Search This Blog

15.5.09

ஆரிய மத அபிமானம் என்னும் வெறியை விட்டுவிட்டு யோசியுங்கள்





தோழர்களே! எனது 18.3.47ஆம் தேதி திருச்சி சொற்பொழிவையும், தலையங்கத்தையும் "குடி அரசில்' படித்த தோழர்கள் பலரில் சுமார் 10,15 தோழர்கள் வரை கடிந்தும், கலகலத்தும், தயங்கியும், தாட்சண்யப்பட்டும், மிரட்டியும், பயந்தும், கண்டிப்பாயும், வழவழா என்றும் பலவிதமாய் ஆசிரியருக்கும், எனக்கும் கடிதங்கள் எழுதி இருக்கிறார்கள். நேரிலும் சிலர் வந்து நீண்ட சொற்போர் நடத்தினார்கள். ஆதலால் அவற்றிற்குச் சமாதானம் சொல்லும் முறையிலும், நேரில் பேசிய தோழர்களுக்குச் சமாதானம் தெரிவிக்கும் முறையிலும் இதை எழுதுகிறேன்.

கோபப்படாமல், ஆத்திரப்படாமல், மத மயக்கம் இல்லாமல் சிந்தித்துப் பாருங்கள்.ஒரு மதத்தின் மீது நமக்குள்ள மத வெறுப்புக் காரணமாகவே அந்த மத மக்கள் மீதும் வெறுப்படைகிறோம்.இன்று முஸ்லிம்கள் மீது இந்துக்களுக்கு உள்ள வெறுப்புக்குக் காரணம், இஸ்லாம் மத வெறுப்பேயாகும்.

இஸ்லாம் மதமானது ஆரிய மதத்திற்கு (இந்து மதத்திற்கு) எதிரானதாக இருப்பதாலேயே இஸ்லாத்தை இந்துக்கள்(ஆரியர்கள்) வெறுக்கிறார்கள். ஏன் எதிராய் இருக்கின்றது என்றால், இஸ்லாம் இந்து மதத்தின் அடிப்படையையே தகர்த்து விடுகிறது.இந்து மதம் என்னும் ஆரிய மதத்திற்குப் பல கடவுள்கள், உருவக் கடவுள்கள் உண்டு. உருவங்களும் பல மாதிரியான உருவங்களாகும்.

மக்களுக்குள் ஜாதி பேதங்கள் உண்டு. பிறவியிலேயே ஜாதி வகுக்கப்பட்டிருக்கிறது. மக்கள் பிராமணன், சூத்திரன், பஞ்சமன் (பறையன்) என்ற உயர்வு – தாழ்வு கொண்ட ஜாதியினராகப் பிரிக்கப்பட்டுள்ளனர். இந்தக் கொள்கைக்கு நாம் ஆளாகி அவற்றுள் கீழ் ஜாதியாய் இருக்கிறோம்.இஸ்லாம் மதத்தில் ஒரு கடவுள் தான் உண்டு; அதுவும் உருவமற்ற கடவுள்தான்.

இஸ்லாத்தில் ஜாதிகள், பேதங்கள், உயர்வு – தாழ்வுகள் கிடையாது. பிறவி காரணமாகப் பாகுபாடு, மேன்மை – இழிவும் கிடையாது.

அதாவது இஸ்லாத்தில், பிராமணன் (மேல் ஜாதி), சூத்திரன் (கீழ் ஜாதி) பறையன், பஞ்சமன் (கடை ஜாதி) என்பவர்கள் கிடையாது. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால், இஸ்லாம் ஒரு கடவுள், ஒரு ஜாதி அதாவது ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்ற அடிப்படையைக் கொண்டது. இந்த அடிப்படை திராவிடனுடையதே; திராவிடனுக்கு வேண்டியது என்றும் சொல்லலாம்........

...........இஸ்லாம் மதத்தை எல்லா மக்களும் அனுசரித்தால், பிராமணர் என்கின்ற ஜாதியே, சமுதாயமே இராது. பல கடவுள்களும், விக்கிரக் (உருவ) கடவுளும் இருக்க மாட்டா. இந்த விக்கிரக் கடவுள்களுக்குப் படைக்கும் பொருள் வருவாயும் நின்று போகும்.

