Search This Blog

10.11.13

அரசியலையும், பதவியையும் பெரியார் ஏன் வெறுத்தார்?

மனிதனிலிருந்து குரங்குக்குப் போகலாமா?
மின்சாரம்


1952ஆம் ஆண்டிலேயே ஜாதி அடிப்படையில் ஜாதிக் கட்சிகள் தேர்  தலில் குதித்ததுண்டு. அது என்னா யிற்று என்பது எல்லோருக்கும் தெரியும்.
கட்சித் தாவலை முதன் முதலாக ஊக்குவித்தவர் ஆச்சாரியார் (ராஜாஜி) சிலருக்கு அமைச்சர் பதவிகளை அளித்து ஜாதிக் கட்சிகளை விழுங்கி விட்டார்.

தேர்தல் நேரத்தில் அவ்வப் பொழுது ஜாதீயவாதிகள் தலை தூக்கிப் பார்ப்பதுண்டு; தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அது செல்லுபடியாக வில்லை. தமிழ்நாட்டு மக்கள் முற்றிலும் நிராகரித்து வந்தனர்.

தந்தை பெரியார் என்னும் மகத்தான புரட்சியாளர் தோன்றி மக்கள் மனதில் ஆழப் பதிந்திருந்த ஜாதீய உணர்வினை விவாதப் பொரு ளாக்கினார். பிரச்சாரப் பெரு வெள்ளம் எங்கும் கரை புரண்டு ஓடியது.

மாநாடுகள் - அவற்றின் தீர்மானங்கள் மக்களைப் புது சிந்தனைத் தடத்திற்கு கைகோர்த்து அழைத்து வந்தன.

காங்கிரசில் தந்தை பெரியார் இருந்தபோது அன்றைய மும்மூர்த்தி களை நாயுடு, நாயக்கர், முதலியார் என்றே அழைக்கப்பட்டனர்.

1927ஆம் ஆண்டோடு அந்த நாயக்கர் பட்ட வாலை அறுத்தெறிந்தார் அறிவுலக ஆசான் பெரியார் அவர்கள்.

1929இல் செங்கற்பட்டில் பெரியார் கூட்டிய சுயமரியாதை இயக்கத்தின் முதல் மாநில மாநாட்டிலேயே ஜாதிப் பட்டத்தைத் தூக்கி எறிவது என்ற தீர்மானம் வெறும் எழுத்தில் மட்டு மல்ல; அந்த மாநாட்டிலேயே ஜாதிப் பட்டத்தைத் துறக்க முன்வந்து உறுதிமொழி எடுத்தனர்.

மாநாட்டுக்குத் தலைமை வகித்த ஊ.பு.அ. சவுந்தரபாண்டிய நாடார் வெறும் சவுந்தர பாண்டியன் ஆனார். சிவகங்கை இராமச்சந்திர சேர்வை வெறும் இராமச்சந்திரன் ஆனார்.

விருதுநகர் வி.வி.இராமசாமி நாடார் வெறும் இராமசாமி ஆனார். அந்த மாநாட்டின் உந்து சக்தி ஊரெல்லாம் பரவியது -_ வீடெல்லாம் ஜாதி ஒழிப்பு விளக்கை ஏற்றி வைத்தது.

அதன் வீச்சை இன்று வரை காணலாம். பெயருக்கு பின் ஜாதிப் பட்டம் போடுவதை வெட்கக் கேடாகக் கருதும் ஒரு மனப்பான்மை தமிழ்நாட்டில் மட்டும் பூத்துக் குலுங்குகிறது என்றால் அதற்குக் காரணம் _ பகுத்தறிவுப் பகலவனும் அவர்கள் கண்ட தன்மான இயக்க மான சுயமரியாதை இயக்கமும் தானே. பெயருக்குப் பின்னால் ஜாதிப் பட்டம் ஒழிந்து அந்த இடத்தில் கல்விப் பட்டம் வந்த காட்சி என்பது சாதாரணமானது தானா? தலைகீழ் மாற்றத்தின் மலர்ச்சியல்லவா!

இந்தியாவின் மற்ற மற்ற பகுதிகளில் நிலைமை என்ன? பொதுவுடைமை பேசும் காம்ரேடுகள் கூட ஜாதி வாலை அறுத்துக் கொள்ள முடியாத அவல நிலையில்தானே உள்ளனர்.

ஈ.எம்.எஸ். சங்கரன் என்றால் யாருக்குத் தெரியும்? நம்பூதிரிபாட் என்றால் தானே புரியும்!

சோமநாத் சட்டர்ஜி, ஈ.கே. நாயனார், அச்சுதமேனன், ஹிரேன் முகர்ஜி, புத்ததேவ் பட்டாச்சார்யா என்று தானே வலம் வருகிறார்கள்.

தமிழ்நாட்டில் ஏற்பட்ட இந்தப் பெரும் புரட்சிக்குப் பொதுவுடைமை வாதிகள்கூட உரிமை கொண்டாட முடியாதே!

இந்த நிலையில் இன்று சிலர் புறப்பட்டுள்ளனர்; இலட்சியமும், சித்தாந்தமும், வறுமைப்பட்ட நிலை யில், ஜாதி பிச்சைப் பாத்திரத்தை எடுத் துக் கரையேறலாமா, கையேந்தலாமா என்ற பரிதாப நிலைக்குத் தள்ளப் பட்டுள்ளனர்.

அதுவும் எப்படி? தாழ்த்தப்பட்ட வர்களைத் தனிமைப்படுத்தும் ஜாதி கூட்டணியாம்!

ஜாதியை எந்த நோக்கத்தின் அடிப் படையில் ஆரியம் உருவாக்கிற்றோ, அதனை நிறைவேற்றிக் கொடுக்க கொஞ்சமும்கூட வெட்கமின்றி துடியாய்த் துடிக்கிறார்களே!

இவர்கள் ஒரு காலத்தில் பெரியாரை மூச்சுக்கு முந்நூறு தடவை உச்சரித்தவர்கள்; ஏன், ஒரு கட்டத்தில் கறுப்புச் சட்டைக்கூட போடச் சொன்னவர்கள்!

அட சந்தர்ப்பவாதமே _- உன்னை எந்தப் பெயர் சூட்டி அழைக்க!

"நான் அரசியலில் பல மாறுதலில் ஈடுபட்டிருக்கலாம் என்றாலும் சமுதாயத் துறையில் பார்ப்பனீய வெறுப்புள்ளவன்.

அதுதான் என்னைப் பகுத்தறிவு வாதியாக (நாத்திகனாக) ஆக்கியது. இந்தச் சமுதாயச் சீர்திருத்தம் என்ப தற்கு முதற்படி பார்ப்பன ஆதிக்கத்தி லிருக்கும் பதவி உத்தியோகங்களை விகிதாச்சாரம் கைப்பற்ற வேண்டியது என்பதைத்தான்  கி,ஙி,சி,ஞி யாகக் கொண்டேன், - கொள்கிறோம், ஆனதி னாலேயே தான் நான் வகுப்புவாதி என்று சொல்லப்பட்டேன் என்பதல் லாமல் நானும் வகுப்புவாத உருவ மாகவே இருந்து வருகிறேன்". (விடுதலை 5.3.1969).
என்று தன்னைப்பற்றி சுய விமர்சனம் செய்து கொள்கிறார் தந்தை பெரியார் என்பதைக் கவனிக்க வேண்டும்.

இன்றைக்குச் சென்னைப் பல்கலைக் கழகத்தில் 89 சதவீதத்தில் பார்ப்பனர் அல்லாதார் படிக்கின்றனர் என்று துணைவேந்தர் டாக்டர் திருவாசகம் சொன்னார் என்றால் - அன்று தந்தை பெரியார் A,B,C,D யாகக் கொண்ட அந்தப் பார்ப்பன எதிர்ப்புதான் என்பதை மறக்க வேண்டாம்?

மருத்துவக் கல்லூரியில் சேர சமஸ்கிருதம் படித்திருக்க வேண்டும் என்ற அப்பட்டமான சூழ்ச்சியை தந்தை பெரியாரும், பிரதமர் பனகல் அரசரும் தகர்த்து எறிந்திருக்கா விட்டால் டாக்டர் எங்கிருந்து வந்திருக்கும் என்பதை டாக்டர் அய்யா சிந்திக்க வேண்டாமா?

பார்ப்பானைத் தவிர்த்துப் பார்ப்பனர்அல்லாதாரை ஒன்று திரட்டினார் -_ அதன் காரணமாக அடித்தட்டில் குப்புற வீழ்ந்து கிடந்த தாழ்த்தப்பட்ட மக்கள் -_ அதற்கு அடுத்த நிலையிலிருந்த பிற்படுத்த ப்பட்டோர்கள் விழித்தெழ முடிந்தது என்பதை மறுக்க முடியுமா?

தீவிர சிகிச்சை பிரிவில்  யாரை வைப்பது, பொது வார்டில் யாரை வைப்பது? என்பது ஒரு டாக்டருக்குத் தெரிந்திருக்க வேண்டாமா?

சமுதாயத்தின் நயவஞ்சக வருணாசிரமம் என்னும் நஞ்சினாலே ஊருக்கு ஒதுக்குப்புறம் விரட்டப்பட்டு பள்ளன் என்றும், பறையன் என்றும் ஆக்கப்பட்டார்களே, அவர்கள் யார்? நம் மக்கள் அல்லவா? சகோதரர்கள் அல்லவா? ஒரே ரத்தம் அல்லவா? நம் இனத்தவர் அல்லவா?
அவர்களை ஒதுக்கி வைத்துவிட்டு, அவர்கள் ஒதுக்கப்பட்டதற்குக் காரணமானவர்களான பார்ப்பனர்களை இடுப்பில் தூக்கி வைத்துக் கொஞ்சு வது என்றால் இதனை வரலாறு மன்னிக்குமா?

நேற்றுவரை பார்ப்பனர்களை இவர்கள் எப்படி விமர்சித்தனர்? எங்கள் கட்சியில் பார்ப்பனரை சேர்க்க மாட்டோம் என்ற உறுதி என்னா யிற்று?
கேள்விகள் ஏராளம் உண்டு _ காலத்தின் முன்னின்று மண்டியிட்டுப் பதில் சொல்லியே தீர வேண்டும்.

45 ஜாதிகளை இணைத்து சமு தாயக் கூட்டணியை உருவாக்கிய தாகக் கூறப்பட்டது.

அதையாவது அவர்களால் கட்டிக் காக்க முடிந்திருக்கிறதா? கொங்கு நாடு முன்னேற்றக் கழகத்தின் தலைவர் என்று சொல்லிக் கொள்ளும் பெஸ்ட் ராமசாமி அவர்களை கொண்டு தேசிய சமுதாயங்களின் கூட்டமைப்பு என்று பெயர் சூட்டிக் கொண்டு விட்டனர் _ இன்னொரு பகுதியினர்.

இந்தக் கூட்டமைப்பின் தேசிய அமைப்பாளர்களுள் ஒருவர் அர்ஜுன் சம்பத் அவர் என்ன சொல்லுகிறார்? சில தலைமுறைகள் முன்புவரை பிராமணர், பிராமணரல்லாதார் என்ற பிரிவு உருவாக்கப்பட்டி ருந்தது. இப்போது தர்மபுரி சம்பவத்துக்குப் பிறகு, தலித், தலித் அல்லாதோர் என்ற பிரிவினையை ஏற்படுத்தி விட்டார் ராமதாஸ். ஆனால் தாழ்த்தப்பட்ட சமுதாயம் இல்லாமல் இந்து சமயம் இல்லை - என்று கூறுகிறார்.
(தமிழக அரசியல் 23.10.2013 பக்கம் 421)

இந்தக் கூட்டணியில் உள்ள தேவர் தேசிய பேரவைத் தலைவர் திருமாறன் என்பவரோ தேசிய அமைப்பாளர் அர்ஜுனன் சம்பத் கூறும் கருத்தினை மறுக்கிறார்.

தாழ்த்தப்பட்ட மக்களின் பெயரி லான கட்சிகளின் அட்டூழியத்தால் வட தென் தமிழ்நாட்டு மக்கள் கடுமை யாகப் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்று அர்ஜுன்  சம்பத்தின் கருத்தை மறுக் கிறார். ஏற்காடு தேர்தலில் அ.தி. மு.க.வை ஆதரிக்க தேசிய சமூக கூட் டமைப்பு முடிவு என்று இன்னொரு செய்தி (தினமலர் 17.10.2013 பக்கம் 11)

மருத்துவர் ராமதாஸோ நடக்க இருக்கும் மக்களவை தேர்தலுக்கான வேட்பாளர்களை இரு கட்டமாக அறிவித்து விட்டார். ஒருவரை ஒருவர் ஏமாற்றுவதில்தான் குறியாக இருக் கிறார்கள்.

குரங்கிலிருந்து மனிதன் என்கிற பரிணாம வளர்ச்சியைப் புரிந்து கொள்ளலாம்! மனிதனிலிருந்து குரங்காக மாறும், தேய்மானம் அடைய ஆசைப்படுவது பரிதாபமே!

பிறப்பின் அடிப்படையில் பேதம் பேசும் ஜாதிக் கூண்டுக்குள்தான் தன் சுதந்திரம் இருக்கிறது என்று நினைப் பவர்களைப் பற்றிப் பரிதாபப்படுவதைத் தவிர வேறு வழியில்லை.

