Search This Blog

16.5.09

ராஜபக்சே போரை நிறுத்த முடியாது என்று அடம்பிடிப்பது ஏன்?


19 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் ஏன்?

ஹிட்லர், முசோலினி, இடி அமீன் என்று சொல்லப்படுவர்களின் வரிசையில் - அவர்களையும் மிஞ்சி முன்னணியில் நின்று முண்டா தட்டும் பேர்வழியாக நிற்பவர் ராஜபக்சே!

உலகின் உயர்ந்த சபையான அய்.நா. பலமுறை வேண்டுகோள்விடுத்தும், தூதர்களை அனுப்பி வைத்தும், அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, பிரான்சு, நார்வே, சுவீடன், டென்மார்க், சுவிட்சர்லாந்து, ஜெர்மனி, ஆஸ்திரேலியா, மொரீசியஸ், மலேசியா, தென்னாப்பிரிக்கா முதலிய நாடுகள் எல்லாம் இனவெறியன் ராஜபக்சேயின் போர் வெறியை எதிர்த்து கடுங்கண்டனத்தைத் தெரிவித்தும், போரை உடனடியாக நிறுத்தவேண்டும் என்கிற நாகரிகமான வேண்டுகோளையும் விடுத்துள்ளன.

இந்தியாவின் குடியரசுத் தலைவர் தமது குடியரசு நாள் உரையிலும் இந்த வேண்டுகோளை முன் வைத்துள்ளார். இவ்வளவையும் மீறி எந்தத் தைரியத்தில் ராஜபக்சே போரை நிறுத்த முடியாது; முடியவே முடியாது! என்று அடம்பிடிக்கிறார்?

சீனா என்கிற வல்லரசு நாட்டின் மிகப்பெரிய துணையுடனும், ஆதரவுடனும்தான் ஈழத்தில் மனிதப் படுகொலை கண்மூடித்தனமாக நடந்துகொண்டிருக்கிறது.


முதலாளித்துவ நாடுகள் கூட சிங்கள இனவெறியன் நடவடிக்கையை எதிர்த்து நெடுங்குரல் கொடுக்கின்றன. ஆனால், கம்யூனிஸ்ட் நாடுகளோ கண்டிக்காததோடு மட்டு மல்ல, இனவெறி - பாசிச நடவடிக்கைகளுக்குத் துணை போய்க் கொண்டிருக்கின்றன என்பது வெட்கக்கேடாகும்.

இதன்மூலம் மார்க்சிஸ்ட், லெனிய கொள்கைகளைக் குழிதோண்டிப் புதைத்துக் கொண்டிருக்கின்றன. விரும்பினால் பிரிந்து செல்லக்கூடிய உரிமை ஒவ்வொரு தேசிய இனத்திற்கும் உண்டு என்னும் கம்யூனிஸக் கோட்பாடுகளைக் காலில் போட்டு மிதித்து சீனா ஈழத் தமிழர் பிரச்சினையில் நடந்துகொண்டிருக்கிறது.


திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் விடுதலையில் (14.5.2009) இதனைச் சுட்டிக்காட்டியும் உள்ளார்.

ஈழத் தமிழர்களுக்காகக் குரல் கொடுக்கும் இந்திய நாட்டில் உள்ள இடதுசாரிகள் சீனாவின் இந்தப் பாசிசப் போக்கைக் கண்டித்துக் குரல் கொடுக்கவில்லை.

உண்மையிலேயே ஈழத் தமிழர்கள் மீது இழைக்கப்படும் கொடுமையை எதிர்ப்பவர்களாக இருந்தால் இந்தியக் கம்யூனிஸ்ட்கள் என்ன செய்திருக்கவேண்டும்? சீனாவின் பாசிசப் போக்கைக் கண்டிக்க முன்வந்திருக்கவேண்டாமா?

