Search This Blog

5.5.09

பிள்ளையார் உருவம் உடைப்பு - நீதிபதி தீர்ப்பு!



பிள்ளையார் உடைப்பு - நீதிபதி தீர்ப்பு!


மக்கள், வள்ளுர் குறளை ஏற்று நடக்கும் தகுதி பெற்ற பிறகு, அடுத்தபடி என்ன என்று சிந்தித்தேன். புத்தர் கொள்கை பிரசார மாநாடு கூட்டினேன். நாம் எந்த லட்சியத்துக்காக நம் இயக்கத்தினை ஆரம்பித்தோமோ அந்தத் துறையில் நல்ல பலன் ஏற்பட்டு வருகிறது. நம் இயக்கம் நல்ல முறையில் வளர்கிறது, பல கடவுள்கள், உருவ வழிபாடு வேண்டாம் என்று பல ஆண்டுகளாகப் பிரச்சாரம் செய்து வந்தோம். மக்கள் ஒத்துக் கொள்ளவில்லை! ஏனோதானோ என இருந்தார்கள். மீண்டும் இதையே சொல்லிக் கொண்டிருந்தால் பலன் என்ன? விக்ரகங்களை உடைக்க வேண்டும் என்று தீர்மானித்து அதன்படியே முதலாவதாக விநாயக உருவத்தை உடைத்தோம். ஓர் நாள் குறிப்பிட்டு பல்லாயிரக்கணக்கிலே உடைத்துக் காட்டினோம். அது குறித்துகூட சிலர் என் மீது வழக்குத் தொடர்ந்தார்கள்.

4- நாட்களுக்கு முன்னேதான் நீதிபதி ராமன் நாயர் அவர்கள் அந்த வழக்கைத் தள்ளுபடி செய்து விட்டார். தீர்ப்பில் அவர் குறிப்பிட்டது மிகவும் கவனிக்கத்தக்கது. பிள்ளையார் உருவம் அவர்கள் செய்து அவர்கள் உடைக்கிறார்கள் - நீங்கள் ஏன் கேட்கிறீர்கள்? என்று அவர்களைக் கேட்டார். அவர்களுக்கு (ஆஸ்திகர்களுக்கு) இதைப் பார்க்க வயிற்றெரிச்சலாக இருப்பதைக் குறிப்பிட்டார்கள். அதற்கு நீதிபதி "இவர்கள் திடீரென்று உடைக்கவில்லையே! பிள்ளையார் உருவ உடைப்பைப்பற்றி 3- மாத காலமாக பிரச்சாரம் செய்து வந்தார்கள். அவர்கள் உடைக்கும் இடத்திற்கு முட்டாள்தனமாக நீங்கள் ஏன் போனீர்கள்? போய் ஏன் வயிற்றெரிச்சல் படுகிறீர்கள்?" என்று கேட்டார்.


உடைப்பதில் தவறென்ன என்றுதான் நான் கேட்கிறேன்! கடவுள் வேண்டாம் என்று அதை உடைக்கவில்லை. பார்ப்பனன் கற்பனையைத் தான் உடைத்தெறிந்தோம். பிள்ளையாரை உடைத்தால் கடவுளை உடைத்ததாக ஆகாது. புத்தர் சொல்லி இருக்கிறார், உருவ வழிபாடு வேண்டாம் என்று.


நாங்கள் கடவுள் விலக வேண்டும் என்று சொல்லவில்லை. வேண்டும் என்பவர்கள் 98- சதவிதம் இருக்கலாம். சண்டையில்லை நமக்கு அத்தனைப் பேரோடும் கடவுள் இருப்பதாக நம்பினாலும் இத்தனை கடவுள் உருவங்கள் ஏன்? அவைகளுக்கு பூசைகள் எதற்கு? கோவில்கள் எதற்கு? அவைகளுக்கு வைப்பாட்டிகள் எதற்கு? குடும்பங்கள் எதற்கு? என்றுதான் கேட்கிறோம். ஒன்றை மட்டும் நீங்கள் நினைவில் வையுங்கள். நாங்கள் உருவ வழிபாடு வேண்டாம் என்று புத்தர் சொன்னதற்காகச் சொல்பவர்களல்ல. நாங்கள் சொல்கிற கருத்துக்களுக்கு இயல்பாகவே 2500- ஆண்டுகளுக்கு முன்பே உலக மக்களால் பெரிதும் மதிக்கப்படுகிற புத்தர் கூறினார் என்று எங்கள் கருத்துக்கு ஆதாரம் காட்டுகிறோம். வக்கீல் தனது Law report–ல் முன்னாளில் நடந்த தீர்ப்பை எடுத்துக்காட்டுவது போல காட்டுகிறோம்.


புத்தரும் உருவ வழிபாடு வேண்டாம் என்று கூறினார். புத்தர் சாமான்னரல்ல. உலக மக்களால் நன்கு மதிக்கப்படுகிறவர். புத்தர் உயர்ந்தவர், ஞானி என்று எல்லோரும் ஒத்துக் கொண்டுள்ளனர். நம் இந்திய அரசாங்கமே ஒத்துக் கொண்டுள்ளது. புத்தரது சக்கரம் தான் அரசாங்கக் கொடிகளில் உள்ள சக்கரம் - புத்தர் ஸ்தூபிதான் அரசாங்கத்தின் சின்னமாக இருக்கின்றது. புத்தர் நாளை கொண்டாடுவதற்கு என்று "புத்தர் ஜெயந்தி" என்று அரசாங்கத்தார் லீவு விடுகிறார்கள். 4- நாட்களுக்கு முன்புகூட நேரு அவர்கள் புத்தர் ஒரு சிறந்த ஞானி என்று பேசினார். இப்படி அரசாங்கத்தார் மதித்து – மதிப்பளிக்கிறார்கள். புத்தர் கோட்பாடுகளை ஏன் புறக்கணிக்கிறீர்கள்? எங்கள் மீது ஏன் குறை கூறுகிறீர்கள்?


