Search This Blog

10.4.09

ஜெயலலிதா போர் நிறுத்தம் செய்யப்படவேண்டும் என்று முழக்கம் செய்வதில் பொருள் உண்டா?


ஈழத்தமிழர்ப் பிரச்சினையும் -
மக்களவைத் தேர்தலும்!


ஈழத்தமிழர்ப் பிரச்சினை, தமிழர்களின் பிரச்சினை மட்டுமல்ல; உலகப் பிரச்சினையாக இன்று வடிவெடுத்திருக்கிறது. இனப் பிரச்சினை மட்டுமல்ல; மனித உரிமை மற்றும் மனிதாபிமானப் பிரச்சினையாகவும் பேருரு எடுத்துள்ளது.

இதில் வருந்தத்தக்கது என்னவென்றால், இதில் அதிக அக்கறையும், கவலையும், பாத்தியதையும் பட்டுள்ள தமிழ்நாட்டிலோ, தமிழர்கள் மத்தியில் இந்தப் பிரச்சினை அரசியலாக்கப்பட்டு, தேர்தல் இலாபம் சம்பாதிக்கப் பார்க்கின்றனர்.

அரசியல் கட்சிகளும் சரி, சமுதாய இயக்கங்களும் சரி, அரசியலுக்கு அப்பாற்பட்டவர்களும் சரி, யாரிடம் கோரிக்கை வைக்கிறார்கள்? மாநில அரசிடமும், மத்திய அரசிடமும்தானே கோரிக்கைகளை வைக்கிறார்கள்?

இந்த நிலையில், மாநில அரசு இப்பிரச்சினையில் சில முயற்சிகளையும், நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் போது, கட்சி மாச்சரியங்களைக் கடந்து ஒத்துழைத்தி ருக்கவேண்டும்.

ஆனால், அப்படியான அணுகுமுறைகளை தமிழ் நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் பெரும்பாலும் கடை பிடித்ததுண்டா?

அரசு கூட்டிய அனைத்துக் கட்சிகள் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை; பிரதமரைச் சந்திக்கச் செல்லும் குழுவில் இடம்பெற மறுப்பு. சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியபோது வெளிநடப்பு, இத்தியாதி - இத்தியாதி நடவடிக்கைகளில் குறிப்பிடத்தக்க சில அரசியல் கட்சிகள் நடந்துகொண்டிருக்கின்றன. இவ்வாறு நடந்துகொண்ட கட்சிகள் அரசு சரியாக செயல்படவில்லை என்று குற்றப்பத்திரிகை படிக்க தகுதி உள்ளவைதானா - உரிமை உடையவைதானா என்பது அர்த்தமிக்க வினாக்களாகும்.

எந்த அளவுக்குத் திசை திருப்பப்பட்டு இருக்கிறது என்றால் பிரதமர், தமிழக முதல்வர் உருவப்படங்களை எரிக்கும் அளவுக்குத் திசை திருப்பப்பட்டு விட்டது.

இதன் விளைவு என்னவாகும்? ஈழத் தமிழர் பிரச்சினையில் தமிழர்கள் கடுமையான அளவுக்குப் பிளவு படவும், ஒருவருக்கொருவர் தீராப் பகைமை கொள்ளவுமான ஒரு நிலையைல்லவா ஏற்படுத்தி இருக்கிறது.

ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமைக்கு, அவர்களின் போராட்ட உணர்வுகளுக்கு இது எந்த வகையில் பயனுள்ளதாக இருக்க முடியும்?


இலங்கை அரசு தமக்குச் சாதகமாக இந்த நிலையைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறதே!

தமிழ்நாட்டில் எதிர்க்கட்சித் தலைவர் (ஜெயலலிதா) கூறுவதைக் கவனியுங்கள் என்று அவர்கள் கூறும் அளவுக்கு நிலைமையைக் கொச்சைப்படுத்தியவர்கள் தமிழர்களின் மத்தியில் குற்றக்கூண்டில் நிறுத்தப்பட வேண்டியவர்கள் அல்லவா?

இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் என்பது அரசியல் சார்பற்றது என்றுதானே தொடக்கத்தில் கூறப்பட்டது. விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் திரு மாவளவன் தொடக்கத்திலேயே அதனைத் தெளிவுபடுத்தினாரே - இப்பொழுது அதன் நிலை என்ன? தேர்தலில் ஆளும் தி.மு.க.வை எதிர்க்கும் ஒரு நிலைப்பாட்டுக்கு சென்று விட்டதே!

இதில் என்ன வேடிக்கையான துன்பம் என்றால் ஈழத் தமிழர்ப் பிரச்சினையில் இலங்கை அதிபர் ராஜபக்சேயின் சோதரிபோல நடந்துகொண்டவர் அதிமுக பொதுச்செயலாளரும் தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவருமான ஜெயலலிதா அல்லவா!

ஈழத்தில் போரை நிறுத்தச் சொல்லுவதே - விடுதலைப் புலிகளைக் காப்பாற்றத்தான் என்று பகிரங்கமாக அறிக்கை வெளியிட்டவர்தானே ஜெயலலிதா?

இந்த நிலையில், ஜெயலலிதா தலைமையை ஏற்றுக் கொண்டு (கூட்டணியில்) இலங்கையில் போர் நிறுத்தம் செய்யப்படவேண்டும் என்று முழக்கம் செய்வதில் பொருள் இருக்க முடியுமா?


இது அக்கட்சிகளின் நேர்மையற்ற போக்கைத்தான் வெளிப்படுத்தும். ஈழத் தமிழர்ப் பிரச்சினையைக்கூட தேர்தல் இலாபத்துக்குத்தான் பயன்படுத்தப் பார்க்கிறார்கள் என்ற உண்மையும், கோணிப் பையிலிருந்து பூனைக்குட்டி வெளியில் வந்ததுபோல வெளிவந்துவிட்டதா இல்லையா?

தமிழ்நாட்டு வாக்காளர்கள் இதனைக் கவனமுடன் பரிசீலிக்கவேண்டும் என்பதே ஈழத் தமிழர்கள்மீது உண்மையான அக்கறை உள்ள நமது வேண்டுகோளாகும்.


------------------"விடுதலை" தலையங்கம் 10-4-2009

5 comments:

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

தில்லியில் பெரியார் மையம் இடிக்கப்படும் சூழ்நிலை வரும்போது இதே வைகோவும், ராம்விலாஸ் பாஸ்வானும் தான் உதவினார்கள் என்று நினைக்கிறேன். கலைஞரோ அல்லது ஜெயலலிதாவோ அல்ல!

தமிழ் ஓவியா said...

வை.கோ தான் உதவினார். அதற்காக அவர் தவறாக எடுக்கும் நிலைப்பாடுகளை ஆதரிக்கச் சொல்லுகிறீர்களா? ஜோதிபாரதி.

கலைஞர் முதல்வராக இருந்த போது வல்லம் பொறியியல் கல்லூரிக்கு தொந்திரவு கொடுத்தார். அதற்காகா இப்போது அவர் எடுக்கும் நல்ல முடிவுகளை எதிர்க்கச் சொல்லுகிறீகளா?

நீங்கள் அந்தப் பொருளில் பின்னூட்டம் இடவில்லையென்றாலும் விளக்கம் தர வேண்டியது எனது கடமை.

Unknown said...

// ஜெயலலிதா தலைமையை ஏற்றுக் கொண்டு (கூட்டணியில்) இலங்கையில் போர் நிறுத்தம் செய்யப்படவேண்டும் என்று முழக்கம் செய்வதில் பொருள் இருக்க முடியுமா?//

ஜெயலிதாவை நம்பி அவர்களும் ஏமாந்து மக்களையும் ஏமாற்றி ஈழத்தமிழர்களையும் ஏமாற்றுகிறார்கள்.

ஜெயலலிதாவை நம்புவது கடைந்த்டுத்த அயோகியத்தனம்.

அனி மாறுங்கள் ஆனால் அமைப்பையே மாற்றிக் கொள்வது அயோக்கியத்தனம் அல்லவா?

Unknown said...

//ஈழத் தமிழர் பிரச்சினையில் தமிழர்கள் கடுமையான அளவுக்குப் பிளவு படவும், ஒருவருக்கொருவர் தீராப் பகைமை கொள்ளவுமான ஒரு நிலையைல்லவா ஏற்படுத்தி இருக்கிறது.

ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமைக்கு, அவர்களின் போராட்ட உணர்வுகளுக்கு இது எந்த வகையில் பயனுள்ளதாக இருக்க முடியும்?//

ஒரு பயனும் ஏற்படப்போவதில்லை. அந்தக் காரியத்தை கணகச்சிதமாக ஜெயலலிதா செய்து விட்டர். முன்பு எதிர்த்துக் கெடுத்தார். இப்போது ஆத்ரித்துக் கெடுக்கிறார். பலியாடுகளாக
வரிசையில் நம்மாட்கள்... வை. கோ.,ராம்தாஸ்.., தா. பாண்டியன்.. இவர்களை நம்பி கூச்சல் போடும் அறிவிலிகள்.....

இரா.சுகுமாரன் said...

///"ஜெயலலிதா போர் நிறுத்தம் செய்யப்படவேண்டும் என்று முழக்கம் செய்வதில் பொருள் உண்டா?"//



செயா நாடகம் ஆடுகிறார் என்பதை மிகச்சரியாக புரிந்து கொண்டிருக்கிறீர்கள் இதற்காக நான் உங்களை பாராட்டுகிறேன்.

இது மோசடியாகும், அதற்காக செயாவை கண்டிக்கலாம்.

அதே போல கருணாநிதியின் நாடகத்தையும் புரிந்து கொள்ளுங்கள்