ஒன்று மட்டும் உறுதி; 45 கட்சிகள் கூட்டணி அளித்தாலும் சரி, 450 கட்சி களைக் கொண்ட மகா கூட்டணி வைத்தாலும் சரி- _ இவர்கள் அத்தனைப் பேரும் பார்ப்பனிய சாஸ்திர சம்பிர தாயப்படி, ஏன் இன்றைய அரசமைப் புச் சட்டத்தின்படியேகூட சூத்திரன் தான் என்பதை மறக்க வேண்டாம்.
பக்கத்தில் உட்கார வைத்து அழகு பார்க்கிறார்களே பார்ப்பனர்களை - _ அவர்கள் முதுகில் தொங்கும் பூணூலுக்கு என்ன பொருள்?

உங்களைப் பார்த்து சூத்திரர்கள் என்று தானே அந்தப் பூணூல்கள் நமட்டுச் சிரிப்பை உமிழும்.

தமிழன் கட்டிய கோயிலிலே -_ தமிழர்கள் வாழும் _ வீதிகளிலே உள்ள கோயில்களில் தமிழன் அர்ச்ச களாக முடியாது -_ காரணம் தமிழர்கள் எல்லாம் சூத்திரர்களாம்.

இந்த இழிவை ஒழிக்க உணர்ச் சியில்லை. கேவலம் இரண்டு பதவித் துண்டுகளுக்காகப் பார்ப்பனியத்திடம் பலியாகலாமா?

பெரியாரைப் படித்தது இதுதானா?
புரிந்து கொண்டது இதுதானா?

அரசியலையும், பதவியையும் பெரியார் ஏன் வெறுத்தார் என்பது இப்பொழுது புரிகிறதல்லவா!

----------------------- மின்சாரம் அவர்கள் 9-11-2013 “விடுதலை” ஞாயிறுமலரில் எழுதிய கட்டுரை

44 comments:

தமிழ் ஓவியா said...

மதவாத - ஜாதீய வாத எதிர்ப்பு அடிப்படையில் திராவிடர் கழகம் நடத்தும் திராவிடர் எழுச்சி மாநாடு
காலத்தால் நடத்தப்பட்ட அரும்பெரும் மாநாடு
கழகம் மதச்சார்பின்மை சக்திகளை ஒருங்கிணைக்கட்டும்!
திராவிடர் எழுச்சி மாநாட்டில் தலைவர்கள் பாராட்டு மழை!

திருச்சி, நவ.10- திருச்சிராப்பள்ளி யில் திராவிடர் கழகத்தால் நடத்தப் பட்ட திராவிடர் எழுச்சி மாநாடு, காலங்கருதி திராவிடர் கழகத்தால் நடத்தப்பட்ட அரும்பெரும் மாநாடு என்று பல்வேறு கட்சித் தலைவர் களும் பெருமையுடன் பாராட்டி மகிழ்ந்தனர்.

திருச்சிராப்பள்ளி உழவர் சந்தை மைதானத்தில் எத்தனை எத்தனையோ நிகழ்ச்சிகள் நடைபெற்றன என்றா லும் நேற்று மாலை (9.11.2013) பல்லா யிரக்கணக்கான மக்கள் திரளால் திணறியது என்றே சொல்ல வேண்டும். கழகத் தலைவரும் மற்ற தலைவர் களும் சொன்னது போல அது அழைத்து வரப்பட்ட கும்பல் அல்ல.

லட்சிய தாகத்தோடு திரண்டு வந்த தமிழர் கூட்டமாகும். ஊரெங்கும் கழகக் கொடிகள் பட்டொளி வீசிப் பறந்தன. பதாகைகளும், வளைவு களும் மாநாட்டுக்குக் கட்டியம் கூறின.

மாநாட்டில் பங்கேற்று உரையாற் றிய தலைவர்கள் எல்லாம், மாநாட் டின் நோக்கத்தைப் பெரிதும் வரவேற்றனர்.

மதவாத சக்திகள் தலை தூக்கி யுள்ள இந்தக் கால கட்டத்தில் இந்து ராஷ்டிரத்தைக் கொண்டு வருவோம் என்று புறப்பட்டுள்ள தருணத்தில் திராவிடர் கழகம் அவற்றின் எதிர்ப்பு சக்திகளை, மதச் சார்பின்மையில் நம்பிக்கையுள்ளவர்களை ஓரணியில் திரட்டும் வரலாற்றுக் கடமையை திராவிடர் கழகம், அதன் தலைவர் செய்திருக்கிறார் என்று குறிப்பிட் டார்கள்.

தந்தை பெரியார் இருந்திருந்தால் எதைச் செய்திருப்பாரோ அந்த வரலாற்றுக் கடமையைத் தமிழர் தலைவர் சிறப்பாகச் செய்திருக்கிறார் என்று புகழாரம் சூட்டினார்கள்.

சென்னையிலிருந்து வந்திருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அருட் தந்தை ஜெகத்கஸ்பார் அவர்கள், திராவிடர் கழகம் இந்த முயற்சியை எடுத்திருப்பது பொருத்தமானதே என்றார். இந்தியாவில் தமிழ்நாட்டு மக்கள் மிகவும் பாதுகாப்பாக இருக் கிறார்கள் என்றால் அதற்கு அடிப் படைக் காரணம் தந்தை பெரியார்தான்.

தந்தை பெரியாரின் முதல் புள்ளி, கடவுளிடமிருந்து தோன்றிடவில்லை. மானுட நேயத்தின் புள்ளியிலிருந்து அது தொடங்கப்பட்டது.

ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமை களுக்காக அவர் போரிட்டார் என்றால் அதற்குக் காரணம் அந்த மானுடம்தான். தந்தை பெரியார் இந்த மண்ணுக்குக் கிடைக்கவில்லையென் றால் இந்த ஜெகத்கஸ்பார் படித் திருக்க மாட்டான்; கூலி வேலை செய்து கொண்டுதானிருந்திருப்பான் (பலத்த கைதட்டல்).

எந்த சக்தி இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் தலை தூக்கி நின்றதோ அது மீண்டும் தலை தூக்கப் பார்க்கிறது - அதற்கு இடம் கொடுக்கக் கூடாது என்று எச்சரிப்பதற்குத் தான் பொருத்தமான காலத்தில் இந்த மாநாடு இங்கே!

நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நேரம் - மதவாத சக்திகள் தமிழ்த் தேசியத்தில் அடைக்கலம் கொண்டிருக்கின்றன என்று கூறவும் தவறவில்லை ஜெகத்கஸ்பார்.

பேராசிரியர் சுப. வீரபாண்டியன்

எதற்காக திராவிடர் எழுச்சி மாநாடு? ஏன் தமிழர் எழுச்சி மாநாடு என்று நடத்தவில்லை? இந்தக் கேள்வியை எழுப்பி அதற்கு அருமையான முறையில் விடையையும் அவரே சொன்னார்.

தமிழர் எழுச்சி மாநாடாக இருந்திருந்தால், அதில் பொன். ராதாகிருஷ்ணனும், அர்ஜுன் சம்பத்தும் இடம் பெற்றிருப் பார்களே!

தமிழர் எழுச்சி மாநாடு என்றால் அங்கே ஜெகத்கஸ்பாருக்கும், பேராசிரியர் காதர்மொய்தீன் அவர்களுக்கும் இடம் கிடையாது.

தஞ்சையில் முள்ளிவாய்க்கால் நினைவு குறித்த அருங்காட்சியகம் ஒன்று திறக்கப்பட்டுள்ளது வரவேற்கிறோம்.

அதே நேரத்தில் தமிழ்நாட்டு மக்களுக்காகப் பாடுபட்ட தலைவர்களின் படங்கள் வைக்கப் பட்டுள்ளனவே - அதில் தந்தை பெரியாருக்கு இடம் இல்லாதது - ஏன்? என்ற வினாவை பேராசிரியர் சுப.வீ. அவர்கள் எழுப்பிய போது, அந்தத் தகவல் அதிர்ச்சியாகவே இருந்தது. ஆழமான அமைதி ஒன்று ஆழமான சிந்தனையின் கொள்கலனாக இருந்தது. இப்படிக்கூட தமிழ்நாட்டில் நடக்குமா? நடத்துபவர்களும் உண்டா? என்ற வினாக்குறி ஒவ்வொருவர் முகத்திலும் எள்ளும் கொள்ளுமாக வெடித்தது.

தமிழ்த் தேசியம் என்றால் தந்தை பெரியாரை ஏற்க மறுப்பது என்ற பொருளை இப்பொழுது தமிழர்கள் எளிதாகவே புரிந்து கொண்டிருப் பார்கள் அல்லவா?

இதில் ஒரு வெட்கக் கேடு என்ன தெரியுமா? சனாதன வெறியோடு, ஆஷ் துரையைச் சுட்ட வாஞ்சிநாதன் படம்கூட அதில் இடம் பெற் றுள்ளதாம்.


தமிழ் ஓவியா said...

தமிழ்த் தேசியம் என்றால் பெரியாரை வெறுக்கும் - வாஞ்சிநாதய்யர்களைக் கட்டிப் பிடித்துக் கொள்ளும் என்பதை ஓர் அருங் காட்சியகம் அமைத்துப் பறைசாற்ற வேண்டும் போலும்!

பேராசிரியர் சுப.வீ. நறுக்கத் தெறித்தது போல ஓர் உண்மையைச் சுட்டிக் காட்டினார்.

எந்தத் தொலைக்காட்சி தூய தமிழைத் தூக்கிப் பிடிக்கிறதோ அந்தத் தொலைக்காட்சிதான், தூயதாக ஜாதியையும் தூக்கிப் பிடிக்கிறது. என்றாரே பார்க்கலாம் (சபாஷ், மிகவும் சரியான முகத்திரைக் கிழிப்பு!)

கடவுள் இல்லை என்று சொன்ன தந்தை பெரியார்தான் கோயிலுக்குச் சென்று சாமி கும்பிட எல்லோருக்கும் உரிமை உண்டு என்று போராடினார்.

தாலி கூடாது என்று சொன்ன பெரியார்தான், தேவதாசிகளுக்குத் தாலி கட்டுவது பற்றி வாதாடினார்.

ஆணாகப் பிறந்த பெரியார், பெண்களுக்காகக் குரல் கொடுத்தார். உயர்ந்த ஜாதியில் பிறந்த அவர், கீழ்ஜாதியென ஒதுக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காகப் போராடினார்.

பணக்காரக் குடும்பத்தில் பிறந்த பெரியார் ஏழை - எளியவர்களுக்காக உழைத்தார்.

99 சதவீத மக்கள் கடவுள் நம்பிக்கையான வர்கள், அந்த 99 சதவீத மக்களும் கடவுள் இல்லை என்று சொன்ன ஒருவரை தலைவராக ஏற்றுக் கொண்டது தந்தை பெரியாரைத்தான். அந்தப் புரட்சி இங்குதான் நடந்திருக்கிறது என்று மிக அருமையாக நுண்மையாகப் படம் பிடித்துக் காட்டினார் சுப.வீ.

பெரியார் வரலாற்றை உருவாக்கியவர் - அவரை வரலாற்றிலிருந்து எப்படி மறைக்க முடியும் என்ற அழகான வினாவையும் தொடுத்தார்.

ஜாதி மதவாத எதிர்ப்பைத் தூக்கிப் பிடிக்க கருஞ்சட்டைப் படையைவிட வேறு யாரும் கிடையாது. திராவிடர் கழகம் அனைத்துக் கழகத்துக்கும் தாய்க் கழகம் என்ற கருத்து மணிகளைக் கோர்த்து அழகான ஆரமாகப் பரிணமிக்கச் செய்தார் சுப.வீ.

பேராசிரியர் கே.எம். காதர்மொய்தீன்
(தலைவர், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தமிழ்நாடு)

எடுத்த எடுப்பிலேயே நிறைவேற்றிய கடைசித் தீர்மானமான திருச்சிராப்பள்ளியில் உள்ள பன் னாட்டு விமான நிலையத்திற்குத் தந்தை பெரியார் பெயரைச் சூட்ட வேண்டும் என்ற தீர்மானத்தை வழிமொழிந்த பேராசிரியர், மண்ணில் மட்டுமல்ல; விண்ணிலும் பகுத்தறிவுப் பகலவன் பெயர் ஒலிக்க வேண்டும் என்றார்.

தமிழ் ஓவியா said...

தந்தை பெரியாரின் கடவுள் மறுப்புக்கும், மத எதிர்ப்புக்கும் அடிப்படை மனிதநேயமே! ஒன்றே குலம் என்பது தமிழர் நெறி, யாதும் ஊரே என்பதும் தமிழர் நெறி, பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பதும் தமிழர் நெறி!

இவற்றைத் தமிழன் மறந்த நேரத்தில் தந்தை பெரியார் நினைவூட்டி அதற்குப் பகுத்தறிவு என்று பெயர் சூட்டினார்.

மண்டல் குழு அறிக்கையிலே ஒன்று குறிப்பிடப் பட்டுள்ளது. வட நாட்டிலே ஒரு கிராமத்துக்கு மின் இணைப்புக் கொடுக்கப்பட்டது. அந்தக் கிராம மக்கள் அதனை ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டனர். என்ன காரணம் தெரியுமா? அந்த மின்சாரம் அதற்கு முந்தியுள்ள தாழ்த்தப்பட்ட வர்கள் வாழும் கிராமத்திலிருந்து வருகிறதாம் (மின்சாரத்தில்கூட தீண்டாமையோ!) தீட்டுப்பட்டு விட்டதாம். இதுதான் வடநாட்டின் நிலைமை தமிழ்நாட்டில் அப்படிக் கூற முடியுமா? காரணம் இது பெரியார் பிறந்த மண். பெரியார் பிறந்த மண்ணிலே மதவாதத் தை விதைக்க அனுமதிக்க மாட்டோம் என்று அறிவிப்பதுதான் இந்தத் திராவிடர் எழுச்சி மாநாடு என்று குறிப்பிட்டார் பேராசிரியர் கே.எம். காதர் மொய்தீன்.

