Search This Blog

1.3.09

பெண்களை இழிவுபடுத்தும் இராமாயணம், மனுதர்மம், மகாபாரதம், கீதை உள்ளிட்ட நூல்களை கொளுத்தவேண்டும் ஏன்?


மார்ச் மதத்திற்கும் மகளிர்களுக்கும் ஒரு சிறப்புண்டு.

மார்ச்- 8 மகளிர் தினம் உலகம் முழுதும் கொண்டாடப்படுகிறது. அந்தவகையில் நாத்திக இயக்கத்தை தலமையேற்று நடத்திய அன்னை மணியம்மையார் பிறந்த தினம் மார்ச் - 10. அந்நாளையொட்டி கீழ் கண்ட கட்டுரையை பதிப்பிக்கிறேன்.

-------------------------------------------------------------------------------------


அன்னை மணியம்மையார் அவர்களின் 90ஆம் ஆண்டு பிறந்த நாளையொட்டி திராவிடர் கழக மகளிரணி சார்பில் சென்னையையடுத்த திரு-வொற்றியூரில் 10.3.2007 அன்று பெண்கள் விடுதலை மாநாடு எழுச்சியுடன் நடைபெற்றது. பேரணி என்னும் பேராறு ஊரையே கலக்கி எடுத்தது.அம்மாநாட்டில் பங்கு ஏற்று உரையாற்றியோர் அனைவரும் பெண்களே திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் மட்டுமே விதிவிலக்கு. அம்மாநாட்டில் நிறை உரையாற்றிய தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் ஒரு முக்கிய அறிவிப்பினை வெளியிட்டார்.

பெண்களை இழிவுபடுத்தும் இராமாயணம், மனுதர்மம், மகாபாரதம், கீதை உள்ளிட்ட இந்து சமய நூல்களின் பகுதிகளைத் தனியே அச்சிட்டு பகிரங்கமாகக் கொளுத்தும் போராட்டம் நடைபெறும் என்பதுதான் அந்த அறிவிப்பு.

மனித உரிமையில் நம்பிக்கையுள்ளவர்கள், பெண்ணுரிமைக்காகப் பேரிகை கொட்டுபவர்கள் யாராகவிருந்தாலும் இதனைப் போற்றி வரவேற்கவே செய்வார்கள்.

ஆனால் மத அடிப்படைவாதிகளோ மருள்வார்கள். ஆத்திரப்படுவார்கள். அக்னிக் குண்டத்தில் குதிப்பதுபோல அலறுவார்கள்! அதனால்தான் இந்து முன்னணி பிரமுகர் திருவாளர் இராம. கோபாலன் வாள் `வாள் வாள்’ என்று கத்துகிறார்.

பெரியார் நூல்களைக் கொளுத்துவோம் என்று ஏட்டிக்குப் போட்டி பேசுகிறார்கள்.
பெண்களை இழிவுபடுத்தும் கருத்துகளைப் பெரியார் சொல்லியிருந்தால் எடுத்துக்காட்டட்டுமே அப்படி எடுத்துக்காட்டி அதனை எரியூட்டினால் அதற்குப் பெயர்தான் அறிவார்ந்த செயல் என்பது. அதனை விட்டுவிட்டு ஏணிக்குச் கோணி என்ற தோரணையில் பேசுவது அவர்களின் இயலாமையையும், ஆற்றாமையையும் அறியாமையையும்தான் வெளிச்சம் போட்டுக் காட்டும்.

கேள்வி: பெண்களை இழிவுப்படுத்தி நூல்களில் வெளியிட்டுள்ள இதிகாச கருத்துகளைத்தானே தனியாக அச்சிட்டு தி.க.வினர் கொளுத்துவதாக அறிவித்துள்ளார்கள். அதற்கு உங்கள் பதில் என்ன?

இராமகோபாலனின் பதில்: மனுதர்ம நூலைப்பற்றி இப்பொழுது எந்த ஆன்மீகவாதி பேசுகிறார்கள்? அதைப்பார்த்தவர்கள் யார்? படித்தவர்கள் யார்?


