Search This Blog

30.4.09

"மே" தினமும் -பெரியாரும்

மே நாள்

எட்டுமணி நேரப் பணி, எட்டு மணி நேர ஓய்வு, எட்டு மணி நேர உறக்கம் - என்று 24 மணி நேரம் பிரிக்கப்பட வேண்டும் என்பதே 19ஆம் நூற்றாண்டில் பெரிய கோரிக்கையாக இருந்தது. தொழிலாளர்கள் 18 மணி நேரத்திற்கு மேல் வேலை செய்யும்படி கட்டாயப்படுத்தப்பட்டனர், பெண் தொழிலாளிகள் உள்பட . ஊதியமோ மிகமிகக் குறைவு.

அமெரிக்கா இன்று முதலாளித்துவ நாடு. அன்று, தொழிலாளர் கிளர்ச்சி கிளம்பியது அங்கேதான். சிகாகோ நகரில் ஹே மார்க்கெட் எனும் வைக்கோல் சந்தைப் பகுதியில்தான் தொழிலாளர்களின் பேராட்டம் உச்சநிலையைத் தொட்டது. நாள் 1886 மே 1 ஆம் நாள். தொழிலாளர்கள் தாக்கப்பட்டனர். நான்கு பேர் கொல்லப்பட்டனர். பார்சன்ஸ், ஸ்பைஸ், ஃபிஷர், எங்கெல் எனும் நால்வர் விசாரணை என்று நடத்தப்பட்ட நாடகத்தின் முடிவில் தூக்குத் தண்டனை விதிக்கப் பட்டனர்.

1889 ஜூலை 14 ஃபிரெஞ்சுப் புரட்சி வெற்றி பெற்ற நாள். லூயி மன்னர்களின் பாஸ்டிலி சிறையை மக்கள் உடைத்துப் புரட்சியின் வெற்றி முகடைத் தொட்ட நாள். அந்தப் புரட்சி யின் நூற்றாண்டுக் கொண்டாட்டத்திற்காக பாரிஸ் நகரத்தில் தொழிலாளர்கள் கூடினர். அங்கே எடுக்கப்பட்ட முடிவு தான் -தொழிலாளர்களின் உரிமை நாளாக மே முதல் நாளைப் பாட்டாளி வர்க்கம் கொண்டாடவேண்டும் என்கிற முடிவு.

அதற்கான வேண்டுகோள் விடப்பட்டது. 1890 மே 1 முதல் உலகமெங்கும் மே நாள் கொண்டாடப் படுகிறது.


தொழிலும் இல்லை, தொழில் புரட்சியும் கிடையாது எனும் நிலையில் இருந்த இந்தியாவில் பிறவித் தொழிலாளிகள் மட்டும் உண்டு. அதே போல பிறவி முதலாளிகளும் (பார்ப்பனர்) கல் முதலாளிகளும் (கடவுள்) உண்டு. இங்கேயும் மே நாள் கொண்டாடப்பட வேண்டும் எனக் குரல் தந்தது அகில இந்திய தொழிற் சங்கக் காங்கிரசு - 1927 இல்.

அதற்கு முன்பாகவே - இந்தியாவின் முதல் பொது உடைமை வாதி - இந்தியாவில் பொது உடைமைக் கட்சி தொடங்கப் பட்ட நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கிய சுயமரியாதை வீரர், பகுத்தறிவாளர் ம. சிங்கார வேலர் - 1923 இல் சென்னை உயர்நீதிமன்றக் கடற்கரையில் மேதினம் கொண்டாடியவர். அந்த ஆண்டில் திருவல்லிக்கேணி கடற்கரையில் மேதினக் கொண்டாட்டத்தை கிருஷ்ணசாமி என்பவரும் நடத்தினார் எனும் செய்த தி இந்து நாளி தழில் (2-5-1923) வெளிவந்தது.

அங்கொன்றும், இங்கொன்றுமாகச் சிலரால் நடத்தப்பட்டு வந்த மேநாள் மக்கள் இயக்கமாக அமைப்பு ரீதியாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்று தந்தை பெரியார் வேண்டுகோள் விடுத்து 1931 முதல் மேநாள் கொண்டாட்டங்களை நடத்தி வரச்செய்தார்.

சுயமரியாதை இயக்க விருதுநகர் மாநாட்டில் 7 மணி நேர வேலை மட்டுமே விதிக்கப்பட வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றினார். வெறும் கூலி உயர்வு, போனஸ் போன்ற வற்றிற்கு மட்டுமே குரல் கொடுத்துப் போராடாமல், தொழிலாளர்கள் படிப்படியாகத் தொழிலில் பங்காளிகளாக வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றியவர் தந்தை பெரியார்!

சுயமரியாதை இயக்கத்தையே பொதுஉடைமை இயக்கமாகத்தான் தந்தை பெரியார் தோற்றுவித்தார் என்பதைப் பின்வரும் வரிகளால் அறிந்து கொள்ளலாம்.

"ஒருவன் உழைப்பில் ஒருவன் நோகாமல் சாப்பிடுவது என்கிற தன்மை இருக்கிற வரையிலும் ஒருவன் தினம் ஒரு வேளைக் கஞ்சிக்கு மார்க்கமில்லாமல் பட்டினி கிடந்து சாவதும், மற்றொருவன் தினம் அய்ந்து வேளை சாப்பிட்டு விட்டுச் சாய்மான நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு வயிற்றைத் தடவிக் கொண்டிருக்கிறதும் ஆகிய தன்மை இருக்கிற வரையிலும், ஒருவன் இடுப்புக்கு வேட்டியில்லாமல் திண்டாடுவதும், மற்றொருவன் மூன்று வேட்டி போட்டுக் கொண்டு உல்லாசமாகத் திரிவதுமான தன்மை இருக்கிறவரையிலும், பணக்காரர்கள் எல்லாம் தங்களது செல்வம் முழுமையும் தங்களுடைய சுகவாழ்வுக்கே ஏற்பட்டது என்று கருதிக் கொண்டிருக்கிற தன்மை இருக்கிற வரையிலும் சுயமரியாதை இயக்கம் இருந்தேதான் தீரும்."

மேற்காணும் நோக்கங்கள் தானே கம்யூனிசத்தின் கொள்கைகள்?


------------------"விடுதலை" 30-4-2009

அண்டப் புளுகு, ஆகாசப் புளுகு =" சோ" புளுகு

பச்சைப் "பொய்யர்கள்!"

"தேர்தல் பார்வை" என்னும் தலைப்பில் "துக்ளக்" இதழில் அதன் ஆசிரியர் "சோ" ராமசாமி அய்யர் தொடர்ந்து எழுதிக் கொண்டு வருகிறார். அதில் 6 ஆவது பகுதியில் ("துக்ளக்", 6.5.2009) பா.ஜ.க. மத்தியில் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதற்கான காரணங்களைக் கூற முயற்சித்துள்ளார்.

(1) பா.ஜ.க.வை மதவாதக் கட்சி என்று காங்கிரசும், இடதுசாரிகளும், வேறு சில கட்சிகளும் கூறுவது பொய்ப் பிரச்சாரமாம். பா.ஜ.க. ஆட்சியில் மதக்கலவரங்கள் இல்லை; கோத்ரா ரயில் எரிப்புக்குப் பிறகு நடந்த அராஜக நிகழ்ச்சிகள் கண்டனத்துக்குரியவை; அதற்குப் பா.ஜ.க.வைப் பொறுப்பாக்க முடியாது என்று கூறுகிறார்.

பொய் பேசுவதுபற்றி பார்ப்பனர்கள் கொஞ்சமும் வெட்கப்படக் கூடியவர்கள் அல்லர் என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டு. பா.ஜ.க. ஆட்சியில் மதக்கலவரங்கள் இல்லை என்று சொல்ல வந்த நிலையில் உடனே குஜராத் மதக்கலவரம் அவர் மனக்கண்முன் படம் எடுத்திருக்கும். அதற்கு ஏதாவது சமாதானம் சொல்லவேண்டுமே - அதற்குத்தான் இந்தச் சப்பைக் கட்டு!

குஜராத் மதக்கலவரம் கண்டனத்துக்குரியதுதானாம்; ஆனால், அதற்குப் பா.ஜ.க.வைப் பொறுப்பாக்க முடியாதாம் - அப்படியானால் அங்கு ஆட்சி செலுத்திக் கொண் டிருந்த முதலமைச்சர் நரேந்திரபாய் தாமோதரதாஸ் மோடி யார்? அவர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவரா!

ஒரு மாநிலத்தில் குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் 2000 பேர் படுகொலை செய்யப்படுகின்றனர்; அந்தச் சமுதாயத்தினரின் வீடுகளும், வணிக நிறுவனங் களும் அடித்து நொறுக்கப்படுகின்றன; எரியூட்டப்படுகின்றன என்றால், அவை தடுக்கப்படாமல் போனதற்கு யார்தான் பொறுப்பு? எல்லாம் கடவுள் செயல்; எது நடக்கவேண்டுமோ அது நடந்தே தீரும் என்கிற இந்துமதப் பித்தலாட்டத்தைக் காரணமாகக் கூறப் போகிறார்களா?

அன்றைக்குக் குஜராத்தில் மட்டுமல்ல; மத்தியிலும் பா.ஜ.க.தான் ஆட்சியில் அமர்ந்திருந்தது. அன்றைய குடியரசுத் தலைவர் கே.ஆர். நாராயணன் அவர்கள் பிரதமரிடம் தொடர்புகொண்டு கேட்டுக்கொண்டும் குஜராத்தில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்பது எவ்வளவுப் பெரிய கேவலம்!

பாதிக்கப்பட்ட சிறுபான்மை மக்கள் அகதிகளின் முகாம்களில் தங்கியிருந்ததைக்கூட பா.ஜ.க. முதலமைச் சரான மோடி கொச்சைப்படுத்தினார் (மக்கள் பெருக்கத் துக்கு அது பயன்படுகிறதாம்!) என்றால், அந்த மனிதர் தான் அங்கு சிறுபான்மை மக்கள் திட்டமிடப்பட்ட வகையில் படுகொலை செய்யப்பட்டதற்குக் காரணம் என்பதில் சந்தேகம் ஏது?

குஜராத் கலவரத்தைத் தொடர்ந்து வெளிநாடு செல்ல வேண்டியிருந்த பிரதமர் வாஜ்பேயி, நான் எந்த முகத்துடன் செல்லுவேன்? என்று சொன்னாரே - அந்த வெட்கத்தில் புதைந்து கிடக்கும் அருவருப்புகள் என்ன?

அரசியல் கட்சிகள் குற்றம் சுமத்துவது ஒருபுறம் இருக்கட்டும்; உச்சநீதிமன்றமே நரேந்திர மோடியை நீரோ மன்னன் என்று படம் பிடித்ததே - அதன் பொருள் என்ன? குஜராத்தில் டெகல்கா ஊடகம் வெளிப்படுத்திய வீடியோ சாட்சியங்கள் சாதாரணமானவை தானா?

குஜராத் மதக்கலவரத்தில் மோடியின் பங்கு என்ன? நிலைப்பாடு என்ன? என்பது விசாரிக்கப்படவேண்டும் என்று உச்சநீதிமன்றமே சொல்லும் அளவுக்கு ஆகிவிட்டதே - குஜராத் மோடி அரசால் தள்ளுபடி செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான வழக்குகள் மீண்டும் விசாரணைக்கு உட்படுத்தப்படவேண்டும் என்றும் நீதிமன்றம் கூறி விட்டதே - இவையெல்லாம் குஜராத்தில் நடந்த மதக் கல வரங்களுக்கும், பா.ஜ.க. ஆட்சிக்கும் சம்பந்தா சம்பந்தமே இல்லை என்பதற்கான ஆதாரப் பட்டியல்களா?

குஜராத் மதக் கலவரத்தில் பொடா சட்டத்தின்கீழ் சிறையில் தள்ளப்பட்டவர்கள் 287 பேர்கள் என்றால், அதில் முசுலிம்கள் மட்டும் 286; மற்றொருவர் சீக்கியர்.

பாதிப்புக்கு ஆளான மக்களே குற்றவாளிகள் என்கிற ஒரு குலத்துக்கொரு நீதி சொல்லும் மனுதர்மத்தின் புதிய பதிப்பான பா.ஜ.க. ஆட்சி மோடி தலைமையில் நடக்கிறது என்பதுதானே இதன் பொருள்?

போகிற போக்கைப் பார்த்தால் காந்தியைக் கொன்ற நாதுராம் கோட்சேயை ஹிந்து என்று எப்படி கூற முடியும்? என்று கூட சோ கூட்டம் சொன்னாலும் ஆச்சரியப்படு வதற்கில்லை.

ஒரு புதுமொழியை உற்பத்தி செய்துவிடலாம். அண்டப் புளுகு, ஆகாசப் புளுகு என்று இனிமேல் கூறவேண்டாம்; சோ புளுகு என்ற பதத்தைப் பயன்படுத்தலாம்.


----------------"விடுதலை"தலையங்கம் 30-4-2009

புரட்சியாளர்அம்பேத்கர் : வேதனைகளும் - சாதனைகளும்




இந்தியத் துணைக் கண்டத்தில் இருபதாம் நூற்றாண்டின் மாபெரும் சமூகப் புரட்சியாளர், அண்ணல் அம்பேத்கர். இந்து மதத்தில் பஞ்சமர் எனும் தாழ்வுக்கு உள்ளாகி, அடக்கி ஒடுக்கப்பட்டு ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அல்லல்பட்ட மக்களின் உரிமையை மீட்டவர்; என்றும் நிலையான வடமீனைப் போல் வழிகாட்டி நிற்பவர்; ஒட்டுமொத்தமான மனித இனத்தின் மாண்பை உயர்த்தியவர்.

பெயரும் ஊரும்

மத்தியப் பிரதேசத்தில் இந்தூர் எனும் மாநகரைச் சேர்ந்த மாவ் எனும் இடத்தில் 1891 ஏப்ரல் 14இல், தம் பெற்றோருக்குப் 14ஆவது குழந்தையாக அம்பேத்கர் பிறந்தார். அப்பொழுது அவருடைய தந்தை, ராம்ஜி சக்பால் ராணுவத்தில் சுபேதார்-மேஜராக இருந்தார். தன் மகனுக்கு பீம்ராவ் அம்பவடேகர் எனப் பெயரிட்டார். அம்பவடே என்பது மகாராஷ்டிரத்தில் ரத்னகிரி மாவட்டத்தில் உள்ள அவர்களின் பூர்விகமான ஊர். ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற பின்பு, மகாராஷ்டிரத்திற்குத் திரும்பிய ராம்ஜி, சதாராவில் ஒரு பணியில் அமர்ந்தார். அந்த ஊர் பள்ளியில் பீம்ராவ் சிறுவனாகச் சேர்ந்து படித்தார். அப்பள்ளி ஆசிரியர்களில் ஒருவரின் பெயர், அம்பேத்கர், அவருக்கு இச்சிறுவனின் இனிய நடத்தை பிடித்திருந்தது. ஆகையால், அம்பவடேகர் என்பதற்குப் பதிலாக அம்பேத்கர் என்பதைச் சேர்த்து, பீம் ராவ் அம்பேத்கர் எனப் பதிவுசெய்து விட்டார்.

தீண்டாமை, ஏழ்மை

தந்தை மும்பைக்குச் சென்றபொழுது, அங்கிருந்த எல்ஃபின்ஸ்டன் உயர்நிலைப் பள்ளியில் அம்பேத்கர் சேர்ந்தார். மஹர் எனும் தாழ்த்தப்பட்ட ஜாதியில் பிறந்த காரணத்தால், படிப்பின் பொழுது தீண்டாமைக் கொடுமைக்கு ஆளானார். இடையிலே கட்டிய ஒரே துணியுடன் பல நாட்கள் பள்ளிக்குச் சென்றார். குடிநீர் இல்லாமல் நாவறட்சியுடன் வீடுதிரும்பியதும் உண்டு. இவ்வாறு எத்தனையோ இடர்கள். மும்பையில் தொழிலாளர் நிறைந்த பரேல் பகுதியில், முதலில் ஓர் அறை கொண்ட வீட்டிலும், பின்பு இரண்டு அறைகள் கொண்ட வீட்டிலும் குடியிருந்தனர். இவர் கீழ் ஜாதி ஆகையால், பள்ளியில் மராத்திய மொழியுடன் சமஸ்கிருதம் படிக்க அனுமதிக்கப்படவில்லை! ஆகையால் பாரசீக மொழியைப் படித்தார். கலை இளநிலை (பி.ஏ.) பட்டம்பெற்று, பரோடா அரசில் சிலகாலம் பணியிலிருந்தார்; ஆனால், 1913இல் தந்தை இறந்தபின் பணியை விட்டார்.

மேல்நாட்டில்

அமெரிக்க நாட்டின் கொலம்பியா பல்கலைக் கழகத்தில் உயர்கல்வி கற்றார், அம்பேத்கர். பரோடா (இப்பொழுது, வடோதரா) அரசர் அதற்கு உதவித் தொகை அளித்தார். பழங்கால இந்திய வணிகத்தைப் பற்றிய ஆய்வுக் கட்டுரை எழுதி, கலை முதுநிலை (எம்.ஏ.) பட்டதாரி ஆனார். மறுஆண்டு, 1916 ஜுனில், இந்திய நாட்டின் வருமானம் பற்றிய ஆய்வு ஏட்டை அளித்து, முனைவர் பட்டம் பெற்றார். அமெரிக்காவில் இருந்து இங்கிலாந்து சென்றார். மற்றொரு முனைவர் பட்டம் பெறுவதற்கு லண்டன் பல்கலையில் சேர்ந்தார். அத்துடன் சட்டப்படிப்பிற்கும் பதிவு செய்து கொண்டார். ஆனால், இந்தப் படிப்பு களைப் பாதியில் நிறுத்திக்கொண்டு இந்தியா விற்குத் திரும்ப வேண்டியதாயிற்று. ஒப்பந்தப் படி, பரோடா அரசில் பணியேற்றார்.

கண்ணீர் சிந்தினார்

பரோடா (வடோதரா) சென்று, அரசரின் ராணுவச் செயலாளர் பொறுப்பில் அமர்ந்தார். அங்கிருந்த மேல்ஜாதி இந்துக்கள், இவருக்குக் கீழ் வேலை செய்தவர்களும்கூட, உயர்ந்த படிப்பை முடித்திருந்த அம்பேத்கரைத் தீண்டத் தகாதவராகவே நடத்தினர். தங்குவதற்கு இடம் கொடுக்க மறுத்தனர். பார்சி மதத்தவர்களின் விடுதியில் தங்கினார். இவர் ஒரு தாழ்த்தப் பட்டவர் எனத் தெரிந்து, அங்கிருந்து வெளியேற்றிவிட்டார்கள். ஒரு மரத்தடியில் அமர்ந்து கண்ணீர் விட்டார்; மெத்தப் படித்தும், மேல் நாட்டு அனுபவம் பெற்றும் பயனில்லை! மும்பைக்குத் திரும்பினார்.

மாநாடுகள்

மும்பை தொழிலாளர் பகுதியில் குடியிருந்து கொண்டே, 1918 நவம்பர் முதல் 1920 ஜூலை வரை, சிடனாம் வணிகவியல், மற்றும் பொருளா தாரக் கல்லூரியில் பேராசிரியராகப் பணி செய்தார். இடையில், மூக் நாயக் (ஊமையர் தலைவர்) எனும் இருவார இதழ் தொடங்கினார். கோலாப்பூரில் மங்காவ் எனும் இடத்திலும், நாக்பூரிலும் நடந்த தீண்டப்படாதவர்களின் மாநாடுகளில் உரையாற்றினார். எதிர்காலத்தில், இந்தியாவின் முன்னணித் தலைவராக அம்பேத்கர் திகழ்வார் என மங்காவ் மாநாட்டில், கோலாப்பூரின் சீர்திருத்த அரசரும், சமூகநீதி முன்னோடியுமான சாகுமகராஜ் முன்கூட்டியே கணித்துச் சொன்னார்.

1920இன் பிற்காலத்தில் மீண்டும் லண்டன் சென்ற அம்பேத்கர், 1923 ஏப்ரல் வரை படிப்பைத் தொடர்ந்தார். சட்டத்தில் பட்டம் பெற்று வழக்குரைஞராகப் பதிவு செய்து கொண்டார். ரூபாயின் சிக்கல் எனும் தலைப்பில் ஆய்வு செய்து எழுதி, பொருளாதாரத்தில் இரண்டாவது முனைவர் பட்டம் பெற்றார்.

