Search This Blog

21.4.09

கோவி.கண்ணன் அவர்களின் பார்வைக்கு... பெரியாரின் விளக்கம்


வேறொரு பதிவு தொடர்பான விவாதத்தில் தோழர் கோவி.கண்ணன் அவர்கள்


//தலைமைச் சொல்வதை பிரளாமல் ஏற்றுக் கொள் என்று பெரியார் கூட வலியுறுத்தியது கிடையாது.//

என்று பின்னூட்டம் அளித்திருந்தார்.

மேற்கண்ட அவரின் பின்னூட்டத்திற்கு கீழ்காண்டவாறு பதிலளித்து பின்னூட்டமிட்டிருந்தேன்.

"இயக்கத்திற்கு வருவதற்கு முன் என்ன கேள்விகள் வேண்டுமானாலும் கேளுங்கள் பதில் அளிக்கிறேன். உங்களுக்கு தெளிவு ஏற்பட்டு இயக்கத்திற்குள் வந்து விட்டால் நான் சொல்லுவதை கேள்வி கேட்காமல் கேள் என்கிறார் பெரியார்.

இது குறித்து பெரியாரின் கட்டுரையை விரைவில் பதிவு செய்கிறேன்.

நன்றி கோவி கண்னன்."


------------------------------------------------------------------------------

இது குறித்து பெரியாரின் கட்டுரையை விரைவில் பதிவு செய்கிறேன் என்று கோவி.கண்ணன் அவர்களுக்கு கொடுத்த வாக்குறுதியின் அடிப்படையில் இக்கட்டுரையை மீள்பதிவு செய்து வெளியிடப்படுகிறது.

1948-இல் தூத்துக்குடி மாநாட்டிலும் மற்றும் பல சமயங்களிலும் பெரியார் பேசியதிலிருந்து ஒரு பகுதி இங்கே தரப்படுகிறது.

இயக்கத்தோழர்களுக்காக, பெரியார் அவர்களால் சொல்லப்பட்ட வழிகாட்டும் தத்துவம் இது.


"நான் ஏறக்குறைய சுமார் 50- ஆண்டு காலமாகவே பார்ப்பனரல்லாத"கீழ்மக்கள்"-பிற்படுத்தப்பட்ட மக்கள் நலனுக்குக் கேடாகப் பயன்படுத்தப்படும் எல்லா சாதன வாய்ப்புகளையும் ஒழிக்க வேண்டுமென்று பாடுபட்டு வருகிறேன். என்னுடைய பிரதான ஒரே தொண்டு இது தான். இனியும் என் வாழ்நாள் வரையிலும் ஏற்படுத்திக் கொண்டிருக்கிற தொண்டும் இதுதான். பார்ப்பனரால் ஏற்பட்டு வருகிற கொடுமைகள், அநீதிகள் குறிப்பிடத் தகுந்த அளவுக்காவது குறைந்திருக்கிற அளவுக்குச் செய்திருந்த போதிலும் அவை நிலைத்திருக்குமா என்று அய்யப்படுகிறேன்.

இவ்வளவு எடுத்துக் காட்டுவதற்கும் வெட்கப்படுகிறேன். தறுதலைகளும், பொறாமைக்காரர்களும், சொந்த எதிரிகளும், ஒரு பொது மனிதன் என்னவென்று தெரிந்து கொள்ள வேண்டுமோ, அதை விட்டு குற்றம் குறைகூற வழி காணத் துடிக்கிறார்கள். இருந்தாலும் நான் இதை இவ்வளவு எடுத்துக்காட்டுகிறேன் என்றால், துரோகம் செய்து அயோக்கியனாய் வாழ வேண்டிய அவசியம் எனக்கு எந்தக் கட்டத்திலும் வந்ததில்லை என்பதை எடுத்துக் காட்டவே ஆகும். எல்லாத் துறைகளிலும் குறையாத அனுபவமும், திறமையும் உண்டு என்பதைக் கூறவுமேயாகும். எனது கருத்து மாறுதல்கள் எல்லாம் எனது கண்ணியமான அனுபவம் ஆராய்ச்சிக் கொண்டே இருக்குமே, தவிர பணம் சேர்க்கவோ, பதவி பெறவோ, பெரிய ஆள் ஆகவோ, இழிவை மறைத்துக் கொள்ளவோ, கடுகளவு கூடக் காரணம் கொண்டதாய் இருக்காது. இப்படிப்பட்ட என்னை இந்நாட்டு விடுதலைக்குக் குறுக்கேயிருந்தவன், துரோகம் செய்தவன் என்று சொல்லும் போது எவ்வளவு மன உரம் இருந்தாலும் நிதானம் தவறவும் தூண்டுவதாகிறது. என் அபிப்பிராயத்தை மறுக்க உங்களுக்கு உரிமை உண்டு. ஆனால் என் அபிப்பிராயத்தை வெளியிட எனக்கு உரிமை உண்டு.


என்னைப் பொறுத்த வரையில் என்னைப் பின்பற்றி நடந்து வருபவர்கள் புத்திசாலிகளாய் இருக்க வேண்டுமென்ற கவலை எனக்குக் கிடையாது. தங்கள் அறிவை, ஆற்றலை மறந்து என் இலட்சியத்தை நிறைவேற்றிக் கொடுக்கக் கூடிய ஆட்கள் தான் எனக்குத் தேவையே ஒழிய, அவர்கள் புத்திசாலிகளா? முட்டாள்களா? பைத்தியக்காரர்களா? கெட்டிக்காரர்களா?என்பது பற்றி எனக்குக் கவலையில்லை.என் நண்பர் பா.வே. மாணிக்க நாயக்கர் ஈரோட்டில் எக்சிகியூடிவ் எஞ்சினியராக இருந்த போது தனக்கு இரு கொல்லர்கள் வேண்டுமென்றுக் கேட்கையில், அவர் சொன்னார். "கெட்டிக்காரர்களாயிருந்தால் இருவருக்குள்ளும் கெட்டிக்காரத்தனத்தனப் போட்டியால் வேலை கெட்டு விடும். அவர்களே எனக்கு யோசனை சொல்ல முந்தி என் திட்டம் ஆட்டங் கொடுத்து வேலை நடவாது. ஆகவே, நான் சொல்வதைப் புரிந்து அதன்படி வேலை செய்யக்கூடிய சுத்தி, சம்மட்டி பிடித்துப் பழகிய படிமானமுள்ள முட்டாளாயிருந்தால் போதும்" என்றார்.

ஆகவே தான் நான் நீடாமங்கலம் மாநாட்டிலும் தெளிவாகக் கூறினேன்.

என்னைப் பின்பற்றுபவர்கள் தங்கள் சொந்த பகுத்தறிவைக் கூட கொஞ்சம் தியாகம் செய்ய வேண்டுமென்று கூறினேன். யாராவது ஒருவன் (தலைமை ஏற்று) நடத்தக் கூடியவனாக இருக்க முடியுமே தவிர எல்லோரும் தலைவர்களாக முடியாது. மற்றவர்கள் தலைவர் இட்ட கட்டளைப்படி நடக்க வேண்டியவர்கள் தான்.தோழர்களே! நான் இப்போது ஒருபடி மேலாகவே சொல்லுகிறேன்.


நீங்கள் இந்த இயக்கத்தில் உள்ளவரை உங்கள் சொந்த பகுத்தறிவை மட்டுமல்ல; உங்கள் மனசாட்சி என்பதைக் கூட நீங்கள் மூட்டைக் கட்டி வைத்து விட வேண்டியது தான். கழகத்தில் சேரும் முன்பு நீங்கள் உங்கள் பகுத்தறிவு கொண்டு கழகக் கோட்பாடுகளை எவ்வளவு வேண்டுமானாலும் ஆராய்ந்து பார்க்கலாம்! என்னுடன் வாதாடலாம். ஆர அமர இருந்து யோசித்துப் பார்க்கலாம். ஆனால் உங்கள் மனசாட்சியும், பகுத்தறிவும் இடங்கொடுத்து கழகத்தில் சேர்ந்துவிட்டீர்களோ அப்போதிலிருந்து உங்கள் பகுத்தறிவையும், மனசாட்சியையும் ஒருபுறத்தில் ஒதுக்கி வைத்து விட்டுக் கழகக் கோட்பாடுகளை கண்மூடிப் பின்பற்ற வேண்டியது தான் முறை.

