Search This Blog

8.4.09

ஈழத் தமிழர்களை காக்கை, குருவிகள் போல் சுடுவதா?


காக்கை, குருவிகள் போல் சுடுவதா?
பிரதமர், சோனியா காந்திக்கு கலைஞரின் தந்தி

நாளை மாலை கலைஞர்
தலைமையில் பேரணி வரவேற்கத்தக்கது

கழகத் தோழர்கள் பேரணியில் கலந்து கொள்வீர்

தமிழர் தலைவர் அறிக்கை

காக்கை, குருவி போல தமிழர்களை சுட்டுத் தள்ளும் கொடுமையைக் கண்டித்தும், போரை நிறுத்தச் சொல்லியும் முதல் அமைச்சர் கலைஞர் அவர்கள் பிரதமருக்கும் சோனியா காந்திக்கும் அனுப்பியுள்ள தந்தியை வரவேற்றும், நாளை மாலை சென்னையில் கலைஞர் தலைமையில் நடக்கவிருக்கும் பேரணியில் கழகத் தோழர்கள் பங்கேற்கவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தும் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

நேற்று (7.4.2009 செவ்வாய் அன்று) திருச்சியில் நடைபெற்ற சுமார் 400 பேர்களுக்கு மேல் பங்கேற்ற திராவிடர் கழகம் நடத்திய பொதுக்குழுவில் மூன்றாவது தீர்மானமாக,

இலங்கையில் போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும் என்று இந்தியக் குடிஅரசுத் தலைவர், அய்.நா. பொதுச் செயலாளர் பான்கி மூன் போன்றவர்கள் உட்பட வேண்டுகோள் விடுத்தும், தமிழ்நாடு அரசின் இடையறாத அழுத்தங்களின் பயனாக பிரதமர், வெளியுறவுத் துறை அமைச்சர், அய்க்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர் திருமதி சோனியா காந்தி ஆகியோர் வெளிப்படையாகப் போர்நிறுத்தம் தேவை எனத் தெரிவித்த பிறகும், உலக நாடுகள் பலவும் குரல் கொடுத்தும் இலங்கை அதிபர் இராஜபக்சே அவற்றையெல்லாம் சிறிதும் பொருட்படுத்தாமல், மூர்க்கத்தனமாக தமிழர்களை அழிக்கும் வேலையில் ஈடுபட்டு வருவதால் - இதன் அடுத்த கட்டமாக அரசு அளவிலான கடும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமாய் மத்திய அரசை இப்பொதுக்குழு வற்புறுத்துகிறது.

தமிழ்நாட்டு முதல் அமைச்சகர் அவர்கள் ஏற்கெனவே இடையறாமல் விடுத்து வரும் வேண்டு கோள்களுக்கு மேலும் தேவையான அழுத்தத்தைக் கொடுக்குமாறு இப்பொதுக் குழு கேட்டுக் கொள்கிறது என்ற இந்தத் தீர்மானத்திற்கு உடனடியாக பயனேற்பட்டுள்ளது.

முதலமைச்சர் கலைஞர் தந்தி

நமது முதல் அமைச்சர் கலைஞர் அவர்கள், பிரதமர் மன்மோகன்சிங், அய்க்கிய முற்போக்குக் கூட்டணித் தலைவர் திருமதி சோனியா காந்தி ஆகியோருக்கு அவசரத் தந்தி அனுப்பினார்.

இந்தச் சூழ்நிலையில் இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்படாவிட்டால் அங்கு தமிழ் இனம் முற்றாக அழிந்து விடும் என்றும் இந்திய அரசு உடனடியாகத் தலையிட்டு போர் நிறுத்தம் ஏற்படவும், சமாதானப் பேச்சு வார்த்தை தொடங்க வும், நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்தத் தந்தியில் குறிப்பிட்டுள்ளார்கள்.

இதே தந்தியை அவர்களுக்கு மட்டுமன்றி வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி, மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் ஆகியோருக்கும் அனுப்பி உள்ளார்.

காக்கை குருவிகளாகக் கருதி சுடுவதா?

நிலைமை அங்கே மிக மோசமாகி, சிங்கள இராணுவத்தின் தமிழர் இன ஒழிப்பு (Genocide) நேரிடையாகவே நடைபெறுகிறது. விடுதலைப் புலிகள் மக்கள் பின்னால் பதுங்கியுள்ளார்கள் என்று சாக்குப்போக்குக் கூறி, ஈழத்தமிழர்களை காக்கை குருவிகளைச் சுட்டுக் கொல்வதுபோல, கொன்று குவிப்பது மிகவும் உச்சக் கட்டத்தை அடைந்து கொண்டுள்ளது.

