Search This Blog

23.4.09

பிரபாகரன் தீவிரவாதியா?




நாளை எதிர்பாராத முடிவு வரும். தமிழ் மக்களே அதற்குத் தயாராகுங்கள் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் அறை கூவல் விடுத்துப் பேசினார்.

நேற்று (21.4.2009) சென்னை பெரியார் திடலில் - ஈழத்தில் முழுப் போர் நிறுத்தம் கோரி நடைபெற்ற சிறப்புப் பொதுக்கூட்டத்தில் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் ஆற்றிய உரை வருமாறு:-

சரியான நேரத்தில் அவசரக் கூட்டம்

சரியான நேரத்திலே, சரியானவர்களை வைத்து சரியான கருத்துகளை சமுதாயத்திற்கு கொண்டு செல்லவேண்டும் என்பதற்காக சரித்திரத்திலே இடம்பெறக் கூடிய அளவுக்கு ஒரு கூட்டத்தை அவசரமாக நாம் இங்கே கூட்டியிருக்கின்றோம்.

சகோதரர் தொல். திருமாவளவன் அவர்களும், சுப. வீரபாண்டியன் அவர்களும் இங்கே தீட்டிய ஓவியத்தை நான் கலைக்க விரும்பவில்லை. தமிழர்கள் கண்களிலே கண்ணீர் வரவேண்டிய அவசியமில்லை. நெருப்புப் பொறி பறக்கக் கூடிய அந்த உணர்வோடு நாம் கூடியிருக்கின்றோம்.

இன்று காலையிலிருந்தே என்னுடைய உள்ளம் பதறிப் போய் இருக்கிறது. குருதி ஓட்டத்தில் வெப்பம் அதிகரித்திருக்கிறது.

நாம் தமிழர்களாகப் பிறந்ததுதான் குற்றமா? அவர்களுக்கு வாழ உரிமை இல்லையா? தமிழினம் நாதியற்றுப் போய் விட்டதா? கிடையாது.

ஈழத் தமிழர்களின் இன்னல்களை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். நாம் அழக் கூடாது. அழுகிறவர் களுக்கு ஆறுதல் சொல்லக்கூடிய நிலையிலே நாம் இருக்கிறோம். அவர்களுக்கு ஆறுதலைத் தரக் கூடிய நிலையிலே நாம் இருக்கின்றோம்.

இலங்கையிலே ஈழத்திலே எம் தமிழர்கள் சொல்லொணாத கொடுமைக்கு ஆளாகியிருக்கின்றார்கள். சிங்கள இன வெறிக் கொடூரத் தாக்குதலால் பெண்கள், குழந்தைகள் மூச்சுத் திணறி பரிதாபமாக பதுங்கு குழியிலே சமாதி ஆகியிருக்கின்றார்கள். எங்கு பார்த்தாலும் பிணங்கள். 1500-க்கும் மேற்பட்ட தமி ழர்கள் பலியாகியிருக்கிறார்கள். மூவாயிரம் பேர் காயமடைந்திருக்கிறார்கள். ராஜபக்சே கெடு வைக்கிறான். தமிழர்களை அழித்திடுவேன் என்று கெடு வைக்கிறான்.

ஹிரோஷிமாவை விட விஷ வாயு குண்டுகள் வீச்சு

ஹிரோஷிமா, நாகசாகியில் போடப்பட்ட விஷ வாயு குண்டுகளை விட, ஆயிரம் ஆயிரம் மடங்கு அதைவிட கொடுமையான விஷ வாயு குண்டுகளை நாப்பாம் மற்றும் பாஸ்பரஸ் குண்டுகளை - ஹிட்லரை விட கொடுமையான சிங்கள ராஜபக்சேவின் இராணுவம் தமிழர்கள்மீது வீசி தமிழினப் படு கொலையை நடத்தியிருக்கிறது - நடத்திக் கொண்டு வருகின்றது.

சீனத்திலேயிருந்து பெறப்பட்ட, ரஷ்யாவிலிருந்து பெறப்பட்ட, பாகிஸ்தானிலேயிருந்து பெறப்பட்ட ஏன்? இந்தியாவிலிருந்து பெறப் பட்ட எரியும் விஷ வாயுவுடன் கூடிய நெருப்புக் குண்டுகளை அப்பாவித் தமிழர்கள்மீது வீசி தமி ழினத்தை அழித்து வருகிறார்கள்.

தமிழினம் அழிக்கப் பட்டு வருகிறது. நம்முடைய முதல்வர் அவர்கள் தொடர்ந்து மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்துக் கொண்டு வருகின்றார்கள்.

வேடந்தாங்கலுக்கு வருகின்ற பறவைகளை யாராவது வேட்டையாடியதுண்டா?

நாம் கருமத்திற்கு உரியவர்கள். கடைசிவரையிலே இருக்கக் கூடியவர்கள். தேர்தல் வரலாம், போகலாம்.