(குமுதம்’ ரிப்போர்ட்டர் 22.3.2007)

நெஞ்சை நிமிர்த்தி பதில் சொல்கிறாரா இராம கோபாலன்?எப்படிப்பட்ட அந்தர்பல்டி அடிக்கிறார்?

மனுதர்மத்தைப் பார்த்தவர்கள் யார்? படித்தவர்கள் யார் என்கிறாரே அப்படியானால் மனுதர்மம் என்ற நூலே இந்து மதத்தில் கிடையாது என்கிறாரா?

இதன் மூலம் மனுதர்மத்தை இவர் பார்த்தது இல்லை படித்ததும் இல்லை என்பதை ஒப்புக் கொள்கிறார் என்றுதானே பொருள்?

அப்படியானால் அதனைக் கொளுத்துவதுபற்றி இவருக்கு என்ன கவலை வந்தது? இவர் ஏன் துடிக்கிறார்? பேட்டி கொடுக்கிறார்?

கருத்தைக் கருத்தால் வெல்ல முடியாதவர்கள் இப்படிக் குப்புறப்படுத்துக் கொண்டு குமுறுவார்கள் .

குரானில் பெண்களுக்கு எதிராகச் சொல்லப்பட்டவற்றையெல்லாம் எரிப்பாரா என்று எதிர்க் கேள்வி வைக்கிறார்.


இதன் மூலம் இந்து மதத்தில் பெண்கள் இழிவுப்படுத்தப்பட்டுள்ளார்கள் என்பதை ஒப்புக் கொண்டு விட்டாரே!

இஸ்லாம் மதத்தில் பெண்களுக்கு உரிமை இல்லை என்று கூற வருகிறாரா அல்லது இழிவுபடுத்தப்பட்டுள்ளனர் என்று சொல்ல வருகிறாரா? இரண்டுக்கும் அடிப்படையில் வேறுபாடு உண்டே!

உரிமைகள் மறுக்கப்பட்டால் எதிர்த்துப் போராடலாம்தான். இசுலாம் மதத்தில் பெண்கள் இழிவுபடுத்தப்பட்டுள்ள பகுதிகளைக் கூற வேண்டியதுதானே, இதுவரை இப்படி அறிவுப்பூர்வமான வழியில் அவர்கள் சிந்தித்ததுண்டா செயல்பட்டதுதான் உண்டா?

இந்து மதத்தின் ஆதிக்க உயிர் நாடியில் கை வைத்தவுடன் ஆள் காட்டி வேலை செய்வது என்பது ஆரியர்களின் குருதியில் வழிந்தோடும் புத்தியாகும்.

`என்னை அடித்து விட்டயா இரு... இரு என் அண்ணனிடம் சொல்லி வைக்கிறேன் அவனை அடித்துப் பாரு பார்க்கலாம்’ என்று கூறுகிற கோழைகளுக்கும் இந்த இந்து முன்னணி வகையறாக்களுக்கும் என்ன வேறுபாடு?

திராவிடர் கழகம் ஒன்றைச் சொல்லுகிறது ஒரு போராட்டத்தை அறிவிக்கிறது என்றால் அதற்கான காரணத்தை அறிவார்ந்த முறையில் பட்டியலிட்டுக் காட்டுமே! அரமைப்புச் சட்டத்தை எரிக்கும் போராட்டத்தை தந்தை பெரியார் அறிவித்த நேரத்தில்கூட அரசமைப்புச் சட்டத்தின் இத்தனை யாவது சரத்து ஜாதியைப் பாதுகாக்கிறது என்று எடுத்துக்காட்டி. அச்சிட்டு அத்தனைத்தானே எரித்தனர்? (1957 நவம்பர் 26)

மனுதர்ம சாஸ்திரத்தை எரித்தபோதும்கூட, அத்தியாயம் சுலோகம் உட்பட ஆதாரங்களை எடுத்துப் போட்டு அச்சிட்டுத் தானே கொளுத்தினோம்? (1981 மே 17)

மறுக்க முடியுமா இந்த மனுதர்மவாதிகளால்? இப்பொழுது எரிக்க இருப்பதாக தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் அறிவித்துள்ளாரே அதற்கு அடிப்படை ஆதாரம் என்ன என்று அவாள் தரப்பி லிருந்து வினா தொடுத்திருந்தால் அதற்குப் பெயர்தான் அறிவு நாணயம் என்பது.

