Search This Blog

14.7.14

மொழிப்போர் : சங்கே முழங்கு!-காக்காவ தேசிய பறவையா மாத்திடலாமா?





    சமூக வலைத்தளங்கள் மற்றும் அரசு தொடர்புமொழியாக இந்திக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என அரசு அதிகாரிகளுக்கு,  மத்தியில் புதிதாக பொறுப்பேற்றுள்ள நரேந்திர மோடி அரசு உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், இந்தியாவில் 25 சதவீதத்தினர் மட்டுமே இந்தியைத் தங்களது தாய்மொழி என தெரிவித்துள்ளதாக கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

    இந்திக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என அரசு அதிகாரிகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுப்பிய சுற்றறிக்கை நாடு முழுவதும் சர்ச்சையையும், விவாதத்தையும் கிளப்பிவிட்டுள்ளது. குறிப்பாக தமிழகத்திலிருந்து எதிர்பார்த்தது போன்றே தி.மு.க. தலைவர் கலைஞர் முதல் எதிர்ப்புக் குரலை உயர்த்த, அவரைத் தொடர்ந்து தமிழக முதலமைச்சரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவும் இந்தி திணிப்பை எதிர்த்து பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். மேலும், காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லாவும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
    சிவசேனாவிலிருந்து பிரிந்து சென்று மகாராஷ்ட்ரா நவநிர்மாண் சேனா கட்சியைத் தொடங்கிய ராஜ் தாக்கரே இதுகுறித்து இன்னும் வாய் திறக்கவில்லை. மகராஷ்ட்ரா அரசு அலுவலகங்களில், குறிப்பாக காவல்நிலையங்களில் மராத்தி மொழிதான் தொடர்பு மொழியாக இருக்க வேண்டும் என சிவசேனாவைக் காட்டிலும் மிக அதிகமாக குரல் கொடுத்தவர் ராஜ் தாக்கரே. ஆனால் அவரும் தற்போது மவுனமாகத்தான் உள்ளார். சமீபத்தில் பூடான் சென்றிருந்த பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டு தலைவர்களுடன் பேசுகையிலும், நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தில் ஆற்றிய உரையின்போதும் இந்தியில்தான் பேசினார். இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் மேற்கூறிய உத்தரவு, இந்தி மொழியை நாடு முழுவதும் பரவலாகக் கொண்டு செல்லும் நோக்கத்துடன் தொடங்கப்பட்டுள்ள செயல்திட்டத்தின் முதல் நடவடிக்கையாக இருக்கலாம் என கூறுகின்றனர் _ இந்த உத்தரவை எதிர்ப்பவர்கள். இதில் இன்னொரு வேடிக்கை இந்தி மொழி பேசும் உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி மத்திய அரசின் உத்தரவுக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளதுதான்.

    இது தொடர்பாக அவர் கூறுகையில், இந்தி மொழியை ஊக்குவிப்பது நல்ல விஷயம்தான் என்றாலும், அனைத்து பிராந்திய மொழிகளையும் மத்திய அரசு சமமாக நடத்த வேண்டும். நமது தேசம் பாரம்பரிய வளமிக்க பிராந்திய மொழிகளைக் கொண்டது. எனவே அந்த மொழிகளையும் ஊக்குவிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். அதே சமயம் மத்திய அரசு,  இந்தி திணிப்பு என்ற குற்றச்சாட்டை நிராகரிக்கிறது. 

    இந்தியை ஊக்குவிப்பது என்பது மற்ற பிராந்திய மொழிகளை அழிப்பதாக அர்த்தமாகாது என மத்திய உள்துறை இணையமைச்சர் கிரென் ரிஜிஜூ விளக்கம் அளித்துள்ள நிலையில், பா.ஜனதா செய்தி தொடர்பாளர் முக்தார் அப்பாஸ் நக்வியோ, இந்தி பேசுபவர்கள் படிப்பறிவில்லாதவர்களாகவும், ஆங்கிலத்தில் பேசுபவர்கள் கல்வியில் சிறந்தவர்களாகவும் முன்னர் கருதப்பட்டதாக, ஆங்கிலச் செய்தி அலைவரிசை ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில் கூறி, புதிய சர்ச்சைக்கு வித்திட்டுள்ளார்.  இந்தியை ஊக்குவிக்கும் மத்திய அரசின் முயற்சி நாட்டில் இந்தி பேசும் மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தும்.மேலும் நமது சமூகத்தில் ஆங்கிலத்தில் பேசுபவர்கள் மட்டுமே புத்திசாலிகள் என்ற மாயைக்கு முற்றுப்புள்ளி வைக்க இதுவே தக்க தருணம் என்றும் அவர் அந்தப் பேட்டியில் கூறியுள்ளார்.
    மேலும், நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள மக்களை இணைப்பதற்காக மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, தீன் தயால், உப்த்யாய் போன்ற தலைவர்கள் இந்தி மொழியைப் பிரசாரம் செய்யாமல் சென்றது துரதிஷ்டவசமானது. முந்தைய காங்கிரஸ் அரசும் இந்தி மொழியை ஊக்குவிக்க எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால் பா.ஜனதா  தலைமையிலான அரசு இந்தியை ஊக்குவிக்க நேர்மையாக எல்லாவற்றையும் செய்கிறது  என்கிறார் நக்வி.