தமிழக காங்கிரஸ் மூத்த தலைவர் ஜி.ஏ. வடிவேலு

ஒரு பெரிய தீமை நாட்டைச் சூழ்ந்து நிற்கிறது. பிஜேபி ஆட்சிக்கு வரத் துடிக்கிறது. எங்குப் பார்த்தாலும் மோடியே பிரதமர் ஆகிவிட்டது போல ஒரு பிரச்சாரம்!

இந்த நிலையை எதிர்த்து அழிக்க மதச் சார்பற்ற சக்திகள் ஒன்று திரட்டப்பட வேண்டும் அதற்காகத்தான் இந்த மாநாடு. அந்த வகையிலும் தீர்மானம் இங்கு நிறைவேற்றப்பட்டுள்ளது.

யார் வரக் கூடாது என்பது மிகவும் முக்கியம், முதலில் மதச் சார்பின்மைச் சக்திகள் தமிழ்நாட்டில் ஒன்று திரட்டப்பட வேண்டும். அதனை வட மாநிலங்களுக்கும் கொண்டு செல்ல வேண்டும். அதற்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர் களோடு ஒத்துழைக்கத் தயார் என்று குறிப்பிட்டார்.

டி.கே.எஸ். இளங்கோவன் எம்.பி. (அமைப்புச் செயலாளர், தி.மு.க.)

திராவிடமா? ஆரியமா? இன்னும் தேவையா என்று சிலர் கேட்கின்றனர்.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பது திரா விடம். சதுர்வர்ணம் மயா சிருஷ்டம் என்பது ஆரியம். பெண்ணிற் பெருந்தக்கயாவுள என்பது திராவிடம் பெண்கள் பாவ ஜென்மம் என்பது ஆரியம்.

திராவிட இயக்கம் என்பது இழந்ததையெல்லாம் மீட்க வந்த இயக்கம்.

எங்கள் கொள்கை மானுடக் கொள்கை எங்கள் வீட்டில் எல்லா ஜாதியும் உண்டு - மதங்களும் உண்டு - இவற்றைக் கடந்துதான் எங்கள் வீட்டில் திருமணங்கள் - பெரியார் வழி வந்தவர்கள் நாங்கள்.

இப்பொழுது நாட்டை ஆள்வது அரசியல் கட்சிகளல்ல; நீதிமன்றங்கள் ஆளுகின்றன. தொழில் நிறுவன அதிபதிகள் ஆளுகின்றனர். ஊடகங்கள் ஆதிக்கம் செலுத்துகின்றன. இவர்கள்தான், இவை தான் ஒருவரை பிரதமராகக் கொண்டு வர முயற்சிக் கின்றன.

காகித ஊடகங்களைவிட மின்னூடகங்கள், தொலைக்காட்சிகள் மக்கள் மூளையை மாற்றி வருகின்றன.

மீண்டும் மீண்டும் பெரியாரைப் படியுங்கள். இல்லையேல் மீண்டும் நாம் சூத்திரர்கள், பஞ்ச மர்கள் என்ற நிலைதான் உருவாகும் எச்சரிக்கை என்று குறிப்பிட்டார்.

எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன் எம்.பி.
(தலைவர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி)

இப்படி ஒரு மாநாட்டைக் கூட்டியதற்காக திராவிடர் கழகத்துக்கு, தமிழர் தலைவருக்கு விடு தலைச் சிறுத்தைகள் கட்சி நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது என்றார் எடுத்த எடுப்பிலேயே!

தருமபுரியிலே ஜாதி வெறியர்கள், தாழ்த்தப் பட்டோர் வாழும் கிராமங்களைக் கொளுத்தி னார்கள் - அந்தக் கால கட்டத்திலேயே அந்தத் தருணத்திலேயே தருமபுரியில் ஜாதி ஒழிப்பு மாநாட்டைக் கூட்டி அதில் திருமாவளவனும் கண்டிப்பாகக் கலந்து கொள்ள வேண்டும் என்று ஏற்பாடு செய்தவர் தமிழர் தலைவர்.

தமிழ் ஓவியா said...


தாழ்த்தப்பட்டவர்களை அழித்து விடலாம் என்று யாரேனும் நினைத்தால் அதனை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்காது என்று கருஞ்சட்டைப் படை எச்சரிக்கை விடுத்த மாநாடுதான் அந்த ஜாதி ஒழிப்பு மாநாடு.

மோடி அலை என்று ஒன்றை கிளப்பி விட்டுள் ளார்களே - இதற்கு முறையான எதிர்ப்பினைத் தெரிவிக்க வேண்டாமா என்று நினைத்த நேரத்திலே இந்தமாநாட்டை நடத்திட தமிழர் தலைவர் முன் வந்துள்ளார்.

தந்தை பெரியார் இருந்திருந்தால் என்ன செய்து இருப்பாரோ அந்தக் கடமையைத் தான் நமது தமிழர் தலைவரும் செய்துள்ளார்.

மாநாட்டோடு இது நின்றுவிடக் கூடாது. மதச்சார்பற்ற தோழமைக் கட்சிகளை ஒன்றிணைத் தாக வேண்டும். இதற்கு தலைமை தாங்க பொருத்த மானது திராவிடர் கழகம்தான்.

இதே போல வடநாட்டிலும் இந்துத்துவாவை எதிர்க்கக் கூடியவர்களை ஒன்றிணைக்க வேண்டும். தமிழர் தலைவரே அதற்கு தலைமை தாங்கி வழி நடத்திட வேண்டும்.

இந்த மாநாட்டின் மூலம் தமிழர் தலைவர் தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளுக்கு ஓர் எச்சரிக்கை கொடுத்துள்ளார்.

எந்தக் காரணத்தைக் கொண்டும் பி.ஜே.பி.யோடு கூட்டு வைத்துக் கொள்ளக் கூடாது என்று நம்மையெல்லாம் எச்சரிப்பதற்குத்தான் தமிழர் தலைவர் இந்த மாநாட்டை கூட்டியுள்ளார்.

மோடி பிரதமரானால் தாழ்த்தப்பட்டோர் நிலைமை என்ன? சிறுபான்மை மக்களின் நிலை என்ன? இட ஒதுக்கீடு ஒழிக்கப்பட்டு விடும்.

இன்றைக்கு மோடியின் பின்பலமாக இருக்கக் கூடியவர்கள் யார்? ஆர்.எஸ்.எஸ். போன்ற இந்துத்துவா சக்திகளுக்கு, பன்னாட்டு நிறுவனங் களும், கார்ப்பரேட் நிறுவனம்களும்தான்.

தமிழ்நாட்டில் ராஜபக்சேயானாலும், ராம பக்சே ஆனாலும் அவர்களை கொள்கை ரீதியாக எதிர்த்துப் போராடக்கூடிய இயக்கம் திராவிடர் கழகம். விடுதலை சிறுத்தைகள் கட்சி அதற்கு உறுதுணையாக இருக்கும் என்றார். அவருடைய 25 நிமிட உரை அனல் பறப்பதாகவும், தமிழ் மண்ணின் உரிமைக் குரலாகவும், ஒலித்தது என்றால் அது மிகையாகாது.

தமிழர் தலைவர் கி.வீரமணி

எடுத்த எடுப்பிலேயே இது கூட்டிவரப்பட்ட கூட்டமல்ல. லட்சிய தாகத்தோடு திரண்டு வந்த கூட்டம் என்று இவர் சொன்னபோது கைதட்டல் அடங்க வெகுநேரமாயிற்று.

இரண்டுமுக்கிய செய்திகளைச் சொல்லுவதாகச் சொன்னார். நாங்கள் அரசியல் கட்சியல்ல; எங்கள் சிந்தனைக்கு தோன்றியதைச் சொல்லக் கூடியவர்கள்.

இப்பொழுது நம்முன் உள்ள பெரிய ஆபத்து - ஆபத்து என்பதைக் கூடப் புரிந்து கொள்ள முடியாத - இயலாத ஆபத்து.

சாக்ரடீசுக்கு அன்று கொடுத்த நஞ்சு, அது என்னவென்று தெரியும். ஆனால் இப்பொழுது கொடுக்கப்படுவதோ ஸ்லோ பாய்சன் முறை! ஒரு கட்டத்துக்குப் பிறகுதான் அதன் ஆபத்து புரியும். இதனைப் புரிந்து கொள்ள ஆய்வு தேவை.

மோடி வந்தால் இப்பொழுதுள்ள சிஸ்டத்தை மாற்றி அமைப்பார் என்கின்றனர்.

மீண்டும் மனுதர்ம முறைக்கு நாடு மாறக்கூடிய ஆபத்து இருக்கிறது. (மனுதர்மம் பாடத்திட்டமாக குஜராத்தில் இடம் பிடித்து விட்டதே)

ராஜஸ்தானில் நடைபெற்ற ஒரு நிகழ்வை நினைவூட்டினார். திராவிடர் கழகத் தலைவர். குழந்தைத் திருமண தடுப்புப் பணியில் ஈடுபட்ட ஒரு பெண்ணை, பார்ப்பனர் ஒருவர் வன்புணர்ச்சிக்கு உட்படுத்தினர்.

வழக்கின் தீர்ப்பு என்ன தெரியுமா? ஒரு கீழ்ஜாதிப் பெண்ணை உயர்ஜாதி பிராமணர் எப்படி கற் பழித்திருக்க முடியும் என்று வழக்கைத் தள்ளுபடி செய்தனரே! அந்த நிலை இங்கு வர வேண்டுமா? என்பது தான் நமது கேள்வி.

குஜராத் வளர்ச்சி பற்றிச் சொல்கிறார்களே அதுபற்றி இணையதளத்தில் வெளி வந்த ஒரு தகவல் என்ன தெரியுமா? கடந்த 16 ஆண்டுகளில் குஜராத்தில் 60 ஆயிரம் சிறுதொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன என்பதுதான் அந்த தகவல் என்று குறிப்பிட்டார்.

தமிழ் ஓவியா said...

மதவாதத்தை போலவே ஜாதீய வாதமும் ஆபத்தான ஒன்று.

தந்தை பெரியார் அன்று ஆதிக்கவாதிகளான பார்ப்பனர்களை தனிமைப்படுத்தி, பார்ப்பனர் அல்லாதார் இயக்கத்தை தொடங்கினர்.

இப்பொழுது சிலரோ பார்ப்பனர்களைச் சேர்த்துக் கொண்டு ஆண்டாண்டுக் காலமாக ஒடுக்கப்பட்ட மக்களைத் தனிமைப்படுத்த ஜாதிக் கட்சிகளை ஒருங்கிணைத்து அரசியல் கூட்டம் ஒன்றை உருவாக்குகிறார்கள்.

தாழ்த்தப்பட்டோர் வாழும் வீடுகளைக் கொளுத்துகிறார்கள், தருமபுரி மாவட்டத்தில் அதுதானே நடந்தது.

யார் அதிக அளவு ஒடுக்கப்பட்டார்களோ, உரிமைகள் மறுக்கப்பட்டார்களோ, அவர்களைத் தூக்கி விடுவதுதான் முதல் கடமை.
தாழ்த்தப்பட்டவர்களும், பிற்படுத்தப்பட்டவர் களும், இருகாரணிகளாக இருந்து ஒருவருக் கொருவர் உறுதுணையாக இருந்து உரிமைகளை ஈட்ட வேண்டிய கடமை அவர்களுக்கு இருக்கிறது.

அந்தக் கண்ணோட்டத்தில்தான் திராவிடர் கழகம் பாடுபட்டுக் கொண்டிருக்கிறது.

அதில், சிறுத்தைகளும் இணைந்து பாடுபடும். சிறுத்தைகளில் கருஞ்சிறுத்தை, வெள்ளைச் சிறுத்தை என்று பாகுபாடு கிடையாது. சிறுத்தை என்றால் சிறுத்தைதான் என்று தமிழர் தலைவர் குறிப்பிட்ட போது, பெரும் ஆரவாரத்துடன் மக்கள் கடலிலிருந்து கையொலி எழுந்தது.

சரியாக இரவு 10 மணிக்கு மாநாட்டுத் தலைவர் - கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் தமது உரையை நிறைவு செய்தார்.

கடைசிவரை மக்கள் கடல் மாநாட்டின் நிகழ்ச்சியில் கவனம் செலுத்தி உணர்வு பெற்றனர் என்றே கூற வேண்டும். மிகப்பெரிய மேடை, இரவைப் பகலாக்கிக் காட்டும் ஒளி விளக்குகள் என்று அமர்க்களமாக அமைந்து முடிந்தது திராவிடர் எழுச்சி மாநாடு.

