Search This Blog

27.11.13

சாணி கடவுள், அரசமரம், வில்வமரம், கல், படம், பொம்மை எல்லாம் கடவுள்கள் என்றால் என்ன நியாயம்?

கடவுள்கள் யோக்கியதை

கடவுள் என்றால் மூடநம்பிக்கைக்கு ஆளாகக் கூடாது; சாணி கடவுள், அரசமரம், வில்வமரம், கல், படம், பொம்மை எல்லாம் நம் கடவுள்கள் என்றால் என்ன நியாயம்? ஆறறிவு உள்ள மனிதனா இவ்வளவு காட்டுமிராண்டியாயிருப்பது?

கடவுள் வேண்டுமானால் இப்படி வைத்துக் கொள்ளுங்களேன். அந்தக் கடவுளுக்கு உருவம் கிடையாது. எங்கும் இருப்பார், பேர் இல்லாதவர் என்று வைத்துக் கொள்ளுங்கள். மகமதியரும் கிறிஸ்தவரும் அப்படித்தானே வைத்திருக்கிறார்கள்? ஒரு கடவுள் என்றுதானே எல்லோரும் பேசியிருக்கிறார்கள்? நம்மவர்களும் பேசியிருக்கிறார்கள். இருந்தும் எப்படி இவ்வளவு கடவுள்கள் உண்டாயின?

சுயமரியாதை இயக்கம் தோன்றியிராவிட்டால் இதுவரை மைல்கல், ஃபர்லாங்குக்கல் எல்லாம் சாமியாகியிருக்குமே! அவற்றிற்கு நாமம் போட்டு பொட்டு வைத்து மைலீசுவரர், ஃபர்லாங்கீசுவரர் என்றெல்லாம் சொல்லியிருப்பானே!

இந்தச் சாமிகளுக்குப் பன்றிமுகம், பாம்பு முகம் எல்லாம் எப்படி வந்தன? தோற்றமெல்லாம் குத்துகிற மாதிரி, வெட்டுகிற மாதிரி உள்ளதே; எதற்காக இந்தப் போக்கிரித்தனமான வேடம்? கடவுளுக்குப் பெண்டாட்டி எதற்காக? போதாது என்று வைப்பாட்டி, பள்ளி அறைத் திருவிழா, ஊர்வலம் வருவது, இவையெல்லாம் எதற்கு? இவற்றையெல்லாம் வெளிநாட்டிலே போய்ச் சொல்லிப் பாரேன். உன்னை காட்டுமிராண்டி என்பான்!


ஒருவன் சொல்கிறான்; கிருஷ்ணன் தங்கை அண்ணனிடம் சென்று "உலகத்திலிருக்கிற பெண்கள் எல்லாம் உன்னை அனுபவிக்கிறார்கள்; நான் அப்படிச் செய்ய முடியவில்லையே" என்கிறாள். அவனும் ஜெகநாதத்திற்கு வா என்கிறான். இதுதானே இன்றைக்கும் ஜெகநாதத்தில் இருக்கிறது? துரோபதை முதலியவர்கள் எல்லாம் அவன் தங்கைகள் என்று இன்னொருவன் சொல்கிறான்! துரோபதை யோக்கியதை எப்படி? சினிமாவிலே வேண்டுமானால் இப்படியெல்லாம் செய்யேன்!

ஆண் பிள்ளை சாமி பெண் பிள்ளை சாமி எல்லாவற்றிற்கும் கையிலே சூலாயுதம் வேலாயுதம் சக்தி - இவை எதற்கு? இப்படிச் சாமிகளே யோக்கியதையாக நடக்கவில்லையென்றால் மனிதன் எப்படி யோக்கியதையாயிருப்பான்? காசு பிடுங்கினாலும் பரவாயில்லை, நம்மை மடையனாக்கி விட்டானே, 1957-லே எப்படி நடந்து கொள்வது என்று வேண்டாமா? நமக்குச் சரித்திரம் இல்லை; பார்ப்பான் வருவதற்கு முன் நம்ம சங்கதியைக் காட்டுவதற்குச் சரித்திரம் இல்லையே! பார்ப்பான் வருவதற்கு முன்னாலே கடவுள் இருந்ததாகக் கதைகூட இல்லையே! பார்ப்பான் வந்த பிறகுதானே கடவுள் வந்தது? யாராவது மறுத்துச் சொல்லட்டுமே பார்க்கலாம்.

பாரதம், பாகவதம் போன்ற இவற்றிலே வருவதுதானே இன்றைக்குக் கடவுள் யோக்கியதை? பொண்டாட்டி, வைப்பாட்டி, ஆணும் ஆணும் கூடி பிள்ளை பெறுவது போன்றவை! என்ன அநியாயம்? இவற்றையெல்லாம் இன்னொரு நாட்டானிடம் போய்ச் சொன்னால் நம்மை மதிப்பானா? ஒழுக்கமுள்ள சாமி என்று ஒரு சாமியை யாராவது சொல்லட்டுமே! இராமாயணத்திலே வருகிற இராமன், அவன் மனைவி, வேலைக்கார அனுமான் எல்லாம் கடவுள்! இராமன் கடவுள் என்கிறதற்கு ஆதாரம் வேண்டாமா? எதிலே யோக்கியதையாக, நாணயமாக நடந்தான் என்று யாருக்கும் தெரியாது. 1957-லேயோ இராமாயணத்தைக் கடவுள் சம்பந்தமானது என்று நினைப்பது? பாரதத்திலோ எல்லாம் அயோக்கியர்களே! இன்றைக்கு எல்லோரையும் தெய்வீகத் தன்மையுள்ளவர்களாகச் செய்து வைத்திருக்கிறான்! பாரதத்தை ஒரு விபச்சாரிக் கதை என்றே சொல்லலாம். ஒருவனாவது அதிலே அவன் அப்பனுக்குப் பிறக்கவில்லையே! கண்டவர்களுக்குப் பிறந்தவர்கள் பங்கு கேட்டார்கள். கொடுக்க முடியாது என்ற சொல்லிவிட்டதாகக் கதை!

கதை நடந்தது என்று சொல்லவில்லை; குப்பைக் கதையை எழுதிவிட்டு அய்ந்தாவது வேதம், அப்படி இப்படி என்று சொல்லி நம்மை மட்டம் தட்டி வைத்திருக்கிறான் பார்ப்பான்.


இராமன் ஏன் காட்டுக்குப்போனான்? ஏன் அவன் தாயார் காட்டுக்குப் போகச் சொல்கிறாள்? கதைப்படி இராமனுக்கும் அவனப்பனுக்கும் சொத்தில் உரிமையில்லை. பரதனின் அம்மாவைக் கல்யாணம் பண்ணும்போதே இராச்சியத்தை அவளுக்குக் கொடுத்துவிட்டான். தசரதன் மரியாதையாக அவளுக்கே நாட்டைக் கொடுத்திருக்க வேண்டும். துரோகத்திற்குச் சம்மதித்ததாலே "காட்டுக்குப் போ" என்று சொன்னாள். அப்பன் சொன்னதுக்காகப் போனான் என்று திரித்துச் சொல்லுகிறான் பார்ப்பான் இன்றைக்கு!

இராமனும் அவனப்பனும் காட்டுக்குப் போகாமலிருப்பதற்கு என்னென்ன தந்திரம் செய்ய வேண்டுமோ அவ்வளவும் செய்தார்கள்! இராமனே சொல்கிறான், பரதனிடம்: "உன் அம்மாவுக்கே இராச்சியம் சொந்தம்" என்று. சோமசுந்தர பாரதியார் "தசரதன் குறையும் கைகேயி நிறையும்" என்று ஒரு புத்தகமே எழுதியிருக்கிறார். அதைப் படித்தால் தெரியும். இராமாயண ஊழல் பற்றிப் பேச ஒருநாள் போதாதே!

நான் ஏன் இதைச் சொல்கிறேன் என்றால் இப்படியெல்லாம் வெட்கம் இல்லாமலே எழுதியிருக்கிறானே என்றுதான் சொல்கிறேன்.

வால்மீகி எழுதியபடி சீதையே இராவணன் பின்னாலே போயிருக்கிறாள்! அவன் வந்தது தெரிந்தே இலட்சுமணனைப் போகச் சொல்லி வேலையிடுகிறாள். இராமாயணத்தில் வர்ணித்து எழுதியிருக்கிறான். "படுக்கையெல்லாம் சிதறிக் கிடந்தது. சின்னா பின்னப்பட்டிருந்தது" என்று வால்மீகிப்படி இராவணன் சீதையை அவள் இஷ்டமில்லாமல் தொட்டிருக்க முடியாதே? இரண்டு சாபங்கள் இருக்கின்றன. வால்மீகி சாடை காட்டுகிறான். சாபம் ஞாபகத்துக்கு வந்து அவள் கூந்தலையும், தொடையையும் பிடித்து தூக்கினான் என்று! வால்மீகி ஒன்றையும் மறைக்காமல் எழுதியிருக்கிறான். நாங்கள் சொல்வதிலே பொய்யிருந்தால் பார்ப்பான் விட்டு விடுவானா? உப்புக்கண்டம் பறிகொடுத்த பார்ப்பனத்தி மாதிரி விழித்துக் கொண்டே நம்மை ஒழித்துக்கட்டப் பார்க்கிறானே? இராமன் ஒடித்த வில் முன்னாலேயே ஒடிக்கப்பட்ட வில் என்கிறதற்கு அபிதான சிந்தாமணியில் 5- இடங்களிலே ஆதாரங்கள் இருக்கின்றன.


------------------------------------------05.07.1957- அன்று பெரம்பலூரில் நடைபெற்ற விழாவில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய உரையின் ஒரு பகுதி - "விடுதலை", 14.07.1957

25 comments:

தமிழ் ஓவியா said...


சங்கர்ராமன் படுகொலை வழக்கு: தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் - கி.வீரமணி அறிக்கை


காஞ்சிபுரம் சங்கர்ராமன் படுகொலை வழக்கு:

சங்கராச்சாரியார்கள் உட்பட 25 பேரும் விடுதலையா?

81 பேர் பிறழ் சாட்சியானது எப்படி? காவல்துறை என்ன செய்தது?

தமிழ்நாடு அரசு மேல் முறையீடு செய்ய வேண்டும்!

பெண்களைப் பாவ யோனியில் பிறந்தவர்கள் என்கின்ற கிருஷ்ணனுக்கு ஜெயந்தி கொண்டாடலாமா?

தமிழ்நாடு அரசின் முடிவைப் பொறுத்து நமது அடுத்த கட்ட நடவடிக்கை காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் மேலாளர் சங்கர்ராமன் படுகொலை வழக்கில் காஞ்சி சங்கராச்சாரியார் உட்பட குற்றஞ்சாட்டப்பட்ட 25 பேர்களும் விடுதலை செய்யப்பட்ட நிலையில், தமிழ்நாடு அரசு மேல் முறையீடு செய்ய வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாள் கோயிலில் அதன் மேலாளர் சங்கர்ராமன் பட்டப் பகலில் படுகொலை செய்யப்பட்டார் ஒன்பது ஆண்டுகளுக்கு முன் (3.9.2004).