    இந்நிலையில் மத்திய அரசின் இந்தியை ஊக்குவிக்கும் நடவடிக்கையை எதிர்ப்பவர்கள், இந்தி பேசும் மாநிலங்களில் வேண்டுமானால் மத்திய அரசு இந்தியை ஊக்குவிக்கட்டும். மேலும் அம்மாநிலத்தின் அரசு அலுவலகங்களின் தொடர்புமொழியைக் கூட ஆங்கிலத்திற்குப் பதிலாக இந்தி என மாற்றட்டும். ஆனால் இந்தி பேசாத மாநிலங்கள் மீது இதே நடவடிக்கையைத் திணிக்கக்கூடாது என்கிற நிலையே! 

    மேலும் இந்தி திணிப்பு நடவடிக்கை, இந்தி மொழியா...ஆங்கிலமா? என்று இருந்த விவாதம், தற்போது இந்தி மொழியா... மற்ற பிராந்திய மொழிகளா? என்ற விவாதத்தைத் தொடங்கி வைத்துவிட்டது.

    இந்திய அரசியலமைப்புச் சாசனப்படி நாட்டின் 22 முக்கிய மொழிகள் அனைத்தும் தேசிய மொழிகளாகவே கருதப்பட வேண்டும் என்றும், இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளும் அரசு அலுவலகங்களின் பிரதான தொடர்பு மொழிகளாக இருக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.  அதே சமயம் 25 விழுக்காட்டினர் மட்டுமே இந்தியைத் தங்களது தாய்மொழி என தெரிவித்துள்ளனர். அதாவது சுமார் 25 கோடிக்கும் சிறிது கூடுதலானவர்களே இந்தியாவில் உண்மையான இந்தி பேசுகின்றனர். மற்றவர்கள்  பேசுவது உண்மையான இந்தி அல்ல; அவர்கள் வெவ்வேறான இந்தியை அதாவது போஜ்புரி, மகாதி, மைதிலி, கார்வாலி, தோக்ரி, ராஜஸ்தானி, மார்வாரி, ஹரியான்வி போன்ற கலப்பு இந்தியைப் பேசுகிறார்கள். இவர்கள் அனைவரையும் சேர்த்தால்தான் இந்தியாவில் இந்தி பேசுபவர்களின் எண்ணிக்கை 45 விழுக்காடாக உள்ளது. இதன்மூலம் மீதமுள்ள 55 விழுக்காட்டினர் இந்தி பேசாதவர்களாகவும், இந்தி மொழியே தெரியாதவர்களாகவும் உள்ளனர் என தெரியவந்துள்ளது.
    ஆனால் 25 விழுக்காட்டினர் மட்டுமே இந்தியைத் தங்களது தாய் மொழியாக அறிவித்துள்ளனர். 8.5 கோடி பேர் பெங்காலி பேசுவதாகவும், 7.5 கோடி பேர் தெலுங்கு பேசுவதாகவும், 7 கோடி பேர் மராத்தி பேசுவதாகவும், 6 கோடி பேர் தமிழ் பேசுவதாகவும் உள்ளனர். மேலும் உருது பேசுபவர்கள் 5 கோடி, குஜராத்தி 4.6 கோடி, கன்னடம் 4 கோடி, மலையாளம் 3.5 கோடி, ஒரியா 3.3 கோடி, பஞ்சாபி 3 கோடி, அஸ்ஸாமி 1.5 கோடி, சந்தாலி 64 லட்சம் பேர், 55 லட்சம் பேர் காஷ்மீரி மொழி பேசுவதாகவும் அந்தக் கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. வடகிழக்கு மாநிலங்களிலோ 50 க்கும் அதிகமான வெவ்வேறு கிளைமொழிகளைப் பேசுகின்றனர்.

    இந்தி பேசாத மாநிலங்கள் மற்றும் வடகிழக்கு மாநிலங்கள் அல்லாத மாநிலங்களில் உள்ள பழங்குடி இனத்தவர்களோ, வேறுவிதமான மொழியைப் பேசுகின்றனர். இந்தப்  பேச்சுக்கள் இந்தி அல்லது வேறு எந்தக் கிளை மொழியுடனும் தொடர்பு இல்லாதவைகளாக உள்ளன. மேலும் கர்நாடக மாநிலங்களில் பேசப்படும் கொங்கணி, துளு, கொடாவா, பியாரி போன்றவை இந்தியுடன் எவ்விதத்திலும் தொடர்பு இல்லாதவை. எனவே இந்தியாவில் பெரும்பாலோர் இந்தி பேசுகிறார்கள் அல்லது புரிந்துகொள்கிறார்கள் எனக் கூறுவதற்கு முன்னர்,  மத்திய அரசு இந்த 2001 ஆம் ஆண்டு கணக்கெடுப்பை கவனத்தில் எடுத்துக்கொண்டு பேசவேண்டாமா?

    ஒரே தேசிய மொழி என்ற தவறான நம்பிக்கையை வலியுறுத்தியதால் பாகிஸ்தான் பிரிந்ததையும், இலங்கை உள்நாட்டுப் போரில் மூழ்கி, இன்னமும் அதன் பாதிப்புகள் மற்றும் விளைவுகளிலிருந்து வெளிவராமல் தவித்துக் கொண்டிருப்பதையும் மறந்துவிடக்கூடாது என எச்சரிக்கிறார் நவீன வரலாற்று ஆய்வாளர்களில் ஒருவரான ராமச்சந்திர குஹா.
    இந்நிலையில் இந்தி திணிப்புக்கு தமிழகத்திலிருந்து கடும் எதிர்ப்பு கிளர்ந்துள்ளது. ஜூலையில் தொடங்க உள்ள நாடாளுமன்ற நிதிநிலை கூட்டத்தொடரில் இவ்விவகாரம் கிளப்பப்படும் என்பதில் அய்யமில்லை. கலைஞர் அவர்களின் ஜூன் 18ஆம் தேதி அறிக்கையில் 2004ஆம் ஆண்டு நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்கள் இந்தியாவில் உள்ள தேசிய மொழிகள் அனைத்தும் ஆட்சி மொழி ஆக்குவது பற்றி ஆய்வு மேற்கொள்ளப்படும் என்று சொன்ன உறுதிமொழி என்னாயிற்று என்ற வினாவை எழுப்பியுள்ளார்.

    பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்அமைச்சர் ஜெயலலிதா ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது: மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த 10.3.2014 மற்றும் 27.5.2014 தினங்களில் இரண்டு அறிவிக்கைகளை வெளியிட்டுள்ளது. அதில் பேஸ்புக், டுவிட்டர், பிளாக்ஸ், கூகுள் மற்றும் யுடியூப் போன்ற சமூக வலைத் தளங்களில் அரசு தொடர்பான கணக்குகளில் ஆங்கிலம் மட்டுமே பயன்படுத்துவதற்குப் பதில் கண்டிப்பாக இந்தியைப் பயன்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. அல்லது இந்தி மற்றும் ஆங்கிலம் இரண்டையும் பயன்படுத்தலாம் என்றும் இந்தியை மேலே அல்லது முதலில் எழுத வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இது, இந்தியைக் கட்டாயமாகவும் ஆங்கிலத்தை விருப்பமாகவும் பயன்படுத்தும் வகையில் கூறப்பட்டுள்ளது. ஆட்சி மொழிகள் விதிகள் 1976ன் படி மத்திய அரசு அலுவலகத்தில் இருந்து மாநில அரசுக்கு அல்லது யூனியன் பிரதேசத்துக்கு அனுப்பப்படும் கடிதங்கள் ஆங்கிலத்தில் எழுதப்பட வேண்டும் என்று இருப்பதை நீங்கள் அறிவீர்கள். ஆட்சி மொழிகள் சட்டம் 1963 பிரிவு 3 (1 )இல் 1968ஆம் ஆண்டு செய்யப்பட்ட திருத்தம் மூலம் இந்த விதி அறிமுகம் செய்யப்பட்டது. அதன்படி மத்திய மாநில அரசுகளுக்கு இடையிலான தகவல் தொடர்புக்கு ஆங்கிலம் இணைப்பு மொழியாக்கப்பட்டுள்ளது.

    அது இந்தியை அலுவலக ஆட்சி மொழியாக கடைபிடிக்கச் சொல்லவில்லை. இந்த நிலையில் மத்திய உள்துறையின் அறிவிக்கை, மண்டலம் ஏ பிரிவில் வரும் மத்திய அரசு அதிகாரிகள் மற்றும் அலுவலகங்களுக்கு மட்டுமே பொருந்துவதாக உள்ளது. சமூக வலைத்தளங்களை அவர்கள் இயற்கையாகப் பயன்படுத்துவதால் அது அவர்களுக்குப் பொருந்தும். ஆனால் மண்டலம் சி உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் அனைத்து மக்களுக்கும் அரசின் தகவல் தொடர்பை எளிதில் அணுக முடியாது. மண்டலம் சி பகுதியில் வசிக்கும் அனைத்து மக்களுக்கும் தகவல் தொடர்புக்கு ஆங்கில மொழியே தேவை. ஆங்கிலத்தில் இல்லாவிட்டால் அவர்களால் பொதுத் தகவல் செய்திகளை அணுக முடியாது. எனவே மத்திய உள் துறையின் இந்த நடவடிக்கை அலுவலக ஆட்சி மொழிகள் சட்டம்1963க்கு எதிராக உள்ளது. இது மிகவும் முக்கியமான பிரச்சினை என்பதை நீங்கள் அறிவீர்கள் என்று குறிப்பிட்டுள்ளார் முதல் அமைச்சர்.
    ___
    பிரதமர் அலுவலகம் ஒரு விளக்க அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தி பேசாத மாநிலங்கள் மீது இந்தி திணிக்கப்படுவதாக எழுந்த கவலைகள் மத்திய அரசின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டன. உள்துறை அமைச்சகத்தின் அலுவல் மொழி துறையானது கடந்த 2014 மார்ச் 10ஆம் தேதியன்று இந்தியைப் பயன்படுத்துவது தொடர்பாக ஏற்கெனவே உள்ள நடைமுறையை உறுதி செய்து ஒரு சுற்றறிக்கையை அனுப்பியது.
    அதில், ஏ பிரிவு மாநிலங்கள் அதாவது இந்தி பேசக் கூடிய மாநிலங்கள் சமூக வலைத்தளங்களில் இந்திக்கு சம முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. மேலும் ட்விட்டர், ஃபேஸ்புக், ப்ளாக்குகள் ஆகியவற்றில் இந்தியும் ஆங்கிலமும் கண்டிப்பாகப் பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. கடந்த மார்ச் 10ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட உத்தரவானது இந்தி பேசும் மாநிலங்களுக்கு மட்டுமே உரியது. இந்தி பேசாத மாநிலங்களுக்குப் பொருந்தாது. மேலும் இந்தி பேசுகிற மாநிலங்களுடனான இணைப்பு மொழியாக இந்தி இருக்கும் என்ற நடைமுறையை இந்தச் சுற்றறிக்கையும் உறுதி செய்கிறது. இதையேதான் மே 27ஆம் தேதியன்று உள்துறை அமைச்சகமும் உறுதி செய்து சுற்றறிக்கை அனுப்பியது. இதனால் இந்தி பேசுகிற மாநிலங்களில் சமூக வலைத்தளங்களில் இந்திக்குக் கட்டாயம் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பது ஒரு புதிய கொள்கையும் அல்ல. இந்தி பேசாத மாநிலங்கள் மீது இந்தியைத் திணிக்கும் முயற்சியும் அல்ல. இவ்வாறு பிரதமர் அலவலக அறிக்கையில் விளக்கம் தரப்பட்டுள்ளது.

    இந்த நேரத்தில திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் (விடுதலை 21.6.2014) இந்தியை அதிக அளவில் பயன்படுத்துபவர்களுக்கு கூடுதல் சம்பள உயர்வு அளிக்கப்படும் என்பது எந்த வகையைச் சேர்ந்தது என்று வினா எழுப்பியுள்ளாரே அதற்கு என்ன பதில்?
    இந்தியை ஆட்சிமொழி ஆக்குவது பற்றிய அரசியல் சட்டத்தின் நகலைப் பற்றிய விவாதம் காங்கிரஸ் கட்சிக் கூட்டத்தில் நடந்தபோது 115ஆவது பிரிவைப் பற்றி கடுமையான விவாதம் நடைபெற்றது. அரசியல் சட்டதிட்டக் குழுவின் தலைவன் என்ற முறையில் எனக்கு அந்தக் கூட்டத்தில் இடம் கிடைத்தது. வேறு எந்த விதியைப் பற்றியும் இதுபோன்ற காரசாரமான விவாதம் நடக்கவில்லை. ஆதரவும் எதிர்ப்பும் சரிசமமாகவே இருந்தது. காட்டமான பேச்சுகளுக்குப் பிறகு வாக்களிப்பிற்கு விடப்பட்டது.

    ஆதரவு 77 பேர், எதிர்ப்போர் 77  என்றும் வந்த நிலையில் அரசியல் நிர்ணய சபையின் தலைவர் என்ற முறையில் பாபு ராஜேந்திர பிரசாத் அளித்த (Cast Vote) வாக்குமூலம் வெற்றி பெற்றது என்று டாக்டர் அம்பேத்கர் கூறியது முக்கியமானதாகும்.

    பி.ஜே.பி.யைப் பொறுத்தவரையில் அதன் அடிநாதக் கொள்கை என்பது மாநிலங்களே கூடாது; மொழி அடிப்படையில் மாநிலங்களைப் பிரித்தால் நாடே சிதறுண்டு போகும் என்றும், பொதுப் பிரச்சினைக்கு ஒரே தீர்வு சமஸ்கிருதத்தை ஆட்சி மொழி ஆக்குவதுதான் என்றும் ஆர்.எஸ்.எஸின் குருநாதர் கோல்வாக்கர் (ஞானகங்கை) கூறியுள்ளதை இந்த இடத்தில் பொருத்திப் பார்க்கவேண்டும்.

    அதனால்தான் இன்றைய பி.ஜே.பி.யின் இந்திபற்றிய சுற்றறிக்கைபற்றி கருத்துத் தெரிவித்த திராவிடர் கழகத் தலைவர் சமஸ்கிருதத்தின் நுழைவு வாயிலா என்ற வினாவை எழுப்பினார்.

    சென்னை இலயோலா கல்லூரியில் பேசிய அன்றைய சென்னை மாநிலப் பிரதமரான சி.ராஜகோபாலாச்சாரியர் சமஸ்கிருதத்தைப் படிப்படியாகப் புகுத்தவே இந்தியைப் பள்ளிகளில் கொண்டு வந்துள்ளேன் என்று கூறியதை(24.7.1937)யும் இங்கே கொஞ்சம் இணைத்துக் கொள்ளலாம்.
    இந்தி திணிப்பு பார்ப்பன ஆதிக்கத்திற்காக ஏற்படுத்திய புரட்டு என்று தந்தை பெரியார் அவர்கள் 1931ஆம் ஆண்டிலேயே தலையங்கம் தீட்டினார். (குடிஅரசு 10.5.1931). அதற்கும் எட்டு ஆண்டுகளுக்கு முன்னதாகவே _ 1923இல் திருப்பூரில் கூடிய காங்கிரஸ் மாநாட்டில் காங்கிரஸ் இந்தியைப் பரப்புவது என்று கூறிக்கொண்டு இந்தியில் உள்ள துளசிதாஸ் ராமாயணத்தைப் பரப்புவதைக் கண்டித்துக் பேசியுள்ளதையும் நினைவூட்டுகிறோம்.

