Search This Blog
16.5.09
ஈழத் தமிழர் உணர்ச்சி என்பது தமிழ்நாட்டின் இதயச் சூளையிலிருந்து கிளர்ந்து எழும் நெருப்புத் துண்டம்.
புதிய கைபர் கணவாயா?
ஈழத் தமிழர் உணர்ச்சி என்பது தமிழ்நாட்டின் இதயச் சூளையிலிருந்து கிளர்ந்து எழும் நெருப்புத் துண்டம்.
எங்கள் உயிர்களில் இரண்டறக் கலந்து விட்ட பிரவாகம் அது.
1939-ஆம் ஆண்டிலிருந்தே அம்மக்களுக்காகக் குரல் கொடுத்து வருவோர் திராவிடர் இயக்க மூதாதையர்!
எங்கள் மாநாடுகளில் முன்னுரிமை கொடுத்துத் தீர்மானம்; எங்கள்பேரணிகளில் இனமுழக்கம்!
எங்களின் அன்றாடப் பேச்சுகளில் அதற்கு முன்னுரிமை - எங்கள் நடவடிக்கைகளில் அதன் வீச்சு - சுருக்கமாகச் சொன்னால் எங்கள் வாழ்க்கையின் ஓர் அங்கமாகவே அது ஆகிவிட்டது.
கண்ட களங்கள் பலப்பல, சந்தித்த வழக்குகள் உண்டு - ஏகிய சிறைச்சாலைகளும் உண்டு.
இதைப்பற்றி வேறு யாரும் சொல்லத் தேவையில்லை என்று கழகம் சொல்லுவது ஆணவத்தால் அல்ல - அப்பிரச்சினையில் அய்க்கியமானவர்கள் என்ற அசைக்க முடியாத உணர்வால்!
சிலருக்கு அது தேர்தல் பிரச்சாரத்துக்கான முதலீடு! அதுவும் திராவிடர் இயக்கம் வளர்த்து வைத்துள்ள அந்தவுணர்வை இலாவகமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்கிற எத்து வேலை.
உள்ளுணர்வால் வந்ததல்ல அது; விளைந்த வெள்ளாமையை மேய்ந்து தீர்க்கலாம் என்கிற நப்பாசை.
ஜெயலலிதாவுக்கு என்ன அக்கறை வந்தது? தேர்தல் என்று அறிவிப்பு வெளிவந்ததும், தனியீழம் என்ற தடியைத் தூக்கிக்கொண்டு வெளியில் வந்த மர்மம் என்ன?
மற்றவர்கள் வளர்த்து வைத்திருக்கிற மகசூலை இரவோடு இரவாக தேர்தல் மப்பில் அறுத்துக் கொண்டு போய் விடலாம் என்கிற மனக் கணக்குதான்.
தமிழ்நாட்டில் தந்தை பெரியார் பெயரைச் சொல்லாமல் அரசியல் நடத்த முடியாது என்றவுடன், அவர்தம் கொள்கையில் ஆயிரத்தில் ஒரு பங்கைக்கூட அறியாத, அறிய ஆசைப்படாத, கடைப்பிடிக்காத ஜெயலலிதா அம்மையார்கூட சுவரொட்டிகளில், ஏடுகளில், தேர்தல் அறிக்கையில் பெரியார் படத்தினைப் போடுவதில்லையா?
அதே யுக்திதான் ஈழத் தமிழர்ப் பிரச்சினையை திடீர் என்று தூக்கிக் கொண்டு வெளியில் கிளம்பியிருக்கும் போக்குமாகும்.
பார்த்தது பா.ஜ.க.; அவர்களுக்கும் எச்சில் ஊறல் எடுத்து விட்டது; தேர்தலில் நிற்பது என்ற முடிவுக்கு வந்தபிறகு அதற்கான திருக்கல்யாண குணங்களோடு நடந்து கொள்வதுதானே அதி புத்திசாலித்தனம்?
