Search This Blog

24.5.09

பெரியாரை விடுதலை செய்யக்கோரி பார்ப்பனர்கள் வேண்டுகோள் விட்டது ஏன்?




வகுப்புத் துவேஷத்தை நாட்டிலே பரப்புகிறேன் என்பதற்கு ஆக சர்க்காரால் தண்டனை விதிக்கப் பட்டு விடுதலை செய்யப்பட்ட பிறகு வந்த என்னை நீங்கள் மிக ஆடம்பரமாக வரவேற்றீர்கள். அதற்கு ஆக நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். உங்களுக்கு என் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

சாதாரணமாக ஒரு பழமொழி சொல்லுவார்கள். அதாவது ஒருவன் எவ்வளவு பெரிய மகானாயிருந்தாலும், தீர்க்கதரிசியாக இருந்தாலும், அல்லது கடவுளையே அடிக்கடி அழைத் துப் பேசிக் கொண்டிருக்கிறவனாயிருந்தாலும் அவர்களுக்கெல்லாம் வெளியிடங்களில்தான் மதிப்பும் செல்வாக்கும், புகழும் இருக்குமே தவிர, அவனுடைய சொந்த ஊரில் அவனுக்குப் பெருமை இருக்காது என்று கூறுவார்கள். ஆனால் சாதாரண மனிதனாகிய எனக்கு என்னு டைய சொந்த ஊராகிய இங்கே அளித்த வரவேற்பைப் பார்க்கும்போது என்னைப் பொறுத்து அல்லாமல் வேறு காரணம் இருக்க வேண்டும். அது இன்றைய நிலைமை மீது உங்களுக்கு இருக்கும் வெறுப்பே காரணமாக இருக்கலாம்

என் உயிர்

இந்த ஆடம்பரமான வரவேற்பிற்கு சாக்கு, சிறையிலிருந்து நான் விடுதலை பெற்றதற்காக என்று இருந்தபோதிலும், இதனுடைய உண்மையான பெயர் என்னவென்றால் மறுபடியும் என்னை சிறைக்கு அனுப்பும் உபசாரம் என்றுதான் சொல்லவேண்டும். ஏன் அந்தப்படி சொல்லுகிறேன் என்றால், எந்தக் காரணத்துக்காக என்று நான் தண்டிக்கப்பட்டுத்தான் ஆகவேண்டும், இல்லாவிட்டால் நிலைமை மோசமாகப் போய்விடும் என்று கருதப்பட்டு தண்டிக்கப்பட்டேனோ, அந்தக் காரியத்தையே அதாவது சர்க்கார் இன்று எதை வகுப் புத்துவேஷமான காரியம் என்று கருதுகிறார்களோ, அதாவது பகுத்தறிவுப் பிரசாரத்தையே தான் நான் இனிமேலும் திருப்பிச் செய்யப்போகிறேன். அதுதான் என் லட்சியம். இன்றைய தினம் நான் சொல்லி வருகின்ற கொள்கைகள்தான் என்னுடைய உயிர்.இந்தக் கொள்கை களையும், கருத்துக்களையும், மக்களுக்கு எடுத்துச் சொல்லாமல் என்னால் வாழ முடியாது.

ஆகவே நான் இந்தக் கொள்கைகளைத்தான், அதாவது எந்தக் கொள்கைகளைச் சொன்னதற்கு ஆக சர்க்கார் என்னைத் தண்டித்தார்களோ, அதே கொள்கைகளைத் தான் திருப்பித் திருப்பிக் கூறி மக்களைத் திருத்தும் பணியில் ஈடுபடுவேன். அந்த மாதிரியான காரியங்களைச் செய்வ தற்கு, உங்களது உணர்ச்சியும், நீங்கள் அளித்த வரவேற்பும் எனக்கு மேலும் ஊக்கத்தைக் கொடுக்கக் கூடியதாய் இருக்கிறது.