    1937இல் இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்பொழுது தினமணியில் ஆசிரியராக இருந்த _ ஆச்சாரியார் ராஜாஜியின் சீடரான பி.எஸ்.சொக்கலிங்கம் தினமணியில் எழுதினார்.
    இந்தி எதிர்ப்புப் பிரச்சார வழிநடைப் படையை கால் நடைகள் (விலங்குகள்) என்று எழுதினார்.

    கூலிக்குக் குழந்தைகளை வாங்கிக் கொண்டு பெண்கள் சிறை செல்லுகிறார்கள் என்றெல்லாம் எழுதினார்.(விடுதலை, தலையங்கத்திலிருந்து 20.9.1956)
    அவ்வளவு தூரம் போவானேன்? ஜனசங்கத்தின் தலைவரான வாஜ்பேயி ஆங்கிலத்தில் சிறப்பாகப் பேசக்கூடியவர்தான். ஆனால் நாடாளுமன்றத்தில் எப்பொழுதும் இந்தியில்தான் பேசுவார். இதுபற்றி அப்பொழுது மாநிலங்களவை உறுப்பினராக இருந்த அறிஞர் அண்ணா அவர்கள் கூறிய தகவல் முக்கியமானது.


    நண்பர் என்ற முறையில் கேட்டேன். நீங்கள் பேசுவதை நாங்கள் எல்லாம் தெரிந்துகொள்ள வேண்டாமா? ஆங்கிலத்தில் பேசக்கூடாதா? என்று கேட்டேன். அதற்கு அவர் நான் வெளியில் வந்ததும் உங்களுக்கு ஆங்கிலத்தில் விளக்கிச் சொல்லுகிறேன். உள்ளே இந்தியில்தான் பேசுவேன் என்றார் வாஜ்பேயி. இங்குள்ளவர்களுக்கு இது இந்தி வெறியாகப் படவில்லை. போலீசு நிலையத்தை காவல் நிலையம் என்று சொன்னால் இது தமிழ் வெறியாகப் படுகிறது. (ஆதாரம்: சென்னை சட்டக் கல்லூரி தமிழ் இலக்கியப் பேரவை சிறப்புமலர் 1963-_1964இல் வெளியான அண்ணா அவர்களின் சொற்பொழிவில் அரசியல் உலகில் அண்ணா என்ற நூல், வெளியீடு: பாபு பதிப்பகம்)
    பி.ஜே.பி.காரர்களின் இந்தப் பின்னணியைப் புரிந்துகொண்டால், இன்றைக்கு மத்தியில் உள்ள நரேந்திர மோடி தலைமையிலான நரேந்திர தாமோதர தாஸ் மோடியின் தலைமையிலான பாரதீய ஜனதா ஆட்சி இந்தியைக் காய் நகர்த்தும் இரகசியம் விளங்கும்.
    அதே நேரத்தில் தமிழ்நாட்டின் இன்றைய நிலை என்ன?
    இந்தியை எதிர்த்து பிரதமருக்கு நீண்ட கடிதம் எழுதும் தமிழ்நாட்டின் முதல் அமைச்சர் மாண்புமிகு ஜெ.ஜெயலலிதா அம்மையாரின் ஆட்சியில் என்ன நடக்கிறது?
    வேண்டா வெறுப்பாக சமச்சீர் கல்வியை ஏற்றார் _ அதுவும் நீதிமன்றங்களின் தீர்ப்பின் காரணமாக.
    கலைஞர் ஆட்சியில் 2006ஆம் ஆண்டில் முதல் வகுப்பில் தமிழ் கட்டாயப் பாடமாகியது. அதற்கடுத்து இரண்டாம் வகுப்பில் தமிழ் கட்டாயம் என்று அடுத்தடுத்த வகுப்பில் கட்டாயமாக்கி 2015_2016 எஸ்.எஸ்.எல்.சி இறுதித் தேர்வில் தமிழில் உரிய மதிப்பெண் பெற்றாக வேண்டும் என்று வரையறுக்கப்பட்டது.
    தனியார் மெட்ரிக் பள்ளி நிருவாகிகள் உச்ச நீதிமன்றம் வரை சென்று முட்டிப் பார்த்தார்கள்; தி.மு.க. ஆட்சி நிறைவேற்றிய சட்டம் செல்லும் என்று உரத்த முறையில் தீர்ப்பு வழங்கப்பட்டுவிட்டது.
    அந்தத் தனியார் மெட்ரிக் பள்ளிகள் அதனைக் கடைபிடிக்கிறதா என்பதைக் கண்காணிப்பதை இன்றைய அரசு கோட்டை விட்டு விட்டதே!
    2015_2016 தேர்தலில் எஸ்.எஸ்.எல்.சி தேர்வில் தமிழ்ப் பாடத்தில் தேர்ச்சி பெற்றாக வேண்டும் என்ற நிலையில், தொடக்க முதல் தமிழைக் கற்பிக்காத தனியார் மெட்ரிக் பள்ளிகள் மீண்டும் நீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டிக் கொண்டு இருக்கின்றன. தமிழக அரசு என்ன செய்யப்போகிறது என்பதை நாடும் விழிப்பாகக் கண்காணித்துக் கொண்டுதான் இருக்கிறது.
    இப்பொழுது இன்னொரு தந்திரமான வேலையில் மெட்ரிக் பள்ளிகள் இறங்கியுள்ளன.
    மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் கீழ் தனி வாரியமாக இயங்கிக் கொண்டுள்ள சிபிஎஸ்இ (CBSE - The Central Board of Secondary Education) பள்ளிகளில் தமிழுக்கு இடம் இல்லை. இங்கிலீசும், இந்தியும்தான் அங்கு ஆஸ்தானம்; தமிழ்நாட்டில் உள்ள மெட்ரிக் பள்ளிகளில் தமிழ் கட்டாயமாக்கப்பட்டு விட்டதால் இதிலிருந்து விடுபட்டு தமிழுக்கு அறவே இடம் இல்லாத  இடமான சி.பி.எஸ்.இ. பள்ளிகளாக மாற்றிக் கொள்ளும் வேலையில் குதித்துவிட்டனர். அந்த வகையில் இந்தக் கல்வியாண்டில் மட்டும் இதுவரை தமிழ்நாட்டில் இயங்கி வரும் மெட்ரிக் பள்ளிகளில் 80 பள்ளிகள் சி.பி.எஸ்.இ.யில் இணைத்துக் கொள்கின்றன.
    இதற்கு முன் இவ்வாறு இணைந்து கொள்ள மாநில அரசில் தடையில்லாச் சான்று பெற்றாக வேண்டும். இப்பொழுது அது தேவையில்லை என்று ஆக்கியுள்ளனராம்.