சீனா இப்படிப்பட்ட ஒரு நிலையை எடுத்ததன் காரணமாகத்தான் இலங்கையின் இறையாண்மைக்கு உள்பட்டே ஈழத்தமிழர்கள் பிரச்சினைக்குத் தீர்வு காணவேண்டும் என்று இங்குள்ள கம்யூனிஸ்ட்கள் கிளிப்பிள்ளைகள் போல கூறியதையே திருப்பித் திருப்பிச் சொல்லிக் கொண்டிருக்கின்றன.

21 ஆம் நூற்றாண்டின் தொடக்கக் காலகட்டத்தில் ஒரு சர்வதேசப் பிரச்சினையில் சீனா நடந்துகொண்டிருக்கும் பாசிசப் போக்கு கம்யூனிச சித்தாந்தத்திற்கு ஒரு பின்னடைவை ஏற்படுத்தும் என்பதில் எவ்வித அய்யப்பாடும் கிடையாது.

ஏற்கெனவே சோவியத் ருசியா நொறுங்கியதன்மூலம் கம்யூனிசத்திற்கு ஒருவிதத் தொய்வு ஏற்பட்டது. இப்பொழுது கம்யூனிசப் போர்வையில் பாசிசப் பாதையைத் தேடிக்கொண் டிருக்கும் சீனாவின் ஈழத் தமிழர் குறித்த நடவடிக்கைகள் - மேலும் கம்யூனிசத்தின் மீது இளைஞர்கள் மத்தியில் ஒருவித ஏளனப்பார்வை விழுமாறுதான் செய்யும். இந்த நிலையிலிருந்து கம்யூனிசத்தைக் காப்பற்ற கொள்கை ரீதியாக இளைஞர்கள் முன்வரவேண்டும்.

இந்த நிலைமைகளை வெளிச்சத்துக்குக் கொண்டு வரவும், பாதிக்கப்பட்டு மரணத்தின் விளிம்பில் உண்ண உணவின்றி, நோய்க்கு மருந்தின்றித் தவித்துக் கொண்டிருக்கும் ஈழத் தமிழர்களுக்கு நேரிடையான நிவாரணப் பணிகள், தங்குத் தடையின்றி நடைபெறவேண்டும் என்பதை வலியுறுத்தவும் தான் திராவிடர்கழகம் மே 19 செவ்வாயன்று காலை 11 மணிக்கு சென்னையில் தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்களின் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்றிற்கு ஏற்பாடு செய்துள்ளது.

கட்சிகளைக் கடந்து மனித உரிமை, மனிதநேயம் என்ற கண்ணோட்டத்திலாவது அணிவகுத்து ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளவேண்டும் என்பதே நமது கனிவான வேண்டு கோளாகும்.

திராவிடர் கழகத்தின் செயல்பாடுகள் எப்பொழுதும் தேர்தலை முன்னிறுத்தி அமைவதல்ல - கொள்கையை முன்னிறுத்தியே நடப்பவையே என்பதற்கு இது இன்னொரு எடுத்துக்காட்டாகும்.


-------------------"விடுதலை" தலையங்கம் 16-5-2009

3 comments:

Unknown said...

//உலகின் உயர்ந்த சபையான அய்.நா. பலமுறை வேண்டுகோள்விடுத்தும், தூதர்களை அனுப்பி வைத்தும், அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, பிரான்சு, நார்வே, சுவீடன், டென்மார்க், சுவிட்சர்லாந்து, ஜெர்மனி, ஆஸ்திரேலியா, மொரீசியஸ், மலேசியா, தென்னாப்பிரிக்கா முதலிய நாடுகள் எல்லாம் இனவெறியன் ராஜபக்சேயின் போர் வெறியை எதிர்த்து கடுங்கண்டனத்தைத் தெரிவித்தும், போரை உடனடியாக நிறுத்தவேண்டும் என்கிற நாகரிகமான வேண்டுகோளையும் விடுத்துள்ளன.

இந்தியாவின் குடியரசுத் தலைவர் தமது குடியரசு நாள் உரையிலும் இந்த வேண்டுகோளை முன் வைத்துள்ளார். இவ்வளவையும் மீறி எந்தத் தைரியத்தில் ராஜபக்சே போரை நிறுத்த முடியாது; முடியவே முடியாது! என்று அடம்பிடிக்கிறார்?

சீனா என்கிற வல்லரசு நாட்டின் மிகப்பெரிய துணையுடனும், ஆதரவுடனும்தான் ஈழத்தில் மனிதப் படுகொலை கண்மூடித்தனமாக நடந்துகொண்டிருக்கிறது.

முதலாளித்துவ நாடுகள் கூட சிங்கள இனவெறியன் நடவடிக்கையை எதிர்த்து நெடுங்குரல் கொடுக்கின்றன. ஆனால், கம்யூனிஸ்ட் நாடுகளோ கண்டிக்காததோடு மட்டு மல்ல, இனவெறி - பாசிச நடவடிக்கைகளுக்குத் துணை போய்க் கொண்டிருக்கின்றன என்பது வெட்கக்கேடாகும்.//


அனைத்து உலக நாடுகளும் சீனாவின் போக்கை கண்டித்தும் எதிர்த்தும் ஈழப்பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவந்து தமிழர்கள் வாழ்வில் நிம்மதி ஏற்பட வழிவகை செய்ய வேண்டும்

ரங்குடு said...

1960 களில், சீனா இந்தியாவைத் தாக்கிய போது, நேரு அமெரிக்காவின் உதவியை நாடினார். அமெரிக்க அதிபர் கென்னடி சீனாவுக்கு எச்சரிக்கை விடுத்து, போரை நிறுத்தினார்.

ஏனென்றால், இந்தியா தீவிர வாத நாடல்ல.

இன்று பாலஸ்தீன மக்களை இஸ்ரேல் வேட்டையாடிக் கொண்டிருக்கும் போது உலக நாடுகள் ஒன்றும் செய்யவில்லை. ஏனென்றால், ஹமாஸ் ஒரு தீவிரவாத அமைப்பாகக் காணப்படுகிறது.

இதே நிலமை தான் புலிகளுக்கும்.

இன்று இலங்கையில் நடக்கும் போர் (அமெரிக்காவின் பார்வையிலே) இலங்கை அரசாங்கத்திற்கும், ஒரு தீவிர வாதக் கும்பலுக்கும் இடையே நடக்கும் போர். இதேதான், மற்ற உலக நாடுகளும் நம்புகின்றன.

பிரபாகரன் செய்த பெரிய தவறு ராஜீவ் காந்தியைக் கொன்றது. அதுவே இந்தியாவை ஈழத்தமிழர்களிடமிருந்து அந்நியப் படுத்தியது. அது மட்டுமல்ல, தங்களுக்கு வேண்டாத ஈழத்தமிழர்களை (பத்மநாபா) இந்திய மண்ணில் கொன்ற பெருமை பிரபாகரனையே சாரும்.

பிரபாகரனின் கொள்கைகள், இலட்சியங்கள் உயர்ந்தவை. அதை அடைய அவரெடுத்த முயற்சிகள் உன்னதமானவை. அவர் செய்த சில தவறுகள் இன்று இலங்கைத் தமிழர்களை பலி கொள்கின்றன.
ராஜ பக்சே தமிழினத்தையே அழிக்கப் பார்க்கும் இந்நேரத்தில், உலக நாடுகள் அமைதி காப்பது ஈழத்தமிழர்களின் துரதிருஷ்டம்.
தற்போதைய தேர்தல் முடிவுகளும் அதையே உறுதி செய்கின்றன.

ஆனால், தமிழ் ஈழ இலட்சிய வாதிகளின் கனவு வீண் போகாது.
இறைவனின் அருளால், தமிழ் ஈழம் மலரும்.

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி