பரமசிவன் அரிசிக் கடை
மார்கழி மாதத்தில் அஷ்டமி நாளன்று தம் சம்சாரம் மீனாட்சியுடன் சொக்கநாதன் மதுரை நகரில் தெருத் தெருவாகப் போவாராம். சோமசுந்தரம் என்றும் கூறப்படும் இந்நபர் மதுரை வெளிவீதிகளில் மட்டும் நடப்பாராம். இவரின் கால்களைச் சுற்றிலும் நெற்கதிர்கள் கட்டப்பட்டிருக்குமாம். நடக்கும்போது சில நெல்மணிகள் சிந்துமாம். மக்களுக்குப் பரமசிவன் படியளப்பதாகக் கதை விடுகிறார்கள்.
சொக்கநாதனின் அரிசிக்கடையில் பழைய படி வைத்தோ அல்லது தற்போதைய கிலோ வைத்தோ அரிசி வழங்கப்படுவதில்லை! இந்த லட்சணத்தில் படி அளக்கும் பரமசிவன் பட்டம் எப்படிப் பொருந்தும்?
நீராகாரம்தான் உணவு
கல்லினுள் தேரைக்கும் படியளக்கும் பரமசிவனே, பஞ்சத்தால் வெறும் நீராகாரம் மட்டுமே உறிஞ்சி வருகிறாராம்! மதுரை, திருவேங்கடம், ஏடகநாதசாமி கோயிலில் உள்ள சட்டைநாதருக்கு நீராகாரம் மட்டுமே படைக்கப்படுகிறதாம்! சட்டைநாதர் சீர்காழியில் செத்துப் பிணமானார். ஆனால், இந்தக் கோயிலில் இருப்பது ஜீவ சமாதியாம். இங்குதான் நீராகாராம் தருகிறார்கள்.
மருமகன் - மாமியார் கதை
மருமகனுக்கு மாமியார் வீட்டில் பெருத்த மரியாதை கிடைக்கும் என்பார்கள். அதே அளவுக்குக் கைதிகளுக்குச் சாத்துபடி நிறைய கிடைக்கும் என்பதால் சிறைச்சாலையை மாமியார் வீடு என்பார்கள்.
ஆனால், மாமியாருக்காக மருமகன் பட்ட பெரிய சிரமங்களைக் கேள்விப் பட்டது உண்டா?
மீனாட்சியைத் திருமணம் செய்து கொள்ளவிருந்த சோமசுந்தரம் ஏழுகடல் நீரையும் ஒரு குளத்தில் சேர்த்துவரச் செய்தாராம். அந்த உப்புநீரில் குளிப்பதற்குத் தன் எதிர்கால மாமியாரை அழைத்து வருமாறு வருங்கால மனைவியான மீனாட்சியிடம் கூறினாராம். மகளும் போய், அம்மாவிடம் கூறினா ளாம். தன் மருமகன் தன்மீது கொண்ட கரிசனம் கண்டு ஆனந்தக் கண்ணீர் வந்துவிட்டதாம் அம்மையாருக்கு.
உப்புநீர்க் குளியலுக்கு உவகை யுடன் வந்தவளிடம் பண்டாரம் ஒன்று சொல்லியதாம் - கணவனின் கையைப் பிடித்துக் கொண்டு குளிக்க வேண்டும் - மகனின் கையைப் பிடித்துக் கொண்டும் குளிக்கலாம் - இரண்டும் இல்லை என்றால் பசுமாட்டின் வாலைப் பிடித்துக் கொண்டு மாடும் மனுஷியும் ஒன்றாகக் குளிக்க வேண்டும் - என்று கூறியதாம்.
மீனாட்சியின் தாய் தடாதகை கணவனை இழந்தவள்.மகனும் கிடையாது; மகள் மட்டுமே! மகளுக்குத்தான் இந்து மதத்தில் மண்ணளவு மரியாதையும் கூடக் கிடையாதே! மாட்டின் வால்தான் கதி என்று கவலைப்பட்டதை மகள் மீனாட்சி கண்டு தன் எதிர்காலக் கணவனிடம் கூறினாளாம்.
பரமசிவன், மீனாட்சியின் அப்பா, மலையத்துவஜப் பாண்டியனை, சிவ லோகத்திலிருந்து எழுப்பிப் பூலோகம் வரச் செய்தாராம். எல்லாரும் 7 கடல் உப்பு நீரில் குளித்தனராம். பிறகு, மலையத்துவஜப் பாண்டியனுடன் அவன் மனைவி காஞ்சன மாலையும் கரம்கோத்து மேல் உலகம் போய்ச் சேர்ந்தனராம்.
மாமியாரைக் குளிப்பாட்டி, மேலே அனுப்பிவிட்டார் மருமகன் பரமசிவன்.
***
சிவன் கோயிலில் காவல் நாய்
மனிதர்கள் வீட்டைக் காவல் காத்திட நாய் வளர்ப்பது போலவே, பரமசிவன் தன் வீட்டுக் (கோயில்) காவலுக்கு நாய் வளர்க்கிறார். பைரவன் என்ற பெயரில் நாய்தான் சிவன் கோயிலைக் காவல் காக்கிறது. கோயிலில் வடகிழக்குத் திசையில் நாய்க்கு இடம். சங்கிலியால் கட்டப்படாமல் இருக்கும்.