அப்படி அவர்கள் கேட்க மாட்டார்கள் ஏன் கேட்கவும் முடியாது. காரணம் அவர்களுக்கு மிக நன்றாகவே தெரியும்.

கருப்புச் சட்டைக்காரர்கள் எதைச் செய்தாலும் ஆதாரத்தோடு தான் செய்வார்கள் சொல்லுவார்கள் என்பதை அவர்கள் நன்றாகவே அறிவார்கள். அதன் காரணமாகத்தான் சவால் கிவால் என்று எகிற மாட்டார்கள்.

அவர்கள் கேட்காவிட்டாலும் பொது மக்களுக்கு அதனை வெளிப்படுத்த கழகம் தயாராகவே இருக்கிறது.

எந்த ஒரு போராட்டத்தை நடத்துவதாக இருந்தாலும் அதுபற்றிய விளக்கத்தை பொது மக்கள் மத்தியில் அய்யந்திரிபற எடுத்து விளக்கிய பிறகுதான் அந்தப் போராட்டத்தைக் கழகம் வெளிப்படையாக நடத்தும் அந்த முறையிலேயே சில எடுத்துக்காட்டுகளைக் கூற வேண்டியது எங்களின் கடமையாகும். அதற்கான ஒரு பட்டியலைத் தருகிறோம்.

படித்துப் பார்க்கட்டும் தவறு என்றால் தாராளமாகச் சுட்டிக் காட்டட்டும். முடியவில்லை என்றால் முக்காடு போட்டுக் கொண்டு மூலையிலே முடங்கிக் கிடக்கட்டும்.


ஒரு பெண் தன் நோக்கத்தைப் பூர்த்தி செய்வதற்குத் தனது கணவனையோ குழந்தைகளையோ சகோதரர்களையோ யாரை வேண்டுமானாலும் கொலை செய்யத் தயங்க மாட்டாள். (பாகவத ஸ்கந்தம் 4+14+42)

இதன்மூலம் பெண் என்பவர் பிறவியிலேயே ஒரு கொலைகாரி என்று சித்திரிக்கப்படவில்லையா?

பெண்ணைவிடப் பாவகரமான பிராணி வேறு இல்லை. பெண் எரிகிற நெருப்புப் போன்றவள்.; பெண் மாய்கை (வஞ்சக) குணமுள்ளவள். க்ஷவரக்கத்தியின் கூர்மையான பதம் போன்றவள். இவைகள் எல்லாம் உண்மையாகவே ஒரு பெண்ணின் தன்மையில் இருக்கின்றன.
பாரதம் 42+43.

இதன் மூலம் பெண் என்பவர் ஒரு மனிதப் பிறவியேகூட அல்ல ஒரு பிராணி மிருகம் என்று கேவலப்படுத்தப்படவில்லையா?

பெண்ணாய் பிறப்பதைவிட கெட்ட பிறப்பு வேறு எதுவுமில்லை எல்லாக் கேடுகளுக்கு வேர் பெண்களே!-பாரதம் அனுசான்ய பருவம்

பெண்கள் என்பவர்கள் பிறவியிலேயே குற்றவாளிகள் (Born Criminals) என்று இதன் மூலம் குற்றப் பத்திரிகைப் படிக்கப்படவில்லையா?

