Search This Blog

20.4.09

ஈழப்பிரச்சினையும்-தா.பாண்டியன் அவர்களும்


கொள்கையல்ல - திட்டம்!

அண்ணா தி.மு.க. தலைமையில் தமிழ்நாட்டில் மூன்றாவது அணி ஒன்று உருவாகியுள்ளது. அதன் தொடக்கவிழா சென்னைத் தீவுத் திடலில் நடைபெற்றது (16.4.2009).

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இரண்டு முக்கிய பிரச்சினைகள் மய்யப்படுத்தப்படுகின்றன. ஒன்று ஈழத் தமிழர்ப் பிரச்சினை; இன்னொன்று சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் அமல்.

இந்த இரண்டிலுமே இந்தக் கூட்டணிக்கட்சியில் அடங்கியுள்ளவர்கள் மத்தியில் அடிப்படையிலேயே முரண்பாடுகள் வழிந்து நிற்கின்றன.

ஈழத்தமிழர்ப் பிரச்சினையில் சம்பந்தப்பட்டுள்ள விடுதலைப்புலிகள்பற்றி ஜெயலலிதாவின் கருத்து என்ன? இன்றைக்கு தனியீழம் என்கிற அளவுக்கு வாய் நீளம் காட்டும்போதுகூட விடுதலைப்புலிகள் பற்றிய அந்த அம்மையாரின் அபிப்பிராயத்தில் மாற்றம் இல்லை என்பது கவனிக்கத்தக்கதாகும். ஜெயலலிதாவின் அதே கருத்தைத் தான் விடுதலைப்புலிகள் விஷயத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்)டும் கொண்டிருக்கிறது.

ஜெயலலிதா அம்மையாருக்குத் திடீர் ஞானோதயம் ஏற்பட்டு தனியீழம்பற்றி பிளந்து கட்டுகிறாரே - அந்தக் கருத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுக்கு உடன்பாடில்லை.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (ஈழப் பிரச்சினையில் சமீபகால அக்கறை காட்டும் கட்சி இது) தனியீழத்துக்குக் குரல் கொடுக்கிறதா? என்று தெரியவில்லை; அவர்கள் அதனைத் தெளிவுபடுத்தவும் இல்லை.

ஆனால், மக்களவைத் தேர்தலில் ஈழப் பிரச்சினையை முன் வைக்கப்போவதில்லை என்று கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர் தா. பாண்டியன் இந்தியா டுடே (15.4.2009) இதழுக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டு உள்ளார்.

கேள்வி: தேர்தல் பிரச்சாரத்தில் இலங்கைத் தமிழர் விவகாரத்தை முக்கியமான பிரச்சினையாக்க கட்சிகள் திட்டமிடுகின்றன.

தா.பாண்டியன்: இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, இலங்கைத் தமிழர் விவகாரத்தை அரசியல் - தேர்தல் பிரச்சினையாக முன்வைக்காது. இந்திய நாடாளுமன்றம் போரை நிறுத்தவேண்டும் எனக் கேட்க முடியுமே தவிர, அதற்குமேல் அதற்குப் பங்கு இல்லை; தேர்தலில் அதை முக்கியமாகக் கருதுபவர்கள் முன்பே தனியீழத்தை வாங்கிக் கொடுத்திருக்கலாமே! தமிழ் மக்களின் உயிரைப் பணயம் வைத்து தேர்தலைச் சந்திக்கக் கூடாது என்று கறாராகக் கூறிவிட்டார்.


ஆனால், பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ச. இராமதாசு என்ன கூறுகிறார்?

கல்கி (26.4.2009) இதழுக்கு அளித்துள்ள பேட்டியில் இலங்கைத் தமிழர் விவகாரம் தான் முக்கியப் பிரச்சினையாக தேர்தலில் விவாதிக்கப்படும் என்று கூறியுள்ளார்.

இந்த நிலையில் தேர்தல் பிரச்சார மேடைகளில் தோழர் தா. பாண்டியன் ஒன்று பேச - அதற்கு முரணாக மருத்துவர் பேசுவார் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிப் பேச்சாளரோ இன்னொரு கரடியை அவிழ்த்து விடுவார்... இந்த நிலையில் உள்ளவர்கள் கூட்டுச் சேர்ந்து வாக்குக் கேட்க வருகிறார்கள் என்றால், அதைவிட நகைச்சுவைக் கூத்து வேறு ஒன்றும் இருக்க முடியாது.

சேது சமுத்திரத் திட்டப் பிரச்சினையிலும் இந்த முரண்பாடு முட்டி மோதுகிறது.

மிக முக்கியமான இந்த இரு பிரச்சினைகளை முன்னிறுத்துவதிலேயே முரண்பாடு கொண்டுள்ள கட்சிகள் கூட்டணி வைத்து எங்களுக்கு வாக்குத் தாருங்கள்! என்று கேட்பதில் தார்மீக நெறி இருக்கிறதா? என்பது மிக முக்கியமான வினாவாகும்.

கேட்டால் என்ன சமாதானம் சொல்கிறார்கள்? ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு கொள்கை இருக்கிறது என்பதற்காக அரசியலில் கூட்டணி வைக்காமல் இருக்க முடியுமா? என்று சாமர்த்தியமாகப் பதில் கூற முயற்சித் திருக்கிறார்கள்.

சேது சமுத்திரத் திட்டம் என்பது ஒரு கொள்கைப் பிரச்சினையோ, சித்தாந்தப் பிரச்சினையோ, தத்து வார்த்தப் பிரச்சினையோ அல்ல! ஒரு நாட்டுக்கான வளர்ச்சித் திட்டம். அதனை மறுதலிக்கக் கூடிய ஒரு கட்சி, இவர்களின் கூட்டணிக்குத் தலைமை வகிக்கும்போது மக்கள் வினாக்களை எழுப்பமாட்டார்களா?

காவிரிப் பிரச்சினை, முல்லை பெரியாறு பிரச்சினையில் முரண்பாடாகப் பேசுவதாக வைத்துக்கொள்வோம், அப்பொழுதும் இதே சமாதானத்தைக் கூறுவார்களோ!

அதுவும் கூட்டணிக் கட்சிகள் தேர்தல் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும் முதல் மேடையிலேயே சேது சமுத்திரத் திட்டத்தை ரத்து செய்வோம் என்று அ.இ. அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தல் அறிக்கையாக வெளியிடுகிறார் என்றால், கூட்டுச் சேர்ந்த மற்ற கட்சிகளையும், தலைவர்களையும் எவ்வளவு துச்சமாக மதிக்கிறார் என்பதுதானே இதன் பொருள்?


எங்களுக்குப் பதில் சொல்வதைவிட கூட்டணிக் கட்சித் தலைவர்கள் தங்கள் மனச்சாட்சிக்கு முதலில் பதில் சொல்லட்டும் பார்க்கலாம். எப்படியும் மக்களைச் சந்திக்கத்தானே வருவார்கள் - வாக்குக் கேட்டுதானே வருவார்கள் - மக்கள் வாக்கு எனும் ஆயுதத்தால் தக்க பதிலடி கொடுப்பார்கள் என்பதில் அய்யமில்லை.


-----------------------"விடுதலை" தலையங்கம் 20-4-2009

3 comments:

ttpian said...

அடிமை சுதந்திரமாக பேசமுடியாது!

கரிகாலன் said...

காங்கிரசை அழிப்பதற்காக உயர்த்தப்பட்ட கைகள், இன்று காங்கிரசின் அடிவருடியாக இருப்பது கேவலம் வெட்கக்கேடு.

நம்பி said...

//ttpian said...

அடிமை சுதந்திரமாக பேசமுடியாது!
April 21, 2009 6:21 AM //

இதையும் சுதந்திரமாக அடிமை தான் சொன்னது.