Search This Blog
2.5.09
ஈழத் தமிழர்ப் பிரச்சினைத் தீர்வுக்கு இந்தப் பின்னணிகளும் கூர்மையாக இருக்கின்றன!
சீனா மட்டும் கண்ணுக்குத் தெரியாதா?
"இலங்கை தமிழ் மக்கள்மீது நடத்துகிற தாக்குதலை, யுத்தத்தை உடனடியாக நிறுத்திட ராஜபக்சே அரசு முன்வர வேண்டும் என்பது தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோரிக்கை ஆகும்.
அதே நேரத்தில் மத்திய ஆட்சியில் திமுகவும், காங்கிரஸ் கட்சியும் கூட்டணி வைத்துக் கொண்டுள்ளன. தமிழ்நாட்டில் இந்த இரண்டு கட்சிகளும் ஒன்றாக இணைந்தும் பொதுத் தேர்தலைச் சந்திக்கின்றன.
இந்நிலையில், மத்திய அரசு அய்க்கிய நாடுகள் சபையின் மூலமாகவோ அல்லது இதர ராஜதந்திர வழிகள் மூலமாகவோ இலங் கையில் நடைபெறும் போரை நிறுத்துமாறு வற்புறுத்த வேண்டும், தலையிட வேண்டும்"
- என்று இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் தோழர் என். வரதராஜன் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். ("தீக்கதிர்" 28.4.2009 முதல் பக்கம்).
மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட்க்கட்சியின் இந்தக் கருத்து வரவேற்கத்தக்கதுதான்.
அதே நேரத்தில் அய்.நா. பாதுகாப்புச் சபை மூலமாக நடவடிக்கைகள் எடுப்பதற்கு முட்டுக்கட்டை போடும் வரிசையில் சீனாதான் முதல் இடத்தில் இருக்கிறது. ருசியா, ஜப்பானும் உடந்தையாக இருக்கின்றன என்பதை இடதுசாரிகள் அறிந்துள்ளார்களா இல்லையா என்று தெரியவில்லை.
சீனா, ருசியா நாடுகளின் இந்தப் போக்குக் குறித்து இந்தியாவில் உள்ள இடதுசாரிகள் இதுவரை வாய் திறக்காதது ஏன்?
இந்தக் கேள்விக்கு அவர்கள் விடையிறுக்கக் கடமைப்பட்டுள்ளனர். தேசிய இனப்பிரச்சினை குறித்து புரட்சியாளர் லெனின் விரிவாகவே பேசியிருக்கிறார்.
அழகுப் போட்டி நடத்தும் அளவுக்கும் அதிக எண்ணிக்கையில் முத்தம் கொடுக்கும் தம்பதியினர் யார் என்று போட்டி நடத்தும் அளவுக்கும் முற்றி சொத்தையாகிப் போன பொதுவுடைமை அங்கு கொடி கட்டிப் பறப்பதால் ஏற்பட்ட தடுமாற்றம்தான் இதற்குக் காரணமா?
ருசியா போல் சிதைந்து போய்விட வில்லை - நாங்கள் கெட்டியாகவே இருக்கிறோம் என்று வெளிப்புறத்தில் மட்டும் காட்டிக் கொண்டு உள்புறத்தில் அழுகிப் போன நிலையில் தான் அங்கு கம்யூனிசம் இருக்கிறதோ என்று கவலைப்பட வேண்டியுள்ளது.
திபெத் மக்களின் சுதந்திர உணர்வை மதிக்கும் தன்மையைப் பார்த்தால், இன்னொரு நாட்டின் சுதந்திரத் தாகத்தை சீனா எப்படி எடை போடும் என்பதை எளிதில் தெளிந்து கொள்ளலாம்.
அமெரிக்கா போன்ற முதலாளித்துவ நாடுகள்கூட ஈழப் பிரச்சினையில் அதிபர் ராஜபக்சேவுக்கு அழுத்தம் கொடுத்து போரை நிறுத்தச் சொல்லி குரல் கொடுத்து வருகின்றன. ஆனால் கம்யூனிசம் பேசும் சீனாவோ நர வேட்டையாடும் சிங்களப் பேரினவாத அரசுக்கு தேவையான போர்க் கருவிகளைக் கொடுத்து உதவிக் கொண்டிருக்கிறது. பாசிசப் பாம்புக்குப் பால் வார்த்துக் கொண்டிருக்கிறது.