மாநாட்டு நிகழ்ச்சிகள்

திருச்சியில் நேற்று (9.11.2013) நடைபெற்ற திராவிடர் எழுச்சி மாநாட்டில், மறைவுற்ற கழக பொருளாளர் வழக்கறிஞர் கோ.சாமிதுரை அவர்களின் படத்தை தமிழர் தலைவர் திறந்து வைத்தார். அப்போது மாநாட்டில் கூடியிருந்த பல்லாயிரக்கணக்கானோர் எழுந்து நின்று இரண்டு மணித்துளிகள் அமைதி காத்து இரங்கல் தெரிவித்தனர்.

திராவிடர் கழகப் பொருளாளர் வழக்குரைஞர் கோ.சாமிதுரை அவர்கள் நினைவு அரங்கை திருச்சி உழவர் சந்தையில் அழகு மலர் குலுங்கினாற் போல அமைக்கப்பட்ட மாநாட்டு மேடையில் நேற்று (9.11.2013) மாலை 5.30 மணிக்கு நாட்டுப்புறக்கலை நிகழ்ச்சியுடன் தொடங்கப்பட்டது.

முதல் நிகழ்ச்சியாக புரட்சித் திருமணத்தினை தமிழர் தலைவர் நடத்தி வைத்தார். கழகப் பொருளாளர் கோ.சாமிதுரை அவர்களின் படத்தினை கழகத் தலைவர் திறந்து வைத்தார். திருச்சி மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் எம்.சேகர் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார்.

கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அறிமுகவுரை ஆற்றினார்.

அவர் தமது உரையில், 2003இல் இதே இடத்தில் வி.எச்.பி. மாநாடு நடைபெற்றதையும், அப்பொழுது தங்கத்தினாலான திரிசூலத்தை காஞ்சி சங்கராச் சாரியார், வி.எச்.பி. தலைவர் அசோக் சிங்கால், பொதுச் செயலாளர் பிரவீன் தொகாடி யாவுக்கு வழங்கியதையும் நினைவூட்டி, அப் பொழுதும் உடனடியாக திராவிடர் கழக மாநில மாணவர் மாநாட்டினை, மிகப் பெரிய பேரணி யுடன் நடத்திக் காட்டியதையும் நினைவூட்டினார்.

மாநாட்டுக்கு கழகத் தலைவர் கி.வீரமணி தலைமை வகித்தார். திமுக அமைப்புச் செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் எம்.பி., விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமா வளவன் எம்.பி., திராவிடர் இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன், இந்திய யூனியன் முசுலீம் லீக் கட்சியின் தமிழ்நாடு தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர்மொய்தீன், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜி.ஏ.வடிவேலு, அருட்தந்தை ஜெகத் கஸ்பார் ஆகியோர் எழுச்சியுரை ஆற்றினர்.

டாக்டர் அதிரடி அன்பழகன் இணைப்புரையை சிறப்பாக வழங்கினார்.

தமிழ் ஓவியா said...


பற்களுக்கும், இதயநோய்க்கும் உள்ள விசித்திர உறவு!
--veramani
மனிதர்களை திடீர் என்று மரணமடையச் செய்யும் ஆட்கொல்லி நோய் மாரடைப்பு (Heart attack) ஆகும். இதயநோய் மருத்துவர்கள் இதில் பலவகை உண்டு என்று விவரித்துச் சொல்வார்கள்!

உலகின் மிகப்பெரிய அச்சுறுத்த லான இந்த இதயநோய் - மாரடைப்பு பற்றிய ஆய்வுகள் உலகெங்கிலும் உள்ள பல்கலைக்கழகங்களிலும், மருத் துவ வட்டாரங்களிலும் நடைபெற்று வருகின்றன.

அமெரிக்காவில் உள்ள இதயநோய் சம்பந்தமான அமைப்பு (American Heart Association) அவ்வப்போது பல அரிய தகவல்களை அதன் வெளி யீட்டில் (Journal) தந்து கொண்டே வருகிறது.

சரியாக பல்துலக்குவது என்பதும், பற்களைப் பாதுகாத்து பராமரிப்பது என்பதும், மனிதர்களை மாரடைப்பு - இருதயநோயிலிருந்து காப்பாற்ற உதவும் என்ற அரிய தகவலை ஆராய்ச்சி மூலம் கண்டறிந்த உண்மைகளை அண்மை யில் வெளியிட்டுள்ளார்.

அன்றாடம் சரியாக பிரஷ் மூலம் பல்துலக்குவதும், நூற்கள் போன்ற இழைகளைக்கொண்டு பல் இடுக்கு களில் புகுந்து தங்கும் உணவு எச்சங் களை அங்கிருந்து கிளப்ப (Flossing) முயலுதல், அதோடு ஆறு மாதங் களுக்கு ஒரு முறையாவது, பல் டாக் டரிடம் சென்று காட்டி பற்கள் பற்றி, பரிசோதித்து அவரது அறிவுரையைப் பெற்று நடப்பது, இதயநோய் வராமல் தடுக்கும் வழிமுறைகளில் ஒன்றாகும்.

இது பலபேர்களுக்கு வியப்பாகக் கூட இருக்கும்! என்ன இதயநோய்க் கும், பல்துலக்குவதற்கும் என்ன சம்பந்தம்?, இருதயம் தான் தனியே இயங்குகிறதே என்றுகூட சிலர் மேலெழுந்தவாரியாக எண்ணக்கூடும் அது தவறு.

இருதயநோயில் ஒரு வகை, இரத் தக்குழாய் சுருங்கி, இரத்த ஓட் டத்தைத் தடைப்படுத்தி நாளாவட்டத் தில் மாரடைப்புக்கு அடிகோலும் ஒன்று (Artheroselerosis)

நமது இரத்தக்குழாய்களைச் சுருக்கிவிடச் செய்யும் சக்தி, பற்களி டையே உள்ள (Pleaque) பற்காறை களுக்கு உண்டு.
மாரடைப்பு வருவதற்கு இது ஒரு முக்கிய காரணம் என்று இதயநோய் மருத்துவ அறிஞர்கள் கண்டறிந்து எச்சரிக்கை விடுத்துள்ளனர்!

வாயில் உள்ள பற்களிலும் பக்கத் தில் உள்ள Gums என்ற பற்தசை களிலும் கிருமிகள் குடியேறினால் பல் வியாதி (Periodental disease) வந்த பலரை சுமார் 5008 சாம்ப்பிள்கள் - பற்களில் தங்கிய கறை துகள்களை எடுத்து அமெரிக்காவின் மருத்துவ மனை (Mailman school - Man hatten residents samples) டாக்டர் (Moise desvarilux M.D., Ph.D.) மொய்சி டெஸ்வரீயூக்ஸ் அவர்கள் இந்த பற் களுக்கும் இதயநோய் ஏற்படுவதற்கு மான ஆய்வினைச் செய்து அமெரிக்க இதயநோய் ஆய்வு ஏட்டில் ஆய்வுக் கட்டுரையாக வெளியிட்டுள்ளார்!

மியாமி பல்கலைக்கழகப் பேராசிரி யரும் இவ்வாய்வு கட்டுரையின் கூட்டு ஆய்வாளரும், எழுத்தாளருமான டாக்டர் தட்சனா ரன்டெக் M.D., Ph.D. (Dr. Tatjana Rundeck) இதுபற்றி விளக்குகையில், இருதயத்திற்கு ரத்தம் எடுத்துச்செல்லும் குழாய்களை இந்த பற்காறைகள் (Pleaque) பத்தில் ஒரு பாகம் மி.மீ. அளவைச்சுருக்கி ரத்த ஓட்டத்தை தடை செய்வதாக அமைந்து விடுகிறது என்று விளக்கியுள்ளாராம்!

இந்த பற்காறைகள் எவ்வளவு ஆபத்து பார்த்தீர்களா?

இதனால் மாரடைப்பு வரலாம் (ஸ்ட்ரோக்) - பக்கவாதம்(Stroke) அதன் காரணமாக மரணமும் ஏற்பட லாம்.

உங்களைப் பயமுறுத்த இதை எழுதவில்லை, எச்சரித்து எளிதாக அன்றாட வாழ்க்கையின் பழக்க வழக் கங்களில் நாம் சற்று கூடுதல் கவனம் செலுத்தினால், அபாயங்களை அணுக விடாமல் தடுக்க முடியுமே என்பதால் எழுதுகிறோம்.

எனவே பல்துலக்குவது என்பது காலையைவிட இரவில் படுக்கப் போகும் முன்பு செய்வது, Flossing செய்வது (இண்டு இடுக்குகளில் உணவு எச்சங்கள் தங்காமல் இருக்க அவைகளை வெளியேற்றுவது), அவசி யம். உணவு உண்டபின் நன்கு வாய்க்கொப்பளித்தல் மிக அவசிய மாகும். முள் கரண்டி, மூலம் சாப்பிடும் நவ நாகரிகமானவர்கள் பலரும் வாய்க்கொப்பளிப்பதே இல்லை. நமக்கு நல் வாய்ப்பு - கை கழுவும்போதே வாயை நன்றாகக் கொப்பளிப்பது என்பது இயல்பான வாய்ப்பாகும்.

வருமுன்னர் காத்து, வாழ்வைப் பெருக்குவோம்!

தமிழ் ஓவியா said...

கிடுகிடுக்க வைத்த பறை இசை

திராவிடர் எழுச்சி மாநாட்டில் மகிழினி - மணி மாறனின் புத்தர் கலைக்குழுவினரின் நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சி சிறப்பு அம்சமாக அமைந்திருந்தது. 9.11.2013 சனி அன்று மாலை 5.30 மணியிலிருந்து இரவு 7 மணிவரை தூள் கிளப்பியது.

திருச்சி பெரியார் நூற்றாண்டுக் கல்வி வளாகத்தில் நவம்பர் 7, 8, 9 ஆகிய மூன்று நாள்களிலும், பறை இசைப் பயிற்சி புத்தர் கலைக் குழுவினரால் பயிற்சி அளிக்கப் பட்டது. கல்வி வளாகப் பிள்ளைகள் 46 பேர் பங்கேற்றனர்.

வெளியூர்களிலிருந்து பயிற்சிக்கு வந்தவர்கள் மூவர். புத்தர் கலைக் குழுவின் சார்பில் பங்கேற்பு 17 பேர். பெண்கள் சமமான எண்ணிக்கையில் இருந்தனர்.

மிகப்பெரிய மேடை முழுவதும் ஆக்கிரமித்து சின்னஞ் சிறுவர்களும் பறையடித்த காட்சி கண்கொள்ளாக் காட்சி!

குழந்தைகள் 7 அடிகளில் பறை இசைத்தனர். கால்கள் மாறி மாறி பத்து விதமான நடனம் ஆடினர்.

பறையடித்தல், ஆடுதல், கருத்துப் பகிர்தல், பாடுதல் என நால்வகை அம்சங்களில் கலை நிகழ்ச்சிகளை நடத்திக் காட்டி பல்லாயிரக்கணக்கான மக்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியைப்பற்றி மாநாட்டில் உரை நிகழ்த்திய பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்கள் இந்தச் செல் வங்கள் பறையடித்தபோது எங்களை அறியாமலேயே எங்கள் கால்களும் ஆடின. ஒரு காலத்தில் பறையடித்த வர்கள் பறையர்கள் என்று இழிவுபடுத்தப்பட்டனர்.

அந்த ஜாதிச் சிறையிலிருந்து மீட்டெடுத்து அனைத் துப் பிரிவினரும் இந்தக் கலையை மீட்டும்படிச் செய்து தமிழனுக்குரிய இந்தக் கலையை இந்தத் திராவிடர் கழக மேடை மீட்டுக் கொடுத்துள்ளது (பலத்த கரவொலி) என்றார்.

சென்னை பெரியார் திடலிலும், திருச்சி பெரியார் நூற்றாண்டுக் கல்வி வளாகத்திலும் எங்கள் பயிற்சிக்கு இடமளித்து எல்லா வகைகளிலும் ஊக்கம் அளித்த தமிழர் தலைவர் அவர்களுக்குத் தோழர் மணிமாறன் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

தொடக்கத்தில் சினிமா பின்னணி புகழ் மகிழினி (தோழர் மணிமாறனின் இணையர்) தோழர் திருத்தணி பன்னீர்செல்வம், இராம.அன்பழகன், புவனகிரி திலீபன், மயிலாடுதுறை அருள்தாஸ் ஆகியோர் பாடல்களைப் பாடினர்.

நாட்டுப்புறக் கலை இசைக் குழுவினரைத் தமிழர் தலைவர் பாராட்டினார்.

தமிழ் ஓவியா said...

திருச்சி திராவிடர் எழுச்சி மாநாட்டில் புரட்சித் திருமணம்!

நேற்று (9.11.2013) மாலை திருச்சி உழவர் சந்தையில் திராவிடர் கழகத்தின் சார்பில் நடைபெற்ற திராவிடர் எழுச்சி மாநாட்டில் சுயமரியாதைத் திருமணத்தின் சார்பில் ஒரு புரட்சிகரமான வாழ்க்கை இணைநல ஒப்பந்த விழா நடைபெற்றது.

நீலகிரி மாவட்டம் - குன்னூர் லிங்கப்பன் - மலர்க்கொடி ஆகியோரின் மகன் வெங்கடேஷ் பி.சி.ஏ. சென்னை மண் ணிவாக்கம் இரா. பத்மாசூரன் - சிவபாக்கியம் ஆகி யோரின் மகள் ப. அருணா எம்.எஸ்சி ஆகியோருக்கு மாநாட்டு மேடையில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் பலத்த கரவொலிக்கிடையே மணவிழாவினை நடத்தி வைத்தார்.