புத்தருக்கும் மற்ற மதத்தலைவர்களுக்கும் பெரிய வேற்றுமை ஒன்று உண்டு. மகம்மதியர்களை எடுத்துக் கொள்ளுங்கள். அவர்கள் "நபிகள் தினம்," என்று கொண்டாடுகிறார்கள். நபிகள் கொள்கையைத் தட்டக் கூடாது அவர் கூற்றுக்கள் தான் வேதவாக்கு என்று இஸ்லாமியர்கள் நம்புகிறார்கள். நடைமுறையில் பின்பற்றுகிறார்கள். கிறிஸ்துவர்களின் நம்பிக்கையும் அவ்வாறே; ஏசுவின் மொழிகளை அப்படியே ஏற்று நடக்க வேண்டும் என்பது தான் மதக்கோட்பாடு. ரஷ்யாவில் கூட லெனின் இப்படிச் சொன்னார், அதுதான் சிறந்தது என்று தம் அறிவை ஒரு வகையரையில் நிறுத்துகின்றார்கள். நமது கம்யூனிஸ்டு தோழர்களும் கூட மார்க்ஸ் இப்படிச் சொன்னார்கள்; மக்கள் இன்பமாக வாழ அவர் காட்டும் வழிதான் சிறந்தது என்று கூறுகிறார்கள்.


ஆனால், புத்தர் அப்படிச் சொல்லவில்லை. "நான் சொல்கிறேன் என்பதற்காக நீங்கள் ஏற்றுக் கொள்ளாதீர்கள் எதையும் யோசித்து ஏற்றுக் கொள்ளுங்கள்" என்று தான் புத்தர் சொன்னார். அதையேதான் சுயமரியாதைக்காரர்களாகிய நாங்களும் 30- வருட காலமாகச் செய்கிறோம். சாதாரணமாக நம் இயக்கத்தில் 30- ஆண்டுகளுக்கு முன்பே சிங்காரவேலு போன்ற அறிஞர்கள் புத்தரது கோட்பாடுகளை விளக்கி மக்களிடையே பிரச்சாரம் செய்து வந்தார்கள். Professor லட்சுமி நரசு போன்றவர்கள், அப்பாதுரை, மணியர் போன்றவர்களும் அக்காலத்திலேயே நம் இயக்கத்தை ஆதரித்து எழுதியிக்கிறார்கள்.

புத்தர் கொள்கை பிரசார மகாநாடு என்று நாம் கூட்டினாலும், இதை பார்ப்பனர்களுக்கு விரோதமாகக் கூட்டப்பட்ட மாநாடு என்று கருதினாலும் தவறில்லை. நம் கருத்தும் அதுதானே. பார்ப்பனன் இந்நாட்டினின்று விரட்டப்பட வேண்டும். கழகத் தோழர்களுக்கு இது ஒரு முக்கியமான திருப்பம். 20- வருடங்களாக நாம் "வழவழ"வென்று ஓயாமல் பேசிக் கொண்டே இருந்து விட்டோம். அதே இடத்திலிராமல் நாம் வேகமாக முன்னேறுகிறோம். கடவுள் உருவங்களை உடைக்கிறோம். நாம் கோவிலை இடிக்க மாட்டோம் - உயிருள்ள விக்ரகங்களையும் உடைக்கவில்லை.

அதாவது, பார்ப்பனன் தொட்டு பூசை செய்கிற வேலையைத் தொடங்கவில்லை. அப்படிப் பார்ப்பனர்களுடைய கோவில் விக்ரகங்களை உடைப்பதாகக் கூறினால் ஒவ்வொரு கடவுளுக்கும் இரண்டு போலீஸ்காரர்களை காவலுக்குப் போட்டு விடுவார்கள். மக்கள் மடமையிலிருந்து கற்பனைப் புளுகுகளிலிருந்து விடுபட வேண்டும்.



--------------23-01-1954 அன்று ஈரோடு புத்தர் மாநாட்டில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய உரையின் ஒரு பகுதி- 29-01-1954 "விடுதலை" இதழில் வெளியானது.
நூல்:-"பெரியார் களஞ்சியம்" தொகுதி -2 பக்கம்:- 265-268

2 comments:

Anonymous said...

மக்களே உலகம் இன்றைக்கு எங்கேயோ போயிட்டுது. இன்றைய தலைப்புச் செய்தி காந்தி சுடப்பட்டார்.

Thamizhan said...

திருக்கல்யாணம் செய்து பணத்தைப் பாழடிக்கும் பக்த கோடிகளே!

வருஷா வருஷம் கல்யாணமா?
போன் வருஷம் பண்ணிய கல்யாணம் என்ன ஆச்சு? விவாகரத்து பண்ணி இந்த ஆண்டு மறு கல்யாண்மா?

கடவுள் பற்றி அவர் கேட்ட கேள்விகளுக்குப் பதில் சொல்லத்தான் ஆளைக்காணோம்.