Search This Blog

13.4.09

ஆரம்ப சுகாதார மருத்துவ மனைகளில் வளைகாப்பு நடத்துவது தேவையா? அறிவுடைமையா?


வளைகாப்பு (பும்சுவன சீமந்தம்)

கருவுற்ற தாய்மார்களுக்கு இந்து மதத்தினர் செய்யும் சடங்கு வளைகாப்பு எனப்படுகிறது. முதல்முறையாகக் கருவுற்றவர்களுக்கு 5 ஆம் மாதம் 7ஆம் மாதம் 9 ஆம் மாதம் ஆகிய காலங்களில் ஏதாவது ஒன்றில் செய்கிறார்கள். மணப்பெண் போலவே பெண்களை அலங்கரித்து கைநிறைய வளையல்களை அடுக்குகிறார்கள். ஏன்?

முதல் பிரசவம் என்பது அக்காலங்களில் மிகவும் சிக்கலாக இருந்தது. பெண் குறைந்த வயதினளாக உடல் உறுப்புகள் முழுவளர்ச்சி அடையாத நிலையிலேயே உடல்உறவு கொண்டு சூல் அடைந்ததால் ஏற்பட்ட சிக்கல். இன்றைக்கிருப்பது போன்ற மருத்துவ உதவிகள், முறைகள் வளர்ச்சி அடையாதிருந்த காலம். தகுதி பெற்ற மருத்துவர்களிடமோ, மருத்துவமனைகளிடமோ, மருத்துவமனைகளிடமோ செல்லாமல் மருத்துவச்சிகள் என்பாரை நாடிப் பிரசவம் பார்த்துக் கொள்ளும் பழக்கம்.

இதனால், பிரசவத்திற்குப் பின் தாய் உயிருடன் திரும்பி வருவது மிகவும் கவலையும் சந்தேகமும் அளிக்கக் கூடியதாக இருந்த நிலை, செத்துப் பிழைத்தாயோ, பெத்துப் பிழைத்தாயோ என்ற வழக்குச் சொல் புழங்கிய காலம். பிரசவத்திறகுத் தாய்வீடு செல்லும் பெண் திரும்பி, கணவன் வீட்டிற்கு வருவதே அய்யமாகவும், அச்சமாகவும் இருந்த காலத்தில் - அச்சப்பட்ட மனிதன் ஆண்டவனை நினைப்பது சாதாரணமாக நிலவிய நிலை.

அந்தக் காலத்தில் சூலுற்ற பெண்ணைக் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என்று பயத்துடன் வேண்டிக் கொள்ளும் வகையில் வளைகாப்பை உருவாக்கிக் செய்தனர். பிழைப்பதே அரிது என்று கருதிய காரணத்தால் - பெண்ணை அலங்காரம் செய்து பார்த்துக் கொள்ளும் வகையில் மணப்பெண்ணைப் போலவே ஜோடித்தார்கள்.

ஏன் கைகளில் வளையல்களை அடுக்கினார்கள்? மங்கலமான பெண்ணின் அடையாளமாக, பூ,பொட்டு, மஞ்சள்,குங்குமம், வளையல், தாலி என்று இவர்கள் வகுத்த இலக்கணம். அதில் வளையலை மட்டும் நிறைய அடுக்கி அணிந்து கொள்ள முடியும். பத்து, அய்ம்பது தாலிகளையா, கட்டிக் கொள்ளமுடியும். ஆகவே வளையல்களை அடுக்கும் சடங்கைக் கொண்டு வந்தனர் போலும்

அத்துடன் மட்டுமல்ல திருமணம் செய்து கொண்ட பெண் என்பதற்கு அடையாளமாக அன்றைய காலத்தில் அணிவிக்கப்பட்டது வளையல்தான்! தாலி அல்ல! தாலி 1000 ஆண்டுகாலத்திற்கு முன்பு திணிக்கப்பட்ட சடங்கு. மாமுது பார்ப்பான் மறைவழிகாட்டிட, தீவலம் வந்து திருமணம் செய்து கொண்ட கோவலன், கண்ணகியின் கழுத்தில் தாலி அணிவித்தாகச் சிலப்பதிகாரம் கூறவில்லை. மாறாக - கோவலன் இறந்த சேதி கேட்டதும், கண்ணகி தன் கை வளையல்களை உடைத்தாள் என்று தான் சிலப்பதிகாரம் கூறுகிறது.

எனவே வளையல்களை நிறைய அணிவிக்கிறார்கள். தாலிகட்டும் சடங்கு திணிக்கப்பட்டாலும் கூட , திணிக்கப்பட்ட பிறகும் கூட பழைய பழக்கத்தை விடாமல் இருக்கின்றனர் என்பதற்காக இந்தச் சடங்கோ?

எப்படியிருப்பினும், மருத்துவ வசதிகள் பெருகிவிட்ட நிலையில் வளைகாப்பு தேவையா? சிசேரியன் சிகிச்சை முலம் பெற்றுக் கொள்வது என்று முடிவெடுத்தவர்களும் வளைகாப்பு நடத்திக் கொள்வது தேவையா?

எல்லாவற்றையும் விட, தமிழக ஆரம்ப சுகாதார மருத்துவ மனைகளில் வளைகாப்பு நடத்துவது தேவையா? அறிவுடைமையா?


--------------------------செங்கோ அவர்கள் 11-4-2009 "விடுதலை"ஞாயிறுமலரில் எழுதிய கட்டுரை

2 comments:

சே.வேங்கடசுப்ரமணியன் said...

நல்ல கருத்து சகோதரி.இன்றைய நிலையில் மக்களோடு மக்களாக கலந்து அவர்கள் வழியிலேயே சென்று அவர்களை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வரவழைக்க வேண்டியுள்ளது.வளைகாப்பு எனும் பெயரில் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வரவழைத்து அங்கு உள்ள பிரசவத்திற்கான வசதிகள்,அரசு தரும் உதவித்தொகைகள்,இல்லங்களில் பிரவம் நடைபெறாமல் இருக்க அறிவுரைகள் வழங்குவது என்பதோடு மக்களும் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களுக்கு இடையே உள்ள இடைவெளியை குறைக்கவும்,நாங்களும் அவர்கள் குடும்பத்தில் ஒருவர்தான் என்ற நம்பிக்கையை அவர்களுக்கு ஊட்டுவடோடு, கர்பிணிகளுக்கான தடுப்பூசிகள் போடுதல் ,தன் சுகாதாரம்,ஊட்டச்சத்தின் அவசியம்,போன்ற விழிப்புணர்வு பணிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது.இது வாழைப்பழத்தில் மாத்திரையை வைத்து குழந்தைக்கு தருவது போலத்தான்.இங்கு வளைகாப்பு பிரதானம் இல்லை.விழிப்புணர்வுப் பணிகள்தான் பிரதானம்.

தமிழ் ஓவியா said...

எங்களின் வேண்டுகோளுக்கினங்கி கருத்துத் தெரிவித்த தங்களுக்கு மிக்க நன்றி அய்யா.

இதே விடையைத்தான் எனது வாழ்வினையரும் சொன்னார்.
இருந்தாலும் ஒவ்வொரு மதக் காரர்களும் இதேபோல் அவர்கள் மதச் சடங்குப் பிரகாரம் செய்ய வேண்டும் என்று குரல் கொடுத்தால் சிக்கல்தான் அய்யா.

வருகைக்கும் கருத்துக்கும் மீண்டும் நன்றி அய்யா