    இதன் பின்னணியில் அகில இந்திய அளவில் பலம் வாய்ந்த பார்ப்பனீயப் பின்னணி இருக்கிறது என்பதில் எள்மூக்கு முனையளவும் அய்யமில்லை.
    கேந்திர வித்யாலயா
    மத்திய அரசில் பணியாற்றுவோருக்காகவே கேந்திர வித்யாலயா பள்ளிகள் மனிதவள மேம்பாட்டுத்துறையின் கீழ் இயங்குகின்றன. இப்பள்ளிகளில் 5ஆம் வகுப்புவரை இங்கிலீஷ், இந்தி இடம் பெறுகின்றன. ஆறாம் வகுப்பு முதல் இங்கிலீஷ், இந்தியோடு மூன்றாவது மொழியாக சமஸ்கிருதம் இடம் பெறுகிறது. இப்பொழுது சமஸ்கிருதம் அல்லது பதிலாக ஜெர்மன் மொழியும் இதில் விரும்பினால் படிக்கலாம் என்ற நிலை உள்ளது.
    தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் இருமொழிகள்தான். தமிழும் _ இங்கிலீசும்தான். இந்திக்கு இடமில்லை என்று அண்ணா அவர்கள் முதல் அமைச்சராக ஆன குறுகிய காலத்திலேயே சட்டமாக ஆக்கப்பட்டது.
    ஆனால் மத்திய அரசு நடத்தும் கேந்திர வித்யாலயா பள்ளிகளில் தமிழ் புறக்கணிக்கப்பட்டு, இந்தி, இங்கிலீஷ், சமஸ்கிருதம் போதிக்கப்படுகிறது.
    இவ்வளவுக்கும் சமஸ்கிருதம் பேசுவோரின் எண்ணிக்கை எவ்வளவு? வெறும் 14,135 (இந்திய மக்கள் தொகை 120 கோடியில்) தான். 20 மாணவர்கள் சேர்ந்தால் தமிழ் படிக்க விரும்பினால் வாரத்துக்கு இரு வகுப்புகள் தமிழாம்! (பிச்சை போடுகிறார்கள்).
    பி.ஜே.பி.ஆட்சியில் ஒரு பக்கம் இந்தியின் பட்டம் பறக்கவிட ஆயத்தங்கள் செய்யப்பட்டுவரும் இதே காலகட்டத்தில் தமிழ்நாட்டில் தமிழைப் புறக்கணிக்கும் புதிய வலைப்பின்னலும் மறைமுக தந்திரத்தில் நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றன.
    தமிழக முதல் அமைச்சர் அவர்கள் உயிரியல் பூங்காவில் புலிகளுக்குப் பெயர் சூட்டுவதில்கூட விழிப்பாக இருந்து தமிழைத் தவிர்த்து வருகிறார். மீண்டும் ஒரு மொழிப் போர் மூள்வதற்கான மேகங்கள் திரண்டு வந்துகொண்டுள்ளன. மொழிப் பிரச்சினையால் போர் மூளும் என்றார் அன்றைய இந்தியப் பிரதமர் நேரு (1953). 2014இல் புதிய பிரதமர் மோடி ஏதோ ஒருவகையில் அதற்கான சங்கை ஊதத் தொடங்கிவிட்டார் _ முழங்கு சங்கே! தயாராவோம்.





