Search This Blog

3.11.13

திராவிடர் கழகத்தைக் கலைத்துவிடுகிறேன்! எப்போது? -பெரியார்

மக்களை மனிதத் தன்மையுள்ளவராக்க எந்த விலை கொடுக்கவும் தயாராவோம்!

பேரன்புமிக்க தலைவர் அவர்களே! தாய்மார்களே! பெரியோர்களே! தோழர்களே! நான் விருதுநகருக்கு வந்து இரண்டாண்டுகளாகின்றன. இந்தக் குறள் மாநாட்டுக்கு வந்த எங்களை இங்கே அழைத்து கழக தோழர்கள் பேசுமாறு கேட்டுக் கொண்டனர். நான் வந்து சென்ற இந்த இரண்டாண்டு இடைக் காலத்தில் உங்கள் திராவிடர் கழகம் சம்பந்தமான கூட்டங்கள் பல நடந்திருக்கக் கூடும். எனவே நான் திராவிடர் கழகத்தைப் பற்றியும், அதன் கொள்கை களைப் பற்றியும் புதிதாக ஒன்றும் கூறத் தேவையில்லை என்றே கருதுகிறேன்.

இந் நாட்டில் அநேக கட்சிகளிருக்கின்றன. கட்சி என்பது அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்ற சில திட்டங் களை வகுத்துக் கொண்டு அதை மக்களிடம் சென்று, கூறி ஓட்டு கேட்டு மந்திரிகளாவதும், பட்டம் பதவிகள் வகிப்பதுமாகும். திராவிடர் கழகம் அவ்வித அரசியல் கட்சிகளில் சேர்ந்ததல்ல. அது ஒரு இயக்கமாகும். இயக்கமென்பது குறிப்பிட்ட அதிகாரத்துக்கோ, பட்டம் பதவிகளுக்கோ மட்டும் பணியாற்றுவதென்பது இல்லாமல் மக்களிடம் சென்று பயனுள்ள காரியங்களை எடுத்துக்கூறி, அவர்களின் நல்வாழ்வுக்கு அடிகோலுவதும், அந்நிலைக்கு மக்களிடம் மனமாற்றமடையும் வகையில் பிரசாரம் செய்வதுமாகும். மந்திரிகளாவதோ அல்லது பட்டம் பதவி பெறுவதோ என்ற கொள்கை மட்டுமிருப்பவர்கள் மக்களுக்குச் சீக்கிரத்தில் நல்லவர்களாகி விடலாம்; தேச பக்தர்களாக, தியாகிகளாக, தீரர்களாக ஆகிவிடக்கூடும். ஏனெனில் மக்களை அந்த சந்தர்ப்பத்தில் அதாவது ஓட்டு வாங்கும் நேரத்தில், என்ன கூறினால் உற்சாகமடைந்து நம்பிவிடுவார்களோ அவைகளை வாய் கூசாது பிரமாதமாக உறுதி கூறிவிட்டு, பின்னர் பதவியில் போய் அமர்ந்தவுடன் தாங்கள் கொடுத்த வாக் குறுதியில் ஒரு சிறிது கூட நடைமுறையில் செயலாற்ற முடியாமைக்குக் கொஞ்ச மேனும் வெட்கமோ, நாணமோ கொள்ளா மல் பதவி மோகத்திலேயே உழன்று கிடப்பார்கள்.

ஆனால் இயக்கம் என்று சொல்லக் கூடிய தன்மை யிலுள்ள நாங்கள் அதாவது திராவிடர் கழகத்தார் மக்க ளிடம் குடிகொண்டுள்ள மேற்கண்ட மடமைகளை ஒழிக்க மனதில் ஒன்றும் மறைத்து வைக்காமல் வெளிப்படையாக நாங்கள் மனதில் எண்ணுவதைக் கூறி வருகிறோம். இத னால் மக்களின் முன்னிலையிலே நாங்கள் விரோதிகளாக தேசத் துரோகிகளாக, கடவுள் துரோகிகளாகக் கருதப்பட்டு, கற்பிக்கப்பட்டு வருகிறோம். எந்த மக்கள் சமுதாயம், மனிதத்தன்மையடைய வேண்டுமென்று கருதி உழைக் கிறோமோ அதே மக்கள் எங்களைத் தவறாகக் கருதுமாறு சில வஞ்சகர்களால் கற்பிக்கப்பட்டு வந்திருக் கிறோம். எனினும் நாங்கள் இதற்காக அஞ்சி ஒதுங்கிவிட வில்லை ஏன்? எங்களுக்கு மக்களின் பொய்யான ஆதரவு இன்றே கிடைத்து அதன் மூலம் அரசியல் ஆதிக்கம் பெற வேண்டுமென்ற எண்ணத்திலிருப் பவர்களல்ல. எனவேதான் எங்கள் மருந்து சற்று கடுமையாயினும் நிதானமாகவே அது நிரந்தரமான பலன் தரட்டும் என்று நானும் என்னைச் சார்ந்த தோழர்களும் பொதுப் பணியாற்றி வருகிறோம். இதுதான் திராவிட இயக்கத்திற்கு உள்ள முக்கிய பண்பாடாகும்.

திராவிட இயக்கமும் ஓர் அரசியல் கட்சியாக வேலை செய்திருந்து, மந்திரி பதவிகளில் அமர்ந்திருந்தால்கூட இன்றைய நிலையில் மக்களுக்கு ஒரு நன்மையும் பயக்க முடியாது. அஸ்திவார மில்லாத கட்டிடம் எப்படி சரிந்து விழுந்து விடுமோ அதே போன்று மக்கள் சமுதாயத்திலே ஆயிரமாயிரம் ஆண்டுகளாக வேரூன்றி வளர்ந்து வந்துள்ள மடமைகளைப் பகுத்தறிவற்ற தன்மையை , மூடப்பழக்க வழக்கங்களை, வைதீக மனப்பான்மையை, ஜாதி மதவெறியை, அறவே ஒழித்து அனைவரையும்  அறிவுள்ளவர்களாக்காதவரையில் எப்பேர்பட்ட ஆட்சியா யிருப்பினும் அது நீடித்து இருக்க முடியாது; நாட்டிலும் அமைதி நிலவ முடியாது. ஏன்? அமைதியில்லா விடத்தில் அறிவு நிலைத்திருக்க முடியாதல்லவா? இதற்கு ஆதாரமாக நாம் கண்கூடாகக் கண்டு விட் டோமே. சுயராஜ்யம் வந்த பின்னர்தானே, சுயராஜ்யம் வாங்கித் தந்தவர் என்று எந்த கூட்டம் புகழ் பாடிற்றோ, அதே கூட்டத்தைச் சேர்ந்த ஒருவன் காந்தியாரைச் சுட்டுக் கொன்று விட்டான். அரசியல் அதிகாரம் கைக்கு வந்து அதற்கு அடிப்படையாக வேண்டிய அறிவுடைமை இல்லாததின் பலனல்லவா இது? எனவே தான் நமக்கு உண்மையான சுயராஜ்யம் வர இன்னும் சில ஆண்டுகள் காலதாமதம் ஆனாலும், மக்கள் பகுத்தறிவு பெற வேண்டுவதே முதலாவதான முக்கிய கடமை என்பதைத் திராவிடர் கழகம் வலியுறுத்திக் கூறி பணியாற்றி வருகிறது.

திராவிடருக்கு முக்கியம் வேண்டுவது எது? திராவிடர் யார்? என்று கேட்கும் போது நாட்டை ஆண்ட நாகரிக மக்களாகிய திராவிடர்கள் இன்று சூத்திரர்களாய், பஞ்சமர்களாய், அடிமைகளாய் வாழும் நிலைக்கு வழிவகுத்துள்ள இதிகாசங் களும், கதைகளும், புராணங்களும் அறவே அழிக்கப்பட வேண்டும். மேல்ஜாதி கீழ்ஜாதி, ஏழை, பணக்காரன், மோட்சம், தலைவிதி, என்பன போன்ற மூடக் கற்பனைகள் மனித சமுதாயத்திலிருந்து மறைய வேண்டும். பொதுவாக பார்ப்பனீயத்துக்கு அடிமைப்பட்டு வாழும் இழி நிலை வெகு விரைவில் ஒழிக்கப்படவேண்டும்.