மனுநூல் எரிப்பு

இவர் இந்தியா திரும்பியபொழுது, முதலில் மாவட்ட நீதிபதியாகவும், பின்பு உயர்நீதிமன்ற நீதிபதியாகவும் நியமிக்க, பிரிட்டிஷ் அரசு முன்வந்தது. ஆனால், அதை அம்பேத்கர் ஏற்க வில்லை. உயர்நீதிமன்ற வழக்கறிஞராகத் தொழில் செய்தார். 1924இல் ஒதுக்கப்பட்டோர் நலவாழ்வுச் சங்கம் நிறுவி, அதன் மேலாண் மைக் குழுவின் தலைமைப் பொறுப்பு ஏற்றார். மகாராஷ்டிர மாநிலத்தில், கொலாபா மாவட்டத்தைச் சேர்த்து மகாடு நகரம், அதில் உள்ள குளத்திற்குப் பெயர் சவ்தார் ஏரி என்பதாகும். 1927 மார்ச்சில், அக்குளத்தில் நீர் அள்ளு வதற்கு உரிய தாழ்த்தப்பட்டவர்களின் உரிமையை அம்பேத்கர் நிலைநாட்டினார். பல ஆயிரம்பேர் அதில் கலந்துகொண்டனர். ஆனால், அவர்கள் தங்களுடைய ஊர் திரும்பு கையில், மேல்ஜாதியார் அவர்களைத் தாக்கினர். சிலநாள் கழித்து, தீட்டுப்பட்ட குளத்தைத் தூய்மைப்படுத்தச் சமஸ்கிருத மந்திரங்கள் ஓதி, வேதியர் சடங்குகள் செய்தனர்! ஆகை யால், தம்முடைய மக்களை, அதே மகாடு நகரில் 1927 டிசம்பரில் கூட்டி, ஒரு குலத்திற்கு ஒரு நீதி கூறும் மனுதரும நூலின் படியை எரித்தார். இதற்கு இடையில், தம்முடைய நியாயங்களையும், தாழ்த்தப்பட்டோர் நிலையையும் விளக்க, பஹிஷ்கிரித் பாரத் எனும் இதழ் ஒன்றை 1927 ஏப்ரல் 3இல் தொடங்கினார்.

வகுப்புரிமை

சட்டமன்ற உறுப்பினராக 1927இல் நியமனம் பெற்ற அம்பேத்கர், 1928இல் சைமன் ஆணையத்திடம் சாட்சியம் அளித்தபொழுது வகுப்புரிமையை வலியுறுத்தினார். லண்டனில் வட்டமேஜை மாநாடுகளில் (1930-32) கலந்து கொண்டு, தாழ்த்தப்பட்டோர் எனப்பட்ட பட்டியல்ஜாதி மக்களுக்குத் தனிவாக் குரிமைக்காக வாதாடினார். இவருடைய சிறப்பான வாதத்தை ஏற்று, அதற்குத்தக, பிரிடிஷ் பிரதமர் மெக்டனால்டு வகுப்புத் தீர்வை அளித்தார். ஆனால், அதை எதிர்த்துச் சாகும் வரை உண்ணாமையைக் காந்தியார் அறிவித்தார். அவர் உயிரைக் காப்பதற்காக, தம் நிலையில் இருந்து அம்பேத்கர் இறங்கி வந்து, தனி வாக்குரிமைக்கு மாற்றாகத் தொகுதி ஒதுக்கீடு என்பதை ஏற்றார். அது பூனா, ஒப்பந்தம் எனப்படுகிறது.

மேலும் சாதனைகள்

1937இல் மாநிலச் சட்டமன்றத் தேர்தலில், அம்பேத்கரின் சுதந்திரத் தொழிலாளர் கட்சி, 17 இடங்களுக்குப் போட்டியிட்டு, 15இல் வெற்றி பெற்றது. 1942இல் வைஸ்ராயின் நிருவாகக் குழு உறுப்பினர் ஆனார்; தொழிலாளர் துறைப் பொறுப்பேற்றார். வேலை நேரத்தைக் குறைத் தார்; பட்டியல் ஜாதியாருக்கு இடஒதுக்கீடு தந்தார்.

விடுதலை பெற்ற இந்தியாவின் சட்ட அமைச்சர் ஆனார், அம்பேத்கர். இந்திய அரசமைப்புச் சட்ட வரைவுக் குழுவிற்குத் தலைவராக இருந்து சாதனை புரிந்தார். பார்ப்பனர் இடையே செயல்பட வேண்டியிருந்தும், கூடிய வரையில் வகுப்புரிமைக்கு வகை செய்தார். உறுதியளித்தபடி, இந்து சட்டத் தொகுப்பு மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற பிரதமர் நேரு தவறிய தால், 1951இல் அம்பேத்கர் பதவி விலகினார். 1952இல் நாடாளுமன்ற மாநிலங்கள் அவை உறுப்பினர் ஆனார்.

தாம் ஓர் இந்துவாகப் பிறந்தாலும், இந்துவாக இறக்கப் போவதில்லை என்ற அறிவிப்பை, ஏலா மாநாட்டில்1935இல் அண்ணல் அம்பேத்கர் அறிவித்தார். அதன்படி இலட்சக்கணக்கான மக்களுடன், அறிவு மதமாகிய பவுத்தத்தில் 1956 அக்டோபர் 14இல் இணைந்தார். அதே ஆண்டு டிசம்பர் 6இல் இயற்கை எய்தினார். அவர் எழுதிய பல நூல்களில், (புத்தரும், அவருடைய அறமும்) என்பது தலைசிறந்த ஒன்றாகும்.

------------------- கு.வெ.கி.ஆசான் அவர்கள் ஏப்ரல் 2009 "பெரியார் பிஞ்சு" இதழில் எழுதிய கட்டுரை

கலைஞர் இந்த உண்ணாவிரதத்தை இருபது நாட்களுக்கு முன்பு செய்திருந்தால்?

வேண்டாம் என்றனர் மூவர்: கலைஞர்
--
செய்தியாளர் : இந்த உண்ணாவிரதத்தை இருபது நாட்களுக்கு முன்பு செய்திருந்தால் இன்னும் பல உயிர்களைக் காப்பாற்றிருக்க முடியும் என்று சொல்கிறார்களே?

கலைஞர் : திருமாவளவன், டாக்டர் ராமதாஸ், கி.வீரமணி ஆகியோர் எல்லாம் என்னிடம் வந்து பேசிய போது - அன்றைக்கே நான் உண்ணா விரத்தைத் தொடங்கட்டுமா என்று இரண்டு மாதங்களுக்கு முன்பே கேட்டேன். கூடாது, கூடாது நீங்கள் உண்ணாவிரதம் இருக்கக் கூடாது, வேறு மாதிரி போராட்டம் தான் நடத்த வேண்டுமென்று அவர்கள் சொன்னார்கள். அதற்கு திருமாவளவன் சாட்சி, கி.வீரமணி சாட்சி, டாக்டர் ராமதாசுக்கு மனசாட்சி.

--------------------"விடுதலை" -29-4-2009

29.4.09

ஈழத்தமிழர்களும்-நிவாரணப்பணிகளும்

நிவாரணப் பணிகள்

கடும்யுத்தத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள இலட்சக்கணக்கான ஈழத் தமிழர் குடும்பங்களுக்கு நிவாரண உதவிகள் மிகவும் அதிகமாகத் தேவைப்படும் காலகட்டம் இது.

பாதிக்கப்பட்டுள்ள ஈழத் தமிழ் மக்களை ஒளிப்படங்களிலும், தொலைக்காட்சிகளிலும் பார்க்கும்போது பஞ்சத்தில் அடிபட்ட சோமாலியா நாட்டு மக்களைப் பார்ப்பதுபோல இருக்கிறது; நெஞ்சமெல்லாம் கனக்கிறது.

இந்த நேரத்தில் அவர்கள் புதுவாழ்வு பெற, நலவாழ்வு மேற்கொள்ள பல்வேறு உதவிகள் தேவைப்படுகின்றன.

தமிழ்நாடு அரசின் சார்பில் முதல் கட்டமாக 80 ஆயிரம் குடும்பங்களுக்குத் தேவைப்படும் அரிசி, பருப்பு, சர்க்கரை, தேயிலை, சோப்பு, பற்பசை மற்றும் துணி வகைகள் (ரூபாய் 10 கோடியே 6 இலட்சம் மதிப்புடை யவை) கப்பல்கள் மூலமாக இலங்கைத் தூதரகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன (13.11.2008). பன்னாட்டு செஞ்சிலுவைச் சங்கத்தின்மூலம் பாதிக்கப்பட்ட ஈழத் தமிழர்களுக்கு அளிக்கப்பட்டன.

இரண்டாம் கட்டமாக 40 ஆயிரம் ஈழத் தமிழர்களின் குடும்பங்களுக்குப் பயன்பெறும் வகையில் உணவுப் பொருள்கள், துணிகள், சமையல் பாத்திரங்கள் (ரூபாய் ஆறு கோடியே 40 லட்சம் மதிப்பு) இந்தியத் தூதரகத்திற்குக் கப்பல்கள் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டன (22.4.2009). தற்காலிகமாக முகாம்களில் தங்கியுள்ள தமிழ்க் குடும்பங்களுக்கு பன்னாட்டு செஞ்சிலுவை சங்கங்கள்மூலம் விநியோகிக்கப்பட உள்ளன.

மூன்றாம் கட்டமாக தற்காலிக முகாம்களுக்குக் கூடுதலாக வந்து சேர்ந்துள்ள தமிழர்கள் பயனடையும் வண்ணம் மேற்கண்ட பொருள்கள் (ரூ.7 கோடியே 50 ஆயிரம் மதிப்புடையவை) அனுப்பி வைக்க தமிழ்நாடு அரசு ஏற்பாடுகளைச் செய்து வருகிறது.

குடிநீரைச் சுத்திகரிக்கும் வில்லைகள், குழந்தைகளுக்குப் பயன்படும் உணவுப் பொருள்கள் (10 ஆயிரம் கிலோ எடை) மே 5 ஆம் தேதிக்குள் அனுப்பப்பட உள்ளன.

ஈழத் தமிழர்களுக்காக தமிழ்நாடு அரசால் திரட்டப்பட்ட நிதியிலிருந்து எஞ்சிய தொகை ரூ.25 கோடி நிதி உதவி செய்யப்பட உள்ளது. இந்திய அரசும் தன் பங்குக்கு ரூபாய் 100 கோடி வழங்கிடவுள்ளது.

இது அல்லாமல், அய்.நா. மூலமாகவும் உதவிகள் வழங்கப்படுகின்றன. இன்னும் தேவையான அளவுக்கு உதவிகளை மனிதநேயத்துடன் உலகின் பல்வேறு நாடுகளும் வழங்கிட வேண்டியது மிகவும் அவசியமாகும்.

1983 ஆம் ஆண்டுமுதல் ஈழத் தமிழர்கள் தங்கள் நல்வாழ்வை முழுவதுமாகத் தொலைக்கக் கூடிய ஒரு அராஜக இருளில் தள்ளப்பட்டனர்.

இடைக்காலத்தில் ரனில் விக்கரமசிங்கே பிரதமராக இருந்த ஒரு காலகட்டத்தில் போர் மேகம் கொஞ்சம் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தது. அதன் பின்னர் ஆட்சிப் பொறுப்பில் அதிபராக அட்டாணிக்கால் போட்டு அமர்ந்த இடி அமீன், நவீனகால அடால்ப் ஹிட்லரான மகிந்த ராஜபக்சே என்னும் மனித வேட்டைக்காரன் - பிணம் தின்னும் கழுகு நடத்திய கோர யுத்தம் மானுட உலகு இதுவுரை கேட்டிராத ஒன்றாகும்.

செஞ்சிலுவை சங்கத்தினரே விரட்டி விரட்டி அடிக்கப்பட்டனர். வெளிநாட்டுப் பத்திரிகையாளர்கள் தாக்கப் பட்டனர் - கொல்லவும் பட்டனர்.

இலங்கைச் செய்தி காற்றுவாக்கில்கூட வெளியில் செல்ல முடியாத அளவுக்கு எல்லா சுவர்களும், ஜன்னல்களும் ஆங்கே அடைக்கப்பட்டன. இவற்றையெல்லாம் மீறி வந்த செய்திகளே நம் குருதியை உறையச் செய்திருக்கிறது என்கிறபோது, முழு செய்திகளும் வெளிவந்திருந்தால் மாரடைப்பு ஏற்பட்டு எங்கும் உள்ள தமிழர்களும், மனித நேயர்களும் மரணத்தைத் தழுவி இருப்பார்கள்.

நடந்தவை ஒரு கசப்பான கனவாகவே முடிந்து போகவேண்டும். மீண்டும் ஒரு உள்நாட்டு யுத்தத்துக்கு ராஜபக்சே கத்தியைத் தீட்டுவாரேயானால், நிராயுதபாணிகளான ஈழத்தமிழர்கள் புழு பூச்சிகளாகக் கருதப்பட்டு மிதித்து சாகடிக்கப்படுவார்களேயானால் அந்த நிலை மிகப்பெரிய பயங்கரமாகக் கருதப்பட்டு உலகமே எரிமலையாகிக் கொந்தளிக்கக் கூடிய ஒரு நிலைதான் ஏற்படும்.

இதற்குமேல் ஒரு புள்ளி நகரக்கூடாது இலங்கை ராணுவம் என்ற நிலை உறுதிப்படுத்தப்படவேண்டும். அம்மக்கள் சொந்த வீடுகளில் தங்குவதற்கும், பிள்ளை களின் கல்வி, வேலை வாய்ப்பு முதற்கொண்டு இயல்பு வாழ்க்கை மலர்ந்திட போர்க்கால அடிப்படையில் பணிகள் முடுக்கி விடப்படவேண்டும்.


வீடுகள் தரைமட்டமாக்கப்பட்டிருக்கும்; அங்கெல்லாம் வீடுகள் கட்டிக் கொடுக்கப்படவேண்டும். குறிப்பிட்ட காலத்திற்குத் தேவையான நிதி உதவி, பொருள்கள் உதவி என்பவை தங்கு தடையின்றி நடைபெற்றாகவேண்டும்.

இலங்கை அரசு அதற்கான ஒரு திட்டத்தை வகுத்து செயல்படவேண்டும். இந்தியா முதன்மையான இடத்தில் அமைந்து, உலக நாடுகள் தாராளமாக உதவிகளை வாரி வாரி வழங்கிடவேண்டும்.ஈழத் தமிழர்களின் வாழ்வில் சமத்துவம் பொருந்திய தீர்வுகள் எட்டப்படவேண்டும். இதில் அய்.நா.வின் பங்கு முக்கியமாக இருக்கட்டும்.

------------------"விடுதலை"தலையங்கம் 29-4-2009

"பார்பன எதிர்ப்பு கண்மூடித்தனமானதா?" - 8


ஒரு சில வலைப்பதிவர்கள் "கடவுளற்ற,மதமற்ற,சாதியற்ற கூடவே காழ்ப்புணர்சியற்ற மனித சமுதாயம் படைப்போம்" என்ற முழக்கத்தை முன் வைத்து பார்ப்பன எதிர்ப்பு கண்மூடித்தனமானது என்று முழங்கி வருகிறார்கள். கடவுளற்ற,மதமற்ற,சாதியற்ற கூடவே காழ்ப்புணர்சியற்ற மனித சமுதாயம் படைக்க( எங்களின் நோக்கமும் இதுதான். இதில் எங்களுக்கு ஒன்றும் மாற்றுக் கருத்து இல்லை.காழ்ப்புணர்வு உள்ளவர்கள் நாமா? பார்ப்பனர்களா? --விடை: உங்களின் முடிவுக்கே விட்டு விடுகிறேன்) தடையாய் இருப்பவர்கள் பார்ப்பனர்கள். பார்ப்பனர்களை ஒழிக்காமல் மேற்கண்டவைகளை ஒழிக்கவே முடியாது. அன்றிலிருந்து இன்று வரை பார்ப்பன ஆதிக்கம் இல்லாத துறையே கிடையாது. பெரியார் அதன் விசப் பல்லை பிடுங்கி எறிந்திருக்கிறார். மீதி மிச்ச சொச்சங்கள் இன்னும் இருக்கின்றன. அந்த மிச்ச சொச்சங்களையும் அம்பலப்படுத்த வேண்டிய அவசியம் பெரியாரின் தொண்டர்களுக்கு உண்டு.


தெய்வாதீனம் ஜகத் சர்வம்
மந்த்ராதீனம் துதெய்வதம்
தன்மந்த்ரம் பிரம்மணாதீனம்
தஸ்மத் பிரம்மணம் பிரபு ஜெயத்.

இந்த உலகம் கடவுளுக்குக் கட்டுப்பட்டது. கடவுள் மந்திரங்களுக்குக் கட்டுப்பட்டவர்; மந்திரங்கள் பிராமணர்களுக்குக் கட்டுப்பட்டவை எனவே பிராமணனே கடவுள்! அவனைத் தொழ வேண்டும்.

--------------ரிக் - 62 ஆவது பிரிவு 10ஆவது சுலோகம்

இப்படிப்பட்ட பார்ப்பனர்களின் கொடுமைகளையும், அட்டூழியங்களையும் மக்களிடம் எடுத்துச் சொல்லி பார்ப்பன எதிர்ப்பு என்பது கண்மூடித்தனமானது அல்ல என்பதை உணர வைப்பதற்காக பார்ப்பனர்களின் முகமூடிகளை கழற்றி உண்மை முகத்தை அடையாளப்படுத்தும் நோக்கத்துடன் இக்கட்டுரை வெளியிடப்படுகிறது. சான்றுகளுடன் கூடிய நாகரிகமான விவாதங்கள் வரவேற்கப்படுகிறது)

தொடர்ந்து "பார்பன எதிர்ப்பு கண்மூடித்தனமானதா?" என்ற தலைப்பில் கட்டுரைகள் வெளியிடப்படும்

------------------------------------------------------------------------------




அரைத்தார்கள்! கரைத்தார்கள்!! குழத்தார்கள்!!!

யார்? எதை? எங்கே? என்று ஆவலோடு கேட்பது காதில் விழுகிறது. ஒரு சிறிய முன்னுரை விளக்கம் நடந்த நிகழ்ச்சியைப் புரிந்துகொள்ள உதவும்.

திருவிசலூர் (திருவிசைநல்லூர்) கும்பகோணம் வட்டத்தில் திருவிடைமருதூரிலிருந்து மூன்று கல் தொலைவிலுள்ளது ஒரு சிற்றூர்.

அந்த ஊரில் 2.8.1930 அன்று தந்தைபெரியார் தலைமையில் - இரண்டாவது பார்ப்பனர் அல்லாதார் மாநாடு நடைபெற்றது. திருவிசலூரிலும், அருகே உள்ள வேப்பத்தூரிலும் வசதிமிக்க அக்கிரகாரங்கள் உண்டு. நடப்பதோ பார்ப்பனர் அல்லாதார் மாநாடு! மாநாட்டுத் தலைவரோ தந்தை பெரியார்! சும்மாயிருக்குமோ சுரர் கூட்டம்?

கல்லைக் கடவுளாக்கி, சாணத்தைச் சாமியாக்கி குரங்கையும், நாயையும், எலியையும் நம்மவர்களைக் கும்பிட வைத்த கூட்டமாயிற்றே!


பல்வேறு புரளிகளைப் பரப்பியது பூசுரர் கூட்டம்!

கோவிலில் ஆதிதிராவிடர்களை அழைத்து வந்து விடுவார்கள்? கோயிலில் நுழைந்து கொள்ளை அடிப்பார்கள்! அக்கிரகாரத்தில் நுழைந்து விடுவார்கள்!
விளைவு என்ன? மாநாட்டுத் தலைவர்கள் வரும் வழியிலுள்ள திருவாவடுதுறை சைவ ஆதினத்தாருக்குட்பட்ட திருவிடைமருதூர் கோவிலின் நான்கு கதவுகளும் அடைக்கப்பட்டன.

சுமார் 500 ஆட்கள் தடிக்கழிகளோடு காவல் புரிந்தனர். மாநாடு நடக்கும் நாளின் காலையிலேயே திருவிசலூர், வேப்பத்தூர் பார்ப்பனர்கள் தங்கள் தங்கள் அக்கிரகாரசந்துகளில் நூற்றுக்கணக்கான, உலகமறியா படிப்பில்லாத, நம்மினப் பாமரர்களைக் காவல் போட்டதுடன் தாங்களும் தடிகளோடு வரிந்து கட்டிக் கொண்டு காவல் காத்தனர்.

திருவிடைமருதூர் பார்ப்பன நீதிபதியும், பார்ப்பன காவல்துறை உதவி ஆய்வாளரும் தம்முடன் பல காவலர்களை வைத்துக் கொண்டு காவல் புரிந்தனர்.

இக்காட்சியைக் கண்ணுற்ற தந்தை பெரியாரின் கூற்றைக் கேளுங்கள்!