அய்.நா. மூலம் தீர்வு காண வேண்டியதுதானே என்று மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலாளர் எளிதில் சொல்லி விடுகிறார். அதற்கு தடையாக இருப்பதே சீனா தானே என்கிறபோது - மவுனம் சாதிக்கும் நிலைதான்.
சிறுபான்மையான மக்கள் குடி உரிமையுமின்றி இங்கு வாழத் தயாராக இருக்க வேண்டும் என்று இந்தியாவில் சங்பரிவார்க் கும்பல் சொல்லவில்லையா? அதையே தான் ஈழத் தமிழர்கள் விஷயத் திலும் சிங்களவர்கள் சொல்லிக் கொண்டு இருக்கின்றனர்.
மொழி, கல்வி, வேலை வாய்ப்பு பொரு ளாதாரம் உள்ளிட்ட அனைத்திலும் ஒடுக்குமுறை உள்ள ஒரு நாட்டில் பெரும் பான்மையான மக்களின் கருத்தாகவும் கர்ச்சனையாகவும் அதுவாகவே இருக்கும் நிலையில் எண்ணிக்கையில் சிறுபான்மையின மக்களாக இருக்கக்கூடிய தமிழர்கள் எந்தவகையான அரசியல் தீர்வைக் காண முடியும்?
புள்ளிமானும் புலிகளும் ஒப்பந்தம் போட்ட கதைதான். ஏற்கெனவே போடப்பட்ட ஒப்பந்தங்கள் தீர்வுகள் எந்தக் காயிலான் கடையில் கிடக்கின்றன என்று தெரியவில்லையே!
அரசியலில் பழம் தின்று கொட்டை போட்டவர்கள் என்று கருதப்படுபவர்கள் யதார்த்தத்தைக் கணித்து நடைமுறை சாத்தியத்தோடு கூடிய ஆலோசனைகளைச் சொல்லுவதுதான் அந்த அனுபவத்துக்கான அழகாக இருக்க முடியும்.
மாநில சுய நிர்ணய உரிமை என்கிற இடத்துக்குக்கூட வர இவர்கள் தயாராகயில்லை என்பது எவ்வளவுப் பெரிய ஆபத்தான - மோசமான நிலை!
கேள்வி: சுயநிர்ணய உரிமை வழங்கப் பட வேண்டும் என்று ஜெயலலிதா கூறியிருக்கிறாரே?
என். வரதராசன், (சி.பி.எம். மாநில செயலாளர்): சுயநிர்ணய உரிமை என்ற கோஷத்தை நாங்கள் ஏற்கவில்லை தனியீழம் என்பதற்கும் சுயநிர்ணய உரிமை என்பதற்கும் பெரிய வித்தியாசம் ஏதும் இல்லை ("தீக்கதிர்" 4.11.2008).
தனியீழம் கேட்டால் அது எப்படி குற்றமாகும்? பாதிக்கப்படும் அந்நாட்டு மக்கள் அதுதான் தீர்வு என்று கருதினால் அதனைத் தடுக்க நாம் யார்? பட்டவர்களுக்குத்தானே வலி தெரியும்!
காகிதத்தில் அச்சிடப்பட்ட வெறும் எழுத்துக்களைப் படித்து விட்டு விமர்சன விசிறி கொண்டு விசிறி, புழுக்கத்தைத் தணித்துக் கொள்வது ஒரு வகையான மிராசுதார் பாணியாகவே தானிருக்க முடியும்.
எந்த இடத்திலும் ஈழத் தமிழர் சம்பந்தப்பட்ட பிரச்சினையில் தேசிய இனப் பிரச்சினை என்ற வார்த்தைப் பிரயோகத்தை இவர்களிடம் பார்க்கவே முடிவ தில்லை.