பாராட்டப்பட வேண்டியவர்கள்

நான் ஆறுமாதம் தண்டிக்கப்பட்டிருந்தாலும் பத்தே நாளில் விடுதலையடைந்தேன். அப்படி விடுதலையடைவதற்கு யாரையாவது பாராட்ட வேண்டுமென்றால் உங்களைத்தான் பாராட்ட வேண்டும். ஏனென்றால் உங்களது கிளர்ச்சியின் காரணமாகத்தான், அதாவது நான் சிறையிலே இருக்கும்போது மக்கள் செய்த கிளர்ச்சியின் காரணமாகத்தான். என்னைச் சிறையில் வைத்திருந்தால் வெளியில் கிளர்ச்சி நடந்து கொண்டுதான் இருக்கும் என்று சர்க் கார் கருதி, நீங்கள் செய்த கிளர்ச்சியின் காரணமாய் என்னை விடுதலை செய்தார்கள் என்பதை நான் வெளியில் வந்து உணர்ந்தேன்.

இது சாதாரணமானது அல்ல. 30 வருஷமான தமிழ்நாட்டின் அரசியல் பொதுவாழ்வு பற்றி எனக்கு நன்றாகத் தெரியும். எந்தக் காலத்திலும், எப்போதும், எந்தத் தலைவருக்கும் இது மாதிரி அதாவது மக்கள் செய்த கிளர்ச்சியினால் சிறையிலிருந்து விடுதலை கிடைத்தது இல்லை. ஏன் இந்தியாவிலேயே இதுவரைக்கும் யாருக்கும் இப்பேர்ப்பட்ட மாதிரி யில் விடுதலை கிடைத்தது இல்லை.

காந்தியார் விடுதலைக்குக் காரணங்கள்

உலகத்திலே மிகவும் செல்வாக்கு பெற்றவர் என்றும் மகாத்மா, மகான் என்றும் விளம் பரப்படுத்தப்பட்ட காந்தியாருக்குக் கூட இந்த மாதிரியாக நடந்ததில்லை. காந்தியாரை சிறைத் தண்டனை காலத்துக்கு முன்னதாக ஒரு முறை காயலா என்று விடுதலை செய்தார்கள். மற்றொரு முறை அதாவது ஒத்துழையாமை இயக்கத்தின் போது இனி மேல் அந்த மாதிரியான செயல்களைச் செய்வதில்லை என்ற ஒப்பந்தத்தின் மீது விடுதலை செய்தார்கள்.

அவர்கள் கிளர்ச்சி!

மற்றொரு முறை அதாவது ஆகஸ்ட் கலவரத்தின் போது எதற்கு ஆக அவரைச் சிறைப்படுத்தி வைத்தார்களோ, அந்தக் காரியம் முடிந்தபின் வெளியில் விட்டார்கள். காங்கிரஸ்காரர்களும், காந்தியாரும் சிறைக்குப் போனவுடன் வெளியிலே எவ்வளவு கிளர்ச்சி நடந்தது? எத்தனை தண்டவாளங்கள் அகற்றப்பட் டன! எத்தனை தந்திக் கம்பிகள் அறுக்கப்பட்டன! எத்தனை போஸ்டா பீஸ்கள் கொளுத்தப்பட்டன! எவ்வளவு செய்தும் காந்தியாரையும், மற்ற காங்கிரஸ்காரர்களையும் கிளர்ச்சிக்கு ஆக விடுதலை செய்ய முடிய வில்லையே!

ஆனால் நான் சிறைக்குப் போனவுடன்தான் வெளியிலே மக்கள் கிளர்ச்சி செய்தார்கள். அவர்கள் தந்திக் கம்பிகளை அறுத்தோ, தண்ட வாளங்களைப் பெயர்த்தோ, தபாலாபீசைக் கொளுத்தியோ கிளர்ச்சி செய்யவில்லை. பலாத்காரத்திற்கு கடுகளவு இடம் கூட இல்லாமல் மிக அமைதி யான முறையில் வெளிப்படையாக, சட்டத்தை மீறப்போகிறோம் என்று சர்க்காருக்கு தெரிவித்தே கிளர்ச்சி செய்தார்கள்.
மக்களின் இந்த அமைதியான கிளர்ச்சியைக் கண்டுதான் இன்னமும் என்னை உள்ளே வைத்துக் கொண்டிருந்தால் கிளர்ச்சி உச்ச நிலைக்குப் போய்விடும் என்று கருதி விடுதலை செய்தார்கள்.