சங்கராச்சாரியார்கள் கைது

இது தொடர்பாக காஞ்சிபுரம் சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி ஒரு தீபாவளி நாளில் கைது செய்யப்பட்டார் (11.11.2004) ஜெயேந்திரர் 61 நாட்களும், விஜயேந்திரர் 31 நாட்களும் சிறையில் இருந்தனர். மொத்தத்தில் 25 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கு தமிழ்நாட்டில் நடைபெறக் கூடாது என்று உச்சநீதிமன்றத்தில் சங்கராச்சாரியாரால் விண்ணப்பிக்கப் பட்டு, அதன் அடிப்படையில் உச்சநீதிமன்ற ஆணைப்படி புதுச்சேரி மாநிலத்திற்கு வழக்கு மாற்றப்பட்டு நடைபெற்று வந்தது.

பொது மக்களால் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட தீர்ப்பு -பக்தர்கள் மத்தியிலும் பதற்றம் நிலவியதுண்டு. தொடக்கத்தில் குற்றத்திற்குச் சம்பந்தம் இல்லாதவர்கள் கைது செய்யப்பட்டு, அதன்பின் உண்மைக் குற்றவாளிகள் மீது வழக்குத் தொடுக்கப்பட்டது.

81 பேர்கள் பிறழ்சாட்சியாம்!

இந்த வழக்கில் அதிர்ச்சிக்குரியது என்னவென்றால் 81 பேர் பிறழ் சாட்சியாளர்களாக ஆனதுதான் -ஆக்கப்பட்டதுதான்.

இதுவரை எந்த ஒரு வழக்கிலும் இவ்வளவுப் பெரிய எண்ணிக்கையில் பிறழ் சாட்சி (Hostile) யானது கிடையாது.

குற்றத்தை நிரூபிக்க வேண்டிய இடத்தில் உள்ளவர்கள் (Prosecution) எப்படி இதனை அனுமதித்தனர் என்பது மிகவும் முக்கியமானது. புலனாய்வுக்கென்றே காவல்துறையில் தனிப் பிரிவே இருக்கிறது. 81 பேர் பிறழ் சாட்சியாகும் அளவுக்கு எப்படி கோட்டை விட்டனர் என்பது அதைவிட முக்கியமானது.

இப்படி பிறழ் சாட்சி சொன்னவர்கள் மீதும் கூட வழக்குப்பதிவு செய்ய, தண்டிக்க, சட்டத்தில் இடம் உண்டு - இந்த வகையில் காவல்துறை ஏன்செயல்படவில்லை?
25 பேர்களும் விடுதலையாம்!

ஒரு கோயிலில் பட்டப் பகலில் பகிரங்கமாக நடைபெற்ற படுகொலை இது. குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்று சட்டத்திலும், நியாயத்திலும் நம்பிக்கை உள்ள அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால், குற்றஞ்சாட்டப்பட்ட 25 பேர்களும் விடுதலை செய்யப்பட்டதாக புதுவை நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது.

இந்த வழக்கில் பெரிய பெரிய சக்திகள் எல்லாம் தலையிடும் என்று எதிர்பார்த்ததுதான்; நீதிபதியிடமே குற்றஞ்சாட்டப்பட்ட சங்கராச்சாரியார் தொலைப்பேசியில் பேசினார் என்பதெல்லாம் என்னாயிற்று என்று தெரியவில்லை.

அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும்

இந்தத் தீர்ப்பினைத் தொடர்ந்து அரசு தனது நடவடிக்கையைக் கைவிட்டு விடக் கூடாது, மேல் முறையீடு செய்யப்பட வேண்டும்.

இல்லையென்றால் யாரும் எந்தக் குற்றத்தையும் செய்யலாம் - எளிதில் தப்பிவிடலாம் என்ற எண்ணத்தைப் பொது மக்கள் மத்தியில் எளிதில் ஏற்படுத்தி விடும்.

மற்ற மற்ற வழக்குகளில் மிகவும் ஆர்வம் காட்டும் அரசு இந்த மிக முக்கியமான பரவலாகப் பொது மக்களால் எதிர்பார்க்கப்பட்ட இந்த வழக்கில் மேற்முறையீடு செய்யும் என்று எதிர்பார்க்கிறோம்.

அடுத்து நமது நடவடிக்கை

ஏதோ தனிப்பட்ட விருப்பு வெறுப்பின் அடிப்படையில் இதனை நாங்கள் கூறவில்லை. நியாயமும், நீதியும், உண்மையும் தோற்றுவிடக் கூடாது என்ற பொது நோக்கோடு இதனை அணுகுகிறோம்.

அடுத்து தமிழ்நாடு அரசு எப்படி செயல்படுகிறது என்பதை அறிந்து, மனித உரிமையாளர்கள், சமூக ஆர்வலர்களை ஒருங்கிணைத்து உரியது செய்யப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.


கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்

சென்னை

27.11.2013

தமிழ் ஓவியா said...


இன்று வி.பி.சிங் நினைவு நாள்

மண்டல் குழுவின் பரிந்துரையை நிறைவேற்றிய பிரதமர்; பாரத ரத்னா அம்பேத்கர், பெரியார் ராமசாமி, ராம் மனோகர் லோகியா ஆகியோரது கனவை நனவாக்கிய செயல் இது என நாடாளுமன் றத்தில் (7.8.1990) முழங்கியவர்.

காவிரி நடுவர் மன்றம் அமைத் தவர்; மாநிலங்களிடையேயான குழு அமைத்தவர்; சென்னை விமான நிலையத்திற்கு அண்ணா, காமராசர் பெயரைச் சூட்டியவர்; பாபா சாகிப் அம்பேத்கருக்கு பாரத ரத்னா விருது, அவரது படம் நாடாளுமன்றத்தில் இடம் பெறச் செய்தவர்; அம்பேத்கர் பிறந்த நாள் மற்றும் மே தின விடுமுறை அறி வித்தவர்.

மண்டல் குழுப் பரிந்துரையை நிறைவேற்றியதால் தனது ஆட்சி கவிழும் என்ற நிலையிலும் உறுதியாய் இருந்தவர்; ஆயிரம் ஆண்டு பழைமை வாய்ந்த முறையை எதிர்த்துப் போராடி வருகிறோம் என்பது எமக்குத் தெரியும். அவ்வாறு செய்யும் வேளையில், நாங்கள் சிக்கலுக் கும், சிரமத்திற்கும் ஆளாவோம் என்பதிலும் சந்தேகமில்லை; ஆனால் ஆட்சியில் இருந்தாலும், இல்லையென்றாலும் அதற்காக நாங்கள் தொடர்ந்து போராடுவோம் என மக்களவையில் (7.11.1990) சங்க நாதம் செய்தவர்.

இந்திய அரசியலை ஒடுக்கப் பட்ட மக்களுக்கான களமாக மாற்றியவர்.

அவரது நினைவு நாளில் (27.11.2008), அவரை வணங்கு வோம்; அவரது கொள்கை உரத்தை நாமும் கொள்வோம். வி.பி.சிங் வாழ்க.

தமிழ் ஓவியா said...


திராவிடர் கழகப் பொருளாளராக டாக்டர் பிறைநுதல் செல்வி

திராவிடர் கழக பொருளாளராக இருந்த வழக்கறிஞர் கோ.சாமி துரை அவர்கள் 9.11.2013 அன்று மறைவுற்றார்.

அவருக்குப் பதிலாக 26.11.2013 அன்று சென்னையில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களின் தலைமையில் நடை பெற்ற திராவிடர் கழக தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் டாக்டர் பிறைநுதல் செல்வி (65) திராவிடர் கழகப் பொருளாளராகத் தேர்வு செய்து அறிவிக்கப்பட்டார்.

கல்வித்தகுதி: பி.எஸ்.ஸி, எம்.பி.பி.எஸ், டி.ஜி.ஓ.

உதகையில் மருத்துவத்துறையில் துணை இயக்குநராகப் பதவி வகித்தவர். விருப்ப ஓய்வு கொடுத்து திராவிடர் கழகத்தில் பணியாற்ற முன்வந்தவர். திராவிடர் கழகப் பொதுச் செயலாளராகவும் பணியாற்றினார். அவர் திராவிடர் கழகப் பொருளாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டவர். அவர் இணையர் இரா.கவுதமன் அவர்களும் மருத்துவர் ஆவார். ஒரு மகன் மருத்துவர்; ஒரு மகள் பொறியாளர். இருவரும் ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

தமிழ் ஓவியா said...


சேது சமுத்திரத் திட்டம்: அதிமுகவை மன்னிக்கவே முடியாது


சேது சமுத்திரத் திட்டம் என்பது அரசியலுக்கு அப்பாற்பட்ட தமிழ்நாட்டுக்கான பொருளாதார வளர்ச்சிக்கான மிகப் பெரிய திட்டம் - வெகு காலமாக தமிழ்நாட்டு மக்கள் எதிர் பார்த்துக் கொண்டிருக்கும் திட்டமாகும்.

அந்தத் திட்டம் கூடாது என்பவர்கள் யாராக இருந்தாலும், தமிழ்நாட்டுக்கும், தமிழர்களுக்கும் எதிரானவர்களே - இது கல்லின் மேல் எழுத் தாகும். இந்தத் திட்டத்தை அ.இ.அ.தி.மு.க.வும் - அதன் பெயரில் அமைந்த அரசும் எதிர்க்கிறது - எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்வது எந்த அடிப்படையில்? இப்பொழுது இரண்டாவது முறையும் எதிர்த்துப் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது மன்னிக்கத் தக்கதுதானா?

இதே அ.இ.அ.தி.மு.க. இதற்குமுன் இரண்டு தேர்தல் அறிக்கைகளிலும் இந்தத் திட்டம் அவசியமானது - வேண்டுமென்றே மத்திய அரசு, கால தாமதம் செய்கிறது என்று குறிப்பிட்டி ருந்ததே - அந்தத் தெளிவான நிலை இப்பொழுது ஓடி மறைந்த மர்மம் என்ன?

திராவிடர் கழகத்தின் தலைமைச் செயற் குழுவில் நேற்று நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் குறிப்பிட்டுள்ளபடி இப்பொழுது அ.இ.அ.தி.மு.க. இத்திட்டத்தை எதிர்க்கிறது என்றால் அதற்குக் காரணம் அரசியல்! அரசியல்!! அரசியலே!!!

தி.மு.க. இடம் பெற்ற அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, இந்தத் திட்டத்தை நிறைவேற்று வதால் அதன் பெருமை அல்லது அரசியல் லாபம் தி.மு.க.வுக்குப் போய் விடுமே என்ற ஆற்றாமை தான் இத்திட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத் திற்குச் சென்றுள்ள காரணமாகும்.