அதை ஒரு கெட்ட வார்த்தையாகக் கருதுகிறார்களா என்று தெரியவில்லை. ஈழப் பிரச்சினையை தேசிய இனச் சிக்கல் என்ற பார்வையில் பார்க்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுகள் தயங்குவது ஏன் என்ற கேள்வியை ஒரு முறை தோழர் தியாகுகூட வைத்ததுண்டு (சங்கொலி 13.10.2006)
சர்வதேச லெனினிஸ்ட் அமைப் பும்கூட (Inter National Leninist Current) ஒடுக்கப்பட்ட மக்களின் சுயநிர்ணய உரிமைக்கு அங்கீகாரம் கொடுக்க வேண்டும் என்று சொல்லுவது பிரிவினைவாதத்துக்கு ஆதரவானதல்ல என்று கூடக் கூறியுள்ளது.
இடதுசாரிகள் இதில் இறுக்கமாக இருப்பதற்குக் காரணம் - சீனாவின் நிலைப்பாடுதான் என்று கருதிட இடமிருக்கிறது!
சீனா ஏன் அப்படி நடந்து கொண்டிருக்கிறது? இந்தியாவை எதிரியாக நோக்கும் அந்நாட்டுக்கு இலங்கையின் உதவிகள் தேவைப்படுகின்றன.
இப்பொழுதுகூட சிக்கிம் பிங்கர் ஏரியாக்கள் எங்களுக்குச் சொந்தமானவை என்றுதான் சீனா கூறிக் கொண்டிருக்கிறது.
அண்மையில் சீனாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்தியா சார்பில் நிவாரணப் பொருள்களைக் கொண்டு சென்ற இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியை அவமதித்து - அனுப்பியதுதான் மிச்சம்.
சீனப் பிரதமர் சந்திப்பார் என்று கூறப்பட்டு கடைசி நேரத்தில் அதுகூட ரத்து செய்யப்பட்டது. நிவாரணப் பொருள்களைப் பெற்றுக் கொள்ள சம்பந்தப்பட்ட மாநிலத்தின் ஆளுநர்கூட வரவில்லை - வேண்டா வெறுப்புக்கு ஏதோ ஒரு அதிகாரி வந்து பெற்றுக் கொண்டுள்ளார்.
இந்த நிலையில் இலங்கையில் நடைபெறும் தமிழர்க்கு எதிரான யுத்தத்தை இந்தியாவுடன் தொடர்புப்படுத்தி சீனா பார்ப்பதுதான் பிரச்சினைக்கே மூல காரணமாகும்.
இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ள போர் ஆயுதங்களில் கணிசமானவை சீனாவிடமிருந்து பெறப்பட்டவையே!
இந்திய மகா சமுத்திர கடல் பகுதியில் தம் ஆதிக்கத்தை நிலை நிறுத்த சீனா துடித்துக் கொண்டிருக்கிறது. அமெரிக்காவுடனான இந்தியாவின் அணு ஆயுத ஒப்பந்தத்தால் இரு நாடுகளும் நெருக்க மாக உள்ளன - இந்த நாடுகளின் ஆதிக்கம் அங்கே வந்துவிடக் கூடாது என்பதில் சீனா குறியாக இருக்கிறது.
இதற்கு இலங்கையின் நேசக்கரம் சீனாவுக்குத் தேவைப்படுகிறது. அதற்காகத் தான் போர் ஆயுதங்களை மட்டுமல்ல; சாலை போட்டுக் கொடுப்பதிலிருந்து துறைமுகங்களை கட்டமைப்பது, மின் உற்பத்தி நிலையங்களை அமைப்பது போன்ற இன்றியமையாத பணிகளை சீனா இலங்கைக்குச் செய்து கொடுத்துக் கொண்டிருக்கிறது.
சுனாமியின் சீற்றத்தால் சீரழிந்துபோன இலங்கைக்கு மறு சீரமைப்புக்காக 14 லட்சம் டாலர் நிதியை அள்ளித் தந்தது சீனா.
மன்னார் வளைகுடாவின் கரையில் அமைந்திருக்கும் நகரான புத்தளத்திற்கு அருகில் உள்ள நோரோச்சோலை என்னும் இடத்தில் 900 மெகாவாட் திறனுடைய அனல் மின் நிலையம் ஒன்றை அமைத்துக் கொடுப்பதற்கு சீனாவுக்கு அனுமதி அளிக்கப் போவதாக 2005-ஆம் ஆண்டு ஆகஸ்டில் கூறியிருந்தது. 2006 மே மாதம் அனல் மின் நிலையக் கட்டுமானப் பணி களை சீனா நிறுவனம் தொடங்கி விட்டது.