மனசாட்சியோ, சொந்த பகுத்தறிவோ, கழகக் கொள்கையை ஒப்புக் கொள்ள மறுக்குமானால் உடனே விலகிக் கொள்வது தான் முறையே ஒழிய, உள்ளிருந்துக் கொண்டே குதர்க்கம் பேசித் திரிவது என்பது விஷத்தனமே ஆகும் என்பதைத் தெரிவித்துக் கொள்ள ஆசைப்படுகிறேன்.


சிலருக்கு நான் ஏதோ சர்வாதிகாரம் நடத்த முற்படுகிறேன் என்று தோன்றலாம். இது ஓரளவுக்கு சர்வாதிகாரம் என்பதை ஒப்புக் கொள்கிறேன். ஆனால் தோழர்களே! நீங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். "இந்தச் சர்வாதிகாரம் எதற்குப் பயன்படுகிறதென்று?" என்னுடைய சர்வாதிகாரத்தைக் கழக இலட்சியத்தின் வெற்றிக்காக பொது நன்மைக்காகப் பயன்படுகிறதே ஒழிய, எந்தச் சிறு அளவுக்கும், எனது சொந்தப் பெருமைக்காகவோ, ஒரு கடுகளவாவது எனது சொந்த நன்மைக்காகவோ பயன்படுத்திக் கொள்ளவில்லை என்பதை நீங்கள் ஆராய்ந்து பார்த்துத் தெரிந்து கொள்ள வேண்டுகிறேன்.



------------- 10-02-1963- அன்று பெரியார் தூத்துக்குடி மாநாட்டிலும் மற்றும் பல சமங்களில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு.- "விடுதலை"-10-02-1963."



(குறிப்பு;- கோவி. கண்ணன் அவர்களுக்காக மட்டுமல்ல இந்தப் பதிவு நாம் அனைவரும் தெளிவு பெருவதற்காக... இந்தப் பதிவை பதிவு செய்ய காரணமாகயிருந்த தோழர். கோவி.கண்ணன் அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்)

6 comments:

அதி அசுரன் said...

தமிழ்ஓவியா அவர்களுக்கு,
1949 லேயே பெரியார் துாத்துக்குடி மாநாட்டுத் தீர்மானத்துக்கு நேர் எதிராகப் பேசியுள்ளார்.

கட்டுப்பாடுதான் முக்கியமென்றால் கொள்ளைக்கூட்டம் தான் நாட்டில் சரியான இயக்கமாக இருக்கும். இராணுவம் தான் சரியான இயக்கமாக இருக்கும். நாம் அப்படி ஒரு இயக்கத்தை வளர்க்கவிரும்பவில்லை. எனப் பேசியிருக்கிறர். 1949 குடி அரசில் இவை வருகின்றன. இந்த உண்மை யெல்லாம் தெரிந்துவிடக்கூடாது என்றுதான் குடி அரசை முடக்கி வைத்துள்ளார் தல. குடி அரசு வந்துவிட்டால் கட்டுப்பாட்டுப் பூச்சாண்டியெல்லாம் காட்டமுடியாது.
அதுவரை நடக்கட்டும், நடக்கட்டும்.

மனசாட்சி said...

லூசுத்தனமாக இருக்குது பெரியார் இருந்த காலம் வேறு, ஜால்ரா மணி இருக்கும் காலம் வேறு.

நாளையே ஜால்ரா மணி இனி ஈழத்தமிழர்களை கொல்வோம் என்று முடிவெடுத்தால், தலைமை சொல்வதை கேட்பீர்களா.

தமிழ் ஓவியா said...

//தமிழ்ஓவியா அவர்களுக்கு,
1949 லேயே பெரியார் தூத்துக்குடி மாநாட்டுத் தீர்மானத்துக்கு நேர் எதிராகப் பேசியுள்ளார்.

கட்டுப்பாடுதான் முக்கியமென்றால் கொள்ளைக்கூட்டம் தான் நாட்டில் சரியான இயக்கமாக இருக்கும். இராணுவம் தான் சரியான இயக்கமாக இருக்கும். நாம் அப்படி ஒரு இயக்கத்தை வளர்க்கவிரும்பவில்லை. எனப் பேசியிருக்கிறர்.//

கட்டுப்பாடு பற்றி 1948 -இல் மட்டும் பெரியார் பேசி, 1949 இல் பெரியார் மேலே நீங்கள் சொல்வது போல் பேசியிருந்தால் உங்கள் வாதம் சரியானது. ஒப்புக்கொள்கிரேன்.

ஆனால் 1963 இலும் பெரியார் 1948 இல் பேசிய கருத்தை வலியுறுத்தி பேசியுள்ளார். அப்படியிருக்கும் போது 1949 இல் பேசிய கருத்து அடிபட்டுப் போய்விடுகிறதே தோழர்.

மேலும் ஒரு தகவலுக்காக

"1948 -ல் நமது அறிவு ஆசான் தந்தைபெரியார் அவர்கள் தூத்துக்குடியில் கழகக் கட்டுப்பாடு குறித்து ஆற்றிய உரை என்றென்றும் நமக்கு வழிகாட்டக்கூடிய காலப்பெட்டகம்.நமது அறிவு ஆசான் அந்த உரையிலே சுட்டிக் காட்டியிருப்பது போல் நாம் இந்த இயக்கத்தின் தலைமை தரும் கட்டளைகளைக் கண்களை மூடிப் பின்பற்றுகிறவர்கள் தான். அப்படித்தான் இது வரை நடந்து காட்டி வருகிறோம்"

--1996 இல் பெ.தி.க.வெளியிட்ட 'வீரமணி தலைமையிலிருந்து விலகியது ஏன்?' என்ற
நூலிலிருந்து பக்கம் 19

கோவி.கண்ணன் said...

//1948 -ல் நமது அறிவு ஆசான் தந்தைபெரியார் அவர்கள் தூத்துக்குடியில் கழகக் கட்டுப்பாடு குறித்து ஆற்றிய உரை என்றென்றும் நமக்கு வழிகாட்டக்கூடிய காலப்பெட்டகம்.//

தலைமைக்குக் கட்டுபடுதல்,
கட்சிக் கட்டுப்பாடு குறித்து மிக அழகாக பெரியார் சொல்லியதை
தனிப்பட்ட தொண்டனை அரசியல் அறிவை அடகு வைத்துவிட்டு, வாய் பேசாமல் இருக்கச் சொன்னார் என்பதாக நீங்கள் நினைத்துக் கொள்வதற்கு பெரியார் பொறுப்பாக முடியாது. பெரியாரின் இந்தப் பேச்சு கட்சிக்குள் கோஷ்டி அரசியலை வெற்றிகரமாக களைவது பற்றியானது மட்டுமே.


நீங்கள் வேறுமாதிரி நினைத்து பின்பற்றும் பட்சத்தில் தலைவர் வீரமணி குறித்து நிரூபனம் செய்யப்பட்ட குற்றச் சாட்டுகளைக் (உண்மையிலேயே அப்படி ஒன்று இருந்தால்) கூட அவருக்கு எதிராக எதிர்த்துக் கேட்கும் திராணியற்றவராகிறீர்கள் என்பதாக ஒப்புக் கொள்கிறீர்களா ?

பெரியாரின் முக்கிய கொள்கையே பகுத்தறிவு மட்டுமே, அதை இறைநம்பிக்கை இன்மையுடன் மட்டுமே முடிச்சுப் போட்டுவிடாதீர்கள். ஏன் எதற்கு என்று கேட்பதே பகுத்தறிவு அதைத்தான் பல்வேறு தளங்களில் பெரியார் வழி யுறுத்தி இருக்கிறார், அதில் ஒன்று மட்டுமே இறைமறுப்பு.

கோவி.கண்ணன் said...

//ஆனால் 1963 இலும் பெரியார் 1948 இல் பேசிய கருத்தை வலியுறுத்தி பேசியுள்ளார். அப்படியிருக்கும் போது 1949 இல் பேசிய கருத்து அடிபட்டுப் போய்விடுகிறதே தோழர்.
//

1963ல் பேசி இருந்தாலும் அதுவும் அண்ணா ஆட்சிக்கு வராத கால கட்டம் தான். 1948ல் அண்ணா திக இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்ற வழியுறுத்திய காலகட்டம், அது முடியாமல் போகவே மணியம்மையை திருமணம் செய்து கொண்டதை சாக்கிட்டு அவர்கள் வெளியேறிய காலக்கட்டம், பெரியாரின் இந்தப் பேச்சு முழுக்க முழுக்க திக வை அரசியல் கட்சியாக மாற்றும் முயற்சிக்கும், தொண்டர்களை இழுக்கும் முயற்சிக்கும் எதிராக பேசப்பட்டவையாகத்தான் விளங்கிக் கொள்ள முடிகிறது. இயக்கத்தில் இருப்பவர்கள் தலைமையை விமர்சிக்கக் கூடாது என்கிற பெரியாரின் பேச்சு அண்ணாவையும், அவருக்கு துணையாக நின்றவர்களையும் குறித்துப் பேசியதாக ஏன் கொள்ளக் கூடாது ?

அண்ணா ஆட்சிக்கு வந்ததும் மீண்டும் பெரியாரை சந்தித்தும் பிறகு நடந்தவை.

கட்சித் தொண்டன் எதிர்த்துப் பேசாவிட்டால் திராவிடக் கழகம், திமுக கழகம் என்ற அரசியல் இயக்கமாக மாறி இருக்காது, இன்றைய தேதியில் திராவிடக் கொள்கை திசை மாறியதை வைத்து அவை தவறு என்று பொருள் கொள்ளலாகாது.

வீரமணி ஐயாவை எதிர்த்து வெளி நடப்பு செய்த பெரியா திகவினரை கருங்காலிகள் என்று உங்களால் சொல்ல முடியுமா ? கண்டிப்பாக முடியாது.

பெரியாரின் பேச்சுக்களைக் எடுத்து எழுதும் போது ஏன் எதற்கு என்கிற சூழலையும் சேர்த்தே சொல்வதும், புரிந்து கொள்வதும் நல்லது. இல்லை என்றால் 'பெரியார் தமிழை காட்டுமிராண்டு பாஷை என்று தூற்றினார்' என்று சொல்லும் கூட்டத்திற்கு எடுத்துக் கொடுத்தது போலவே ஆகும். பெரியார் ஏன் அவ்வாறு சொன்னார் என்பதை நான் பதிவில் எழுதி இருக்கிறேன்.

அப்பொழுது இருந்தது தமிழ் 'மொழி' அல்ல, வடமொழியை கலந்து திரிக்கப்பட்ட மணிப்பவள தமிழ் 'பாஷை'. அதன் இயல்பு நடையெல்லாம் தொலைந்து போய் பக்தி இலக்கியங்களையும், வடமொழி மொழிப்பெயர்பான இராமயணம், மகாபாரத கதா கலேசபங்களைத்தான் விழாக்களில் அரங்கேற்றி வந்தனர். பெரியார் அறிந்திருந்த தமிழ் காட்டு மிராண்டி 'பாசை' என்று சொல்லும் அளவுக்கு அது களங்கப்பட்டு இருந்தது.

தமிழ் ஓவியா said...

//தலைமைக்குக் கட்டுபடுதல்,
கட்சிக் கட்டுப்பாடு குறித்து மிக அழகாக பெரியார் சொல்லியதை
தனிப்பட்ட தொண்டனை அரசியல் அறிவை அடகு வைத்துவிட்டு, வாய் பேசாமல் இருக்கச் சொன்னார் என்பதாக நீங்கள் நினைத்துக் கொள்வதற்கு பெரியார் பொறுப்பாக முடியாது.//

பெரியாரின் இக்கருத்து தனிப்பட்ட தொண்டர்களுக்காக சொல்லப்பட்டதல்ல

"இயக்கத்தோழர்களுக்காக, பெரியார் அவர்களால் சொல்லப்பட்ட வழிகாட்டும் தத்துவம் இது."

என்பதை முன்னுரையிலே தெளிவாகச் சுட்டிக் காட்டியுள்ளேன் கோவி. கண்ணன்.

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.