அ.இ.அ.தி.மு.க.தான் இந்நிலையை எடுத் துள்ளது என்றால் பிஜேபி திடீரென்று எதிர்க்க வேண்டிய அவசியம் என்ன? அய்யகோ இராமன் பாலத்தை இடிக்கிறார்களே! என்று சந்திரமதியின் மயானக் கூச்சலைப் போடுவானேன்?

பிஜேபி மத்தியில் ஆட்சியில் இருந்தபோது தானே இந்தத் திட்டம் இப்பொழுதுள்ள பாதையில் செயல்படுத்தப்பட ஒப்புதல் வழங்கப்பட்டது?

பிரதமர் வாஜ்பேயி, முரளி மனோகர் ஜோஷி, செல்வி உமாபாரதி, சு.திருநாவுக்கரசர் இவர்கள் எல்லாம் யார்? பிஜேபியின் மத்திய அமைச்சர்கள் தானே - இவர்கள் தானே அனுமதி அளித்து ஒப்புதல் கையொப்பமிட்டார்கள்.

இன்றைக்கு ஏன் சுருதிபேதம்? அவர்களையும் ஆட்டிப் படைப்பது அரசியல் காழ்ப்புணர்ச்சிதானா?

இராமன் பாலம் என்றெல்லாம் பேசுவது அறிவியலுக்கு உட்பட்டதுதானா? அரசு, தனது திட்டத்தில் புராண நம்பிக்கைகளை எல்லாம் கணக்கில் எடுத்துக் கொள்ளலாமா? அப்படி எடுத்துக் கொள்ள ஆரம்பித்தால் எந்த ஒரு திட் டத்தையும் உருப்படியாக நிறைவேற்றத்தான் முடியுமா?

இராமனையும், கிருஷ்ணனையும் அவரவர் வீட்டுப் பூஜை அறைக்குள் வைத்துக் கொள்ள வேண்டுமே தவிர, அரசுப் பணத்தை செலவழிக்கும் ஒரு திட்டத்தில் மூக்கை நுழைக்க அனுமதிக் கலாமா?

இதுவரை 800 கோடி ரூபாய்க்கு மேல் செலவழிக்கப்பட்டுள்ளதே - அதன் நிலை என்னாவது? இவ்வளவுப் பெருந் தொகை செலவழிக்கப்பட்ட நிலையில், இத்திட்டத்தை செயல்படுத்த முட்டுக்கட்டை போட்டால் இதற்கான நட்டத்தை ஏற்றுக் கொள்பவர்கள் யார்?

அ.இ.அ.தி.மு.க. அரசு ஏற்றுக் கொள்ளுமா? அல்லது பிஜேபி என்ற கட்சிதான் ஏற்றுக் கொள்ளுமா?

தமிழ்நாட்டில் சேது சமுத்திரத் திட்டத்துக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வந்த கட்சிகள் - இந்த நிலைகளுக்குப் பிறகும் மவுன சாமியார்களாக ஆன மர்மம் என்ன?

அரசியல்தானா? கூட்டணிதானா? கேவலம் ஒட்டுக்காகத் தானா?

பதவிப் பசி எடுத்தால் எதையும் விட்டுக் கொடுத்து விடுவார்களா? வெட்கம்! மகா வெட்கம்!!

தமிழ் ஓவியா said...


ஏன்?மனிதர்கள் எந்த மதத்தில் இருந்தாலும், அவர்கள் எந்த மதத்திற்குப் போனாலும் மற்ற மதத்தைச் சார்ந்த மனிதனுக்கு அதனால் கவலை ஏன் ஏற்பட வேண்டும்?
(குடிஅரசு, 16.11.1946)

தமிழ் ஓவியா said...


காலம் என்னும் அற்புத ஆயுதம்! (3)

நமக்குக் கிடைத்துள்ள காலம் என்பது அற்புதமான ஆயுதம்! மனித சமூகத்தின் தனித் தன்மை யான பகுத்தறிவின் பயன்பாட்டில் இது மிக முக்கிய பங்கு வகிக்கிறது. அந்த ஆயுதத்தின் பயன்பாடே நம் வாழ்வின் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கும்.

இதுவரை சொன்ன கருத்துக் களை சற்று அசை போட்டு சிந்தித்து, பசை போட்டு மனதில் ஒட்டிக் கொள் ளுங்கள்.

1. காலத்தை நாம் நிர்வகித்து கூட்டவோ, குறைக்கவோ முடியாது; ஆனால் நமது அறிவு - ஆற்றல் காரணமாக நம்முடைய பணிகளை காலத்தை எப்படியெல்லாம் திட்ட மிட்டு பயனுறு வகையில் செலவழிக் கலாம் என்பதை நம்மால் நிர்ண யித்துக் கொள்ள முடியுமே!

2. அப்படி திட்டமிட்டு, நிர்ணயித் துப் பணியாற்றுகையில் எது மிக முக்கியமான, நெருக்கடியான உடனே தலையிட்டு தீர்வு காண வேண் டிய பிரச்சினை என்பதை அறிந்து (Critical tasks) அதற்கே முன்னுரிமை அளித்தல்.

3. திட்டமிட்டு நேரத்தைச் செலவழிக் கக் கற்றுக் கொள்ளுங்கள்; இன்றேல் எது உங்களால் தீர்வு காணப்பட வேண் டிய வெகு முக்கிய அவசரப் பிரச்சினை எது என்பதை எப்படி நீங்கள் கண்டறிய முடியும்?

4. மாதிரி வாரம் (Model Week) என்று அமைத்துக் கொண்டு செயல் படக் கற்றுக் கொள்ளுங்கள். இதில் பெரும் பகுதி நேரம், எது, முக்கியத் தீர்வு காண வேண்டிய நெருக்கடி தரும் பிரச்சினைகளோ அவைகளுக்கென தனியாக நேரத்தை ஒதுக்கி, தீர்வு காண சிந்தித்து செய லாற்ற முன் வாருங்கள்; இப்படிப்பட்ட அணுகு முறையை நீங்கள் - கையாள வில்லை யென்றால், உங்களை நோக்கி வாழ்வின் வெற்றி என்பது வந்து ஒரு போதும் உங்கள் கதவைத் தட்டாது!

5. முன்னுரிமை கொடுத்துத் தீர்க்க வேண்டிய இந்த அவசரப் பிரச்சினை களின் பட்டியலை உங்களோடு பணி யாற்றும் சக பணியாளர்களுக்கும், தோழர்களுக்கும் தெரிவித்து அவர் களுக்கும் அந்தப் பிரச்சினையின் தீர்வு அவசரமாகக் காண வேண்டியது என்பதைப் புரிய வையுங்கள்.

6. தேவைப்பட்டால், சிறிய, குறைந்த நேரத்தில் தோழர்களை - பணியாளர் களை அழைத்து ஒரு கலந் துரையாடலை நடத்தி, அவர்களையும் பங்கேற்கச் செய்யுங்கள் - பகிர்வு மிகவும் முக்கியம்.

7. ஏற்கெனவே வேறு வகையா கவோ, காலம் பறப்பதைப் பற்றிய கவலையோ இல்லாதவர்கள் இனியா வது இந்தக் கோணத்தில் புதிய சிந்தனைக்கு ஆளாகி, காலம் என்ற அற்புதக் கருவியை மிகவும் பயனுறு வகையில் அமைத்துக் கொள்ளுங்கள்.

அமெரிக்காவின் மிகப் பெரிய சிந்தனையாளரான ரால்ப்ஃவேல்டா எமர்சன் அவர்களது கவிதை வரிகளை இங்கே சுட்டிக் காட்டுவது மிகவும் பொருத்தமானதாகும்:

உங்களால் முடியும் அளவுக்கு செய்து முடிக்கக் கூடிய பணியை ஒவ் வொரு நாளும் செய்து முடியுங்கள்;

சில தவறுகளும், அபத்தங்களும் கூட அப்பணியில் ஊடுருவி நுழைந் திருக்கலாம். அவற்றை எவ்வளவு விரைவில் மறக்க முடியுமோ அதைச் செய்து விட்டு; நாளை என்ற புதிய நாளைத் துவங்கட்டும்; நீங்கள் அதை மிகவும் பெருமிதத்துடனும், பழைய அர்த்த மற்ற நிகழ்வுகளை புறந்தள்ளிய புத்துணர்வுடன் இந்நாளைத் துவக் குங்கள்

- ஒவ்வொரு புதிய நாளும் புதிய தோர் அத்தியாயமாகப் பொலிவுற, புத்தாக்கம் செய்யுங்கள்; காலத்தைப் போற்றி கணக்கிட்டு திட்டமிடுதலே நீங்கள் வாழ்க்கையில் வாகைசூட வழிகாட்டும்.

- கி.வீரமணி

தமிழ் ஓவியா said...


பொதுவுடைமை - பொதுவுரிமை


பொதுவுடைமை வேறு, பொது உரிமை வேறு. பொதுவுடைமை என்பது சமபங்கு என்பதாகும். பொது உரிமை என்பது சம அனுபவம் என்பதாகும்.
(குடிஅரசு, 25.3.1944)

தமிழ் ஓவியா said...


இலங்கை தமிழர் படுகொலை குறித்து ஒளிவுமறைவற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் லண்டன் பத்திரிகைக்கு கேமரூன் பேட்டிலண்டன், நவ. 28- இலங்கையில் சமீபத்தில் நடந்த காமன்வெல்த் மாநாட்டில் இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் கலந்து கொண் டார். அப்போது, தமிழர்கள் பகுதி யான வடக்கு மற்றும் கிழக்கு மாகா ணத்தில் சுற்றுப்பயணம் மேற் கொண்டார்.

அப்போது, தமிழர்கள் போரின் போது பட்ட அவதிகளையும், கொடு மைகளையும், ராணுவ அத்துமீறல் களையும் கதறியபடி அவரிடம் எடுத் துரைத்தனர். காணாமல் போன தங்களது குடும்பத் தினர் குறித்த தகவல்கள் எதுவும் இல்லை என்றும் கண்ணீர் வடித்தனர்.

அதை தொடர்ந்து காமன்வெல்த் மாநாட்டில் பேசிய கேமரூன், இறு திக்கட்ட போரின் போது நடந்த தமிழர்கள் படுகொலை குறித்து இலங்கை அரசு நம்பகமான விசா ரணை நடத்த வேண்டும் என வலி யுறுத்தினார். அதற்கு இலங்கை அரசு மறுப்பு தெரிவித்தது. போரின் போது அத்துமீறல்கள் நடைபெறவில்லை என கூறியது.

இந்த நிலையில், தற்போது லண் டன் பத்திரிகைக்கு இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் பேட்டி அளித்துள்ளார். அதில் கூறி இருப்ப தாவது:

நான் இலங் கையின் வடக்கு மாகாணம் சென்று திரும்பி ஒரு வாரம் ஆகி விட்டது. ஆனா லும், அங்கு பார்த்த காட்சி கள் இன்னும் என் மனதில் நிழலாடுகின்றன. முதலில் தமிழர்கள் படுகொலை குறித்து நம்பகமான ஒளிவு மறைவற்ற சுதந்திரமான விசா ரணை நடத்தப்பட வேண்டும்.