தவிர, திராவிடர் யார், ஆரியர் யார் என்பதை நான் ரத்தப் பரீட்சை அடிப்படையாகக் கொண்டு கூறவும் முன் வரவில்லை. ஆனால் திராவிட பெருமக்களாகிய நம்மை சூத்திரன், பஞ்சமன் என்றும், இங்கே பிழைப்புக்கு ஓடிவந்த அந்நியர்களான பார்ப்பனர்கள் மேல் ஜாதிக்காரர்கள் என்று சட்டமும் சாஸ்திரமும் கூறுகின்றன. இதனால் நமக்கென்ன. நஷ்டம் என்று சிலர் கேட்கக் கூடும் அந்த மேல்ஜாதிக்காரன் என்ற காரணத்தாலேயே பார்ப்பனர்களுக்குச் சமுதாயத்தில் தனிச் சலுகை. அவனுக்கும் உழைப்புக்கும் சம்பந்தமே யில்லை. ஆனால், அதே சமயத்தில் அவர்களுக்குத்தான் உல்லாச சல்லாப வாழ்வு. 100-க்கு 99 பேர் அவர்கள் கல்வி கற்றுள்ளார் கள். நம்மில் 100-க்கு 10 பேர் கூட சரிவரக் கல்வி கற்கும் வசதியில்லை. இவைகளுக்குக் காரணம் பார்ப்பனர்களின் உயர் ஜாதி என்று கூறப்படும் தன்மையல்லவா? இவ்வநீதியை எங்களைத் தவிர வேறு யார் இதுவரை தட்டிக் கேட்டனர். கேட்காவிட்டாலும் எங்களுக்கு ஆதரவாகிலும் கொடுத்த வர்கள் யார்? இன்னுங் கூறுவேன்; எங்களைக் காட்டிக் கொடுத்து விபீஷணர்கள் போன்று அரசியல் ஆதிக்க வேட்டையாடும் சுயநலமிகள் தானே நமது சமுதாயத்தில் காணப்படுகின்றனர். எனவே திராவிடர் இயக்கம் மேற்கொண் டுள்ள தொண்டு மிகவும் மகத்தானதாகும். நாயன்மார்கள், ஆழ்வார்கள், ரிஷிகள், மகான்கள் காலத்தில் கூட கவலைப் படாது விடுத்த பெரும் பிரச்னையைக் கழகம் மேற் கொண்டு பாடுபட்டு வருகிறது.

மக்கள் சமுதாயத்திலே யார் யார் தாழ்ந்திருக்கின்றனரோ அத்தனை பேருக்கும் பாடுபடுவதுதான் கழகக் கொள்கையே யன்றி, சர்க்காரைக் கவிழ்ப்பதோ, அன்றி அவர்களுடன் போட்டி போட்டு ஓட்டு வேட்டையாடுவதோ கழகக் கொள்கை யல்ல. நான் இதைக் கட்சித் தலைவன் என்ற முறையில் பல சந்தர்ப்பங்களில் வலியுறுத்திக் கூறி வந்துங்கூட சிலர் வேண்டு மென்றே எங்கள் மீது தவறான எண்ணத்தைப் பொய்யுரை களைக் கூறி வருகின்றனர். இப்பேர்ப்பட்ட பித்தலாட்டக் காரர்களின் போக்கைக் கண்டு பரிதாபப் படுவதைத் தவிர வேறென்னதான் செய்வது?

1949ஆம் ஆண்டாகிய இந்த விஞ்ஞான காலத்திலுமா நாம் மடமைக்கு அடிமைப் பட்டிருப்பது என்று கேட்கிறேன். இதைப்பற்றி காங்கிரஸ் திராவிடருக்குச் சற்றேனும் கவலை வேண்டாமா? பார்ப்பானுக்கு நாம் இவ்வாறு அடிமைப் பட்டிருப்பது லாபமாகவும், கொண்டாட்டமாகவுமிருக்கலாம். சற்றெனும் தன்மானமுள்ள திராவிடர்கள் நாம் ஏன் மற்றவனுக்கு அடிமைப்பட்டிருக்க வேண்டும் என்று சிந்தித்துத் தானே தீருவார்கள். நாம் என்றைக்குத்தான் இந்த இழி நிலையிலிருந்து மீளுவது?

சுய ராஜ்யம் வந்த பின்னால் கூட பார்ப்பனர், பறையன், சூத்திரன், மேல் ஜாதி, என்பவை மேலும் மேலும் வளர்க்கப்படுவதா? எனவே நம் மக்கள் இன்ப வாழ்வு பெற வேண்டுமானால் மக்களை முதலில் மனிதத் தன்மையுள்ள வர்களாகச் செய்ய வேண்டும். அதற்கு வேண்டுவது நம்மைப் பிடித்துள்ள மடமைகள், சாஸ்திரங்கள், கடவுள் பேரால் சுரண்டும் தன்மைகள், புராணங்கள், வர்ணாஸ்ரம வைதீகக் கொடுமைகள், ஜாதி மத வெறிகள் உடனடியாக ஒழிக்கப்பட வேண்டும்.

அன்பர்களே! இக் காரியங்களில் நாம் வெற்றிபெற அதிக விலை கொடுக்க வேண்டியவர்களாக இருக்கிறோம். ஏனெனில் நமது எதிரிகள் இன்று மிகுந்த செல்வாக்குப் பெற்றவர்களாகளிருக்கிறார்கள். அச்செல்வாக்கு அவர்களுக்குக் கிடைத்ததற்குக் காரணம் நம்மிடையேயுள்ள சில ஆரிய அடிமைகளின் துரோகச் செயலென்றே கூறுவேன். எனினும் அச்செல்வாக்கைச் சிதறடிக்க நம்மால் முடியும். அந்த உறுதி எனக்குண்டு. குறைந்தது 5 அல்லது 10 ஆண்டுகளில் அதைச் செய்து முடிப்பேன். எனினும் நான் மேலே குறிப்பிட்டுள்ளதைப் போன்று அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும்.

அந்த அதிக விலை என்பது என்ன? திராவிடர்களாகிய நாம் இந்துக்களல்ல என்று பகிரங்கமாக பிரகடனம் செய்ய வேண்டுவதே யாகும். இந்து மதந்தான் ஜாதி மத பிரிவுகளை, வர்ணாஸ்ரமத்தை வலியுறுத்தி நிற்கச் செய்கிறது. ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று வாழ்ந்த சமுதாயத்தில் பல ஜாதி, பல கடவுள்கள் மலிந்து மக்களை மாக்களாக்கி விட்டது. அதன் பேராலுள்ள ஆதாரங்களுக்கும் நமக்கும் இருந்து வரும் தொடர்பு அறவே அகற்றப்படவேண்டும். இவைகள் ஒழிந்த பின்னரே மக்கள் சமுதாயத்தில் மறுமலர்ச்சி என்னும் பகுத்தறிவு உதயமாகும். நல்லாட்சியும் நிறுவ முடியும். அந்நிலை உண்டாக்கப்படாதவரை நல்லாட்சி என்பது ஏட்டளவிலும், அதற்கு மாறான காட்டுமிராண்டித்தனமான ஆட்சியே நடைமுறையிலுமிருந்து வரும். இது உறுதி. எனது 35 ஆண்டின் பொதுநலத் தொண்டிலிருந்து காணப்படும் அனுபவம் வாயிலாக இதைக் கூறத் துணிந்தேனேயல்லாது கேவலம் வீம்புக்காக அல்ல என்பதை எனது காங்கிரஸ் திராவிடர்கள் இனியாவது கருத்தில் பதியவைத்துக் கொள்ள வேண்டும்.

தோழர்களே. திராவிடர் கழகம் மேற்கொண்டுள்ள பொறுப்பான இக் காரியங்களுக்குக் காங்கிரஸ் திராவிடர்கள் ஆதரவு ஆதிக்கத்தில் நாங்கள் பங்கா கேட்கிறோம்? அல்லது அதற்காகவா இயக்கத்தை நடத்துகிறோம்? பின் எதற்காக காங்கிரஸ் திராவிடர்களுக்கும் - திராவிடர் கழகத்தினருக்கும் மனக்கசப்போ வேற்றுமையோ சண்டையோ இருக்க வேண்டும்? அவர்கள் சூத்திர-பஞ்சம பட்டத்தை சர்-திவான் பகதூர் பட்டம் போல ஏற்று மகிழ்ச்சியடைந்து வருகிறார்கள். நாம் அவ்விழி நிலையிலிருந்து உணர்வு பெறுங்கள் என்று கூறுகிறோம். இது ஒன்றைத் தவிர்த்து வேறு எந்த வகையில் காங்கிரசுக்குத் திராவிடர் கழகம் விரோதமாகும் என்று கேட்கிறேன்.

நான் கூறும் பஞ்சம-சூத்திரபட்டம் ஒழிந்தால், ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் முதல் காமராஜர், சிவசண்முகம், போன்றவர்களுக்கும் எங்களுக்கும் சேர்த்துத்தானே மனிதத் தன்மை உண்டாகப் போகிறது. நாங்கள் மட்டுமா சூத்திரப்பட்டமோ, பார்ப் பனீயமோ ஒழிவதால் பயனடையப் போகிறவர்கள்?