இன்றைக்கு நடை பெறுவது ஒரு இனப் போராட்டம். இராமாயண காலத்திலிருந்து இன்றைக்கு கலைஞர் அவர்களுடைய காலம் வரை விபீஷணர்களின் படலம் தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது. சரித்திரத்தைப் புரட்டிப் பார்த்தால் தெரியும்.

கலைஞர் சொன்னது தேசக் குற்றமா?

முதலமைச்சர் கலைஞர் அவர்கள் பிரபாகரனை நண்பர் என்று சொன்னார். அது என்ன பெரிய தேசக் குற்றமா? (பலத்த கைதட்டல்). ஜெயலலிதாக்களின் வாயிலிருந்து வேண்டுமானால் வராது. காரணம், அவர் நம்மின மில்லை. கலைஞர் அவர்களின் வாயிலிருந்து அதைத் தவிர வேறு வராமல் இருக்குமா? (கைதட்டல்).

கலைஞர் அவர்கள் ஈழத் தமிழர்களுக்காக இரண்டு முறை ஆட்சியையே இழந்தவர். நாளைக்கும் ஆட்சியை இழக்கத் தயங்காதவர்.

நாங்கள் குறுக்கே நிற்கின்ற காரணத்தால்...

எங்களைப் போன்றவர்கள் அதற்கு குறுக்கே நின்று அணை போட்ட காரணத்தால்தான் அமைதி காத்து வருகின்றார். இந்த ஆட்சியை பாதுகாக்க வேண்டும். இருக்கின்ற இந்த ஆட்சியை இழந்துவிட்டு என்ன செய்ய முடியும்?

எங்களுக்கு மனத் தடங்கள் இருக்கின்றன. ஆனால், சிலரோ இடந் தேடிகளாக அலைகிறார்கள். மூன்று எழுத்து இருக்கிறது என்று சகோதரர் தொல். திருமாவள வன் அவர்கள் கூட இங்கே சொன்னார். நான் கூட எந்த மூன்றெழுத்தை சொல்கிறார் என்று நினைத்தேன். நமது கூட்டத்தில் பார்வையாளர்கள் வரிசையிலிருந்து மானம் என்று பதில் வந்தது (கைதட்டல்). மானம் என்று இருக்கலாம். ஏன் பதவி என்றிருக்கலாம். பணம் என்று இருக்கலாம். கூட்டு என்பதும் மூன்றெழுத்து ஓட்டு என்பதும் மூன் றெழுத்துதான்.

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் தீவிரவாதி என்று முதலமைச்சர் கலைஞர் அவர்களிடத்திலே ஒரு சிக்கலான கேள்வியைக் கேட்டு, அவரை சங்கடத்தில் சிக்க வைத்து - கூட்டணியை எப்படியாவது உடைக்கவேண் டும் என்ற எண்ணத்தில் அந்தத் தொலைக்காட்சி (என்.டி.டி.வி.) ஈடுபட்டிருக்கிறது.

கலைஞர் அவர்கள் தெளிவாகச் சொன்னார். பிரபாகரன் தீவிரவாதியாகப் பிறக்கவில்லை. தீவிரவாதியாக தள்ளப் பட்டிருக்கிறார் என்று சொன்னார்.

முதலமைச்சர் கலைஞர் அவர்களுக்குப் பொறுப்பு இருக்கிறது. எதையும் பொறுப்போடு, ஒவ்வொரு சொல் லையும் அளந்து பேசக் கூடியவர்.

திசை நோக்கித் தண்டனிடுவோம்

பிரபாகரன் தீவிர வாதியாக இருந்தால் உனக்கென்ன? (பலத்த கைதட்டல்). அந்தத் தீவிரவாதி இருக்கின்ற திசை நோக்கி தண்டனிடுவதற்கு நாங்கள் தயார்! தயார்!! (பலத்த கைதட் டல்).

பகவத்சிங் யாரய்யா? அவர் என்ன பூ போட்டு பூஜை செய்தவரா?

1931 மார்ச் மாதம் 29 ஆம் தேதி தந்தை பெரியார் அவர்கள் பகத்சிங்கின் துணிச்சலைப் பாராட்டி தலையங்கம் எழுதியிருக்கின்றார். பகவத்சிங் - அவன் தன் கொள்கைக்காக உயிர் விட்டான். பகத்சிங் தன்னுடைய உயிரை விட்டு மறைய நேர்ந்தது பகத் சிங்கிற்கு மெத்த சாந்தி நன்மையே என்றும் கருது கின்றோம். அந்தப் பேற்றை நாம் அடைய முடியவில்லை என்று தான் கவலைப்படுகின்றோம் என்று பெரியார் சொல்கின்றார். அவன் தான் உண்மையான கொள்கைக்காரன் என்று தந்தை பெரியார் பாராட்டி எழுதியிருக்கின்றார்.

அந்த உணர்வைத் தமிழர்கள் பெறவேண்டு மென்று எழுதியிருக்கின்றார்.

வெள்ளைக்காரர் ஆஷ் துரையை சுட்ட வாஞ்சிநாதன் பெயரில் மணியாச்சி ரயில் நிலையத்திற்கு வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையம் என்று நீங்கள் பெயர் சூட்டியிருக்கிறீர்கள்.

தனி இராணுவத்தையே வைத்து நடத்தியவர்தான் சுபாஷ் சந்திரபோஷ். இதெல்லாம் பின்னால் வரும். நாளைக்கு இதே கதை திரும்பும்.

கலைஞர் அவர்களிடம் பேசினேன்

நமக்குத் தேர்தல் முக்கியமல்ல. முழுமையான போர் நிறுத்தம் இலங்கையிலே வந்தாக வேண் டும்.

அதேநேரத்திலே ஓட்டுகளை எதிரிகளின் கைகளில் ஒப்படைத்து விடக்கூடாது. நாம் நம் இனத்தைக் காப்பாற்றியாக வேண்டும். சூழ் நிலை மோசமாக இருக்கிறது. இன்று மாலை கலைஞர் அவர்களிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினேன். சோனியா காந்தி அவர்களைத் தொடர்பு கொள்ள முயற்சித்தேன். அவர் தேர்தல் இறுதி கட்டப் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கின்றார். ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்குச் சென்று கொண்டேயிருக்கிறார். சரியாகத் தொடர்பு கொள்ள முடியவில்லை. எப்படியும் இன்று இரவு அவரிடம் பேசி கடுமையான அழுத்தத்தைக் கொடுக்க இருக்கிறேன் என்று கலைஞர் அவர்கள் சொன்னார்.

இது ஓட்டுக்காக - சில சீட்டுகளுக்காக இருக்கின்ற அணி அல்ல.

ஈழத்தமிழர்களு டைய வாழ்வுரிமைக்காகப் போராடக் கூடியவர்கள் நாம்.

நாளை ஒரு எதிர்பாராத முடிவு

நாளையோ, நாளை மறுநாளோ ஒரு எதிர் பாராத முடிவு வரும். தமிழ் மக்கள் அதை எதிர்பாருங்கள். தமிழ் மக்கள் அதற்குத் தயாராக இருங்கள் (பலத்த கைதட்டல்).

சிலருக்கு வாக்குப் பெட்டிகள் மூலதனம். நமக்கோ வாக்குகள் மூலதனம்.

தேர்தல் முடிந்த பிற்பாடும் நாங்கள் ஒன்றாக இருப்போம். ஈழப் பிரச்சினையைப்பற்றி பேசு வோம்.

சிலருக்கு ஈழம் 11 ஆம் தேதியோடு முடிந்து போகும்.

சிலருக்கு 11 ஆம் தேதியோடு ஓட்டுக்காக ஈழப் பிரச்சினை முடிந்துவிடும்.

தமிழ் ஈழம் என்பது ஒரு நபரைப் பொறுத்தது அல்ல. மீண்டும் தமிழ் ஈழம் தீவிரமாக வரப்போகிறது.

பல பத்தாண்டுகளுக்கு முன்பாக மதுரையிலே தமிழ் ஈழ விடுதலை மாநாட்டை திராவிடர் கழகம் நடத்தியிருக்கிறது.

புறநானூற்றைப் படிக் கிறோம். அதைவிட ஆயிரம் மடங்கு வீரர்கள் ஈழத் தமிழர்கள். பிரபாகரன் தீவிரவாதி அல்ல - அவன் ஒரு சுதந்திரப் போர் வீரன்.

நெல்சன் மண்டேலா மதிக்கப்பட்டதுபோல...

27 ஆண்டுகாலம் தீவிரவாதி என்று சிறையில் அடைக்கப்பட்ட நெல்சன் மண்டேலா இன் றைக்கு எப்படி மதிக்கப் படுகிறார்.

நாங்கள் கொள்கைக்காக தமிழினத்தினுடைய நல் வாழ்விற்காக, இலட்சியத்திற்காக இருக்கக் கூடியவர்கள்.

நாங்கள் இடந்தேடிகள் அல்ல; மடந்தேடிகள் அல்ல. விடுதலை விரும்பிகள்.

- இவ்வாறு பேசினார் தமிழர் தலைவர்.

-------------------"விடுதலை" 22-4-2009

4 comments:

Asfar said...

"பிரபாகரன் தீவிரவாதியா?"
if we know past history of srilanka, no need to think that heading. Don't misunderstand me. just if you stay srilanka, you can understand very well what held/happend to tamils and muslim people..
anyhow i also deeply sad about this critical, and againt the Mahinda Rajapaksa action, Just pray with Allah for say those people because we faced same problem before by LTTE at Jaffna..
www.asfarm.20m.com

தமிழ் ஓவியா said...

தமிழில் பின்னூட்டம் இட வெண்டுகிறேன்

Unknown said...

//27 ஆண்டுகாலம் தீவிரவாதி என்று சிறையில் அடைக்கப்பட்ட நெல்சன் மண்டேலா இன்றைக்கு எப்படி மதிக்கப் படுகிறார்.//

காட்டிக் கொடுக்கும் கயவர்கள் ஏராளமாக இருக்கும் போது இங்கு அப்படி ஒரு நிலமை வருமா?

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி திருநாவு