Search This Blog

12.5.09

நிமிர்ந்து நில்! காலில் விழாதே!! பெரியார் அறிவுரை




திண்டுக்கல் நகராட்சியில் வீரகேசவன் என்பவர் நகராட்சி அதிகாரியாக இருந்தார். இவர் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த நேர்மையான அதிகாரி. திறம்பட நகராட்சியை நிர்வகித்தார். இருப்பினும் நியாயமாக இவருக்குக் கிடைக்க வேண்டிய பதவி உயர்வு பல ஆண்டுகளாக மறுக்கப்பட்டு, ஒதுக்கப்பட்டார். அண்ணா முதல்வராக இருந்த குறுகிய காலத்தில் இவரது கோரிக்கை வலுப்பெற்றது. எனினும் மேலாதிக்கப் பார்ப்பன அதிகாரிகள் ஏதேதோ எழுதி முட்டுக் கட்டை போட்டனர். நியாயமாகக் கிடைக்க வேண்டிய பதவி உயர்வு இழுபறியானது.

வீரகேசவன் திண்டுக்கல் நகராட்சி உறுப்பினராக இருந்த திராவிடர் கழகத் தோழரிடம் தனக்கு இழைக்கப்பட்டு வரும் அநீதியை விளக்கி, அவர் உதவியுடன் தந்தை பெரியாரை நேரில் கண்டு, தன் குறையைக் கூற விரும்பினார்.

திருச்சியில் புத்தூர் பெரியார் மாளிகையில் தங்கியிருந்த அய்யாவைக் கண்டுபேச புறப்பட்டனர். கூட்டத்தில் அன்று இரண்டு மணி நேரம் உணர்ச்சி பூர்வமாக பெரியார் உரையாற்றியதால், முன்பே நலிவுற்ற அவரது உடல் நலம் மேலும் சீர்கெட்டது.

வயிற்று வலி தாங்கமுடியாமல் வேதனையோடு இருப்பிடம் திரும்பினார் அய்யா.

தேடி வந்த இருவருக்கும் அய்யாவின் உடல் நலம் குன்றியது தெரியாது. விடாமல் தொடர்ந்தே புதூர் வந்தனர். வந்ததும் அய்யாவுக்கு ஓய்வு தேவைப்பட, படுக்கை அறைக்குப் போய்விட்டார். வெளியே புலவர் இமயவரம்பன், காவலுக்கு! வந்த இருவரும் திண்டுக்கல்லில் இருந்து பெரியாரை காண வந்திருப்பதாக கூறவே, சற்று தயங்கியபடியே பெரியாரின் கவனத்திற்கு கொண்டு செல்கிறார் புலவர். உடனே வரச் சொல் என்று அய்யாவின் அனுமதி கிடைக்க வந்தவர்கள், அறைக்குள் நுழைகின்றனர்.

கழகத் தோழர் தன்னுடன் வந்திருக்கும் அதிகாரியை அய்யாவுக்கு அறிமுகப்படுத்துகிறார்.

என்ன! சும்மா சொல்லுங்க! இந்த உடம்பே இப்படித்தான்; இதுக்கு நேரம் காலம் தெரியாது. என்ன காரியமா வந்தீங்க? பெரியார் தைரியமூட்ட, அதிகாரி தனக்கு இழைக்கப்பட்டிருக்கும் அநீதியை சுருக்கிக் கூறுகிறார்.

நீங்க இப்ப சொன்னதெல்லாம் உண்மைதானே? - இது பெரியார். என் வாக்குமூலத்தை விட அலுவலக ரிக்கார்டு உண்மையைக் கூறும், அய்யா.

அப்படிங்களா! இதுக்கு நான் என்ன செய்ய வேண்டுமென எதிர்பார்க்கிறீங்க?

ஊராட்சி - நகராட்சித் துறைக்கு மாண்புமிகு அன்பில் அய்யாதான் அமைச்சர். அவருக்கு தாங்கள் கைப்பட ஒரு கடிதம் தந்தாலே போதும்.