    காக்காவ தேசிய பறவையா மாத்திடலாமா?
    இப்போ பல தொலைக்காட்சி விவாதத்தில் இந்தி திணிப்பை பேசி நேரத்த வீனடிக்குறாங்க. இதுக்கெல்லாம் அப்பவே அறிஞர் அண்ணா 1962லேயே அதிரடியான பதில கொடுத்திட்டார்.
    டெல்லி பார்லிமெண்ட் இந்தி மொழியை தேசிய மொழியா ஆக்கறது பத்தி தீர்மானம் போட கூட்டம் கூடியிருந்தது.
    ஆளுங்கட்சியை சேர்ந்தவர் ஒருத்தர் எழுந்தார். இந்தியாவுல அதிகமான மக்கள் பேசற மொழி இந்தி, அதனால் இந்தி மொழிய தானே தேசிய மொழி ஆக்க முடியும்.
    இந்தியை தேசிய மொழியா அங்கீகரிக்க ஏன் எதிர்க்கறீங்கன்னு புரியலன்னு சொல்லி தன் தரப்பு வாதத்தை முன்வைத்தார். உடனே அங்கிருந்த அறிஞர் அண்ணா அளித்த பதிலில் மன்றமே அதிர்ந்தது.
    அதிரும் அளவுக்கு பதில் இதுதான் கொஞ்சம்  படிங்க...
    அதிகமான மக்கள் பேசற மொழிதான் தேசிய மொழியா இருக்கணும்னு சொல்றீங்க. அப்படி பாத்தா, நம்ம நாட்டுல அதிகமா இருக்கற பறவை காக்காதான். பின்ன ஏன் மயில் தேசியப் பறவையா இருக்கு...?
    நாட்டுல எலி இல்லாத மாநிலமே இல்லை. அதனால இனிமே புலிக்கு பதிலா இனிமே எலியை தேசிய விலங்கா அறிவிச்சிடலாமா...? ன்னு கேட்டதும் அங்கிருந்தவர்கள் அரங்கமே அதிரும் அளவுக்கு கை தட்டினார்கள்.
    இப்போ இருக்கும் இந்தி திணிப்பாளர்களே இதுக்கு பதில் சொல்லுங்க எலிய தேசிய விலங்காகவும், காக்காவ தேசிய தேசிய பறவையாவும் மாத்திடலாமா?
    -----------------------------------------------------------------------------------------------------------------------------


    ----------------------- கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் “உண்மை”ஜூலை 01-15 - 2014  இதழில் எழுதிய கட்டுரை

    4 comments:

    தமிழ் ஓவியா said...


    சாமி சாகுமா?


    இன்றைய ஆன்மிகம்?

    சாமி சாகுமா?

    குஜராத் மாநிலம் துவார கையில் உள்ள கிருஷ்ணன் கோயிலில் கொடி மரம் (துவஜஸ்தம்பம்) இல்லை. இந்தக் கோயில் கருவறை யில் கண்ணபிரான கரிய நிறத்துடன், நான்கு கரங்க ளோடு, வெள்ளி மஞ்சத்தின் மீது நின்ற கோலத்தில் மேற்குமுகமாக அருள் புரிகிறார். இங்கு கிருஷ்னை கருவறைக்குள் சென்று துளசி இலைகளை வைத்து வழி படலாமாம்.

    சரி, தலைக்கொரு சீயக் காய் தாடிக்கொரு சீயக் காயா? மற்ற இந்துக் கோயில் களில் பக்தர்கள் கருவறைக் குள் சென்று வழிபடத் தடை ஏன்? அப்படி என்றால் தீட்டுப்பட்டு விடும் சாமி செத்துவிடும் என்பானேன்?

    Read more: http://viduthalai.in/e-paper/84079.html#ixzz37aiAVIOn

    தமிழ் ஓவியா said...


    அழித்தாக வேண்டும்


    மக்களைச் சுயமரியாதை இல்லாமல் செய்து மிருகங்களாக்கி நாய், பன்றிகளைவிட இழிவாய் நடத்த ஆதாரமாய் இருக்கும் மதம் எது வானாலும் அதை அழித்தாக வேண்டும்.
    (குடிஅரசு, 18.12.1927)

    Read more: http://viduthalai.in/page-2/84081.html#ixzz37aiUx6nF

    தமிழ் ஓவியா said...


    காமராசருக்குச் செய்யும் உண்மையான மரியாதை எது? எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் கருத்து


    சென்னை, ஜூன் 15_ அனைவருக்கும் உணவு; அனைவருக்கும் கல்வி என்னும் புரட்சிகரமான கொள்கையின் அடிப் படையில் தமிழகத்தில் நல்லாட்சி வழங்கிய பெருந்தலைவர் காமராசர் அவர்களின் பிறந்த நாளில், அவருக்கு விடு தலைச் சிறுத்தைகள் தமது செம்மாந்த வீர வணக்கத்தைச் செலுத்து கிறது.

    பெருந்தலைவரின் பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாளாக தமிழக அரசு கடைப்பிடித்து வரு கிறது. அதேவேளையில் கல்வி தனியார்மயமாகவும் வணிகமயமாகவும் மாறி, ஏழை எளிய மக்களுக்கு எட்டாக் கனியாகி வரு கிறது. கல்வியே சிறந்த செல்வம், கல்வியே மீட் சிக்கு வழி என்னும் உண்மையை அறிந்த நிலையிலும், எளிய மக்கள் எளிதில் பெற முடியாத அளவுக்கு கல்வியை மிகப் பெரும் விலைகொண்ட பொருளாக மாற்றி வரு வது பெரும் கவலையளிப் பதாக உள்ளது.

    மழலை யர் வகுப்புகளிலிருந்தே பல்லாயிரக் கணக்கில், இலட்சக் கணக்கில் கட் டணம் செலுத்தி கல்வி பெற வேண்டிய அவலம் பெருகியுள்ளது. அரசு பள்ளிகள் மற்றும் கல் லூரிகள் தனியார் கல்வி நிறுவனங்களோடு போட்டி போட இயலாத நிலையும் ஏற்பட்டுள்ளது. இந்த முரண்பாடுகள் புதிய தலைமுறையின ரிடையே மிகப்பெரும் முரண்பாடுகளையும் இடைவெளிகளையும் ஏற்படுத்தி வருகிறது.