இன்னுங் கூறுவேன். பார்ப்பனர்கள் கூட ஓரளவுக்கு திருந்தி விடுவார்களே. மனிதத்தன்மையை மறைத்து, மடமையை வளர்த்து அதன் பேரால் வயிறு வளர்ப்பவர் களுக்குத் தவிர மற்றவர்களுக்குத் திராவிடர் கழகம் ஒரு போதும் விரோதமாயிருக்க முடியாதே. இதை இன்னும் தோழர் காமராஜர் போன்றவர்களே உணரவில்லையென்றால் நம்நாடு என்றுதான் உண்மையான விடுதலை யடையமுடியும். இப்படியே நாம் காலமெல்லாம் கட்சிச் சண்டையிலேயே காலந்தள்ளவா பிறந்தோம்? நமது பிற்கால சந்ததியாகிலும் சற்று மான ரோஷமுடன் வாழவேண்டாமா? இதைச் சிந்தித்துப் பார்க்கச் சக்தியற்றவர்கள் எங்கள் மீதா பாய்வது? எங்களையா காட்டிக் கொடுப்பது? கொஞ்சமேனும் நன்றியிருக்க வேண்டாமா? இவ் வநீதிகள் ஒழியும்வரை திராவிடர் இயக்கமும் இருந்தே தீரும்.

எப்படி இந்து மதமும், அதைச் சார்ந்துள்ள ஆபாசங்களும் ஒழிய வேண்டுமென்று கூறுகிறோமோ, அதேபோன்று அரசியலிலும், நம் நாடு தனியாகப் பிரிந்தாக வேண்டும். இல்லையேல் நம் நாட்டுக்கும் மக்களுக்கும் ஒருக் காலும் நிம்மதியான வாழ்வு கிட்டாது.

நம் நாட்டு வாணிபம் வடநாட் டான் ஆதிக்கத்திலிருப்பதா? வெள்ளையர் ஆதிக்கம் ஒழிந்தது என்றால் அந்த இடத்தில் வடநாட்டானும், பார்ப்பானுமா உட்கார்ந்து சவாரி செய்வது?

சென்ற மாதம் நம் நாட்டுக்கு வந்து சென்ற கனம் பட்டேல் அவர்கள் வெளிப்படையாகக் கூறிவிட்டாரே, தென்னாட்டை நம்பியே நாங்களிருக்கிறோம்; நாட்டைப் பிரிக்கும் எண்ணம் வேண்டாம் என்று. மற்றவர் நன்மைக்காக நாம் மடிவதா? இதற்குப் பெயர் தேச பக்தியா? அடிமைப்புத்தியா? நம் மந்திரிகளுக்கோ சிறிதேனும் அரசியல் ஞானமேயில்லை. தங்களுக்குக் கிடைத்துள்ள பட்டங்களையும், பதவிகளையுமே பெரிதாகக் கருதி அதைக்காப்பாற்ற கோஷ்டி சண்டைகள் போட்டுக் கொள்வதற்கே காலமெல்லாம் சரியாய்விடுகிறது. அவர்கள் பகுத்தறிவு கொண்டு மக்களுக்கு நன்மைகளைச் செய்ய எப்படி அவகாச மிருக்கப்போகிறது?

நான் 1938ஆம் ஆண்டிலேயே கூறியிருக்கிறேன் நம் நாட்டின் இயற்கை வளம் மற்ற நாடுகளை விட எவ்வளவு அதிகம் என்பதையும், அதன் காரணமாக நாம் தனித்து நின்று ஆட்சி செய்ய முடியுமென்றும், அவ்வித உண்மையான சுயராஜ்யம் கிடைத்தால், மேல்ஜாதி, கீழ்ஜாதி முதல் ஏழை, பணக்காரத்தன்மை வரை அடியோடு ஒழிக்கப்பட்ட சமதர்ம ஆட்சியாக செய்து விட முடியுமென்று. நமக்கு 1500 மைல் கடலோரமிருக்கிறது. நாம் பரம்பரை பரம்பரையாக கடல் கடந்து வாணிபம் செய்திருக் கிறோம். பேரறிஞர்களைப் பெற்றிருக்கிறோம். வீரமுடன் வாழ்ந்திருக் கிறோம். நீதி, நேர்மை, ஒழுக்கம், அறிவு, அன்பு ஆகியவை களை அடிப்படையாகக் கொண்டு நம் நாடு சீரும் சிறப்புடனுமிருந்திருக்கிறது. இவ்வித இயற்கை வளங் கொண்ட நாடு இன்று கஞ்சிக்கு, சோற்றுக்குக் காற்றாய்ப் பறப்பதா?

திரைகடலோடியும் திரவியந்தேடு என்று கூறியது நம் மூதாதையர்களா? அல்லது வடநாட்டவர்களும் பார்ப்பனர்களுமா என்று கேட்கிறேன். அவன் கடலில் பிரயாணம் செய்வதையே, பாபம் என்று தானே கூறியிருக்கிறான். அவர் களுக்குக் கடல் ஏது? மேல் நாடுகளிலிருந்து வரும் சாமான்கள் வட நாட்டு வழியாக வரும்வகையில் ஏற்பாடு செய்து கொண்டதால் இன்று எல்லா ஆதிக்கமும் அவர்களுக்கு?

நேராக நம் நாட்டுக்கு வரும் நிலையை உண்டாக்கி விட்டால் அவர்கள் ஆதிக்கத்துக்கு நாம் உட்பட்டிருப்பது ஒரு விநாடியில் ஒழிந்து விடாதா? இதைத்தானே திராவிடர் கழகம் கூறுகிறது? இதைத் தேசத்துரோகம் என்று சிறிதேனும் அரசியல் ஞானம் இருப்பவன் கூற முடியுமா? இதற்காக காங்கிரஸ் திராவிடர்கள் ஏன் பாடுபடக்கூடாது? ஏன் நம் நாடு அந்நியர்களால் சுரண்டப்பட வேண்டும்? இதை இளைஞர்களாவது கவனிக்க வேண்டாமா? இவைகளைச் சிந்திக்காமல் எங்களை விரோதிகளாகக் கருதுவது சரியா?

நான் இன்று இம் மேடையில் மீண்டும் கூறுகிறேன். நாளைக்கே காங்கிரசில் தீர்மானம் போடட்டும், இனி இந்நாட்டில் பார்ப்பான், பறையன், சூத்திரன், ஏழை, பணக்காரன் வித்தியாசங்களிருக்காது; நம் நாடு எந்த அந்நியர்களின் ஆதிக்கத்துக்கும் உட்பட்டு இருக்காது; திராவிட நாடு என்று கூற மனமில்லா விட்டாலும் தென்னாடு தனித்து நின்று அதன் அரசியலை நடத்தும் என்று. அதற்கடுத்த நாளே திராவிடர் கழகத்தைக் கலைத்துவிடுகிறேன். எங்களுக்கு மேற்கூறிய கொள்கை தவிர வேறு எந்த எண்ணமும் கிடையாது என்று உறுதி கூறுகிறேன்.

----------------------3.4.1949 அன்று விருதுநகரில் தந்தைபெரியார் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு, (விடுதலை 07.4.1949)

15 comments:

தமிழ் ஓவியா said...


செய்தியும் சிந்தனையும்

கடவுளா? நதியா?

செய்தி: வரும் காலங்களில் வெள்ளப் பெருக்கிலிருந்து கோதார்நாத் சிவன் கோவிலைக் காப்பாற்ற வேண்டுமானால் நடுவே ஓடும் மந்தாகினி ஆற்றின் வழியை மாற்றியமைக்க வேண்டும் என்று தொல் பொருள் ஆய்வுத் துறை வலியுறுத்தியுள்ளது. சிந்தனை: ஆமாம், நாட்டுக்கு நதியைவிட குத்துக் கல்லுக் கடவுள்தானே முக்கியம்? ஆமாம் கடவுள் தான் சர்வசக்தி வாய்ந்தவரா யிற்றே - அவரைக் காப்பாற்றிக் கொள்ள அவராலேயே முடியாதா?

தமிழ் ஓவியா said...


கணக்கு மேதை ராமானுஜமும், கற்க வேண்டிய உண்மைப் பாடங்களும்!


- ஊசி மிளகாய்

விஜயபாரதம் மலரில் பருத்தியூர் டாக்டர் கே. சந்தானராமன் என்பவர் கணித மேதை (கும்பகோணம்) ராமானுஜன்பற்றி ஒரு வாழ்க்கை வரலாற்றுக் கட்டுரை எழுதியுள்ளார்.

(ராமானுஜன் வாழ்க்கைப்பற்றிய வரலாற்றுத் திரைப்படத்தை பெரியார் படத்தின் இயக்குநர் ஞானராஜசேகரன் அவர்கள் தயாரித்து முடித்துள்ளார்).

இந்த ராமானுஜன் ஒரு ஏழை பார்ப்பனர் குடும்பத்தில் பிறந்தவர்; திண்ணைப் பள்ளிக் கூடத்தில் படித்தவர். அய்ந்தாம் வகுப்பு (பொதுத் தேர்வு அப்போது உண்டு) தஞ்சை மாவட்டத்திலேயே முதலாவதாக தேர்வாகி, ஸ்காலர்ஷிப் பெற்றுப் படித்தவர்.

