Search This Blog

24.5.09

"பெரியாரை" விட்டு ஒருபோதும் பிரிந்தது கிடையாது-"அண்ணா" வாக்குமூலம்




தர்மபுரி மாவட்டத்திலே நாகரசம்பட்டி என்ற சிறிய ஊர். அந்த ஊரிலே தந்தை பெரியார் அவர்களுடைய பெயராலே பெரியார் இராமசாமி கல்வி நிலையம் என்று கழக நண்பர்கள் அமைக்கிறார்கள். அந்தக் கட்டடம் திறக்கப்படுகிறது. அந்தக் கட்டடத்திற்கு முழுமையாக பெரிய அளவுக்குப் பெயர் வைத்து அந்தக் கட்டடத்தையே அரசாங்கத்திடம் கொடுக்க முயற்சி எடுத்துச் செய்கிறார்கள். மறைந்த நண்பர் சம்பந்தம் போன்ற மற்ற நண்பர்களெல்லாம் அதைச் செய்தார்கள். அந்த நிகழ்ச்சி நடந்தபோது அங்கே அண்ணா அவர்கள் 1967-இல் முதலமைச்சராக வருகிறார்கள். வந்திருக்கிற நேரத்தில் அய்யா அவர்களையும் அழைத்து அந்த நிகழ்ச்சி நடத்த வேண்டும் என்று அவர்கள் விரும்பி, இருபெரும் தலைவர்களை வைத்து நடத்துகிற நேரத்திலே, அந்த விழாவிலே அவர்கள் என்னைத் தலைமை தாங்குமாறு போட்டிருந்தார்கள். நான் மிகவும் அச்சப்பட்டேன். இவர்கள் இருவரும் கலந்து கொள்ளும் இந்த நிகழ்ச்சியில் நான் தலைமை தாங்குவதற்கு தகுதி இருப்பதாக எனக்கு எண்ணமில்லை. இருந்தாலும், கட்டளைக்கு கீழ்ப்பணிகிற, கட்டுப்பாட்டுக்கு கீழ்ப்படிகிற ஒரு தொண்டன் நான், தலைமை தாங்க எனக்கு என்ன தகுதி உள்ளது என்று சிந்தித்தால் எனக்குக் கிடைத்த எண்ணம்; விடுதலை ஏட்டை உருவாக்கியவர்கள் தந்தை பெரியார் அவர்கள்; தமிழ்ச் சமுதாயத்தின் விடுதலையைப் பற்றி சதா சிந்தித்துக் கொண்டிருப்பவர்கள் தந்தை பெரியார் அவர்கள். அந்த விடுதலைக்கு அந்நாளைய ஆசிரியர் அண்ணா அவர்கள், இந்நாளைய ஆசிரியர் நான், அது ஒன்று இணைக்கிறது என்று ஒரு வேளை நினைத்து எங்களை அழைத்திருக்கிறார்கள் போலும் என்று கூறி என்னுடைய உரையைத் தொடங்கி, அய்யா, அண்ணா பாசம் இவைகளைப் பற்றி-யெல்லாம் எடுத்துச் சொன்னேன். அப்போது அதிலே கலந்து கொண்ட இன்னொரு நண்பர் அவர், அய்யாவிடம் இருந்தார்; அண்ணாவிடம் இருந்தார்; எத்தனையோ இடங்களுக்குச் சென்றார். பிறகு அய்யப்பனுக்கும் சென்றார். அந்த நண்பர் அங்கே பேசும்போது திடீரென்று சொன்னார்; நீங்கள் பதினெட்டு ஆண்டு காலம் பிரிந்து போனவர்கள் இப்போது மீண்டும் இரண்டு பேரும் இணைந்து உட்கார்ந்து இருக்கும்போது எங்களுக்கெல்லாம் மகிழ்ச்சியாக இருக்கிறது. மீண்டும் இணைந்திருக்கிறீர்கள் என்று இரண்டு மூன்று முறை அதை இணைப்பாகச் சொன்னார்கள். அப்போது அண்ணா பேசும்போது சொன்னார்:

இங்கே பேசிய நண்பர்கள் பதினெட்டு ஆண்டு காலத்திற்குப் பிறகு இணைந்திருக்கிறோம் என்று சொன்னார்கள். அவர்களுக்கு நான் சொல்லிக் கொள்கிறேன். ஒருபோதும் நான் பெரியாரை விட்டுப் பிரிந்ததே இல்லை. நீங்கள் புறத்தோற்றத்தால் தான் அப்படி நினைத்தீர்களே தவிர - அகத்தால் நான் பெரியாரை விட்டு ஒருபோதும் பிரிந்தது கிடையாது என்று அவர்கள் சொல்லிவிட்டு நான் எங்கிருந்தேனோ அங்கெல்லாம் என் உள்ளத்தில் பெரியார் இருப்பார். பெரியார் எங்கிருக்கிறாரோ, அங்கு அவர் உள்ளத்தில் நான் இருப்பேன். எங்களைப் பிரித்து வைப்பதாக நினைத்து சிலர் ஏமாந்திருப்பார்கள்; ஏமாந்திருக் கிறார்கள் என்று அவர்கள் சொன்னார்கள்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அண்ணாவைபேச அழைத்தார்கள் அப்போது மாணவர்களுக்குள் விவாதங்கள் ஏற்பட்டன. அண்ணா அவர்கள் தமிழில்தானே மிகவும் ஆற்றலோடு பேசுவார். ஆங்கிலத்தில் எல்லாம் பேசமாட்டார் என்று சொல்லிய நேரத்தில் அண்ணா அவர்கள் முதல் வாக்கியத்தை தொடங்கிய முறை இருக்கிறதே, அதுவே எல்லாப் பேராசிரியர்களையும், துணை வேந்தர்களையும் கூட அதிர்ச்சி அடையச் செய்யக்கூடிய வகையிலே இருந்தது. அதுவும் திடீரென்று அறிவிக்கப்பட்ட நிலையில், ஒலிபெருக்கியின் முன்னால் நின்று அண்ணா பேசத் தொடங்கினார். I rarely speak in English but that does not mean, my English is rare..... என்று ஆரம்பித்தார்.

ஆங்கிலப் பத்திரிகையில் ஒன்றே ஒன்று போடுவார்கள். “Annadurai also spoke” என்று போடுவார்கள். அண்ணாதுரையும் பேசினார் என்று சொல்வார்கள் என்று சொல்லி விட்டு சொன்னார். (அவருக்கே உரிய) நையாண்டியும், நளினமும் அண்ணாவுக்கு கைவந்த கலை. அதை இயல்பாகவே அவர் செய்வார். “Annadurai also spoke” அண்ணாதுரையும் பேசினார் என்று ஏன் போட்டார்கள் தெரியுமா? ஒருவேளை படிக்கிறவர்கள் அண்ணாதுரை பாடினார் என்று எங்கே நினைத்துக் கொள்வார்களோ - என்பதற்காக என்று அவர்கள் சொன்னார்கள்.

அகநானூறு - புறநானூறு வேறுபாடு

அறிஞர் அண்ணா அவர்களிடம் பக்கத்திலிருந்து ஒருவர் ஓர் அய்யத்தைக் கேட்டாராம். அதாவது, அகநானூறுக்கும் - புறநானூறுக்கும் என்ன வித்தியாசம் என்று. அவருக்கோ இலக்கியத்தைப் பற்றி அதிகம் தெரியாது. அகநானூறு என்றால், ஒரு நானூறு - புற ஒரு நானூறு கூட்டினால் எண்ணூறு என்று நினைத்துக் கொண்டிருப்பது மாதிரி, அகநானூறு - புறநானூறு என்று சொல்கிறார்களே, அதற்கு தமிழில் என்ன வேறுபாடு என்று கேட்டபோது அண்ணா அவர்கள் அவருக்கே உரிய தனித் தன்மையிலே பதில் சொன்னாராம். புறநானூறு என்பது மற்றவர்களால் பகிர்ந்து கொள்ளக் கூடியது; அகநானூறு என்பது பிறரால் பகிர்ந்து கொள்ள முடியாத ஒன்று என்று சொன்னாராம்.

அண்ணா பேசுகிறார், சாம்ராஜ்யத்தின் சகல சவுகரியங்களும், சுகபோகங்களும் சித்தார்த்தரைத் தழுவிக் கொண்டிருந்தன. மணிமுடி தரித்து மன்னர்களின் மன்னனாக அரியாசனத்தில் அமர்ந்து ஆனந்த வாழ்வு நடத்த அவருக்கு வாய்ப்புக் கிடைத்தது. அவரோ காடு மேடெல்லாம் அலைந்து ஆனந்தம் அநித்தியம் என்று அறிந்து, அவனியிலே அவதி அழிக்கப்பட்டு அமைதி அரசாள வேண்டும்; துன்பத்தோணியிலே ஏறி பிணி, மூப்பு, பெருங்கவலை என்னும் பாறைகளிலே மோதுண்டு சிதறும் நிலை மாறி, மக்கள் மனமாச்சரியத்தை மாய்த்துவிட்டு அன்பு, அறிவுடைமை என்னும் குறிகோள் கொண்டு வாழ வேண்டும்.

இதற்கு ஏற்றதோர் வழியை நாம் காணவேண்டும் என்பதற்காக இன்பத்தை மதிக்க மறுத்தவுடன் போகப் படுகுழியும், லாபச் சூழலும் தாம் செல்லும் வழியிலே காணப்பட்ட காலை - அவைகளிலே இடறி விழாமல், இன்பம், துன்பத்துடன் பிணைந்திருக்கும் இன்பமல்ல, இணையற்ற எல்லையற்ற இன்பம் எது? அது எங்கே இருக்கிறது? அதை எங்ஙனம் பெற முடியும் என்று கண்டுபிடிப்-பதிலே காலத்தைத் செலவிட்டார். அவருடைய சொந்த வாழ்க்கையை தத்தம் செய்து மக்கள் வாழ்க்கைக்கு ஒரு வழி காண முயன்றார். தமக்கு கிடைத்த சுகத்தை துச்சமெனத் தள்ளிவிட்டு மக்களுக்குச் சுகம் தேடித்தர முனைந்தார். சுகத்தைத் தியாகம் செய்த சித்தார்த்தர் புத்தரானார். அவர் எப்படிப் புத்தரானார், சுகத்தைத் தியாகம் செய்தார்? அதனால், புத்தி தெளிவு பெற்றது. பொதுத் தொண்டு அறிவு பெற்று புத்தரானார்.

இன்பச் சேற்றையே வாழ்க்கையின் வசீகரத் தைலம் என்று கருதி, பூசி மினுக்கிக் கொண்ட வாலிபர்கள், இளவரசர்கள் எத்தனை எத்தனை லட்சம் பேர் இருந்தனர், இறந்தனர்! உலகில் அவர்களைப் பற்றிய நினைப்பேனும் இருக்கிறதா? ஒரு புத்தரின் புகழ் மக்களின் மனதிலே, சிந்தனாசக்தி நிலைத்திருக்கும் வரையிலே இருந்தே தீரும் அன்றோ?

பிள்ளை பிடித்த பெரியார்

நான் கல்லூரியைவிட்டு வெளியே வந்ததும் முதலில் அவரிடத்தில்தான் சிக்கிக் கொண்டேன். நான் சிக்கிக் கொண்டது வாலிபப் பருவத்தில். அதற்கு அடுத்து எங்கெங்கோ போய் சிக்கிக் கொண்டிருக்க வேண்டியவன். பெரியாரிடத்தில் சிக்கிக் கொண்டேன். அவரிடத்தில்தான் நான் முதன்முதலில் சிக்கிக் கொண்டேன். நான் காஞ்சிபுரத்திலிருந்து கல்லூரியில் படித்த படிப்பையும் அதன்மூலம் என்னென்ன எண்ணங்கள் ஏற்படுமோ அவற்றையெல்லாம் உதறித் தள்ளிவிட்டு ஈரோட்டில் போய்க் குடியேறினேன். எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. இதுபற்றி என்னுடைய பாட்டியார் அப்போது அவரது வயதை ஒட்டிய மூதாட்டியோடு பேசும்போது அடிக்கடி சொல்வார்கள். ஆறு மாதங்கள் அல்லது மூன்று மாதங்கள் கழித்து காஞ்சிக்குச் செல்கிற நேரத்தில் என்னைப் பற்றி மற்றவர்களிடம் சொல்லும்போது, யாரோ ஈரோட்டிலிருந்து ஒருவன் வந்து என்னுடைய பிள்ளையைப் பிடித்துக் கொண்டு போய்விட்டான் என்று பேசுவார்கள் என்று இதை எடுத்து அழகாகச் சொல்கிறார்.

அண்ணா அவர்கள் இந்த அமைச்சரவையே அய்யா அவர்களுக்குக் காணிக்கை என்று சொன்ன பொழுது தந்தை பெரியார் அவர்கள் சென்னை பொது மருத்துவமனையில் படுக்கையிலே படுத்திருக்கிறார்கள். இன்னமும் அந்தக் காட்சி என் மனதில் நிழலாடிக் கொண்டிருக்கிறது. சட்டமன்றத்திலிருந்து எனக்கு விடுதலை ஆசிரியர் என்ற முறையிலே செய்தி வருகிறது. உடனடியாக அந்தச் செய்தியை நான் எடுத்துக் கொண்டு மருத்துவமனைக்குச் சென்று, அய்யா இன்றைக்கு அண்ணா அவர்கள் ஒரு கேள்விக்கு இப்படிப் பதில் சொல்லியிருக்கிறார் என்று சொல்கிறேன். அப்போது அய்யா அவர்கள், இயற்கை வழியில் சிறுநீர் கழிக்க முடியாமல் சங்கடப்பட்டுக் கொண்டிருந்த ஒரு காலகட்டம். அப்போது மருத்துவமனையில் ஆபரேஷன்கூட ஆகவில்லை. அந்த நிலையில் அவர்கள் சங்கடப்பட்டு வலியோடு அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். உடனடியாக திடீரென்று துள்ளிக் குதித்து எழுந்து வந்து உட்கார்ந்தார். எழுந்து உட்கார்ந்து கொண்டு, அப்படியா சொன்னார் என்று கேட்டு, எனக்கு வலியெல்லாம் குறைந்தது என்று சொன்னார்கள். (அப்போது நான் கண்கலங்கி தழுதழுத்த நிலையில் உணர்ச்சி வயப்பட்டுப் பேசினேன்). அப்போது அய்யா அவர்களிடத்தில் ஒன்றைக் கேட்டேன். அய்யா அவர்களே, இதைக் கட்டம் கட்டி பத்திரிகையில் போடலமா? என்றேன். ஏன் என்றால், அப்போதும் அந்த நேரத்தில் பத்திரிகைக்காரன் புத்தி - பாக்ஸ் போடுவது என்பது செய்தியாளர்களுக்கு உரிய தன்மை. அதற்குத்தான் அதிகமான ஒரு மரியாதை உண்டு. நான் சொன்னதைத்தானே நீ போடப் போகிறாய். தாராளமாகப் போடலாம் என்றார். அதைப் பார்த்து அண்ணா அவர்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தார்கள்.


----------------கி. வீரமணி எம்.ஏ., பி.எல்.,-நூல்: "அறிஞர் அண்ணா"

2 comments:

Unknown said...

//அகநானூறு - புறநானூறு என்று சொல்கிறார்களே, அதற்கு தமிழில் என்ன வேறுபாடு என்று கேட்டபோது அண்ணா அவர்கள் அவருக்கே உரிய தனித் தன்மையிலே பதில் சொன்னாராம். புறநானூறு என்பது மற்றவர்களால் பகிர்ந்து கொள்ளக் கூடியது; அகநானூறு என்பது பிறரால் பகிர்ந்து கொள்ள முடியாத ஒன்று என்று சொன்னாராம்.//

சிறப்பான, பொருத்தமான விளக்கம்.

Thamizhan said...

அந்தக் காலத்திய எம்.ஏ. தங்கப் பதக்கத்துடன் தேர்வு பெற்ற அண்ணா அவர்களுக்கு எவ்வளவோ சிறப்பான
வேலைகள் காத்திருந்தன.
ஆற்காட்டு ராமசாமியார் அண்ணாவை அவருடன் ஐக்கிய நாட்டுச் சபைக்கு அழைத்தார்.உலக அளவிலே பெரிய ஆளாக வரலாம் என்றார்.
அண்ணா அவர்களோ குறைந்த ஊதியத்திலே பெரியாரிடம் விடுதலையில் வேலைக்கமர்ந்தார்.

எம்.ஏ பட்டம் பெற்று வந்த நாவலர் நெடுஞ்செழியன் பொது வாழ்க்கைக்கு வர விரும்பியதும் அவரைப் பெரியாருடன் பயிற்சி பெற்று வா என்று அறிவுறுத்தினார்.