Search This Blog

18.4.09

திராவிடர் கழகத்தின் தற்போதைய உறுப்பினர்களின் எண்ணிக்கை எத்தனை..? அதனுடைய வளர்ச்சி குறித்து...?


குவைத் "நீதியின் குரல்" இதழுக்குத்
தமிழர் தலைவர் பேட்டி!



பகுத்தறிவுப் பகலவன் - ஈரோட்டுச் சிங்கம் - வெண்தாடி வேங்கை என்றெல்லாம் பலவாறு போற்றப்படுகிற தந்தை பெரியார் ஏற்றிவைத்துச் சென்ற அறிவுச்சுடரை அணையாது காத்து வருபவர் அய்யா கி.வீரமணி ஆவார். திராவிடர் கழகத் தலைவராக மட்டுமன்றி - பெரியார் மணியம்மை பல்கலைக் கழக வேந்தராகவும் - மேலும் பெரியாரின் பெயரில் இயங்கும் பல்வேறு கல்விநிறுவனங்கள் - அறக்கட் டளைகள் என்று அனைத்தையும் கவனித் துக்கொண்டு - கட்டிக்காத்துக் கொண்டு - இன்றும் பெரியார் தொடக்கிவைத்த விடுதலை நாளிதழையும் தொய்வின்றி நடத்திக்கொண்டு அப்பப்பா... இந்த வயதிலும் சற்றும் ஓய்வறியாது, சுற்றும் சூரியனாய் தொண்டாற்றி வருபவர்தான் அய்யா கி.வீரமணி அவர்கள் அவரது சிறப்பு நேர்காணல்:


நீதியின் குரல்: - தற்போது பாட்டாளி மக்கள் கட்சியானது தி.மு.க.விலிருந்து - அ.தி.மு.க.விற்கு அணி மாறியுள்ளதே...? இது குறித்து தாங்கள் என்ன கருதுகிறீர்கள்...?

கி.வீரமணி:- பா.ம.க. எப்போதாவது ஒரு முறை இருந்த கூட்டணியில் மறுமுறை இருந்திருக்கிறதா? கூடுவிட்டு கூடு பாயும் அரசியல் வரவு-செலவுக்காரர்கள் அவர்கள். ஏன் அது பற்றிப் பெரிதும் கவலைப்பட வேண்டும்? ஓட்டுப்பொறுக்கிகளே... உள்ளே கிராமத்திற்குள் வராதீர்கள்..! என்று எழுதி வைக்கச் சொன்னவர்தான் மருத்துவர் அய்யா..! பிறகு என்னவானார்.? அதுபோல நல்ல சர்க்கஸ் வித்தைக்காரர் அவர்!

நீதியின் குரல்:- தமிழகத்தில் மும்முனைப்போட்டியை நான்கு முனைப் போட்டியாக மாற்றியுள்ள நடிகர் விஜய காந்த் பற்றிய தங்களின் மதிப்பீடு என்ன...?


கி.வீரமணி:- வரும் தேர்தல் முடிவும் திருமங்கலம் போலவே அவருக்கு இருக்கும்!


நீதியின் குரல்:-
சென்ற முறைபோல் இப்போதும் தி.மு.க.-காங்கிரஸ் உள்ளிட்ட அணியினர் 40-தொகுதிகளையும் கைப்பற்றுவார்கள் என்று நம்பு கிறீர்களா..?

கி.வீரமணி:- நாளும் செய்யும் - செய்த சாதனைகளை அனுபவிக்கும் தமிழகப் பெருமக்கள் மறக்க வில்லை - நன்றியோடு நினைவுகூர்ந்து வாக்களித்தால் - நாடு வளரும். மக்கள் ஒரு நல்ல ஜனநாயக ஆட்சியை அனுபவிப்பார்கள்.

நீதியின் குரல்:- இலங்கைத் தமிழர் பிரச்சினையில் காங்கிரஸ் கட்சிக்குள்ள முரண்பட்ட கருத்து தமிழக தேர்தல் முடிவுகளைப் பாதிக்குமா?

கி.வீரமணி:- பெரும் அளவு பாதிக்கும் என்று எண்ணவில்லை. ஓரளவுக்கு அதன் தாக்கம் இருக்கக் கூடும். இதுவரை அப்பக்கம் திரும்பாதவர்கள் அதைத் தேர்தலில் அரசியல் மூலதனமாக்கிட முயற்சிக்கிறார்கள். மக்கள் புரிந்து கொள்ளும் சக்தியை பெற்றவர்களே.

நீதியின் குரல்:- மருத்துவர் ராமதாஸ் தேர்தலுக்குத் தேர்தல் அணி மாறுவது குறித்து என்னசொல்ல விரும்புகிறீர்கள்?

கி.வீரமணி:- முதல் பதிலிலேயே எனது கருத்து அடங்கியுள்ளதே...!

நீதியின் குரல்:- வருண் காந்தியின் கைது பற்றிய தங்களின் கருத்து...?

கி.வீரமணி:- சட்ட நடிவடிக்கை தேவையானதே! சட்டத்தின் முன் அனைவரும் சமம். அது பழிவாங்கும் நடவடிக்கையாக அமையாமல் இருந்தால் நல்லது.

நீதியின் குரல்:- சற்று வித்தியாசமான கேள்வி..! எம்.ஜி.ஆர். - கலைஞர் இருவரிடமும் தங்களுக்குப் பிடித்தது என்ன..? பிடிக்காதது என்னென்ன..?

கி.வீரமணி
:- எம்.ஜி.ஆரின் பிறருக்கு உதவும் மனிதநேயம்! கலைஞர் உழைப்பால் எவரோடும் ஒப்பிட முடியாத ஓர் உயர்தனிச்செம்மல்! கடைசிவரை கலைஞரை மரியாதையுடன் தலைவராகவே பார்த்தது எம்.ஜி.ஆரின் தன்மை! எம்.ஜி.ஆரிடம் பிடிக்காதது என்னவென்றால் கட்சியை உடைத்தது. கலைஞரிடம் பிடிக்காதது என்று எதுவுமில்லை! அளவுக்கு மீறிய அவரது இளகும் இதயம் - சிற்சில நேரங்களில்...!

நீதியின் குரல்:- திராவிடர் கழகத்தின் தற்போதைய உறுப்பினர்களின் எண்ணிக்கை எத்தனை..? அதனுடைய வளர்ச்சி குறித்து...?

கி.வீரமணி:- திராவிடர் கழகத்திற்கு கண்ணுக்குத் தெரிந்த கறுப்புச்சட்டை அணியும் எண்ணிக்கை ஒரு ரகம். கண்ணுக்குத் தெரியாத பெரியார் பற்றாளர்கள் - விளம்பரம் இல்லாத பகுத்தறிவாளர்கள் - இன உணர்வாளர்கள் இன்னொரு ரகம். இவர்கள் இருவரும் லட்சக்கணக்கில் வளர்ச்சி பன்னாடுகளிலும் உள்ளது! பெரியார் உலக மயமாகிறார்!

நீதியின் குரல்:- செல்வி ஜெயலலிதா குறித்து இரண்டு வரிகளில் விமரிசியுங்களேன்...?

கி.வீரமணி:- முரட்டுத்துணிவை என்றும் உடையவர்! தனது இந்துத்துவா கொள்கையை மாற்றிடத் தெரியாத திராவிட முத்திரை மட்டும் கொண்டவர்.

நீதியின் குரல்:- எமது குவைத் நீதியின் குரல் வாசகர்களுக்கு தாங்கள் கூற விரும்புவது என்ன..?

கி.வீரமணி:- நீதியின் குரலுக்கு நாம் எப்போதும் செவிமடுத்து நடந்தால்தானே நல்ல சமுதாயம் உருவாக முடியும்...! கடுமையாக உழைக்கும் நமது மக்கள் உடல்நலம் - உள்ள வளம் பெறுவதோடு - சிக்கனமாக வாழ்ந்து சேமியுங்கள்! மற்றவர்களுக்கு வாய்ப்புகிட்டும் போதெல்லாம் உதவத் தவறாதீர்! அறத்தால் வருவதே இன்பம். மற்றவர்கள் உங்களை எப்படி நடத்த வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்களோ, அப்படியே மற்றவர்களிடம் நீங்கள் நடந்து கொள்ளுங்கள் என்பதே ஒழுக்கம் என்பார் தந்தை பெரியார். அவர் கூறும் ஒழுக்கத்துடன் தன்னம்பிக்கையுடன் - சோதனைகளை சாதனைகளாக மாற்றிடும் வெற்றி வாழ்க்கை வாழ வேண்டுமென விழைகிறோம்!!

அய்யா கி.வீரமணி அவர்களிடம் இந்த பேட்டிக்கு முன்னதாக நாம் பேசிக் கொண்டிருந்தபோது... மார்ச்சு மாதம் 31-அன்று முரசொலி அறக்கட்டளை சார்பாக நடந்த விழாவில் முதல்வர் கலைஞர் அவர்களிடம் கலைஞர் விருது பெற்றமைக்காக வாழ்த்து தெரிவித்தோம்! அதோடு குவைத்தில் தந்தை பெரியார் நூலகத்தை நடத்திக் கொண்டிருக்கும் அண்ணன் செல்லப்பெருமாள் அவர்கள் குறித்தும் மாதாமாதம் அவர் நடத்திக் கொண்டிருக்கும் அண்ணா நூற்றாண்டு கருத்தரங்கங்கள் குறித்தும் விரிவாக எடுத்துச்சொல்ல, ஆமாம்! ஆமாம்! அவர் பெரியாரிடம் மிகுந்த பற்றுக் கொண்டவர் - எனக்கு நெடுநாட்களாக அவரைத் தெரியும் என்று மகிழ்ந்தார் அய்யா கி.வீரமணி. தொடர்ந்து நாம் இந்த ஆண்டு இறுதியில் உங்களை அழைத்து விழா நடத்த அண்ணன் செல்லப்பெருமாள் ஆர்வமாக உள்ளார் என்றும் கூற, அவசியம் வருவேன்-வருவேன்!! என்று அழைப்பை இப்போதே ஏற்று ஆர்வத்தை வெளிப்படுத்தினார்.

------ நீதியின் குரல் - ஏப்ரல் 2009

4 comments:

ராவணன் said...

திராவிடர் கழகத்தின் தற்போதைய உறுப்பினர் எண்ணிக்கை தமிழ் ஓவியாவையும் சேர்த்து இரண்டு பேர்.

வீரமணி இந்த கணக்கில் இல்லை.வீரமணி கருணாநிதி திமுகவில் உறுப்பினர்(தற்காலிக).
வீரமணி பின்னர் ஜெயலலிதா கட்சியிலும் உறுப்பினராக வாய்ப்புள்ளது.

தமிழ் ஓவியா said...

//திராவிடர் கழகத்தின் தற்போதைய உறுப்பினர் எண்ணிக்கை தமிழ் ஓவியாவையும் சேர்த்து இரண்டு பேர்.//


உங்களின் புள்ளிவிபரத்தை பார்த்து உலகமே வியந்து போய் விட்டது ராவணன்.

ttpian said...

பெரியார் சாமிகள் மடாலயம்:மடாதிபதி வீரமனி சாமி: சிறப்பு போஜை:சொக்க தங்கம் சொனிஅ போஜை:முதுகுத்தன்டு கிழம் (சிரப்பு போசாரி)
குரங்த கட்டனம்...வாரீர்!

தமிழ் ஓவியா said...

பதிவு தொடர்பான, நாகரிகமான பின்னூட்டங்களுக்கு மட்டுமே மறுமொழி அளிக்கப்படும் ttpian
நன்றி