இதனாலேயே இஸ்லாம் ஆரியரால் வெறுக்கப்படுகிறது. வெகு காலமாய் வெறுக்கப்பட்டு இஸ்லாமியர்கள் மீது பல பழிகள் சுமத்தி, மக்களுக்குள் வெறுப்புணர்ச்சி ஊட்டப்பட்டும் வருகிறது. ஆகவே இந்தப்படி இஸ்லாம் மதம் வெறுக்கப்படுவதினால், இஸ்லாமியரும் ஆரியரால் வெறுக்கப்பட்டும், ஆரிய மத அடிமையான சூத்திரர் (திராவிடர்))களாலும் வெறுக்குமாறும் செய்யப்பட்டு விட்டது. ஆகவேதான் இஸ்லாத்தின் மீது உள்ள வெறுப்பினாலேயே, திராவிட இந்துக்கள் என்பவர்களும் இஸ்லாமியர்களான முஸ்லிம்களை வெறுத்துப் பழகிவிட்டார்கள் என்கிறேன்.

இஸ்லாத்தைப் போல் கிறிஸ்துவ மதம், சீக்கிய மதம், ஆரிய சமாஜம், பிரம்ம சமாஜம், பவுத்த சமாஜம் முதலியவை இந்துக்களால் வெறுக்கப்படுவதில்லை.

ஏன் என்றால், கிறிஸ்து, சீக்கிய முதலிய மதங்களும், இஸ்லாத்துக்கு ஓர் அளவுக்கு விரோதமானவையானதால், அவை இஸ்லாத்தின் பொது விரோதிகள் என்கின்ற முறையில் – இந்து, கிறிஸ்துவர், சீக்கியர் ஆகிய மூவரும் விரோதமில்லாமல், கூடிய வரையில் ஒற்றுமையாகவும் இருக்கிறார்கள். அனேக பார்ப்பனர்கள்கூட, கிறிஸ்துவ மதத்தைத் தழுவி இருக்கிறார்கள். பல பார்ப்பனர்கள் கிறிஸ்துவ மத ஸ்தாபனங்களில் சிப்பந்திகளாகவும் இருக்கிறார்கள். கிறிஸ்துவ மதத்தைத் தழுவுகிற இவனும் இங்கு இந்த ஜாதி முறையைத் தழுவ அனுமதிக்கப்படுகிறான்.

சீக்கியனும் அநேகமாக இந்து மதக் கொள்கைப்படிதான் கடவுளை வணங்குகிறான். ஆனால், உருவ கடவுளுக்குப் பதிலாக புஸ்தகத்தைக் கடவுள் உருவாய் வைத்து, இந்து பிரார்த்தனை முறையில் வணங்குகிறான். சீக்கியர்களும் இந்துக்கள் போலவே (அவ்வளவு இல்லாவிட்டாலும்) ஓர் அளவுக்கு ஜாதிப் பாகுபாடு அனுசரிக்கிறார்கள். சீக்கியரில் தீண்டப்படாத, கீழ் சாதி மக்கள் என்று ஒரு கூட்டம் இருக்கச் செய்யப்பட்டு இருந்து வருகிறது. வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ உரிமைகூட அதற்கு வழங்கப்பட்டிருக்கிறது. தனித்தொகுதிப் போராட்டமும், சீக்கிய வகுப்புக்குள் இருந்து வருகிறது. ஆனால், ஆரியப் பத்திரிகைகள் இதை வெளியில் தெரியாமல் மறைத்து விடுகின்றன. நான் பஞ்சாப்புக்குச் சென்றபோது நேரில் அறிந்த சேதி இது!.......

.........எனவே இஸ்லாம் மதம், பார்ப்பனர்களால் சுயலாபம் – வகுப்பு நலம் காரணமாக வெறுக்கப்பட்டதாக இருப்பதால், இஸ்லாமியர்கள் (முஸ்லிம்கள்) பார்ப்பன – ஆரிய அடிமைகளாலும் வெறுக்கப்பட்டு வருகிறார்கள். எனவே இன்றும் இந்து மதத் தலைவர்களுக்கு முஸ்லிம்களை வெறுக்கச் செய்வதல்லாமல், இந்து மதப் பிரச்சாரத்தின் முக்கியத் தத்துவம், கொள்கை, பணி என்ன என்று யாராவது சொல்ல முடியுமா?.....