பள்ளிப் பருவத்தில் கணக்கில் ஆர்வம் கொண்டு சிறந்தவராகத் திகழ்ந்த இவர் அங்கும் கணக்குப் புலி என்றால் கும்ப கோணம் அரசுக் கல்லூரியில் இண்டர் மீடியட் வகுப்பில் சேர்ந்து ஒரு முறை அல்ல; மூன்று முறை (இருமுறை கும்பகோணம் கல்லூரி, ஒருமுறை பச்சையப்பன் கல்லூரியில்) தோல்வி அடைந்தார்.

பிறகு குமாஸ்தா வேலையில் சேர்ந்து குடும்ப வாழ்வை நடத்தினார்.

இவருக்கு வாழ்வளித்தவர்கள் பச்சை யப்பன் கல்லூரி பேராசிரியர் சிங்காரவேலு, கேம்ப் பிரிட்ஜ் பல்கலைக் கழக ஹார்டி என்ற கணிதப் பேராசிரியர், லிட்டில்வுட் என்ற பேராசிரியர் மற்றும் கில்பர்ட்டி வாக்கர்.

1916ஆம் ஆண்டு இராமா னுஜத்திற்கு அவரின் கணித அறிவைப் பாராட்டி கேம் பிரிட்ஜ் பல்கலைக் கழகம் அவருக்கு பி.ஏ. பட்டம் வழங்கியது. (சென்னைப் பல்கலைக் கழக ஆராய்ச்சி மாணவராக இருந்தபோது அங்கே கிடைக் காத பட்டம் கேம்பிரிட்ஜில் கிட்டியது).

தகுதி, திறமை முதல் வகுப்பு தேர்வு மார்க்குகளே அறிவின் எல்லை என்பவை போலித் தனங்கள் என்பதை இந்த சம்பவங்கள் காட்டவில்லையா?

வெள்ளைக்காரர்களுக்கு - இருந்த மனிதநேயம், சொந்த நாட்டு ஜாதிக்காரர் களுக்கோ, பணம், நிலபுல வசதி படைத்த வர்களுக்கோ இல்லையே! வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களும் அதன் பேராசிரியர் களும் காட்டிய பரிவு, கொடுத்த அங்கீகாரத் தின் முன்பு சுய ஜாதி அபிமானம், தேசாபிமானம் எம்மாத்திரம்?

அது மட்டுமா?

லண்டன் புறப்படுவதற்கு முன்னால் ராமானுஜன் குடுமியை எடுத்துவிட்டு கிராப்புத் தலையாக மாற்றிக் கொண்டார்! ஆங்கிலேயரைப் போல் கோட்டும், சூட்டும், டையும் அணிந்தார்!

பூஜை, புனஸ்காரங்களைவிடவில்லை (அதையும் இவர் எழுதியுள்ளார்)

அப்படியெல்லாம் இருந்து வாழ்ந்த அவருக்குரிய இறுதி மரியாதை அவர் சாவின் போது அந்த ஜாதி யினர், சொந்த உறவுகளால் கிடைத்ததா? அதுதான் வேதனை - வெட்கம்!

1920ஆம் ஆண்டு ஏப்ரல் 20ஆம் நாள் இராமனுஜன் மறைந்தார். ராமானுஜன் இறுதிச் சடங்குகளில் அவர் உற வினர் வரவில்லை; காரணம் கடல் கடந்தார் (இராமன் கடல் கடந்துதானே இராவ ணனிடம் சண்டை போட்ட தாக இராமாயணம் கூறுகிறது; அது தோஷ மில்லையா? அதனால்தானோ என்னவோ இராமன் சரயு நதியில் வீழ்ந்து மாண்டான் போலும்!) என்பதற்காக யாரும் கலந்து கொள்ளவில்லை. ஜாதி வெறி - சனாதனம் படுத்திய பாட்டைப் பார்த்தீர்களா?

கட்டுரையாளர் எழுதுகிறார்:

நம் பெருமாள் செட்டியார் என்பவரும், சென்னை கலெக்டரும் (வெள்ளைக்காரர்) இறுதிக் கடன்களை இயற்றினர்!

நாடே இன்று போற்றுகின்ற இராமானு ஜத்தை உலகறியச் செய்தது அவரது ஜாதியல்ல; மதமல்ல, அறிவுதான் என்பதும், அதனை அங்கீகரித்து உதவியவர்கள் வெள்ளைக்காரர்கள் - அந்நியர்கள் என்பதும், இறுதி மரியாதை செலுத்தக் கூட ஜாதியும், சனாதனமும் முன் வராமல் இதயமற்ற முறையில் நடந்து கொண்டன என்பதும்தான் கற்க வேண்டிய பாடம் அல்லவா?

தமிழ் ஓவியா said...

ஆரிய ஆதிக்கத்தின் சனாதனத்தை வீழ்த்திட இந்தியா கைபர்ஸ்தான் ஆகாமல் தடுத்து நிறுத்தப்பட திருச்சி திராவிடர் எழுச்சி மாநாட்டுக்கு வாரீர்! வாரீர்!!


எழுச்சியா, வீழ்ச்சியா? எதை நோக்கி நீங்கள்?

தமிழர் தலைவர் அழைக்கிறார்

காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்வதா? மீறினால் வீட்டுக்கு வீடு கறுப்புக் கொடிகளை ஏற்றுவீர்!

நவம்பர் 9ஆம் தேதி திராவிடர் கழகத்தின் சார்பில் திருச்சியில் நடைபெற உள்ள திராவிடர் எழுச்சி மாநாட்டின் அவசியத்தை விளக்கி திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: திருச்சியில் நடைபெறவிருக்கும் திராவிடர் எழுச்சி மாநாட்டிற்கு (நவம்பர் 9ஆம் தேதி சனிக்கிழமை) இன்னும் 5 நாள்கள்தான் உள்ளன.

மோடி மஸ்தானின் அரசியல் மாநாடல்ல!

திருச்சி தோழர்கள் கடுமையாக உழைக்கின்றனர்; காரணம் இம்மாநாடு, மற்ற மோடி மஸ்தான் வித்தைக்கான அரசியல் மாநாடல்ல.

கோடி கோடியாக செலவழித்து, தேடித் தேடிப் பிடித்து உயர் ஜாதி ஊடகங்களின் ஒத்துழைப்புடன் அவர் களை ஊதி ஊதி விளம்பரம் தந்து, மீண்டும் ஒரு மனுதர்ம ராஜ்யத்தை நாட்டில் உருவாக்கக் கால்கோள் விழாவுக்கான கடப்பாறை வீர தீர சூரர்கள் ஏற்பாடு செய்தது போன்ற மாநாடு அல்ல.

தமிழ் ஓவியா said...


மாறாக, எளிய முறையில், சிக்க னத்தோடு சீமான்களும், பூமான் களும், பன்னாட்டுத் தொழில் அதிபர் களின் பண மழை கொட்டி ஏற்பாடு செய்யப்படும் மாநாடு அல்ல.

மாநாட்டின் நோக்கம்

காலங் காலமாய் அடக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட ஓரினம் தனது உரிமைக் குரலை உயர்த்தி, அறிவு ஆசான் தந்தை பெரியார்தம் அரிய தொண்டால், திராவிடர் இயக்க தலைவர்களான டாக்டர் சி. நடசனார், சர். பிட்டி தியாக ராயர், டாக்டர் டி.எம். நாயர், சர். ஏ.டி. பன்னீர்செல்வம், அறிஞர் அண்ணா போன்ற மறைந்தும் மறையாமல் நம் நெஞ்சங்களில் என்றும் நிறைந்துள்ளவர்களின் அரிய வழிகாட்டுதல்களால் உருவான புத்தாக்கம் பொலிவுடன் உலா வருவதைக் கண்டு, அதை நலிவுறச் செய்து, காணாமற் போகச் செய்யவே நச்சு ஆறான நயவஞ்சக ஆரியம் காவி உருவத்தில், மக்களின் அதிருப்தியை மூலதனமாக்கி, மீண்டும் வர்ண தர்மத்தினைக் கோலோச்ச திட்டமிடுவதை மக்களுக்கு எடுத்துக் கூறி, எச்சரிக்கை மணி ஒலிக்கும் ஏற்றமிகு மாநாடுதான் திராவிடர் எழுச்சி மாநாடு! தலைமுறைகளைக் காக்கும் மாநாடு!!

ஆரிய சனாதனத்தைக் கொண்டு வர சூழ்ச்சி!

