Search This Blog

11.3.09

பெண் விதவை என்றால் விதவன் எனப்பெயர் ஏன் ஆணுக்கு இல்லை?


மார்ச் 8- மகளிர் நாள்



பெண்களால்
பெரியார் எனப் பெயர் சூட்டப்பட்ட
பெருந்தகையே!
உலக மகளிர்
தினம் என்றவுடன்
உன் நினைவுதான்
எங்கள் முன்னால்

ஆனால் சிலர்
மகளிர் நாள்
எனச்சொல்லி
மார்ச் 8ல்
கோலப்போட்டி
நடத்திக்
கொண்டிருக்கிறார்கள்

நல்ல
பட்டுப்புடவை
ஒன்றுபோல் எடுத்து
பெண்கள் எல்லாம்
மார்ச் 8ல்
அலுவலகத்திற்கு
கட்டிவர வேண்டுமாம்
சில மாமிகள்
அலுவலகத்தில்
ஆணையிட்டுக்
கொண்டிருக்கிறார்கள்

சிலர் கோயில்
பிரசாதங்கள்
வழங்க
பட்டியல்
தயாரிக்கின்றார்கள்
மகளிர் தினத்தை
முன்னிட்டு
எந்த நாளையும்
மாமிகள்
விடுவதாயில்லை
இந்துமத
வளையத்துக்குள்
கொண்டு வருவதிலேயே
குறியாய் இருக்கிறார்கள்

பெண்ணுரிமை
எனும் பேச்சு
வரும் இடமெல்லாம்
பெரியார் எனும்
பெயர் நினைவில் வரும்
நம் எதிரிகளுக்கும்


ஆதலால்
என்ன செய்யலாம்
இந்நாளில்
பெரியார் பெயர்
வராமல் இருக்க ?
யோசித்து யோசித்து
பாரதியை
முன்னிறுத்துகின்றார்

எங்கள்
ஈரோட்டுச்சூரியனே
தன்னிகர் இல்லா
பெண் விடுதலைக்
கருத்துகளை
தரணியில் எவரும்
சிந்திக்கா நிலையில்
கனலாய் கக்கிய
எரிமலையே!
மண்ணில்
ஆணுக்கு
என்னென்ன
உரிமை உண்டோ
அத்தனையும்
பெண்ணுக்கு
வேண்டுமெனக்
கேட்டவர் நீ !
மதம்
தோற்றுவிக்கப்பட்டதே
பெண்களை
அடிமைப்படுத்த என்றாய்
கடவுள் எனும்
வார்த்தையே
பெண்விடுதலை
எனும் சொல்லுக்கு
எதிர்ப்பதம் என்றாய்
கற்பு என்ற
சொல்லே பெண்ணை
வீட்டுக்குள்ளே
பூட்டிவைக்க சிலர்
சொல்லிவைத்த
வார்த்தை என்றாய்
கர்ப்பப்பையை
கழற்றி எறி என்றாய்
எனக்கு தாலி என்றால்
உனக்கு என்னடா
அடையாளம்?
எனக்
கேட்கச் சொன்னாய்
பெண்ணை விதவை என்றால்
விதவன் எனப்பெயர் ஏன்
ஆணுக்கு இல்லை?
வினவச் சொன்னாய்
ஆரியப் பார்ப்பான்
மனுவைச் சொல்லி
அடங்கிப் போ என்றான்
கல்வியை
ஆயுதமாக்கு!
துணிச்சலை
துணையாகக் கொள்!
மனு தர்மத்தை
பொசுக்கு என்றாய்
நடுங்கித்தான் போனது
பார்ப்பனியம்


பெண் ஏன்
அடிமையானாள்?
எண்பது ஆண்டுகளுக்கு
முன்னால் நீ
சொல்லிய வார்த்தைகளை
திருப்பிச் சொல்வதற்கே
பயம்
நிறைய முற்போக்குகளுக்கு
இன்றைக்கும்

எங்கள் முன்னால்
எனது தங்கையும்
எனது தாயும்
எனது துணையும்
நன்றியோடு
உனை நினைத்து
புகழ்கிறார்கள்!
மண்ணில் மகளிர்
சுயம்ரியாதையாய்
வாழ வழிகாட்டியவர்
நீங்கள் என்பதால் ...

------------------- ப.க.தலைவர். மானமிகு - வா நேரு அவர்கள் 7-3-2009 "விடுதலை" ஞாயிறுமரில் எழுதியது.

4 comments:

Jay said...

தபுதாரன் என்று ஒரு வார்த்தை தமிழில் உண்டு தேடிப்பாருங்கள்.

