Search This Blog

18.4.09

அம்பேத்கர்- தனது பெயரை பார்ப்பன ஆசிரியரின் நினைவாக வைத்துக் கொண்டாரா? உண்மை என்ன?



அம்பேத்கர் : பார்ப்பனப் பெயரா?

அம்பேத்கர் என்பது ஒரு பார்ப்பனரின் பெயர். இவர், டாக்டர், அம்பேத்கரின் இளமைக்கால பள்ளி ஆசிரியராக இருந்தார். பீம்ராவ் ராம்ஜி என்ற இயற்பெயர் கொண்ட அம்பேத்கருடன் அன்புடன் நடந்துகொண்டு, அவர் தனது வாழ்வில் உயர்வடைய உதவினார்.எனவே, தனது பெயரை தன்னுடைய ஆசிரியரின் நினைவாக அம்பேத்கர் என வைத்துக்கொண்டார்.

மேற்கண்ட ஓர் அப்பட்டமான வரலாற்றுத் திரிபு, பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. பல அறிஞர் பெருமக்கள் கூட இத்திரிபுக்குப் பலியாகி உள்ளனர். ஆனால், உண்மை என்ன?

இந்தக் கதையைப் பதிவு செய்துள்ளவர் யார் தெரியுமா? காந்தி ஓர் அகிம்சாவாதி, வீரசாவர்க்கர் என்ற நூல்களை எழுதிய தனஞ்செய்கீர் என்ற பார்ப்பனர்தான். இந்தப் பார்ப்பனர்தான் மூன்றாவதாக, அம்பேத்கரின் வாழ்வும் லட்சியமும் என்ற நூலை எழுதிப் பல லட்சங்களை சம்பாதித்தவர். இன்று, இந்தப் பொய் எல்லோராலும் ஆராயப்படாமல் ஏற்றுக் கொள்ளப்பட்டு வருகிறது.

இது குறித்து நாம் முன்வைக்கும்சில கேள்விகள்: 1891ஆம் ஆண்டு பிறந்தவர் டாக்டர். அம்பேத்கர். அம்பேத்கர் என்ற பார்ப்பனர் ஒருவர் அப்போது வாழ்ந்திருந்தால், அவர் சந்ததியினர் இன்று என்னவானார்கள்? காந்தியின் சந்ததியினர், நேருவின் சந்ததியினர், ஏன் சங்கராச்சாரியின் சந்ததியினர்கூட இன்று அடையாளம் காட்டப்படும்போது, இவர்கள் குடும்பம் இன்று என்னவாயிற்று?

ராமானுஜர்,சேஷாத்திரி என்பன பார்ப்பனப் பெயர்கள். இந்தப் பெயரில் பல காலகட்டங்களில் பல பார்ப்பனர்கள் வாழ்ந்து வந்துள்ளனர். அம்பேத்கர் ஒரு பார்ப்பனப் பெயரென்றால், அந்தப் பெயருடைய பார்ப்பனர் வேறு எவரும் இதுவரை இல்லையே அது ஏன்? வரலாறு எந்தக் காலகட்டத்திலுமே இதுவரை அம்பேத்கர் என்ற பெயரை அதற்கு முன்பு பதிவு செய்யவில்லை.

அம்பேத்கர் பல நூல்களை எழுதியுள்ளார். இந்த நூல்களில் தனக்கு உதவியதாகக் கூறப்படும் அந்தப் பார்ப்பனர் பற்றி எங்குமே குறிப்பிடவில்லை. ஆனால், அவர் பரோடா மன்னர், முன்ஷி, காமத், மாலவங்கர் போன்ற தமக்கு உதவிய உயர்ஜாதியினரைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.

உண்மை இதுதான்

அண்ணலின் பிறந்த ஊர் அம்பாவடே. அந்த ஊரின் பெயரை முன்னிலைப்படுத்தி அம்பாவடேகர் என்று தன் பெயரை மாற்றியமைத்துக் கொண்டார். பின்னர் இப்பெயர் மராட்டிய இலக்கணப்படி, அம்பேத்கர் எனப் பதிவு செய்யப்பட்டது. (இங்கு குறிஞ்சியார், செஞ்சியார், மதுராந்தகத்தார், ஆத்தூரார் போன்றவற்றுடன் இதை ஒப்பிட்டால், ஒரு தெளிவு கிடைக்கும்.)

இதற்கு முழுக்காரணமானவர், அம்பேத்கரின் இளவயதில் அவரிடம் அன்பு காட்டிய ஆசிரியர் தாதா கேலுஸ்கர். இவர், தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர். அம்பேத்கரின் தந்தை ராம்ஜிசக்பால் அவர்களின் இளமைக்கால நண்பர். இவர்தான் போதி மாதவ் என்ற புத்தரின் வரலாற்று நூலை அம்பேத்கருக்கு அளித்து, அவருக்கு இளவயதிலேயே பவுத்த சிந்தனை தோன்றக் காரணமாக இருந்தவர்.

இதுதான் பீம்ராவ் ராம்ஜி - அம்பேத்கராக மாறிய வரலாறு. இதற்கான ஆதாரத்தை, அம்பேத்கர் லண்டனிலிருந்து தனது ஆசிரியருக்கு எழுதிய கடிதத்தில் காணலாம்.


---------------------- சோபகன் - நன்றி: "எழுச்சி தலித் முரசு" - மே 2000

5 comments:

கோவி.கண்ணன் said...

அருமையான தகவல். மேற்கண்ட திரிபுகளை நானும் பல இடங்களில் படித்து வந்திருக்கிறேன். உண்மையை தெளிய வைத்த இந்தக்கட்டுரைக்கு பாராட்டுகள்

தமிழ் ஓவியா said...

தங்களின் கருத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி தோழர் கோவி.கண்னன்

வஜ்ரா said...

அம்பேத்கார் என்ற பார்ப்பானர் தான் அப்பெயரைச் சூட்டினார் என்று கிரிஸ்டோஃபர் ஜெஃப்பர்லாட் முதல் அனைத்து தரப்புமே சொல்கிறது.

நீங்கள் ஏன் உங்கள் கருத்துக்கு சுட்டிகள் கொடுக்கக்கூடாது?

விக்கிபீடியாவில் கூட ஒரு பார்ப்பானர் தான் அம்பேத்கார் பெயரை சூட்டினார் என்று உள்ளது. அதையும் உங்கள் சுட்டிகள் மூலம் மாற்றலாமே ?

தமிழ் ஓவியா said...

தங்களின் கருத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி vajra

Thamizhan said...

பீம ராவ் என்ற ராவ் என்பதே பலருக்குப் பார்ப்பனப் பெயர் போலத் தோன்றும்.
மராட்டிய "ராவ்" பலர் பார்ப்பனரல்லாதவர்கள்.
வட்ட மேஜை மாநாட்டிலே காந்தியாரே பாபாசாகேப் ஒரு பார்ப்பனர் என்று நினைத்திருந்ததாகச் சொல்வார்கள்.

வெற்றி பெற்றவர்கள் அனைவருக்கும் ஒரு பார்ப்பனீயத் தொடர்பை உண்டாக்குவதும்,அதைச் சரித்திரமாக்குவதுமே அவர்கள் தொழில்.