Search This Blog

2.3.09

வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி



வாழ்க்கையின் கசப்பான உண்மைகளில் ஒன்று, எல்லா நாள்களும் மகிழத்தக்கன அல்ல; சில அல்லது பல நாள்கள் துன்பப்படும், அல்லது துயரப்படும் நாள்களாகவும் இருக்கும். எனவே நல்ல நாள், கெட்ட நாள் அதிர்ஷ்டம் என்ற (குருட்டுத்தனம்) உள்ள நாள்கள் என்று கலங்கி, எல்லையற்று மகிழ்ந்து கூத்தாடுவதையும், அதேபோன்று உலகமே இருண்டு விட்டது, தனக்கு இனி எதிர்காலமே இல்லை என்று அங்கலாய்த்து ஒதுங்குவதையும் செய்யாதீர்கள்! இது இயல்பு.

கழனியில் விதை நட்டு, உரம் போட்டு, களை எடுத்து, நன்றாக விளைந்த பயிர்களுக்குக் கூட அடை மழையினாலோ அல்லது சற்றும் எதிர்பாராத புயல் வெள்ளம் போன்ற இயற்கை இடர்ப்பாடுகளால் விவசாயியின் வீட்டுக் குதிருக்குள் விளைச்சல் வர இயலாத நிலை ஏற்படுவதில்லையா? அதுபோலத்தான்!

தோல்விகள் இருப்பதால்தான் வெற்றியின் பெருமை வெளிச்சமிட்டுக் காட்டுகிறது. துன்பம் வந்த பிறகு அடையும் இன்பந்தான் உணர்ந்து சுவைக்கத் தக்கது - அனுபவித்து மகிழத் தக்கது! அழுத்தங்கள் (Pressure) அதிகமாக்கி நம்மை வேதனைப் பட வைக்கிறதே என்போர் கரடு முரடான கற்களுக்கு ஏற்பட்ட அழுத்தத்தினால் வைரங்கள் (Diamonds) உருவாகின்றன என்பதை மறவாதீர்!

"எப்போதும் நான் வீழ்ந்ததில்லை என்று மார்தட்டி மமதை கொள் வதைவிட, நான் ஒவ்வொரு முறை வீழ்ந்ததற்குப் பின் உடனடியாக எழுந்துவிட்ட அனுபவசாலி, தன்னம்பிக்கையாளன்" என்று கூறி மகிழுங்கள்! அதன் மூலம் மற்றவர்க்கும் நம்பிக்கை ஊட்டுங்கள்!

நீங்கள் எங்கே போனாலும், எந்தப் பணி செய்தாலும் உங்கள் இதயத்தையும் முக்கிய கருவியாக்கி - அதற்கு முன்னுரிமை கொடுத்து உன்னத வாழ்க்கை வாழக் கற்றுக் கொள்ளுங்கள்! நீங்கள் உங்கள் வாழ்க்கையை காதலித்தால்தான், வாழ்க்கை உங்களைக் காதலிக்கும் - மறந்துவிடாதீர்!

கடந்த காலப் புண்ணைஆற்றுங்கள்!

நிகழ்காலத்தில் வாழ்ந்து மகிழுங்கள்!

வருங்காலத்தைப் பற்றி கனவு காணுங்கள்!

நாளை நாம் எண்ணுவதற்குப் பதிலாக - நாள் (நிகழ்வு), நம்மை எண்ணும்படி செய்யுங்கள்!

குற்றங்கள், நம் வாழ்வின் மகிழ்ச்சியை உணவாக்கிக் கொள்ள ஒரு போதும் அனுமதியாதீர்! தவறுகளை ஒப்புக் கொள்ளும் பெருந்தன்மைக் குணத்திற்குச் சொந்தக்காரர்களாகவே என்றும் வாழுங்கள்! அது நமக்கே மிகப் பெரிய நிம்மதியையும், மனத் திருப்தியையும் தரும் என்பது உறுதி!

