Search This Blog

21.4.09

ராஜபக்சே போரை நிறுத்தாதற்கு காரணம் என்ன?


ஆயிரம் தமிழர்கள் கொன்று குவிப்பா!

சிங்கள இனவெறி இராணுவத்தின் காட்டுவிலங்காண்டித்தனம் எல்லைகளையெல்லாம் மீறிவிட்டது. அவர்கள் நோக்கம் விடுதலைப்புலிகளைப் பயங்கரவாத அமைப்பு என்று கூறி ஒட்டுமொத்தமான தமிழர்களைப் பூண்டோடு ஒழித்துக்கட்டுவதுதான்.

உலகின் பல நாடுகளும் எச்சரிக்கை கொடுத்து விட்டன. அய்.நா. மன்றத்தின் செயலாளர் - வேண்டு கோளுக்குமேல் வேண்டுகோள்களைக் கொடுத்துக் கொண்டே இருக்கிறார்.

இந்தியத் தரப்பிலும் குடியரசுத் தலைவர்முதல் வெளியுறவுத்துறை அமைச்சர்வரை போர் நிறுத்தம் தேவை என்பதை வலியுறுத்தி விட்டனர்.

தமிழ்நாடு சட்டப்பேரவை இரண்டு முறை தீர்மானங்களை நிறைவேற்றி இருக்கிறது. தமிழ்நாட்டில் பல்வேறு அமைப்புகளும் போராட்டங்களை பல்வேறு வடிவங்களில் நடத்தியுள்ளன. நடத்தியும் வருகின்றனர்.

உலகில் பல்வேறு நாடுகளிலும் மனிதாபிமானமற்ற சிங்களப் போரை உடனடியாக நிறுத்தவேண்டும் என்று கோரி ஆர்ப்பாட்டங்களை, முற்றுகைகளை, பட்டினிப் போராட்டங்களை நடத்திக் கொண்டும் இருக்கின்றன.

ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள் என்பதுபோல கோரிக்கைகள் வரவர, அழுத்தங்கள் கொடுக்கப்பட கொடுக்கப்பட மேலும் மேலும் தீவிரமான வகையில் தமிழ் மக்களை அழித்து முடிக்கும் அபாயகரமான வேலையிலே இறங்கிவிட்டது ராஜபக்சே என்னும் ஹிட்லரின் பாசிசப் படை.

கடைசியாக நேற்று கிடைத்த தகவல் குருதியை உறைய வைக்கக் கூடியதாகும். கல்மலையையும் கண்ணீர் வடிக்கச் செய்யும் மோசமான இனப்படுகொலையாகும்.

பாதுகாப்பு வளையத்துக்குச் செல்லும் தமிழர்களை கேடயமாகப் பயன்படுத்த சிங்கள இராணுவம் முயற்சி செய்தது. விடுதலைப்புலிகளின் எதிர்தாக்குதலிலிருந்து தப்பிக்க இந்த மட்டரகமான முயற்சியில் இறங்கியுள்ளது. அதற்குக் கட்டுப்படாத தமிழர்களைக் கொன்று குவித்திருக்கிறது.

கொத்துக் குண்டுகள், பல்குழல் ஏவுகணை, பீரங்கி, எந்திரத் துப்பாக்கி, விமானத் தாக்குதல் என்று அத்தனை அழிவுச் சக்திகளையும் கையாண்டு தமிழர்களைக் கொன்று குவித்துள்ளனர்.

நேற்று 1496 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 3333-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள் ளனர் என்று தெரிய வருகிறது.

இரண்டு நாள் போர் நிறுத்த அறிவிப்புக்குப்பின் மறுநாளே 291 தமிழர்களைக் கொன்று குவித்தனர். 18 ஆம் தேதியன்று 169 தமிழர்களைக் கொன்றனர். 19 ஆம் தேதி 34 தமிழர்கள் கொல்லப்பட்டனர். இப்படி தொடர்ந்து தமிழினம் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

சிங்கள அரசப் பயங்கரவாதத்தால் தமிழினம் அழிக்கப்பட்டதுபோல உலகில் வேறு எங்கும் நடந்ததில்லை என்கிற அளவுக்குக் கொடுமையின் உச்சத்திற்கே சிங்கள அரசு சென்றுவிட்டது.

அய்.நா. செயலாளர் கேட்டுக்கொண்டும், அமெரிக்கா உள்பட பல நாடுகள் வேண்டுகோள் விடுத்தும் இடிஅமீன் ராஜபக்சே கட்டுப்பட மறுக்கிறார் என்றால், அடுத்த கட்ட நிலை என்ன?

அய்.நா. மன்றம் இதற்கொரு முடிவினைக் காணா விட்டால், அப்படி ஒரு மன்றம் இருப்பதில் எவ்விதப் பலனும் இல்லை.

இலங்கைத் தமிழர் நல உரிமைப் பேரவையின் துணைக்குழு அய்.நா. மன்றத்திற்கு இதற்கு முன்பே வேண்டுகோளை வைத்திருக்கிறது.


இதில் ஒரு கடைந்தெடுத்த வெட்கக்கேடு என்னவென்றால், பாதுகாப்புக்குழு கூடி உரிய முடிவுகளை எடுக்க சீனாவும், ருசியாவும் முட்டுக்கட்டை போட்டு வருகின்றன. அந்தத் தைரியத்தில்தான் ராஜபக்சே ஆட்டம் போடுகிறார்.

மனித உரிமைகளையும், சுய நிர்ணய உரிமைகளையும்பற்றி தாராள சிந்தனைகளுடன் செயல்படவேண்டிய இரு பொதுவுடைமை நாடுகள் இப்படி பாசிசத்திற்குத் துணை போவது மாபெரும் வெட்கக்கேடாகும்.

இந்தியாவில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சியினர் ஈழத் தமிழர்களுக்காகக் கண்ணீர் விடுவது உண்மையானால், சீனா, ருசியா நாடுகளின் பிற்போக்குத்தனமான - மனித உரிமைக்கு எதிரான இந்தப் போக்கைக் கண்டித்திருக்க வேண்டும். இதுவரை அப்படி ஒரு குறிப்பைக்கூட இந்தியக் கம்யூனிஸ்ட்கள் காட்டவில்லை என்பது பரிதாபகரமான தாகும்.


இந்த இரு நாடுகளும் நடுநிலை வகித்தால்கூட பிரச்சினைக்கு எளிதில் தீர்வுகள் எட்டப்பட்டுவிடும். ஆனால், இலங்கை அரசுக்கு ஆயுதங்களை அளிப்பது முதல் தார்மீக ஆதரவினை வழங்குவதுவரை நகமும் சதையுமாக இருந்து வருகின்றன.

இதனை எதிர்த்தும் உலக நாடுகள் குரல் கொடுக்க முன்வரவேண்டும். இந்தியாவும் வேண்டுகோள் வைக்க வேண்டும். எந்த நிலையிலும் இனியும் ஈழத் தமிழர்கள் கொல்லப்படுவதை அனுமதிக்க முடியாது - கூடாது!

------------------"விடுதலை" தலையங்கம் 21-4-2009

4 comments:

ராசா said...

ஐயா,

நாம சீனா வையோ, ருசியா வையோ
கோபபடவேண்டிய அவசியம் இல்லைனு எனக்கு தோணுது,,

இந்தியா ஒன்னும் சாதாரண நாடு இல்ல, இந்தியா முன்னெடுக்கும் ஒவ்வொரு செயலையும் இந்த உலகமே திரும்பி பார்க்குது. அப்படி இருக்கும் போது.. இது நாள் வரைக்கும் எதையுமே அழுத்தமாக சொல்லாத இந்திய அரசு ஒரு இன படுகொலைக்கு ஆதரவா இருக்குனு தான் அர்த்தம்.

இந்த கேவலமான போக்க முதல்ல கண்டிப்போம், பிறகு சீனா வையோ, ருசியா வையோ
கோபபடுவோம்..

கரிகாலன் said...

தமிழீழத்தில் இந்திய அரசுதான் போரை வழி நடத்துகிறது, தமிழின அழிப்புக்கு இந்தியாதான் அனைத்து உதவிகளையும் செய்கிறது என்பதை துளியும் சுட்டிக்காட்டாமல், அதை கண்டிக்காமல் தாங்கள் மௌனம் சாதிப்பது ஏன்?

ஈழத்தமிழர் படுகொலைக்கு துணைபோகும் இந்தியாவை கண்டித்து எதிர்க்காமல், தமிழனத்தை பழிதீர்க்கும் காங்கிரசையும் சோனியாவையும் எதிர்க்காமல்
நானும் ஈழத்தமிழர்களுக்கு குரல் கொடுக்கிறேன் என்பது கடைந்தெடுத்த அயோக்கியத்தனம்.

Anonymous said...

தமிழ் ஓவியா இந்தியா குரீத்த உங்கள் பார்வை கருணாநிதியின் பார்வையில் இருந்து பார்க்கபப்டுகிறது. ஒரே விஷயத்தை எனக்கு நீங்கள் சொல்ல வேண்டும். இந்தியா எப்போது யாரிடம் எப்படி போரை நிறுத்தச் சொன்னது. இந்தப் பொரை நடத்துவதே இந்தியாதான். அதற்கு பதவி வெறி பிடித்த கருணாநிதி துணைபோகிறார், என்பது என் குற்றச் சாட்டு.

மணிகண்டன் said...

ஐநா சபையில் இந்தியா ஏதாவது தீர்மானம் கொண்டு வந்து சீனா மற்றும் ருச்சியா வெட்டோ செய்தார்களா ? இல்லை, வேறு நாட்டவர்கள் கொண்டு வந்த தீர்மானத்தை தடுத்தார்களா ?

விடுதலையில் எழுதப்பட்டுள்ள தலையங்கம் (சீனா பற்றி) உண்மையாக இருக்கலாம். ஆனால், தீர்மானம் கொண்டு வரப்பட்ட தேதி, அதை சீனா மற்றும் ருச்சியா தடுத்ததற்கு கொடுக்கப்பட்ட காரணங்கள் இவைகளையும் பிரசுரிக்கலாமே ! இல்லையென்றால், கலைஞரின் கட்சியில் இருந்து கம்யூனிஸ்ட் இயக்கங்கள் வெளியேறியதால் எழுதப்பட்ட தலையங்கம் என்று அரசியல் தெரியாதவர்கள் கூற தொடங்கிவிடுவர்.

தயவு செய்து, தகவலை நீங்கள் தர முயற்சிக்க வேண்டும். நன்றி தமிழ் ஓவியா.