இந்தவுலகில் ஆண்களைக் கற்பழிக்கும் இயல்பைப் பெண்கள் பெற்றிருப்பதனால்தான் புத்திசாலிகள் பெண்கள் மத்தியில் தற்காப்புடன் இருக்க வேண்டியவர்கள் ஆகிறார்கள்.
(மனு-தர்மம் அத்தியாயம் 2 + சுலோகம் 213)

பெண்கள் என்பவர்கள் அடிப்படையில் விபச்சாரிகள் என்று இதன் மூலம் விமர்சிக்கப்படவில்லையா?

நாரதர் (ஸ்மிருதிக்குக் கர்த்தாவான ரிஷி) கூறுகிறார்: `எவனொருவன் வாங்கின கடனையோ, பொருளையோ திரும்பக் கொடுக்கவில்லையோ அவன், கடன் கொடுத்தவனுடைய வீட்டில் ஒரு அடிமையாகவாவது ஒரு வேலைக்காரனாகவாவது ஒரு ஸ்திரீயாகவாவது, ஒரு நாலுகால் மிருகமாகவாவது பிறப்பான்’.

பெண்ணாகப் பிறப்பது என்பது தண்டனைக்குரியது என்பது இதன்மூலம் கூறப்படவில்லையா?

போதாயனர் உரைப்பது: `மாதர்கள் அறிவுகளே இல்லாதவர்கள்; அவர்கள் சொத்துரிமை கொள்ளவும் யோக்கியதையற்றவர்கள்.’

பெண்ணென்றால் மூடர்கள் என்பது இதன்மூலம் சொல்லப்படவில்லையா?

``பால்யத்தில் தகப்பன் ஆக்ஞையிலும்,
யௌவனத்தில் கணவன் ஆக்ஞையிலும்
கணவன் இறந்தபின்பு பிள்ளைகள்
ஆக்ஞையிலும் இருக்க வேண்டியதல்லாமல்
ஸ்திரீகள் தன் சுவாதீனமாக
ஒருபோதும் இருக்கக் கூடாது
(மனுதர்மம் அத்தியாயம் 5 சுலோகம் 148)

பெண் என்பவருக்கு சுயமரியாதையோ சுய உரிமையோ இதன் மூலம் கிடையாது என்று வரையறுக்கப்படவில்லையா!


இதற்கு என்ன வியாக்யானம் சொல்ல வருகிறார். இந்து முன்னணியின் இராம. கோபாலர்?
ஒரு பெண் தந்தையோடு, கணவனோடு, பிள்ளைகளோடு இருப்பது பாதுகாப்பாக இருக்க வேண்டும். அனாதை ஆகிவிடக் கூடாது என்ற நோக்கத்தில்தான் இவ்வாறு சொல்லப்பட்டதாக வக்காலத்து வாங்குகிறார்.

மற்றவர்களின் பாதுகாப்பில் இல்லாமல் பெண்கள் இருந்தால்தானே அனுமதிக்கப்பட்டால்தானே பெண்ணும் ஒரு மனித ஜீவன் ஆணுக்கு சமமானவர்! அப்படியில்லாமல் எந்தப் பருவத்திலும் ஒரு ஆணின் பாதுகாப்பில் தான் பெண் இருக்க வேண்டும் என்றால் இதன் பொருள் என்ன? ஆணுக்கு என்றென்றும் அடிமையாக இருக்க வேண்டும் என்பதுதானே?

மனுதர்மத்தில் பெண்களைப்பற்றிச் சொல்லப்பட்டு இருக்கும் இலக்கணங்கள், வரையறைகளைப் படித்தால் தான் இராம. கோபாலன் மேற்கொள்ளும் சப்பைக் கட்டு அவிழ்ந்து விழுந்து விடும் என்பதை அறியலாம்.

படுக்கை, ஆசனம், அலங்காரம், காமம், கோபம், பொய், துரோக சிந்தை இவற்றினை மாதர் பொருட்டே மனுவானவர் கற்பித்தர் (மனுதர்மம் அத்தியாயம் 9 சுலோகம் 17)

மகளிர்பற்றிய மனுதர்மத்தின் இந்தப் படப்பிடிப்புக்கு இராம. கோபாலர் என்ன பதில் சொல்லுவார்?