மகிழ்ச்சியான திறவு கோல் இன்பக்கனவுகளைக் காண்பதாகும்; நம் வாழ்க்கை வெற்றியின் திறவுகோல் அந்த இன்பக் கனவுகளைச் செயல்படுத்தி மகிழ்வதில்தான் உள்ளது!

உலகம் என்பது ஓர் அழகிய நிலைக்கண்ணாடி; நீங்கள் சிரித்த முகத்தோடு அதைப் பார்த்தால்தான், அதில் உங்கள் சிரித்த முகம் தெரியும்; மற்றபடி அது உங்கள் உருவத்தை மாற்றிக் காட்டாது - மறந்து விடாதீர்!

எப்போதும் பிறரது குரலைக் கேட்கப் பழகுங்கள். நீங்கள் பேசுவதை விட அப்படி கேட்கப் பழகிக் கொள்வதே மிகவும் நல்லது; ஏனெனில் வாய்ப்புகள் சில வேலைகளில் மெல்லிய குரலில் ஒலிக்கும். அவ்வாய்ப்புகள் அப்போது நம்மை விட்டு நழுவிப் போகும் வாய்ப்பு ஏற்படக்கூடும்!

நல்ல நினைவுகள் என்பவை நல்ல வாய்ப்புகளை நினைவூட்டு பவைகளே!

கெட்ட நினைவுகள் என்பது கெட்ட பாடங்களை மீண்டும் படிப்பதே!

பயணிக்கும்போது அதி வேகமாகச் செல்வோமானால், அழகிய இயற்கைக் காட்சிகளைக் கண்டு மகிழும் அரிய வாய்ப்பை நாம் இழந்துவிடக் கூடுமல்லவா? அது போலத்தான் எதிலும் அதிவேகம், மிதமிஞ்சிய தன்மை கூடாது என்பதாகும்!

வாழ்க்கை என்பது நாடகத்தின் ஒத்திகை போன்றதல்ல; முழுமையாக வாழ்வதே வாழ்க்கை.

--------------"விடுதலை" 2-3-2009

4 comments:

'தும்பி' said...

தமிழன் எல்லாருக்கும் வாழத்தெரியலன்னு , இவரு வாழ்வியல் சிந்தனைகள் எழுதுறாராக்கும்?. அறிவு நாணயம், அறிவு நாணயம்னு அடிக்கடி சொல்வாரே அதன் படி அவர் முதலில் நடக்கட்டும். அப்புறம் எல்லோருக்கும் வாழ்வியல் சிந்தனைகள சொல்லிக் கொடுக்கலாம்.
குத்தூசி குருசாமின்னு ஒரு அறிஞர் இருந்தாரே அவரைப் பற்றி என்றாவது சொல்லி இருப்பாரா இந்த கி.வீரமணி.

தமிழ் ஓவியா said...

த்ங்களின் விமர்சனம் எடுத்தேன், கவிழ்த்தேன் என்பது போல் உள்ளது.

வாழ்வியல் சிந்தனைகள் எழுதுவது எப்படி ஏற்பட்டது என்பதை வீரமணி விரிவாகவே விளக்கியுள்ளார். அதையெல்லாம் படித்துவிட்டு விமசிப்பதுதான் சரியாக இருக்கும்.

மொட்டைதாதன் குட்டையில் விழுந்தான் என்பது போல் விமர்சிப்பது சரியல்ல.
நன்றி

'தும்பி' said...

//வாழ்வியல் சிந்தனைகள் எழுதுவது எப்படி ஏற்பட்டது என்பதை வீரமணி விரிவாகவே விளக்கியுள்ளார். அதையெல்லாம் படித்துவிட்டு விமசிப்பதுதான் சரியாக இருக்கும்.

