Search This Blog

14.3.09

பெரியார் பார்வையில் "தாலி"






புறநானூற்றின் 77-ஆம் பாடலும், 374-ஆம் பாடலும்; அகநானூற்றின் 54-ஆம் செய்யுளும், சிலப்பதிகாரமும் அய்ம்படைத் தாலி, புலிப்பல்தாலி, வெண்பல் தாலி ஆகியவை பற்றிப் பேசுகின்றன. சிலப்பதி காரத்தில் மங்கல அணி என்று ஒரு குறிப்பு வருகிறது. ஆனால் அவை திருமணத்தின் போது மணமகளின் கழுத்தில் கட்டப்பட்டன என்பதற்கான குறிப்பு எதுவும் கிடையாது.

11-ஆம் நூற்றாண்டில் கச்சியப்பரால் இயற்றப்பட்ட கந்தபுராணத்தில் தான் திருமணத்தின்போது தாலி கட்டப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.

பழந்தமிழர் யார்? அவர்கள் எப்படி இருந்தார்கள் என்பதைப் பற்றி நமக்கென்ன கவலை. அது இன்று அறிவுக்குப் பொருந்துமா? என்று கேட்டு, தாலி அடிமையின் சின்னம் என்றார் தந்தை பெரியார்.

இதைக் கீழ்க்கண்டவாறு விளக்குகிறார்:

கலியாண காலத்தில் பெண்ணுக்கு மாப்பிள்ளை தாலி என்னும் ஒரு கயிற்றைக் கழுத்தில் கட்டி, தனக்கு அடிமை என நினைத்து, கேவலமாக நடத்தி வருவதானது எருமை மாடுகளை விலைக்கு வாங்கி அதன் கழுத்தில் ஒரு கயிற்றைக் கட்டி இழுத்து வந்து நடத்துவது போலவே தானாகும்.

பெண்களுக்குக் கழுத்தில் தாலி கட்டுவதன் கருத்து கலியாணம் ஆனது ஆகாதது என்ற அடையாளத்தைக் காட்டுவதற்கும், இன்னான் பெண்டாட்டி என்ற உரிமையை நிலை நாட்டுவதற்கும், பிறத்தியான் அப்பெண்ணைக் காதலிக்காதிருப்பதற்கு மென்றே கருதப்பட்டு வருகிறது. அப்படியானால் ஆண்களில் கலியாணம் ஆனவன் ஆகாதவன் என்பதற்கும், இன்னாளுடைய புருஷன் என்பதற்கும், பிற மாதர் காதலிக்காதிருக்கும் பொருட்டும் அடையாளம் வேண்டிய தவசியமல்லவா? அதற்காகக் கலியாண காலத்தில் ஆண்கள் கழுத்திலும் ஒரு தாலிக் கயிறு கட்ட வேண்டும். அப்படியில்லாமல் பெண்களை மட்டும் ஏமாற்றிக் கழுத்தில் தாலிக் கயிற்றைக் கட்டி அடிமைப்படுத்தி வருவது கண்டித்து ஒழிக்கத் தகுந்ததோர் சடங்காகும் என்பதில் கடுகளவும் சந்தேக மில்லை. அதோடு மனைவியிழந்த புருஷன் மறுமணம் செய்து கொள்ளலாம். கணவனையிழந்த கன்னிகை தான் ஆயுள் மட்டும் தன் காலத்தை விதவை என்ற கட்டுப்பாட்டில் கழிக்க வேண்டும் என்ற மூடப்பழக்கம் ஒழிந்து நமது மணமகள் செல்வி சிவகாமி போல தைரியமாய் முன்வர வேண்டும். இதற்குத் தோன்றும் இடையூறும் எதிர்ப்பும் அர்த்தமற்ற அநாகரிகமான செய்கையென்றுதான் சொல்ல வேண்டும். அத்தகைய எதிர்ப்பையும் இடைஞ்சலையும் மூடக்கட்டுப்பாடுகளையும் உதறித்தள்ளி தம் பகுத்தறிவை உபயோகித்து அர்த்தத்தோடு கூடிய செய்கைகளையும் நடவடிக்கைகளையும் நமது வாழ்வின் லட்சியமாகக் கொள்வதே மக்களின் சுயமரியாதைக்கு அடையாளமாகுமென்பதை உங்களுக்குக் கூறி மணமக்களை மனமார வாழ்த்துகிறேன்.