இந்த அனல் மின் நிலையத்தினைக் கட்டுவதற்கான ஒப்பந்தத்தை இந்தியாவின் தேசிய அனல் மின் குழுமத்துடன் (National Thermal Power Corporation - NTPC) செய்து கொள்ளப் போவதாக 2004 டிசம்பரில் இலங்கை அரசு தெரிவித்திருந் தது. இருப்பினும் 2005-ஆம் ஆண்டில் அதை திடீரென மறுத்து அந்தப் பணியை சீன நிறுவனத்திற்குக் கொடுத்து விட்டது.
இலங்கை ஜனாதிபதி சந்திரிகாவின் 2005 ஆகஸ்டு மாத சீனப் பயணத்தின்போது இராணுவ உளவு முக்கியத்துவம் மிகுந்ததும், (2005 ஜூலை 2-ஆம் தேதி துவங்கப்பட்ட) இந்தியாவின் சேதுக் கால்வாய்த் திட்டத்திற்கு வெகு அருகாமையில் உள்ளதுமான இந்தத் திட்டத்தினைத் தமக்குக் கொடுத்தேயாக வேண்டும் என்று சீன அரசு திட்ட வட்டமாகக் கூறியதுதான் இதற்குக் காரணம். சேதுக் கால்வாயின் தெற்கு நுழைவாயிலுக்கும் நோரோச்சோலைக்கு இடையில் உள்ள தூரம் வெறும் 70 கிலோ மீட்டர் மட்டுமே.
2006-ஆம் ஆண்டின் இறுதியில் மன்னார் வளைகுடாவில் பெட்ரோலியம் உள்ளதா என்பதை ஆய்வு செய்வதற்கான துரப் பணிக்கான அனுமதியை சீனாவுக்கு வழங்கப் போவதாக இலங்கை அரசு கூறியது. 2007 பிப்ரவரி - மார்ச்சில் ஜனாதி பதி மஹிந்த ராஜபக்சே மேற்கொண்ட சீனப் பயணத்திற்குப் பிறகு அந்த அனு மதியை - எந்தவித டெண்டரும் இல்லாமல் - இலங்கை அரசு உறுதி செய்தது. சேது சமுத்திரக் கால்வாயின் பணிகள் தொடங்கி சுமார் 20 மாதங்கள் முடிந்த காலம் இது. கால்வாயின் பாக் நீரிணைப் (Palk Strait) பகுதியில் உள்ள பணிகள் வெகுவாக முடிந்த நிலையில் அதன் தெற்குப் பகுதி யான ஆதாம் பாலத்தின் பகுதியில் செய்யப் பட வேண்டிய பணிகளைத் துவக்க சேது சமுத்திரக் கப்பல் கால்வாய்க் கழகம் தன்னைத் தயார்படுத்திக் கொண்டிருந்த காலம் அது.
சீனாவுக்கு மன்னார் வளைகுடாவில் பெட்ரோலியத் துரப் பணிகளுக்காக வழங்கப்பட்ட பகுதி, சேதுக் கால்வாயின் தென் நுழைவாயிலில் இருந்து வெறும் 20 கிலோ மீட்டர் தூரத்திலேயே அமைந் துள்ளது. சேதுக் கால்வாயின் தெற்கு நுழைவாயிலுக்கு வெகு அருகாமையில் உள்ள ஒரு பகுதியை சீனாவுக்கு ஒதுக்கிய தன்மூலம் சேதுக்கால்வாய் குறித்து சீன அரசு தெளிவான அறிவைப் பெற இலங்கை அரசு வழி வகுத்தது. இங்கு இருந்து கொண்டு சேதுக் கால்வாயில் பயணம் செய்யும் அனைத்து சரக்கு மற்றும் இந்தியக் கடற்படைக்கு சொந்தமான கப்பல்களை சீனாவால் தொடர்ந்து கண்காணிக்க முடியும்.
ஈழத் தமிழர்ப் பிரச்சினைக்குத் தீர்வு என்று எண்ணும்போது இந்தப் பின்னணிகளும் கூர்மையாக இருக்கின்றன என்பதை மறந்து விடக் கூடாது.