என்னுடைய இந்தப் பத்து பதினைந்து வருஷத்திய பொது வாழ்வு சுற்றுப் பயணத்தில் ஓர் இடத்திலாவது இந்த (திருவிசலூர் பார்ப்பனர்) மாதிரி பார்ப்பனர் வரிந்து கட்டிக் கொண்டு தடியுங்கையுமாய் நின்று கொண்டிருந்ததை யான் எங்கும் பார்த்ததில்லை (குடிஅரசு, 10.8.1930 பக்கம் 8)

என அய்யாவுக்கே திருவிசலூர் பார்ப்பனர்களின் ஆணவம் வியப்பை அளித்திருக்கிறது. இவ்வூர் பார்ப்பனர்கள் இவ்வளவு அகம்பாவம் கொண்டது ஏன்? அவர்கள் நூறு வேலி (500 ஏக்கர்) நஞ்சை நிலத்துக்குச் சொந்தக்காரர்கள்! அவர்கள் நெற்றி வியர்வை நிலத்தில் விழ உழைத்தார்களா?

பார்ப்பனர் பார்வையில் உழைப்பது பாபம். பயிரிடும் பிழைப்பு பெரியோர்களால் நிந்திக்கப்பட்டது (மனுதர்மம், அத். 10, சுலோ. 84) என்பது மனு செய்த சட்டம். ஏர் பிடித்து ஓட்டியே மன்னார்குடி பகுதியைச் சேர்ந்த இரு பார்ப்பனர்களுக்கு - நடமாடிய தெய்வம் - காஞ்சி முனி - சந்திர சேகரேந்திரர் - ஆசி வழங்க மறுத்த செய்தி அனைவரும் அறிந்ததே! அரசன், தான் கண்டெடுத்த புதையலில் சரிபாதியை அவாளுக்கு அழவேண்டும் என்பது மனுதர்மம் (அத். 8, சுலோ. 38) அப்படி ஏதேனும் திருவிசலூர் பார்ப்பனருக்கு லட்சுமி கடாட்சம் கிடைத்ததோ? அப்படி வரலாறு ஏதுமில்லை.

அவ்வூர் பார்ப்பனர்கள் எப்படி நிலச்சுவான்தார் ஆனார்கள் என்ற வரலாற்றைத் தந்தை பெரியார் அவர்கள் தமக்கே உரிய முறையில் கூறுவதைக் கேளுங்கள்:

இந்தக் கிராமத்து அக்கிரகாரமானது தஞ்சாவூர் மகாராஜாவால் தனது முன்னோர்களின் எலும்புகளைக் கங்கையில் கொண்டு போய்ப் போடுவதை விட பிராமணர்கள் என்பவர்களின் வயிற்றில் போய்ச் சேரும்படி அரைத்துக் குடிக்கச் செய்துவிட்டால் அதிகப் புண்யமென்பதாகக் கருதி, பிராமணர்களும் அப்படியே அரைத்துக் குடித்ததற்காக அக்காலத்தில் சில பார்ப்பனர்களுக்கு இந்த அக்கிரகாரங்களையும் (வீடுகள்) கட்டிக் கொடுத்து 100 வேலி (500 ஏக்கர்) நஞ்சை நிலமும் கொடுத்ததாகச் சொல்லப்படுகிறது (குடிஅரசு, 10.8.1930, பக்கம் 12).

நரமேதயாகம் செய்யும் பார்ப்பனர்கள் ஒரு நரனின் எலும்பை அரைத்து கரைத்து குடிக்கவா தயங்குவார்கள்?

இப்போது தெளிவாக அறிந்து கொண்டீர்களா - திருவிசைநல்லூர் வாழ் அந்தணர்களின் முன்னோர்கள் ஆற்றிய அருந்தொண்டு பற்றி!

விரைவில் வெளிவர இருக்கும் அருந்தொண்டு ஆற்றிய அந்தணர்கள் நான்காம் தொகுதியில் இப்பார்ப்பனர்களின் வரலாற்றை எதிர்பாருங்கள்!

------------------------மு.நீ. சிவராசன்- "உண்மை" –ஜனவர் 16-31 2008

பெரியாரின் சுயமரியாதை இயக்கம் காட்டுமிராண்டிகளை உருவாக்கியிருக்கிறதா?


அடுத்ததாக திரு மா.வேலுச்சாமி வைக்கும் இன்னொரு குற்றச்சாட்டு.

"ஈ.வெ.ரா அவர்களின் அரசியல் வியூகத்தில் விட்டில் பூச்சிகளாய் மாறி மறைந்துபோன தலித்துகளின் பார்வையில் ஆராய்ச்சி செய்யும்போது சுயமரியதை இயக்கமும் திராவிட அரசியலும் தமிழகத்தில் அரசியல் சமூகத்தளங்களில் சாதி வெறி காட்டுமிராண்டிகளையே உருவாக்கியிருக்கிறது”

முதலில் தந்தைபெரியார் பொதுவாழக்கைக்கு வருவதற்கு முன்னால் இந்தச் சமுதாயம் எப்படி இருந்தது என்பதையும் தாழ்த்தப்பட்டோர் அனுபவித்த கொடுமைகளையும் பார்ப்போம். அப்போதுதான் தந்தைபெரியாரை ஆண்டைகள் ஏற்பார்களா அரவது இயக்கம் உருவாக்கியிருப்பது காட்டுமிராண்டிகளையா என்பவற்றிற்கு பதில் கிடைக்கும்.

• தாழ்ததப்பட்டவர்கள், பார்பனர்கள் வசிக்கும் தெரு மற்றும் மேல்சாதி மக்கள் வசிக்கும் தெருக்களில் நடந்து செல்ல முடியாத நிலை

• தாழ்தப்பட்டவாகள், செருப்பு அணிந்து நடந்து செல்ல முடியாத நிலை குடைபிடித்துக் கொண்டும் போக முடியாது.

• தாழ்தப்பட்டவாகள் முழங்காலுக்கு கீழ் வேட்டி கட்ட முடியாத நிலை

• தங்க நகைகள் அணியக்கூடாது

• சொந்த நிலம் வைத்திருக்கக் கூடாது

• திருமணத்தின் போது மேளம் வாசிக்கக் கூடாது

• ஒற்றையடிப்பபாதைகள், வண்டிப்பாதைகளில் பார்பனர் எதிர்பட்டால் பறையர், முதலானோர் ஓடி மறைந்து கொள்ள வேண்டும்

• தோளில் துண்டு போடக் கூடாது

• பெண்கள் ரவிக்கை அணியக்கூடாது

• பஞ்சமர்களும், நாய்களும், பெருநோய்காரர்களும் உள்ளே வரக்கூடாது என்று உணவு விடுதிகளில் எழுதி வைத்திருந்தனர்.

• நாடக சபாக்களில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு அனுமதி இல்லை அறிவித்திருந்தனர்.

• அதே போல பேருந்துகளில் தாழ்த்தப்பட்டோர் பயணம் செய்ய முடியாது.


இப்படி எத்தனையோ கொடுமைகள் நிறைந்து காணப்பட்ட சூழலில், பெரியார் பொதுவாழ்க்கைக்கு வந்தவுடன் தனது 'குடிஅரசு' இதழ் மூலமும், தன் செய்கையாலும் இக்கொடுமைகளைக் களைந்த எறிய ஆவண நடவடிக்கைகளை எடுத்தார். இக்கொடுமைகளை எதிர்த்து ஒரு சிலர் போராடியிருந்தாலும், மக்களிடம் ஒரு எழுச்சியை மனமாற்றத்தை, மறுமலர்ச்சியை உண்டாக்கி இக்கொடுமைகள் ஓழியக் காரணமாயிருந்தவர் பெரியார் - இது தான் உண்மை வரலாறு.

1929-ல் செங்கல்பட்டில் நடந்த சுயமாpயாதை மாகாண மாநாட்டில் பெரியார் நிறைவேற்றிய தீர்மானங்களைத் தான் இன்று ஆட்சியாளர்கள் அமுல்படுத்தி வருகிறார்கள். இதோ

7-வது தீர்மானம்:

மனித நாகரிகத்திற்கும், தேச முன்னேற்றத்திற்கும் தடையான தீண்டாமை என்பதை ஒழித்து எல்லாப் பொது ரஸ்தாக்கள், குளங்கள், கிணறுகள், பாடசாலைகள், சத்திரங்கள், தண்ணீர் பந்தல்கள், முதலிய பொது ஸ்தாபனங்களைத் தட்டுத் தடங்கலின்றி அனுபவிக்கச் சகல ஜனங்களுக்கும் சம உரிமை கொடுக்க வேண்டுமென்று தீர்மானிக்கிறது.

15வது தீர்மானம்:

மற்ற வகுப்புப் பிள்ளைகள் சமமாக் கல்வி அடைகிற வரையிலும், தீண்டாவர்கள் என்று சொல்லப்படுகிற வகுப்பினரின் பிள்ளைகளுக்குப் பள்ளிக்கூடங்களில் புத்தகம், உண்டி, உடை முதலியனவற்றை இலவசமாக அளிக்க வேண்டும் என்று இம்மாநாடு தீர்மானிக்கிறது.

20வது தீர்மானம்:


இனிமேல் சர்க்கர் தர்க்காஸ்து நிலம் கொடுப்பதெல்லாம் தாழ்த்தப்பட்டவர்கள் என்பவாகளுக்கும் மற்றும் நிலமில்லாதவர்களுக்கம் கொடுக்க வேண்டுமென்றும் அதிலும் இப்போது தீண்டாதார் எனப்படுவோருக்கு விசேச சலுகை காட்டி நிலங்களை பண்படுத்தி பயிர் செய்ய பணஉதவி செய்ய வேண்டும்

21வது தீர்மானம்

தீண்டாதார் எனப்படுவோருக்கு சர்க்காரில் காலியாகும் உத்தியோகங்களில் முதல் உரிமை கொடுக்க வேண்டும்.

என்றும் தீர்மானம் நிறைவேற்றி அரசுக்கு அனுப்பி போராடி அரசு ஆணைகளாக பெற்றுத்தந்தவர் பெரியார். இது போன்று பல ஆதாரங்களை நம்மால் காட்ட முடியும். தன்னுடைய "குடிஅரசு", "புரட்சி", "விடுதலை" இதழ்கள் மூலம் எடுத்துச் சொன்னதோடு மக்கள் மன்றத்திலும் எடுத்துக் கூறி, நியாயங்களை எடுத்துச் சொன்ன பெரியாரின் சுயமரியாதை இயக்கம் காட்டுமிராண்டிகளை உருவாக்கியிருக்கிறது என்று நா கூசாமல் முனிமா குழுவினர் கூறிவருவன கண்டு ஆராய்ச்சியாளரும், ஆய்வாளர்களும், மக்களும் எண்ணி நகையாடியே வருகின்றனர், பெரியாரின் சுயமரியாதை இயக்கம் சாதித்தது என்ன என்பதை அறிய கீழ்க்கண்ட நூல்களை படிக்க பரிந்துரைக்கிறோம்.

1. தஞ்சை ஆடலரசன் எழுதிய தந்தை பெரியாரும் தாழ்த்தப்பட்டோரும்

2. எஸ்.வி.ராசதுரை – வ.கீதா எழுதிய பெரியார் கண்ட சுயமரியாதை இயக்கம் செயல்பாடுகளும்

3. வ.மா.ஒ.- புனிதபாண்டியன் எழுதிய பெரியாரைத் திரிக்கும் புரட்டுகளுக்கு மறுப்பு


------------------ தொடரும்


------------------நன்றி:-"களத்துமேடு" ஜூன் 15 - 2004 பக்கம்: 9-10

28.4.09

பெரியாரை கடவுளாக வழிபடுகிறார்களா?





பெரியார் உருவாக்கிய காட்டுமிராண்டிகள்..........

பெரியார் நாடகம் யாருக்காக? என்று ஏப்ரல் 2004 புதிய கோடாங்கி மற்றும் களத்துமேடு இதழ்களில் நாம் எழுதிய விமர்சனத்திற்கு மே2004 புதிய கோடாங்கி இதழில் திரு மா.வேலுசாமி அவர்கள் ஈ.வெ.ராமசாமி துணை கடவுளாகும் பெரியார்………. என்று இரண்டு தலைப்பிட்டு எதிர்வினையாக ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். அதில் பெரியாரைப் பற்றி கீழ்வருமாறு எழுதியுள்ளார்.

"தமிழகத்தின் திராவிட மறுமலர்ச்சி அரசியலுக்கும், அதன் வளர்ச்சிக்கும் மதம் மற்றும் தமிழக மக்ககளின் மூடநம்பிக்கைகளைக் களைந்தெறிவதற்கு தன்னுடைய அயராத உழைப்பினை அர்ப்பனித்தவர் திரு ஈ.வெ.ராமசாமி என்பது நாமறிந்ததே. தமிழக அரசியலின் எழுச்சி முன்னோடியாகவும், திராவிட வரலாற்றை உருவாக்கியவராகவும் திகழ்ந்து-தமிழகத்தின் அரசியலை 50 ஆண்டுகாலமாக தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருந்தவரான தந்தை பெரியார் ஈ.வெ.ராமசாமி நாயக்கர். மாபெரும் அரசியல் தலைவர் என்பதில் எந்தவொரு சந்தேகமில்லை".

ஜாதி ஒழிய தன் வாழ்நாளெல்லாம் பாடுபட்ட பெரியாரை நாயக்கராகச் சித்தரித்தும், அரசியல் தலைவர் என்பதையும் விட்டு விட்டுப் பார்த்தால், பெரியாரை ஓரளவு சரியாக மதிப்பிட்டுள்ள திரு.மா.வேலுச்சாமி அவர்களுக்கு நமது பாராட்டையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம். பெரியாரை ஓரளவு சரியாக மதிப்பீடு செய்த திரு மா.வேலுச்சாமி அடுத்த வரியை இப்படி எழுதியுள்ளார்.

“ஏனெனில். ஜனநாயக நாட்டில் அரசியலையும், அதிகாரத்தையும் தூக்கி நிறுத்துகின்ற ஜனங்களான இன உடைமையாளர்கள். சமூகத்திற்கு உயர்ந்த வகுப்பார் ஆகியோர்களின் ஆதரவு பெற்றவர் என்ற வகையில் அவர் இன்றும் ஒரு மிரட்டலான தலைவராகவே இருந்து வருகின்றார். அதோடு அந்த ஆண்டை (உயர்சாதியினர்) வகுப்பார் இன்றளவும் பெரியாரைக் கடவுளாகவே போற்றி வருகின்றனர். பெரியாரை, ஆண்டைகள் கடவுளாகவே வழிபடுவதில் தலித்துகளுக்கு எந்தவொரு பிரச்சினையும் இல்லை. ஆனால் கடவுள் என்பவர் அனைவருக்கும் சமமானவராக இருக்க வேண்டும் என்ற நம்பிக்கையாவது இருக்க வேண்டுமே”

நிலவுடமையாளர்கள், சமூகத்தில் உயர்ந்த வகுப்பார் ஆகியோர்களின் ஆதரவு பெரியாருக்கு இருந்ததாம், இருக்கிறதாம், சொல்கிறார் திரு.மா.வேலுச்சாமி.

பெரியார் இன்னார்- இனியார் என்று வேறுபாடின்றி தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட அனைத்து மக்களின் முன்னேற்றத்திற்காகவும் அயராது உழைத்தவர். நிலவுடைமையாளர், உயர்ந்த வகுப்பார் ஆதரவு பெற்றவர் என்று கூசாமல் புளுகியிருக்கும் இவரின் கூற்று உண்மையா பெரியார் எந்தக் காலத்திலும், நிலவுடைமையாளர்களுக்கோ, உயர்ந்த வகுப்பாருக்கோ, ஆதரவாகச் செயல்பட்டதில்லை என்பதற்கு மிகச் சிறந்த ஆய்வாளரான திரு.எஸ்.வி.ராஜதுரை அவர்கள் தரும் சான்று இதோ,

“பெரியாரின் சுயமரியாதை இயக்கம் தனது அடிப்படை இலட்சியமான சாதியொழிப்பு, பார்ப்பன எதிர்ப்பு என்பதற்கு ஆதரவாக பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு வகையான சக்திகளைத் திரட்டியது. ஆத்திகர். நாத்திகர், காங்கிரஸ்காரர், நீதிக்கட்சியினர், பொதுவுடைமை ஆதரவாளர்கள், முதலாளிகள், தொழிலாளிகள் நிலப்பிரபுக்கள், நிலமற்ற விவசாயிகள் எனப் பலதரப்பட்டேர் அதில் இருந்தனர், எந்தவொரு காலகட்டத்திலும் அவ்வியக்கம் முதலாளிகளின் நலன்களுக்கான கோரிக்கை விடுத்ததில்லை"

நூல்: "ஆகஸ்ட் 15" பக்கம்:-410

ஆண்டைகள் பெரியாரை கடவுளாக வழிபடுகிறார்களாம் குறைந்தபட்சம் பெரியாரை இந்த ஆண்டைகள் எதிர்காமலாவது இருந்தார்களா? இது குறித்து பெரியார் தரும் விளக்கம் இதோ

“ஒரு சார்பும் இல்லாதவனாகத் தனித்து எந்த ஒரு ஆதரவும் அற்றவனாகி என்னையே எண்ணி நின்று, பாமர மக்களுடையவும், படித்தவர்களுடையவும், பிறவி ஆதிக்ககார்களாகிய பார்பனர்களுடையவும், சர்வ சக்தியுள்ள பத்திரிக்கைகாரர்களுடையவும், போதாக்குறைக்கு அரசாங்கத்தாருடையவும் வெறுப்புக்கும், அதிருப்திக்கும், எதிர்ப்புக்கும், விசமப் பிரச்காரத்திற்கும், தண்டனை, கண்டனைகளுக்கும் ஆளாக இருந்து எதிர்ப்பையும் போராடங்களையும் சூழ்ச்சிகளையும் சமாளித்து, பொது மக்களால் கனவு என்று கருதப்பட்ட எனது இலட்சியங்களை, இவை கனவு அல்ல, உண்மை நினைவே, காரிய சாத்தியமே என்று கூறி வந்து அவை- (எனது இலட்சியங்)களின் நடப்புகளையும் நடப்புக்கு ஏற்ற முயற்சிகளையும் கண்டுகளிக்கிறேன்.

------பெரியார் பிறந்தநாள் மலர் 88 -17.9.66

இவ்வாறு நேர்மையாக, நாணயமாக, ஒளிவு மறைவின்றி உழைத்த பெரியாரை மா.வேலுசாமி, முனிமா குழுவினர் திட்டமிட்டே திரித்து எழுதி வருகின்றனர். கடவுள் மறுப்பை ஏற்றுக்கொள்ளாத பகுத்தறிவுச் சிந்தனை இல்லாத சாதி, மத சிந்தனையை ஏற்றுக் கொண்டிருக்கினற ஆண்டைகள்தான் அதிகம் அவர்கள் எப்படி பெரியாரை ஆதரிப்பார்கள் வழிபடுவார்கள் சிந்தியுங்கள் முனிமா குழுவினரே.

-------------------தொடரும்..........


------------------நன்றி:-"களத்துமேடு" ஜூன் 15 - 2004 பக்கம்:- 8-9

ஆன்மீகத்திற்கும், நாத்திகத்திற்கும் நெருடல்கள் தோன்றுமா?




கேள்வி: சில சமயம் நாத்திகர்களுடன் ஒரே மேடையில் தாங்கள் பங்கு வகிக்கும் போது நெருடலாக உணருகிறீர்களா? அதை எப்படி சமாளிக்கிறீர்கள்?.

------------------- சங்கர் கமலநாதன், சென்னை

பதில்: மனிதகுல முன்னேற்றம், மனிதநேயம் என்ற பாதையில் சிந்திக்கும் பொழுது, ஆன்மீகத்திற்கும், நாத்திகத்திற்கும் நெருடல்கள் தோன்றாது.

-------- தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், தினத்தந்தி 14.4.2008

முதல்வர் கலைஞரின் உண்ணாவிரதத்தைக் கொச்சைப்படுத்துவதேன்?




முதல்வர் கலைஞரின்
உண்ணாவிரதத்தைக் கொச்சைப்படுத்துவதேன்?

ஈழப் பிரச்சினையை ஆயுதமாகப் பயன்படுத்த
எண்ணியோர்க்கு ஏற்பட்ட ஏமாற்றமே காரணம்!


தமிழர் தலைவர் அறிக்கை

முதலமைச்சர் கலைஞர் அவர்கள் மேற்கொண்ட உண்ணாவிரதப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்துபவர்கள் யார் என்று படம் பிடித்துக் காட்டியுள்ளார் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள். அறிக்கை வருமாறு:-

தமிழ்நாடு முதலமைச்சர் மானமிகு மாண்புமிகு கலைஞர் அவர்கள் நேற்றைய தினம் (27.4.2009) யாரும் எதிர்பாராத நிலையில் சென்னை அண்ணா நினை விடத்தில் உண்ணாவிரதம் மேற்கொண்டார்.

கலைஞரின்
நோக்கம் என்ன?


ஈழத் தமிழர்கள் வாழ்வுரிமை பேணப்படவும், அங்கு மூர்க்கத்தனமாக அவர்களுக்கு எதிராகத் தொடர்ந்து நடத்தப்படும் போர் நிறுத்தப்படவேண்டும் என்பதற்காகவும் கொடுக்கப்பட்ட மிகப்பெரிய அழுத்தம்தான் முதலமைச்சர் மேற்கொண்ட உண்ணாவிரதமாகும்.

அது எதிர்பார்த்த பலனைக் கொடுக்கவும் செய்தது. இதுகுறித்து இந்திய வெளியுறவுத் துறை அளித்துள்ள செய்திக் குறிப்பு குறிப்பிடத்தக்கதாகும்.

இந்திய அரசின்
செய்திக் குறிப்பு


இலங்கையில் போர் நடவடிக்கைகள் முற்றுப் பெற்று விட்டதென்றும், கனரகத் துப்பாக்கிகள், போர் விமானங்கள், வான் வழித் தாக்கிடும் போர் ஆயுதங்கள் போன்ற குடி மக்களைப் பெருமளவிற்குக் கொல்லும் ஆயுதங்களைப் பயன்படுத்தக்கூடாது என்று இலங்கைப் பாதுகாப்புப் படைகளுக்கு ஆணைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை அரசு அறிவித்துள்ளது. குடிமக்களை மீட்பதற்கும், அவர்களைக் காப்பாற்றுவதற்கும் தேவையான அனைத்து முயற்சி களையும் மேற்கொள்வதில் இலங்கைப் பாதுகாப்புப் படைகள் இனி கவனம் செலுத்தும்.

போர் முனையில் சிக்கிக் கொண்டுள்ள தமிழ்க் குடி மக்கள் மற்றும் இடம் பெயர்ந்தோர் ஆகியோரின் பாதுகாப்புப் பற்றிய பிரச்சினைகளே முதன்மையானவை ஆகும். அவற்றைத் தீர்ப்பதற்கு இலங்கை அரசு இன்று செய்துள்ள அறிவிப்பு முக்கியமான முதல் படியாகும்.

போர் முனையிலிருந்து வெளிவந்தோரின் துயரங்களைத் தணிப்பது மட்டு மன்றி, போர் நடைபெறாத பகுதியில் இன்னும் தங்கியிருக்கும் குடிமக்கள் மற்றும் இடம் பெயர்ந்தோர் ஆகி யோரை பாதுகாப்பான இடங்களுக்குக் கொண்டு செல்வதற்கு தேவையான அவசர நடவடிக்கை மேற் கொள்வதுதான் தற்போதைய உடனடித் தேவை யாகும்.

உள்நாட்டில் குடி பெயர்ந்த மக்களும், பொது மக்களும்தான் இப்போரினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டவர்கள். அவர்களைப் பாதுகாக்கவும, அவர்களது நலன்களுக்கு உறுதியளிக்கவும் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும்.


போர்ப் பகுதியிலிருந்து வெளிக் கொணரப்பட்டுள்ள அப்பாவி மக்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்குவதற்கு இந்தியப் பிரதமர் அவர்கள் 100 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கீடு செய்ய ஒப்புதல் அளித்துள்ளார். இந்த நிதியைப் பயன்படுத்துவதற்கான விவரங்கள் பரிசீலிக் கப்பட்டு வருகின்றன.

மனிதாபிமானம் கிடையாதா?

முதல்வர் கலைஞர் அவர்களின் உண்ணாவிரதம் - மேற்கண்ட விளைவுகளுக்குக் காரணம் என்பது மிக வெளிப்படையாகத் தெரிந்திருந்தும், அரசியல் - தேர்தல் நோக்கோடு தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் சிலர் முதல்வர் கலைஞர் அவர்களின் நேர்மையான ஒரு போராட்டத்தைக் கொச்சைப்படுத்துவது என்பது அநாகரிகமாகும்.

85 வயதைக் கடந்த தமிழ்நாட்டின் மூத்த தலைவர் - முதலமைச்சரின் உண்ணாவிரதத்தைக் கேலி பேசுவது - பேசுபவர்களின் மனிதாபிமானமற்ற தன்மையையும், அநாகரிக உணர்வையும்தான் பறை சாற்றும்.

அன்றும் இதே வார்த்தை!


விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் தொல். திருமாவளவன் அவர்கள் ஈழத்தமிழர் பிரச்சினைக்காக உண்ணாவிரதம் இருந்தபோதுகூட அ.இ. அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா அம்மையார் - கருணாநிதியும் திருமாவளவனும் பேசி வைத்துக்கொண்டு நடத்திட்ட நாடகம் என்றுதான் குறிப்பிட்டார்.

திருமாவளவன் அவர்களின் உண்ணாவிரதத்தை ஆதரித்து அவருக்குப் பக்க பலமாக இருந்ததாகக் கருதப்பட்டவர்கள் பெரும்பாலோரும் இப்பொழுது ஜெயலலிதாவின் தலைமையிலே அணிவகுத்து நிற்கிறார்கள். இப்படி அணிவகுத்து நிற்பவர்கள் ஈழத் தமிழர் களுக்கு உண்ணாவிரதம் இருக்கும் முதல்வரின் செயல்பாட்டை நாடகம் - நாடகத்தின் உச்சக்கட்டம் (க்ளைமாக்ஸ்) என்றெல்லாம் கேலி பேசுகிறார்கள். (திருமாவளவன் நாடகத் தில் இவர்கள் ஏற்ற பாத்திரம் எதுவோ!)

சேர்ந்த இடம் அப்படி

சேர்ந்த இடம் அப்படி! ஈழத் தமிழர்களுக்கு நல்லது எதுவும் நடந்துவிடக் கூடாது - இலங்கை இராணுவம் குண்டுவீச்சை நிறுத்தி விடக் கூடாது; தமிழர்களின் மரணப் பட்டியல் வந்துகொண்டே இருக்க வேண்டும்; இதைப் பயன் படுத்தி நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் கலைஞர் தலைமையிலான அணியைத் தோற்கடித்துவிட வேண்டும் என்கிற கழுகு மனப்பான்மையில் - ஜெயலலிதா தலைமையிலான அரசியல் அணியினர் செயல் படத் துடிப்பது பரிதாபத்திற்குரிய ஒன்றே!

குறிப்பிடத்தக்க நிலைப்பாடு அல்லவா!

கனரகத் துப்பாக்கிகள், போர் விமானங்கள், வான் வழித்தாக்கிடும் போர் ஆயுதங்கள் போன்றவை நிறுத்தப்படும் என்று அறிவித்திருப்பது போர் நிறுத்தத்தில் மிகவும் குறிப்பிடத் தக்க ஒரு நிலைப்பாடு என்பதைக்கூட அறியாதவர்களா நம் அரசியல்வாதிகள்?

ஊடகங்கள் விஷமம்

இவர்களோடு தமிழ் நாட்டு ஊடகங்களும் கைகோத்துக் கொண்டு, திசை திருப்பும் தலைப்பு களில் செய்திகளைப் பெருக்கி வெளியிட்டுக் கொண்டிருக்கின்றன. (ஆனால், வழக்கத்துக்கு மாறாக தினமலர் ஒழுங்காகத் தலைப்புப் போட்டுள்ளது).

கலைஞர் அவர்களின் தலைமையிலான அரசுக்கு எதிராகக் காயை நகர்த்த வேண்டும் என்பதிலேதான் ஊடகங்களின் குறிகள் இருந்துகொண்டே இருக்கின்றன.

முதல்வர் உண்ணாவிரதம் இருந்த காலகட்டம் எது?

எந்தச் சூழ்நிலையில் முதல்வர் கலைஞர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார்?

பல்லாயிரக்கணக்கான தமிழர்களை ஒரே நேரத்தில் கொன்று குவிக்கும் ரசாயனக் குண்டுகளைப் பயன் படுத்த அதிபர் ராஜபக்சே ஆணை பிறப்பித்துவிட்டார் என்கிற தகவல் வேகமாகப் பரவிக்கொண்டிருந்த ஒரு நேரத்தில் (குறுஞ்செய்தி எஸ்.எம்.எஸ். மூலமாகவும்) விடிந்தால் என்ன நடக்குமோ என்ற வேதனையும் பீதியும் நிலவிய ஒரு முக்கியமான காலகட்டத்தில் கலைஞர் அவர்கள், இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட தன் காரணமாக தமிழர் களுக்கு நடக்க இருந்த ஒரு பேரழிவு தடுக்கப்பட்டது என்பதை மனசாட்சி உள்ளவர்கள் நன்றிக் கண்ணீர் மல்க மனிதநேயத்தோடு போற்றுவார்கள்.

ஏற்பட்ட விளைவும் அரசியல்வாதிகளின் அதிர்ச்சியும்

பல்வேறு போராட்டங்களை நடத்தியும், சட்டப் பேரவையில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டும், இந்திய அரசின் பிரதிநிதிகள் பலமுறை ராஜபக்சேயைச் சந்தித்தும், வெளிநாடுகள் பலவும் பல வகைகளில் அழுத்தங்களைக் கொடுத்தும், அய்.நா. செயலாளர் வேண்டுகோள் விடுத்தும் அசைந்து கொடுக்காத இலங்கை அதிபர் ராஜபக்சேவை, தமிழ்நாட்டின் முதல்வர், மூத்த தலைவர் மேற்கொண்ட ஒரு சில மணிகள் அளவிலான உண்ணாவிரதம் அசைத்திருக்கிறது; இறங்கி வரச் செய்திருக்கிறது - உயர்மட்டக் குழுவை அவசர அவசரமாகக் கூட்டி புதிய அறிவிப்பை வெளியிடச் செய்திருக்கிறது என்றவுடன்-

ஈழப் பிரச்சினையை வைத்தே தேர்தலில் கரை ஏறலாம் என்று துடி துடித்துக் கொண்டிருந்த அரசியல்வாதிகளுக்குப் பெரும் அதிர்ச்சியாகப் போய்விட்டது. நம்பியிருந்த ஒரு ஆயுதமும் பறிமுதல் செய்யப்பட்டு விட்டதே என்ற ஆத்திரத்தில் புலம்பும் சொற்களே அவர்களின் விமர்சனங்களாக வெளி வந்துள்ளன என்பதைத் தமிழ்நாட்டு மக்கள் புரிந்து கொள்ளவேண்டும்.

ஈழத்தமிழர்களைக் காக்க ஜெயலலிதாதான் தலைவரா?

ஈழத்தமிழர் பிரச்சினையில் தொடர்ச்சியாக - இயல்பாக ஈடுபாடு காட்டி வருபவர்கள் யார்? என்பது தான் மிக முக்கியம். சந்தர்ப்பவாதிகளின் சதுராட்டங்களில் ஏமாந்துவிடக் கூடாது.

போர் நிறுத்தம் செய்யச் சொல்வது விடுதலைப்புலிகளைக் காப்பாற்றுவதற்கே என்றும், இலங்கையில் தற்போது நடப்பது உள் நாட்டுப் போர் என்றும், அதை நிறுத்துவதற்கான அதிகாரம் இந்திய அரசிடம் இல்லை என்பதை அய்ந்து முறை முதலமைச்சரான கருணாநிதி புரிந்துகொள்ளாதது விந்தையாக உள்ளது என்றும், உள்நாட்டு விஷயத்தில் இந்திய அரசு தலையிட்டால் பின்னர் நம் நாட்டு உள்விவகாரத்தில் அண்டை நாடுகள் தலையிடுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டு, அது இந்திய இறையாண்மைக்கு ஊறுவிளைவிப்பதாக அமையும் (நமது எம்.ஜி.ஆர். 16.10.2008) என்றும் பச் சையாக கொஞ்சம்கூட சந்தேகத்திற்கு இடமின்றி, ராஜபக்சேயின் சகோதரியாக அறிக்கை வெளியிட்ட ஜெயலலிதாதான் - ஈழத் தமிழர்களைக் காக்க வந்த - வாராது வந்த மாமணியாகக் காட்சியளிக்கிறார் சில அரசியல் கட்சித் தலை வர்களுக்கு. ஜெயலலிதா இப்படியெல்லாம் கொச்சைப்படுத்தி அறிக்கை வெளியிட்டபோது இந்த வீராதி வீரர்கள் எங்கே போனார்கள்? ஒரு கண்டனம் உண்டா?

இதே ஜெயலலிதா மே 13 ஆம் தேதிக்குப் பிறகு என்ன பேசுவார்? அது அவருக்கே கூடத் தெரியாத ஒன்றாயிற்றே!

ஜெயலலிதாவின் திடீர் ஞானோதய உரைகள் தேர்தலுக்குப் பிறகும் தொடரும் என்று அவரது கூட்டாளிகளால் உத்தரவாதம் கொடுக்க முடியுமா?

தமிழர்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டிய நேரம் இது.

உண்மை நண்பர்கள் யார்? நண்பர்கள் போல நடிப்பவர்கள் யார்? பகை வர்கள் யார்? பாம்புக்கும் பழுதைக்கும் உள்ள வேறுபாடு என்ன? என்பதை அறிவதில் தமிழர்களுக்குத் தடுமாற்றம் ஏற்பட்டுவிடக் கூடாது - எச்சரிக்கை எச்சரிக்கை!


----------- கி.வீரமணி தலைவர், திராவிடர் கழகம். "விடுதலை" 28.4.2009

>இலங்கை, மலேசியா போன்ற நாடுகளுக்கு தமிழர்களைத் தூதுவர்களாக நியமிக்க வேண்டும்




இலங்கை, மலேசியா போன்ற நாடுகளுக்கு
தமிழர்களைத் தூதுவர்களாக நியமிக்க வேண்டும்

புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் தமிழர் தலைவர் பேட்டி


இலங்கை, மலேசியா போன்ற நாடுகளுக்கு தமிழர்களை தூதுவர்களாக இனி வரும் காலங்களில் நியமிக்க வேண்டும். என்று திராவிடர் கழகத்தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

புதுச்சேரியில் 26.4.09 அன்று செய்தியாளர்களுக்கு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் அளித்த பேட்டி வருமாறு:-


வருகின்ற நாடாளு மன்ற தேர்தலிலே திராவிட முன்னேற்றக் கழக தலைமையிலே இருக் கின்ற ஜனநாயக முற்போக்கு கூட்டணியை ஆதரிப்பது என்ற முடிவை திராவிடர் கழக செயற்குழு பொதுக்குழு ஏற்கெனவே எடுத்ததற்கு இணங்க புதுவையில் இருக்கக்கூடிய காங் கிரஸ் வேட்பாளர் திரு. நாராயணசாமி அவர்களை ஆதரிப்பது, என்பதற்காக இயக்கத் தோழர் கள் வேலை செய்து கொண்டிருக்கின்றார்கள்.

மதச்சார்பற்ற நிலையை முன்னிறுத்தி இந்த நாட்டை மதவெறி ஆளக்கூடாது, ஜாதி வெறிக்கு இடம் இருக் கக்கூடாது என்பதால் தான் கடந்த மக்களவைத் தேர்தலில் மதவெறி பாஜக வை முறியடித்தோம். கல்வித்துறையைக் கூட காவிமயமாக்கியது பாஜக ஆட்சி. அதனை மாற்றி மதசார்பற்ற ஒரு ஆட்சியை மத்தியில் அமைத்தோம். அய்ந்தாண்டுக்காலம் இதன் மூலம் ஒரு நிலையான ஆட்சி அமைந்தது. ஒரிசா போன்ற வேறு சில மாநிலங்களில் மதவெறி ஆட்சி நடைபெற்றது. சிறுபான்மை சமுதாயம் வாழ்வுரிமை அற்றவர்களாக ஆக்கப்பட்டனர்.

இந்த நிலை தொடரக் கூடாது என்ற தன்மையில் மத்தியில் ஒரு ஆட்சி அமைய வேண்டும்.

இடையிலே கூட கம்யூனிஸ்டு நண்பர்கள் மதச்சார்பற்ற இந்த ஆட்சியைக் கவிழ்க்க வேண்டும் என்று முயற்சி எடுத்த பொழுது கூட அவர்களால் அதில் வெற்றிபெற முடிய வில்லை. அந்தளவிற்கு நிலையான ஆட்சியை அய்ந்தாண்டுகள் தொடர்ந்து அய்க்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி நடைபெற்றிருக்கிறது.

கலைஞர் அவர்களுடைய வழிகாட்டுதலிலே இருக்கக்கூடிய ஒரு ஆட்சி. எனவே மீண்டும் தமிழகத்திலும், புதுவையிலும் 40 தொகுதிகளில் வெற்றிபெற ஏற்பாடுகள் சிறப்பாக நடைபெறுகின்றன.

நூல் வெளியீடு சிறப்பான ஒரு நிலையை உருவாக்கலாம் என்ற எண்ணத்தோடுதான் சமூகநீதியை முன்னிறுத்தி பிற்படுத்தப்பட்டவர்களுக்கு, ஒடுக்கப்பட்டவர்களுக்கு, சிறு பான்மை சமுதாய மக்களுக்கு இவர்கள் எல்லோருக்குமே வாய்ப்புகளை உருவாக்குவதற்காக நாங்கள் ஒரு நூலையே வெளியிட்டிருக்கின்றோம்.

பல லட்சக்கணக்கிலே தமிழகம், புதுவை மாநிலங்களிலே இந்த நூல் பரப்பப்பட்டிருக்கிறது.

கலைஞர் (திமுக) ஆட்சியின் சாதனை களைப் பாரீர்! வாக்குகளைத் தாரீர்! என்ற தலைப்பிலே இந்த நூலைத் தயாரித்து பரப்பியிருக்கின்றோம்.

தமிழ்நாட்டிலே தி.மு.க ஆட்சி மத்தியிலே காங்கிரஸ் ஆட்சியை மனதிலே வைத்து இவர் களுக்கு ஏன் வாக்களிக்க வேண்டும் என்பதை இந்தத் தேர்தலிலே தெளிவு படுத்தியிருக்கின்றோம்.

ஆகவே மக்கள் மத்தியிலே திராவிடர்கழகம் திட்டமிட்டு தெரு முனை கூட்டங்கள். மற்ற பொதுக்கூட்டங்கள் இவைகளை எல்லாம் போட்டு வேண்டிய பணிகளை செய்திருக்கின்றோம்.

தமிழகம், புதுவை உட்பட எல்லா மாவட்டங்களிலும் இந்த நூல் இதுவரை ஒன்றரை இலட் சத்திற்கு மேலே பரப்பப் பட்டிருக்கின்றது.

முதல்வர் எடுத்துக்கொண்ட முயற்சிகள்

செய்தியாளர்
: இலங்கை பிரச்சினை பற்றி....

தமிழர் தலைவர்
: இதில் தெளிவாக என்னென்ன செய்ய முடியுமோ அத் துணையையும் செய்திருக்கின்றோம்.

இலங்கை பிரச்சினை என்று சொல்லும்பொழுது அது வெளிநாட்டுப் பிரச்சினை. அந்த வெளி நாட்டுப் பிரச்சினை எவ்வளவு சக்தி வாய்ந்த ஒரு மாநில அரசாக இருந்தாலும், ஒரு மாநில அரசாலே தீர்க்க முடியாது.

மத்திய அரசுதான் அதை செய்யமுடியும். அந்த வகையிலே மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பதிலே ரொம்பத் தீவிரமான முறையிலே கலைஞர் அவர்கள் எடுத் துக்கொண்டிருக்கின்ற எல்லா முயற்சிகளுக்கும் திராவிடர் கழகம் உறுதுணையாக இருந்திருக் கிறது.

அது மட்டுமல்ல; திராவிடர் கழகம், திரா விடமுன்னேற்றக்கழகம் தான் ஈழத்தமிழர் பிரச் சினையிலே மற்ற கட்சிகள் பிறக்காத, சிந்திக்காத காலகட்டத்தி லிருந்து தொடர்ந்து இந்தப் பிரச்சினையை முன்னெடுத்து வரக்கூடிய ஒன்றாகும். 1980லேயிருந்து இந்தப் பிரச்சினை இருந்து வருகிறது. இப்பொழுதுள்ள சில கட்சிகள் தாங்கள் தான் முக்கியமான அளவுக்கு ஈடுபாடுகாட்டுகிறோம் என்று சொல்லக் கூடியவர்கள் பொது வாழ்க்கைக்கு வந்ததுமில்லை.

அப்பொழுது சில கட்சிகள் இருந்ததுமில்லை. ஆனாலும் அவர்கள் அதிகமாக சொல்கிறார் கள். நமக்கு அதைப் பற்றிக் கவலை இல்லை.

உண்மையாகவே யார் சொன்னாலும் ஈழப்பிரச்சினை, ஈழத்தமிழர்களுடைய வாழ்வு மிக மோசமாக இருக்கிறது. நாளும் தமிழர்கள் செத்துக் கொண்டிருக்கின்றார்கள். கொடுமைகள் மலிந்திருக்கின்றன.

அதற்காக வலியுறுத்தி தொடர்ந்து அழுத்தங்கள் கொடுத்திருக்கின்றோம். சிங்கள ராஜபக்சே ஒரு இனப்படுகொலையை பச்சைப் படுகொலையை (Genocide) நடத்திக் கொண்டிருக்கின்றார்.