இலங்கை அதிபர் ராஜபக்சேவை சந்தித்த போது அடுத்த மாதத்துக்குள் சர்வதேச விசாரணை தொடங்கப்பட வேண்டும் என வலியுறுத்தினேன். விசாரணை தொடங்காவிட்டால் நாங்கள் அய்.நா. மூலமாக அத்தகைய விசாரணையை கேட்போம் என அவரிடம் தெளிவாக கூறிவிட்டேன்.

இலங்கையில் மனித உரிமை விஷ யத்தில் முன்னேற்றம் வேண்டும். உண் மையான கருத்து சுதந்திரம் மற்றும் பத்திரிகை சுதந்திரம் நிலவ வேண்டும். தமிழர் சிங்களர் இடையே நல்லிணக் கம் வேண்டும்.

நான் இலங்கை சென்றதற்கு ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், நான் சென்றதால் அங்கு செய்ய வேண்டிய காரியங்களை வலியுறுத்த முடிந்தது. - இவ்வாறு டேவிட் கேமரூன் கூறியுள்ளார்.

தமிழ் ஓவியா said...


மின்னஞ்சலில்...ராமர் பாலம் மிதக்கும் பாலமே! சுக்ரீவனின் சேனை சேது கரையோரமாக இருந்த கற்களையும், பாறைகளையும் பெயர்த்தெடுத்து விஸ்வகர்மாவின் மகன் நளன் கையில் கொடுக்க, அவன் அதைக் கடலில் தூக்கிப் போட்டான். நளன் கையில் பட்ட அனைத்தும் மிதக்கும் என்ற அவன் பெற்ற வரத்தின் காரணமாக அவை அனைத்தும் மிதந்தன. ஆகவே அது மிதக்கும் பாலமே, அது கடலின் அடிபகுதிக்கு எப்படி சென்றது? சிந்திப்பீர்!

- பெரியார்மணி

தமிழ் ஓவியா said...


இடையில் மூன்றே நாட்கள்!
எழுத்துரு அளவு Larger Font

கழகத் தோழர்களே, தோழியர்களே!

டிசம்பர் 2 - இடையில் மூன்றே நாள்கள்!

தந்தை பெரியார் பிறந்த நாள்,

தமிழர் தலைவர் பிறந்த நாள்,

பெரியார் பேருருவச் சிலை - பெரியார் உலகம் உருவாக்கத்திற்கு முதற்கட்டமாக ஆயிரம் சவரன் தங்கத்திற்கான நிதி வழங்கும் விழா -

தோழர்களே, உங்கள் மாவட்டத்திற்கான இலக்கினை முடித்து விட்டீர்களா?

நிலுவையிருந்தால், இந்த மூன்று நாள்களிலும் முடுக்கோடு முனைப்பாகச் செயல்படுவீர்!

செயல்படுவீர்!!

டிசம்பர் 2 - தஞ்சை கண்கொள்ளாக் காட்சி - களேபரமான ஏற்பாடுகள் - கழகத் தோழர்களின் கால்கள் ஓடிக்கொண்டே இருக்கின்றன.

பெரியார் பேருருவச் சிலை இப்பொழுதே அங்கு நிற்பது போன்ற உணர்ச்சி அலைகள்!

வாழ்விலோர் திருநாள்!

வாருங்கள் தோழர்களே,

குடும்பம், குடும்பமாய்!

மறக்கவேண்டாம் - உங்கள் மாவட்ட இலக்கினை நிறைவு செய்த நிறைவோடு வாருங்கள் - கூடுதல் மகிழ்ச்சி உங்களுக்கும், தமிழர் தலைவருக்கும்!

என்ன சரிதானே!

- தலைமை நிலையம்

தமிழ் ஓவியா said...


ஏற்காடு இடைத்தேர்தல் அத்துமீறல்: கலைஞர் பேட்டி


சென்னை, நவ.28- ஏற்காடு இடைத் தேர்தலில் ஆளும் கட்சியினரின் அத்து மீறல் நடவடிக்கைகள் குறித்து தி.மு.க. தலைவர் கலைஞர் அளித்துள்ள பேட்டி வருமாறு:
செய்தியாளர் :- ஏற்காடு இடைத் தேர்தலில் ஆளுங்கட்சி தொடர்ந்து மேற்கொண்டு வருகின்ற விதி முறை மீறல்களையெல்லாம் உங்கள் கட்சியின் சார்பில் தேர்தல் ஆணையத்திடம் எடுத்துக் கூறி வருகிறீர்கள். இதற்கு தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை என்ன?

கலைஞர் :- தேர்தல் ஆணையம் இதுவரையில் நடவடிக்கை எடுக்கவில்லை; என்ன நடவடிக்கை எடுக் கப் போகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.

செய்தியாளர் :- எரிவாயு குழாய்களைப் பதிக்கும் பிரச்சினையில் உயர் நீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்பினை எதிர்த்து, விவசாயிகளுக்கு நன்மை ஏற்படும் வகையில் உச்ச நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்ய வேண்டு மென்று கோரிக்கை வைக்கப்படுகிறதே?

கலைஞர் :- விவசாயிகளின் கஷ்டத்தையும், அவர்களுடைய கோரிக்கையையும் நான் கவனமாகப் பார்த்து வருகிறேன். செய்தியாளர் :- உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய வேண்டு மென்று நீங்கள் கருதுகிறீர்களா?

கலைஞர் :- வழக்காடுவதை விட இரு தரப்பாரும் பேசி, விவசாயிகளுக்கு பாதகமின்றி நன்மை ஏற்படுகின்ற வகையில் நல்ல தீர்வு காண வேண்டும் என்பது தான் என் கருத்து.
செய்தியாளர்:- புதுச்சேரி நீதிமன்றம் சங்கரராமன் கொலைவழக்கு குறித்து அளித்துள்ள தீர்ப்பு பற்றி.

கலைஞர்:- நான் நீதிமன்றத் தீர்ப்புகளைப் பற்றி எப்போதும் விமர்சனம் செய்வதில்லை.

செய்தியாளர் :- உங்களுடைய ஆருயிர் நண்பர் சிவாஜி கணேசன் அவர்களுக்கு நீங்கள் தான் உங்கள் ஆட்சிக் காலத்தில் சிலை வைத்தீர்கள். ஆனால் அரசியல் காழ்ப்புணர்வின் காரணமாக, இப்போது அந்தச் சிலையை அகற்ற வேண்டுமென்று அரசின் சார்பில் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்

கிறார்களே? கலைஞர் :- கண்ணகி சிலை யையே எடுத்தவர்கள் இப்போது என்னுடைய நண்பர் சிவாஜி கணேசனின் சிலையை எடுக்க விரும் பினால், அதன் பலனை அவர்களே அனுபவிக் கட்டும். செய்தியாளர் :- தமிழகத்தில் தற்போது ஏற்பட்டுள்ள மின் வெட்டுக்குக் காரணம், மத்திய அரசின் சார்பில் மின் உற்பத்தி செய்யும் நிறுவனங்களில் ஏற் பட்டுள்ள திடீர் பழுது கள் தான் என்றும், மத்திய அரசு சதி செய்கிறது என்றும் தமிழக முதலமைச்சர் கூறியிருக் கிறாரே, அதுபற்றி உங்கள் கருத்து என்ன?

கலைஞர் :- இதைப் பற்றிய குற்றச்சாட்டினை தமிழக முதல் அமைச்சரே பிரதம அமைச்சருக்குக் கடிதம் மூலமாக எழுதியிருக்கிறார். அதற்குப் பிரதமரின் பதில் வந்த பிறகு அந்த விவரத்தை அறிந்து நான் விளக்கம் அளிக்கிறேன்.

தமிழ் ஓவியா said...

அய்யாவின் ‘கணக்கில் நீ’ ஆயுட்கால வைப்பு நிதி!


எண்பத்தியொன்னில்
எடுத்தடி வைக்கும் எங்கள்
தொன்மைத் தமிழ்க்குடியின்
உண்மையான காவலனே!

அண்ணாவே வந்தழைத்தும்
அசைந்திடாத மன உறுதி!
அய்யாவின் கணக்கில் நீ;
ஆயுட்கால வைப்பு நிதி!

வாலிபங்கள் மைனராய்
திரியும் வயதிலேயே
பெரியார் மடியில் வந்து விழுந்த
கோகினூர் வைரம் நீ!

வாலிபமும், வருவாயும்
வருங்கால வசந்தம் காண
ஆசைகாட்டி அழைத்தபோதும்
மோசம் போகாமல்
ஆசையை அறுத்துவிட்டு
அய்யா அழைத்தவுடன்
அனைத்தையும் துறந்து வந்தாய்!

ஈரோட்டுக் கிழவரின்
கரம்பற்றி; கைத்தடியாய்
பகுத்தறிவுப் பாட்டையில்
பத்தியமாய் பயணித்தவன் நீ!

மேடையில் உன் பேச்சோ
போர் முழக்கம்!
ஆதாரங்கள் அதில் வந்து
அணிவகுக்கும்!
எதிரிகளுக்கு எடுக்கும்
குலை நடுக்கம்!
எங்கள் செவிகளிலோ
தேன் இனிக்கும்!

மக்கள் கூடும்
மாலை நேர வகுப்புகளில்
பெரியாரியலைப் போதிக்கும்
பேராசிரியனும் நீதான்!
பெரியாரை இன்னமும்
பயிலும் மாணவனும் நீதான்!

பெரியாரும், அண்ணாவும்
பச்சைத் தமிழர் காமராஜரும், கலைஞரும்
பேணிவளர்த்த சமூக நீதிக்கு
பார்ப்பனப் பெரும்புள்ளிகளை வைத்தே
பாதுகாப்பு வேலி போட்ட
அசகாய சூரன் நீ!
அசுரகுலத் தலைவன் நீ!
நீதி மன்றங்களுக்கும்
நீதி சொல்லிக் கொடுக்கும் பாடசாலை நீ!

அண்ணா அழைத்தபோதே சென்றிருந்தால்
அரசியலின் அதிசயமாய் ஆகியிருப்பாய்!
அய்யாவிடமே நின்றுவிட்டதால்
அரசியலே அதிசயக்கும்
அதிசயமாய் ஆகிவிட்டாய்!

சேர, சோழ, பாண்டியரும்
சரிநிகர் உனக்கில்லை!
அவர்களெல்லாம் வெறும்
அந்தப்புரத்துப் பொலிகாளைகள்!
சோற்றுத் துருத்திகள்;
சோம்பேறிகள்!

பார்ப்பனப் பாதந்தாங்கிகள்;
பெண் பித்தர்கள்!
மன்னர் மரபில் மட்டும்
நீ பிறந்திருந்தால்...
புத்தருக்கு ஒரு அசோகன்போல்
பெரியாருக்கு நீயும் ஆகியிருப்பாய்!

