Search This Blog

5.3.09

"எங்கள் நாடு தமிழ்நாடு; இங்கு ஏதடா இந்து நாடு?"




கோவை மண்டலம் அழைக்கிறது-
கூடுவீர் திருப்பூரில்!




"எங்கள் நாடு தமிழ்நாடு; இங்கு ஏதடா இந்து நாடு?" என்பது நமது பேரணியில் விண்ணை இடிக்கும் முழக்கமாகும்.

தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல; இந்தியாவில் எந்தப் பகுதியில் சங் பரிவார்க் கும்பல் மாநாடு நடத்தினாலும், பேரணி நடத்தினாலும் எழுப்பப்பட வேண்டிய முழக்கம்.

ஆந்திராவில் நடந்தால்கூட, "எங்கள் மாநிலம் ஆந்திரம். இங்கு ஏதடா இந்துத்துவம்?" என்ற குரல் உக்கிரமாக எழும்பவேண்டும்.

காரணம்,

இந்துத்துவா, இந்து நாடு என்று எதை உச்சரித்தாலும் அதன் உட்பொருள் ஒன்று கத்திமுனையாக இருக்கிறது.

ஆம், ஆரியர்கள் - பார்ப்பனர்கள் தங்களின் ஆதிக்க நங்கூரத்தைச் செலுத்தச் செய்யும் ஏற்பாடு அது.

வருணாசிரமக் கொடியை ஆரியம் மீண்டும் இம்மண்ணிலே ஊன்றிட மேற்கொள்ளும் ஒத்திகை அது.

அவர்கள் பிராமணர்களாக இருக்கவேண்டும் என்பதைவிட, நாம் சூத்திரர்களாக இருந்து தீரவேண்டும் என்பதில்தான் அக்கறை அவர்களுக்கு அதிகம்.


கோவையிலே சங் பரிவாரின் மாணவர் பிரிவான (ஏபிவிபி) அகில பாரத் வித்யார்த்தி பரிஷத் மாநாடு கூட்டி நம்மை சவாலுக்கு இழுத்துள்ளனர்.

பெரியார் மண்ணில் இந்த பெருச்சாளிகள் பேரிகை கொட்ட முன்வந்துள்ளனர்.

இந்தக் கூட்டம் எதைச் செய்தாலும் அதற்குப் பதிலடி கொடுத்துப் பழக்கப்பட்டவர்கள் நாம்.

திருச்சி மாநகரத்திலே ஹிந்து இளைஞர் மாநில மாநாட்டை நடத்தியது அக்கூட்டம் (பிப்ரவரி 8, 9- 2003).

திரிசூலங்களை வழங்கி - வெளிப்படையாகவே வன்முறைக்கு வெற்றிலைபாக்கு வைத்து அழைத்தனர். ஜெயலலிதா அம்மையார் ஆட்சியிலே அந்த அட்டகாசத்துக்கு வெண்சாமரம் வீசப்பட்டது.

சிறுபான்மையினர்களின் குடலை உருவும் இந்தத் திரிசூலம் என்று பிரவீன் தொகாடியா தொண்டை கிழியக் கத்தினார் - கண்டு கொள்ளவில்லை முதலமைச்சராகவிருந்த ஜெயலலிதா அம்மையார்.

வன்முறை எதிர்ப்பு வரிசையில் முதல் ஆளாக நான் இருப்பேன் என்று இறுமாந்து பேசும் அக்ரகாரத்து அம்மையாருக்கு சங் பரிவார் வகையறாக்களின் சங்கதி என்றதும், சங்கீதக் குரலாக இனித்தது. வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கவில்லை திராவிடர் கழகம். அதே திருச்சியிலே திராவிடர் மாணவர் கழக மாநில எழுச்சி மாநாட்டினை அடிக்கு அடி என்பதுபோல நடத்திக் காட்டினோம்! (2.3.2003).

ஆர்.எஸ்.எஸ்.காரர்களின் கைகளில்தான் கொம்பு இருக்குமா? இதோ பார் இங்கே என்று சட்டத்திற்குட்பட்ட முறையிலே கொள்கையிடி முழக்கமிட்டு ஏந்திச் சென்றோம்.

"அடேயப்பா எங்கே இருந்து புறப்பட்டது இந்தக் கறுஞ்சிறுத்தைக் கூட்டம்!" என்று திருச்சியே திரண்டு நின்று திகைத்துப் பார்த்தது.


கோவையிலே கூடி, நமக்கு மீண்டும் வேலை கொடுத்துவிட்டது காவிக் கும்பல்!

அதுவும் நல்லதுதான். மாணவர்கள், இளைஞர்கள் மத்தியிலே மகத்தான முறையில் கொள்கை உணர்வை ஊட்டிட ஒரு வாய்ப்புக் கிடைத்தது என்கிற முறையிலே கிளர்ந்து எழுந்துவிட்டோம்.

திருப்பூர் என்றாலே திருப்பம் தரும் ஊர் என்று பொருள். அய்யா அவர்களை அறிஞர் அண்ணா சந்தித்து, அய்யாவிடம் அடைக்கலம் ஆன ஊர் இந்தத் திருப்பூர்தான்.

மனுதர்மத்தையும், இராமாயணத்தையும் தீயிட்டுக் கொளுத்தவேண்டும் என்று திராவிட இயக்கப் பேராசான் தந்தை பெரியார் தீப்பொறி பறக்கப் பேசியதும் இதே திருப்பூர் காங்கிரஸ் மாநாட்டில்தானே! (1922).


மீண்டும் இப்பொழுது திருப்பூரிலே கூடுகிறோம் - தீப்பொறித் தீர்மானங்களை தீட்டுகிறோம் - கோடையிடியென கொள்கை முழக்கம் போடுகிறோம்.

அது பேரணியல்ல - போரணி என்று நாளைய வரலாறு பேசும் அளவுக்கு எழுச்சித் தீ மண்ணையும், விண்ணையும் அளக்கட்டும்! வா தோழா, வா!

இந்து எழுச்சியாம்! குருக்ஷேத்திரமாம்!

சந்து முனை சிந்துபாடிகளே

சரித்திரம் தெரியுமா உங்களுக்கு?

நீறுபூத்த நெருப்பானாலும்

நெருப்பு நெருப்பே!

வீறுகொண்ட வேங்கைமுன்பா உம் விளையாட்டு?

செல்லாது! செல்லாது! ஒருபோதும் செல்லாது!

வாலி வதம், சம்பூகன்

தலையறுத்தல் பழைய கதை!

காலி வதம், காவி விரட்டல்

எம்புதிய வேலை!

விரல் உரலானால்

உரல் என்னவாகும்? என்று கேட்டவர்

எம் ஆசான், பெருமான், நல்லாசான்

வாராய் எம் தமிழா!

வசைபாடும் வாய்த் துடுக்கரின்

வல்லாண்மைக்கு முடிவு கட்ட!

வா தமிழா, வா!

வாகை சூட வா!

வரலாறு படைக்க வா!


திருச்சி மாணவர் மாநாட்டின்போது தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் நமக்கெல்லாம் விடுத்த அழைப்புக் கவிதை இது.

திருப்பூருக்கும் பொருந்தும்தானே!

திரண்டிடுவீர்!

தீரர் கோட்டமென

தீட்டுவீர் புதிய காவியத்தை!


-------------------- மின்சாரம் அவர்கள் 5-3-2009 "விடுதலை" யில் எழுதியது

1 comments:

Unknown said...

//மனுதர்மத்தையும், இராமாயணத்தையும் தீயிட்டுக் கொளுத்தவேண்டும் என்று திராவிட இயக்கப் பேராசான் தந்தை பெரியார் தீப்பொறி பறக்கப் பேசியதும் இதே திருப்பூர் காங்கிரஸ் மாநாட்டில்தானே! (1922).//



ராமனை வைத்து இன்று இந்தியாவில் நடக்கும் அரசியல் பற்றி சிந்திக்கும் போது 1922 ஆம் ஆண்டிலேயே பெரியார் பேசியிருப்பது அதுவும் இராமாயணத்தை எரிக்க வேண்டும் என்று பேசியிருப்பதை பார்க்கும் போது வியப்பாக இருக்கிறது.