மணமகன், மணமகள் ஆகியோர் மணமுறிவு பெற்றவர்கள் மட்டுமின்றி மணமகளுக்கு மூன்று வயதில் பெண் குழந்தையும் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது. இது ஒரு ஜாதி மறுப்புத் திருமணம், தாலி விலக்கப்பட்ட திருமணம் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இந்தத் திருமணத்தில் வழக்கம்போல உறுதிமொழி களைக் கூறச் செய்த கழகத் தலைவர் அவர்கள், மணமகனுக்குக் கூடுதலான சில உறுதிமொழிச் சொற்களையும் சேர்த்துக் கூறச் செய்தார்.

எந்த நிலையிலும் பழைய வாழ்க்கை நினைவுகளைக் சுட்டிக்காட்டுவதில்லை என்றும்; இந்தக் குழந்தையை, தன் சொந்த குழந்தையைப் போலப் பாவிப்பேன் என்றும் கூறச் செய்தார். இத்தகைய உறுதிமொழிகளைக் கூறச் சொன்னபோது வெள்ளம்போல் திரண்டிருந்த மக்கள் திரள் பெருத்த கரஒலி எழுப்பியது.

திராவிடர் இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் பேராசிரியர் சுப. வீரபாண்டியன் அவர்கள் இதனைச் சிறப்பாகச் சுட்டிக்காட்டி - இது சாதாரண திருமணமல்ல - சமுதாயப் புரட்சித் திருமணம் என்று குறிப்பிட்டார்.

தன் பெற்றோர்களின் திருமணத்தை நேரில் பார்த்த பெருமை இந்தக் குழந்தைக்கு உண்டு என்று சொன்ன போது கூட்டத்தில் பெருத்த ஆரவாரம் ஏற்பட்டது. தொடக்கத்தில் திருமண நிலைய இயக்குநர் திருமகள் வரவேற்புரை ஆற்றினார். அருள் தந்தை ஜெகத் கஸ்பர், பேராசிரியர் காதர்மொய்தீன், தொல்.திருமாவளவன் ஆகியோர் சாட்சிக் கையொப்பமிட்டனர்.

தமிழ் ஓவியா said...


மூடநம்பிக்கைக்கு எதிரான போரில் வென்றிருக்கிறார் முதல்வர் சித்தராமையா


மூடநம்பிக்கைக்கு எதிரான போரில் வென்றிருக்கிறார் முதல்வர் சித்தராமையா
முடிவுக்கு வந்தது சாம்ராஜ் நகர் மூடநம்பிக்கை!
30 நாட்களுக்கு மேலாகியும் முதல்வராகத் தொடர்கிறார் சித்தராமையா

பெங்களூரு, நவ. 10- கருநாடக மாநிலம் சாம்ராஜ் நகர் மாவட்டத்துக்குள் நுழை யும் எந்த முதல்வரும் ஒரு மாதத்துக்கு மேல் தாக்குப்பிடிக்க மாட்டார்கள். பதவியை இழப்பார்கள் என்று கருதப்பட்டு வந்த நிலையில் அக்டோபர் 7-ஆம் தேதி அந்த மாநில முதல்வர் சித்தராமையா சாம்ராஜ் நகருக்குள் காலடி எடுத்துவைத்தார். இப்போது அவர் நுழைந்து ஒரு மாதமாகி விட்டது.

ஆனால், அவர் இன்றைக்கும் கருநாடக முதல்வராகத்தான் பவனி வருகிறார். மூடநம்பிக்கைக்கு எதிரான போரில் அவர் வென்றிருக்கிறார்.

சாம்ராஜ் நகர் மாவட்டத்துக்குள் நுழைந்தபோது அவர் கூறினார். தன்னம் பிக்கை அற்றவர்கள் மூடநம்பிக்கையை உருவாக்குகின்றனர். முட்டாள்கள் அதனை நம்புகின்றனர். நான் எப்போதும் மூட நம்பிக்கைகளை நம்பியதில்லை. மூட நம்பிக்கையை தகர்த்தெறியவே சாம்ராஜ் நகருக்கு வந்தேன் என்று இன்றைக்கு அவர் சொன்னதைச் செய்து காட்டி விட்டார்.

இன்னும் 30 நாட்களில் சித்தராமையா பதவி இழப்பார் என பல அரசியல் தலைவர்களும், ஜோதிடர்களும் கடந்த 30 நாட்களாக ஓயாமல் சொல்லி வந்தனர். இந்நிலையில் 30 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக சித்தராமையா வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இதனால் முந்தைய முதல்வர்களின் நாற்காலிகளை காவு வாங்கியது சாம்ராஜ் நகரின் மூடு மந்திரங்கள் அல்ல. அவர்கள் செய்த தவறுகளும், ஊழலும்தான் என்பது மக்களுக்கு தெளிவாக புரிந்துவிட்டது.

முதல்வராகப் பதவியேற்றதும் வீடு தேடிப்போய் எழுத்தாளர்களை சந்தித்தது. பத்திரிகையாளர்களை சந்தித்து ஆட்சி குறித்து ஆலோசித்தது. மூடநம்பிக்கைகள் நிறைந்த சாம்ராஜ் நகருக்குள் நுழைந்தது என கருநாடக அரசியலில் சித்தராமையா தனித்து நிற்கிறார்.

எப்படி வந்தது இந்த மூடநம்பிக்கை

இந்திய விடுதலைக்கு முன்பு வரை சாம்ராஜ் நகர் மாவட்டம் மதராஸ் ராஜ் தானியின் ஓர் அங்கமாக இருந்தது. 1956-ஆம் ஆண்டு மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது கருநாடக மாநி லத்துடன் சேர்க்கப்பட்டது. தமிழக - கருநாடக மாநில எல்லையில் இருக்கும் சாம்ராஜ்நகர், மைசூரிவிலிருந்து 87 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. மக்கள் நலனுக்காகவும், நிர்வாக வசதிகளுக்காக வும் 1996 ஆம் ஆண்டு மைசூரிலிருந்து தனியாக சாம்ராஜ் நகர் மாவட்டம் உருவாக்கப்பட்டது.

1947 ஆம் ஆண்டில் இருந்து இன்று வரை வடகருநாடகத்தை சேர்ந்தவர்களே தொடர்ந்து கருநாடகத்தின் முதல்வராக ஆட்சி செய்வதால், அம்மாநிலத்தின் தென் எல்லையில் இருக்கும் சாம்ராஜ் நகர் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது.

இதனால் கல்வி, சுகாதாரம், போக்குவரத்து என அடிப்படை வசதிகள் ஏதுமின்றி கருநாடகத்தில் சாம்ராஜ் நகர் மாவட்டம் பின்தங்கிய மாவட்டங்களின் பட்டியலில் நிரந்தரமாக இடம் பிடித்தது. உழைக்கும் மக்களின் வறுமையையும், அறியாமை யையும் மூலதனமாக்கிக் கொண்டு புதுப் புது விதங்களில் மூடநம்பிக்கை கூடா ரங்கள் புற்றீசல் போல் முளைத்தன.

இதனால் சாம்ராஜ நகர் மந்திர தந்திர சித்து வேலைகளுக்கும், செய்வினை, ஆவியை ஏவி விடும் விளையாட்டு களுக்கும் மிகவும் பெயர் பெற்றது, இத னால் சாம்ராஜ் நகரை சேர்ந்தவர்கள் என்றாலே சூன்யம் செய்து விடுவார்கள் என்ற அச்சம் கருநாடக மக்களிடம் பரவலாக காணப்படுகிறது.

- நன்றி தி இந்து, 8.11.2013

தமிழ் ஓவியா said...


திராவிடர் கழகப் பொருளாளர் கோ.சாமிதுரை மறைவு வைகோ இரங்கல்


திராவிடர் கழகப் பொருளாளரும், பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத் துணைத் தலைவரும், பெரியார் மணியம்மை அறிவியல்-தொழில்நுட்ப அறக்கட்டளை நிறுவன உறுப்பினரு மான வழக்கறிஞர் கோ. சாமிதுரை அவர்கள், 9.11.2013 அன்று காலை சென்னை, கோட்டூர்புரத்தில் உள்ள அவரது இல்லத்தில் மறைவுற்றார் என்ற செய்தி அறிந்து அதிர்ச்சியும் ஆறாத் துயரமும் கொண்டேன்.

விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி அருகில் உள்ள முடியனூர் என்ற குக்கிராமத்தில் பிறந்த சாமிதுரை அவர்கள், தமிழகம் முழுவதும் அறியும் வகையில் திராவிடர் கழகப் பணியின் மூலம் உயர்ந்தார். படிக்கட்டும் தமிழ் பேசும் பச்சையப்பன் கல்லூரியிலும், சென்னை சட்டக் கல்லூரியிலும் மாணவராகக் கல்வி கற்ற காலம் முதலே திராவிடர் கழகப் பணியில் அவர் முனைந்து செயல்பட்டார்.

தென்னாற்காடு மாவட்டப் பொருளாளர், திராவிடர் கழக அமைப்புச் செயலாளர், துணைப் பொதுச்செயலாளர், பொருளாளர் என தமது தொண்டால் படிப்படியாக உயர்ந்த கோ.சாமிதுரை அவர்கள் கருத்தாழமிக்க எழுத்தாளரும் ஆவார். சாது என்ற புனைப் பெயரில் அவர் விடுதலையிலும், உண்மையிலும் எழுதிய எழுத்துக்கள் கருத்தாழம் கொண்டவை ஆகும். அம்பேத்கர் பேசுகிறார் என்ற அரிய நூலையும் இவர் உருவாக்கித் தந்துள்ளார்.

அண்மையில் இவரது துணைவியார் சரோஜா அம்மையாரின் மரணம் நேர்ந்து அந்தத் துயரம் வாட்டிய நிலையிலும், தனது பணிகளில் வழக்கம் போல தொய்வற ஈடுபட்டார்.

தமிழக அரசின் பெரியார் விருது பெற்ற பெருமைக்குரிய கோ.சாமிதுரை அவர்களது மறைவுக்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் வீரவணக்கம் செலுத்துகிறது.

அவரது பிரிவால் துயருற்று இருக்கும் திராவிடர் கழகத் தோழர்களுக்கும், அவரது அன்புச் செல்வங் களான குமார், பாஸ்கர், சாந்தி, விஜயா, செல்வி ஆகியோருக்கும் ஆறுதலையும், இரங்கலையும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன் என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தனது இரங்கல் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தமிழ் ஓவியா said...

அய்யா! பொருளாளரே! உமக்கு நன்றி!

தந்தை பெரியாரின் தொண்டரே!

அய்யா ஆசிரியரின் நண்பரே!

இயக்கத்தின் பெட்டகமாய்

கழகத்தின் கணக்கிருப்பாய்

கண்டிப்பின் மறு உருவாய்

தொண்டறத்தின் சிறப்பினிலே

சிக்கனத்தில் வாழ்ந்தவரே

சிந்தையிலே நிறைந்து விட்டீர்!

தள்ளாத உடலுடனே

தளிர் நடை போட்டே தான்

ஆசிரியரின் நிழல் போலே

உடன் பிறப்பாய் நின்றவரே!

உள்ளமெல்லாம் வலித்திடவே

சாமிதுரை வாழ்கவென்றே

நன்றியுடன் வாழ்த்திடுவோம் !

- சோம.இளங்கோவன்
பெரியார் பன்னாட்டமைப்பு, அமெரிக்கா.

தமிழ் ஓவியா said...

இனமுரசு சத்யராஜ்

திராவிடர் கழகப் பொருளாளர் அய்யா சாமிதுரை அவர்களின் மறைவுச் செய்தி அறிந்து அதிர்ச்சி யுற்றேன். தந்தை பெரியார் அவர்களின் காலத்தி லிருந்து திராவிடர் கழகத்தின் எளிய தொண்ட னாகத் தம்மை இணைத்துக் கொண்டவர். திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அய்யா கி.வீரமணி அவர்களின் உற்ற நண்பராக 50 ஆண்டுகளாக உடனிருந்து இயக்கப்பணி செய்த பெருமகனாக, பெரியார் பெரும் தொண்டராக அவர் திகழ்ந்துள்ளார்.

திராவிடர் கழகத்துடன் எனக்குத் தொடர்பு ஏற்பட்ட காலத்திலிருந்து நான் சாமிதுரை அவர் களை நன்கு அறிந்து பழகியுள்ளேன்.``பெரியார் திரைப்படம் உருவானபோது அவருடன் பலமுறை உரையாடியது எனக்கு நினைவுக்கு வருகிறது. பெரியார் கொள்கையில் அடிபிறழாமல் வாழ்ந்த ஒரு முன்னணித் தலைவரை நாம் இழந்திருக்கிறோம்.

அவரது பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கும் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கும் திராவிடர் கழகத்தினருக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்களது துயரத்தில் நானும் பங்கெடுத்துக்கொள்கிறேன். - இவ்வாறு இனமுரசு சத்யராஜ் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டிலிருந்து....

கழகப் பொருளாளர் வழக்குரைஞர் கோ.சாமிதுரை அவர்கள் நேற்று (9.11.2013) காலை மறைவுற்ற செய்தி அறிந்ததும், அமெரிக்காவில் இருந்து தொலைப்பேசி வழியாக டாக்டர் சோம.இளங்கோவன், திரு.அசோக்ராஜ், திருமதி அருள், திரு.லட்சுமணன்தமிழ், பொறியாளர் சுந்தரராஜுலு, சிங்கப்பூரில் இருந்து திருமதி கவிதா மாறன், நடிகர் இனமுரசு சத்யராஜ், மும்பை இரவிச்சந்திரன் ஆகியோர் தங்களது இரங்கலை தமிழர் தலைவரிடமும், கழகப் பொருளாளரின் குடும்பத்தாரிடமும் தெரிவித்தனர்.

