Search This Blog

12.3.09

பகுத்தறிவு வளர்ச்சிக்கு முன் மதப்பீடங்கள் மண்டியிடுகின்றன


மதங்கள் சரிகின்றன

வாழ்க்கையில் அச்சத்தையும், பேராசையையும் தூண்டும் மதங்கள் நாளும் சரிந்து கொண்டேயிருக்கின்றன. சிந்திப்பவர்கள் இந்தக் காலாவதியான கருத்துகளைத் தூக்கி எறிய முனைந்துவிட்டனர்.

மதக் காரணங்களால் மனிதக் குருதி சிந்தப்பட்டது போல வேறு எந்தக் காரணத்துக்காகவும் சிந்தப்படவில்லை என்பதுதான் வரலாறு.

மதத்தை வைத்துச் சுரண்ட நினைப்பவர்கள் அதன் கட்டுத் தளர்ந்துவிடாதபடி பார்த்துக் கொண்டேயிருப் பார்கள்.

அவ்வப்போது அதிசயங்கள் பற்றியும், அற்புதங்கள் பற்றியும் கிளப்பிவிட்டுக் கொண்டேயிருப்பார்கள்.

சிலுவைக் குழந்தை பிறந்தது என்பார்கள்; பிள்ளையார் பால் குடித்தார் என்று பரப்புவார்கள்; முண்டக்கண்ணியம்மன் கண் திறந்து பார்க்கிறார் என்பார்கள் - இவை யெல்லாம் உண்மையென்றால், அவை நிரந்தரமாகத் தானே இருக்கவேண்டும்? ஒரு சில நாள்களிலேயே வண்டவாளம் வெளிப்பட்டு விடுகிறதே!

தலையில்லா முண்டம் டீக்கடைக்கு வந்து டீ குடித்தது என்று பரப்பினர் - அப்பொழுது சென்னையில் காவல் துறைத் தலைவராக இருந்த ஸ்ரீபால் சொன்னார், அப்படி சொன்னது, ஏதாவது ஒரு முண்டமாக இருக்கும் என்று கூறினார்.

இவற்றையெல்லாம் பார்க்கும்போது மக்களுக்கே சந்தேகம் தோன்ற ஆரம்பிக்கும். கடவுள், மதத்தின் பெயரால் சாமியார்களின் அட்டகாசமும் நாளும் நிர்வாணக் கூத்தாடுகின்றன. சபரிமலை அய்யப்பன் கோயில் தந்திரி பற்றி குடலைப் புரட்டும் ஆபாசமான செய்திகள், குஜராத்தில் சவ்மிய நாராயண் கோயில் அர்ச்சகர்களின் அந்தப்புர லீலைகள் வண்ண வண்ணப் படங்களாய் சிரிப்பாய் சிரித்தன.

இந்தியாவில் மட்டுமல்ல, வெளிநாடுகளிலும் இந்த நிலைதான். அதன் விளைவு சர்ச்சுகள் விலைக்குக் கிடைக்கும் என்ற விளம்பரங்கள் வெளியாகின்றன.

நேற்று வெளிவந்த தகவல் ஒன்று. அமெரிக்காவில் மதத்தில் நம்பிக்கை இல்லாதவர்களின் எண்ணிக்கை பெருகி வருகிறது என்பதுதான் அந்தச் செய்தி. 15 விழுக்காடு எண்ணிக்கையுள்ளவர்கள் தங்களுக்கு மத நம்பிக்கை இல்லையென்று கூறியிருக்கின்றனர். 1990 இல் இந்த எண்ணிக்கை 8.2 விழுக்காடாக இருந்தது; 2001 ஆம் ஆண்டில் 14.2 விழுக்காடு; 2009 ஆம் ஆண்டிலோ 15 விழுக்காடாக உயர்ந்துவிட்டது.

டார்வின் பரிணாமக் கொள்கையை அவர் கத்தோலிக்க மதம் ஒரு காலகட்டத்தில் கடுமையாக எதிர்த்தது. டார்வின் தத்துவத்தைப் போதித்ததற்காக அமெரிக்காவின் தென்னசி மாநிலத்தில் ஸ்கோபஸ் என்னும் பேராசிரியர் வேலை நீக்கம் செய்யப்பட்டார்.

ஆனாலும், 137 ஆண்டுகளுக்குப் பிறகு உலகக் கத்தோலிக்கர்களின் குரு பீடமான வாடிகனின் போப் 1996 இல் ஒரு உண்மையை ஒப்புக்கொண்டார். புதிய அறிவு - பரிணாம வளர்ச்சித் தத்துவத்தை அங்கீகரிக்கச் செய்கிறது என்றார் ("தி இந்து", 26.10.1996). உலகம் தட்டை என்ற பைபிள் கூற்றுக்கு மாறாக உலகம் உருண்டை என்று கண்டுபிடித்த கலிலியோவின் ஆய்வையும் அதே போப் ஜான்பால், 360 ஆண்டுகளுக்குப் பின் ஏற்றுக்கொண்டார்.

பகுத்தறிவு வளர்ச்சிக்கு முன் மதப்பீடங்கள் மண்டியிடுகின்றன என்பதற்கு இது அடையாளமே!


நோபல் பரிசு பெற்ற அன்னை தெரசாவுக்கே கடவுள் இருப்பில் நம்பிக்கையற்றவராகக் காணப்பட்டார் என்று அவரது நாள் குறிப்புத் தகவல்கள் தெரிவித்தன.

கோயில் திருவிழா கூட்டம் என்பதெல்லாம் ஒரு பொழுது போக்காக இருக்கிறதே தவிர உண்மையான பக்தி நோக்கத்தோடு அல்ல என்பது யதார்த்தம்.

கோயில் அர்ச்சகர்களே சாமி நகைகளைத் திருடுவதும், சாமி சிலைகளைக் கடத்திச் செல்லத் துணை போவதும், சங்கராச்சாரியார்களே கொலைக் குற்றத்துக்கு ஆளாகி சிறைச்சாலைகளுக்கு அனுப்பப்பட்டதும் எல்லாம் சாதாரண மக்கள் மத்தியிலே மதத்தின் பக்தியின் சாயத்தை வெளுக்கச் செய்து வருகின்றன.

ஹிந்து மதத்திலிருந்து மதம் மாறி கிறித்துவ மதத்துக்குச் சென்றாலும், அங்கும் இந்தப் பாழாய்ப் போன ஹிந்து மதத்தின் தீண்டாமை விரட்டிக் கொண்டேதான் வருகிறது.


கிறித்துவ மதத்துக்குள் ஜாதிச் சண்டைகள், தாழ்த்தப்பட்டவர்களைத் தீண்டாதவர்களாகக் கருதும் கொடுமை நிலவத்தான் செய்கிறது.

இசுலாமிய நாடுகளிலோ பெரும்பாலும் அமைதியின்மை தலைதூக்கி நிற்கிறது. அமெரிக்காவின் உலக வர்த்தக மய்யக் கட்டடத்தின்மீது விமானத் தாக்குதல் நடத்தி மூவாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பலியாவதற்குக் காரணமாகயிருந்தவர்கள். அந்தத் தாக்குதலைக் கடவுளுக்குக் காணிக்கையென்று கூறியுள்ளனர்.

இத்தகு செயல்பாடுகள் எல்லாம், அமைதியையும், நல்வாழ்வையும் விரும்பும் மக்களை மதத்தின்பால் வெறுப்புக் கொள்ளச் செய்கின்றன என்பதுதான் உண்மை. இந்தப் போக்கு வளர்ந்து வருவது வரவேற்கத்தக்கதே!

-------------------- "விடுதலை" தலையங்கம் 12-3-2009

1 comments:

Unknown said...

//கோயில் திருவிழா கூட்டம் என்பதெல்லாம் ஒரு பொழுது போக்காக இருக்கிறதே தவிர உண்மையான பக்தி நோக்கத்தோடு அல்ல என்பது யதார்த்தம்.//

யதார்த்தமான உண்மை