மதுரையில் சொக்கநாதன் கோயி லின் காவல் நாய் மட்டும், ஆவணி மூல வீதியில் இருக்கிறது.
வைணவக் கோயில்களை, மற்ற மற்ற முருகன், பிள்ளையார் கோயில் களில் காவல்நாய்கள் இல்லையே, ஏன்? அந்தந்தக் கடவுள்களே காவல் காக்கின்றனவா? அப்படியானால், காவல் காக்கும் சக்தி பரமசிவனுக்கு கம்மியா?
****
இரு பிறப்பாளன் முருகன்
இரு பிறப்பாளர் என்றால் (துவிஜா) பார்ப்பன, சத்திரிய, வைசியர் என்று தானே மனுநூல் கூறுகிறது! குறப்பெண் ஒருத்தியையும் மீனவப்பெண் ஒருத்தியையும் கட்டிக்கொண்ட முருகன் எப்படி துவிஜா ஆகமுடியும்? என்கிற கேள்விகிளம்புகிறதா?
துவிஜா என்றால் இரண்டுமுறை பிறப்பவன். அப்படியானால் முருகனும் இரண்டு முறை பிறந்தவன்தான்! தெரிந்துகொள்ளுங்கள் புராணத்தை.
மதுரையை ஆண்ட மலையத்துவஜப் பாண்டியனுக்கும், காஞ்சன மாலைக்கும் பிறந்த மீனாட்சிக்கு மூன்று முலைகள். ரவிக்கை தைப்பதிலிருந்து திருமணம் செய்வதுவரை பிரச்சினை ஆயிற்றே என்று தம்பதிகள் கைபிசைந்து கவலைப்பட்டுக் கொண்டு இருந்தனர். கடவுள் கனவில் தோன்றி, அவளைக் கட்டிக் கொள்ளப்போகும் கணவனின் முன்னால் அவள் நிற்கும் போது மூன்றாவது மறைந்துபோகும் என்று ஆறுதல் கூறினானாம்.
அதுபோலவே, சொக்கநாதன், சோமசுந்தரன் எனப்படும் பரமசிவம் மீனாட்சியின் முன்வரவே, மூன்றாவது காணாமல் போய்விட்டதாம். மீனாட்சியை சொக்கனுக்கே கட்டி வைத்தனர். மீனாட்சிக்கும் பிள்ளை பெற்றுக் கொள்ள வேண்டும் என்கிற ஆசை வந்ததாம்! அதற்கான காரியங்களைச் செய்யாமல், சோமசுந்தரம் தன் இளைய மகனை நினைத்தானாம். முருகனும் வந்தானாம். தன் மனைவியின் ஆசையைத் தன் மகனிடம் சொன்னானாம். அவனும் அப்படியே, மீனாட்சியின் கருவில் குந்திக் கொண்டானாம்.
ஒருநாள் மகப்பேறு நடந்தது. முருகன் மீண்டும் யோனி வழி ஜனித்து வெளிவந்தான். மாமன் மாயவனாம் திருமாலும், மாமி திருமகளாம் லட்சுமியும் கருடன் மேலேறிப் பறந்துவந்து, மருகனைப் பார்த்து, மகிழ்ந்து, உக்கிரபாண்டியன் எனப் பேர் வைத்தார்களாம்.
உக்கிரபாண்டியன்தான் முருகன். முருகனாக வந்ததும் உக்கிரபாண்டியன். உக்கிரபாண்டியனாக வந்ததும் முருகன். இப்போது சொல்லுங்கள் - முருகன் இருபிறப்பாளன்தானே!
****
அரவாணிப் பிள்ளையார்!
தம்பி கதை இதுவென்றால், அண்ணன் கதை அரவாணி கதை! மதுரையில் சொக்கநாதனின் அறைக்கு எதிரில் உள்ள தூணில் பாவாடை கட்டிய பிள்ளையார் உருவம் செதுக்கப் பட்டுள்ளது.
ஆனைக்கும் கோவணம் கட்டுவது என்பார்கள் - கடினமான காரியமாம்! இது ஆனை முகத்தானுக்குப் பாவாடை கட்டிய கதை! ஆனை முகத்தான், அரவாணியாகிவிட்ட கதை போலும்!
பாவாடைப் பிள்ளையார் என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள். இந்து மதக் கடவுள்களிடையே என்னென்ன கதைகள், அப்பா! கஷ்டகாலம்!
------------------செங்கோ அவர்கள் 23-5-2009 "விடுதலை" ஞாயிறுமலரில் எழுதியது.
Search This Blog
23.5.09
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
இன்றுதான் முதல் தடவை வருகை தருவது உங்கள் பக்கம். முதல் வருகையிலேயே பின்னூட்டம் போட வைத்துவிட்டீர்கள் வாழ்த்துருக்கள்! தொடருங்கள் சந்திப்போம்!
தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி கலையரசன்
Post a Comment