பார்ப்பனர்கள் வேண்டுகோள்!

என்னை விடுதலை செய்யும்படி பார்ப்பனர்களும், சட்டசபை மெம்பர்களும், சர்க்காருக்கு வேண்டுகோள் விட்டார்களாம். ஆனால் இவர்களேதான் என்னைச் சிறைக்கு அனுப்புவதற்கு மூலகாரணமாய் இருந்தவர்கள். பின் எதற்காக விடுதலை செய்யும்படி கேட்டுக் கொண்டார் கள் என்றால், நான் உள்ளே இருக்க இருக்க இங்கு அதிகமாகத் தங்களுக்குப் பாதகமான காரியங்கள் அதாவது கழகக் கொள்கைகள் அதிகமாகப் பரவுகிறது என்பதைக் கண்டு கலங்கித்தான் என்னை விடுதலை செய்யவேண்டும் என்று அவர்களாகவே மனுப்போட வேண்டி வந்திருக்கும்.

நான் சிறைக்குள் போனவுடன் தமிழ்நாட்டில் மிகச் செல்வாக்குப் பெற்ற சர்க்காரையே ஆட்டி வைப்பன என்று சொல்லத் தக்க மாதிரியில் இருக்கின்ற இந்து சுதேசமித்திரன் போன்ற பத்திரிகைகள் கொளுத்தப்பட்டன. அந்த பத்திரிகையெல்லாம் பகிஷ்காரம் செய்யத்தக்க அளவுக்கு மக்கள் உணர்ச்சி பெற்றார்கள். இதைக் கண்டு அந்தப் பத்திகைகள் மிகவும் பயந்து போயின போல் தெரிகிறது. சென்னையில் எனக்குக் கிடைத்த ரகசியமான செய்தியின்படி இந்து மித்திரன் பத்திரிகையாசிரியர்களும், சட்டசபை மெம்பர்களும், போலீஸ் அதிகாரி களும் என்னை விடுதலை செய்தால்தான் நிலைமையைச் சமாளிக்க முடியும் என்று கூறியதன் பேரில்தான் நான் விடுதலை செய்யப்பட்டதாகத் தகவல் கிடைத்திருக்கிறது. உடனே மந்திரி சபை 3 மணிக்குக் கூடி 3.15 மணிக்கு என்னை விடுதலை செய்துவிடலாம் என்று முடிவு செய்து 4 மணிக்கெல்லாம் ஜெயிலுக்குத் தந்தியடித்து வி
ட்டார்கள்.

சர்க்கார் அறிக்கை


அந்தப்படி நான் வெளியில் இருப்பதை விட சிறைக்குள் அடைத்து வைத்திருப்பதனால் தங்களது நிலைமை மோசமாகப் போய்விடும் என்று என்னை விடுதலை செய்கிற சர்க்கார் என்னை விடுதலை செய்யும்படி வெளியிட்ட அறிக்கையில் மிக வீம்பாக பேசியிருக்கிறார்கள். அதாவது நான் செய்தது குற்றம் குற்றமே தான். அதற்கு ஆக தண்டிக்கப்பட வேண்டியது மிகவும் அவசியம்தான். இந்த மாதிரியான பிரசாரங்களை வளர விட்டுக் கொண்டிருப்பது கூடாது என்று மிகுந்த காரசாரமாக முன்பகுதியில் கூறிவிட்டு, என்றாலும் இவரை விடுதலை செய்கிறோம் என்று கடைசியில் முடித்திருக்கிறார்கள். சாதாரணமாக சர்க்கார் அறிக்கையின் முன்பகுதியை யாராவது படித்துப் பார்த்தால், இந்த மாதிரியான காரியம் செய்ததற்கு ஆறு மாதம் தண்டனை விதிக்க வேண்டும். ஆதலால் அதற்கு சர்க்கார் அப்பீல் செய்ய வேண்டும் என்று தான் முடிப்பார்கள் என்று சொல்லுவார்கள். அவ்வளவு வேகமாக அறிக்கையின் முன் பகுதியில் சொல்லிவிட்டு, கடைசியில் என்றாலும் என்றால் என்ன அர்த்தம்? எதற்கு விடுத்லை? உங்கள் கிளர்ச்சியால் என்னை விடுதலை செய்து தான் ஆக வேண்டும் என்ற நிலைமைக்கு சர்க்கார் வந்துவிட்டார்கள் என்றுதானே அர்த்தம்.