சாமானியனாய்
நீ பிறந்திட்டாலும்....
பெரியாரியலை உலகமயமாக்கும்
பெரும் பணியைத் தலைமேற்கொண்டு
சக்கரம் கட்டி உலகைச் சுற்றி
சரித்திரம் படைக்கின்றாய்!

புவியின் சுழற்சி
நிற்கும் மட்டும்; நின் புகழும்
மங்காது; மறையாது!
மாறாது நிலைத்திருக்கும்!

- சீர்காழி கு.நா.இராமண்ணா

தமிழ் ஓவியா said...

உங்களுக்குத் தெரியுமா?


இந்தியா முழுவதும் உள்ள பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு மத்திய அரசின் கல்வி, வேலைவாய்ப்பில் 27 சதவிகித இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்திய மண்டல் குழு அறிக்கையை நடைமுறைப்படுத்திட, தமிழகம் முதல் டெல்லி வரை 42 மாநாடுகள் 16 போராட்டங்கள் நடத்தியவர் தமிழர் தலைவர் கி.வீரமணி என்பதும், அதன் விளைவாக மண்டல் சூறாவளி வடபுலத்தில் வீசி, சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் அவர்களின் தலைமையில் மத்தியில் ஆட்சி அமைந்து, மண்டல் அறிக்கையின் பரிந்துரைகள் ஏற்கப்பட்டு, தற்போது லட்சக்கணக்கான பிற்படுத்தப்பட்ட மக்கள் பயன்பட்டு வருகிறார்கள் என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?

தமிழ் ஓவியா said...

ஒப்பிட முடியாத வாழ்க்கை


எழுபது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாட்டுக்காகவே தம்மை ஒப்படைத்துக் கொண்ட மனிதர்! தனி வாழ்வை கிஞ்சிற்றும் நுகராமல், பொது வாழ்வே முழு வாழ்வு என வாழ்பவர். பள்ளிப் பருவத்திலே மேடை ஏறி வரவேற்பையும், விமர்சனத்தையும் ஒரு சேரப் பெற்றவர். ஒரு இளைஞராக வாழ்ந்த காலத்தில், உரிய எந்த ஒன்றையும் அனுபவித்து மகிழாதவர்.

குறிப்பாக எல்லா சட்டத் திட்டங்களுக்கும் உட்பட்டு, ஒரு குறிப்பிட்ட நேர்கோட்டில், நேர்மையோடு வாழ்வதென்பது அவ்வளவு சாத்தியமில்லை.

அந்தக் காலங்களில் இப்படியான ஒரு சூழலைச் சில தமிழ்நாட்டுப் பள்ளிகள், தங்கள் விடுதிகளில் (Hostel அமல்படுத்தின. ஒரு மாணவனை முழு மனிதனாக ஆக்கும்பொருட்டு, பெற்றோர்கள் அங்கு வளர்த்தெடுக்க விரும்பினார்கள். எனினும் அவைகூட, கால ஓட்டத்தில் கரைந்து போயின. இப்படியான பொதுக் கட்டுப்பாடுகள் ஏதுமின்றி, சுயக்கட்டுப்பாடுகளுடன், பெரியார் கொள்கையை மட்டுமே மையமாகக் கொண்டு வளர்ந்து, மிளிர்ந்தவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள். ஒரு மனிதருக்கான சராசரி இன்பங்களைக் கூட அனுபவிக்காமல் வளர்ந்தவர். இன்றைக்கு உலகளவில் அவர் புகழ்பெற்று, இயக்கத்தையும் அப்படியே வளர்த்து, உச்ச நிலையில் இருக்கிறார் என்றால், அதற்காக அவர் வழங்கியது தம் வாழ்வு முழுவதையும்! இப்படியான ஒரு உழைப்பை, ஒரு தொழில் அல்லது அரசியல் கட்சியில் வழங்கியிருந்தால், அதன் பலனே வேறு. பத்து வயதுச் சிறுவன் வீரமணிக்கும், இன்றைய தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களுக்குமான இடைப்பட்ட வாழ்வை நினைத்துப் பார்த்தாலே நம் நெஞ்சம் சிலிர்க்கிறது. காரணம், அப்படியான ஒரு வாழ்வை நம்மால் நினைத்துக்கூடப் பார்க்க முடியாது; வேறு யாருடனும் ஒப்பிடவும் முடியாது. திராவிடர் கழக வரலாறு என்பது நெடிய பாதை மட்டுமல்ல; அது ஓர் கொடிய பாதை! விஷத்தை விடவும் கொடிய பார்ப்பனியத்தோடு மோதுகிற பாதை. உயிருக்கு உத்திரவாதம் இல்லாத பாதை. எனினும், இன்றைய சூழலில் நிறைய மாறியிருக்கலாம். கொடிய பாதைகள், பெரியார் பாதைகளாக மாற்றப்பட்டிருக்கலாம்.

ஆனாலும், அன்றைய சூழலில் அதனோடு வாழ்ந்து, உழன்று, போராடியவர் ஆசிரியர் கி.வீரமணி என்பதை மறந்துவிடக் கூடாது. பொதுவாக இந்த உலகம், முதலீட்டு உலகமாகவே இருந்து வந்திருக்கிறது. எதில் முதலீடு செய்தால் இன்பம் காணலாம் என்பதாகவே மனிதனின் கணக்கு இருக்கிறது. ஒரு அய்ந்து ஆண்டு உழைப்பை முதலீடாகக் கொடுத்தால், அரசியல் அள்ளித் தரும் என்பது ஒரு கணக்கு. இது உள்ளூர் அரசியல் தொடங்கி, உலக அரசியல்வரை நீள்கிறது. இதுதவிர, உண்மையான சமூகச் சிந்தனையாளர்கள் அவ்வப்போது செயல்படுபவர்களாகவே இருந்து வந்திருக்கிறார்கள். மேலை நாடுகளில் எழுதுவதும், பேசுவதுமாக அவர்களின் சமூகப் பணி இருந்து வந்திருக்கிறது. உறவின் வெறுப்பு, சமூக எதிர்ப்பு, வாழ்வின் வெறுமை, உயிருக்கு மிரட்டல், மன உளைச்சல், உடல் சோர்வு என்பதெல்லாம் அவர்களுக்கு மிக மிகக் குறைவு அல்லது இல்லவே இல்லை. இதை நாம் குறையாகப் பதிவு செய்யவில்லை. மாறாக, அவர்களின் சமூகச் சூழல் அப்படி. ஆனால், நம் சூழலோ வேறு. உலகில் எங்குமே ஏற்பட்டுவிடக் கூடாத, பார்ப்பனக் கருத்துகள் நிறைந்த நாடு நம் நாடு.

உலகில் நிறைய விசயங்களுக்கு தரவரிசைப் பட்டியல் தயார் செய்கிறார்கள். அதைப் போல உலகின் கொடுமைகள் என வரிசைப்படுத்தினால் அதில் பார்ப்பனக் கொடுமைகள்தான் முதலிடம் பிடிக்கும். மற்றக் கொடுமைகளுக்கு அடுத்தடுத்த இடமே கிடைக்கும். காரணம், எல்லாக் கொடுமைகளும் ஒரு சேரப் பெற்றதுதான் பார்ப்பனியக் கொடுமை. கொடுமைகளின் பிறப்பிடம் பார்ப்பனியம், கொடுமைகளின் தாய் வீடு பார்ப்பனியம் என்றெல்லாம் நாம் வர்ணித்தால் அதில் கடுகளவும் பொய் இருக்க முடியாது; மிகை இருக்க முடியாது. இதை வெறும் எழுத்து வடிவிலோ, உணர்ச்சி விளிம்பிலோ நின்று எழுதவில்லை. மாறாக, அறிவியல் பூர்வமாக, ஆதாரப்பூர்வமாக இவற்றை நாம் உறுதி செய்ய முடியும்.

அப்பேற்பட்ட ஆபத்து நிறைந்த, வலிமை பொருந்திய ஒரு கூட்டத்தை நேரெதிர் நின்று களம் கண்ட இயக்கம் திராவிடர் கழகம். அந்தக் கழகத்தில் தம் வாழ்வையே அவர் அர்ப்பணித்திருக்கிறார். இயக்கத்தின் கடவுள் மறுப்புக் கொள்கையில் அல்லது பொதுவான சில கருத்துகளில் மாறுபட்டவர்கள் இருக்கலாம். எனினும், ஆசிரியர் கி.வீரமணி என்கிற மனிதரின் அர்ப்பணிப்பும், உழைப்பும் தமிழ்நாட்டின் அத்தனை பூமித் தடத்திலும் நிரவிக் கிடக்கிறது என்பதை எந்த நியாயாவாதியும் மறுக்கமாட்டார். தனக்கான சௌகரியத்தை மனிதன் தொடர்ந்து உறுதி செய்து கொண்டே இருப்பதும், தனக்காக மற்றும் குடும்பத்திற்காக மட்டுமே வாழ்ந்து வரும் மனிதர்களையும் மனதில் வைத்துச் சேர்த்து யோசித்தால், மேலே கூறியவை அனைத்தும் ஒப்பிட முடியாத சாதனைகள் என்பதை எளிதில் அறிய முடியும். அச்சாதனைகளை அவர் தொடர்ந்து செய்வார். அதனால்தான் கி.வீரமணியாய் இருந்தவர் தமிழர் தலைவரானார்!

- வி.சி.வில்வம்

தமிழ் ஓவியா said...

இறுதிக்கட்டப் போரின்போது நடைபெற்ற சம்பவங்கள் குறித்து தனியாக இலங்கைக்குள் வெளிப்படைத் தன்மை கொண்ட நம்பகத்தன்மை வாய்ந்த விசாரணை நடத்த மார்ச் மாதத்திற்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும். கெடு தவறினால் அய்.நா.மனித உரிமை ஆணையத்தை அணுகி சுயேச்சையான விசாரணைக்கு நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவேன்.

- டேவிட் கேமரூன்,
பிரிட்டிஷ் பிரதமர்

தமிழ் ஓவியா said...

இலங்கையில் நடைபெற்ற போரின்போது, மனித உரிமைகள் ஒட்டு மொத்தமாக மீறப்பட்டுள்ளதே காமன்வெல்த் மாநாட்டை மொரிஷியஸ் புறக்கணித்ததற்கு முக்கியக் காரணம். அடுத்த இரண்டு ஆண்டுகளில் மொரிஷியஸ், காமன்வெல்த் மாநாட்டை நடத்த வேண்டும் என்ற நிலையில், காமன்வெல்த் விவகாரத்தில் எங்கள் அரசு தற்போது எந்த முடிவைக் கொண்டுள்ளதோ அதே நிலைதான் நீடிக்கும்.

- நவீன் சந்திரராம் கூலம்,
மொரிஷியஸ் பிரதமர்

தமிழ் ஓவியா said...