மதச் சார்பின்மை, சமதர்மம், ஜனநாயகம் என்பதனைப் பெயர்த்தெறிந்துவிட்டு, அந்த இடத் தில் ஆரிய சனாதனத்தைக் கொண்டு வர கடும் முயற்சி நடந்து வருகிறது ஆரியம்! ஹிந்துத்துவ ராஜ்யம், குலதர்மம் என்ற மனுதர்மத்திற்கு மகுடம் சூட்டும் ராஜ்யம், ஜனநாயகத் திற்குப் பதில் ஹிட்லரின் பாசிசத்திற்கு பராக் பராக் கூறி பட்டாபிஷேகம் நடத்த முயலும் ராஜ்யம் - ஆகியவை களைக் கொணர, ஏமாந்த மக்களைப் பயன்படுத்திடும் ஜாதிவெறி, மதவெறிச் சக்திகளின் சூழ்ச்சிக்குப் பலியாகப் போகிறீர்களா என்று மக்களை எழுப்பிடும் எழுச்சி மாநாடு!

திராவிடர்களே, நீங்கள் கடந்த பல நூற்றாண்டுகளில் இழந்தவைகளை கடந்த ஒரு நூற்றாண்டில் பெரியார் சகாப்தத்தில் பெற்றுத் தந்த உரிமைகளை தக்க வைத்துக் கொள்ளாமல், இழந்து விட்டு, மீண்டும் நிரந்தரமான தஸ்யூக்களாக மிலேச்சர் களாக, சூத்திரர் - சற்சூத்திரர்களாக, பஞ்சமர்களா கவே ஆக, விழி திறந்தே குழியில் விழப் போகிறீர்களா?

கைபர்ஸ்தான் - எச்சரிக்கை!

இளைஞர்களே உங்களுக்கு வரலாறு தெரியாது என்ற மமதையில் 18 வயது வாக்குரிமையாளர்களான புதிய தலை முறையினரை, காவி மதப் பரப்புதலுக்குப் பலியாக்கிடத் திட்டம்! தற்போது நிலவும் அதிருப்தியையே நம்பிக்கை முதலாகக் கொண்டு, மோ(ச)டி வித்தைகளை காட்டி ஜெயித்து விட்டு, பிறகு நாட்டையே காவிக் கோலமாக்கி கைபர்ஸ்தான் ஆக்கிட திட்டுமிட்டு சூழ்ச்சிகளுக்குப் பலியாகாமல் தடுத்திட - விழிப்புணர்வு என்னும் சங்கொ லிப்பதற்கே கூட்டப்படும் முற்போக்காளர்கள் கூட்டும் முழுமையான முயற்சிதான் திருச்சியில் ஏற்பாடாகியுள்ள திராவிடர் எழுச்சி மாநாடு!

இந்தியாவா - ஹிந்துயாவா?

அனைத்து முற்போக்கு மனிதநேய சிந்தனையாளர் களும், இந்தியாவைக் காப்போம்; இந்தியா காணாமற் போய், அவ்விடத்தில் ஹிந்துயா வந்து அமர்ந்து விட்டால், ஒவ்வொரு பெரும்பான்மை மக்களின் நெற்றி யிலும் சூத்திரப் பட்டத்தை பச்சை குத்திக் கொண்டு, குற்றேவல் செய்யும் அடிமைகளின் ராஜ்யத்தில் வாழுபவர் களாலும், சிறுபான்மையினர் அவர்களைவிட மிகவும் கேவலமாக, மதிக்கப்படாமல் மிதிக்கப்படும் நிலைக்கும் ஆளாகும் அபாயம் வரவிருக்கிறது!

தமிழ் ஓவியா said...

இன்றைய தற்காலிக அதிருப்திகள் -குறைகளை எடுத்துக்காட்டி, நம்மை நிரந்தர அடிமைகளாக, தாசர்களாக, பெண்களை தீவிர அடிமைகளாக ஆக்கும் வர்ணாசிரம வன்கொடுமை ஆட்சியை அமைக்க சூழ்ச்சித் திட்டங்கள் உருவாவதைச் சுட்டிக் காட்டி, எச்சரிக்கை செய்தெழுப்பும் குரலாக (Wake up Call) திருச்சி திராவிடர் எழுச்சிமாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வாரீர் திராவிடர்களே!

எனவே, குடும்பம் குடும்பமாக வாருங்கள்! கூடுவோம், நாடுவோம், நல்லதோர் எதிர் காலத்தை, உருவாக்குவோம்! எழுச்சியா? வீழ்ச்சியா எதை நோக்கி நீங்கள்? - இதைத் தான் திருச்சி மாநாடு திக்கெட்டும் பறைசாற்ற விருக்கிறது.

வாரீர்! வாரீர்!! திராவிடர்களே, இது மலைபோல் காட்டப் பெறாத; மாறாக, சிற்றுளி போல் சிறப்புடன் ஒளிரும் மாநாடு - எனவே திரண்டு வாரீர்!

கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்

சென்னை
3.11.2013

தமிழ் ஓவியா said...


தமிழா எது புனிதம்?


பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா

செய்தொழில் வேற்றுமை யான் என்றார் வள்ளுவனார்!

பிறக்கின்ற மனிதரிலே ஜாதி என்ற அடையாளம் இருப்பதுண்டா?

ஆதியிலே தொழில் முறையில் ஜாதி எனும் குறிப்பைத் தந்தார்.

பின்னாளில் ஜாதியிலே பேதம் தந்தார்

நால் வருண பேதமதை சுய நலத்தால்

மனுதர்மமெனும் பெயரில் எழுதி வைத்தார்.

பிரம்மாவின் சிரசினிலே தோன்றி னோம் என்று

பிறவியிலே தாங்கள் தான் உயர்ந் தோரென்றார்

உழைக்காமல் பிறர் உழைப்பில் வாழ்ந்து கொண்டு

தான் உயர்ந்தோர் என்பதிலே நியாயம் உண்டோ?

மற்றவரை சூத்திரராய் தீண்டாதாராய்

நடத்துவதில் கடுகளவும் தர்மம் உண்டா?

கோவில்களை கட்டுபவன் சூத்திரனா?

சிலை வடிக்கும் சிற்பியும் சூத்திரனா?

சூத்திரர்கள் வெட்டாத குளங்களுண்டா?

உழைப்பதற்கு மட்டும்தான் சூத்திரர்கள்

உழைக்காமல் எப்பொருளும் எமக்கு சொந்தம்

என்கின்ற பார்ப்பனனை அழைத்து வந்து

நம் வீட்டின் நடுவினிலே அமர வைத்து

அவன் வேண்டுகின்ற பொருளனைத்தும் வாரித் தந்து

அவன் காலில் சாஷ்டாங்கதெண்டனிட்டு

புரியாத அவன் மொழியை காதில் கேட்டு

புனித மென்று குடியுங்கள் கோமியத்தை

என்கின்ற அவன் சொல்லை நம்பி நாமும்

கோமியத்தை குடிப்பதனால் புனிதம் உண்டா?

இதை நன்கு சிந்திப்பீர் தமிழர்களே!

நம் வீட்டில் நடத்துகின்ற நிகழ்ச்சிகளுக்கெல்லாம்

பார்ப்பனன் வந்தால் தான் புனிதமென்று நினைப்பீரானால்

நாம் நம்மை சூத்திரராய் ஏற்பதாகும்.

இனியேனும் நமக்கு சுய மரியாதை வேண்டுமானால்

நம் வீட்டு நிகழ்ச்சிகளை நாமே செய்வோம்!

க.ஜெயராமன் (எ) பெரியார் தாசன்
ஜீ.மூக்கனூர்பட்டி.

தமிழ் ஓவியா said...

தீ,,.பா...வளி...யா?


தீபாவளி வந்து போய்விட்டது. வழக்கம்போல பட்டாசு ஆலையில் வெடிவிபத்து - தஞ்சை மாவட்டம் பந்த நல்லூரில் பட்டாசுத் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தின் காரணமாக விலை மதிக்கவே முடியாத ஒன்பது மனித உயிர்கள் கொடூரமான முறையில் பலியாகின. 15 பேர் படுகாயம்.

அதையும் தாண்டி தீபாவளி வெடி பட்டாசுகள் வெடித்து தீ விபத்துகள், காயங்கள் என்ற செய்திகள்.

எந்த கிருஷ்ண பரமாத்மாவும், தம் பக்தர்களை ஓடோடி வந்து காப்பாற்றவில்லை.

தீபாவளியை முன்னிட்டு ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அருளாசி என்று தினமணி சாங்கோபாங் கமாக செய்தி வெளியிட்டுள்ளது.

கொலைக்குற்றத்தில் சிறைத் தண்டனை பெற்று, இப்பொழுது ஜாமீனில் திரிந்து கொண்டிருந்தாலும், அவாள் கண்ணோட்டத்தில் சுவாமிகள்தான் - அவர் வாய்மூலம் வெளிவருவது அருளாசிதான்.

அந்த அருளாசியில் வழக்கமான பகவான் - அசுரன் கதைகளைச் சொல்லியிருக்கிறார்.