தமிழ் ஓவியா said...

சோதனைக் காலத்தில் எல்லாம் துணை நின்ற கழகப் பொருளாளர் வழக்குரைஞர் சாமிதுரை மறந்தாரே! - கி.வீரமணி

பேரிடி போன்றதோர் செய்தி!

சோதனைக் காலத்தில் எல்லாம் துணை நின்ற கழகப் பொருளாளர் வழக்குரைஞர் சாமிதுரை மறந்தாரே!

திராவிடர் கழகப் பொருளாளர் கோ.சாமிதுரை மறைவு!

திருச்சிக்கு இன்று (9.11.2013) காலை சென்றபோது, திராவிடர் எழுச்சி மாநாட்டிற்கான ஏற்பாடுகள்பற்றி கழகப் பொறுப்பாளர்களிடம் கலந்து பேசிக் கொண்டிருந்தபோது, பேரிடி போன்ற செய்தி ஒன்று எங்களைத் தாக்கியது.

எனது வாழ்விணையர் திருமதி மோகனா அவர்களும், கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் அவர்களும் என்னை நெருங்கி, தயங்கி நின்று சொன்னார்கள்.

கழகப் பொருளாளர் எனது அன்பு சகோதரர் கோ.சாமிதுரை அவர்கள் சற்றுமுன் சென்னையில் உள்ள (கோட்டூர்புரம் பகுதி) இல்லத்தில் காலமானார் என்ற அதிர்ச்சிச் செய்தியால் மிகவும் தாக்குண்டோம்!

சில காலம் உடல் நலிவுற்று இருந்த நிலையில், அவர் தேறி வந்தது ஆறுதலாக எங்களுக்கு - இயக்கத்திற்கு இருந்தது!

ஆனால், சற்றும் எதிர்பாராத விதத்தில் அவரது முடிவு ஏற்பட்டதை எப்படித் தாங்கிக் கொள்வது என்பதே தெரியவில்லை.
ஏற்றுக்கொள்ள முடியவில்லையே!

எங்களாலேயே ஏற்றுக்கொள்ள முடியாத நிலை இச்செய்தி என்ற நிலையில், அவரது அன்புச் செல்வங்களான மகன்கள், மகள்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களால் எப்படித்தான் தாங்கிக் கொள்ள முடியும்?

மாணவப் பருவம் தொட்டே சகோதரர் மானமிகு கோ.சாமிதுரை அவர்கள் எனக்கு நெருக்கமான இயக்கத்தவர். அரை நூற்றாண்டுக்குமேல் எங்கள் பாசமும், உறவும், நட்பும் மேலானதாக இருக்கும் ஒன்று.

அவர் பச்சையப்பன் கல்லூரியில் எம்.ஏ., படித்தபோது, நான் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் அதே காலத்தில் படிப்பில் இருந்தவன்.

திராவிடர் மாணவர் கழகம் எங்களை இணைத்தது. சட்டக் கல்லூரியில் இருவரும் இணை பிரியாதவர்களாக இருந்தோம்.

சோதனைக் காலத்தில் துணையாக இருந்த இளைஞர்

இயக்கத்திற்கு சோதனை ஏற்பட்ட போதெல்லாம், சற்றும் சபலமோ, சலனமோ கொள்ளாத இளைஞர் அவர் அன்று.

எனவேதான், அருமை அய்யாவின், அம்மாவின் பெரும் நம்பிக்கை பாராட்டைப் பெற்ற எனது உற்ற தோழர் என்ற பெருமைக்கு ஆளாகி, கடைசிவரை காத்தவர்.

வழக்குரைஞர் தொழில் தொடங்கும்போது கடலூரில் நாங்கள் ஒன்றாக சேர்ந்தோம். அவர் கல்லக்குறிச்சியில் பிரபலமான நிலையில், வழக்குரைஞர் தொழிலைக்கூட கடந்த 10 ஆண்டுகளுக்குமுன் துறந்து, இயக்கத் தொண்டாற்ற பெரியார் திடலுக்கே தன்னை ஒப்படைத்துவிட்டு, சென்னைவாசியானார் என்னைப் போலவே!

அவரது வாழ்விணையர் மறைந்த சரோஜா அவர்களும், எனது வாழ்விணையரும் கடலூரில் உயர்நிலைப் பள்ளியில் ஒன்றாகப் படித்தவர்கள்.

இப்படி இரு குடும்ப உறவுகளும் என்றும் மறக்க முடியாதவை - பிரிக்க முடியாதவை!
பாழும் சாவு பிரித்துவிட்டதே!

பாழும் சாவு - எங்களைப் பிரித்துவிட்டதே!

வரும் (நவம்பர்) 26 ஆம் தேதி அவரது 81 ஆம் ஆண்டு பிறந்த நாள்; என்னைவிட ஒரு சில நாள்கள்தான் மூத்தவர் அவர்!
அவரது பிரிவு கழகத்திற்கு ஏற்படுத்தியிருக்கும் பள்ளமும், இழப்பும் எளிதில் ஈடுசெய்ய முடியாத ஒன்று!

என்றாலும், தந்தை பெரியாரின் அறிவுரைக்கேற்ப, இயற்கையின் கோணல் புத்திக்குமுன் என்ன செய்ய இயலும்?

குளமான கண்களோடு பிரியாவிடை!

எனவே, நாம் அவருக்குப் பிரியாவிடையைக் குளமாகும் கண்களோடும், கனத்த இதய வலியோடும் தந்து வீர வணக்கத்தைத் தெரிவித்து, எங்களது பெரும் பெரியார் குடும்பமான அந்தக் குடும்பத்து செல்வங்களுக்கும் தேற்ற முடியாத எமது ஆறுதலை, இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.



- கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்.

9.11.2013

குறிப்பு: கழகக் கொடியை மூன்று நாள்களுக்கு அரைக் கம்பத்தில் பறக்க விடுமாறு கழகத் தோழர்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

தமிழ் ஓவியா said...

வாழ்க்கை குறிப்பு

பெயர் : கோ. சாமிதுரை

வயது : 81

பிறந்த ஆண்டு : 1934

பிறந்த இடம் : முடியனூர் (கள்ளக்குறிச்சி வட்டம்)

மாவட்டம் : விழுப்புரம்

பட்டம் : எம்.ஏ., பி.எல். - வழக்குரைஞர்

தந்தையார் பெயர் : கோவிந்தன்

தாயார் பெயர் : அய்யம்மாள்

துணைவியர் பெயர் : சரோஜா

மகன்கள் பெயர்

1. டாக்டர் ஜி.எஸ். குமார்
2. வழக்குரைஞர் ஜி.எஸ்.பாஸ்கர்,

மகள்கள் பெயர் :

1. திருமதி சாந்தி சம்பத்
2. திருமதி டி. விஜயா
3. திருமதி செல்வி

மாணவர் பருவம் முதல் திராவிடர் கழகத்தில் இருந்து வருகிறார்.

திராவிடர் கழகம் நடத்திய போராட்டங்களில் பங்கேற்று சிறை சென்றுள்ளார்.

பொறுப்புகள் : பொருளாளர், திராவிடர் கழகம்

நிர்வாகக் குழு : பெரியார் சுயமரியாதைப் உறுப்பினர் பிரச்சார நிறுவனத் (அறக்கட்டளை)
துணைத் தலைவர், பெரியார் மணியம்மை

இன்ஸ்டியூட் ஆஃப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி (அறக்கட்டளை)

எழுதிய நூல் : அம்பேத்கர் பேசுகிறார்

சாது என்ற புனைப் பெயரில் விடுதலையிலும், உண்மையிலும் கட்டுரைகள் எழுதி வந்தவர். கடலூரில் கி.வீரமணி, எம்.எஸ். ஜனார்த்தனம் (இன்றைய பிற்படுத்தப் பட்டோர் ஆணையத்தின் தலைவர்) ஆகியோருடன் இணைந்து வழக்குரைஞர் தொழில் நடத்தினார். பிறகு கள்ளக்குறிச்சியில் வழக்குரைஞராகப் பணியாற்றினார். இப்பொழுது முழு நேரம் திராவிடர் கழகப் பணிகளில் ஈடுபட்டு வந்தவர்.

தமிழ் ஓவியா said...


வழக்குரைஞர் கோ.சாமிதுரை மறைவு:


ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் திராவிடர் எழுச்சி மாநாடு தெரிவித்துக்கொள்கிறது!

திருச்சியில் இன்று *(9.11.2013) திராவிடர் எழுச்சி மாநாட்டின் காலை நிகழ்வான மதவாத - ஜாதீயவாத எதிர்ப்புக் கருத்தரங்கத்தின் தொடக்கத்தில் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் கீழ்க்கண்ட இரங்கல் தீர்மானத்தை முன்மொழிந்தார்.

திராவிடர் கழகப் பொருளாளரும், மாணவர் பருவந்தொட்டு கழகத்தில் ஈடுபட்டு, கடைசி மூச்சு அடங்கும்வரை கழகத்தில் நம்பிக்கைமிகுந்த பெருந்தூணாக விளங்கியவரும், கழகத்தின் சோதனை மிகுந்த காலங்களில் எல்லாம் நிலைத்து நின்று கழகத்திற்குப் பேராதரவு காட்டியவருமான வழக்குரைஞர் மானமிகு கோ.சாமிதுரை அவர்கள் இன்று (9.11.2013) காலை, 81 ஆவது வயதில் மறைவுற்றார் என்ற துயர செய்தியை அறிவிக்க வருந்துகிறோம். அவர்தம் பிரிவால் வருந்தும், அவர்கள் குடும்பத்தினருக்கும், இயக்கத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் திராவிடர் எழுச்சி மாநாடு தெரிவித்துக் கொள்கிறது.

தமிழ் ஓவியா said...


திராவிடர் கழகப் பொருளாளர் திரு. கோ. சாமிதுரை மறைவு தி.மு.க. தலைவர் கலைஞர் இரங்கல்


சென்னை, நவ.9- திராவிடர் கழகப் பொரு ளாளரும், நீண்ட கால மாக திராவிடர் கழக வளர்ச்சிக்காக அரும் பாடுபட்டவரும், திரா விடர் கழகத் தலைவர், இளவல் வீரமணிக்கு உற்ற துணையாக இருந்து வந்தவருமான - வழக் கறிஞர் திரு. கோ. சாமி துரை, எம்.ஏ., பி.எல்., அவர்கள் இன்று சென் னையில் திடீரென மறைவுற்ற செய்தியறிந்து மிகவும் வருந்துகிறேன். தன்னுடைய மாணவப் பருவம் முதலாக திரா விடர் கழகத்திலே ஈடுபாடு கொண்டவர் திரு. சாமிதுரை. திரா விடர் கழகத்தின் சார் பில் நடைபெற்ற அத் தனை போராட்டங்களி லும் ஆர்வத்தோடு சாமி துரை கலந்து கொண் டதை நான் நன்கறிவேன்.

திராவிடர் கழகத்தின் பொருளாளராக பணி யாற்றியதோடு, பெரி யார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன அறக் கட்டளையின் நிர்வாகக் குழு உறுப்பினராகவும், பெரியார் மணியம்மை இன்ஸ்ட்டிட்யூட் ஆப் சயன்ஸ் அண்ட் டெக் னாலஜியின் துணைத் தலைவராகவும் விளங்கி வந்தார். அவருடைய மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதோடு, அவரு டைய மருமகன், தமிழ கச் சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினர், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தீர்மானக் குழு உறுப்பினர், தம்பி குழந்தை தமிழரசனுக்கும், மற்றும் அவரு டைய குடும்பத்தினருக் கும், திராவிடர் கழகத் தோழர்களுக்கும், குறிப்பாக அந்தக் கட்சியின் தலைவர், தமிழர் தலை வர் கி.வீரமணி அவர் களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித் துக் கொள்கிறேன்.

தமிழ் ஓவியா said...


தொல்லை


வரவுக்கும் மேலாக வாழ்க்கைத் திட்டம் ஏற்படுத்திக் கொண்டு துன்பப்படுபவர்கள் நாணயமாய் வாழ முடியாமல் நாட்டுக்குத் தொல்லை விளைவிப்பவர்கள்.
(குடிஅரசு, 19.9.1937)

தமிழ் ஓவியா said...


வென்றார் சித்தராமையா


கருநாடக மாநிலம், சாம்ராஜ்நகர் மாவட்டத் திற்குள் நுழையும் எந்த ஒரு முதல் அமைச்சரும் ஒரு மாதத்திற்கு மேல் தாக்குப் பிடிக்கமாட்டார்கள். பதவியை இழப்பார்கள் என்ற ஒரு மூடநம்பிக்கை நிலவி வரும் நிலையில், இன்றைய முதல் அமைச்சர் சித்தராமையா அந்த மூடநம்பிக்கையை உடைத் துக் காட்டியது வரவேற்கத்தக்கது - பாராட்டத் தக்கது.

