொண்டர் படையுடனும் தனது கொள்கைகளை சிலேடை வசனமாக எடுத்துரைக்கும் ஒரு தமிழ் தலைவர் "தமிழ் பற்று" வேண்டும் என்கிறார்; அங்கே இலங்கையில் "தமிழ் செல்வன்" மீது குண்டு விழுகிறது. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை ஆகிய நாடுகளில் உள்ள உழல் அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் ஆயுத கொள்முதல் வியாபாரிகளும் சாட்டிலை தகவல்களுடன் தமிழர்களுக்கு எதிராக ஒன்று சேர்ந்து நடத்து தமிழ் இனபடுகொலை இது.