பெண்களையும், பிராமணர் அல்லாதாரையும் கொல்லுதல் பாதகமாகாது. (மனுதர்மம் அத்தியாயம் 11 + சுலோகம் 66)

இதன் மூலம் பெண்கள் அற்பத்திலும் அற்பம் என்று ஆரியம் கருதுகிறது என்பது புலப்படவில்லையா?


பெண்களும், வைஸ்யர்களும், சூத்திரர்களும் பாவ யோனியிலிருந்து பிறந்தவர்கள் ( கீதை அத்தியாயம் 9 சுலோகம் 32)

பெண்களின் பிறப்பையே இதன்மூலம் கீழ்மைப்படுத்தவில்லையா கீதை?

மதவிதிகள் கூறும் நூல்களில் ஒன்றாகிய ராமாயணம் உரைப்பது: `தப்பட்டைகள், பயிரிடுபவர்கள், ஒடுக்கப்பட்டவர்கள், மிருகங்கள், பெண்கள் ஆகிய இவர்கள் எல்லாம் கடுமையான முறையினால் ஒடுக்கி வைக்கப்பட வேண்டும்’ (சுந்தரகாண்டம் 5).

இராமாயணத்திலும் பெண்கள்பற்றி இழிவாகத்தான் கூறப்பட்டுள்ளது என்பது இதன் மூலம் விளங்கவில்லையா?

இந்தக் கேவலங்களைப் பொசுக்கினால் பொத்துக் கொண்டு வருகிறது சிலருக்கு என்றால் அவர்களையும் அடையாளங்காட்ட இதுதானே சரியான வாய்ப்பு?

பெண்களை இப்படி கேவலப்படுதி, கேவலப்படுத்தி சிறுமைப்படுத்தி, சிறுமைப்படுத்தி கட்டிப் போட்டு வைத்திருந்தால்தான் இன்றுவரைகூட பெண்ணென்றால் இளக்காரம் என்ற நிலையும் மறுக்க முடியுமா?

பெண்ணைத் திருமணம் செய்து கொள்கிறவன் பணம் கேட்கிறான், வீடு கேட்கிறான், கார் கேட்கிறான், நகைகள் கேட்கிறான் என்றால் என்ன காரணம்? மதிப்பிழந்த பெண்களை திருமணம் செய்து கொள்வதற்கு இழப்பீடு கேட்கிறான் என்று தானே பொருள்?

இன்றைக்கும்கூட சதி மாதா கோயிலை எழுப்பவில்லையா? 1987+இல் கூட பா.ஜ.க., ஆட்சியில் ராஜஸ்தானில் ரூப்கன்வர், இறந்த கணவனோடு கட்டி வைத்து துடிக்கத் துடிக்கப்படுகொலை செய்யப்படவில்லையா? அந்த இடத்தில் சதி மாதா கோயில் கட்டப்படவில்லையா?

அந்தக் கொடுமையைப் பற்றி காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி என்ன கூறுகிறார்? `தர்ம சாஸ்திரங்களில் `சதி’-யைப்பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. ஆனால் சமூகங்கள் சிலவற்றில் இப்படிப் பழக்கம் இருப்பதாகத் தெரிகிறது. எவ்வாறாயினும் இந்தப் பழக்கத்திற்கு கண்டனம் தெரிவிக்க நான் விரும்பவில்லை. அது குறித்து மக்களும் கவனித்துக் கொள்வார்கள்’’(`தி வீக்’ அக்டோபர் 11-17, 1987)

இப்படி பெண்களை வஞ்சிக்கும், அவமதிக்கும் கூட்டம் இன்றைக்கும் இருக்கத்தானே செய்கிறது?