விட்டு விடுமா பி.ஜே.பி.யும் அதன் பரிவாரங்களும்? நாங்கள் ஆட்சிக்குவந்தால் நூறே நாள்களில் ஈழத் தமிழர்ப் பிரச்சினைக்குத் தீர்வு காண்போம் என்கிறார் திருவாளர் அத்வானி; மூச்.. முப்பதே நாள்களில் முடித்துக் காட்டுவோம் என்பார் தமிழக பா.ஜ.க., தலைவர் திருவாளர் இல. கணேசன் அய்யர்வாள்.
அகில இந்திய விசுவ ஹிந்து பரிஷத்தின் தலைவரும், ஈழத்தில் நடப்பது தமிழர் பிரச் சினையல்ல - இந்துக்கள் பிரச்சனை, இந்துக்கள் அங்கே சாகடிக்கப்படுகிறார்கள் என்று கசிந்துருகியுள்ளார்.
விடுவாரா நரேந்திரமோடி? ஈழத் தமிழர் பிரச்சினை கவனிக்கப்பட வேண்டிய ஒன்று - தீர்வு காணப்பட வேண்டிய ஒன்று என்று தேர்தல் நேரத்தில் தமிழகத்துக்கு வந்த சொல்லி விட்டு பறந்து போய்விட்டார் மோடி.
இவர்களுக்கெல்லாம் இப்பொழுது என்ன வந்தது? ஈழத் தமிழர் பிரச்சினைமீது அக்கறை ஆகாயம் வரை பொங்கி எழ என்னகாரணம்?
பா.ஜ.க.மத்தியில் ஆட்சியில் இருந்ததே -உருப்படியாகச் செயல்பட்டு இருக்கலாமே! சிங்களர்களைப் பார்த்து சீறியிருக்கலாமே!
மூச்சு விட்டார்களா? நரி வலம் போனால் என்ன,இடம் போனால் என்ன- ஆளை விழுந்து பிடுங்காமல் இருந்தால் சரி - என்று சொல்வதுண்டு. - இவர்கள் ஆட்சிக்காலத்தில் போர்க் கருவிகளை இலங்கைக்கு அனுப்பியது இல்லையா? வட்டியில்லாத கடனாக ரூபாய்களை அள்ளிக் கொட்டவில்லையா?
பட்டப் பகலில் பசு மாடு தெரியாதவன். இரவு நேரத்தில் எருமை மாட்டைத் தேடிச் சென்றானாம் - அதுபோலவே அல்லவா இருக்கிறது. பா.ஜ.க., கூறும் வாக்குறுதிகள்!
இதுவரை ஒரு தீர்மானம் உண்டா? ஒரு பொதுக் கூட்டம் உண்டா? ஒரே ஒரு ஆர்ப்பாட்டம் உண்டா?
இவற்றையெல்லாம் செய்யாமல் திடீர் இட்லி, திடீர் வடை! என்பதுபோல ஈழத் தமிழர்களுக்காக நாங்கள் பாடுபடுவோம் - இத்தனை நாள்களுக்குள் தீர்வு கண்டே தீருவோம் என்று நாட்டு வைத்தியர் மண்டலக் கணக்கு சொல்லுவது போல கூறுவதெல்லாம் யாரை ஏமாற்ற?
திருநெல்வேலிக்கே அல்வா என்கிற சொலவடை அண்மைக் காலமாக தமிழ்நாடு மக்களி டத்திலே புழக்கத்தில் இருந்து வருகிறது.
தமிழ்நாட்டுக்கு வந்து தமிழர்கள் மத்தியிலே பாரதிய ஜனதாவும், சங்பரிவார்க் கூட்டமும் ஈழத் தமிழர்ப் பிரச்சனைக்காகக் கசிந்துருகுவது என்றால், எதைக் கொண்டு சாற்றுவது - எந்தப் புறத்தில்தான் சிரிப்பது!
இராமனை சொல்லிப் பார்த்தார்கள்; ஜம்பம் பலிக்கவில்லை. இந்துத்துவா என்று கூறிப் பார்த்தார்கள் எடுபடவில்லை. மாறாக எதிர் விளைவுகளைத் தூக்கிச் சுமந்து பார்த்ததுதான் மிச்சம்.