தன்னம்பிக்கையற்றவர்கள் மூடநம்பிக்கை களை வளர்க்கிறார்கள். முட்டாள்கள் அதனை நம்புகின்றனர். நான் எப்பொழுதுமே மூடநம்பிக்கை களை நம்புவதில்லை. மூடநம்பிக்கையைத் தகர்த்தெறியவே இந்த சாம்ராஜ்நகருக்கு வந் துள்ளேன் என்று அழுத்தமாகக் குறிப்பிட்டாரே!

30 நாட்களுக்குள் சித்தராமையா பதவியை இழப்பார் என்று அரசியல்வாதிகளும், ஜோதிடர் களும் கூறினார்களே - சாம்ராஜ் நகருக்கு முதல் அமைச்சர் சித்தராமையா சென்று வந்து ஒரு மாதம் ஆகிவிட்டது. அவர் பதவி ஒன்றும் பறி போய் விடவில்லை; பலமாகவே கால் ஊன்றித்தான் நிற்கிறார்.

உத்தரப்பிரதேசத்திலே ஒரு சாமியார் தங்கச் சுரங்கம்பற்றி உளறினார். இந்த நாட்டு ஏடுகளும், அரசியல்வாதிகளும் அதனை நம்பி ஏமாந்தார்கள்.

இப்படி மூடநம்பிக்கைகளை அவிழ்த்துவிடும் பேர் வழிகள் சட்டத்தின் முன் தண்டிக்கப்படாத வரை - தங்கள் எத்து வேலைகளை அரங்கேற்றிக் கொண்டுதான் இருப்பார்கள்.

சாம்ராஜ் நகர் என்பது கருநாடக மாநிலத்தில் உள்ள ஒரு பகுதி, ஆட்சி எல்லைக்குள் அந்தப் பகுதி அடங்காதா? அந்தப் பகுதியில் நல்வாழ்வுத் திட்டங்களை செயல்படுத்துவதற்கு முதல் அமைச் சர் என்ற முறையில் செல்லுவது - கடமையின் பாங்கு அல்லவா!

சாம்ராஜ் நகரில் அப்படி என்னதான் இருக் கிறது? அந்தப் பகுதியைக் கடவுள் கேவலமாகப் படைத்து விட்டாரா?

இந்தக் கேள்விகளுக்கெல்லாம் எந்த மேதாவிகளிடமிருந்தும், மூடத்தனத்தைப் பரப்பி வயிறு வளர்க்கும் ஊடகக்காரர்களிடமிருந்தும் அறிவு நாணயமான பதில் வருவது கிடையாது.

தங்களுடைய மூடநம்பிக்கை முற்றும் அம்பல மாகி விட்டது என்று தெரிந்த நிலையிலும் அடுத்த மூடநம்பிக்கையை அவிழ்த்துக் கொட்ட அவர்கள் சிறிதும் வெட்கப்படுவதே கிடையாது.

விஞ்ஞானம் தந்த அறிவுக் கொடையான ஊடகங்கள் அதற்கு மாறாக அஞ்ஞானத்தைப் பரப்புவதில் கட்டுக்கடங்கா வெறி கொண்டு அலைகின்றனவே - இந்த வெட்கக்கேட்டை எது கொண்டு சாற்ற?

இவ்வளவுக்கும், இந்திய அரசமைப்புச் சட்டம் மக்கள் மத்தியிலே விஞ்ஞான மனப்பான்மையை வளர்க்க வேண்டும் - அது ஒவ்வொரு குடிமகன் அல்லது குடிமகளின் கடமை என்று வலியுறுத்துகிறதே.

அத்தகைய அடிப்படைக் கடமையை அரசுகள் செய்கின்றனவா?

வேலியே பயிரை மேய்ந்த கதையாக ஆட்சி பீடத்தில், தலைமை இடத்தில் இருக்கும் முதல் அமைச்சர்களே, பிரதமர்களே, குடியரசுத் தலை வர்களே, ஆளுநர்களே மத மூடநம்பிக்கைக் கூண்டுக்குள் சிக்கிப் பரிதவிக்கிறார்களே!

என்ன கொடுமையென்றால் மகாராட்டிர மாநிலத்தில் சமூக சீர்திருத்தப் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நரேந்திர தபோல்கர் சுட்டுக் கொல்லப்படுகிறார் என்றால், எவ்வளவுக் கேவலம்!

உடனடியாக மகாராட்டிர மாநிலத்தில் மூட நம்பிக்கை ஒழிப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டது போல மற்ற மற்ற மாநிலங்களிலும் இத்தகு சட் டங்கள் கொண்டு வரப்பட வேண்டியது அவசிய மாகும்.

கருநாடகத்தில் அத்தகையதொரு சட்டத்தைக் கொண்டுவரவிருப்பதாக அம்மாநில முதல் அமைச்சர் அறிவித்துள்ளார் - வரவேற்கத்தக்கது.

எல்லாவற்றையும்விட இத்தகு சட்டம் ஒன்றை மத்திய அரசே கொண்டு வந்து அரசமைப்புச் சட் டத்தில் காணப்பட்ட சரத்திற்கு வடிவம் கொடுக்க வேண்டும் என்பதே நமது அழுத்தமான வேண்டு கோளாகும்.

தமிழ் ஓவியா said...


அறிவை அடக்க புதிய சட்டம்


மதஸ்தாபகர்களைக் குற்றம் சொல்வதைப் பற்றி தண்டிக்க என்னும் பேரால் ஒரு புதிய சட்டம் வேண்டும் என்றும் இப்போது எங்கும் ஒரே கூச்சலாயிருக்கிறது. இந்தச் சந்தர்ப்பத்தை நமது நாட்டுப்பார்ப்பனர்கள் தங்களுக்கு அனுகூலமாய் உபயோகப்படுத்திக்கொண்டு தங்களுடைய அக்கிரமங்களை நிலைக்க வைத்துக் கொள்ள எண்ணி அவர்களும் கூடவே கோவிந்தா போடுகிறார்கள்.

இம்மாதிரி ஒரு சட்டம் ஏற்படுத்துவதானது மனித உரிமையை அடக்குவதாகுமேயல்லாமல், மனித தர்மத்திற்கு நீதி செய்ததாகாது என்பதாக நாம் வலியுறுத்துவோம், மதம் என்று சொல்வது ஒரு மனிதருடைய கொள்கை அல்லது அபிப்பிராயமாகுமே யல்லாமல் அது உலகத்தில் உள்ள மனிதகோடிகள் அத்தனை பேரும் கட்டுப்பட்டு நடந்துதான் ஆகவேண்டுமென்று கட்டாயப் படுத்தக் கூடியதல்ல.

அப்படி எல்லோரையும் கட்டாயப் படுத்தப்பட்ட விஷயம் இந்த உலகத்தில் ஒன்றுகூட இல்லை யென்பதே நமது அபிப்பிராயம். உலக மனிதர்களில் 100க்கு 99 பேர்களால் ஒப்புக்கொள்வதாகச் சொல்லப்படும் கடவு ளையும் அவரது தத்துவங்கள் என்பதையும் மறுப்பதற்கே எல்லா மனிதனுக்கும் உரிமை அளிக்கப்பட்டிருக்கிறது.

கடவுள் செய்ததாகச் சொல்வதையும், சொன்னதாகச் சொல்வதையும் பற்றிய தர்க்கங்களும், மறுப்புகளும் அறிவு உலகத்தில் தினமும் தாண்டவமாடிக் கொண்டிருக்க உலகம் அனுமதிக்கப்பட்டிருக்கிறது, ஒன்றை எதிர்ப்பார்த்து அடையாமல் போனவர்களில் பலர் கடவுளையும் கூட தூட்சிப்பதையும் உலகம் பார்த்துக்கொண்டும் அனு மதித்துக் கொண்டுந்தான் வருகிறது. கடவுளைப்பற்றியே இவ்வளவு அனுமதிக்கப்பட்டவர் கடவுள் பக்தர்கள் என்று சொல்பவர்களைப்பற்றி, கடவுளை அடைய வழிகாட்டிகள் என்று சொல்பவர்களைப்பற்றி கேட்கவும் வேண்டுமா?

எனவே இவ்விஷயங்கள் ஒருவருடைய அபிப்பிராயமேயல் லாமல் அதுவே சத்தியமாய் விடாது, உலகத்தில் ஏதாவது சீர்திருத்தம் என்பது ஏற்படவேண்டுமானால் ஒருவர் அபிப்பிராயத்தை ஒருவர் கண்டிப்பதும், மறுப்பதும் ஒருவர் கொள்கையை அனுமதிக்கப்பட்டுதான் ஆகவேண்டும். அதற்குச் சட்டம் போட்டு தடுத்து விட்டால் அது மனிதனின் அறிவு வளர்ச்சியைத் தடுத்ததாகுமே யொழிய மற்றபடி அது எந்தவிதமான நன்மையையும் செய்ததாக ஆகாது.

அன்றியும், இம்மாதிரியாக ஒரு சட்டமியற்றுவது அநாகரிகமும் காட்டு மிராண்டித்தனமுமேயாகும் இப்பேர்ப் பட்ட விஷயங்களில்தான் மக்களுக்கு விசாரணை செய்ய தாராளமாக இடம் கொடுக்கப்படவேண்டும். அதற்கு இடையூறு உள்ளனவைகளையெல்லாம் களைந்தெறிய வேண்டும்.

ஒவ்வொரு காலத்திலுள்ள மக்கள் அறிவு நிலைக்கேற்றவாறு ஒவ்வொரு கொள்கைகள் பரப்பப் படுவதும் அது நிலைபெறுவதும், அதற்குக் கோடிக் கணக்கான மக்கள் பின்பற்ற ஏற்படுவதும், சகஜமான தேயல்லாமல் அதில் ஒன்றும் அதிசயமில்லை.

அதுபோலவே தற்காலத்தில் உள்ள மக்கள் அறிவு நிலைக்குத் தக்கபடி மாறிக்கொண்டே வருவதும் இயற்கையே ஒழிய அதிலும் ஒன்றும் அதிசய மில்லை. எனவே, மக்கள் வெறும் அரசியல் சமூக இயலில் மாத்திரம் முற்போக் கடைய வேண்டியது பாக்கியமில்லை, அறிவிலும், ஆத்மார்த்த விஷயத்திலும் மனிதனுக்குள் இன்னமும் என்ன என்ன சக்தி இருக்கிறது என்பதைக் கண்டு பிடிப்பதிலும் முற்போக்கடைய வேண்டிய விஷயங்கள் எவ்வளவோ பாக்கி யிருக்கிறது.

அவைகளைக் கவனிக்கும் போது இந்த அரசியலும் சமூக இயலும் வெகுசிறியதே யாகும். ஆனால் அப்பேர்ப்பட்ட முயற்சிகளுக்குச் சமூக இயல் முதலியவைகள் அடிகோலிகள் என்பதை மாத்திரம் ஒப்புக்கொள்ளலாம்.

ஆதலால் இம்மாதிரி அறிவு வளர்ச் சிக்கு ஏதுவாகிய பிறப்புரிமையான சுதந்திர உணர்ச்சிகள் சட்டத்தின் மூலமாய் அழிக்கப்பட்டால் உலகம் காட்டு மிராண்டித்தனத்திற்கு ஆளாக நேரிடும் என்பதை அறிவாளிகளுக்கு எச்சரிக்கை செய்கிறோம்.

- குடிஅரசு - கட்டுரை - 21.08.1927

தமிழ் ஓவியா said...


சத்தியாக்கிரகமாகுமா?


சென்ற வாரம் சென்னை மவுண்ட் ரோட்டில் உள்ள நீல்துரை உருவச் சிலையை இரண்டு தொண்டர்கள் உடைத்ததற்காக அவர்கள் ஒவ்வொரு வருக்கும், மூன்று மூன்று மாதம் கடுங்காவலும் முன்னூறு ரூபாய் அபராதமும் அது செலுத்தப்படாவிட்டால் மேற்கொண்டு மூன்று மாதம் தண்டனையும் அனுபவிக்கத்தக்கது என்பதாக தண்டிக்கப் பெற்றிருக்கிறார்கள்.

ஒரு சிலையின் கையை ஒடிப்பது சத்தியாக்கிரகமாகுமா? தொண்டர்களின் மனஉறுதியையும், அவர்களது தேசாபிமான வெறியையும் மெச்சிக் கொள்வதானாலும் இச்செய் கைக்குச் சத்தியாக்கிரகம் என்ற பெயர் ஒரு சிறிதும் பொருந்தாது என்பதே நமது அபிப்பிராயம்.

அக்கிரமத்தை ஒழிக்க எவ்வித கஷ்டத்தையும் அனுபவிக்கத் தயாராயிருக்கும் இம்மாதிரி ஊக்கமுள்ள தொண்டர்களைத் தலைவர்கள் என்ப வர்கள் சரியான வழியில் நடத்திப் பயன் உண்டாகும்படியாக உபயோகப்படுத்திக் கொள்ள வேண்டுமேயல்லாது இம்மாதிரி ஒழுங்கில்லாத காரியங்களை செய்வதற்கு உதவியாயிருக்கக் கூடாதென்பதே நமது அபிப்பிராயம்.

ஒரு சிலையின் கையை உடைப்பது துர்ராக்கிரகமென்பதே நமது அபிப் பிராயம். சிலையை எடுக்கும்படி போராடலாம். அதற்காகச் சத்தியாக்கிரகம் செய்யலாம். அதைப்பற்றி நமக்கு ஆட்சேபணை இல்லை. ஒரு சிலையை விகாரமாக்குவது மகாத்மாவின் தத்துவப்படிப் பார்த்தால் எல்லை கடந்த பலாத்காரமாகும் என்றே நமக்குப் புலப்படுகிறது.

