Search This Blog

1.3.09

பெரியார் ராசிக்காக பச்சைக்கல் மோதிரம் அணிந்திருந்தாரா?


பெரியார் ஒரு பெரிய பச்சைக்கல் மோதிரம் போட்டிருப்பார். கடைசிவரையில் எந்தச்சுழ்நிலையிலும் பெரியாரின் கையைவிட்டு அதைக் கழற்றவேயில்லை. இதைப்பற்றிய பல விமர்சனங்கள் உண்டு. ஒவ்வொரு துறையைச்சார்ந்தவர்களும் அதற்கொரு விளக்கம் சொல்வார்கள் என்பது மட்டுமல்ல அவர்கள் யாரும் பெரியாரின் பக்கம் கூடப் போயிராதவர்கள்.


சோதிடர்கள் - பெரியாரின் நீண்ட ஆயுளுக்கும் பெரும் பணவசதிக்கும் காரணமாகப்பெரியாரின் இராசிப்படி ஒரு பெரும் ஜோதிடரானமுனிவர் சொற்படிப் பச்சைக் கல்லை அணிந்திருக்கின்றார் என்றார். சித்த மருத்துவரான ஒரு பெரிய சாமியார் என்னிடம் சொன்னார். ‘இரசவாதம் தெரிந்த ஒரு பெரிய முடிவர்பாதரசத்தைக் கல்லாகித் தனது தவ வலிமையால் அதற்குப் பச்சை நிறம்கொடுத்து - பெரியார் சாமியாராய்த் திரிந்த காலத்தில் அவருக்குக் கொடுத்தார். அந்தத் தவ வலிமைதான் பெரியாரை எந்த எதிரியும்; ஏவல்; பில்லி;சூனியம்; மாந்திரிகம்;தாந்த்ரிகம் எதனாலும் அசைக்க முடியவில்லை. என்றார். சீர்திருத்தக்காரர்களான சில நண்பர்களே ‘நகைப் பைத்தியம் கூடாது என்று பெரியார் ஏன் இந்த மோதிரம் போட்டார்’ என்று மேலே சொன்ன புகார்களை மறைமுகமாய் நம்புகிற மாதிரிப் பேசியதும் உண்டு.


தென்மாவட்டங்களில் பெரியாரின் சுற்றுப்பயணம், சீருந்து நாகர்கோவில் சாலையில் போய்க்கொண்டிருக்கின்றது. அய்யா எதைப்பற்றியோ ஆர்வமாய் பேசிக்கொண்டு வந்தார். நான் கன்னத்தில் கையூன்றியபடிக் கூர்ந்து கேட்டுக்கொண்டே வந்தேன். என் விரலில் புதியதாய் ஒரு பெரிய மஞ்சள் கல் வைத்த மோதிரம் போட்டிருந்தேன். பெரியார் அவர்கள் அவருக்கு நெருக்கமானவர்கள் புதிதாய்க் கடிகாரம்,மோதிரம், பேனா ஆகியவற்றை வைத்திருந்தால் குழந்தைபோல் வாங்கி அதன் விலை, தயாரிப்பு, சிறப்புகளைப் பற்றி விசாரிப்பார்.

என்னுடைய மோதிரத்தை வாங்கி அதன் பெரிய கல்லை உற்று உற்றுப் பார்த்துவிட்டு “என்ன விலை என்றார் நான் “இருபது ரூபாய்” என்று சொல்லி இரண்டு விரங்களைக் காட்டினேன். ” என்ன! இரண்டாயிரமா” என்றார். “இல்லை. வெறும் இருபது ரூபாய்” என்று சொல்லி, “என்னுடைய வீடு இருக்கும் உறையூர் பகுதியில்தான் இது போன்ற செயற்கை வைரக் கற்கள் தயாரிக்கிறார்கள்” என்பதையும் சொன்னேன்.

“எந்த வித்தியாசமும் அசலுக்கும் போலிக்கும் தெரியலையே” என்றார் பெரியார், “போலிக்குப் பெருமையே அது தான்யா” என்றேன். பெரியார் பின்னால் உட்கார்ந்திருந்த மணியம்மைத் திரும்பிப் பார்த்துவிட்டுப் பலமாய்ச் சிரித்தார். ஏனென்றால் அந்த வாக்கியத்தை அடிக்கடிப் பயன்படுத்துபவர் அய்யாதாம். வேறு பல பொருள்களும் உண்டு!

இது தான் சரியான சமயம் என்று பெரியாரிடம் கேட்டனர். அது வண்டிக்குள் எப்போதும் இருக்கும். பலரின் சந்தேகமும் கூட, ஆம்! பெரியாரின் பச்சைக் கல் மோதிரம் பற்றியச் சந்தேகம்தான். அய்யாவிடம் கேடகப் பலருக்கும் பயம். பெரியார் தம் மோதிரததை ஒரு முறை திருப்பித் திருப்பிப் பார்த்துக் கொண்டார். “அதுவா” என்றார்.

கொஞ்சம் சகஜ நிலையில் இருக்கின்றார் என்று கண்டு கொண்ட நண்பர் தென்பாதி பெரியசாமி (கலைஞரின் புகைப்படக் கலைஞர் சிங்காரத்தின் தம்பி மாமனார்) மோதிரம் பற்றிப் பலரும் எழுப்பும் சந்தேகங்களை மெல்லக் கூறினார். “அப்படியா.. நாசமாப்போச்சு.. போ.. இதை ஏன் முதலிலேயே எங்கிட்ட கேக்கலே” என்றார் பெரியார்.

யாரும் ஏதும் சொல்லவில்லை பெரியாரே மீண்டும் பேசினார். “எங்க கோயமுத்தூர் ஜில்லாவுல வெள்ளக் கோவில்லே ஒருசெட்டியார் மஞ்ச நோட்டீசு குடுத்திட்டார்…(இன்சால்வென்சி). அவரோடு சொத்தெல்லாம் ஏலம் போச்சு.. நானும் போயிருந்தேன். அப்ப தங்கம் ஒரு பவுன் பதின்மூன்று ரூபாய்!(ரூ.13). அப்ப இந்தப் பச்சைக் கல்லும் ஏலத்துக்கு வந்தது. இந்தப் பச்சைக் கல் மோதிரம் போட்டப்புறம் தான்செட்டியார் திவாலாயிட்டார் என்று யாரும் ஏலம் கேட்கலே. சர்க்கார் மதிப்பு அப்போ இருநூற்றுப் பதினைஞ்சு ரூபாய். நான் ஒரு ரூபாய் கூட கொடுத்து இருநூற்றிப் பதினாறுக்கு வாங்கினேன். பலபேரு இதைப் போட வேண்டாம். செட்டியாரைத் திவாக்கின கல்லுன்னாங்க. நான் என்னதான் ஆகுதுன்னு பாப்போமேன்னு மோதிரமாகக் கட்டிப்போட்டேன்…. எங்க வீட்டில் சில பேருக்குத் திவால் பயம்.. நடந்தத்து என்ன தெரியுமா? எனக்குப் பணம் குவியுது… குவியுது.. என்ன பணறதுன்னே தெரியலே.. குவியுது..” என்றார், சிறுபிள்ளை போல் கைகளை தட்டிக்கொண்டே..


------------------நன்றி:- http://www.thanthaiperiyar.org

6 comments:

த மி ழ் இ னி யா said...

சுவையான செய்தி, அதேவேளை உண்மைகளை உரத்துச் சொல்கிறது. இதுபோன்ற செய்திகளை பிரசுரிக்கவும்.

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தமிழ் இனியா

Muruganandan M.K. said...

மிக அருமையான விளக்கம். இப்படியான உண்மைச் செய்திகளை வெளியிடுவதற்கு நன்றி

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
தமிழ் இனியா

Thamizhan said...

பெரியார் படத்திற்குப் பணம் வாங்காமல்,தனது சொந்தப் படத்தயாரிப்பையும் ஒதுக்கிவிட்டு நடித்து ஒத்துழைத்த சத்யராஜ் அவர்கள் விரலிலே அந்த மோதிரம் அழகு செய்வதைத் தொட்டுப் பார்த்துப் பெருமையடைந்தேன்.
அவருக்குக் கிடைத்தப் பரிசு அது.
முறையாக பெரியார் அறக்கட்டளைக்கு அதன் உரிய தொகைக்கு மேலே பணங் கொடுத்து விட்டு படத்தயாரிப்பாளர் குழு வாங்கி இனமுரசு சத்யராஜுக்குப் பரிசளித்தார்கள்.அவருக்கும் பணம் குவிந்து கொண்டுதான் உள்ளது.

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தமிழன் அய்யா