தோல்வி கண்டறியாத கிளர்ச்சி

தோழர்களே! நம்முடைய கிளர்ச்சி எதுவும் இது வரையிலே தோல்வியடைந்ததே யில்லை. ஏனென்றால் நாம் நியாயமான உரிமைகளுக்காக அமைதியான முறையில், சிறிதும் பலாத்காரம், கலவரமில்லாமல் போராடி வருகி றோம் என்பதனால்தான் நாம் எடுத்துக்கொண்ட எந்தக் காரியத்திலேயும் வெற்றியைத் தவிர தோல்வியே கண்டதில்லை.

கோவில் நுழைவுக் கிளர்ச்சி

ஆதியிலிருந்தே எடுத்துப் பாருங்கள்! நாம் எதிலாவது தோல்வி கண்டிருக்கிறோமா? தமிழ் நாட்டில் முதன் முதலாக இதே ஈரோட்டில்தான் சிவன் கோயிலில் ஆதிதிராவிட ஆலயப் பிர வேசம் நடத்தினோம். உள்ளே சென்றவர்களை வைத்து வெளியே பூட்டிவிட்டார்கள். கேஸ் நடத்தித் தண்டித்தார்கள். என்றாலும் முடிவில் அதிலேயும் நாம் வெற்றி கண்டோம்.

ரயில்வே உணவு விடுதி கிளர்ச்சி

அதற்கப்புறம் ரயில்வே உணவு விடுதிகளில் இருந்து வந்த பார்ப்பனர், பார்ப்பனரல்லாதார் சாப்பிடும் இடம் என்ற போர்டை எடுக்க வேண்டும் அந்த மாதிரியான பிரிவு கூடாது என்று கிளர்ச்சி செய்தோம். அதில் முதலாவதாக பார்ப்பனர்கள் சாப்பிடும் இடம் என்று போர்டு போட்டிருக்கிற இடத்திற்குப் போவதென்று முடிவு செய்யப் பட்டது. அந்தப்படி சென்றால் இன்னின்னவைகள் செய்வோம் என்று போலீசார் மிரட்டினார்கள். பத்திரிகைகளால் என்னைப் போல படம் போட்டு ஏணியையும், ஒரு தார் வள்ளத்தையும், ஒரு பிரஷையும் போட்டு நான் பார்ப்பனர் என்ற போர்டை அழிப்பது போலவும் கேலிச் சித்திரம் வரையப் பட்டது. இவ்வளவு காரியங்களும் நடந்ததற்கு ரயில்வே இலாகா சம்பந்தப்பட்டதில் தங்களுக்கு நேரடியாக அதிகாரம் கிடையாது என்றும், அது மத்திய சர்க்கார் அதிகாரத்துக்கு உட்பட்டது என்றும், மத்திய சர்க்கார் தெரிவித்தால் வேண்டுமானால் கவர்னரும் சிபாரிசு செய்வதாயும் அதுவரை நடவடிக்கை வேண்டாம் என்று கவர்னரின் செக்ரெட்டரியிடமிருந்து கடிதம் வந்தது. மத்திய சர்க்காருக்கு எழுதினோம். கவர்னரும் சிபாரிசு செய்தார். நமது காரியமும் வெற்றியாய் முடிந்தது.

கட்டாய இந்திக் கிளர்ச்சி!