.......பார்ப்பானிடம் அன்பு, பார்ப்பானிடம் நேசம் வைத்துப் பார்ப்பான் போல வேஷம் போட்டு நடித்துக் கொண்டு, சூத்திரனாக இருக்கச் சம்மதிக்கும் ஒருவன், அதுவும் திராவிடனாக இருப்பவன் இஸ்லாமியரிடம் அன்பு, நேசம், வேஷம், நடிப்பு நடித்துச் சூத்திரன் அல்லாதவனாக, திராவிடனாகவே இருப்பதில் என்ன வெட்கக்கேடு என்பது நமக்கு விளங்கவில்லை. மொத்தத்தில் 100க்கு 10 பேர்களாக மக்களிடம் நேசம் பூண்டு, கலந்து – சுதந்திரத்தோடு, மானத்தோடு வாழ வெட்கமோ, வெறுப்போ பட்டுக் கொண்டு 100க்கு 3 பேராய் இருக்கும் நம்மிலும் வேறுபட்ட, நம்மை இழிவுபடுத்தும் மக்களுடன் சேர்ந்தவர்களாகச் சொல்லிக் கொண்டு – மானம், சுதந்திரம் இல்லாமல் இழிவாழ்வு வாழ்வதற்கு மனம் சகிக்கக் காரணம் என்னவென்றால், பார்ப்பான் நம்மை இஸ்லாத்துக்கு
எதிரிகளாக ஆக்கியதைப் "பேய், பிசாசு, பூச்சாண்டியாக' போதித்து இருப்பதைத் தவிர, வேறு காரணம் என்ன சொல்ல முடியும்? நம்மிடத்திலே இல்லாத கெட்ட பழக்கம் இஸ்லாத்தில் என்ன இருக்கிறது? இஸ்லாத்தில் இல்லாத நல்ல பழக்கம் நம்மிடத்தில் என்ன இருக்கிறது? நாம் எந்த நல்ல காரியத்தை, சீர்திருத்தத்தைச் செய்வதை இஸ்லாம் தடுக்கிறது?

""கையை வெட்டினாலொழிய பிழைக்க மாட்டாய்'' என்று டாக்டர் சொன்னால் வெட்டிவிடச் சம்மதிக்கிறோம். ""காலை வெட்டினாலொழிய பிழைக்க மாட்டாய்'' என்றால் காலை வெட்டி விடச் சம்மதிக்கிறோம். மலஜலம் கழிக்க வேறு ஓட்டை போட வேண்டுமென்றால், போட்டுக் கொண்டு அதில் மலஜலம் கழிக்கின்றோம். எடுத்துவிட வேண்டுமென்றால் கர்ப்பப் பையை எடுத்துவிடச் சம்மதிக்கிறோம். இன்னும் முக்கிய உறுப்புகளை, முக்கியப் பண்டங்களை இழந்தாவது உயிர் வாழ சம்மதிக்கிறோம்.

அப்படி இருக்க ஓர் அயோக்கியர் கூட்டம் நம்மை ஜெயித்து, அடிமையாக்கி, தங்களுக்கு அடிமை என்கின்ற தத்துவம் கொண்ட ஒரு கொள்கையை நம்மீது பலாத்காரத்திலும், தந்திரத்திலும் புகுத்தி, இழிவுபடுத்தி வைத்திருப்பதை ஒழிக்க வேண்டும் என்றால், எதற்கு இவ்வளவு யோசனை, எதிர்ப்பு, தயக்கம், வெட்கம் என்றால் இந்த இழிவு எப்பொழுதுதான் – எந்த வகையில்தான் மறைவது என்று கேட்கிறேன்......


.....கோபிக்கும் தோழர்களே! வேத சாஸ்திரங்களை, புராண, இதிகாசங்களை நெருப்பிட்டுக் கொளுத்துவதால் சூத்திரப் பட்டம் ஒழியப் போவதில்லை. கோவில்களை இடிப்பதாலோ, விக்கிரகங்களை உடைத்துத் தூள்தூளாக்குவதாலோ, சூத்திரப் பட்டம் ஒழியப் போவதில்லை. மறுபடியும் தோசையைத் திருப்புவது போல் பழையபடி திருப்பிவிடப் பார்ப்பனருக்குத் தெரியும், முடியும். திராவிடன் என்று சொல்லிக் கொள்வதால் மட்டும் சூத்திரப் பட்டம் ஒழியப் போவதில்லை. இந்து மதம் லேசில் ஒழியாது. அது பச்சோந்தி போல் சுலபத்தில் சாகும் மதமல்ல. அதைச் சாகடிப்பதற்கு நம் ஆயுளும் நம் பேரன்மார் ஆயுளும் கூடப் போதாது. ஆகவே நாம் அதை (இந்து மதத்தை) விட்டு விலகுவதுதான் நம் ஆயுளில் முடியக்கூடிய காரியமாகும். அந்தப்படி நாம் விலகினோமேயானால், நாம் யார் என்று சொல்லிக் கொள்ள இன்றைய நிலைக்கு ஒரு பெயர் வேண்டும். அதைப் புதிதாக உண்டாக்க வேண்டும், பரப்ப வேண்டும். அதை இன்றைய காந்தி சர்க்கார் ஏற்றுக் கொள்ளும்படிச் செய்ய வேண்டும். அதற்குச் சட்டம், சம்பிரதாயம், செலாவணி ஏற்பட வேண்டும். அதற்கு உண்டான பிரதிநிதித்துவம் – உரிமை நிர்ணயித்து ஒப்புக் கொள்ளச் செய்ய வேண்டும்.
இவ்வளவும் செய்வதென்றால் பார்ப்பன எதிர்ப்புக்கும், சூழ்ச்சிக்கும், பனியாக்கள் ஆதரவுக்கும் முன்னால் சுலபத்தில் ஆகக் கூடியதா என்பதையும் சிந்தியுங்கள். பிறகு இப்படி எல்லாம் இல்லாமல் இந்தக் கஷ்டங்களுக்கும், முடியாமைக்கும் ஆளாகாமல் ஏற்கனவே ஏற்பட்டு, உலகம் பூராவும் செல்வாக்கும் செலõவணியும் பெற்று, எவரும் சிந்தித்து ஒப்புக் கொண்டு அமுலில் இருந்து வருவதும், நமது உண்மையானதும், உரிமையானதுமான கொள்கை கொண்டதுமாய் இருக்கும் சமுதாய சமத்துவ சமயத்தை ""நான் தழுவிக் கொண்டேன்'' என்று சொல்லுவதில் என்ன தப்பு, என்ன கஷ்டம் என்பதையும் சிந்தித்துப் பாருங்கள்.....

.......எனவே யோசியுங்கள். தயவு செய்து ஆழ்ந்து கவலையோடு யோசியுங்கள். ஆரிய மத அபிமானம் என்னும் வெறியை விட்டுவிட்டு, மான அபிமானம் வைத்து யோசியுங்கள், கோபியாதீர்கள்.

சிந்தித்து ஒரு முடிவுக்கு வராமல், இஸ்லாம் மார்க்கமும், இந்து மார்க்கமும், இரு மார்க்க மக்களும் முட்டிக் கொண்டால் நட்டம், அடி, உதை, சாவு திராவிடனுக்குத்தான். பார்ப்பானுக்கு எவ்வித நட்டமும் இல்லை என்பது மாத்திரமல்லாமல் அவனுக்கு வரும்படி உண்டு. இகலோக கோர்ட்டில் பீசு, லஞ்சும்; பரலோக கோர்ட்டில் திதி, திவசம் முதலிய வைதிகச் சடங்கு – இவற்றால்தானேஆரியர்கள் இன்று மேல்நிலையில் வாழ்ந்து கொண்டு நம்மைத் தனது அடிமையாக, வைப்பாட்டி மகன் என்பதாகச் சட்டம், சாஸ்திரம் வகுத்து இழிவுபடுத்தினான் என்பதல்லாமல் வேறு எதனால்?

ஆகவே, மற்றொரு முறை சிந்தியுங்கள்.

மறுபடியும் எழுதுகிறேன்.

----------------"இழிவு நீங்க இஸ்லாம்' என்ற தனது திருச்சி உரைக்கு வந்த பல அதிருப்தி குறிப்புகளுக்கு பெரியார் அளித்த பதில். "குடிஅரசு' 5.4.1947
--நன்றி:-'தலித் முரசு'- 'கீற்று'

2 comments:

Unknown said...

//இஸ்லாம் மார்க்கமும், இந்து மார்க்கமும், இரு மார்க்க மக்களும் முட்டிக் கொண்டால் நட்டம், அடி, உதை, சாவு திராவிடனுக்குத்தான். பார்ப்பானுக்கு எவ்வித நட்டமும் இல்லை என்பது மாத்திரமல்லாமல் அவனுக்கு வரும்படி உண்டு. இகலோக கோர்ட்டில் பீசு, லஞ்சும்; பரலோக கோர்ட்டில் திதி, திவசம் முதலிய வைதிகச் சடங்கு – இவற்றால்தானேஆரியர்கள் இன்று மேல்நிலையில் வாழ்ந்து கொண்டு நம்மைத் தனது அடிமையாக, வைப்பாட்டி மகன் என்பதாகச் சட்டம், சாஸ்திரம் வகுத்து இழிவுபடுத்தினான் என்பதல்லாமல் வேறு எதனால்?//

பெரியார் அய்யாவின் கருத்துக்க்களைப் படிக்க படிக்க பல உண்மைகளை அறக்கருத்துக்களை அறிந்து கொள்ள முடிகிறது

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி