Search This Blog

16.5.09

செவ்வாய் தோஷத்துக்கு மரண அடி!




அமெரிக்காவிலுள்ள நாசா விண்வெளி ஆராய்ச்சி நிலையத்திலிருந்து செவ்வாய் கோள் பற்றி ஆராய்வதற்கு 2003 ஆம் ஆண்டு ரூ.3600 கோடி செலவில் ஸ்பிரிட், ஆப்பர்சூனிட்டி என்ற இரண்டு ஆய்வுக்கலத்தை செவ்வாய்க்கு அனுப்பி வைத்தனர்!

173 கிலோ எடை கொண்ட ஸ்பிரிட் ஆய்வுக்காலம் மணிக்கு 19790 கிலோ மீட்டர் வேகத்தில் 7 மாத காலம் 38 கோடி கி.மீ. பயணம் செய்து 3.1.2004இல் சனிக்கிழமை செவ்வாய் கோளில் இறங்கியது.

ஆப்பர்சூனிட்டி ஆய்வுக்கலம் 2004 ஆம்ஆண்டு ஜனவரி 24 ஆம் தேதி சனிக்கிழமை இரவு செவ்வாய் கோளில் இறங்கியது.

இவ்விரு ஆய்வுக் கலங்களும் செவ்வாய் கோளில் எதிர் எதிர் இடத்தில் (மறுபக்கம்) இறங்கி அங்குள்ள பாறைகளைத் தோண்டித் துருவிப்பார்த்து ஆய்வு செய்து படங்களுடன் நாசா விண்வெளி ஆராய்ச்சி நிலையத்திற்கு அனுப்பிக் கொண்டிருக்கின்றன!

செவ்வாய் கோளில் என்ன தான் இருக்கிறது என்பதை ஆராய்வதே நாசாவின் திட்டம்! அதில் வெற்றியும் கண்டிருக்கிறது. இரண்டு ஆண்டிற்கு ஒரு முறை செவ்வாய்க்கு விண்கலம் அனுப்பி ஆய்வைத் தொடர்ந்து நடத்துவதென்று நாசா திட்டமிட்டுள்ளது!

செவ்வாய் கோளை ஆய்வதன் முக்கிய நோக்கம் அங்கு நீர் இருக்கிறதா - இரும்பு போன்ற கனிமங்கள் உள்ளனவா, உயிரினம் இருக்கின்றனவா, மனிதன் வாழத்தகுந்த இடமா, உயிர்வாழ முடியுமா போன்ற ஆய்வு செய்தவற்கே ஆராய்ச்சிகள் தொடர்கின்றன.

செவ்வாயில் எரிமலை!

இரு ஆய்வுக் கலங்களும் இது வரை ஆய்வு நடத்தி அனுப்பிய செய்திகளும், படங்களும், செவ்வாய் கோளில் 21 கி.மீ. உயரமுள்ள எரிமலை இருப்பதையும், அதன் அடிப்பாகத் தின் குறுக்களவு 550 கி.மீ., எரிமலையின் வாய் 80 கி.மீ, மேலும் 15 கி.மீ. உயரமுள்ள 3 செயலற்ற எரிமலைகள் உள்ளதையும் தெளிவாகக் காட்டு கின்றன! அங்குள்ள பாறைகள் அடுக்குத் தன்மை கொண்டதாக இருக்கின்றன. 250 கி.மீ. நீளமுள்ள பள்ளம் ஒன்று உள்ளதையும், வாய்க்கால் போன்ற பாறையில் தண்ணீர் ஓடியதற்கான அறிகுறியும் படத்தில் காணப்படுகிறது.

கடும் குளிர் பனிமலை தண்ணீர்!

செவ்வாயில் கடும் குளிரான பனி மலையை கரியமில வாயு குளிர்ந்து உறைந்து போர்த்திக் கொண்டிருக்கிறது. பனி உறைந்திருப்பதால் ஒரு காலத்தில் தண்ணீர் இருந்திருக்கலாமென்று நம்பப்படுகிறது. அங்கு 500 முதல் 1000 மீட்டருக்கு பனி உறைந்திருக்கிறது. பனி உருகத் தொடங்கினால் அங்கும் மனிதர்கள் வாழலாம் என்கிறது அறிவியல்.

அமெரிக்காவின் அரிசோனா மாநிலம் டஸ்கனில் உள்ள கோள் அறிவியல் மய்யத்தைச் சேர்ந்த விஞ்ஞானி மேரி புர்க் 7.9.2005 ல் இங்கிலாந்து சென்றிருந்த போது செவ்வாய் கோளில் மணல் மேடுகளுக்கு அடியில் பனிக்கட்டிகள் இருக்கின்றன.இதில் 50 சதவிகித தண்ணீர் இருக்கிறது. இதன் மூலம் மனித இனம் செவ்வாய் கோளில் வாழ முடியும். மிகப்பெரிய மணல்மேடு 475 மீட்டர் உயரமும் 6.5 மீட்டர் அகல மும் உள்ளது. இந்தமணல்மேடு ஒரு லட்சம் ஆண்டிற்கு முன் உருவானவை என்று கூறியிருக்கிறார்.

செவ்வாயின் வடபகுதி மேடாகவும், கெட்டியாகவும் தென்பகுதி தாழ்வாகவும் இளகிய தன்மை கொண்டதாகவும் இருப்பதாக நாசா ஆய்வு கூறுகிறது.

தமிழ்மொழிக்கு இடமில்லை!

செவ்வாய்க்கு அனுப்பி வைத்த ஸ்பிரிட் ஆய்வுக்கலத்தில் பூமியிலுள்ள மக்கள் சார்பில் 17 மொழிகளில் செய்து அனுப்பி வைத்தனர்.

உலக அமைதிக்காக புவி மக்கள் அனுப்பிய விண் ஆய்வுக்கலம் இது. வருங்காலம் பற்றி அறிந்திட அனுப்பப்பட்டது. பயணம் பத்திரமாக அமையட்டும். புதுமை கண்ட உற்சாகம் பொங்கட்டும். இவ்விதம் ஸ்பிரிட் ஆய்வுக் கலத்தில் செய்தியை அனுப்பியுள்ளனர். இந்தச் செய்தியனுப்பிய 17 மொழிகளில் செம்மொழி நம்தமிழ் இடம்பெறவில்லையே என்கிற வேதனை நமக்கு இருக்கத்தான் செய்கிறது.

ஆனாலும் தமிழர்களின் பண்பாட்டை விளக்கும் பொங்கல் விழாவை நினைவு கொள்ளும் விதமாக செவ்வாயில் உள்ள ஒரு பாறைக்கு பொங்கல் என்று பெயர் சூட்டியுள்ளனர்.

செவ்வாய் பற்றிய இவ்வளவு ஆய்வுக்குப் பிறகும், கிடைத்துள்ள அறிவியல் ஆதாரங்களுக்குப் பிறகும் சோதிடத்தை நம்புகிறவர்களுக்கு தெளிவான அறிவியல் சிந்தனை ஏற்பட்டிருக்கக் கூடும்.

சோதிடர்கள் செவ்வாய் தோஷம் என்று கூறி இன்னும் எவ்வளவு காலத்திற்கு ஏமாற்றிக் கொண்டிருக்கப் போகிறார்கள். இதற்குப் பிறகும் செவ்வாய் தோஷம் என்று நம்புகிறவர்களை அப்பாவிகள் என்பதா அறிவற்றவர்கள் என்பதாவென்று தெரியவில்லை.


22.6.2008 இல் செவ்வாய் பற்றிய புதிய செய்தி கிடைத்துள்ளது. செவ்வாயில் பனிக்கட்டிகள் இருப்பதாக பீனிக்ஸ் விண்கலம் கண்டுபிடித்துள்ளது. 42 கோடி டாலர் செலவில் தயாரிக்கப்பட் டது. பீனிக்ஸ் விண்கலம். செவ்வாயில் 3 இடங்களில் தோண்டிப் பார்த்த போது மண்ணுக்கு அடியில் வெள்ளை நிற பனிக்கட்டிகள் இருப்பதை விண்கலம் படமெடுத்து அனுப்பியுள்ளது. அதை ஆய்வு செய்த போது செவ்வாயின் மண்ணுக்கடியில் தண்ணீர் உறைந்து இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.


-------------------நன்றி:-"விடுதலை"

2 comments:

Unknown said...

//செவ்வாய் பற்றிய இவ்வளவு ஆய்வுக்குப் பிறகும், கிடைத்துள்ள அறிவியல் ஆதாரங்களுக்குப் பிறகும் சோதிடத்தை நம்புகிறவர்களுக்கு தெளிவான அறிவியல் சிந்தனை ஏற்பட்டிருக்கக் கூடும்.

சோதிடர்கள் செவ்வாய் தோஷம் என்று கூறி இன்னும் எவ்வளவு காலத்திற்கு ஏமாற்றிக் கொண்டிருக்கப் போகிறார்கள். இதற்குப் பிறகும் செவ்வாய் தோஷம் என்று நம்புகிறவர்களை அப்பாவிகள் என்பதா அறிவற்றவர்கள் என்பதாவென்று தெரியவில்லை.//

பயத்தை விட்டொழித்தாலே இந்த மூடநம்பிக்கைகள் ஒழிந்து போகும்

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி