Search This Blog

13.3.09

குடிஅரசு தரும் வரலாற்றுக் குறிப்புகள்

தேசியத்தின் பெயரால்.....


(இந்திய விடுதலைப் போரில் பார்ப்பனரல்லாதார் கபடமற்று பார்ப்பனர்களுடன் ஒத்துழைத்து வந்தனர். ஆனால் பார்ப்பனர்களோ அவர்களின் உழைப்பையெல்லாம் தங்கள் சுயநலத்திற்கென்று பயன்படுத்தியதுமல்லாமல், பார்ப்பனரல்லாதாருக்கு எவ்வளவு கெடுதிகளையும், துரோகங்களையும் செய்து வந்ததைப் பொறுமையோடு படித்து அறியுங்கள்)

பழைய காலத்தில் தேசியவாதிகளில் சிறந்தவர்களில் ஸர்.சி. சங்கரன் நாயர் என்கிற பிராமணரல்லாதார் முக்கியமானவர் ஆவார். அவர் காங்கிரஸிலும் தலைமை வகித்தவர். அப்பேர்ப்பட்டவரை முன்னுக்கு வரவொட்டாமல் தடுப்பதற்காகப் பிராமணர்கள் எவ்வளவோ சூழ்ச்சிகள் செய்து வந்தார்கள். அவருக்குக் கிடைக்கவிருந்த ஹைக்கோர்ட் ஜட்ஜ் பதவியைக் கிடைக்கவொட்டாத படிக்குச் செய்ய எவ்வித பொதுநலத்திலும் தலையிட்டிராத, ஸர்.வி. பாஷ்யம் அய்யங்கார் போன்றவர்களும் மற்றும் அநேக பிராமண வக்கீல்களும் சீமைக்கெல்லாம் தந்தி கொடுத்ததோடல்லாமல், அவர் பேரில் எவ்வளவோ பழிகளையெல்லாம் சுமத்திக் கஷ்டப்படுத்தினார்கள். அதன் காரணமாக நான்கு, அய்ந்து வருடங்களுக்கு முன்னதாகவே கிடைக்க வேண்டிய ஹைக்கோர்ட் ஜட்ஜ் பதவி வெகு காலம் பொறுத்துத் தான் கிடைத்தது. டாக்டர் டி.எம். நாயர் அக்காலத்திய தேசியவாதிகளில் மிகவும் முக்கியமான பிராமணரல்லாத தேசியவாதி. அவர் எவ்வளவோ பொதுக் காரியங்களில் ஈடுபட்டிருந்தவர். அவரையும், மைலாப்பூர் பிராமணர்கள் ஓர் முனிசிபாலிட்டியில்கூட அவர் உட்காருவதைப் பொறுக்காமல், அவருக்கு விரோதமாக சூழ்ச்சிகளைச் செய்து அவரையும் உபத்திரவப்படுத்தினார்கள். ஜஸ்டிஸ் கட்சி ஏற்படுத்துவதற்கு நமது நாட்டில் ஏற்பட்ட முக்கியமான காரணங்களில் இவையிரண்டும் முதன்மையானதென்று ஓர் காங்கிரஸ் பிராமண பிரசிடென்டே நம்மிடம் சொல்லியிருக்கிறார்.

ஒத்துழையாமை ஆரம்பிப்பதற்குக் கொஞ்ச நாளைக்கு முன்பதாக சென்னையில் தேசியவாதிகளின் சங்கமொன்று (Nationalist’s Association) என்று ஒன்றை ஆரம்பித்தார்கள். அதற்கு ஸ்ரீமான் சி. விஜயராகவாச்சாரியார் அவர்களை அக்ராசனராக வைத்து, உபஅக்ராசன ஸ்தானத்துக்கு ஸ்ரீமான் வி.ஓ. சிதம்பரம்பிள்ளை அவர்கள் பெயரைப் பிரேரேபித்தவுடன், அவருக்கு அந்த ஸ்தானத்தைக் கொடுக்க இஷ்டமில்லாதவர்களாகி அதை அவர் அடைய விடாமற் செய்வதற்கு எவ்வளவோ பிரயத்தனங்கள் பிராமணர்கள் செய்தார்கள். இதை பிராமணரல்லாதாரில் சிலர் தெரிந்து அப்போதே கூச்சல் போட்டதன் பலனாக அநேக உபஅக்ராசனாதிபதிகளை ஏற்பாடு செய்து அந்த ஸ்தானத்திற்கு ஒரு மதிப்பில்லாமல் அடிக்கப் பார்த்தார்கள். இதன் பலனாக, அதன் நிர்வாக சபைகளில் பிராமணரல்லாதாரை அதிகமாகப் போடும்படி நேரிட்டது. இதன் காரணமாக தேசியவாதிகளின் சங்கமென்பதைக் குழந்தைப் பருவத்திலேயே கழுத்தைத் திருகிக் கொன்று போட்டார்கள்.

--------------------------"குடிஅரசு" 18.10.1925 பக்கம் 7

2 comments:

Unknown said...

//ஒத்துழையாமை ஆரம்பிப்பதற்குக் கொஞ்ச நாளைக்கு முன்பதாக சென்னையில் தேசியவாதிகளின் சங்கமொன்று (Nationalist’s Association) என்று ஒன்றை ஆரம்பித்தார்கள். அதற்கு ஸ்ரீமான் சி. விஜயராகவாச்சாரியார் அவர்களை அக்ராசனராக வைத்து, உபஅக்ராசன ஸ்தானத்துக்கு ஸ்ரீமான் வி.ஓ. சிதம்பரம்பிள்ளை அவர்கள் பெயரைப் பிரேரேபித்தவுடன், அவருக்கு அந்த ஸ்தானத்தைக் கொடுக்க இஷ்டமில்லாதவர்களாகி அதை அவர் அடைய விடாமற் செய்வதற்கு எவ்வளவோ பிரயத்தனங்கள் பிராமணர்கள் செய்தார்கள்.//

இச்செய்திகளின் வாயிலாக பார்ப்பனர்கள் செய்த அயோக்கியத்தனத்தை நன்கு அறிந்து கொள்ள முடிந்தது நண்பரே.

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி திருநாவு