கடுமையான அழுத்தம்

எனவே, சிங்கள ராஜபக்சே செய்து வருவதை தடுத்து நிறுத்த வேண்டும். உலக நாடுகளுக்கும் அந்தக் கருத்தை வலியுறுத்திக் கொண்டு ஒரு பெரிய லாபியை நடத்திக் கொண்டிருக்கின்ற அளவிலே அமெரிக்கா போன்ற நாடுகள் அதை செய்து கொண்டிருக் கின்றன.

அதே நேரத்திலே அவர்களுக்கு ஒரு தைரியம். அண்மையிலே கூட தி.மு.க தலைவர் கலைஞர் அவர்கள் வேலை நிறுத்தத்தை அறிவித்தார்கள். அது நல்ல முழு வெற்றியாக அமைந்தது.

அமைந்ததோடு மட்டு மல்லாமல் அதில் சிறப்பாக குறிப்பாக சொல்லப்பட வேண்டியது என்ன வென்றால், உடனடியாக மத்திய அமைச்சரவை அவசரமாக இரவே கூடியது. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தீர் மானம்போட்டு இது வரையிலே இல்லாத அளவிற்கு உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் நேற்று முன்தினம் சென்னையிலே சொன்னார்.

இதுவரை வேண்டுகோள், கோரிக்கை என்பதை எல்லாம்தாண்டி, நிர்ப்பந்தம் என்று சொல்லக் கூடிய அளவிற்கு அழுத்தம் கடுமையாகக் கொடுத்திருக்கின்றோம்.

இன்னும் இரண்டொரு நாளிலே விளைவுகள் தெரியும் என்று தெளிவாக சொல்லியிருக் கின்றார்கள்.

இதைவிட அமெரிக்க அதிபர் ஒபாமா ரொம்பத் தெளிவாகவே சொல்லியிருக்கின்றார். இதிலே ஒரு பெரிய கொடுமை, வேதனை என்னவென்று சொன்னால் சீன அரசு இலங்கை அரசுக்கு முழு ஆயுதத்தை, முழு உதவியைக் கொடுத்துக் கொண்டிருக்கிறது.

அதே போல ஜப்பான் அதே போல பாகிஸ்தான் இது போன்ற நாடுகளினுடைய ஆதரவு இலங்கை அரசுக்கு இருந்துகொண்டு வருகிறது. இலங்கை அரசு நிதிஉதவி வரை பெற்றிருக்கிறது.

இலங்கையில் தமிழர்களை தனிப்பகுதிகளிலே கொண்டு வந்தால் கூட, அவர்களுக்கு அங்கு பாது காப்பற்ற நிலை. இவைகள் எல்லாம் இருக்கின்றன.

எனவே தொடர்ந்து இன்னும் அதிகமாக அழுத்தம் கொடுக்க வேண்டும்.

ஈழத்தின் மீது தனிக்காதல்

இந்தப் பிரச்சினையை வெறும் தேர்தல்கண் ணோட்டத்தோடு பார்க்கக் கூடாது. சில கட்சிகள் தேர்தலில் இது ஆதாயம் தேடுவதற்கு வசதி என்று நினைக்கின்றார்கள். சிலருக்கு திடீரென்று ஈழத்தின் மீது இப்பொழுது காதல் பிறந்திருக்கிறது.

இந்திய இராணுவத்தை அனுப்பி பிரபாகரனைப் பிடித்து கைது செய்து கொண்டு வர வேண்டு மென்று சட்டமன்றத்திலே தீர்மானம்போட்ட ஜெயலலிதா; இலங்கை வேறுநாடு; இலங்கை நாட்டிலே போர் நடக்கும்பொழுது படுகொலைகள் நடப்பது சகஜம் தான் என்று 18.1.2009லே கூட சொன்னவர் ஜெயலலிதா. தொல். திருமாவளவன் அவர்கள் உண்ணாவிரதம் இருந்த பொழுது மற்ற நண்பர்கள் உங்கள் கூட்டணியிலே இருக்கிறவர்கள் ஆதரவு காட்டுகிறார்களே என்று ஜெயலலிதா அவர்களிடம் கேட்ட பொழுது, கருணாநிதியும், திருமாவளவனும் பேசி வைத்துக்கொண்டு விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக இருக்கிறார்கள் என்று சொன்னவர்.

அதே நேரத்திலே நாம் எடுத்த முயற்சிகளுக்கு எந்த வகையான ஒத்துழைப்பையும் ஜெய லலிதா அவர்கள் கொடுக்கவில்லை.

அனைத்து கட்சிகளின் சார்பில் பிரதமர் அவர்களைப் பார்க்கச் சென்ற பொழுது அவர் கலந்து கொள்ளவில்லை.

அதே போல மனித சங்கிலி அறப்போராட்டத்தை நடத்தியபொழுதும் அ.தி.மு.க பங்கேற்க வில்லை.

ஈழப்பிரச்சினைக்காக சட்டமன்றத்திலே தீர்மானம் நிறைவேற்றிய நேரத்திலும் அ.தி.மு.க கலந்து கொள்ளாமல் வெளியேறியது.

இப்படிப்பட்ட அ.தி. மு.க பொதுச்செயலாளர் ஜெயலலிதா அவர்கள் தனி ஈழம் அமைய வேண்டும் என்று நேற்று ஈரோட்டிலே சொல்கிறார் என்று சொன்னால், தேர்தலுக்காக திடீ ரென்று இந்தப் பிரச்சினையைப் பற்றி சொல்வார்.

ஆனால் மே 11- ஆம் தேதி பிரச்சாரம் முடிந்த பிற்பாடு தேர்தல் 13-ஆம் தேதி அன்றைக்கு வாக்களிக்கின்ற நாள்.

எங்களுக்கு தேர்தல் பிரச்சினை அல்ல

பிரச்சாரம் மே 11-ந் தேதியோடு முடிவுறுகிறது. அதற்குப் பிறகு ஜெயலலிதா அவர்கள் ஈழத்தைப் பற்றி சொல்வாரா? என்பது கேள்விக்குறி.ஆனால் எங்களைப் பொறுத்தவரையிலே ஈழப்பிரச்சினை என்பது தேர்தலுக்குரிய பிரச்சினை அல்ல.

அது ஒரு இனத்தினுடைய வாழ்வுரிமைப் பிரச்சினை.

எப்படி 1980 ஆம் ஆண்டிலிருந்து தொடங்கி நாங்கள் அதில் ஈடுபாடு கொண்டிருக்கின்றோமோ அதே போல தேர்தல் முடிந்த பிற்பாடும் கூட ஈழத்தமிழர்களுக்கு ஒரு நிரந்தரமான வாழ்வு ரிமை, பாதுகாப்புரிமை வழங்க வேண்டும் என் பதிலே அக்கறையோடு இருக்கிறோம்.

அதற்குரிய அரசுகள் வரவேண்டுமானால் இப்பொழுது இருக்கின்றவர்களை வைத்துத் தான் செய்ய முடியுமே தவிர, தனியே இருந்து செய்ய முடியாது. அது தான் மிக முக்கியம்.

தந்தை செல்வாவே பிரிவினையைக் கேட்டார்

செய்தியாளர் : ஈழப் பிரச்சினை இன்னமும் முடியவில்லையே?

தமிழர்தலைவர் : ஈழப் பிரச்சினை நமது ஊர் பிரச்சினை இல்லை. பாண்டிச்சேரி பிரச்சினையே இன்னமும் முடியவில்லையே பல விசயங் களில். அது வெளிநாட்டுப் பிரச்சினை ஆயிற்றே.

ஈழத்தமிழர் பிரச்சினை தந்தை செல்வா காலத்திலிருந்து ஆரம்பித்தது. ரொம்பபேருக்கு வரலாறு தெரியாது. நாட்டுப் பிரிவினை கேட்டதே - ஈழம் என்று கேட்டதே தந்தை செல்வா தான்.

அதுவும் தேர்தலில் அவர்கள் நின்றார்கள். அப்பொழுதெல்லாம் விடுதலைப்புலிகள் அமைப்பே தோன்றவில்லை.

தந்தை செல்வா இலங்கையிலிருந்து தமிழ் நாட்டிற்கு வந்து தந்தை பெரியார் அவர்களைப் பார்த்தார்கள்.

கலைஞர் அவர்களைப் பாத்தார்கள். நான் சொல்வது 1972 ஆம் ஆண்டு. ஆகவே இது ஒரு நீண்ட போராட்டம். இலங்கையில் தமிழினப் படுகொலைகள் ஆட்சிகள் மாறினாலும் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டு வருகின்றது.

உலகத்திலே பல நாடுகளில் பல பிரச்சினைகள் இருக்கின்றன. ஆகவே நாம் நம்முடைய அற வழிப்பட்ட ஆதரவை நாம் கொடுக்கிறோம். தொடர்ச்சியாக நாங்கள் அதை செய்து கொண்டு வருகின்றோம்.

செய்தியாளர் : இந்தியா ஆயுத உதவி செய்கிறதே?

தமிழர்தலைவர்: இந்தியா ஆயுத உதவி செய்யவில்லை என்று மறுத்திருக்கிறது. நாங்கள் ஆயுத உதவி செய்யவில்லை என்று தெளிவாகச் சொல்லி யிருக்கின்றார்கள்.

ஆனால், ஆயுத உதவி ஆரம்பத்தில் கொடுத்தார்களா? இல்லையா? என்பதைப் பற்றி இப் பொழுது நமக்குக் கவலை இல்லை.

இப்பொழுது இந்தியாவினுடைய நிலைப்பாடு அழுத்தம் திருத்தமாக நாங்கள் சொல்லி போரை அங்கு நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்துகின்றோம்.

பயிற்சி தடுக்கப்பட்டது

ஆகவே, இதை எல்லோருமே சொல்லியிருக்கின்றார்கள். தமிழ்நாட்டிற்கு இலங்கைக்காரர்கள் சிலர் பயிற்சிக்கு வந்தார்கள் என்பது தெரிந்தவுடனே முதலமைச்சர் கலைஞர் அவர்கள் கண்டித்திருக்கின்றார்கள்.

இது வழக்கமாக ஒரு நாடு இன்னொரு நாட்டிடம் பயிற்சி கொள்வது என்று சொன்னார்கள். எந்த பயிற்சியாக இருந்தாலும் இங்கு சிங்களவர்களுக்கு பயிற்சிக் கொடுப்பதை அனுமதிக்க முடியாது என்று தாம்பரத்திற்கு வந்தவர்களை திருப்பி அனுப்பியிருக்கின்றார்கள்.

இந்தியா இலங்கைக்கு ஆயுதம் கொடுக்கிறது. என்ற செய்தியை பரப்பி இந்தியாவுக்கு ஒரு சங்கடத்தை கொடுக்க வேண்டும் என்பது சிங்களவர்களின் எண்ணமாக இருக்கலாம்.

சிங்களவர்களைப் பொறுத்தவரையிலே அவர்கள் என்றைக்கும் பிரித்தாளக்கூடிய எண் ணமுடையவர்கள். இந்திய அரசு என்ன சொல்கிறது. என்பது தான் முக்கியமே தவிர, இன்னொரு அரசு சொல்வதைப் பற்றி நமக்குக் கவலை இல்லை. இன்னொரு அரசு ஆயிரம் சொல்லலாம்.

இப்பொழுதும் கூட கலைஞர் அவர்கள் சொன்னவுடனே பிரதமர் பேசுகிறார்.

உடனே உள்துறை அமைச்சர் வருகிறார் வெளியுறவுத்துறை அமைச்சர் வருகிறார். ஏற்பாடுகள் நடக்கிறது. கப்பல் மூலமாக இலங்கைக்கு உணவு, மருந்து பொருட்கள் போகின்றன.

இவ்வளவும் மத்தியில் நாம் ஒரு அரசை உருவாக்கிய காரணத்தால் தான் நடக்கிறது. இதற்கு முன்பு இருந்த அரசிடம் அந்த உரிமையை எடுத்துக்கொள்ள முடியாதே.

தமிழர் தூதர் தேவை

செய்தியாளர் : தூதர் அனுப்பியது பற்றி...

தமிழர்தலைவர் : இலங்கைக்கு தூதராக யாரை அனுப்புவது என்று பிரதமர் முடிவு செய்ய வேண்டுமே தவிர, மற்றவர்கள் அல்ல. அந்தத் துறையை சார்ந்தவர்கள் செய்ய வேண்டிய செயல் அது.

அதைவிட நீங்கள் இன்னொரு நல்ல கேள்வியைப் போட வேண்டும். நீண்ட நாட்களாக நாங் கள் சொல்லிக்கொண்டு வருவது.

இலங்கையில் இந்திய தூதுவராக ஒரு தமிழர் தான் இருக்க வேண்டும். நீண்ட காலத்திற்கு முன்னாலே டாக்டர் சுப்பராயன் அவர்கள் தான் ஒரு தமிழன் தூதுவராக அங்கு இருந்தார். ரெங்கராஜன் குமாரமங்கலம் தந்தையார் மோகன் குமாரமங்கலம் அவருடைய தந்தையார் சுப்ப ராயன்.

அவர்தான் இலங்கைக்கான தமிழர் தூதுவராக இருந்தார்.

அவருக்கு அப்புறம் இதுவரை ஒரு தமிழர் கூட இலங்கைத் தூதுவராக நியமிக்கப்பட வில்லை. தமிழர்கள் எங்கெங்கு அதிகம் இருக்கின்றார்களோ உதாரணமாக, மலேசியா அது மாதிரி மற்ற நாடுகளில் தமிழர்களை தூதுவர்களாக அனுப்ப வேண்டும்.

இது இப்பொழுது அல்ல. திராவிடர் கழகம் நீண்ட நாள்களாக இதை வலியுறுத்திக் கொண்டு வருகிறது.

அதில் நிச்சயமாக நாங்கள் வெற்றிபெறுவோம் என்று கருதுகின்றோம்.

உங்கள் மூலமாக (செய்தியாளர்) இந்த கருத்துகள் வரும்பொழுது அதற்கு வாய்ப்பு, வலிமை இன்னும் ஏற்படும் - இவ்வாறு தமிழர் தலைவர் அவர்கள் பேட்டி அளித்தார்.


------------------"விடுதலை" 28-4-2009

இலங்கைத் துணைத் தூதரக அலுவலகத்தை இழுத்துமூடும் போராட்டம் ஏன்?




பூட்டுப் போடும் போராட்டம் ஏன்?

இலங்கையில் முழுப் போர் நிறுத்தம் தேவை என்ற முக்கிய உலக நாடுகளான அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஸ்வீடன் முதலிய நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் கொழும்பு விரைந்துள்ளனர். அதிபர் ராஜபக்சேயிடம் நேரில் வலியுறுத்திட சென்றுள்ளனர்.

ஏற்கெனவே இவ்வேண்டுகோளை ஏற்று, விடுதலைப் புலிகள் போர் நிறுத்தத்தினை அறிவித்துவிட்ட நிலையில், பிடிவாதம் காட்டும் இராஜபக்சே அரசின் போக்கிற்கு முடிவு கட்டிட, அனைத்துலகமும் ஓரணியில் திரளும் நிலையில், சீனாவும், பாகிஸ்தானும், ஜப்பானும்தான் சிங்கள இராணுவத்திற்கு முழுத் துணை என்பதைத் தெரிந்துகொள்ளவேண்டும்.

இந்நிலையில், இந்திய அரசு தனது வலிமையான அழுத்தத்தினை மேலும் தீவிரப்படுத்தி, தலையிட்டே ஆகவேண்டிய அவசர அவசியத்தை உலகத் தமிழர்கள் முதல் உள்ளூர் தமிழர்கள் வரை வலியுறுத்துகின்றனர்.

இதன் அடையாளம்தான் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள இலங்கைத் துணைத் தூதரக அலுவலகத்தை இழுத்துமூடும் போராட்டமாகும்.

அணிதிரள்வீர்! திரள்வீர்!

---------------------------------------------------------------------------------------

நேற்று இப்போராட்டம் பற்றி தி.க. தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை இதோ:


நாளை இலங்கைத் துணைத் தூதரக அலுவலகத்தை

இழுத்து மூடும் போராட்டம்!

"ஈழத் தமிழர்களைக் காப்போம், காப்போம்!"

தமிழர் தலைவர் அறிவிப்பு


எவ்வளவோ போராடினோம் - பொறுத்துப் பார்த்தோம். இலங்கை இட்லர் ராஜபக்சே போர் நிறுத்தம் செய்வதாக இல்லை. ஈழத் தமிழர்களை முற்றாக ஒழிப்பதுவரை போர் நிறுத்தம் செய்வதாக இல்லை என்று தெரிகிறது.

நாம் அடுத்த கட்டத்திற்குச் செல்லவேண்டியதுதான். முதல்வர் கலைஞர் அவர்கள் இந்த 86 ஆம் வயதிலும் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கிவிட்டார். தமிழ்நாடெங்கும் பதற்றமான நிலை!

திராவிடர் கழகம் நாளை (28.4.2009) காலை 11 மணிக்கு சென்னை - டாக்டர் நடேசன் சாலையிலிருந்து ஊர்வலமாகப் புறப்பட்டு, சோழா ஓட்டல் பின்புறமுள்ள இலங்கைத் துணைத்தூதரக அலுவலகத்தின் முன் ஆர்ப்பாட்டமும், அந்த அலுவலகத்தை இழுத்துப்பூட்டும் போராட்டமும் எனது தலைமையில் நடைபெறுகிறது.

கழகத் தோழர்களும், தமிழின உணர்வாளர்களும், கட்சிகளைக் கடந்து - நம் ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமைக்காக நடத்தப்படும் இந்த இன மீட்சிப் போராட்டத்திற்குத் திரண்டு வருமாறு கேட்டுக்கொள்கிறோம்.

அனுமதி மறுக்கப்பட்டாலும் அதனை மீறி இப்போராட்டம் நடைபெறும்! நடைபெறும்!!

வாரீர்! வாரீர்!!




--------------- கி.வீரமணி, தலைவர்,திராவிடர் கழகம். -"விடுதலை" 27.4.2009

27.4.09

ஒன்றிடுவோம்! வென்றிடுவோம்!!தமிழ்நாடு கொந்தளிக்கிறது


தமிழ்நாடு கொந்தளிக்கிறது

ஈழத் தமிழர்களின் போராட்டம் மிக நீண்ட காலமாக பல்வேறு வடிவங்களில் நடைபெற்று வந்தாலும் 1983 முதல் அது மிகவும் உக்கிரமமான கட்டத்தை எட்டியது.

சிங்களவர்கள், இலங்கை அரசின் துணையோடு தமிழர்களைக் கொன்று குவித்தனர்; தமிழன் மாமிசம் இங்கே கிடைக்கும் என்று விளம்பரப் பலகை மாட்டியிருந்தனர்.

புகழ்பெற்ற தமிழர்களின் அரிய கருவூலமான யாழ்ப்பாண நூலகம் சிங்களக் காடையர்களால் தீயிட்டுச் சாம்பலாக்கப்பட்டது. சிறை உடைக்கப்பட்டு சிறைச் சாலையில் இருந்த போராளிகளும் கொலை செய்யப்பட்டனர். அவர்களின் கண்கள் பிடுங்கப்பட்டு பூட்சு காலால் இடரப்பட்டது. சிங்களத்தோடு தமிழும் ஆட்சி மொழி என்ற நிலை அகற்றப்பட்டது.

தமிழ்ப் பெண்கள் மானபங்கப்படுத்தப்பட்டனர். தமிழர்களின் நெஞ்சில் ஸ்ரீ என்ற சிங்கள எழுத்துப் பொறிக்கப்பட்டது.

தொடக்கத்தில் இந்தக் கொலைகளை எதிர்த்து ஈழத் தந்தை செல்வா என்ற செல்வநாயகம் அவர்களின் தலைமையில் அறப்போராட்டம் நடத்தப்பட்டது.

அவர்களின் அறப்போராட்டம் நசுக்கப்பட்டது. உண்ணாவிரதம் இருந்த தமிழர்கள் தாக்கப்பட்டனர்.

ஈழ விடுதலையை முன்னிறுத்தி தேர்தலில் பெருவாரியாக வெற்றி பெற்று நாடாளுமன்றத்திலும் குரல் கொடுத்தனர். நாடாளுமன்றத்திலேயே அச்சுறுத்தப்பட்டனர்.

வேறு வழியே இல்லை என்ற ஒரு கட்டத்தில்தான் அங்கே போராளிகள் ஆயுதங்களை ஏந்தவேண்டிய அவசியத்திற்குத் தள்ளப்பட்டனர்.

ஒரு கட்டத்தில் பிரதமர் ராஜீவ் காந்தியின் முயற்சியால் இலங்கை இந்திய ஒப்பந்தம் ஒன்று எட்டப்பட்டது.

அதில் பல குறைபாடுகள் இருந்தாலும், அதனைக்கூட சரிவர நிறைவேற்றிட முன்வரவில்லை. வடக்கு - கிழக்கு மாகாண இணைப்பு மேற்கொள்ளப்படவேண்டும் என்ற முக்கியமான சரத்து - நீதிமன்றம் சென்று ரத்து செய்விக்கப்பட்டது.

தமிழர்களின் பூர்வீகப் பகுதிகளில் சிங்களர்களைக் கொண்டு வந்து குடியேற்றி தமிழர்களை சிறுபான்மையாக்கும் சூழ்ச்சி மேற்கொள்ளப்பட்டது.

தமிழ்நாட்டில் அதன் எதிரொலிகள் எங்கு பார்த்தாலும் வெடித்துக் கிளம்பின. சிங்கள வெறியாட்டத்தை எதிர்த்து தமிழ் மண் எரிமலைக் குழம்பைக் கக்கியது.

பல வடிவங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டன. முதல் பொதுக்கூட்டத்தை சென்னை புல்லாரெட்டி அவென்யூ பகுதியில் திராவிடர் கழகம் நடத்திக் காட்டியது. கலைஞர் உள்ளிட்ட அனைத்துக்கட்சித் தலைவர்களும் பங்கு கொண்டு சங்கநாதம் செய்தனர்.

மதுரையில் ஈழ விடுதலை மாநாடே நடத்தப்பட்டது. மாநாட்டில் ஈழ விடுதலைக் கொடி கூட ஏற்றப்பட்டது.

தி.மு.க. அரசு இரண்டு முறை - ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக இருந்தது என்பதற்காகக் கவிழ்க்கப்பட்டது. இப்பொழுது அய்ந்தாவது முறையாக முதலமைச்சராக ஆகியுள்ள கலைஞர் அவர்கள் தொடர்ந்து அரசு ரீதியிலும், கட்சி ரீதியிலும் பல்வகை வழிகளில் எதிர்ப்புணர்ச்சிகள் அறப்போராட்ட வடிவத்தில் அரங்கேற்றப்பட்டன.


அவ்வப்பொழுது சில வாக்குறுதிகள் வந்தாலும், செயல் அளவில் ஈழத் தமிழர்கள்மீது இலங்கை அரசு மேற்கொள்ள யுத்தம் நிறுத்தப்படவில்லை.

இந்த நிலையில்தான் யாரும் எதிர்பாராத முறையில் இன்று காலை 5.30 மணிக்கு சென்னை - அண்ணா நினைவிடத்தில் முதலமைச்சர் கலைஞர் அவர்கள் பட்டினிப் போராட்டத்தை மேற்கொண்டுள்ளார்.

பிரதமர் உள்ளிட்டோர் உண்ணாவிரதத்தைக் கைவிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளனர்.

தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் சொன்னதுபோல, கலைஞர் அவர்களின் உயிர் என்பது தமிழினத்தின் சொத்தாகும் - பாதுகாவலரணாகும். அந்த வகையில் பலவகைப்பட்டவர்களும் உண்ணாவிரதத்தைக் கைவிடுமாறு கேட்ட வண்ணம் உள்ளனர். அதேநேரத்தில் இந்த 86 வயதில் தமிழர்களுக்காக எந்தத் தியாகத்துக்கும் தயார் என்று அவர் காட்டிக் கொண்டிருப்பது அசாதாரணமானது. இதனைப் புரிந்துகொண்டு இலங்கை அரசு போரை நிறுத்தாவிட்டால், அதன் விளைவு உலகெங்கும் கடுமையாக எதிரொலிக்கும் என்பதில் அய்யமில்லை.

அதுபோலவே, திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் நாளைய தினம் (28.4.2009) காலை 11 மணிக்கு சென்னையில் இலங்கைத் துணைத் தூதரக அலுவலகத்தை இழுத்துப் பூட்டும் போராட்டத்தை அறிவித்துள்ளார். பல தரப்பு மக்களாலும் இது வரவேற் கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் ஈழத் தமிழர்ப் பிரச்சினையை அரசியலாக்க முனைந்தது வருந்தத்தக்கது.

பிரச்சினைக்கு மட்டும் முதல் இடம் கொடுப்போர் திராவிடர் கழகம் நாளை நடத்தவிருக்கும் போராட்டத்தில் பங்குகொள்ளவேண்டும்; இதில் கட்சியில்லை; மாறாக இன உணர்வுடன் மனித உரிமை, மனிதநேய எண்ணங்களும்தான் பொங்கி நிற்கின்றன.

ஒன்றிடுவோம்! வென்றிடுவோம்!!தமிழ்நாடு கொந்தளிக்கிறது


----------"விடுதலை"தலையங்கம் 27-4-2009

பார்ப்பன ரவிசங்கர் இலங்கைக்கு வழங்கும் நற்சான்றிதழ்




சிறீசிறீ ரவிசங்கர் என அழைத்துக் கொள்ளும் பாபநாசம் பார்ப்பனர் ரவிச்சந்திரன் அண்மையில் இலங்கைக்குப் போய் வந்து அறிக்கை விடுத்திருக்கிறார்.

காஷ்மீரில் பார்ப்பனப் பண்டிதர்களுக்கு இந்திய அரசுதந்துள்ள வசதிகளைவிட, தமிழ்நாட்டில் இலங்கை அகதிகளுக்குத் தந்துள்ள உதவிகளைவிட சிறீலங்காஅரசு, இலங்கைத் தமிழர்களுக்கு வசதி செய்து தந்துள்ளது என ராஜபக்சே அரசுக்கு நற்சான்றிதழ் வழங்கியுள்ளார்.

இலங்கை ராணுவத் தளபதி கர்னல் இந்து நீல் டிசில்வா என்பவரைப் புகழ்ந்து கூறியுள்ளார். தங்கள் வீடுகளுக்குத் திரும்பிப் போகத் தமிழர்களை விரைவில் அனுமதிப்பதாக இலங்கை அதிபர் இவரிடம் உறுதி அளித்துள்ளாராம்.

இப்பேர்ப்பட்டவரை வரவேற்கத் தான் திரைஉலகத்தைச் சார்ந்த சிலர் கூடியிருந்தனர். என்னே அவலம்!

----------------நன்றி;- "விடுதலை" 27-4-2009

"தினமணி" நாளேட்டின் செய்திக்கு மறுப்பு






"தினமணி" நாளேட்டில் இன்று காலை (27.4.2009) வந்துள்ள செய்தி வருமாறு:

"இந்திய அரசு தலையிட முடியாது" என்ற தலைப்பிட்டு இன்று காலை (27.4.2009) வெளிவந்துள்ள "தினமணி" நாளேட்டில் - ஒரு செய்தி வெளிவந்துள்ளது. புதுவையில் நான் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியை முழுமையாகத் திரித்து, தலைகீழாக்கி, விஷமத்தனமாக செய்தியை கொட்டை எழுத்துக்களில் முதல் பக்கத்தில் "தினமணி" வெளியிட்டுள்ளது.

கெட்டபெயர் உண்டாக்கவே இந்த வேலை

நமக்கும், நம் இயக்கத்திற்கும் கெட்ட பெயர் உண் டாக்கவே இந்த ஏற்பாட்டினை - "தினமணி" நாளேடு தவறான செய்தியை - வெளியிட்டுள்ளது.

இலங்கைப் பிரச்சினை உள்நாட்டுப் பிரச்சினை; இதில் இந்திய அரசு தலையிட முடியாது என்று நான் கூறு வேனா? முழுப் போர் நிறுத்தம் தேவை, இலங்கையில் நடை பெறும் இனப்படுகொலையை தடுத்து நிறுத்திட மத்திய அரசு முன்வரவேண்டும் என்பதை கடந்த செப்டம்பர் 23 ஆம் தேதி 2008-லிருந்து வற்புறுத்தி, நாளும் எழுதியும், பேசிவரும் நிலையில் இப்படிக் கூறிட முடியுமா?

கூறியது என்ன?

அது உள்நாட்டுப் பிரச்சினை; அதில் தலையிட முடியாது. அங்கே சண்டை நடந்தால் அப்பாவித் தமிழர்கள் கொல்லப்படுவது சகஜம்தான் (18.1.2009) என்று பேட்டி கொடுத்த ஜெயலலிதாவுக்கு இன்று ஈழத் தமிழர்கள்மீது வந்துள்ள திடீர் அக்கறை தேர்தலில் அதைக் காட்டி ஓட்டு வாங்குவதற்காகவே என்பதை விளக்கியும், தமிழ்நாடு முதல்வர் ஒரு மாநில அரசின் முதல்வர்; அவரைப் பொறுத்தவரை எவ்வளவு அழுத்தங்களை உச்சத்திற்குச் சென்று தர முடியுமோ அதனைத் தந்து கொண்டிருப்ப தால்தான் இந்த அளவுக்குச் செயல்பாடுகள் நடைபெற்று வருகின்றன என்ற கருத்துகளைத்தான் குறிப்பிட்டேன்.

மறுப்புக் கடிதம் "தினமணி"க்கு!

உடனிருந்த கழகப் பொறுப்பாளர்கள் உள்பட மற்ற ஏட்டாளர்களும் சாட்சி! பேட்டியின் ஒலிநாடாப் பதிவும் எம்மிடத்தில் உள்ளது.

அதற்குரிய மறுப்பினை வெளியிட வேண்டும். "தினமணி"க்கே இப்படி ஒரு மறுப்பினையும் வெளியிட்ட கடிதம் ஒன்றை அதன் ஆசிரியருக்கு அனுப்பியுள்ளேன்.




- கி. வீரமணி, தலைவர்,திராவிடர் கழகம் -"விடுதலை" 27.4.2009

26.4.09

அட்சய திருதிப் புரட்டும் - மகாபாரதக்கதையும்




அட்சய திருதியை என்னும் புரட்டு...



உழைப்பின் பயனை உறிஞ்சி, உழைப்போரை என்றும் வெறும் சக்கைகளாகவே பிழைப்பு நடத்த வேண்டிய நிலையில் வைத்திருப்பதில் இந்துமதக் கலாச்சாரத்திற்கு இணையாக வேறு எதையும் சொல்ல முடியாது.

பொய் மூட்டைகள்

தொன்மைக் காலத்தில், அரசர்கள் ஆண்டபொழுது, சத்திரியர்களுடன் சேர்ந்து கொண்டு, சில சமயங்களில் வைசியர்களையும் இணைத்துக் கொண்டு, சூத்திரர்களைச் சுரண்டுவதற்கு வேதம், இதிகாசம், புராணம், ஜோதிடம் முதலிய பொய் மூட்டைகளைப் பார்ப்பனர்கள் பயன்படுத்தினார்கள்.

நவீன அறிவியல் காத்திலும் பகுத்தறிவற்ற படித்தவர்கள், பதவியில் இருப்பவர்கள், பதவியை நாடும் அரசியல்வாதிகள், பேராசை கொண்ட பணக்காரர்கள் முதலியவர்களை இதிகாச, புராணக் கதைகளைக் காட்டி மதவாதிகளும், ஜோதிடர்களும், சாமியார்களும் ஏமாற்றுவது தொடர்வது பரிதாபத்திற்கு உரியதாகவும் வருந்தத்தக்கதாகவும் இருக்கிறது.

ஓராண்டு முழுவதும்.. .

அதில் ஒன்றுதான் அட்சய திருதியை எனும் ஏமாற்று. இது அண்மையில் சில ஆண்டுகளாக பிரபலம் ஆக்கப்படும் நகைப்புக்கு உரிய ஒரு கூத்து. அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்கினால், அப்படி வாங்குவோருக்கு எல்லாம் அந்த ஆண்டு முழுவதும் தங்கம் வாங்கிக் கொண்டே இருக்கும் அளவுக்குச் செல்வம் கொழிக்குமாம்! ஆசை வயப்பட்டவர்களுக்குப் பேராசையைத் தூண்டும் ஓர் அற்புதமான மூடநம்பிக்கைக் குளிகை இது.

பாரதம்

இந்த மூட நம்பிக்கையை உண்மையைப் போல் நம்ப வைப்பதற்குப் பயன்படுத்துவது இதிகாசப் புராணக் கதைகள்தானே! அட்சய திருதியையை நம்ப வைப்பதற்கு மகாபாரதத்தில் இருந்து ஒரு கப்சாவைப் பயன்பபடுத்துகிறார்கள்.

துர்வாசர் என்பவர் முனிவர்களுக்குத் தலைவன். அவனுக்கு ஏராளமான சீடர்கள். அவன் ஏதேனும் அரசரின் இருப்பிடத்திற்குச் சென்றால், அவனுக்கும் அவனுடைய சீடர்களுக்கும் உணவளித்து உபசரிக்க வேண்டும். இல்லை என்றால், முன் கோபியான துர்வாச முனிவரின் சாபத்திற்கு உள்ளாகி அரசன் அவதிப்படுவான்.

ஒருநாள், துரியோதனனின் அரண்மனைக்கு துர்வாசனும் அவனுடைய பார்ப்பனச் சீடர்களும் செல்கிறார்கள் காலை நேரத்தில். நல்ல உணவு கிடைக்கிறது. மனத்திருப்தி அடைந்து துரியோதனனை வாழ்த்தி விடை பெற முனைகிறார், முனிவர் துர்வாசர். அப்பொழுது துரியோதனன் கூறுகிறான்: இன்று அட்சய திருதியை, மிக நல்ல நாள்; உங்களுக்கு விருந்து வைக்கும் நல்ல வாய்ப்பும், உங்கள் அருளும் எனக்குக் கிடைத்தது. இதே சிறப்பைப் பாண்டவர்களும் பெறவேண்டும். ஆகையால் காட்டில் வாழும் அவர்களுடைய இருப்பிடத்திற்குச் சென்று விருந்துண்டு, அவர்களையும் ஆசிர்வதிக்க வேண்டும் என்றான்.
அவ்வாறே செய்வோம் என துர்வாசர், துரியோதனனிடம் கூறிவிட்டுப் பாண்டவர்கள் வாழும் காட்டிற்குச் சென்றான்.

துர்வாச முனிவரின் சீடர்கள் மிகப் பலர். அவர்கள்அனைவருக்கும் உணவு சமைக்கப் பாண்டவர்கள் அவதிப்படுவர்; அவர்களால் முடியாது. திரவ்பதியிடம் ஓர் அட்சயப் பாத்திரம் உண்டு. அதில் அள்ளஅள்ள உணவு குறையாது. ஆனால், ஒரு நாளில் ஒரு முறை அதைப் பயன்படுத்திய பின்பு, அதைக் கழுவி வைத்துவிட்டால், அதை மீண்டும் மறுநாள்தான் பயன்படுத்த முடியும். துர்வாசர், காலையில் துரியோதனன் அரண்மனையில் தன் பார்ப்பனச் சீடர் பலருடன் வயிற்றை நிரப்பியாயிற்று. இனி, மதிய உணவிற்குத்தான் பாண்டவர் இருப்பிடம் செல்வார்கள்.அதற்குள், திரவ்பதி அட்சய பாத்திரத்தைக் கழுவி வைத்திருப்பாள். துர்வாசரின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் அவ்வளவு பேருக்கும் சமைக்க முடியாது; பசியினால் துர்வாசரின் கோபம் பொங்கி எழும்; பாண்டவர்களைத் தன் சாபத்திற்கு உள்ளாக்குவார்; அவர்கள் அழிவார்கள். இது துரியோதனின் திட்டம் என்று பாரதத்தில் வியாசர் கதை அளக்கிறார்.

துரியோதனன் வேண்டியபடியே துர்வாசன் பாண்டவரிடம் செல்கிறான்; மதிய உணவு தங்கள்அனைவருக்கும் அளிக்க வேண்டும் எனக் கூறிவிட்டு, ஆற்றுக்குச் சென்று குளித்துவிட்டு வருவதாகச் சொல்லி சீடர்களுடன் ஆற்றுக்குச் செல்கிறான்.



பஞ்சபாண்டவர்களின் பத்தினி திரவ்பதிக்குக் கவலை கவ்விக் கொள்கிறது. துரியோதனன் எதிர் பார்த்தபடியே, அட்சய பாத்திரத்தை முற்பகலில் பயன்படுத்தி, வந்தவர்களுக்கு விருந்தளித்து, அதைக் கழுவி கவிழ்த்து வைத்திருந்தாள். என்ன செய்வது? உடனே எப்பொழுதும்போல் கிருஷ்ண பகவானின் நினைவு வந்தது. மனதுக்குள் முறையிட்டாள்; பகவானும் வந்தார். அட்சய பாத்திரத்தை எடுத்து வரும்படி கூறினார்: அது பயன்படாது, கழுவியாயிற்று என திரவ்பதி கூறினாள். இருப்பினும் பகவான் வற்புறுத்தினார். பாத்திரத்தைக் கொண்டு வந்தாள்; அதில் ஒரு சோற்றுப் பருக்கை ஒட்டிக் கொண்டிருந்தது. பருக்கை ஒட்டிக் கொள்ளாமல் கழுவவேண்டுமெனக் கிருஷ்ணன் அறிவுரை கூறவில்லை. அதற்கு மாறாக, அந்தப் பருக்கையை வாயில் போட்டு விழுங்கினான். உலகில் உள்ளவர்கள் பசியை எல்லாம் அந்த ஒரு சோற்றுப் பருக்கை போக்கிவிட்டது. துர்வாச முனிவரும் அவனுடைய சீடர்களும் அவ்வாறே வயிறு நிரம்பியதாக உணர்ந்தனர். பாண்டவர்களிடம் வந்து அவர்களை வாழ்த்தினர்.


கதையின் நோக்கம் என்ன?

அட்சயப் பாத்திரத்தின் மகிமையைச் சொல்வதாக வரும் இந்த இதிகாசக் கதை நிகழ்ச்சி எதற்காகச் சொல்லப்பட்டது? ஒன்று, வருண தர்மத்தையும் ஜாதி பேதத்தையும் தனது கீதையில் உபதேசித்த கிருஷ்ணனுக்கு மகிமை ஏற்படுத்தி அவன் மீது பக்தி உண்டாக்க வேண்டும் என்பது. இரண்டு, முனிவர்கள் எனத் தங்களைச் சொல்லிக் கொண்டு, எத்தனை பார்ப்பனர்களுடன் அவர்கள் வந்தாலும் அரசர்கள் அவர்களுக்கு வயிறு நிரம்ப உணவு அளித்துப் பரிசுகள் வழங்கவேண்டும் என்பது. மூன்றாவதாக, இந்நாட்டின் பழங்குடிகளை பல மூடநம்பிக்கைகளில் மூழ்கடித்திருப்பது போதாது என்று, அட்சயபாத்திரம் என்ற மேலும் ஒரு மூடநம்பிக்கையிலும் ஆழ்த்தவேண்டும் என்பது. இந்த மூன்று சூதான திட்டங்களிலும், பார்ப்பனர்கள் இன்று வரை பெருமளவில் இந்திய மக்களை, இந்துக்கள் எனப்படுவோரை, இதுநாள் வரை ஏமாற்றியே வருகிறார்கள்.

அட்சயப் பாத்திரத்துடன் தொடர்புடையது அட்சய திருதியை நாள். அட்சயப் பாத்திரத்தில் உணவு பெருகுவதைப் போலவே,இந்த நாளில் செய்யும் நல்ல காரியம் ஓராண்டு முழுவதும் பலமடங்கு பெருகும் (மற்ற நாளில் செய்யும் நல்ல காரியத்துக்கு மகிமையில்லையா?). அதற்கு ஒரு கதை வேண்டும் அல்லவா?

ஆதிசங்கரர் ஒரு நாள் பிச்சை எடுத்து வந்தார். ஏழைப் பெண்ணின் வீட்டிற்குச் சென்றார். ஆதிசங்கரரின் பெருமையை அந்தப் பெண் அறியாதவளாம். ஆகையால் தன்னிடம் இருந்த மாம்பழத்தைப் பிச்சையாகப் போட்டாளாம். (இதில் என்ன சிறுமை அல்லது குறையைக் கதையளப்பவர் கண்டாரோ தெரியவில்லை.) உடனே, ஆதி சங்கரரின் அருளால், அப்பெண்ணின் இல்லத்தில் தங்கத்தால் ஆன நெல்லிக் கனிகள் குவிந்தனவாம்!
இந்தக் கதையை விளம்பரப்படுத்தி எதை வலியுறுத்துகிறார்கள்? அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்கினால், அந்த ஆண்டு முழுவதும்,அதற்குச் செலவிட்ட தொகை பல மடங்கு பெருகுமாம்! (அடுத்த ஆண்டு பலன் பெற மீண்டும் தங்கம் வாங்க வேண்டும். எப்படி ஏமாற்றுவித்தை?).



திட்டமிட்டு, உழைத்து, வாழ்வில் முன்னேற வேண்டும் என்ற எண்ணத்திற்கு இந்தக்கதை உதவுமா? இந்த மூடநம்பிக்கை,தங்கநகை வணிகம் செய்வோருக்கு லாபத்தைப் பெருக்குவதற்குத்தானே பயன்படும்? ஆகையால் தானே, இந்து மதமும் அதன் அடிப்படையில் அமைந்த கதைகளும், மக்களை ஏமாற்றவும், சோம்பேறிகள் ஆக்கவும் படைக்கப் பட்டிருக்கின்றன எனத் தந்தை பெரியார் கூறினார்.

முடக்கமா? முதலீடா?

அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்கி வீட்டில் முடக்குவது நாட்டின் பொருளாதாரத்தை முடக்குவதற்குத்தானே பயன்படும்! நாட்டின் ஒட்டு மொத்தச் செல்வத்தை உயர்த்தும் முதலீடாக அது இருக்கமுடியுமா? பாமரர்களைச் சுரண்டி, கொள்ளை லாபம் பெறுவதற்குத்தானே தங்கத்தில் மோகம் கொள்ளச் செய்வது உதவும்!

அறிவியலுக்கு எதிராக-

இந்த 2009 ஆம் ஆண்டில் அட்சய திருதியை ஏப்ரல் 27 ஆம் தேதி வருமாம். அப்பொழுது கிரகங்களின் (கோள்களின்) தலைவனாகிய சூரியன் உச்சத்தில் இருப்பானாம்! சூரியன் கோள் (கிரகம்) அல்ல; அது ஒரு நட்சத்திரம் என்பதைப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே அறிவியல் தெளிவாக்கி விட்டது.

ஆனால் இன்னும்அதைக் கிரகத்தின் பட்டியலில் வைத்து, ஊரை ஏமாற்றும் ஜோதிடர்களையும் மதவாதிகளையும் பற்றி என்ன சொல்வது? அல்லது, இப்படிப்பட்டவர்களின் பொய் உரைகளையும் ஏமாற்றுப் பேச்சுக்களையும் கட்டுக் கதைகளையும், ஆசை காட்டி மோசம் செய்யும் தன்மையையும் பற்றிக் கவலைப்படாமல், இருக்கும் பணத்தை எடுத்துக் கொண்டு, பணம் இல்லா விட்டாலும் கடன் வாங்கிக் கொண்டு, தங்கம் வாங்க முண்டியடித்துச் செல்லும் படித்த பாமரர்களை, அவர்களுடைய பேராசையை, என்னவென்று சொல்வது?

-------------கு.வெ.கி.ஆசான் அவர்கள் 26-4-2009 "விடுதலை" இதழில் எழுதிய கட்டுரை

ஈழத்தமிழர் வாழ்வுரிமைப் பிரச்சினை நம்மைப் பொறுத்தவரை தேர்தல் சூதாட்டத்திற்குரிய மூலதனம் அல்ல


சேது சமுத்திர திட்டத்தைப் போல்
தனி ஈழத்திற்கும் நாளை ஜெயலலிதா பல்டி அடிப்பார்!

தமிழக மக்களுக்கு தமிழர் தலைவர் எச்சரிக்கை


தனி ஈழம் அமையப் பாடுபடுவேன் என்று திடீரென்று ஜெயலலிதா கூறியிருப்பதை நம்பி ஏமாந்தால், அது மாபெரும் வரலாற்றுப் பிழையாகி விடும் என்று திராவிடர் கழகத் தலைவர் -தமிழர் தலைவர் - கி.வீரமணி அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார். அவரது அறிக்கை வருமாறு:

நேற்று ஈரோட்டிலும், சேலத்திலும் தேர்தல் பிரச்சாரம் செய்த செல்வி ஜெயலலிதா திடீரென்று தனி ஈழம் பிரிவதற்கு, தான் வெற்றி பெற்றால் உதவிடுவேன் என்று முழங்கி, இலங்கைத் தமிழர் பிரச்சினையையே தனது தேர்தல் வெற்றிக்கு ஒரே கடைசி ஆயுதமாகக் கொண்டு களத்தில் இறங்கியுள்ளார்!

இந்த அம்மையாரின் இந்த தனி ஈழம் பேச்சு மே 13-ஆம் தேதிக்குப் பிறகு கேட்குமா என்றால் ஒரு போதும் கேட்காது என்பது உறுதி.

ஜெயலலிதாவுக்கு வெற்றியைத் தேடித் தர பாபநாசம் பார்ப்பனர் பழைய ரவிச்சந்திரன் தற்போதைய ஸ்ரீ ஸ்ரீ குருஜி ரவிஷங்கர்ஜி அவர்கள் இந்த அம்மையாரைப் பார்த்து, இலங்கையில் தமிழர்கள் படும் அவதிகளைச் சொன்ன பிறகுதான் இவருக்கு இப்படி ஒரு புதிய ஞானோதயம் - போதி மரத்தடியில் அமராமலேயே தோன்றியுள்ளது போலும்!

பிரபாகரனைக் கைது செய்யச் சொன்னவராயிற்றே!

ஏமாளித் தமிழர்களின் வாக்குகளைப் பெற இப்படி ஒரு கடைசி கண்ணிவெடி முயற்சியா? இதற்கு முன் இவர்தானே விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனைக் கைது செய்து, அதுவும் இந்திய இராணுவத்தை அனுப்பியாவது - (சிங்கள இராணுவத்தால் முடியாது என்றால்) இங்கே கொண்டு வர வேண்டும் என்று தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியவர் 16.4.2002 இல்! அப்போது மட்டுமல்ல, சகோதரர் தொல். திருமாவளவன் ஈழத் தமிழர்களுக்காக காலவரையற்ற உண்ணாவிரதம் இருந்த போது செய்தியாளர்கள் உங்கள் கூட்டணிக் கட்சியில் உள்ள சில கட்சிகள் அவரது உண்ணா விரதத்தினை ஆதரிக்கின்றனவே, உங்கள் நிலை என்ன என்று கேட்டபோது (2009 ஜனவரியில்) ஜெயலலிதா என்ன சொன்னார்?

இந்த உண்ணாவிரதம் விடுதலைப் புலிகளைக் காப்பாற்ற, கருணாநிதியும் திருமாவளவனும் சேர்ந்து நடத்தும் கபட நாடகம் என்று கூறவில்லையா?

அப்போதெல்லாம் ஈழத்தில் தமிழர்களை சிங்களவர்கள் அழிக்கும் இனப்படு கொலைகள் நிகழாமலா இருந்தன?


அம்மையார் அப்போது கூறியதற்கு நேர் எதிரிடையாக தலைகீழாக, நான் ஜெயித்தால் தனி ஈழம் அமையப் பாடுபடுவேன் என்று பொய் வாக்குறுதியை அள்ளி வீசுகிறாரே!

சிங்கள ராணுவம் தமிழர்களை, இனப்படு கொலைகளை ஈவு இரக்கமின்றி செய்கிறதே என்று கேட்டவுடன் ( 8-1-2009- தினத்தந்தி) செய்தியாளர்களிடம் என்ன கூறினார்? ஒரு போர் நடக்கும்போது அப்பாவி மக்கள் சாவது சகஜம்தான்; தவிர்க்க முடியாததுதான் என்று கொஞ்சமும் பச்சாதாபமின்றி பேசியவருக்கு தேர்தல் நாள் நெருங்க நெருங்க இப்போது தனி ஈழம் காணும் வேட்கை உச்சத்தை அடைந்துவிட்டதோ? உண்மையாகச் சொல்கிறார் என்று நினைத்தால் அதை விட ஏமாளித்தனம் வேறு உண்டா?


கம்யூனிஸ்டுகள் தனி ஈழம் ஏற்பார்களா?

மத்தியில் இவர்ஆசைப்படியே மூன்றாவது அணியே ஆட்சி அமைத்தாலும்கூட தனி ஈழம் அமைவதை அதில் பங்கு பெறும் இடதுசாரிகளான வலது, இடது கம்யூனிஸ்ட் கட்சிகள் ஏற்குமா?

மற்ற கூட்டணிக் கட்சிகள் ஏற்குமா? அப்படியானால் அந்த அம்மையாருடன் கூட்டுச் சேர்ந்து, மூன்று இடங்களைப் பெற்றுள்ள கம்யூனிஸ்டுகள், பிரகாஷ்காரத்கள், ஏ.பி.பரதன்கள் இதை ஏற்பதாக வாக்காளர்களுக்குச் சொல்ல முன் வருவார்களா? தமிழ் இன உணர்வும் கூட தேர்தல் வெற்றிக்குத் தூண்டில்தானா?

தேர்தல் நெருங்க நெருங்க எத்தனைக் குட்டிக்கரணம்?

சேதுசமுத்திரத் திட்டத்தினை இரண்டு தேர்தல் அறிக்கையில் வற்புறுத்திவிட்டு, இந்த 2009 தேர்தல் அறிக்கையில் நாங்கள் பதவிக்கு வந்த 100 நாள்களுக்குள் சேதுக் கால்வாய்த் திட்டத்தை ரத்து செய்வேன் -ராமர் பாலம் புனிதமானது; இடிக்கப்படக் கூடாது என்று கூறிடுவது போல மற்றொரு திடீர் பல்டி அடிக்கமாட்டாரா?

தேர்தல் நெருங்க நெருங்க இன்னும் எத்தனை குட்டிக் கரணம் வேண்டுமானாலும போடலாம்!

ஏமாறாதே - ஏமாற்றாதே!

ஈழத்தமிழர் வாழ்வுரிமைப் பிரச்சினை நம்மைப் பொறுத்தவரை தேர்தல் சூதாட்டத்திற்குரிய மூலதனம் அல்ல; அது ஓர் இனத்தின் விடியல் பிரச்சினை. அதனைக் காட்டித் தமிழர்களை ஏமாற்ற, முதலைக் கண்ணீர் விடும் முப்புரி நூல் கூட்டம் வலை விரிக்கிறது!
அதில் வீழ்ந்தால் சரித்திரப் பிழையாக அது ஆகிவிடும் என்பது உறுதி!
ஏமாறாதே! ஏமாற்றாதே! என்று எச்சரிக்க வேண்டியது எம் கடமையாகும்.


---------------- "விடுதலை" 26.4.2009

பா.ம.க.வின் தமிழ்ஓசை ஏடு வெளியிட்டசெய்தியின் தன்மை

யாருக்காக வக்காலத்து?

இலங்கைப் பிரச்சினையைத் தீர்க்கக் கோரி டாக்டர் அன்புமணி குரல் கொடுக்கவில்லை என்று கருணாநிதி கூறியுள்ளார். அன்புமணி சுகாதாரத் துறையைக் கவனித்து வந்தார். வெளியுறவுத் துறை செய்யவேண்டியதை சுகாதாரத்துறை மந்திரி எப்படி செய்ய முடியும்? பொறாமையின் காரணமாக அன்புமணியையும், பா.ம.க.வை யும் விமர்சித்து வருகிறார்.
-----------(தினத்தந்தி, 19.4.2009).

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ச. இராமதாசு அவர்கள் தான் இவ்வாறு கூறியுள்ளார்.

தன் மகனைக் காப்பாற்றுவதில் எப்பொழுதுமே மருத்துவருக்குக் குறிதான்.

ஈழத் தமிழர் வாழ்வுரிமைக்காக தமிழ்நாடு அரசு அனைத்துக்கட்சி கூட்டம் (14.10.2008) கூட்டி இரண்டு வாரங்களில் மத்திய அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்காவிட்டால், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் பதவி விலகுவார்கள் என்று ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதுபற்றி பா.ம.க.வின் தமிழ்ஓசை ஏடு எப்படி செய்தி வெளியிட்டது?

நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலகுவார்கள் என்று செய்தி வெளியிட்டபோது, நாடாளுமன்றம் என்பதையடுத்து அடைப்புக்குறியில் (மக்களவை) என்று குறிப்பிடுகிறது.
அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானத்தை வரவேற்று, அக்கட்சியின் தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் கூட மிகவும் விழிப்பாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்று தெரிவித்து அடைப்புக் குறிக்குள் மக்களவை என்று திட்டவட்டமாகக் குறிக்கப்பட்டுள்ளது. ஏன் அப்படி ஒரு நிலைப்பாடு - அக்கறை? தமிழக அரசு கூட்டிய அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் மக்களவையைத்தான் கட்டுப்படுத்தும் - மாநிலங்களவைக்கு அது பொருந்தாது என்று காட்டவேண்டும் - அதற்காகத்தான் இந்த குயுக்தி.


ஏன் அப்படியொரு நிலை? பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ச. இராமதாசு அவர்களின் மகன் மருத்துவர் அன்பு மணி ராமதாசு மாநிலங்களவை உறுப்பினராயிற்றே - அவர் பதவி விலகலாமா? அதற்காகத்தான் அந்தப் பாதுகாப்பு வளையம் - அதாவது அடைப்புக் குறி.
அதன் பின்னால் விளக்கங்கள் வேறு. பொதுவாக நாடாளுமன்றம் என்று சொன்னால் அது மக்களவையைத் தான் குறிப்பிடுமாம்.

அப்படியே இருப்பதாகவே வைத்துக்கொள்வோம். ஒரு முன்மாதிரியாக ஈழத் தமிழர்ப் பிரச்சினையின் அதிமுக்கியத்துவத்தைக் கருதி, மாநிலங்களவை உறுப்பினரான நானும் பதவி விலகுகிறேன் என்று சொல்லவேண்டியதுதானே! சாவின் விளிம்பில் நிற்கும் இலட்சோபலட்ச ஈழத் தமிழர்களுக்காக மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்யக்கூடாதா?
சம்பிரதாய சந்து பொந்துகளில் போய் ஒளிவானேன்? தன் மகன் என்றால் அப்படி ஒரு பாதுகாப்பு ஏற்பாடு.

பொதுத்தேர்தலில் நிற்க வைக்காமல், மாநிலங்களவை உறுப்பினராக ஆக்குவது சங்கடம் இல்லாத, உழைப்பே இல்லாத, உல்லாசமாக எம்.பி.யாகும் வாய்ப்பு இருக்கும் போது எதற்காக பொதுத்தேர்தலில் ஈடுபட்டு, பல நாள்கள் இரவு பகலாக அலைவது - பணத்தைச் செலவழிப்பது இத்தியாதி, இத்தியாதி சங்கடங்கள்.

இந்தத் தந்தையின் பாசம்தான் ஈழப்பிரச்சினையில் சுகாதார அமைச்சரான அன்புமணி தலையிட முடியுமா? ஈழப் பிரச்சினை என்பது வெளியுறவுத் துறையையல்லவா சார்ந்தது? என்று தொழில்நுட்ப ரீதியாக பேச ஆரம்பிக்கிறார்.

அமைச்சர்களுக்குத் தனித்தனி துறைகள் இருந்தாலும் அது கூட்டுப் பொறுப்பு வாய்ந்ததே! அமைச்சரவையில் விவாதம் என்று வரும்பொழுது எந்தத் துறை அமைச்சரும் தம் கருத்துகளை, ஆலோசனைகளை எடுத்துக் கூறலாமே!

எடுத்துக்காட்டாக ஜாதி வாரியாகக் கணக்கெடுப்பு எடுக்கவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி 170 நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கையொப்பம் பெற்று உள்துறை அமைச்சர் சிவராஜ்பாட்டீலைச் சந்தித்த குழுவுக்குத் தலைமை வகித்தவர் யார் தெரியுமா? அமைச்சர் டாக்டர் அன்புமணி ராமதாஸ்தான். இது அவரது சுகாதாரத் துறையைச் சார்ந்ததா? சமூகநீதித் துறை - புள்ளியல் துறையைச் சார்ந்ததாயிற்றே!

இந்தச் செய்தியை ஒரு அறிக்கை வாயிலாக வெளியிட்டவர் பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அவர்கள்தான்.

தன் மகன் சுகாதாரத் துறை அமைச்சர், அவர் வெளியுறவுத்துறையைச் சேர்ந்த ஈழப் பிரச்சினையில் தலையிட முடியாது என்று வக்காலத்து வாங்கிய மருத்துவர் இராமதாசுதான், ஜாதி வாரியாகக் கணக்கெடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை உள்துறை அமைச் சரிடம் வைத்தவர் அன்புமணி ராமதாஸ் என்று பெருமை யோடு, புளகாங்கிதத்தோடு அறிக்கைமூலம் வெளிப்படுத்துகிறார்.


எதிலும் தன்னலம் என்ற பார்வை தவறானது - அதுவும் பொது வாழ்க்கையில் உள்ளவர்கள் எடுத்துக் காட்டாக இருக்கவேண்டுமே தவிர, கெடுத்துக்காட்டுவதாக அமையக்கூடாது.


-------------------"விடுதலை" தலையங்கம் 254-2009

25.4.09

அப்பரின் புரட்சி-எது புத்தாண்டு?-சேக்கிழாரின் புரட்டு


அப்பரின் புரட்சி

அப்பரும் ஞானசம்பந்தரும் ஒரே காலத்தவர். சம்பந்தர் பல்லக்கில் பவனி வருபவர். அவரைச் சுமந்தவர்களில் அப்பரும் ஒருவர் என்றொரு கதை. திரைப்படத்தில் நைசாக இதை நுழைத்துப் பார்ப்பன மேலாண்மையைக் காட்டியுள்ளனர். இது நடந்திருக்க வாய்ப்பே இல்லை.

இவருவரும் இருவேறு சிந்தை, செயல் கொண்டு இயங்கியவர்கள். பார்ப்பனர்கள் மாலையில் சூரியனை வணங்குபவர்கள். இதனைச் சந்தியா வந்தனம் என்றனர். அருக்கன் பாதம் வணங்குவர் அந்தியில் எனப்பாடி இவர்கள் சந்தியா வந்தனம் செய்வதை வெளிப்படுத்துகிறார். (அருக்கன் என்றால் சூரியன்; அருகன் அல்ல) சம்பந்தன் சந்தியாவந்தனம் செய்பவர்.

வெண்காட்டு முக்குளநீர் தோய்வினையார் தாந்தம்மைத் தோயாவாம் தீவினையே என்று சம்பந்தன் திருவெண்காட்டுக் குளத்து நீரைப் பெருமைப்படுத்துகிறார். (அந்த ஊரில் யாரும் டாக்டர்கள் போய்விடக்கூடாது; தொழில் நடக்காது. குளத்து நீரேதான் நோய் தீர்க்குமாமே!) தீவினைகளும் தீண்டா என்கிறார்.

ஆனால் அப்பரோ - கங்கையாடிலென் காவிரியாடிலென், பொங்கு தண்குமரித்துறை புகுந்தாடிலென் என்று பாடினார். சம்பந்தனுக்கு மறுப்பாகப் பாடினாரோ? பொதுவாகக் கருத்தைத் தெரிவிக்கப் பாடினாரோ?

பார்ப்பன ஜாதிவெறி மேலோங்கி நிற்கச் செயலாற்றியவன் சம்பந்தன். தான் கவுண்டின்ய கோத்திரத்துப் பார்ப்பனச் சிறுவன் என்பதை மறக்காமல் சொல்லிக்கொண்டு சென்றவன். அதனால்தானே பார்வதிகூட, பார்ப்பனச் சிறுவன் என்பதால்தானே, பால் கொடுத்ததாகக் கதை. ஆனால், அப்பரோ சாத்திரம் பலபேசும் சழக்கர்காள் என்றே பாடுகிறார். சாத்திரம் பேசியவர்கள் பார்ப்பனர்கள் தானே! கோத்திரமும் குலமும் கொண்டு என் செயும்? என்ற கேள்வியை ஜாதிப் பெருமை பேசியவர்களைப் பற்றிச் சாடிப் பாடுகிறார்.

திருவாவடுதுறை கோயில் கருவூலத்திலிருந்து, சம்பந்தன் கடன் வாங்கினான்; பொன் கடனாக வாங்கினான்! இந்தச் சேதியை சம்பந்தன் ஓரிடத்தில் கூடப் பாடிவைக் கவில்லை! உலகில் எல்லாமே பார்ப்பனர்களுக்குச் சொந்தமானது என்றுதானே, மனுநூல் கூறுகிறது. எனவே, பார்ப்பனர் சொத்தைப் பார்ப்பனர் பெறுவதை ஏன் கடன் எனக் கருதவேண்டும் என்கிற இறுமாப்பு காரணமாக இருந்திருக்கலாம். ஆனால் - இதைத்தம் பாடலில் அப்பர் பாடி அம்பலப்படுத்தி விட்டார். (அதனால்தானே நமக்குத் தெரியவந்தது!)

சம்பந்தன் வேதம் போற்றியவன். வேள்வி பற்றிப் பெருமை பேசியவன். ஆனால், அப்பருக்கோ வேதமும் தெரியாது, வேள்வி செய்யக் கூடிய ஜாதியும் கிடையாது. ஆனால் - சிவன் மட்டுமே முக்கியம்என வாழ்ந்திருக்கிறார், பாடியிருக்கிறார்!