---------------5.5.1930-இல் ஈரோடு மணவிழாவில் தந்தை பெரியாரின் உரை: குடிஅரசு 11.5.1930


இந்த கலியாணத்தில் பெண்ணின் கழுத்தில் கயிறு (தாலி) கட்டவில்லை. மணமக்களைப் பெற்றவர்கள் இருவரும் மிகத் துணிச்சான சுயமரியாதை வீரர்கள் என்பது அவர்களது உபந்நியாசத்திலிருந்தே பார்க்கலாம். தாலி கட்டுவது ஒழிந்தாலல்லாது நமது பெண்கள் சமூகம் சுதந்திரம் பெற முடியவே முடியாது. பெண்கள் மனிதத் தன்மை அற்றதற்கும் அவர்களது சுயமரியாதை அற்ற தன்மைக்கும் இந்தப் பாழும் தாலியே அறிகுறியாகும். புருஷர்களின் மிருக சுபாவத்திற்கும் இந்தத் தாலி கட்டுவதே அறிகுறியாகும். ஆனால், தங்களை ஈனப்பிறவி என்று நினைத்துக் கொண்டிருக்கும் பெண்களுக்கு இந்த வார்த்தை பிடிக் காதுதான். இப்போது தாலி கட்டிக் கொண்டிருக்கும் பெண்களுக்குச் சுயமரியாதை உணர்ச்சி வந்திருந்தால் அறுத்தெறியட்டும். இல்லாவிட்டால் புருஷர்கள் கழுத்திலும் ஒரு கயிறு கட்ட வேண்டும். தங்களைத் தாங்களே அடிமை என்று நினைத்துக் கொண்டிருக்கின்ற சமூகம், என்றும் உருப்படியாகாது.

நம்மை நாம் சூத்திரர்கள் இந்துக்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கும் கீழ்மைக் குணமே நம் நாடு அடிமையாய் இருப்பதற்குக் காரணமாயிருப்பது என்பது போலவே, பெண்கள் புருஷனுக்குக் கட்டுப்பட்டிருக்க வேண்டும். அதிலும் தாலி கட்டின புருஷனுக்கு கீழ்ப்படிந்து நடக்க வேண்டும் என்னும் உணர்ச்சிகள் பெண்களை மிருகமாக்கி இருக்கின்றன.


----------------10.7.1930-இல் விருதுநகர் மணவிழாவில் தந்தை பெரியார் உரை: குடிஅரசு 13.7.1930)

-------------------------ஆதாரம்: தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் எழுதிய "சுயமரியாதைத் திருமணம் தத்துவமும் வரலாறும்"நூலிலிருந்து- பக்கம்: 17-19

1 comments:

Unknown said...

//பெண்களுக்குக் கழுத்தில் தாலி கட்டுவதன் கருத்து கலியாணம் ஆனது ஆகாதது என்ற அடையாளத்தைக் காட்டுவதற்கும், இன்னான் பெண்டாட்டி என்ற உரிமையை நிலை நாட்டுவதற்கும், பிறத்தியான் அப்பெண்ணைக் காதலிக்காதிருப்பதற்கு மென்றே கருதப்பட்டு வருகிறது. அப்படியானால் ஆண்களில் கலியாணம் ஆனவன் ஆகாதவன் என்பதற்கும், இன்னாளுடைய புருஷன் என்பதற்கும், பிற மாதர் காதலிக்காதிருக்கும் பொருட்டும் அடையாளம் வேண்டிய தவசியமல்லவா?//

கண்டிப்பாக அடையாளம் வேண்டும். ஆனால் ஆணாதிக்க சமுதாயத்தில் இது சாத்தியமா?


இன்று வரை ஆண்களுக்கு அப்படியான அடையாளம் எதும் இல்லை. இருந்தால் சொல்லுங்கள்.