அப்ப, சற்று அந்த நாற்காலியிலே அமருங்கள் வலிக்கும் வயிற்றை பெரியார் இழுத்துப் பிடித்துக் கொண்டே லெட்டர் பேடை தேடுகிறார். தலையணை அடியில் கிடந்த பேனாவை எடுத்து, அய்ந்தே நிமிடத்தில் ஒரு கடிதம் எழுதி, கவரில் முகவரி எழுதி, தானே கவரை ஒட்டி அதிகாரியிடம் தருகிறார். அதிகாரி வீரகேசவனுக்கு தன் நெடுநாளைய குறை தீர்க்கப்பட்டதாக உடம்பெல்லாம் புல்லரிப்பு.

அய்யா! உடல் நலமில்லாதபோது தந்த தொந்தரவுக்கு மன்னிக்க வேணும். பெரிய மனசு வச்சு இதை தாங்கள் ஏற்று என்னை பெருமைப் படுத்த வேணும்.

என்னய்யா இது!

திண்டுக்கல்லிலிருந்து வர்றோம்ல. அங்கே சிறுமலைப் பழம் பேர்போனதாச்சே! அதான் அய்யாவுக்கு வாங்கி வந்தோம்! - தயங்கித் தயங்கி பழக் கூடையை நீட்டினார் அதிகாரி.

மணி! நேத்து திருச்சி பஜார்லே வாங்கி வந்தோமே அந்த பழத்திலே ஒரு சீப்பு எடுத்து வாம்மா பெரியார் குரல் கொடுத்ததும், உள்ளே இருந்த மணியம்மையார் அவர்கள் கையிலே ஒரு சீப்பு பழத்துடன் வந்தார்.

இந்தா பாரய்யா! பழம் எப்படி திரட்சியா இருக்கு. நீங்க கொண்டு வந்ததை விட தரம் நம்பர் ஒன் சரக்கு. எதுவும் எங்கேயும் கிடைக்கும். காசுதான் பிரச்சினை. இவ்வளவு சிரமப்பட்டு தூக்கிச் சுமந்திருக்க வேணாமே! உங்க மனசும் நோகப்படாது. உங்க கூடைப் பழத்திலே ஒரு பழம் போதும். மற்றதை ஊருக்கு எடுத்துட்டுப் போய், வீட்டிலே இருக்கும் பிள்ளை குட்டிக்கிட்டே கொடுங்க - பிய்த்த ஒரு பழத்தை கள்ளங் கபடம் அறியா சிறு பிள்ளை போல தோலுரித்து சாப்பிட்ட காட்சி அபூர்வமானது. இதைக் கண்ட அதிகாரி வீரகேசவன் நெகிழ்ந்தே போனார்.

யாருமே எதிர்பார்க்காத வகையிலே திடீரென அய்யாவின் காலில் நெடுஞ்சாண் கிடையாக விழப்போனார்.

பதறிப்போன பெரியார் அவரை தடுத்து நிறுத்தியதுடன், இது எனக்கு பிடிக்காத சங்கதி. முதல்லே நிமிர்ந்து நில்லுங்க! அதற்குப் பழகிக்க வேணும்; இனிமே யார் காலிலேயும் விழுகிற பழக்கம் வேணாமய்யா! கடிதத்தை அன்பில் கிட்டே சேருங்க. நியாயம் நிச்சயம்!


அதிகாரி வீரகேசவன் ஆகாயத்தில் இறக்கை கட்டிப் பறக்காததுதான் குறை!

--------------- சந்தனத் தேவன் -"உண்மை" ஆகஸ்ட் 16-31 2008

2 comments:

Unknown said...

பெரியார் அய்யாவின் மனிதநேய செயல்களைப் பார்க்கும் போது நம்மையும் அறியாமல் நமது மனம் நெகிழ்ந்து விடுகிறது.

Gokul said...

பெரியார் உண்மையில் பெரியார்தான்..