மனித உரிமையை மதிக்க வேண்டிய - போரை வெறுத்து மனிதத்தைப் பசுமைப் படுத்த வேண்டிய பொதுவுடைமை நாடு ஒன்று முதலாளித்துவத்தையும் தாண்டி மூர்க்கத்தனமாக நடந்து கொண்டு வருவதை என்ன சொல்ல!
அணு ஆயுத ஒப்பந்த அமெரிக்கா - நமது இடதுசாரிகளின் கண்களுக்குத் தெரிகிறது. ஆனால் மானுட விரோதத்துக்குத் துணை போகும். சீனாவின் ஒப்பந்தம் மட்டும் நமது இடதுசாரிகளின் கண்களுக்குத் தெரிவதில்லை.
21-ஆம் நூற்றாண்டின் கம்யூனிசப் பாதை இதுதானா?
----------------- மின்சாரம் அவர்கள் 2-5-2009 "விடுதலை" ஞாயிறுமலரில் எழுதியுள்ள கட்டுரை
Labels:
திராவிடர் இயக்கம்
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
super Thamil Oviya!
நீங்கள் சொல்லுவது நூற்றுக்கு நூறு ஏற்றுக் கொள்ளப்பட்டவை. ஆனால் இலங்கை இந்திய ஒப்பந்தத்தை தடுத்து நிறுத்திய புலிகள் - இலங்கை அரசுகள் இன்று தமக்குள் படு உக்கிரப் போரை ஆரம்பித்திருப்பதும் - (விடுதலைப் புலிகளின் பேச்சுவார்த்தை நாடகத்தை இனிமேலும் அரசு அனுமதிக்காது) யாருடைய உதவியைப் பெற்றாகிலும் அவர்களை அழித்து ஒழிக்கும் முயற்சியில் ஐ.நா சபையின் அல்லது வெளியுலகங்களின் கோரிக்கைகைளையும் உதாசீனப்படுத்திவருகிறது! இந்தியாவைப் பகைத்துவிட்டு எதுவுமே செய்ய முடியாத நிலை தற்போது புலிகளுக்கு. நீங்கள் குறிப்பிட்டதுபோல சீனா தேவையில்லாமல் மூக்கை நுழைத்துவிட்டது. எதற்கும் நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
wait and see!
தங்கமுகுந்தன் கொல்லப்பட்ட கூட்டணி சிவபாலனின் செல்லப்பிள்ளை. எங்கு போனாலும் எவர் வீட்டிலே இழவு விழுந்தாலும் இரண்டு தடவைகளாச்சும் புலிகளைத் தாக்கி ஸ்ரீலங்கா-இந்திய அரசுகளை வாழ்த்திப் பா எழுதாமற் போகமாட்டார்.
இவர் போன்றவர்களுக்கு எத்தனை மக்கள் இறந்தாலும் பரவாயில்லை, புலி செத்தால் சரி.
போன தடவை இங்கிலாந்திலே ஒளிந்துகொண்டிருக்கும் இவர் சார்ந்திருக்கும் ஸ்ரீலங்கா அரசுதான் போர் நிறுத்தத்தைக் குலைத்தது. அறியமாட்டீரா? 1999 இலே புலிகள் யாழ்ப்பாணம் வரைக்கும் பிடித்துக்கொண்டு வந்தபோது, இவரும் இவரின் குருஜீ ஆனந்தசங்கரியும் சார்ந்திருக்கும் ஸ்ரீலங்கா அரசு இந்திய அரசினைக் கெஞ்சி நிறுத்த நாடகம் ஆடவில்லையா?
இவரெல்லாம் ஒரு தமிழர்பிரதிநிதி. இந்தியத்தமிழர்களுக்கு இந்த தங்கமுகுந்தனின் முன்னைய அரசியல் சரியாகத் தெரியவில்லை. அசல் அரசுசார்கூட்டணிவால் அன்றைக்கும் இன்றைக்கும்
தங்களின் வருகைக்கும் கருத்துகளுக்கும் மிக்க நன்றி நண்பர்களே.
Read the article in keetru.com by friends of muthukumar.Will Veeramani or any of his lackeys
write a rejoinder to that.
Post a Comment