மொட்டைதாதன் குட்டையில் விழுந்தான் என்பது போல் விமர்சிப்பது சரியல்ல.//

நானும் படித்திருக்கிறேன் வாழ்வியல் சிந்தனைகளின் வரலாற்றை.

வாழ்வியல் சிந்தனைகளின் ஆரம்பம் அவருக்காக அவரே எழுதிக்கொண்ட விஷயங்கள், நல்லா இருப்பதாக சில நண்பர்கள் சொன்னார்களாம், அதனால் இயக்க நண்பர்களுக்காகவும் மற்றும் படிப்போர் அனைவருக்காகவும் தொடர்ந்து வருகிறாராம்.

நான் ஒன்றும் அனாவசியமாக வீரமணி அவர்களை விமர்சிக்கவில்லை.

வாழ்வியல் சிந்தனைகளை ஏன் எழுதவேண்டும் என்பது கேள்வி அல்ல.
சங்கராச்சாரியை ஜெயலலிதா அரசு கைது செய்யும்போது, "சங்கரமடக் கப்பல் மாலுமியை மாற்றுக" என்று அறிக்கை விட்டார் கலைஞர் கருணாநிதி. அதற்கு மறுநாள் சங்கராச்சாரியின் லீலைகள் குறித்து பெரியார் திடலில் கூட்டம் நடத்தினார் வீரமணி அதில் "நாம் இவ்வளவு நாளாக எதிர் பார்த்தது இப்போதுதான் நடைபெற இருக்கிறது, இந்த நேரத்தில் 'கலைஞர்' சும்மா இருக்க வேண்டும் தேவை இல்லாமல் வழக்கை திசை திருப்புவது போல் நடந்து கொள்ளக் கூடாது" என்று கலைஞருக்கு எச்சரிக்கை விட்டார். (கலைஞர் அப்போது எதிர்கட்சியில் இருந்ததாலா?)
ஆனால் கிறிஸ்தவ மத வியாபாரி தினகரனின் பெயரை கிரீன்வேஸ் சாலைக்கு சூட்ட இருக்கின்றார்களே அதனை ஏன் வீரமணி கண்டுகொள்ளாமல் இருக்கிறார்?.
கருணாநிதி அரசியல் ஆதாயத்திற்காகத்தான் இதனை செய்கிறார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அதற்கு எதிர்ப்போ, கண்டனமோ செய்யாமல் இருப்பதால், வீரமணியும் அதற்கு உடந்தைதானே?

இது போன்ற விஷயங்களுக்கு கண்டனம் தெரிவித்து ஒரு தலையங்கம் எழுதாமல், வாழ்வியல் சிந்தனை போன்றவற்றில் கவனம் செலுத்துவதால் என்ன பயன் பெரியாரியத்துக்கு?

அதுமட்டுமல்ல விடுதலையில் அதிகமாகத் தென்படுவது, "கலைஞர் அரசுக்குப் பாராட்டுகள்" என்ற சொற்றொடர்தான்.
இதனைக் காணும்போது விடுதலை மற்றொரு 'முரசொலி'யோ என்றுதான் எண்ணத்தோன்றுகிறது.
வீரமணி இப்போது செய்ய வேண்டியது சாதி, மத, பார்ப்பன சக்திகளுக்கு எதிராக செயல் படுவதுதான்.
மாதத்தில் இருபத்து நாட்கள் பிரயாணம் செய்கிறார், பணியாற்றுகிறார் என்பது உண்மையாக இருக்கலாம், ஆனால் வெற்றுப் பயணத்தால் எந்த பலனும் இல்லை.

எனக்குத் தோன்றியதை நான் சொல்கிறேன் அவ்வளவுதான்.

'தும்பி' said...

//மொட்டைதாதன் குட்டையில் விழுந்தான்//

பழமொழி நல்லா இருக்கு ஆனா சரியான இடத்தில் பயன் படுத்தினால் பொருள்மிக்கதாக இருக்கும்.