    இந்நிலையில், மழலை யர் மற்றும் தொடக்கப் பள்ளிகளில் தமிழ்வழிக் கல்வி அளிக்க முடியாது என்றும் தனியார் கல்வி நிறுவனங்கள் வெளிப் படையாக சவால் விடும் நிலை ஏற்பட்டுள்ளது. இத்தகைய போக்குகள் தமிழகத்தின் எதிர்காலத் தைப் பற்றிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன.

    எனவே, தமிழக அரசு கல்வித் தளத்தில் ஏற் பட்டுள்ள தனியார்மயம் மற்றும் வணிகமயத்தைக் கட்டுப்படுத்துவதற்கும் நெறிப்படுத்துவதற்கும் முன்வர வேண்டும். தனி யார் கல்வி நிறுவனங் களை அரசின் நிர்வாகக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர வேண்டும். ஆசிரியர்கள், பேராசிரி யர்கள், பணியாளர்கள் ஆகியோருக்கு அரசே ஊதியம் வழங்கவேண் டும்.

    கல்விக் கட்டணத் தையும் அரசே நிர்ணயிக்க வேண்டும். இத்தகைய சீர் திருத்த நடவடிக்கைகளை அரசு மேற்கொள்வதன் மூலம் ஏழை எளிய மக் களும் எளிதில் கல்வி பெற வாய்ப்புகள் உருவா கும். அத்துடன், தமிழக அரசின் இலவசத் திட்டங் கள் அனைத்தையும் விலக்கிக்கொண்டு கல் வியை முழுமையாக கட் டணமில்லாமல் வழங்கு வதற்கு முன்வரவேண்டும்.

    இதுவே பெருந்தலைவர் காமராஜருக்கு செலுத்தும் உண்மையான மரியாதை யாக அமையும் என்று விடுதலைச் சிறுத்தைகள் தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறது.

    - இவ்வாறு எழுச்சித் தமிழர் தொல்.திருமாவள வன் தெரிவித்துள்ளார்.

    Read more: http://viduthalai.in/page-5/84078.html#ixzz37aoyjPEX

    தமிழ் ஓவியா said...


    பிராணி வதை தடுப்புச் சங்கத்தின் கவனத்திற்கு...


    அறிவியல் விஞ்ஞானம் பெருகிவிட்ட இன்றைய காலகட்டத்தில் ஊருக்கு ஊர் கொள்ளை சம்பவங்களும், சங்கிலிப் பறிப்பு சம்பவங்களும் நடந்து வருகின்றன.

    காவல்துறையினரும் வலைவீசி தேடிப் பிடித்து களவுபோன பொருள்களை மீட்கின்றனர். களவுபோன பொருளை மீட்க காவல்துறையை நாடினாலும், காவல்துறையினரைக் காட்டிலும் தருமபுரி மாவட்டத்தில் உள்ள கொல்லாபுரியம்மனைத்தான் பலரும் நம்புகின்றனராம்.

    ஆம்! தருமபுரியில் இருந்து திருவண்ணாமலை நோக்கிச் செல்லும் வழியில் 18 கி.மீ. தொலைவில் உள்ள கொல்லாபுரியம்மன் சாமியிடம்தான் தங்கள் வீட்டில் திருடுபோன பொருள் கிடைக்கவேண்டும் என்று வேண்டிக்கொண்டு உயிருடன் ஒரு கோழியை கோயில் அருகே உள்ள ஒரு மரத்தில் சாகும் வரை தூக்கில் போட்டுவிட்டுச் சென்றால், திருடுபோன பொருள் மற்றும் திருடனும் கிடைத்துவிடுவான் என்பது ஆன்மிக நம்பிக்கையாக இருந்து வருகின்றதாம்.

    இந்த நம்பிக்கையின்படி சென்னை, பெங்களூரு, சேலம், மதுரை ஆகிய பகுதிகளில் இருந்துகூட கொல்லாபுரியம்மனை தேடி வந்து கோழியைத் தூக்கிலிடுகின்றனராம்.

    அதேபோல திருடுபோன பொருள் கிடைத்துவிட்டால் மீண்டும் கோயிலுக்கு வந்து, பூஜை செய்து கொல்லாபுரியம்மனுக்கு நன்றி செலுத்த வேண்டும் என்பது ஆன்மீக நம்பிக்கையாக உள்ளது.

    இந்த ஆன்மிக நம்பிக்கை கொல்லாபுரியம்மனின் புகழ் லாரி ஓட்டுநர்கள் மூலம் வெளி மாவட்டம், வெளி மாநிலங்கள் வரை பரவியுள்ளதால் நாள்தோறும் திருடுபோன பொருள்கள் கிடைக்கவேண்டும் என்று கோழிகளை தூக்குபோடுவது ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறதாம்.

    இதனால் கோழிகள் தூக்குபோடும் பகுதி சுகாதாரம் கெட்டு துர்நாற்றம் வீசுகிறது. இதனால் சுகாதாரக் கேடு ஏற்பட்டு நோய்கள் பரவி வருவதாக அப்பகுதியினர் கூறுகின்றனர்.

    Read more: http://viduthalai.in/page-8/84086.html#ixzz37apnJrCx