நார்வே வெளிஉறவு அமைச்சருடன் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் திருமதி ஹிலாரி கிளின்டன் பேசி, உடனடியாக இலங்கையில் அப்பாவி மக்களைக் காப்பாற்றப் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட வேண்டும் என்று நேற்று வலியுறுத்தி உள்ளதையும் இலங்கையின் இராஜபக்சே அரசு கேட்டாக வேண்டிய நிலையில், இந்திய அரசு மிகவும் உறுதியுடன் இதனை வற்புறுத்த வேண்டியது அதன் அறவழிப்பட்ட தலை யாய கடமை அல்லவா?

இரட்டைக் குழல் துப்பாக்கி

31.3.2009 அன்று சென்னையில் ஒரு நிகழ்ச்சி. (முரசொலி விருது வழங்கும் விழாவில்) முதல்வர் கலைஞர் பேசும்போது, ஈழத் தமிழர் நலன்களைக் காப்பாற்றும் பொறுப்பில் திராவிடர் கழகமும், திராவிடமுன் னேற்றக் கழகமும் இரட்டைக் குழல் துப்பாக்கி களாகச் செயல்படும் என்று பிரகடனப் படுத்தியது - வெறும் பேச்சல்ல என்பதற்கு ஆதாரமாகத்தான், இந்த தந்திகள். அத்தோடு நாளை சென்னையில் தி.மு.க. ஒரு பிரம்மாண்டமான பேரணியை நடத்திட அறிவிப்பு வெளியாகி உள்ளது!

ஏப்ரல் 12 அன்று ஆர்ப்பாட்டம்

திராவிடர் கழகத்தின் சார்பில் மாநிலம் முழுவதிலும் சென்னை துவங்கி குமரி வரை ராஜபக்சே அரசின் தமிழின அழிப்புப் பணிக்குக் கண்டன ஆர்ப்பாட்டம் 12.4.2009 (ஞாயிறு காலை 11 மணிக்கு) நடைபெற ஆயத்தமாகி வருகிறோம்.

எனவே இந்தத் தூண்டிலை வைத்து நாடாளு மன்றத் தேர்தலில் மீன் பிடிக்கக் கிளம்பும் திடீர் ஈழத் தமிழர்களின் நலம் விரும்பிகள் தவறான பிரச்சாரத்தை, திட்டமிட்டு கிளப்பி வருகின்றனர். தமிழ் மக்கள் புரிந்து கொள்ளவே செய்வார்கள்!

காலத்தே, உரிய தொடர் நடவடிக்கையாக - தந்திகளைக் கொடுப்பதும், பேரணி நடத்த முன் வருவதும் முதல்வருக்கு உள்ள உண்மையான அக்கறையை வெளிப்படுத்துகிறது.

எல்லோரும்
ஓர் குரல்!


எமது இனம் காப்பாற்றப்பட வேண்டும் என்ற உணர்ச்சிப்பெருக்கு - வெறும் தேர்தல் சரக்கல்ல! தமிழ்ச் செல்வன் மறைந்தவுடன் எப்படிப்பட்ட உணர்வு, தானே அவருக்குப் பீறிட் டுக் கிளம்பியதே - அதன் தொடர்ச்சிதானே!

எல்லோரும் ஓர் குரலில், ஓரணியில் நின்று ஈழத்தமிழர் உரிமைக் காப்பாற்றப்பட வேண்டும் என்றிட முதல்வர் கலைஞர் எடுத்த அத்துணை நல்லெண்ண முயற்சிகளுக்கும் முட்டுக் கட்டை போட்டவர்கள், குறுக்கு சால் ஓட்டுபவர்கள், இன்று நம்மைக் குறை கூறும் அரசியல் ஆதாயம் தேடிகளையும் இந்நேரத்தில் புரிந்து கொண்டு, அதற்கேற்ப தெளிவுடன் நடந்து கொள்ள வேண்டியது தமிழர்கள் கடமை அல்லவா?

ஈழத்தமிழர் பாதுகாப்பு என்ற போர்வையில் இங்குள்ள பச்சைத் தமிழரின் ஆட்சியைக் கவிழ்க்க விரும்புவோருக்குக் கருவிகளாக நிற்பவர்கள் பற்றி மக்கள் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

கழகத் தோழர்களே! பேரணியில் பங்கேற்பீர் !

இலங்கை அரசே போரை நிறுத்து! என்பதை வலியுறுத்திட பேரணி ஒன்று நாளை (9.4.2009) மாலை சென்னை மன்றோ சிலையிலிருந்து சேப்பாக்கம் வரையில் நடைபெறும் என்றும், கட்சி வேறுபாடின்றி அனைவரும் கலந்து கொள்ள வேண்டுமென்றும் மானமிகு மாண்புமிகு முதல் அமைச்சர் கலைஞர் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையினை ஏற்று கழகத் தோழர்கள் கழகக் கொடியுடன் பேரணியில் பங்கேற்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


------------------"விடுதலை"8-4-2009

2 comments:

Unknown said...

இதயம் வலிக்கிறது கண்கள் கண்ணீர் சிந்துகிறது அய்யகோ என் தமிழினத்தைக் காப்பாற்ற வழி இல்லையா?

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி