Search This Blog

10.4.09

திருமணம் செய்யும் போது பார்க்க வேண்டியது ஜாதகப் பொருத்தமா?இரத்தப் பரிசோதனையா?


நம்புவதெல்லாம் உண்மையாகுமா?

காக்கை கரைந்தால் விருந்தாளி வருவார்!

வடகிழக்கு மூலை கருத்தால் மழை வரும்!

ஆடிக்காற்று பலமாக வீசினால் காலமழை நன்றாக இருக்கும்!

ஆவணி 6ஆம் தேதி மேகம் குமுறினால் மழை உண்டு!

ஆவணியில் பிறையின் வடகோடு உயர சுபிட்ச மழை!

மேலே கூறியபடி எல்லாம் நடந்து விடுகிறதா? ஆனால் மக்கள் நடக்கலாம் என்று நம்புகின்றனர்! அது போலவே சோதிடத்தையும் சிலர் நம்புகின்றனர்! நம்புவதெல்லாம் உண்மையாகி விடுமா? - நடந்துதான் விடுமா?

மக்களில் சிலர் சோதிடத்தை நம்புவதால் அது உண்மையாகி விடாது.

ஒரு சோதிடர் பல பேருக்குச் சோதிடம் பார்த்து பலா பலன் செல்லியிருப்பார். அத்தனை பேருக்கும் சோதிடர் சொன்னபடி நடந்ததாகச் சொல்ல முடியுமா? அப்படி ஒரு சோதிடரையாவது காட்ட முடியுமா?


தற்கால வானவியல் வியக்கத்தக்க வளர்ச்சியடைந் திருக்கும் நிலையில் நம்மைச் சுற்றியுள்ள பூமியின் மேற்பரப்பிலுள்ள காற்றழுத்தம், வெப்பம், கடலில் ஏற்படும் புயல், காற்றின் திசை ஆகியவற்றைத் துல்லியமாக நவீன கருவிகளைக் கொண்டுஆராய்ந்து பார்த்து மழை பற்றிய அறிவிப்பைச் செய்கின்றனர்! அப்படியிருந்தும் சில நேரங்களில் மழை பொய்த்துப்போவதுண்டு! எல்லாமே நம்மைச் சுற்றியுள்ளவைகள் தான் ஆனாலும் மழை பற்றி சரியாகச் சொல்ல முடியவில்லை!


அப்படியிருக்க எங்கோ தொலைதூரத்திலுள்ள நட்சத்திரங்கள் கிரகங்கள் பற்றி ஆராய்ச்சியே இல்லாதவர்கள் கிரகங்களைப் பற்றியெல்லாம் இம்பி பிசகாமல் ஆராய்ந்து தனிமனிதனின் வாழ்க்கை நுணுக்கங்களைப் பற்றி சொல்ல முடியும் என்று கூறுவதும் அதை நம்புவதும் சரியாகயிருக்க முடிமா? நம்பலாமா? சிந்திக்க வேண்டாமா?

சோதிடக் கணிப்பும் - நடந்ததும்!

சோதிடர் கணித்துச் சொன்னதற்கு மாறாக நடந்த நிகழ்ச்சிகள் ஏராளம் உண்டு! ஆனாலும் நாடு அறிந்த குறிப்பிட்ட ஒரு சம்பவத்தை எடுத்துக் கொள்வோம்!

2006 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் ஆட்சியைக் கைப்பற்றுவது யார் என்று பிரபல சோதிடர்கள் பலர் கணித்துச் சொன்னபடி நடந்திருந்தால் சோதிடர் சொன்னது நூறு சதவிகிதம் நடந்து விட்டது என்று கூறியிருப்பார்கள்! நடக்காமல் போனதற்கு என்ன காரணம் சொல்லுவார்களோ? அதற்கும் சோதிடர்கள் ஏதாவது செல்லிச்சமாளிப்பார்!

19.10.2007 தினமணி சோதிடரிடம் ஒருவர் விளக்கம் கேட்டிருக்கிறார். என் மகளுக்கு 22 வயது, அவள் சாதகத்தைப் பார்த்த சோதிடர் செவ்வாய் தோஷம் இருக்கிறது என்றார். வேறு ஒரு சோதிடர் எந்தத் தோஷமும் இல்லை என்றார். இன்னொரு சோதிடர் களத்ர தோஷம் உள்ளது என்று சுறியிருக்கிறாரே! எது உண்மை? என்று கேட்டிருக்கிறார். இப்படி ஒவ்வொரு சோதிடரும் ஒவ்வொரு விதமாக் கூறுவதுதான் சோதிடத்தின் துல்லியமான கணக்கா? சோதிடத்தில் எந்தக் கணக்கும் கிடையாது. வாய்க்கு வந்ததைச் சொல்லி நம்மை ஏமாற்றுகின்றனர்.

திருமணப் பொருத்தம்

திருமணத்திற்கு மணமக்கள் தேர்வு செய்வது முன்பெல்லாம் உள்ளூரில் சொந்த பந்தத்தில என்றுதான் இருந்தது. காலப்போக்கில் இந்த நிலை மாறி, கல்வி வேலை வாய்ப்பு என்று நாட்டின் பல பகுதிக்கும் இளைஞர்கள் செல்லும் நிலை ஏற்பட்டுவிட்டதால் மணமக்கள் தேர்வு செய்ய அங்கேயுள்ள திருமணத் தகவல் நிலையங்களை நாட வேண்டிய அவசியம் பெற்றோர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.

மணமக்களின் பெற்றோர்கள் புதிதாக அறிமுகம் ஆவதால் அவர்களைப் பற்றியும், மணமகன் அல்லது மண மகள் பற்றியும் முழுமையாக தீர விசாரித்திடுவது மிகவும் முக்கியம்! முதலில் அந்தக் குடும்பம், அவர்கள் பூர்வீகம், கல்வி மற்றைய விவரம், மணமகனாக இருந்தால் நிலையான வருமானமுள்ள நிரந்தரப் பணியா, ஒழுக்கமுடையவனா அவன் பழகும் நண்பர்கள் பழக்க வழக்கங்கள், பெண்ணை நல்லபடியாக வைத்துக் காப்பாற்றும் திறனுடையவனா என்றும், மணமகளாய் இருந்தால் குடும்பத்திற்கு ஏற்ற குணநலம் கொண்டவளா, பண்புடையவளா, அனுசரித்துப் போகும் இயல்புடையவளா என்றெல்லாம் பார்த்துவிட்டு பேச்சவார்த்தை தொடங்குவதுதான் முறையாகவும் சிறப்பாகவும் இருக்கும்! இப்போது பெற்றோர்கள் எடுத்த எடுப்பில் ஜாதகப் பொருத்தம் என்று பார்க்கிறார்கள்! ஜாதகம் முதலிடம் பெறுகிறது. சில நேரங்களில் நல்ல வரனைக்கூட ஜாதகம் பொருந்தவில்லை என்று கைவிட்டு விடுகிறார்கள்! சிலர் நல்ல வரனை எல்லாம் கழித்துவிட்டு பொருந்தக்கூடிய ஜாதகத்தைத் தேடி ஆண்டுக் கணக்கில் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஜாதகப் பொருத்தம் பார்த்து திருமணம் செய்தவர்கள் எல்லோரும் சிறப்பாக வாழ்கிறார்களா? அவர்களுக்கு கஷ்டம் நஷ்டம் ஏற்படவில்லையா? நோய் நொடி வந்ததில்லையா?குழந்தைப் பாக்கியம் இல்லாதவர்கள் இல்லையா? ஜாதகம் பார்க்காமல் திருமணம் செய்து கொண்டவர்கள் ஏராளமானவர்கள் வாழ்க்கையில் சிறப்போடு வாழத்தானே செய்கிறார்கள்! ஜாதகப் பொருத்தம் பார்த்து திருமணம் செய்தவர்கள் எல்லோரும் வாழ்ந்து விடவில்லை. ஜாதகப் பொருத்தம் பார்க்காமல் திருமணம் செய்தவர்கள் வாழ்வில் தாழ்ந்து விடவும் இல்லை.

பெற்றோர்கள் பிள்ளைகளுக்குத் திருமணம் செய்து வைக்கும் போது பார்க்க வேண்டியது ஜாதகப் பொருத்தமல்ல! இரத்தப் பொருத்தம். இரத்தப் பரிசோதனை!

ஏனெனில், கணவன் இரத்த குரூப் + ஆகவும் மனைவியின் இரத்த - ஆகவும் இருந்தால் குழந்தைப் பேறு இருக்காது. எனவே, மணமக்களின் இரத்தப் பொருத்தம் பார்ப்பதே சிறந்தது! அதை விட்டு விட்டு ஜாதகப் பொருத்தம் பார்ப்பது பயனற்றது என்பதை பெற்றோர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

----------------நன்றி: நூல்:- "சோதிட மறுப்பும் வானவியல் சிறப்பும்"

3 comments:

Unknown said...

பார்ப்பனிய மூடத்தனத்திலிருந்து விடுபட படிக்க வேண்டிய வலைதளத்தில் முத்ன்மையாது உங்களின் வலைதளம். பாராட்டத்தக்க பணி.

//பெற்றோர்கள் பிள்ளைகளுக்குத் திருமணம் செய்து வைக்கும் போது பார்க்க வேண்டியது ஜாதகப் பொருத்தமல்ல! இரத்தப் பொருத்தம். இரத்தப் பரிசோதனை!//

வருக் காலங்களில் இது கட்டாயம் ஆக்கப்படும். அப்போதுதான் ஆரோகியமான பிள்ளைகள் பிறக்கும். சமுதாயமும் நன்றாக இருக்கும்.

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கும்ம் கருத்துக்கும் மிக்க நன்றி

Unknown said...

//ஏனெனில், கணவன் இரத்த குரூப் + ஆகவும் மனைவியின் இரத்த - ஆகவும் இருந்தால் குழந்தைப் பேறு இருக்காது. //

utter idiotic statement