Search This Blog

1.3.09

மனிதனை முட்டாள் ஆக்கவே கடவுள், மதம்


"வயதில் அறிவில் முதியார் நாட்டின்
வாய்மைப் போருக்கு என்றும் இளையார்
உயர் எண்ணங்கள் மலரும் சோலை
ஓதும் இராமசாமி வாழ்க"
.

என்று சரியாக படம் பிடித்தார் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன். அப்படிப்பட்ட

தந்தைபெரியாரின் கருத்துக்கள் "உயர் எண்ணங்கள்" என்ற தலைப்பில் தொகுக்கப்பட்டு நூலாக வெளிவந்துள்ளது. அந்நூலில் உள்ள கருத்துக்கள் இங்கு தரப்படுகிறது. அந்த உயர் எண்ணங்களை நீங்களும் படித்துப் பயன் பெற வேண்டுகிறேன்.

------------------------------------------------------------------------------


10. மதம் - II



உலகில் இந்துக்கள் (இந்தியர்கள்) பரம முட்டாள்களாகக் கருதப்படுகிறவர்கள் ஆவார்கள். இதற்கு காரணம், அவர்களது மதமும், கடவுள்களும், சாதிகளும்தான்.


உலகில் மற்ற நாடுகளில் கடவுளுக்காக மதங்கள் இருக்கின்றன. இந்தியாவில் இந்துக்களுக்காக, மதத்திற்காகக் கடவுள்கள் இருக்கின்றன.

உலகத்தின் மற்ற இடங்களில் கடவுள் அல்லது மதத்திற்காக
சாதிகள் இருக்கின்றன! இந்தியாவில் சாதிகளுக்காகவே கடவுள்கள் -
மதங்கள் இருக்கின்றன.

முட்டாளாக்க மதம்

நமது நாட்டில் மனிதனை முட்டாள் (மூட நம்பிக்கைக்காரனாக) ஆக்கவே கடவுள், மதம் இருக்கின்றன. மக்களை வேறு வேறாகப் பிரிக்கவே கடவுள், மதம் இருக்கின்றன. மனிதனுக்கு மனிதன் வெறுப்பும் வேற்றுமையும் உண்டாக்கவே கடவுள், மதம், சாதி இருக்கின்றன.


தாளம் போடும் ஆட்சி

மற்றொரு குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், நமது நாட்டில் (இந்தியாவில்) மேற்கண்ட தன்மைகளைக் காப்பதையே மூலாதார உரிமையாகக் கொண்ட ஆட்சி (அரசும் - அரசியல் சட்டமும்) இருக்கிறது.


அதிலும் விசேஷமாகக் குறிப்பிடத்தக்கது என்னவென்றால், இப்படிப்பட்ட ஆட்சித் தலைவராக, இத்தன்மைகளைக் காப்பாற்ற வேண்டிய அவசியமுள்ள, இவற்றால் தனிப்பட்ட நன்மை அடைபவர் களே ஆட்சித் தலைமையாளர்களாக இருந்து வருகிறார்கள்.

மதங்கள் ஒழிய

இன்றைய நிலைமையில் இந்தியாவில் பெரும் புரட்சி ஏற்பட்டு, அரசியல் சட்டம் கொளுத்தப்பட்டு வேறு உண்மையான சமதர்ம ஆட்சி ஏற்பட்டால் ஒழிய, இந்நாட்டில் இன்று இருந்துவரும் மேற்கண்ட கடவுள்கள் மதங்கள், சாதிகள் சம்மந்தமான இழிவுகளும் பேதங்களும் ஒழியாது; ஒழியச் செய்ய முடியாது.

நஷ்டப்பட்டவன் - கஷ்டப்பட்டவன்

அரசியலின் பேரால் தங்கள் வாழ்வை நிறுவிக் கொண்ட மக்களுக்கு மானம், வெட்கம், இழிவு என்பது தோன்றாது. நான் அரசியல் மதத்துறையின் பேரால் அயோக்கிய, மூட, சுயநல மக்களால் வெறுக்கப்பட்டவன்; துன்பப்பட்டவன்; நட்டப்பட்டவன்; மானத்தையும் பறிகொடுத்தவன்; மந்திரிப் பதவியை உதறித் தள்ளியவன்.

-------------------------------------- தந்தைபெரியார் – நூல்:-“உயர் எண்ணங்கள்” பக்கம்:- 24-25

3 comments:

Unknown said...

//நமது நாட்டில் மனிதனை முட்டாள் (மூட நம்பிக்கைக்காரனாக) ஆக்கவே கடவுள், மதம் இருக்கின்றன. மக்களை வேறு வேறாகப் பிரிக்கவே கடவுள், மதம் இருக்கின்றன. மனிதனுக்கு மனிதன் வெறுப்பும் வேற்றுமையும் உண்டாக்கவே கடவுள், மதம், சாதி இருக்கின்றன.//

யதார்த்தமான உண்மை

த மி ழ் இ னி யா said...

பெரியாரின் கருத்தை அவ்வப்போது படித்துள்ளேன். அதன் சாராம்சத்தை அறிந்துள்ளேன். சமீபகாலமாக பெரியாரை ஆழ்ந்து படித்து வருகிறேன்.

தனது கருத்தை வெளிப்படையாக, உண்மையை அப்பட்டமாக பதிவு செய்தவர் பெரியார் ஒருவராகத்தான் இருக்க முடியும் என்பது எனது கருத்து.

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

திருநாவு
&
தமிழ் இனியா