இதில் ஒரு வேடிக்கை வினோதம் என்னவென்றால், காஞ்சி வரதராஜப்பெருமாள் கோவில் மேலாளர் சங்கர ராமன் கொலை வழக்கில், இதே ஜெயேந்திர சரஸ்வதி கைது செய்யப்பட்டதும் இதே தீபாவளி (2004) நாளில் தான் - அவாள் கண்ணோட்டப்படி சொல்லுவதாக இருந் தால், அந்த அசுர வதம் தீபாவளி நாளில்தான் நடந்திருக்கிறது.


வரதராஜப்பெருமாள் கோவில் மேலாளர் சங்கரராமன் கொலை

அவர் செய்த பாவம் சாதாரணமானதல்ல - கொலை வழக்கு அவர்மீது! பழைய மனுதர்மக் காலமாக இருந் தால், பார்ப்பானின் சிகையை (மயிரை) கத்தரித்து சொத்துகள் சகிதமாக வெளியூருக்கு அனுப்பி வைத் திருப்பார்கள். (அப்படி ஒரு காலம் வரவேண்டும் என்ப தற்காகத்தான் பி.ஜே.பி. மறுபடியும் ஆட்சி அதிகாரத் துக்கு வரவேண்டும் என்று அக்கிரகாரக் கும்பலும், அவாள் ஊடகங்களும் அங்கப்பிரதட்சணம் செய்து கொண்டிருக்கின்றன).

தீபாவளி மலர்களை வெளியிட்டுள்ள கல்கி உள்ளிட்ட இதழ்கள் வழக்கம்போல காஞ்சி சங்கராச்சாரியின் அருளாசியை வெளியிட்டு தங்கள் அடையாளங்களைக் காட்டிக் கொண்டுள்ளனர்.

தினமணியோ தீபாவளி சிந்தனைகள் என்ற தலைப்பில் தலையங்கமே தீட்டியுள்ளது.

தமிழ் ஓவியா said...

வேறு வழியில்லாமல் ஓர் உண்மையை அதில் ஒப்புக்கொண்டு எழுதியுள்ளது.

தீபாவளி தமிழர் திருநாள்தானா என்று கேட்டால், நாயக்கர்களின் ஆட்சிக் காலத்திற்கு முன்னால் நமது தமிழ் இலக்கியங்களில் தீபாவளி என்ற பண்டிகையைப்பற்றி எந்தவிதக் குறிப்பும் காணப்படவில்லை என்பது உண்மை!

(அப்பாடா! முதன்முதலாவதாக ஓர் உண்மையைக் கொண்டு தலையங்கமே தீட்டியிருக்கிறது தினமணி) ஆனால், கடந்த ஆறு நூற்றாண்டுகளாக தமிழர்தம் பண்பாட்டோடு கலந்துவிட்ட பண்டிகையாக தீபாவளி மாறிவிட்டிருக்கும் நிலையில், இந்தப் பண்டிகை தேவைதானா- என்பது தேவையற்ற விவாதம் என்ற உண்மையை ஒரு பக்கத்தில் ஒப்புக்கொண்டு அதற்குப் பிறகு என்ன... அந்த ஆனால்?

தீபாவளி தமிழர் பண்பாட்டோடு கலந்துவிட்டது என்கிறாரே - எந்த அடிப்படையில்? காரணத்தைக் கூறவில்லையே!

இன்னும்கூட தீபாவளியைக் கொண்டாடாத பகுதிகள் இருக்கத்தான் செய்கின்றன. பல நூற்றாண்டு காலமாக ஒரு பண்டிகை கொண்டாடப்பட்டதாலேயே பண்பாட் டோடு கலந்துவிட்டது என்று கூறலாமா - தீபாவளிக்குக் கூறப்படும் அந்த அசுரன் யார்? வரலாற்று ஆசிரியர்கள் அசுரன், அரக்கன், ராட்சதன் என்று புராணங்களிலும், இதிகாசங்களிலும் கூறப்படுபவர்கள் எல்லாம் திராவிடர் கள்தான் என்று தெளிவாக - திட்டவட்டமாகக் குறிப்பிட்டுள்ளார்களே!

அப்படி இருக்கும்பொழுது எப்படி இந்த இனத்தின் பண்பாட்டோடு அது கலந்துவிட்டதாகக் கூற முடியும்?

பக்தி என்னும் மயக்க மருந்துக்குப் பலியான மக்களின் தொடையில் திரிக்கப்பட்ட கயிறுதானே இது?

தை முதல்நாள் தமிழ்ப் புத்தாண்டு என்பது தமிழர் களின் பண்பாட்டோடு கலந்த ஒன்றுதானே - அதற்கு ஏன் அக்கிரகார வட்டத்தில் எதிர்ப்பு?

விவசாயத்தோடு சம்பந்தப்பட்டதால் தை முதல் நாளில் தமிழர் விழாவாகப் பொங்கல் கொண்டாடப்படுவதை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. கார ணம், விவசாயம் பாவத் தொழில் என்று மனுதர்மம் கூறு கிறதே!

ஆக, அவர்கள் பண்பாடு என்று தூக்கி நிறுத்துவது ஆரியப் பார்ப்பனப் பண்பாட்டைத்தான். அதனை திராவிடர்களாகிய தமிழர்கள் உணருவார்களே யானால், இந்தத் தீபாவளியெல்லாம் இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.

தமிழ்ப் புத்தாண்டு என்று கூறி கிருஷ்ணன் என்ற ஆண் கடவுளுக்கும், நாரதன் என்ற ஆண் கடவுளுக்கும் பிறந்த பிள்ளைகள் என்று எழுதி வைத்து, அதனடிப்படையில்தான் வருஷப் பிறப்பு என்று சாதிக்கும் ஆபாச அருவருப்புக் கும்பல்தானே தினமணி, துக்ளக் பிராண்டுகள்!

உண்மையை உரைப்போர் குறைவு - அதைவிட உண்மையை ஒப்புக்கொள்ளும் திராணிபெற்றோர் அதைவிடக் குறைவு - அதேநேரத்தில், பொய்களுக்கு வசீகரம் உண்டு; எளிதில் தீப்பிடிக்கும்(Flammable) பண்டமாயிற்றே - அதனால்தான் உண்மையைப் பேசுப வர்கள் பல இன்னல்களுக்கும், தடைகளுக்கும் ஆளாக வேண்டியுள்ளது.

குந்திக்கும், சூரியனுக்கும் பிள்ளைகள் பிறந்தது என்று கூறுவதும் - அந்த மகாபாரதக் கதைகளை - விஞ்ஞான சாதனமான தொலைக்காட்சியின்மூலம் மக்களின் அறிவை நாசப்படுத்துவது நடந்துகொண்டு தானே இருக்கிறது.

ஆனாலும், ஒன்று, உண்மை ஒருபோதும் தோற்காது - பகுத்தறிவும் வெற்றி இலக்கை அடையாமலும் உறங்காது - இது உறுதி! உறுதி!! உறுதி!!!

தமிழ் ஓவியா said...

தீபாவளி: பட்டாசால் விபரீதம்!

கூரை வீடுகள் சாம்பல்

கெங்கவல்லி, நவ.3- கெங்கவல்லி அருகே, பட்டாசு விழுந்ததால், இரண்டு கூரை வீடுகள் தீப்பிடித்து எரிந்து சாம்பலானது.கெங்கவல்லி அருகே, ஒதியத்தூர் வடக்கு காட்டுக் கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார். அவருக்குச் சொந்தமான விவசாய தோட்டத்தில், கூரை கொட்டகை அமைத்து குடியிருந்து வந்தார்.

நேற்று பகல், 12.10 மணியளவில், பட்டாசு வெடித்தபோது, அதிலிருந்து வெளியான தீப்பொறி, கூரை கொட்டகையின் மீது விழுந்து, தீப்பிடித்து எரிந்தது. தகவலறிந்த நாகராஜ் தலைமையிலான, கெங்கவல்லி தீயணைப்பு அலுவலர்கள், விரைந்து சென்று, மேலும் தீ பரவாமல் தடுத்தணைத்தனர்.

எனினும், தீ விபத்தில், கூரை வீடு எரிந்து சாம்பலானது.அதேபோல், வீரகனூர், நல்லூரைச் சேர்ந்த சின்னசாமி என்பவரது குடியிருப்பு வீட்டின் அருகில், ராக்கெட் பட்டாசு வெடித்தபோது, அதன் தீப்பொறி கூரைவீட்டின் மேல் விழுந்து, மேற்கூரை தீயில் கருகியது.

மூன்று வீடுகள் சாம்பல்: ரூ.5 லட்சம் பொருட்கள் சேதம்

நாகப்பட்டினம், நவ.3- நாகையில் நேற்று முன் தினம் இரவு பட்டாசு வெடிக்கும் போது ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று வீடுகள் எரிந்து சாம்பலானது.

