நிவாரணப் பணிகள்
கடும்யுத்தத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள இலட்சக்கணக்கான ஈழத் தமிழர் குடும்பங்களுக்கு நிவாரண உதவிகள் மிகவும் அதிகமாகத் தேவைப்படும் காலகட்டம் இது.
பாதிக்கப்பட்டுள்ள ஈழத் தமிழ் மக்களை ஒளிப்படங்களிலும், தொலைக்காட்சிகளிலும் பார்க்கும்போது பஞ்சத்தில் அடிபட்ட சோமாலியா நாட்டு மக்களைப் பார்ப்பதுபோல இருக்கிறது; நெஞ்சமெல்லாம் கனக்கிறது.
இந்த நேரத்தில் அவர்கள் புதுவாழ்வு பெற, நலவாழ்வு மேற்கொள்ள பல்வேறு உதவிகள் தேவைப்படுகின்றன.
தமிழ்நாடு அரசின் சார்பில் முதல் கட்டமாக 80 ஆயிரம் குடும்பங்களுக்குத் தேவைப்படும் அரிசி, பருப்பு, சர்க்கரை, தேயிலை, சோப்பு, பற்பசை மற்றும் துணி வகைகள் (ரூபாய் 10 கோடியே 6 இலட்சம் மதிப்புடை யவை) கப்பல்கள் மூலமாக இலங்கைத் தூதரகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன (13.11.2008). பன்னாட்டு செஞ்சிலுவைச் சங்கத்தின்மூலம் பாதிக்கப்பட்ட ஈழத் தமிழர்களுக்கு அளிக்கப்பட்டன.
இரண்டாம் கட்டமாக 40 ஆயிரம் ஈழத் தமிழர்களின் குடும்பங்களுக்குப் பயன்பெறும் வகையில் உணவுப் பொருள்கள், துணிகள், சமையல் பாத்திரங்கள் (ரூபாய் ஆறு கோடியே 40 லட்சம் மதிப்பு) இந்தியத் தூதரகத்திற்குக் கப்பல்கள் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டன (22.4.2009). தற்காலிகமாக முகாம்களில் தங்கியுள்ள தமிழ்க் குடும்பங்களுக்கு பன்னாட்டு செஞ்சிலுவை சங்கங்கள்மூலம் விநியோகிக்கப்பட உள்ளன.
மூன்றாம் கட்டமாக தற்காலிக முகாம்களுக்குக் கூடுதலாக வந்து சேர்ந்துள்ள தமிழர்கள் பயனடையும் வண்ணம் மேற்கண்ட பொருள்கள் (ரூ.7 கோடியே 50 ஆயிரம் மதிப்புடையவை) அனுப்பி வைக்க தமிழ்நாடு அரசு ஏற்பாடுகளைச் செய்து வருகிறது.
குடிநீரைச் சுத்திகரிக்கும் வில்லைகள், குழந்தைகளுக்குப் பயன்படும் உணவுப் பொருள்கள் (10 ஆயிரம் கிலோ எடை) மே 5 ஆம் தேதிக்குள் அனுப்பப்பட உள்ளன.
ஈழத் தமிழர்களுக்காக தமிழ்நாடு அரசால் திரட்டப்பட்ட நிதியிலிருந்து எஞ்சிய தொகை ரூ.25 கோடி நிதி உதவி செய்யப்பட உள்ளது. இந்திய அரசும் தன் பங்குக்கு ரூபாய் 100 கோடி வழங்கிடவுள்ளது.
இது அல்லாமல், அய்.நா. மூலமாகவும் உதவிகள் வழங்கப்படுகின்றன. இன்னும் தேவையான அளவுக்கு உதவிகளை மனிதநேயத்துடன் உலகின் பல்வேறு நாடுகளும் வழங்கிட வேண்டியது மிகவும் அவசியமாகும்.
1983 ஆம் ஆண்டுமுதல் ஈழத் தமிழர்கள் தங்கள் நல்வாழ்வை முழுவதுமாகத் தொலைக்கக் கூடிய ஒரு அராஜக இருளில் தள்ளப்பட்டனர்.
