Search This Blog
10.4.09
பெரியாரும் திண்டுக்கல் பூட்டும்!
இவர்தான் பெரியார்
- அய்யாவிடம் சிக்கிய திண்டுக்கல் பூட்டு!
1970ஆம் ஆண்டு. குளிர் குறைந்து கோடை தலைகாட்டும் பருவம். அப்போது திண்டுக்கல் தனி மாவட்டம் அல்ல; மதுரை மாவட்டத்தில் ஒரு தாலுகா. திண்டுக்கல் நகரம் மற்றும் அதைச் சுற்றிலும் உள்ள சிற்றூர் பேரூர்களில் பெரியார் அவர்கள் சுற்றுப்பயணம் செய்ய திட்டமிட்டு, திண்டுக்கல் நகராட்சி பயணிகள் விடுதியில் வந்து தங்கினார்.
பெரியாரைக் கண்டு மகிழவும் நிகழ்ச்சிகளை உறுதி செய்யவும் கழகத்தவர் பெருந்திரளாக வந்து போயினர். உள்ளூர்க்காரர் என்பதால் ஆர்.கிருஷ்ணமூர்த்தி என்ற பகுத்தறிவுப் பற்றாளர், அய்யாவுடன் வந்த தலைமைக் கழகப் பணியாளர்களுடன் அவரும் ஒருவராகி விட்டார். அவர் எப்போதுமே கருஞ்சட்டையே அணிவார்.
இவரைக் கண்டதும் பெரியாருக்கு ஒரு நினைப்பு வந்தது. என்ன, கிருஷ்ணமூர்த்தி! நீங்க ஓய்வாக இருக்கிறீர்களா? திண்டுக்கல் பூட்டுக்கு பெயர் போனதாயிற்றே! திருச்சி மாளிகைக்கு நீங்க போய் ஒரு பூட்டு வாங்கி வர இயலுமா? பதிலை கூட எதிர் நோக்காமல், தன் பர்சை திறந்து நோட்டுகளை எடுத்தார் பெரியார். இந்த பேற்றினை பெற்றோமே என்ற களிப்பில் சிட்டாகச் சிறகடித்தார் கிருஷ்ணமூர்த்தி.
திண்டுக்கல்லில் காளியப்ப (நாடார்) என்பவர் அய்யாவின் அணுக்கத் தொண்டர். திராவிடர் கழக கூட்ட அமைப்புக்கு கழகத் தோழர்கள் நிதி வசூல் என்றாலே காளியப்ப (நாடாரிடமே) முதலில் நன்கொடை நோட்புக்கை நீட்டுவார்கள். அவருக்கு தொழிலே பூட்டு வணிகந்தான்.
தொழிலாளர்களுக்கு முன்பணமாக தொகை தந்து அவர்கள் தரும் பூட்டுகளை தன் கடையில் வைத்து, சிறிது லாபம் வைத்து விற்பது அவரது வழக்கம்.
அய்யாவுக்கு பூட்டு என்று கிருஷ்ணமூர்த்தி வந்து கேட்டதுமே காளியப்பனாருக்கு தலை கால் புரியவில்லை. மிகத் தரமான ரூபாய் அய்ம்பது பெறுமான பூட்டை தேடிப்பிடித்து, இருபது ரூபாய் மட்டுமே பெற்றுக் கொண்டு எடுத்துக் கொடுத்தார்.
பூட்டின் வேலைப்பாடு, செய்நேர்த்தி, குறைந்த விலையை கேட்டதும் அய்யாவுக்கு மகிழ்ச்சி. சிரிப்பு முகம் முழுதும் பரவியது.
பட்டணத்திலே, திருச்சியிலே இதே பூட்டை 80, 70ன்னு சொல்லி, பட்டப்பகல்லே லைட்டை போட்டே கொள்ளை நடக்குதுய்யா! இங்கே வியாபாரிக மனுஷனா நடந்துக்கிறாங்க. அது போகட்டும், கிருஷ்ணமூர்த்தி, இந்த பணம். இதே மாதிரி இன்னும் ஆறு பூட்டுகள் வாங்கிட்டு வா. சென்னை கட்டடங்களுக்கு தேவைப்படுது. வாங்கிட்டு வா, கிளம்பு, திண்டுக்கல் மனுஷப் பயல் ஊரய்யா! பெரியாரிடமிருந்து உத்தரவு பறந்தது.
கிருஷ்ணமூர்த்தி நிலை குலைந்தார். விட்டத்தை நோக்கி அவர் கண்கள் குத்திட்டன.
என்னப்பா, யோசனை! இருட்டிடுச்சேன்னு பார்க்கிறியா? செலவானாலும் பரவாயில்லை கடை அடைக்கிற சமயமாச்சேன்னு சந்தேகம் வந்தா. பேசாமே குதிரை வண்டியிலே போயாவது வாங்கிடு
வேறு வழியின்றி கிருஷ்ணமூர்த்தி உண்மையை கக்க வேண்டிய வந்தது!
அப்படியா! வியாபாரம்னா வாக்கு சுத்தம், நேர்மை வேணுமய்யா. உண்மையை மறைத்ததும் உன் தப்பு. ஒரு பொய் பல ஒழுங்கீனங்களுக்கு அஸ்திவாரம் பர்சிலிருந்து எடுத்த நோட்டுகள் மறுபடியும் உள்ளே போய் அடங்கியது. கிருஷ்ணமூர்த்திக்கும் மூச்சு விட இலகுவானது.
----------- சந்தனத் தேவன் -"உண்மை" மார்ச் 16-31 2008
Labels:
பெரியார்
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
பெரியார் வாழ்க்கையில் நடந்த சுவையான நிகழ்சியிலும் கொள்கை வீச்சைக் காண முடிகிறது. பெரியாரின் தனித்தன்மை புரிகிறது.
தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
//வியாபாரம்னா வாக்கு சுத்தம், நேர்மை வேணுமய்யா. உண்மையை மறைத்ததும் உன் தப்பு. ஒரு பொய் பல ஒழுங்கீனங்களுக்கு அஸ்திவாரம்//
"ஒரு பொய் பல ஒழுங்கீனங்களுக்கு அஸ்திவாரம்" என்ற பெரியாரின் சிந்தனையைப் படிக்கும் போது என்னையுமறியாமல் ஒருவித உணர்வு மேலிடுகிறது.
எத்தனை பெரிய உண்மையை எளிமையாக வெளிப்படுத்துகிறார். பெரியார் பெரியாரிலும் பெரியார்
Post a Comment