நாகை, செக்கடித் தெருவைச் சேர்ந்தவர் திருநாவுக்கரசு (60); கூலித் தொழிலாளி. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நேற்று முன்தினம் மாலை, அப்பகுதியில் உள்ளவர்கள் பட்டாசு வெடித்தனர். ராக்கெட் வெடி ஒன்று திருநாவுக்கரசு வீட்டின் கூரை மீது விழுந்ததில், வீடு தீப்பற்றி எரிந்தது. தீ, அருகில் இருந்த வெங்கடேசன், இளையராஜா ஆகியோர் வீடுகளுக்கும் பரவியது.

மூன்று வீடு களிலும் இருந்த 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களும் தீயில் சேதமடைந்தன. நாகை, தீயணைப்பு நிலைய கோட்ட அலுவலர் துரை மாணிக்கம் தலைமையிலான, தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று, தீயை அணைத்தனர். தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களை மாவட்ட ஆட்சியர் முனுசாமி நேரில் சந்தித்து ஆறுதல் கூறி, பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்தினருக்கும், தலா 5 ஆயிரம் ரூபாய், 5 கிலோ அரிசி, ஒரு லிட்டர் மண்ணெண்ணெய், வேட்டி, சேலைகளை நிவாரணமாக வழங்கினார். சம்பவம் குறித்து நாகை டவுன் காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

சாக்குக் கிடங்கில் தீ விபத்து

திருப்பூர் குறிஞ்சி நகர் மெயின் வீதியில் உள்ள தனியார் சாக்குக் கிடங்கில் நேற்று இரவு திடீரெனத் தீப்பிடித்தது.

இதில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து சேதமடைந்தன. அருகில் இருந்த சில வீடுகளுக்கும் தீ பரவியது. தகவல் அறிந்த தீய ணைப்புத் துறையினர் வந்து மேலும் பரவாமல் தீயை அணைத்தனர்.

அப்பகுதியில் பட்டாசு வெடித்தபோது தீப்பொறி பட்டு சாக்குக் கிடங்கில் தீப்பிடித்ததாகக் கூறப் படுகிறது. உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை.

இனியன் said...

திராவிடர் கழகத்தைக் கலைத்துவிடுகிறேன்..தந்தை பெரியார்
என்ற தலைப்பில் அய்யா உரையை சிறு புத்தகமாக வெளியிடுங்கள் அருமையான உரை...இந்றைய காலகட்டத்தேவைஅது

தமிழ் ஓவியா said...


பதிப்பாளர் பார்வையில் பெரியார்



இத்தனை ஆண்டுகள் பதிப் பாளர் வாழ்வில் வர்த்தகரீதி யாக வெற்றிகரமானவராக இல்லையே என்ற வருத்தம் ஏற்பட்டதுண்டா?

வியாபாரத்துக்கு எந்தப் புத்தகம் உதவும் என்று ஒருபோதும் நினைத்ததில்லை. கிராமத்தி லிருந்து தனது முதல் புத்தகத்தை யாரும் போடுவதற்கு வழியில்லாமல் யார் எடுத்துக் கொண்டு வருகிறார்களோ அவர்களது புத்தகங்களைப் போடவேண்டும் என்பதே எனது கொள்கை. இதுவரை ஆயிரத்துக்கும் மேல் தலைப்புகளில் புத்தகங்கள் போட்டுள்ளேன். நூல்களை ஒரு ரசிகனாக, ஒருவனாகவே வெளியிட்டு வருவ தால் நான் ஒரு வியாபாரியாக ஆக முடிய வில்லை. ஒரு எழுத்தாளனின் முதல் எழுத்தை எப்படியாவது போட்டுவிட வேண்டும் என்று நினைப்பேன். எல்லாரும் போடும் நூல்களைப் போடுவதில்லை என் பதை நான் குறிக்கோளாகவே வைத் துள்ளேன். திரு.வி.கவையும், பெரி யாரையும், காந்தியையும் படிப்பவன், பொருள் சேர்க்க வேண்டும் என்று நினைக்க மாட்டான்.

சிலப்பதிகாரம், தொல்காப் பியம் மற்றும் திருவாசகத்தின் காலம் குறித்து தமிழுணர்வாளர் களின் உணர்வுகளுக்கு எதி ரான கருத்துகள் உங்களிடம் உள்ளனவே?

திருவாசகத்தின் காலம் குறித்த ஒரு விவாதத்தில் மறைமலை அடிகள் அப்போது மூன்றாம் நூற்றாண்டுதான் என தொடர்ந்து வலிந்து எழுதி வந்தார். அதைப்பற்றி அப்பாதுரையிடம் விவாதித்தபோது, அவர் தமிழ்க் கடலையே குற்றம் சொல்கிறாயா என்றுதான் என்னிடம் கேட்டார். அவருக்கு ஒரு கருத்து இருந்தும் அதை அவர் வெளிப் படுத்தவே இல்லை. அறிஞர்களுக்குள்ளும் பக்தி உணர்வு உண்டு என்பதை அப்போது தான் புரிந்து கொண்டேன்.

ஒரு புதிய கருத்தைக்கேட்டால் அதைப் பரிசீலிக்க வேண்டும். அதை நான் பெரியார் வழியாகவே கற்றுக்கொண்டேன். மனிதனை உயர்த்தாத எதையும், மனிதனுக்கு நம்பிக்கை கொடுக்காத எதையும் அவர் எதிர்த்தார். அவர் வழியில் வந்ததால் எந்தப்புதிய கருத் துக்கும் என்னிடம் ஆதரவுண்டு. பெரியார் யாரையும் மேற்கோள் காட்டியதில்லை. சிக்கலுள்ள ஆயிரம் சமூகச் சிக்கல்களைப் பெரியார்தான் எடுத்துக்கொண்டார். மகாத்மா காந்தி அச்சப்பட்ட இடத்தில் பெரியார் நுழைந்தார். பெரியாரின் சிந்தனை கள் இன்னும் புதுமையாகவே இருக்கின்றன. அவரிடம் எதன்மீதும் கண்மூடித்தனமான பக்தி இல்லை. பக்தி இருக்கும் இடத்தில் ஆய்வுகள் உண்மையாக இருக்காது என்பதே எனது எண்ணமும்கூட.
- வெள்ளையாம்பட்டு சுந்தரம்

(தமிழில் வரலாறு, தொல்லியல் சார்ந்த நூல்களை பதிப்பித்தவர் - ஆயிரத்துக்கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்டவர்)

நன்றி: தி இந்து 2.11.2013

தமிழ் ஓவியா said...

கேள்வி: சிற்றுந்தில் இரட்டை இலை அரசு தவிர்த்திருக்கலாம்தானே?

பதில்: அது இரட்டை இலை இல்லை. பசுமையைக் குறிப்பிடும் நல்ல நோக்கத்தில் நான்கு இலைகள் கலைநயத்துடன் வரையப்பட்டுள்ளது என்கிறார் போக்குவரத்துத் துறை அமைச்சர். எம்.ஜி.ஆர். நினைவுச் சின்னத்தில் இரட்டை இலை, பிகாஸஸ் குதிரையின் உயரே எழும் சிறகுகளாக மாற முடியுமென்றால் சிற்றுந்தில் இரட்டை, இரட்டை இலைகள் பசுமையைக் குறிப்பதில் வியப் பில்லைதான்! அமைச்சர் காணும் கலைநயம் பலருக்கு ஜனநாயகப் பண்புகளின் கொலைக் களமாகத் தோன்றுவதிலும் வியப்பில்லை!
(நன்றி: கல்கி 10.11.2013)

தமிழ் ஓவியா said...


பார்ப்பனர்



நம்நாட்டில் பார்ப்பானுக்கு வேலை கொடுப்பது ஆட்டுப் பட்டிக்கு நரியைக் காவலுக்கு வைப்பதுபோல் தான் ஆகும். குற்றப் பரம்பரையை எப்படி நடத்துகிறோமோ அப்படி நடத்தப் படவே வேண்டியவர்களாவார்கள் இந்தப் பார்ப்பனர்.
(விடுதலை, 12.11.1960)

தமிழ் ஓவியா said...


போலிக் கண்ணீர் மோடி


பி.ஜே.பி.யின் பிரதமருக்கான வேட்பாளர் நரேந்திரமோடி, அக்டோபர் 27ஆம் தேதி பாட்னாவில் நடந்த பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்ளச் சென்றார். அப்பொழுது நிகழ்த்தப் பட்ட குண்டுவெடிப்பில் ஆறு பேர் பலியா னார்கள், 83 பேர் காயம் அடைந்தார்கள்.

அந்த வன்முறை கண்டிக்கத்தக்கதே; காங்கிரஸ் உட்பட அனைத்துக் கட்சிகளும் அதனைக் கண்டிக்கவே செய்தன.

அந்தக் கூட்டத்தில் உரையாற்றிய நரேந்திர மோடி, அந்தச் சம்பவம் பற்றி ஒரு வார்த்தை பேசவில்லை; கண்டனம் தெரிவிக்கவில்லை; பலியானவர்களுக்கு அனுதாபம் தெரிவித்துக் கூடப் பேசவில்லை.