இவ்வளவுக்கும் இந்து மதத்தில் மூம்மூர்த்திகளுக்கும் மூன்று பத்தினிகளைப் பிரதானமாகக் கூறுகிறார்கள். பார்வதி தேவி என்றும் இலட்சுமிதேவி என்றும் சரஸ்வதி தேவி என்றும் உருகுகிறார்கள்.பூமியைப் பூமாதேவி என்கின்றனர். தண்ணீரைக் கங்காதேவி என்று கசிந்துருகுகிறார்கள். பசுவை கோமாதா என்று கும்பிடுகிறார்கள்.

ஆனால் உண்மையான தாய்களை, பெண்களைப் பாவ யோனியிற் பிறந்ததாகக் கூச்சமின்றிக் கூறுகிறார்கள். பெண்கள் கொல்லப்பட வேண்டியவர்கள் என்றும் இரக்கமின்றிப் பேசுகிறார்கள்.

திருவாளர் `சோ’ ராமசாமி-யின் `துக்ளக்’ ஒவ்வொரு இதழிலும் பெண்கள் பற்றி நஞ்சைக் கக்கிக் கொண்டு தானிருக்கிறார். இவர்கள் பெண்ணாகிய தாய்க்குப் பிறக்கவில்லையா? சகோதரிகளோடு பிறக்கவில்லையா? இவர்களுக்கு மகள்களே கிடையாதா?எண்ணிப் பாருங்கள்!

பெண்களை இழிவுப்படுத்தும் இதிகாசங்களைக் கொளுத்தினால் இவர்களுக்கு ஆத்திரம் கரைபுரள்கிறது.

மகளிரை இழிவுபடுத்தும் மனுதர்மத்தைப் பொசுக்குவோம் என்றால் `விட்டேனா பார்’ என்று `வீராவேசம்’ காட்டுகிறார்கள்.

இவர்களின் ஆத்திரமும் எரிச்சலும், கொதிப்பும் கோபமும் இவர்கள் இன்னும் மனு மந்தாதா காலத்திலேயேதான் இருக்கிறார்கள் என்பதற்கு எடுத்துக்காட்டு!எரிப்போம் எதிரிகளையும் சந்திப்போம்!

----------------மின்சாரம் அவர்கள் 24-3-2007 "விடுதலை" யில் எழுதிய கட்டுரை

5 comments:

Unknown said...

பெண்களை இவ்வளவு கேவலமாகவா எழுதி வைத்துள்ளார்கள். படிப்பதற்கே அசிங்கமாக உள்ளது. கண்டிப்பாக இவைகளை எரித்து சாம்பலாக்கியாக வேண்டும்.

த மி ழ் இ னி யா said...

பெண்கள் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய அரிய ஆராய்ச்சிக்கட்டுரை. தோண்டித் துருவி செய்திகளை வழங்கிய மின்சாரத்திற்கு நன்றி.

பெண்கள் விழிப்புணர்வு பெற்று சக மனுஷியாக மதிக்கப் பெறவேண்டும். அதற்கு இக்கட்டுரை வழிவகுக்கிறது.

குலவுசனப்பிரியன் said...

"குமுதம் ஜோதிடம்" என்ற பத்திரிக்கையின் பார்ப்பன ஆசிரியர், கருட புராணம் நூலை மிகவும் புனிதமானது என்று படிக்க பரிந்துறைத்ததால் படித்துப் பார்த்தேன். அதில் பெண்களுக்கு அழகான ஆடை அணிந்த ஆண்களைக் கண்டால், அவர் உடன்பிறந்தவரானாலும், யோனியில் தன்னிச்சையாக மதனநீர் கசியும் என்று எழுதியிருந்ததைக் கண்டு அறுவறுப்பு அடைந்தேன். இந்த மாதிரி அசிங்கங்களை எரித்தால்தான், அவைகளை அடிப்படையாக வைத்து பார்ப்பனர்கள் எடுக்கும் திரைப்படங்களை விபரம் புரியாமல் கைக்கொட்டி ரசிக்கும் மக்கள் சற்றேனும் மான உணர்வு பெறுவர்.

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

தமிழ்
&
தமிழ் இனியா

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி குலவுசனப்பிரியன்