நீ சொல்லு - நான் சொல்றேன்

(இன்றைய காலத்தில் கழிப்பறைகள் வீட்டுக்கு வீடு இருக்கின்றன. ஆனால், 30 ஆண்டுகளுக்கு முன்பு வரை எடுப்புக் கழிப்பறைகள்தான் இருந்தன. நகரங்களில் சிலர் தெரு ஓரங்களையே கழிப்பிடமாக ஆக்கிவிடுவார்கள். அந்த மலத்தை அள்ளும் தொழிலாளர்கள் அதன் மீது முதலில் சாம்பலைப் போடுவார்கள்; பின்பு அள்ளிச் செல்வார்கள். இந்த நடைமுறை இருந்த காலத்தில் பின்வரும் நகைச்சுவை உரையாடலைப் பெரியார் எழுதியுள்ளார்.)

வைணவ தாசன்: என்ன தேசிகர்வாள், உடம்பெல்லாம் இவ்வளவு சாம்பல் விபூதியை எடுத்து அப்பிக் கொண்டிருக்கிறீர்களே! இது என்ன, பார்வைக்கே அசிங்கமாக இல்லையா?

சைவப் பண்டாரம்: அசிங்கமென்னையா வந்தது? ஒரு சிம்ட்டா சாம்பல் மேலே பட்டால் பட்ட வஸ்து பிணமானாலும், கட்டையானாலும் அது எவ்வளவு பாவம் செய்திருந்தாலும் மோட்சத்திற்குப் போய்ச் சேர்ந்துவிடும் என்பதாக விபூதி மான்மியத்தில் சொல்லப்பட்டிருக்கின்றது. நாம் நல்ல காரியம் செய்து மோட்சத்திற்கு ஒரு காலமும் போகமுடியாதபடி சைவநெறிகள் ஏற்பட்டு விட்டது. ஆதலால், விபூதி பூசியாவது மோட்சத்திற்குப் போகலாமென்றால் இதில் உமக்கேன் இத்தனை பொறாமை.

வைணவ: எனக்கு ஒன்றும் பொறாமையில்லை. சந்தோஷமாய் தாங்கள் மோட்சத்திற்குப் போங்கள். ஆனால், எனக்கு ஒரு சந்தேகம். ஒரு சிமிட்டா சாம்பல் பட்ட வஸ்துக்கள் எல்லாம் மோட்சத்திற்குப் போய்விடும் என்கிறீர்களே. மக்கள் இங்கு அதிகமாக சாம்பலை மலத்தின் மீது கொட்டி மலமே தெரியாமல் மூடுகிறார்களே, சனியன் பிடித்த அந்த மலங்கள் எல்லாம் மோட்சத்திற்குப் போயிருக்குமே! அப்போது தாங்களும் அங்கிருந்தால் மோட்சத்திற்குப் போய் அந்த எழவு நாற்றத்தை எப்படிச் சகிப்பது என்கின்ற சந்தேகம்தான்.

சைவ: சரி, சரி! நீர் சுயமரியாதைக்காரர் போல் தெரிகின்றது; உம்முடைய யோக்கியதையைப் பார்ப்போம். பட்டையாய் வலிப்பு மாட்டுக்குச் சூடு போட்டதுபோல் போட்டுக் கொண்டிருக்கிறீர்?

வைணவ: உம்மைக் கேட்ட சங்கதிக்குப் பதில் சொல்லும்; பிறகு நான் பதில் சொல்லுகிறேன்.

சைவ: நாளைக்காவது சொல்லுவீரா?

வைணவ: நான் நீர் சொன்ன பிறகுதான் சொல்லுவேன்.

(9.11.1930 குடிஅரசு இதழில் தந்தை பெரியார் அவர்கள் சித்திரபுத்திரன் என்ற புனைப்பெயரில் எழுதியது.)

தமிழ் ஓவியா said...

டிசம்பர் 6 : அண்ணல் அம்பேத்கர் நினைவு நாள்


இந்து மதம் ஒழிவதே நல்லது!

இந்தியர்களுக்கு தாங்கள் ஒரே நாட்டைச் சார்ந்தவர்கள் என்ற எண்ணம் வருவதே மிகக் கடினமான ஒன்றாகும். இங்கே அமர்ந்துள்ள அரசியல் உணர்வுமிக்க தலைவர்கள், இந்தியாவின் மக்கள் என்று அழைப்பதையே கடுமையாக எதிர்த்த நிகழ்வு என் நினைவிற்கு வருகிறது! இந்திய தேசம் என்று அழைக்கப்படுவதையே நீங்கள் விரும்புகிறீர்கள். இந்தியர்கள் ஒரே தேசத்தவர் என்று நம்புவதன் மூலம் மிகத் தவறான கருத்தை உங்களுக்குள் வளர்த்துக் கொள்கிறீர்கள்.

பல ஆயிரம் ஜாதியினராகப் பிளவுபட்டுள்ள மக்கள் எப்படி ஒரே தேசத்தினராக மாற முடியும்? சமூகத்தளத்தில் இந்தியர்கள் இன்னும் பிளவுண்டு கிடக்கிறார்கள் என்பதை எவ்வளவுக் கெவ்வளவு விரைவில் உணர்கிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு நல்லது. அப்போதுதான் இந்தியர்களுக்குள் ஆழ வேரூன்றியுள்ள சமூகப் பிளவுகளை அகற்ற வேண்டிய அவசியத்தை நாம் உணர்வோம். அந்த இலக்கினை அடைவது நமக்கு மிகக் கடினமாக இருக்கப் போகிறது. அதுவும் அமெரிக்க அய்க்கிய நாட்டில் இருந்ததைவிட நமக்குக் கடினமானதாக இருக்கப் போகிறது. ஏனெனில், அமெரிக்க அய்க்கிய நாட்டில் ஜாதிகள் இல்லை. இந்தியாவில் ஜாதிகள் இருக்கின்றன. ஜாதிகள் அனைத்துமே தேச விரோத சக்திகள்தான். இந்தியா ஒரு தேசமாக மாற வேண்டுமானால், ஜாதிகளை முடிவுக்குக் கொண்டு வந்தாக வேண்டும்.

(-1949 நவம்பர் 11 ஆம் நாளன்று இந்திய நாடாளுமன்றத்தில் அரசியல் நிர்ணய சபையின் இறுதிக் கூட்டத்தில் அண்ணல் அம்பேத்கர் ஆற்றிய உரையிலிருந்து...)

இந்துக்களைப் போல, சீக்கியர்களைப்போல, பார்சிகளைப்போல தீண்டத்தகாத மக்களும் தனித்த வகுப்பினர்; அவர்கள் இந்துக்கள் அல்லர். அம்மக்களை இந்துக்களாகக் கருதுவது பெரும் பிழையாகும். இந்திய வரலாற்று நோக்கில் தனித்த பண்பாடோடும், மத நம்பிக்கைகளோடும் வாழ்ந்த அம்மக்கள் தனித்த வகுப்பினராகக் கருதப்பட வேண்டும்

(1929 இல் சைமன் ஆணையத்திடம் அண்ணல் அம்பேத்கர் அளித்த அறிக்கையில்...)

இந்து மதத்தில் உள்ள சமத்துவமின்மைதான் நான் இந்து மதத்திலிருந்து வெளியேற எண்ணுவதற்கான அடிப்படைக் காரணமாகும். நான் ஓர் இந்துவாகப் பிறந்துவிட்டேன், அது என் தவறன்று; ஆனால், நான் ஓர் இந்துவாக இறக்க மாட்டேன் -1935இல் பம்பாய் இயோலா மாநாட்டில், இந்து மதத்தை இந்திய மண்ணிலிருந்து வேரோடும் வேரடி மண்ணோடும் பெயர்த்தெறிவதற்கு கிறித்துவமோ இசுலாமோ பயன்படாது. அந்த மதங்களின் கடவுள் கோட்பாடுகளும், ஜாதிப் பழக்க வழக்கங்களும் அதற்குத் தடையாக இருக்கின்றன. சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவத்தை வலியுறுத்தும் பவுத்தத்தால் மட்டுமே அதைச் செய்ய முடியும். இந்து சமூகக் கட்டமைப்பில்தான் இந்தியாவின் பலவீனம் தங்கியிருக்கிறது. எனவே இந்து மதம் எவ்வளவு விரைவில் ஒழிக்கப்படுகிறதோ அந்த அளவுக்கு நல்லது. நமது சமூக நெறிகளும், இந்து மத மரபுகளும் நமது ஒற்றுமையைச் சீர்குலைப்பவையாக உள்ளன. எதிர்கால இந்தியாவில் இந்து மதத்தின் பங்கு எந்த அளவில் இருக்கப்போகிறது என்பதைப் பொருத்தே இந்தியாவின் எதிர்காலம் அமையும்.

- டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்

தமிழ் ஓவியா said...

நேர்மை + நாணயம் = ஆசிரியர்


ஆசிரியரின் சாதனைகள் யாவும் நாம் அறிந்ததே. அவை அளவிடற்கரியன. ஆனால், அவரது நேர்மைக்கும், நாணயத்துக்கும் ஏராளமான சம்பவங்கள் உண்டு. அதில் எனக்குத் தெரிந்ததில் இரண்டு மட்டும்.

ஆசிரியர் சென்னைக்கு - அய்யாவால் அழைக்கப்படுவதற்கு முன்பு, நாங்கள் வழக்குரைஞர்களாக கடலூரில் இருந்தோம். நான் கல்லக்குறிச்சியில் வழக்குரைஞர் தொழில் செய்து வந்தேன்.

கல்லக்குறிச்சியில் ஒரு வழக்கு என்னிடம் வந்தது. அதாவது, பங்காளிகள் இருவருக்குள் கொடுக்கல், -வாங்கலில் தகராறு. அதனால் எனது கட்சிக்காரர் மற்றவரின் எருது மாடுகளை அவரது பட்டியில் இருந்து ஓட்டிக் கொண்டு வந்துவிட்டார். அதனால் காவல்துறையில் மாடுகள் திருடியதாக வழக்குத் தொடுத்து, அது விசாரணைக்குப் பின் எனது கட்சிக்காரர் மீது 379 இ.பி.கோ.படி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துவிட்டார்கள். அந்த வழக்கு விசாரணையில் எனது கட்சிக்காரருக்கு நான் வழக்காடினேன். கடைசியில் எனது கட்சிக்காரர் விடுதலை செய்யப்பட்டு மாடுகளும் அவரிடமே திருப்பிக் கொடுக்கும்படி உத்தரவாகி, காவல்துறையும் மாடுகளை எனது கட்சிக்காரரிடம் கொடுத்துவிட்டது.

மாடுகளுக்குச் சொந்தக்காரர், கடலூர் மாவட்ட குற்றவியல் நீதிபதி முன்பு மறுபரிசீலனைக்கு (Revision) மனுபோட்டார். கடலூரில் இருந்து அந்த அழைப்பாணை (Summons) யை எனது கட்சிக்காரர் எடுத்துக்கொண்டு என்னிடம் வந்தார். நான் நம் ஆசிரியருக்கு ஒரு கடிதம் கொடுத்து, இந்த வழக்கில் கடலூர் நீதிமன்றத்தில் ஆஜராகும்படிச் சொன்னேன்.