அடுத்தபடி கட்டாய இந்தியை எடுத்துவிட வேண்டும் என்று கிளர்ச்சி செய்தோம். எவ்வளவோ அடக்குமுறை செய்தார்கள். 1500 தொண்டர்களை ஜெயிலில் போட்டு அடைத்தார்கள். என்னை 3 வருஷம் தண்டித்தார்கள். ரூ 2000 அபராதம் போட்டார்கள். நம் தொண்டர்களின் கைகால்களை முறித்தார்கள். இன்னும் பலப்பல தொல்லைகளைக் கொடுத்தார்கள். நாமும் சளைக்காமல் உறுதியாகப் போராடினோம். கடைசியில் எந்த மந்திரி கட்டாய இந்தித் திட்டத்தைப் புகுத்தினாரோ, அதே கல்வி மந்திரி மாதவமேனன் அவர்களே, நான் தவறு செய்து விட்டேன் என்று கூறி இத் திட்டத்தை வாபஸ் பெற்றுக்கொண்டார். இதி லேயும் நாம் மகத்தான வெற்றி கண்டோம்.

எப்படி முடிந்தது. இத்தனை வெற்றிபெற நம்மால்? நியாயமும், நீதியும், நேர்மையும் நம் பக்கத்தில் இருக்கிறதனால் தானே, அமைதியாக பலாத்காரமில்லாமல் நடந்ததால்தானே நாம் இவ்வளவு வெற்றிகளை, வெற்றிமேல் வெற்றியாக அடைந்து வருகிறோம்.

இப்போது நடக்கிற கிளர்ச்சி!

இப்பொழுது நடக்கிற ஓட்டல் கிளப்புகளில் பிராமணாள் என்ற வார்த்தையை எடுத்துவிட வேண்டும் என்கிற போராட்டம் மட்டுமென்ன? இந்த ஊரிலேயே எல்லா ஓட்டல்களிலும் பிராமணாள் என்ற வார்த்தை எடுபட்டுவிடவில்லையா? இதே போலத்தான் பல ஊர்களிலும் இந்தக் காரியத்தில் வெற்றி உண்டாகி யிருக்கிறது.

இதிலே கூட சில ஊர்களில் விஷமத்தனமும் நடைபெறுகிறது. பார்ப்பன அதிகாரிகள் இருக் கிற இடங்களில் நம்மவர்களுக்குப் பெரிதும் இடையூறு விளைவிப்பதாகவும் தகவல்கள் வருகின்றன. பார்ப்பன சப்-இன்ஸ்பெக்டர்களே சென்று பிராமணாள் என்ற வார்த்தையை எடுக்கக் கூடாது என்று சொல்லி, எடுத்துவிட்ட கடைகளில் மறுபடியும் போர்டு போடச் செய்தார்கள் என்று தெரிகிறது. அதைப் பற்றி நமக்குக் கவலையில்லை. இன்னும் சொல் லப்போனால் நம்முடைய வேலைக்கு இவ்வளவு மதிப்பு இருக்கிறதே என்று பெருமைப் படவேண்டும்.

கம்யூனல் ஜி.ஓ.

வகுப்புவாரி பிரதிநிதித்துவ திட்டத்தை ஜஸ்டிஸ் கட்சியார்கூட கைவிட்டு விட்டார்கள். வேறு கட்சி மந்திரிகளை வைத்து வகுப்புவாரி திட்டத்தைக் கொண்டு வரச் செய்தேன். அவர்களுக் குப் பின்னால் வந்த காங்கிரஸ்காரர்கள் கூட அதைக் கைவிடாமல் இருக்கிறார்கள். இன்று அதுவும், அதாவது வகுப்பு வாரிஉரிமையும், குடியரசு சட்டத்திற்கு விரோதமானது என்று தீர்ப்பு செய்யப்பட்டுவிட்டது. அதற்கு ஆகவும் இப்போது உடனடியாகப் போராடப் போகிறோம்.
அதனுடைய முடிவு என்னவாகும் தெரியுமா? இதுவரை இருந்த வந்த வகுப்புவாரி பிரதிநிதித் துவ உத்தரவின்படி 100-க்கு 3 பேராக உள்ள பார்ப்பனர்களுக்கு 100-க்கு 15 விகிதம் இருந்து வந்தது. இனி மேல் நாம் செய்யப் போகின்ற போராட்டத்தின் காரணமாக பார்ப்பனர்களுக்கு அவர்களின் ஜன எண்ணிக்கைக்குத் தக்கபடி அதாவது 100-க்கு 3 விகிதம்தான் கிடைக்கும். அந்த அளவுக்கு நாம் வெற்றி பெறப்போகிறோம். இந்த மாதிரியான உணர்ச்சி ஏற்படவேண்டும் என்பதற்கு ஆகத்தான் நமக்கு விரோதமான முறையில் அதாவது வகுப்புவாரி திட்டம் செல்லாது என்கிறதாக தீர்ப்பு ஆகியிருக்கிறது என்று கருதுகிறேன். இந்தத் தீர்ப்பு கொடுத்தவருக்கு நமது நன்றி உரியதாகும்.

காங்கிரசில் ஜஸ்டிஸ் கட்சி

ஜஸ்டிஸ் கட்சி அழிந்து விட்டதென்றும், ஜஸ்டிஸ் கட்சியை 500 அடி ஆழத்தில் புதைத்து விட்டதாகவும் கூறினார்கள். ஆனால் இன்றைய தினம் எந்த ஜஸ்டிஸ் கட்சியை அழித்துவிட்டதாக அவர்கள் ஆனந்தக் கூத்தாடினார்களோ அதே ஜஸ்டிஸ் கட்சி பெரும் அளவுக்கு வளர்ந்திருக்கிறது. நம்மைவிட ஜஸ்டிஸ் கட்சிக்கு எதிர்க்கட்சி என்று சொல்லப் படுகின்ற காங்கிரஸ் கட்சியிலே ஜஸ்டிஸ் கட்சி மிகுதியாய் வளர்ந்திருக்கிறது. பார்ப்பனர் அல் லாத, ஒவ்வொரு காங்கிரஸ்காரரும் இன்று ஜஸ்டிஸ் கட்சியாகத்தான் காட்சியளிக்கிறார். அந்த அளவுக்கு மக்களிடத்தில் அவர்கள் எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும் தம் இன உணர்ச்சி இருக்கிறது. வகுப்புத் துவேஷி என்று கார்டிலும், மற்றதிலும் அச்சே அடித்து வைத்துக் கொண்டார்கள். ரப்பர் ஸ்டாம்பு செய்து கொண்டார்கள். அந்த அளவுக்குப் பார்ப் பனிய எதிர்ப்புணர்ச்சி ஏற்பட்டிருக்கிறது.

ஆகவே பார்ப்பனர்கள் செய்கின்ற எந்தக் காரியமும் நமக்கு நன்மையாகவே முடிகின்ற தோடு நாம் செய்து வருகின்ற காரியங்களுக்கு மேலும் ஊக்கமளிப்ப வையாகவே இருந்து வருகின்றது.

----------------15.10.1950 அன்று ஈரோடு டவுன் ஸ்கூல் மைதானத்தில் தந்தை பெரியார் அவர்களுக்கு அளிக்கப்பட்ட வரவேற்பிற்கு பதில் கூறும் முறையில் பெரியார் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு- விடுதலை, 20.10.1950

2 comments:

Unknown said...

பெரியார் அய்யாவின் உரையைப் படிக்கும் போது வீரம் கொப்பளிக்கிறது. வரலாற்றை மாற்றி அமைத்து மனிதநேயத்தை மலரச் செய்துள்ளார் பெரியார்.

செல்வன் said...

"பிரபாகரன் ஒரு பகுத்தறிவாளரின் கேள்விகள்" என்று அபந்தமாக புலிகளுக்கு சார்பாக எழுதிவந்தீர்கள்.
புலிகளே தங்கள் பொய்யை ஒப்புக்கொண்டு விட்டனர்.
http://news.bbc.co.uk/2/hi/south_asia/8066129.stm
இனிமேலாவது புலிகளை பற்றி எழுதும் போது பகுத்தறிவை பாவிக்கவும்.