இடைக்காலத்தில் ரனில் விக்கரமசிங்கே பிரதமராக இருந்த ஒரு காலகட்டத்தில் போர் மேகம் கொஞ்சம் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தது. அதன் பின்னர் ஆட்சிப் பொறுப்பில் அதிபராக அட்டாணிக்கால் போட்டு அமர்ந்த இடி அமீன், நவீனகால அடால்ப் ஹிட்லரான மகிந்த ராஜபக்சே என்னும் மனித வேட்டைக்காரன் - பிணம் தின்னும் கழுகு நடத்திய கோர யுத்தம் மானுட உலகு இதுவுரை கேட்டிராத ஒன்றாகும்.
செஞ்சிலுவை சங்கத்தினரே விரட்டி விரட்டி அடிக்கப்பட்டனர். வெளிநாட்டுப் பத்திரிகையாளர்கள் தாக்கப் பட்டனர் - கொல்லவும் பட்டனர்.
இலங்கைச் செய்தி காற்றுவாக்கில்கூட வெளியில் செல்ல முடியாத அளவுக்கு எல்லா சுவர்களும், ஜன்னல்களும் ஆங்கே அடைக்கப்பட்டன. இவற்றையெல்லாம் மீறி வந்த செய்திகளே நம் குருதியை உறையச் செய்திருக்கிறது என்கிறபோது, முழு செய்திகளும் வெளிவந்திருந்தால் மாரடைப்பு ஏற்பட்டு எங்கும் உள்ள தமிழர்களும், மனித நேயர்களும் மரணத்தைத் தழுவி இருப்பார்கள்.
நடந்தவை ஒரு கசப்பான கனவாகவே முடிந்து போகவேண்டும். மீண்டும் ஒரு உள்நாட்டு யுத்தத்துக்கு ராஜபக்சே கத்தியைத் தீட்டுவாரேயானால், நிராயுதபாணிகளான ஈழத்தமிழர்கள் புழு பூச்சிகளாகக் கருதப்பட்டு மிதித்து சாகடிக்கப்படுவார்களேயானால் அந்த நிலை மிகப்பெரிய பயங்கரமாகக் கருதப்பட்டு உலகமே எரிமலையாகிக் கொந்தளிக்கக் கூடிய ஒரு நிலைதான் ஏற்படும்.
இதற்குமேல் ஒரு புள்ளி நகரக்கூடாது இலங்கை ராணுவம் என்ற நிலை உறுதிப்படுத்தப்படவேண்டும். அம்மக்கள் சொந்த வீடுகளில் தங்குவதற்கும், பிள்ளை களின் கல்வி, வேலை வாய்ப்பு முதற்கொண்டு இயல்பு வாழ்க்கை மலர்ந்திட போர்க்கால அடிப்படையில் பணிகள் முடுக்கி விடப்படவேண்டும்.
வீடுகள் தரைமட்டமாக்கப்பட்டிருக்கும்; அங்கெல்லாம் வீடுகள் கட்டிக் கொடுக்கப்படவேண்டும். குறிப்பிட்ட காலத்திற்குத் தேவையான நிதி உதவி, பொருள்கள் உதவி என்பவை தங்கு தடையின்றி நடைபெற்றாகவேண்டும்.
இலங்கை அரசு அதற்கான ஒரு திட்டத்தை வகுத்து செயல்படவேண்டும். இந்தியா முதன்மையான இடத்தில் அமைந்து, உலக நாடுகள் தாராளமாக உதவிகளை வாரி வாரி வழங்கிடவேண்டும்.ஈழத் தமிழர்களின் வாழ்வில் சமத்துவம் பொருந்திய தீர்வுகள் எட்டப்படவேண்டும். இதில் அய்.நா.வின் பங்கு முக்கியமாக இருக்கட்டும்.
------------------"விடுதலை"தலையங்கம் 29-4-2009
Search This Blog
29.4.09
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
அரசியல் இல்லாமல் தேவையை மட்டும் வலியுறுத்தும் தலையங்கம். நல்லது.
நிவாரண பொருட்கள் ஈழத்தில் உள்ள தமிழ் மக்களை சென்றடைய வேண்டிய தேவையை இந்தியாவை தலைமையாக கொண்டு உலகநாடுகள் கண்காணிக்க வேண்டும்.
தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி மணிகண்டன்
Post a Comment