நன்மனம் said...

பெரியாரின் பெண்ணியச் சிந்தனைகள் போற்றுதலுக்குரியது.
நம் சமூகத்தில் ஆணாதிக்கம் அதிகம் என்பதும் ஏற்றுக்கொள்ளக்கூடியது என்றாலும்
//பெண்ணை விதவை என்றால்
விதவன் எனப்பெயர் ஏன்
ஆணுக்கு இல்லை?// என்று கேட்பது நம் சமூகம் வரைதான் சரி.

ஏனெனில் Henpecked என்ற சொல் ஆங்கில அகராதியில் பெண்ணாதிக்கத்தைக் குறிக்கிறது. அதிற்கிணையான சொல்லும் அங்கே இல்லை என்பதறிக.

நம்பி said...

Blogger நன்மனம் said...
// ஏனெனில் Henpecked என்ற சொல் ஆங்கில அகராதியில் பெண்ணாதிக்கத்தைக் குறிக்கிறது. அதிற்கிணையான சொல்லும் அங்கே இல்லை என்பதறிக.
March 12, 2009 7:21 PM //

"Henpecked" இது ஒரு (informal- இன்பார்மல்)....முறைப்படி அமையாத, ஒழுங்கு முறை சாராத வார்த்தை...மனைவியின் ஆட்சிக்குட்டபட்ட...மனைவியின் வழிசெல்லுகின்ற...என்று ஆணாதிக்க வழக்கத்தை மீறியதிற்காக குறிப்பிடப்படுவது.

(informal) A man who people say is (இந்த மாதிரி மக்கள் அழைப்பார்கள்) henpecked has a wife who is always telling him what to do, and is too weak to disagree with her.

அவன்(கணவன் அல்லது ஆண் நபர்) என்ன செயய வேண்டும் என்பதை பெண் (மனைவி அல்லது பெண் நபர்) தான் முடிவு செய்வார்...அவளோடு முரண்பட திராணியில்லாதவர்...அதிக வலுவில்லாதவர்...
(ஆக்ஸ்போர்டு அகராதி...மற்றும் பால்ஸ் தமிழ் அகராதி...)

எல்லா நாட்டிலும் ஆணாதிக்கம் இருந்து வந்துள்ளது...கடந்த நூற்றாண்டு அல்லது அதற்கும் சற்று முன்பாக விழிப்படைந்து தெளிவடைந்த நாடுகள் தான் இந்த பெண்ணியத்தை போற்றி பெண்களுக்கு வாக்குரிமையே வழங்கின...

அது மிகப்பெரிய அளவில் காலணிநாடுகளை கட்டி ஆண்ட பிரிட்டன் சாம்ராஜ்யமான இங்கிலாந்து ஆனாலும் சரி...அதைத்தொடர்ந்து வந்த பிரிட்டனின் காலணி ஆதிக்கத்திலிருந்து விடுபட்ட நாடான அமெரிக்க ஐரோப்பிய நாடுகளாயிருந்தாலும் சரி எல்லாம் ஆணாதிக்க நாடுகளாயிருந்தவைகள் தான் இன்னும் ஆணாதிக்கத்தில் இருந்து கொண்டு வருபவைகள் தான்.

வரலாறு எல்லாவற்றையும் ஒத்துக்கொண்டு தான் உள்ளது.

பெண் சமத்துவத்துடன் இருப்பது நடைமுறைக்கு ஒத்துவராதவைகள் என்று முன்பே இந்த ஆண் வர்க்கம் தீர்மானித்து விட்டதினால் தான் இதற்கு எதிரான, இணையான சொல் கொண்டு வரவில்லை...இது அதைத்தான் குறிக்கிறது.....

நம்பி said...

அதாவது இது ஒரு கேலிக்குரிய வார்த்தை..


இம்மாதிரி பெண் பேச்சை கேட்கும் ஆணை கேலி செய்வதற்கு பயன்படக்கூடிய வார்த்தை...


ஆணை விட பெண் மேலே போய் விடக்கூடாது...என்பதற்காகவும்..

பெண் பேச்சை கேட்பவன் பேடி..

பெட்டைக்கோழி ...

என்பதை உணர்த்துவதற்காக கேலிக்காக பயன்படுத்தப்பட்ட வார்த்தை தான், இந்த "hen-pecked".

இது பெண்ணாதிக்கத்தை எங்கேயும் குறிக்கவில்லை. நடைமுறைக்கு சாத்தியமில்லை என்ற அளவில் ...இது ஒரு அரிதான விஷயம் என்று குறிப்பிடப்படும் வகையில் பயன்படுத்தப்படுகிறது.