அவரும் ஒப்புக்கொண்டு வழக்கு நகல்களைப் பெற்றுக்கொண்டு, வழக்கைப் பற்றி என் கட்சிக்காரரிடம் கேட்டிருக்கிறார். அவர் மாடுகள் தனக்குச் சொந்தமல்லவென்று உண்மையைச் சொல்லியிருக்கிறார். உடனே, ஆசிரியர் வழக்கு நகல்களைத் திருப்பிக் கொடுத்து அவரையே (என்னையே) வந்து வாதாடச் சொல். நான் பொய் சொல்லி வழக்கை நடத்த மாட்டேன் என்று திருப்பி அனுப்பிவிட்டார்.

எனது கட்சிக்காரர் என்னிடம் வந்து நடந்ததைச் சொன்னார். வழக்குத் தேதிக்கு வரும்படி அவரை அனுப்பிவிட்டு நான் கடலூர் போய் ஆசிரியரிடம் ஏன் இப்படிச் செய்துவிட்டீர்கள்? என்றேன். மாடுகள் தனக்குச் சொந்தமில்லை என்று சொல்கிறார். நான் எப்படிப் பொய் சொல்வது? என்றார்.

எனக்கு வியப்பாகப் போய்விட்டது. அவன் விடுதலையாக வேறு வழியில்லை. நீங்கள் வழக்கு நகலில் உள்ளபடி வாதாடுங்கள். அவன் சொன்னதை ஏன் எடுத்துக்கொள்கிறீர்கள்? என்றேன். அதெப்படி முடியும். மன்னிக்கவும், நான் வழக்காட முடியாது என்று பிடிவாதமாக மறுத்துவிட்டார். வேறு வழியில்லாமல் வழக்கு நடத்த உள்ள தொகையை நான் பெற்றுக்கொண்டு நான் வாதாடினேன். அவரும், என்னருகில் நீதிமன்றத்தில் பேசாமல் உட்கார்ந்திருந்தார். அந்த வழக்கு என் கட்சிக்காரருக்குச் சாதகமாக முடிந்தது. இதைப் போல ஏராளம் சொல்லலாம் என்றாலும், இதை நான் எடுத்துக்காட்டாகத் தான் சொல்கிறேன்.

அடுத்து, அவருடைய நாணயத்தைச் சொல்ல இது ஒரு சம்பவம். ஒருமுறை அவருக்குப் பணமுடை வந்தது. ஆசிரியர், சென்னையில் ஊதியம் வாங்காமல் விடுதலை ஆசிரியராகப் பணிபுரிந்து வந்தார். அய்யாவுக்குச் செய்தி தெரிந்து ஆசிரியரைக் கூப்பிட்டு ரூ.10,000/- (பத்தாயிரம்) கையில் கொடுத்தார். மிகவும் நன்றி சொல்லிவிட்டு அந்தத் தொகைக்கு, ஒரு கடன் உறுதிச்சீட்டு (Promissory Note) எழுதிக் கொடுத்தார்.

அய்யா, இதென்ன நான் கேட்கவில்லையே என்று சொல்லி திருப்பிக் கொடுத்ததை ஆசிரியர் வாங்க மறுத்துவிட்டார். அது அய்யாவிடமே இருந்தது. சில நாட்கள் கழித்து தொகையை அய்யாவிடம் திருப்பிக் கொடுத்துவிட்டார். கடன் உறுதிச் சீட்டை இவர் கேட்கவில்லை. அய்யாவிடமே இருந்ததா அல்லது திருப்பிக் கொடுத்தாரா என்று எனக்குத் தெரியாது. நான் அப்போது சென்னையில் இல்லை.

அய்யாவிடம் எந்தச் சூழ்நிலையிலிருந்தும் எதுவும் பெறக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தார்.

(தமிழர் தலைவர் பவள விழா மலர் 2007-இல் ஆசிரியருடன் சட்டக் கல்லூரியில் படித்து திராவிடர் கழகப் பொருளாளராக இருந்து அண்மையில் மறைந்த திரு. கோ.சாமிதுரை எழுதியது.)

தமிழ் ஓவியா said...

துளிச் செய்திகள்


கருணை அடிப்படையில் வேலை கேட்கும்போது தகுதி அடிப்படையில் மட்டுமே வேலை கொடுக்க வேண்டும், அவரது பெற்றோர் செய்த வேலையையே கொடுக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்புக் கூறியுள்ளது.

பிறவியிலேயே உருவாகும் ஹிர்ஸ்பரங்க் என்னும் குடல் நோயை ஸ்டெம் செல் சிகிச்சை மூலம் குணப்படுத்தும் முறையினை சென்னை மருத்துவக் கல்லூரி மற்றும் எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனை மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

கையினால் தொடாமலேயே மின் சாதனங்களை இயங்கச் செய்யும் அகச் சிவப்புக் கதிர் (இன்பிராரெட்) தொழில்நுட்பத்தில் இயங்கும் ஸ்விட்சினை பொறியாளர் ஹரிராம் சந்தர் கண்டுபிடித்துள்ளார்.

செல்பேசி மூலமாக பயனாளிகள் மணியார்டர் தொகையினைப் பெறும் வசதி நவம்பர் 16 முதல் தமிழகத்தில் நடைமுறைக்கு வந்துள்ளது.

சிறைச்சாலை மற்றும் காவல்துறையின் காவலில் இருக்கும் விசாரணைக் கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம் என்று மத்திய அரசின் சட்டத் திருத்தத்தை ஏற்று உச்ச நீதிமன்றம் நவம்பர் 19 அன்று தீர்ப்புக் கூறியுள்ளது.

பெண்களால் பெண்களுக்காக நடத்தப்படும் அனைத்து மகளிர் வங்கி (பாரதிய பெண்கள் வங்கி) நவம்பர் 19 அன்று தொடங்கப்பட்டுள்ளது.

தமிழ் ஓவியா said...

பண்பாளர் - பேரா.நம்.சீனிவாசன்

கி.வீரமணி பழகுவதற்கு இனிமையானவர்; எல்லோருக்கும் மரியாதை கொடுத்துப் பேசுவது அவரது பண்பாகும். வணக்கம் செய்வோருக்குத் தலையாட்டும் கர்வம் இல்லை; முகம் மலர்ந்து இரு கரம் கூப்பிப் புன்சிரிப்போடு பதில் வணக்கம் செய்கின்றார். தம்மிடம் வருபவர்களை அமரச் சொல்கின்றார்; யாரையும் நிற்க வைத்துப் பேசும் பழக்கம் அவரிடம் இல்லை. வாகனத்தில் பயணம் செய்கின்றபோது தனித்துப் பயணிப்பது இல்லை; தோழர்களை ஏற்றிக் கொண்டு உரையாடியவாறே செல்கின்றார்.

ஒப்புக்கொண்ட நிகழ்ச்சிக்கு வராமல் தவிர்க்கின்ற பண்பினை கி.வீரமணியிடத்தில் காணமுடிவதில்லை. கூட்டத்திற்குக் கால தாமதமாக வரும் பழக்கமும் அவரிடம் இல்லை. முன்கூட்டியே வந்திருந்து காத்திருக்கின்றார். கழகத் தோழர்களைச் சந்தித்து நலம் விசாரிக்கின்றார். குடும்ப உறுப்பினர்களைப் பற்றியும் கேட்டறிகின்றார்.

மணவிழா அழைப்பிதழ் தருவோரிடம் திருமணத்தைச் சிக்கனமாக நடத்துங்கள் என்று அறிவுறுத்துகின்றார். சுவரொட்டி விளம்பரங்கள், அழைப்பிதழ்களில் தன் பெயர் சிறிய எழுத்தில் இருக்கிறதா -_ பெரிய எழுத்தில் இருக்கிறதா? என்பதையெல்லாம் பொருட்படுத்துவதில்லை.

கருத்து வேறுபாடுகளைப் பெரிதுபடுத்தாமல் நட்புறவாகப் பழகுகின்றார். ஒருமுறை சந்தித்து உரையாடினாலே ஈர்த்து விடுகின்றார். வயது முதிர்ந்த பெரியார் தொண்டர்களை மேடையில் ஏற்றிக் கௌரவிக்கின்றார். உடல் நலம் குன்றிய தோழர்களை மருத்துவமனையிலும் அவர்களது இல்லத்திலும் சந்தித்து நலம் விசாரித்து நம்பிக்கை ஊட்டுகின்றார்.

இயக்கத் தோழர்கள் அன்பின் மிகுதியால் உணவை அதிகமாகப் பரிமாறிவிடுகின்றபோது அருகில் உள்ள நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டு, உணவை விரயமாக்காமல் உண்கின்றார். கட்சித் தோழர்களுக்கு ஏராளமான உதவிகளைச் செய்கின்றார்; செய்த உதவிகளை யாரிடமும் சொல்லாமல் மௌனம் காக்கின்றார்.

தமக்கு வருகின்ற அன்பளிப்புப் பொருட்களை இயக்கத்திற்குக் கொடுத்து விடுகின்றார். கி.வீரமணியைச் சந்தித்துப் பேசுவதற்கு எவ்விதத் தடையும் யாருக்கும் கிடையாது. யாரையும் காக்க வைக்காமல் உடனே சந்தித்து அனுப்பி வைக்கின்றார். சுற்றுப் பயணத்தின்போது கி.வீரமணி ஆடம்பர விடுதிகளில் தங்குவதில்லை. கட்சித் தோழர்கள் கூட்டம் கூட்டமாக அறைகளில் வந்து சந்திப்பதைத் தடுப்பதில்லை.

கி.வீரமணி தமக்குத் தேவையான பொருட்களை வாங்கி வரச் சொல்லும்போது உடனே பணத்தைக் கொடுத்து விடுகின்றார். இதய அறுவை சிகிச்சை செய்து கொண்டபோதிலும் தீவிர சுற்றுப் பயணம் செய்து சுறுசுறுப்புடன் இயங்குகின்றார். உடல் நலமில்லை; சோர்வாக இருக்கின்றேன் என்றெல்லாம் கி.வீரமணி கூறுவதே இல்லை.

குடியரசுத் தலைவர், பிரதமர், முதலமைச்சர், அமைச்சர், நீதிபதி, உயர் அதிகாரி, கல்வியாளர் என்று பலரிடமும் செல்வாக்குடன் திகழும் கி.வீரமணி அதனைப் பற்றி எவரிடமும் பெருமையாகக் கூறுவது இல்லை. திராவிடர் கழகத்தின் செல்வாக்குக்கும், பல அரிய சாதனைகளை நிகழ்த்தியதற்கும் கி.வீரமணியே காரணமாக இருக்கின்றார் என்றாலும், நான் என்று சொல்லாமல் நாம் என்றே கூறுகின்றார்.