சைவசமயக் குரவர் நான்குபேரில் மூவர் பார்ப்பனராக இருந்து அப்பர் ஒருவர் மட்டுமே பார்ப்பனர் அல்லாதாராக இருந்து கடவுள் பணி செய்திருக்கிறார். அவர் காலத்திய கட்டாயம் அது. அதுவும் கடவுள்; மறுப்புக் கொள்கை கொண்ட சமணத்தவராக இருந்து, ஏதோ சூழலில் சைவந்தழுவியர். வேறென்ன செய்ய முடியும்? ஆனாலும், பிறவி பேதத்தை ஒப்ப மறுத்துப் போராடியிருக்கிறார்.
பக்தி மார்க்கக் காலத்திலும்கூட, பார்ப்பனர், அல்லாதார் வேறுபாடும் இருந்தது; அதை எதிர்த்துப் போராட்டமும் இருந்தது. இன்னமும் போராட்டம் ஓயவில்லை. நம் காலத்திலாவது போராட்டத்தை ஒரு முடிவுக்குக் கொண்டு வந்தே ஆகவேண்டும்.

------------------------------------------------------------------------------------

எது புத்தாண்டு?

சித்திரை முதல் நாள் ஆண்டுத் தொடக்கம் என்பதை அழித்து அரசு ஆணையிட்டார் மானமிகு கலைஞர் அவர்கள். இதைச் செரித்துக் கொள்ளமுடியாத நம் ஆள்கள் (பார்ப்பனர் அல்லாதார்) சிலர் சித்திரைத் திருநாள் என மாற்றிப்போட்டு மகிழ்ச்சி அடைகிறார்கள். வேப்பம்பூவும் மாங்காயும் சேர்த்து பாயசம் எப்படிப் பண்ணுவது என்று சொல்லிக் கொடுக்கிறார்கள்.

அதிமுகவின் பொதுச்செயலாளரான பார்ப்பன அம்மணி வெளிப்படையாகவே புத்தாண்டு எனக்கூறி வாழ்த்து கூறுகிறார். சுவரொட்டி ஒட்டுகிறார். அப்பர் காலத்தில் சம்பந்தன் நடந்து கொண்டதை மேலே படித்தீர்கள் அல்லவா? அது தொடர்கிறது.

கலி ஆண்டு 5110 என்கிறார்கள். சாலிவாகன ஆண்டு 1931 என்கிறார்கள். போஜராஜ ஆண்டு 199 என்கிறார்கள். கொல்லம் ஆண்டு 1185 என்கிறார்கள். பாண்டவ ஆண்டு 5110 என்ப வர்களும் இருக்கின்றார்கள். ராமதேவ ஆண்டு 787 என்கிறார்கள். கிருஷ்ணராய ஆண்டு 480 என்றும், மாத்வ ஆண்டு 904 என்றும், ராமானுஜ ஆண்டு 992 என்றும், கூறிக் கொள்பவர்களும் இருக்கின்றார்கள். (இதில் ஏன் சங்கரா ஆண்டைக் காணோம்?) இவையெல் லாம் இந்தியக் குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓட்டும் ஆண்டுக் கணக்குகள்.

என்றால், உலக அளவில் பொது ஆண்டு 2009 என்றும் ஹிஜிரி ஆண்டு 1430 என்றும் கூறுகிறார்கள்.
ஜெயலலிதாவும் அர்ஜீன் சம்பத் என்கிற ஓர் அனாமதேயமும் மட்டும் கூறிப் பிதற்றி, தினமணி தூக்கிப்பிடிக்கும் தமிழ் ஆண்டுக்கு இப்படி ஒரு நெடுங்கணக்கு உண்டா?

60 ஆண்டுகள் சுழற்சி தானே! 1949இல் திமுக பிறந்தபோது பிறந்தவரின் வயது இன்றைக்கு 60 என்று சொல்ல முடியுமா? 2015இல் விரோதி ஆண்டு பிறந்து 6 ஆண்டுகள் ஆனநிலையில் அவர் வயது 6 என்று கூடக் கூறமுடியுமே! இந்தக் குழப்பத்திற்கு அம்மணி ஜெயலலிதா என்ன கூறுவார்?
அவராவது அல்லது அவரது பாததூளிபட்டு ஜென்ப சாபல்யம் அடைந்த வேறு யாராவது என்ன கூறமுடியும்?


--------------------------------------------------------------------------------------
சேக்கிழாரின் புரட்டு

சைவக்கோயிலாயினும், வைணவக் கோயிலாயினும் கிழக்கு நோக்கி அமைக்கப்பட வேண்டும் என்றுதான் ஆகமம் கூறுகிறதாம்.

கோயில் என்றாலே சிதம்பரம் கோயிலையும் சீரங்கம் கோயிலையும்தான் குறிக்கும் எனப் பெருமையுடன் கூறுவார்கள். ஆனால், இவை இரண்டும் தெற்குநோக்கி இருக்கின்றன! என்ன காரணம்? இதுவரை யாரும் கூறவில்லை. இனியாவது விளக்குவார்களா?

ஆகமம், அது - இது என்பதெல்லாம் ஹம்பக்! பவுத்தத்தில் புத்தரைக் கிடந்த கோலத்தில் (படுத்தியிருக்கும் நிலை) வடித்ததைப் பார்த்துக் காப்பியடித்த வைணவம் கிடந்த கோலத்தை சீரங்கம் முதல் பல ஊர்களில் கல் சிலையாக வடித்து, அடித்து வைத்துவிட்டனர்.

அதுபோலவே தெய்வப் பொம்மையைத் தூக்கிக் கொண்டு தெருத்தெருவாகக் சுற்றும் வீதியுலா என்பது கூடப் பவுத்தர்களைப் பார்த்துக் காப்பி அடித்தது என்கிறார்கள். அவர்கள் ஒரு நாள் என்றால் - இவர்கள் 10 நாள்கள்.

சமணத்தில் திரிசஷ்டி சாலக புருஷர்கள் என்று 63 பேர்கள் உண்டு. இதே எண்ணிக்கை யில் சைவர்களைக் கொண்டுவரப் படாத பாடுபட்டு, போனவன் - வந்தவன் பலரையும் கூட்டி 63 பேர்களைப் பட்டியல்போட சேக்கிழார் படாதபாடு பட்டிருக்கிறார்.இந்த 63 பேர்களோடு இன்னும் பலரையும் கூட்டி 70க்குமேல் நீட்டித்துவிட்டார் காஞ்சி சங்கரமடத் தமிழ் வாத்தியார் மகாதேவன் என்பவர். இன்னும் கொஞ்ச ஆண்டுகளில் இவர்கள் எண்ணிக்கை 100 என்றாகி விடுமோ?

இந்து மதத்தவர்கள் பழையது காலங்காலமாக இருப்பது என்று கதை விடுவதெல்லாம் கப்சாதான்!

------------------25-4-2009 "விடுதலை"ஞாயிறுமலரில் செங்கோ அவர்கள் எழுதிய கட்டுரை

வை.கோ. பகுத்தறிவுவாதியா?


த(ட)டுமாறுகிறார் வைகோ!



அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியிலும், குறைந்தபட்ச பொதுச்செயல் திட்டத்தில் சேர்க்க வலியுறுத்தினேன். சேது சமுத்திரத் திட்டம் நிறைவேறுவதில் மதிமுகவின் பங்கு நூற்றுக்கு நூறு இருக்கிறது.

(கல்கி 28.9.2004 பக்கம் 13-14)

- இப்படியெல்லாம் மார்தட்டிய மதிமுக பொதுச் செயலாளர் தோழர் வைகோ அவர்கள், அஇஅதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் மனங்கோணாதபடி ஒரு கருத்தைக் கூறியிருக்கிறார்.

இத்திட்டமே கூடாது - உருப்படாதது - பயன் இல்லாதது - நாங்கள் ஆட்சிக்கு வந்தால் முதல் வேலையாக அத்திட்டத்தை ரத்து செய்வோம் (அஇஅதிமுக தேர்தல் அறிக்கை பக்கம் 41) என்றெல்லாம் சூளுரைத் திருக்கிறார்.

இந்தத் திட்டத்துக்கு நூற்றுக்கு நூறு உரிமை கொண்டாடும் மதிமுக பொதுச் செயலாளர் அதிமுக தேர்தல் அறிக்கைமீது குற்றப் பத்திரிகை படிக்கவில்லை. அதே நேரத்தில் அதற்கு ஆமாம் சாமி! போட முடியாதே - நூற்றுக்கு நூறு உரிமை கொண்டாடாடுபவர் அப்படியெல்லாம் கூற முடியுமா?
என்றாலும், அம்மையாரையும் சமா தானப்படுத்தும் வகையில் ராமன் பாலத்தைத் தகர்க்காமல் இந்துக்களின் மத உணர்வைப் புண்படுத்தாமல் - வேறு பாதையில் திட்டத்தை நிறைவேற்றலாம் என்று பாம்பும் நோகாமல் பாம்பை அடித்த கொம்பும் நோகாமல் மத்திபமாக - சர்வ ஜாக்கிரதையாக கருத்துக் கூறியிருக்கிறார்.

இதன் மூலம் இந்தப் பிரச்சினையில் அவர் காட்டி வந்திருக்கின்ற வீரியத்தின் விதை காயடிக்கப்பட்டு விட்டது.

தன்னை திராவிட இயக்கத்தின் பாரம்பரிய மனிதன் என்று கம்பீரமாகக் காட்டிக் கொள்வதிலும், அதில் ஒரு மறுமலர்ச்சி சேர்க்கப்பட்டிருப்பதாகவும் நெஞ்சு நிமிர்த்தி வெண்கலக் குரலில் கர்ச்சனை செய்பவர்தான் அவர்.

ஆனாலும் அவருக்கு எப்பொழுதுமே தொண்டையில் சிக்கிய முள்போல முக்கியமான அடிப்படைச் சித்தாந்த்தம் அவருக்குத் தொல்லையைக் கொடுத்துக் கொண்டு வருகிறது.

சுயமரியாதை இயக்கம் அதன் தன்னிகரற்ற தத்துவ ஆசான் தந்தை பெரியார், அதனை யொட்டி அய்யாவின் பகுத்தறிவுச் சிந்தனைகளைப் பரப்புரை செய்து வந்த அறிஞர் அண்ணா போன்ற சுயமரியாதைச் சீலர் களின் பகுத்தறிவு கருத்துகளை முனை மழுங்காமல் ஏற்றுக்கொண்டிருப்பதிலும், அதனை மக்கள் மன்றத்திற்கு எடுத்துச் சென்று எடுப்பாகக் கூறி, இளைஞர் சமூகத் தைத் தட்டி எழுப்புவதிலும் எப்பொழுதுமே அவர் சொதப்பல் பேர் வழியாகவே இருந்து வந்திருக்கிறார்.

பகுத்தறிவுக் கருத்துகளைத் திணிக்கக் கூடாது - திணிக்கக் கூடாது என்ற ஒரு சொல்லாடலை அவர் பயன்படுத்தி வருகிறார்.

பகுத்தறிவுக் கருத்துகளைத் திணிக்க முடியாது -சிந்திக்கச் சொல்லுவதுதான் பகுத்தறிவு. அப்படி இருக்கும்போது திணிப்பது என்பது எங்கிருந்து குதித்தது?

அந்தக் கருத்தில் அந்தரங்கச் சுத்தியோடு ஈடுபாடு இல்லாதபோது, அதைப் பரப்புவதில் தயக்கம் இருக்கும் போது இப்படி ஒரு சொல்லைப் பயன்படுத்தித் தப்பித்துக் கொள்ளலாம் என்ற ராஜதந்திரம் அவரை இப்படி பேச வைத்திருக்கிறது என்றே கருத வேண்டும்.


மனம் புண்படுவது பற்றியும் அதிகம் பேசி வருகிறார். அது என்ன புண்படுகிறது?

உலகில் எந்த சீர்திருத்தவாதி பகுத்தறிவு வாதியின் கருத்துகளை மதவாதிகள் சிகப்புக் கம்பளம் விரித்து வரவேற்றனர்?

அம்மைப்பால் கண்டு பிடித்த விஞ்ஞானிகூட மதவாதிகள் பார்வையில் மனம் புண்படுத்துபவன்தான். அவர் களின் மனம் புண்படுகிறது என்பதற்காக அந்தத் தடுப்பு மருந்தைக் கண்டுபிடித்தவன் அதை வெளியிடாமல் வீட்டு மூலையின் ஒரு பக்கத்தில் குப்புறப்படுத்துக் கிடக்க வேண்டுமா?

குழந்தைப் பிறப்பைத் தடுக்கும் அறுவை சிகிச்சையைக் கூட எதிர்த்தவர்கள் உண்டே! அதற்காக அத்திட்டத்தைக் கைவிட்டு விடலாமா?

உலகம் உருண்டை என்று சொன்னதுகூட பைபிளுக்கு விரோதம் என்றார்கள். பைபிளை நம்பும் எங்களின் உணர்வுகளைப் புண்படுத்துவதாகக் கூக்குரல் போட்டார்கள். மவுடீகத்தில் கிடக்கும் மக்களின் உணர்வுகள் புண் படுகிறது என்பதற்காக விஞ்ஞானிதன் அறிவுத் தடத்தை விரிவாக்கிக் கொள்ளாமல் இருக்க முடியுமா?

கலிலியோவைத் தண்டித்தது - கத்தோலிக்கம் செய்த மாபெரும் தவறு என்று பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு போப் மன்னிப்புக் கேட்கும் நிலையல்லவா இன்று உருவாகியிருக்கிறது.

மதவாதிகள் மனம் புண்படுகிறது என்பதற்காக தந்தை பெரியார் இராமாயணப் பாத்திரங்களை மக்கள் மத்தியில் கொண்டுவந்து போட்டு தோல் உரிக்காமல் இருந்திருந்தால் தமிழர்கள் மத்தியிலே விழிப்புணர்வு ஏற்பட்டு இருக்குமா?

கம்ப இராமாயணத்தை தீயிட வேண்டும் (தீ பரவட்டும் நூல்) என்று அறிஞர் அண்ணாவின் உரை வீச்சுக்கூட வைகோ அவர்களின் கணிப்புப்படி பக்தர்களின் மனதைப் புண்படுத்தக் கூடியதுதான் அந்த வகையில் அய்யாவும் அண்ணாவும் குற்றவாளிகள் என்று கூறும் துணிவு வைகோவுக்கு உண்டா?

திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலுக்குச் சென்றபோது தாம் வழக்கமாக அணியும் கறுப்புச் சால்வை அணியாமல் சென்றதைப் பெருமையாகக் குறிப்பிடுகிறார் (தினத்தந்தி 3.3.2006).

இதில் பெருமைப்பட என்னவிருக்கிறது? எந்த இடத்திலும் தன் அடையாளத்தைக் காட்டும் திராணி யில்லாமையைத் தான் இது வெளிப்படுத்தும்.

நான் ஒரு பகுத்தறிவுவாதி; எல்லா மதத்தையும் நான் ஏற்றுக் கொள்ளக் கூடியவன் (தினத்தந்தி 26.3.2006) என் கிறார். பீம்சிங் இது என்ன புதுக் குழப்பம் என்பது அண்ணாவின் ஒரு வசனம்.
பகுத்தறிவுவாதியாக இருப்பவன் மதவாதியாக இருக்க முடியாது. மதவாதியாக இருப்பவன் பகுத்தறிவு வாதியாகவும் இருக்க முடி யாது. ஆனால் இது இரண்டாகவும் தானிருப்பதாக வைகோ அவர்கள் கூறுவது மதவாதிகளையும் பகுத்தறிவு வாதிகளையும் ஒரே நேரத்தில் ஏமாற்ற நினைக்கும் சாமர்த்தியமாகத் தானிருக்கும்.


இது ஒன்றும் அரசியல் அல்ல. அப்படி இரட்டைக் குதிரையில் சவாரி செய்ய ஆசைப்படுவதற்கு.

பகுத்தறிவுவாதிகள் - தந்தை பெரியாரியல் சிந்தனைக்காரர்கள் மிகவும் கூர்மையானவர்கள் - மூலத்தையை அசைத்து மூக்கணாங்கயிறு போடுகிறவர்கள் ஆயிற்றே!

சரி.. இந்த இரட்டை வேடத்தோடுதான் கடைசி வரை பயணம் செய்ய முடிகிறதா? உண்மையைச் சொல் லுவதில் ஒன்றும் சிரமம் அல்ல- என்ன சில கஷ்டங்களைச் சந்திக்க நேரும் அவ்வளவுதான்.

ஆனால் பொய் சொல்லுவதற்கு மகா மகா சாமர்த்தியம் வேண்டும். நேற்று என்ன சொன்னோம் - கடந்த வாரம் என்ன சொன்னோம் - கால் நூற்றுண்டுக்கு முன் என்ன சொன்னோம் என்பதைச் சேதாரமின்றி நினைவில் வைத்துக் கொண்டே - உருப் போட்டுக் கொண்டேயிருக்க வேண்டும். பல நாள் திருடன் ஒரு நாள் அகப்பட நேரும் என்பது அதுதான். பேராசிரி யர் சுப. வீரபாண்டியன் அவர்களால் எழுதப்பட்ட அரிய நூல் பெரியாரின் இடதுசாரி தமிழ்த் தேசியம் என்பதாகும். அதன் வெளி யீட்டு விழாவில் (19.4.2005) தோழர் வைகோ என்ன பேசினார்?

தான் நாடாளுமன்றத்தில் பேசியதாகச் சொன்னாரே - அது என்ன தெரியுமா?

மனுதர்மம் ஸ்மிருதிகளைக் கொளுத்தினால்தான், இந்த நாட்டிலே வேத புராணங்களை அடியோடு ஒழித்துக் காட்டினால்தான் ஜாதிக் கொடுமையைத் தகர்க்க முடியும் என்று நாடாளுமன்றத்திலேயே பேசியதாக மார்தட்டினாரே வைகோ - இந்தப் பேச்சு இந்து மதவாதிகளின் மனதைப் புண்படுத்தாதா? இராமப் பக்தர்களின் உணர்வுகளைக் குத்திக் குடையாதா?

பேராசிரியர் சுப.வீ. அழைத்தால், பெரியார் பற்றிய நூல் வெளியீட்டு விழா என்றால், அங்கு வரும் கூட் டம், சுற்றுச்சார்புக்கு ஏற்ப ஏற்றப் பாட்டு பாட வேண்டும் என்பதால் மனுதர்மத்தைக் கொளுத்த வேண்டும் என்று பேச வேண்டும். வேறு இடம் என்றால் அதற்கு ஒத்த இசை பாட வேண்டும் என்கிற வியாபார முறை இதில் இருக்கிறதே தவிர சித்தாந்த சுத்தமும், கொள்கைத் திட்பமும் மருந்துக்கும் இல்லாமல் போய் விடுகிறதே!


தமிழர்களின் நீண்ட நாள் கனவுத் திட்டம் 2400 கோடி ரூபாயில் உருவாகும் உன்னதத் திட்டம். அறிவியல் ஆய்வுப் படி உரிய விற்பன்னர்களால் உருவாக்கப்படும் ஒரு திட்டம் - அந்தத் திட்டத்தை முடக்க மூடத்தனத்தைக் கொண்டு வந்து குறுக்கே போடுகிறார்கள் ஒரு சிலர் என்கிறபோது உண்மைப் பகுத்தறிவுவாதிகளின் கடப்பாடு என்ன?

பதினேழரை லட்சம் வருடங்களுக்குமுன் குரங்குகள் துணை கொண்டு ராமன் என்கிற இதிகாசக் கதாநாய கன் கட்டினான் ஒரு பாலம் என்று கொஞ்சம்கூட புத்திக்கு இடமின்றி பக்தி என்னும் போதையில் தள்ளாடிக் கூறுகிறது ஒரு கூட்டம் என்றால் - ஆமாம், ஆமாம் அதனை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும் - இல்லாவிட்டால் அவர்களின் மனம் புண்படும் என்று ஒப்பாரி வைக்கிற கூட்டத்தோடு ஜெய லலிதா பின்பாட்டுப் பாடுவதைப் புரிந்துகொள்ள முடிகிறது. அங்கு புரட்சிப் புயல் வைகோவுக்கு என்ன வேலை?

வைகோ பகுத்தறிவுவாதி என்றால் அய்யாவின் சீடர் என்றால், அண்ணாவின் தம்பி என்றால் இந்த இடத்தில் குதித்துதானே பகுத்தறிவுச் சங்க நாதம் செய்ய வேண்டும்?

பகுத்தறிவுக்கு வேலை கொடுக்க வேண்டிய இடத்தில் மவுடிக ராகம் வாசிக்கலாமா?

பகுத்தறிவுவாதி என்றால் எல்லா இடத்திலும்தான் அதற்கு இடம், பொருள், ஏவல் எல்லாம் கிடையாது - கிடையவே கிடையாது.


-------------25-4-2009 "விடுதலை"ஞாயிறுமலரில் மின்சாரம் அவர்கள் எழுதிய கட்டுரை