இப்பொழுது அவருக்கு மனதில் ஆறாத் துயரம் வெடித்துக் கிளம்பி, அதிலிருந்து விடு படவே முடியாத ஆற்றாமையால், பீகார் மாநிலத் திற்கு ஓடோடிச் சென்று, இறந்தவர்களின் குடும்பத்துக்கு ஆறுதலைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

பொதுவாகப் பார்ப்பவர்களுக்கு - நல்ல அணுகுமுறைதானே - மனிதத் தன்மை என்பது இதுதானே என்று தோன்றக் கூடும்.

அதே நேரத்தில் மோடியைப் பற்றிய முழு வடிவத்தைத் தெரிந்தவர்களுக்கு, இது சுத்த நடிப்பு - அரசியல் பாசாங்குதனம் - பொது மக் களை ஏமாற்ற வடிக்கும் கிளிசரின் கண்ணீர் என்பதை, எளிதிற் புரிந்து கொள்ளலாம்!

குஜராத்தில் 2000-க்கும் மேற்பட்ட சிறுபான்மை மக்கள் படுகொலை செய்யப்பட்ட தற்கு மூலகாரணமாக இருந்தவர் முதலமைச்சர் மோடி என்பது உலகத்துக்கே தெரிந்த உண்மை.

மூன்று நாட்கள் காவல் துறைக்கும், அரசு அதிகாரிகளுக்கும், ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட சங்பரிவார்க் கும்பலுக்கும் முழு உரிமை கொடுத்து, சிறுபான்மையினரை வேட்டையாடி முடியுங்கள் - காவல்துறை உங்களைக் கண்டு கொள்ளாது என்று உத்தரவிட்ட புண்ணிய வான் இந்த மோடியல்லவா!

கருவுற்ற பெண்களைக்கூட குத்திக் குடலைக் கிழித்து சிசுவை நெருப்பில் தூக்கிப் போட்டு கும்மாளம் போட்ட காட்டு விலங் காண்டிகளை இதற்கு முன் உலகம் கண்ட துண்டா? இந்த அருவருப்பான சாதனை மோடி அரசில்தான் நிகழ்த்தப்பட்டது.

அதனால்தான் உச்சநீதிமன்ற நீதிபதி, மோடியை நீரோ மன்னனுக்கு ஒப்பிட்டார் என்பதை மறந்து விடக் கூடாது.

குஜராத்தில் நடைபெற்ற இனப்படு கொலைக்கு, நியாயமாக பொறுப்பேற்று முதல் அமைச்சர் மோடி பதவி விலகி இருக்க வேண்டாமா?

குறைந்தபட்சம், வருத்தமாவது தெரிவித் திருக்க வேண்டாமா? மாறாக என்ன சொல்லு கிறார்? காரில் பயணம் செய்யும் போது நாய்க் குட்டி அடிபடும் பொழுது ஏற்படும் அளவுக்கு வருத்தப்படுவதாகச் சொல்லுகிறார் என்றால், அவரைப் பற்றிய மதிப்பீட்டைப் புரிந்து கொள்ளலாம்.

சொந்த வீடுகளை இழந்து அகதிகள் முகாம்களில் முடங்கிக் கிடந்த சிறுபான்மை மக்கள் இனவிருத்தி வேலையில் ஈடுபட்டுக் கொண்டு இருக்கின்றனர் என்று பேசிய மிகப் பெரிய நாகரிகத்துக்குச் சொந்தக்காரர் இவர்.

தனக்குப் பிடிக்காதவர், சொந்த கட்சியில் இருந்தாலும், போட்டுத் தள்ளக் கூடியவர்; (எடுத்துக்காட்டு அமைச்சர் ஹரேன் பாண் டியா)

தன்னை நம்பி இருந்த அதிகாரிகளைக்கூட தன்மீது பழி வரக் கூடாது என்பதற்காகக், காட்டிக் கொடுத்த கண்ணியவான் இந்த மோடி.

இப்படிப்பட்ட ஒருவர், குண்டு வெடிப்பில் பலியானவர்களுக்காக, நேரில் சென்றார்; கண்ணீர் மல்கினார் என்ற செய்தியைப் படிக்கும் பொழுது, சிரிப்புதான் வருகிறது.

தேர்தல் நேரத்தில் மக்களை ஏமாற்றிடவும், கடந்த காலத்தில் அவர்மீதுவிழுந்த மரண வியாபாரி என்ற முத்திரை சாயத்தைக் கழுவிக் கொள்ளவும், இப்படியெல்லாம் நாடகம் ஆடு கிறார் என்பதைப் பொது மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

தமிழ் ஓவியா said...


இசைப்பிரியாவுக்கு நடந்த கொடூரத்திற்குப் பிறகும் காமன்வெல்த் மாநாட்டுக்கு இந்தியா செல்ல வேண்டுமா?


சென்னை, நவ. 4-இசைப்பிரி யாவுக்கு நடந்த கொடூரத்திற்குப் பிறகும் இலங்கையில் நடக்கும் காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்ற இந்திய பிரதிநிதிகள் செல்ல வேண்டுமா? என்று திமுக தலைவர் கலைஞர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து திமுக தலைவர் கலைஞர் நேற்று (3.11.2013) வெளி யிட்ட அறிக்கை வருமாறு:

பெயரே அழகு! அவள் முகமோ, குழந்தை முகம்! கல்லூரி சென்று வரும் குழந்தை என்று கூடச் சொல்லலாம். 27 வயதே நிரம்பியவள்! அவர் உலகத்தில் பிறந்ததற்கு, செய்த பாவம் விடுதலைப் புலிகளின் ஊட கப் பிரிவில் அவளும் ஒருத்தியாக தன்னை இணைத்துக் கொண்டது தான். விடுதலைப் புலிகள் இயக்கத் தின் தலைவர் பிரபாகரனின் 12 வயது மகன், பாலச்சந்திரனை சுட்டுக் கொலை செய்தது உள்ளிட்ட பல்லாயிரக் கணக்கான சிறுவர்களையும், பெண் களையும், முதியோர்களையும் கொன்ற கொடுமைகளுக்கு ராஜபக்சே பதில் சொல்லியே தீர வேண்டும்.

தமிழ்ப் பெண்கள் சிங்கள ராணு வத்தினரால் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டு, கொலை செய்யப் பட்ட காட்சிகளை வெளியிட்டுள்ள சேனல் 4 தொலைக்காட்சி நிறுவனம் தற்போது இசைப்பிரியா தொடர் பான காட்சிகளையும் படமாக்கி வெளியிட்டுள்ளது.

காமன்வெல்த் நாடுகளின் மாநாடு நடைபெறவிருக்கும் நேரத்தில், இசைப்பிரியா தொடர்பான காட்சி களை, அதே சேனல் 4 நிறுவனம் உலகம் முழுவதிலும் வெளிக் கொணர்ந்து நம்மையெல்லாம் தேம்பிப் புலம்ப வைத்துள்ளது. இந்தக் கொடுமையான காட்சியை, நம்முடைய நாட்டுப் பிரதமரும், வெளியுறவுத் துறை அமைச்சரும், ஏன் அந்தக் காமன்வெல்த் மாநாட் டில் இந்தியா கலந்து கொள்ள வேண் டுமென்று இன்னமும் குரல்கொடுத்து கொண்டிருப்பவர்களும் கண்ட பிறகும், அந்த மாநாட்டிலே கலந்து கொள்ள வேண்டுமென்று எண்ணு கிறார்களா? அதில் இந்தியா கலந்து கொண்டால், நாமெல்லாம் தமிழர் கள் தானா என்று சரித்திரம் சாப மிடாதா?

ஈழத்தில் நடந்த இனத் துடைப்பு நடவடிக்கைக்கும், மனித உரிமை மீறல்களுக்கும், வரலாறு கண்டிராத போர்க் குற்றங்களுக்கும் சுதந்திரமான தும், நம்பகமானதுமான சர்வதேச விசாரணை வேண்டும்; குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்; ஈழத் தமிழர் களுக்கு அவர்கள் விரும்பும் நியாயமான அரசியல் தீர்வை அவர்களே முடிவு செய்து கொள்ளும் வகையில், அய்.நா. மேற்பார்வையில் பொது வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும்; என்று நாம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

நெஞ்சை உலுக்கிடும் இந்த நிகழ் வுக்கு உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்திடும் வகையிலும், இலங்கையிலே நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட் டில் இந்தியா கலந்து கொள்ளக் கூடாது என்று இங்குள்ள தமிழர்களும், உலகெங்கிலுமுள்ள தமிழர்களும் எதிர்பார்க்கிறார்கள். என்ன செய்திடப் போகிறது இந்திய அரசு? இசைப்பிரியா வுக்கு நடைபெற்ற கொடூரத்திற்குப் பிறகும் இந்தியா இலங்கை செல்ல வேண்டுமா? இவ்வாறு கலைஞர் அறிக் கையில் கூறப்பட்டுள்ளது.