கி.வீரமணி பாராட்டப்பட வேண்டியவர்களை மனம் திறந்து பாராட்டுகின்றார். ஒருவர் இல்லாதபோது அவரைப் பற்றிக் குறை கூறுவதில்லை. உள்ளொன்று வைத்துப் புறம் ஒன்று பேசுவதை வீரமணியிடத்தில் காண முடிவதில்லை. எப்போதும் கொள்கையாளராகவே இருக்கின்றார்.

பொய் சொல்லுவதில்லை; மது அருந்துவதில்லை; மறைமுகமாகக் காரியம் ஆற்றுவதில்லை; வாக்கு மாறிப் பேசுவதில்லை; பிழைகளைப் பொறுத்துக் கொள்கின்றார். நெருக்கமானவர்களிடம் கோபத்தை வெளிப்படுத்துகின்றார். நகைச்சுவை உணர்வு நிரம்பப் பெற்றவர்; கலகலப்பானவர்; ஒளிவு மறைவு இல்லாதவர்; காலந்தவறாதவர்; எளிய உணவை மேற்கொள்பவர்; சேர்ந்து உண்பதை விரும்பக் கூடியவர்.

தமிழ் ஓவியா said...

பாராட்டி வரவேற்கிறேன்


வீரமணி அவர்கள் வக்கீல் தொழிலில் ஈடுபட்ட சிறிது நாட்களுக்குள் மாதம் 1-க்கு ரூ.200, ரூ.300 என்கிற கணக்கில் வருமானமும், அதிகாரிகளின் பாராட்டுதலும் மதிப்பும் பெறத்தக்க நிலையை அடைந்துவிட்டார்.

அவரது இயக்க சம்பந்தமில்லாத நண்பர்களும், வக்கீல் தோழர்களும் அவருக்கு எவ்வளவோ ஆசை ஏற்படும்படியான எதிர்காலத்தைப் பற்றிச் சொல்லித் தடுத்தும், அதை ஏற்காமல் துணிந்து முழுநேரப் பொதுத் தொண்டுக்கு இசைந்து முன்வந்தது குறித்து நான் அதிசயத்தோடு அவரைப் பாராட்டி வரவேற்கிறேன்.

- பெரியார் ஈ.வெ.ரா.
விடுதலை, 10.8.1962

தமிழ் ஓவியா said...

பேரறிவாளனை விடுதலை செய்வதே சரியானதாகும்

கடந்த இரண்டரை ஆண்டுகளில் அ.தி.மு.க. ஆட்சி சாதித்தது என்ன? கடுமையான மின்வெட்டு, மத்திய அரசின் திட்டங்கள் முடக்கம்!

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட குற்றவாளிகளில் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவருக்கு அளிக் கப்பட்ட தூக்குத் தண்டனை கடந்த 22 ஆண்டுகளாக நிறைவேற்றப்படாமல் காலந்தாழ்ந்திருக்கும் நிலைமை, மறைமுகமான நன்மைகளையே (Blessing in Disguise) விளைவித்துள்ளது.

பல்வேறு புதைபட்ட உண்மைகள் நீதியின் அடிப் படையிலும், பலரின் மனசாட்சியின் விழிப்பின் காரணமாகவும் வெளிவரத் துவங்கியுள்ளன!

பேரறிவாளன் என்ற இளைஞனின் பங்கு அந்தக் கொலைக் குற்றத்தில், பிராசிகியூஷன் தரப்புப்படி, ராஜீவ்காந்தியைக் கொல்லப் பயன்படுத்துவதற்கான குண்டுக்காக பேட்டரி செல்கள் இரண்டை வாங்கிக் கொடுத்தவர் இவர் என்பதேயாகும்.

பேரறிவாளன் என்ற இளைஞர் பாலிடெக்னிக்கில் படித்தவர் என்பதை முடிச்சுப் போட்டு, இந்த பேட்டரி செல்கள் நான் வாங்கிக் கொடுத்தேன் என்ற வாக்கு மூலம் மட்டும் விசாரணை அதிகாரி கேட்ட கேள்விக்குப் பதிலாக அவர் சொன்னதை அப்படியே பதிவு செய்யாமல், வழக்கில் பிராசிகியூஷனுக்குச் சாதகமாக அமையும் வகையில், இந்தக் காரியத்திற்காக என்றே தெரிந்தே வாங்கிக் கொடுத்தேன் என்பதாக, அவரே சில வாக்கியங்களை _ பேரறிவாளன் சொல்லாததை வாக்கு மூலத்தில் இணைத்துக் கொண்டு, பதிவு செய்து விட்டார் -_ அந்த விசாரணை அதிகாரி. அவர் ஓய்வு பெற்ற நிலையில், இப்போது அவர், நான்தான் வழக்கில் தண்டனை வாங்கித் தருவதற்காக அந்த வரிகளைச் சேர்த்துக் கொண்டேன் என்று கூறி உண்மையைப் போட்டு உடைத்துவிட்டார் -_ -மனசாட்சி உறுத்தியதால்!

குற்றவாளியின் வாக்குமூலம் என்று விசாரணை அதிகாரிகள் எழுதி வைப்பதையெல்லாம் அப்படியே ஆதாரங்களாக ஏற்றுக் கொள்ளும், அடிப்படை உரிமைப் பறிப்புக்கான சட்டம்தான் தடா சட்டம் ஆகும்.

குற்றம் சுமத்தப்பட்டவர்மீதான குற்றத்தை நிரூபிப்பது பிராசிகியூஷன் வேலை - -_ பொறுப்பு, என்பதைத் தலைகீழாக மாற்றி - -_ குற்றமற்றவர் என்று நிரூபித்து வெளியே வர வேண்டியது -_ -குற்றம் சுமத்தப்பட்டவரின் பொறுப்பு என்பதாக இருப்பதும் மற்ற கிரிமினல் சட்டத்தில் ஏற்றுக் கொள்ளப்படாத சாட்சியங்களை, இந்தத் தடா சட்டத்தில் ஏற்றுக் கொள்ளச் செய்வதுமான கொடுமையான சட்டம் என்பதால்தான் அதற்கு எதிராக கருத்துப் போர் தொடுத்து, ஜனநாயக அடிப்படை மனித உரிமையாளர்கள் -_ நம்மைப் போன்ற இயக்கத்தவர்கள் இயக்கம் நடத்தி, ரத்துசெய்ய வைத்தோம். அதன் முழு நியாயமும் இப்போது வெளியான விசாரணை அதிகாரியின் வாக்குமூலத்தின் படி, தெளிவுபடுத்தப்பட்டு விட்டது.

குற்றத்தினை முடிவு செய்ய மென்ஸ்சிரியா (‘Mens Rea’) என்ற குற்றநோக்கு அக்குற்றவாளியின் மனதில் இருந்திருந்தால்தான் அவர் குற்றவாளியாக முடியும்; இன்றேல் அவர் நிரபராதிதான். இது (கிரிமினல்) குற்றச் சட்டத்தின் அடிப்படையாகும்.

பேரறிவாளன் பேட்டரி வாங்கிக் கொடுத்ததில் எந்தக் குற்ற நோக்கமும் இல்லையே! (விசாரித்த அதிகாரி யல்லவா அவசர ஜோடனை செய்து மேலும் சில வாக்கியங்களை இணைத்துக் கொண்டார். காவல்துறை விசாரணை வழமையில் இது சர்வ சாதாரணமாக நடைபெறுவதாகும்).

எனவே இந்தத் தகவல் -_ அவரது தூக்குத் தண்டனைக்கு எவ்வித முகாந்திரமும், நியாயமும் இல்லை என்பதற்கு உள்ளங்கை நெல்லிக்கனி போன்ற சான்றாதாரம் ஆகும்.

அதுபோலவே முருகன், சாந்தன் இருவரும்கூட இவருடன் சுமார் 22 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருந்துள்ள நிலையில், அவர்களைப் பற்றியும் இம்மாதிரி பல தகவல்கள் வெளியாகும் நிலையில், சந்தேகத்தின் பலனை ((Benefit of doubt) அவர்களுக்கே தந்து உச்சநீதி மன்றமே முன்வந்து, இந்த வழக்கை எடுத்துக்கோணலாகிப் போன நீதியைச் சரி செய்ய முன்வருதல் அவசரம்; அவசியம் ஆகும். 2. மேலும் தண்டனை வழங்கிய உச்ச நீதிமன்ற நீதிபதிகளில் ஒருவரான, ஜஸ்டீஸ் கே.டி.தாமஸ் அவர்கள், வழக்கின் தீர்ப்பு சரியாக வழங்கப்படவில்லை என்று குறிப்பினைக் கூறியதும் ஏடுகளில் வந்துள்ளது.

3. வழக்கு விசாரணையில் ஈடுபட்ட சி.பி.அய். அதிகாரிகளில் ஒருவரான திரு. ரகோத்தமன் அவர்கள் செய்தியாளர்கள் பேட்டி, தான் எழுதிய புத்தகம் ஆகியவற்றிலும் இவ்வழக்கில் விசாரணை சரியாகச் செல்லவில்லை என்ற கருத்தை மய்யப்படுத்தியுள்ளார்.

சதி என்பது பேரறிவாளனைப் பொறுத்து நிரூபிக்கப்படவே முடியாது --_ இல்லை என்பது வெளிச்சமாகியுள்ளது. எனவே அவர்கள் மூவரையும் விடுதலை செய்வதுதான் நீதிக்கு - நியாயத்திற்குத் தலை வணங்குவதாகும்.

இம்மூவருக்கும் ஏதோ கருணை காட்டி விடுதலை செய்கிறோம் என்று எண்ணாமல், நீதி கெட்டுவிடக் கூடாது என்ற கண்ணோட்டத்தில், நீதியின் கோணலை நிமிர்த்தி வைக்கும் கடமையாகவே இதனைக் கருதுவதும், நீதிக்குப் பெருமை சேர்ப்பதாகவே அமையும்.

கிரிமினல் சட்டம், பத்துக் குற்றவாளிகள் தப்பினாலும்கூட ஒரு நிரபராதி, தண்டிக்கப் பட்டுவிடக்கூடாது என்ற தத்துவத்தைக் கொண்டதல்லவா?

- கி.வீரமணி
ஆசிரியர்

தமிழ் ஓவியா said...

பொன்மொழி


நாம் பேசுவதைத் தவிர்த்துவிட்டு, பிறர் பேசுவதை அதிகம் கேட்க வேண்டும். அதன் பொருட்டே குறைவாகப் பேசுவதற்கு ஒரு வாயும் அதிகம் கேட்பதற்கு இரு காதும் இயற்கை வழங்கி இருக்கிறது.

- இந்தியா

தமிழ் ஓவியா said...

பொன்மொழி


நாம் பேசுவதைத் தவிர்த்துவிட்டு, பிறர் பேசுவதை அதிகம் கேட்க வேண்டும். அதன் பொருட்டே குறைவாகப் பேசுவதற்கு ஒரு வாயும் அதிகம் கேட்பதற்கு இரு காதும் இயற்கை வழங்கி இருக்கிறது.

- இந்தியா