1971 தேர்தலில் இராமனைக் கொண்டு வந்தபோது தமிழ்நாடு வட்டியும் முதலுமாகச் சேர்த்து மொத்தியது போதாதா?
இவையெல்லாம் சரிபட்டு வராது; இனி அவர்கள் பாதையில் அவர்களின் சரக்குகளை எடுத்தால்தான் போனியாகும். முதலில் உள்ளே நுழைய அனுமதி பெறுவோம் - அதன்பின் காட்சிகளை அரங்கேற்றுவோம் என்ற திட்டத்துடன்தான் ஈழப்பிரச்சினையைக் கையில் எடுத்துக் கொண்டிருக்கிறது இந்துத்துவா கூட்டம்.
ஈழத் தமிழர் என்றால் எரிகுண்டத்தில் விழுந்ததுபோல துடிதுடிக்கும் திருவாளர் சோ ராமசாமி, செல்வி ஜெயலலிதா தனிஈழம்பற்றி தேர்தல் அறிக்கையில் சொன்ன நிலையில், ஆத்திரப்படாமல் (அக்கிரகாரத்துப் பெண்ணல்லவா - சமர்த்து! என்று உள்ளுக்குள் மகிழ்ந்து) பாம்பும் நோகாமல் பாம்பையடித்த கொம்பும் நோகாமல் தளுக்காக விமர்சிக்கிறார் என்றால் இதன் பொருள் என்ன?
எதைச் சொல்லியாவது அக்ரகாரத்து அம்மாமியின் வெற்றிக் கொடியைப் பறக்கச் செய்ய வேண்டும் என்பதுதானே அவாளின் அந்தரங்கம்?
பி.ஜே.பி.காரர்களே, பி.ஜே.பிக்கு வாக்களிக்காதீர்! அதற்குப் பதிலாக அஇஅதிமுகவுக்கு - ஜெயலலிதாவுக்கு வாக்களித்தால் அது மறைமுகமாக பா.ஜ.க.வுக்கு வாக்களித்ததாகப் பொருள் என்று எவ்வளவு அழகாக முடிச்சவிழ்க்கிறார்.
இந்தச் சாமர்த்தியமெல்லாம் பாழாய்ப் போன இந்தத் தமிழர்களும் எங்கே புரியப் போகிறது. அன்று இந்தியாவுக்குள் நுழைவதற்குக் கைபர் கணவாய் தேவைப்பட்டது என்றால், இன்று தமிழ்நாட்டிற்குள் நுழைவதற்கு பிஜேபி வகையறாக்களுக்கு ஈழத் தமிழர்ப் பிரச்சினை தேவைப்படுகிறதோ!
பின்னணி இதுதான். பெரியாரின் பிள்ளைகள் பேரப் பிள்ளைகள் என்று சொல்லிக்கொள்வோர் மயக்கத்திலிருந்து விடுபடட்டும்! இல்லை யென்றால் விளக்கைப் பிடித்துக் கொண்டு கிணற்றில் விழுவதற்கு இது சமமாகும் - எச்சரிக்கை!
-----------மின்சாரம் அவர்கள் 16-5-2009 "விடுதலை" ஞாயிறுமலரில் எழுதிய கட்டுரை
Labels:
பெரியார்-மின்சாரம்
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
போலி ஈழத்தமிழர் கூட்டணி மற்றும் அணி மாறும் அயோக்கியர்களுக்கு தமிழக மக்கள் மரண அடிகொடுத்து விட்டார்கள் .தமிழினத்ரோகி யார் என்பதை இந்த தேர்தல் மூலம் நிருபித்து விட்டார்கள்.இன்று காலை(16-05-2009) கூட ஈழம் தமிழர் குறித்து நடுவண் அரசுக்கு கடிதம் எழுதி உள்ளார் கலைஞர் .அம்மாவும் ,அவரது சகோதரர்களும் இனி ஈழம் குறித்து பேசுவார்களா என்று பார்போம்.சென்ற தேர்தலில் திமுக 16 .இந்த முறை 18.தமிழர்கள் ஒன்றும் ஏமாளிகள் அல்லர் என்பதை நிருபித்து விட்டனர் .
தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
Post a Comment