நல்ல விஷயங்களுக்கு ஏற்பட்ட பொருளை இம்மாதிரி விஷயங்களுக்குச் செலவு செய்வதை நாம் பாராட்ட முடியாததற்கு வருந்துகிறோம். நீல்துரை அக்கிரமக்காரர் என்பதாகவே வைத்துக் கொள்வோம். அவர் செய்த அக்கிரமத்தைவிட அதிகமான அக்கிரமங்களும், கொடுமைகளும் செய்து வருகிறவர்களையெல்லாம் நாம் என்ன செய்து விட்டோம்?

அப்பேர்ப்பட்டவர்களையெல்லாம் பலாத்காரமில்லாமல் மனமாற்ற மடையும் படி நாம் அவர்களை வேண்டிக் கொள்கிறோமேயல்லாமல் அவர்களுடைய கையையும், காலையும் ஒடிக்கப் போகிறோமா? அல்லது ஒடிக்க எண்ணு கிறோமா? அந்தப்படியே இதிலும் நாம் நடந்து கொள்ளவேண்டியதாயிருக்க இம்மாதிரி நடக்கத் துணிந்ததானது வருத்தப்படத்தக்கதேயாகும்.

இம்மாதிரி ஒவ்வொரு காரியத்திற்கும் செய்ய ஆரம்பிப்போமானால், கடைசியாக அது எங்கு போய் நிற்கும் என்கிற ஒரு முடிவு கட்டவும் முடியாது. அன்றியும் நாம் நினைக்கிற காரியமும் கைகூடாததுடன் அது முறை அல்லவென்றே சொல்லுவோம்.

- குடிஅரசு - துணைத்தலையங்கம் - 28-08-1927

தமிழ் ஓவியா said...


சுசீந்திரம் சத்தியாக்கிரகம்


திருவாங்கூர் சமஸ்தானத்தில் பொதுஜனங்கள் அதாவது ஈழவர் முதலானவர்களைச் சில பொதுத் தெருக்களில் நடக்கவிடாமல் கொடுமைப்படுத்தி வந்ததின் காரணமாக வைக்கத்தில் சத்தியாக்கிரகம் செய்ததும், அது ஒருவாறு அனுகூலமாய் முடிவடைந்த தும் நேயர்களுக்கு ஞாபகமிருக்கலாம்.

அதன் பிறகும் அதே ராஜ்யத்தில் மற்றும் பல பொதுத் தெருக்களில் நடக்க உரிமை கொடுக்காமல் ஜனங்கள் உபத்திரவப் படுவதும், சிற்சில இடங்களை அந்தச் சர்க்கார் அனு மதித்து வருவதும் நேயர்கள் அறிந்திருக்கலாம். ஆனால், நாகர்கோவிலுக்கு அடுத்த சுசீந்திரம் என்னும் ஒரு ஊரிலும் இதே மாதிரி ஈழவர் முதலான ஜனங்களை நடக்கவிடாமல் கொடுமைப்படுத்தி வந்ததை உத்தேசித்து அதில் சத்தியாக்கிரகம் சென்ற வருஷம் ஆரம்பிக்கப்பட்டது.

ஆனால் அதிகாரிகளும் சில அதிகாரிகளுக்கு நல்ல பிள்ளை ஆகவேண்டு மென்று நினைத்தவர்களும், அந்த சத்தியாக்கிரகம் நடத்திய தலைவர்களை ஏமாற்றி, சீக்கிரத்தில் எல்லோருக்கும் வழி திறந்து விடப்படும் என்றும், சத்தியாக்கிரகத்தை நிறுத்திவிடும்படியும் சொல்லி வஞ்சித்து சத்தியாக்கிரகத்தைத் திடீரென்று நிறுத்தும்படி செய்துவிட்டார்கள்.

இம்மாதிரி மேற்படி சத்தியாக்கிரகம் நிறுத்தி சுமார் ஒன்றரை வருஷமாகியும் நாளதுவரை யாதொரு முடிவும் ஏற்படாமல் வருவதோடு, இப்போது சர்க்கார் வேறு ரோடு போட்டுக் கொடுப்பதாகவும், அதற்கு ரூபா பத்தாயிரம் வரை அரசாங்கத்தால் அனுமதிக்கப்பட்டிருப்ப தாகவும் தெரிய வருகிறது.

இம்மாதிரி செய்வதற்கு அந்த ஊர்க்காரர்களும் மற்றும் அந்த சத்தியாக்கிரகத்தில் சம்பந்தப்பட்டவர்களும், அனுமதிப்பார்களேயானால் அதைவிட மானக்கேடான காரியம் வேறில்லை என்பதே நமது அபிப்பிராயம். ஆதலால் சத்தியாக்கிரகத் தலைவர்கள் ஊர் ஜனங்களுடனும், சுற்றுப் பக்கத்துப் பிரமுகர்களுடனும், தொண்டர்களுடனும் கலந்து, சர்க்காருக்கு ஒரு மாத வாய்தா கண்டு ஒரு இறுதிக் கடிதத்தை அனுப்பிவிட்டு, அதற்குள் தேவையான பிரசாரம் செய்து தக்க ஆதர வைத் தேடிக்கொண்டு உடனே சத்தியாக்கிரகத்தைத் தொடங்கவேண்டுமென்று விரும்புகிறோம்.

தமிழ்நாட்டில் உற்சாகம் உள்ள பல தொண்டர்கள் பார்ப்பனர்களால் ஏமாற்றப்பட்டு வீண்காரியத்தில் பிரவேசித்து அனாவசியமாய் சிறை சென்று வரு கிறார்கள். இப்படி ஒரு காரியம் ஆரம்பித்தால் பலர் இவ்விடமிருந்து கூட வந்தாலும் வருவார்கள். இதை தக்கபடி யோசிக்க வேணுமாய்க் கோருகிறோம்.

- குடிஅரசு - கட்டுரை - 04.09.1927

தமிழ் ஓவியா said...

நேரத்தை புறம்தள்ளிய நீதிபதி

- மு.வி. சோமசுந்தரம்

நீதி கெட்டது யாரால்? தந்தை பெரியார் கேட்ட பொருள் பதிந்த பெரிய கேள்வி.

நீதி தேவன் மயக்கம் - விழிப்புடனும், தெளிவுடனும் இருந்து வாதத்தை கேட்டு, குவிந்துள்ள புராண குப் பையைக் கண்டு மயக்க நிலைக்குத் தள்ளப்பட்டார் நீதிபதி என்பதை அறிஞர் அண்ணாவின் நாடகம் விளக்கும்.

ஒரு முக்கியமான வழக்கு, வழக் கறிஞர் அடுக்கடுக்காக ஆதாரங்களை முன் வைக்கிறார். மூச்சு விடாமல் தொடர்ந்து பேசுகிறார். நீதிபதி, பின்னே சாய்வதும், முன்னே குனிந்து கேட்பதுமாக இருக்கிறார் அசைந்து அசைந்து உட்காருகிறார். அலுப்புத் தட்டி விடுகிறது. உரத்த குரலில்பேசி வந்த வழக்கறிஞர் வாதத்தை முடித்துவிட்டார். நீதிமன்றத்தில் சூழ்ந்திருந்த மனித ஒலி ஓய்ந்தது.

குற்றவாளிக்கு மரண தண்டனை என்று நீதிபதி தீர்ப்பைக் கூறினார்.

அதிர்ச்சி அடைந்த வழக்கறிஞர், நான் தீர்ப்பை எதிர்த்து மேல் முறை யீடு செய்யப் போகிறேன் என்றார்.

எனக்குப்பிறகு, வேறு நீதிபதி இல்லாதபோது எவரிடம் மேல் முறையீடு? என்று நீதிபதி கேட்டார்.

தூங்கிய நிலையிலிருந்த நீதிபதியிட மிருந்து விழிப்பு நிலையில் உள்ள நீதிபதியிடம் மேல் முறையீடு செய்யப் போகிறேன் என்றார் வழக்கறிஞர். நீதி தூங்கக் கூடாது என்பதற்கான ஒரு துணுக்கு.

தாமதமாகும் தீர்ப்பு, மறுக்கப்பட்ட நீதிக்கு சமம் என்று, நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து, விடியலை எதிர் நோக்கி ஆண்டு பலவாக துவண்ட நிலையில் காத்திருக்கும் கட்சிக்காரர்கள் ஏராளம்.

உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றம் அனைத்திலும் வழக்குகள் குவிந்து தீர்ப்புக்காக காத்திருக்கும் நிலையை நீடிக்க விடக் கூடாது என்று நீதியரசர்கள் குரல் எழுப்பியும் முயற்சித்தும் வருகிறார்கள்.

எண்ணியர் திண்ணியராகவும் இருக்க வேண்டுமல்லவா? செயல் திறம் படைத்த நீதிபதி ஒருவர் தீர்ப்பு வழங்குவதில் சாதனை நிகழ்த்திய செய்தி பலரின் பாராட்டைப் பெற்றுள்ளது. கட்சிக்காரர்களின் நெஞ்சில் பால் வார்த்துள்ளது. அதனைக் காண்போம்.

மேற்கு வங்காளம் இஸ்லாம்பூர் மாவட்ட, செஷன்ஸ் நீதிமன்றம், அக் டோபர் மாதம் 9ஆம் தேதி, புதன் கிழமை, காலை 11 மணிக்கு நீதிமன்றம் செயல்படத் தொடங்கியது. நீதிபதி முதலில், சாட்சிகள், சாட்சியம் அளிக்க வேண்டிய வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறார். அடுத்து, காவல் துறை அதிகாரிகள் அழைக்கப்பட்டு, சாட்சியாக விசாரிக்கப்பட வேண்டிய வழக்குகளை எடுத்துக் கொள்கிறார். மதியம் 2 மணிக்கு, பகல் உணவாக, சோறும், காய், கீரையை நீதிபதி உணவாக உட்கொண்டு வழக்கு விசாரணையைத் தொடர்கிறார். மாலை 4 மணிக்கு நீதிபதி, தன் அறையில் தேநீர் அருந்தி 15 நிமிடங்கள் ஓய்வு எடுத்துக் கொள்கிறார். வழக்குகளை நடத்துகிறார். இடை இடையே தேநீர் அருந்திக் கொண்டு மாலை நேரம் தொடர்கிறது. இரவு 11 மணிக்கு சிறிது இடைவேளை கொடுத்து 15 நிமிடத்தில் இரவு உணவை முடித்துக் கொண்டு வழக்குகளை நடத்துகிறார். இரவு முழுவதும் வழக்குகள்நடத்தப்படுகிறது. இந்த வேளையில் பிணை வழங்குதல், மேல் முறையீடு வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டன. இடையே தேநீர் குடித்துக் கொள்கிறார். இரவு முழுவதும் வழக்குகள் விசாரிக்கப்பட்டு மறுநாள், அதாவது வியாழன், 10ஆம் தேதி காலை 7 மணிக்கு, நீதிமன்றப் பணி வழக்கு விசாரணை முடிவடைகிறது.

தமிழ் ஓவியா said...


தொடர்ந்து 20 மணி நேரம் செயல் பட்டு 393 வழக்குகள் விசாரிக்கப்பட் டன. அக்டோபர் 10 முதல், நவம்பர் 9ஆம் தேதி வரை நீதிமன்றத்துக்கு விடு முறை என்பதால், மனிதநேய உணர் வுடன் கட்சிக்காரர்கள் மனக் கவலையைக் கவனத்தில் கொண்டு பணியாற்றிய நீதிபதியின், கடமை, பொறுப்புணர்வைக் கண்டு வியக்கா மலும், போற்றாமலும் இருக்க முடியாது.

இந்த சிறப்பான காரியத்தை நடத்தி முடிக்க நீதிமன்ற ஊழியர்களும், காவலர்களும், வழக்கு நடத்த வந்த 50 வழக்குரைஞர்களும் ஒத்துழைத்ததையும் மெச்ச வேண்டும். மாலை நீதிமன்ற வளாக உணவுக் கடைகளும் மூடப் பட்டதால் அனைவரும் தேநீர் குடித்து இரவைக் கழித்தனர்.

இந்நீதிபதியின் செயல்பாட்டை, வழக்குரைஞர்கள் எப்படி விமர்சித் துள்ளனர் என்பதைப் பார்ப்போம்.

மூத்த வழக்குரைஞர் கீதாநாத் கங்குலி: எனக்குத் தெரிந்தவரையில், வங்காளத்திலோ, ஏன் இந்தியாவிலோ இதுபோன்ற முன்மாதிரி இருந்த தில்லை. 2008இல் ஜெக்மோகன் டால்மியா வழக்கை உச்சநீதிமன்றம் நள்ளிரவு வரை விசாரித்தது. மே மாதம் 2009இல் கல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி டி.பி. சென்குப்தா கோடை விடுமுறையில் இரவு 11 மணி வரை 201 பிணை வழக்குகளை விசாரித்தார்.

இஸ்லாம்பூர் வழக்குரைஞர் சங்கத் தலைவர் முகமது ஃபெய்ஜ்யு ரிடீன் என்னுடைய தொழிற்காலத்தில், தொடர்ந்து இவ்வளவு நேரம் நீதி மன்றம் செயல்பட்டதை முதன் முறை யாகக் காண முடிந்தது.

அரசு துணை வழக்குரைஞர் கெய்சர் சவுத்ரி; நான் இரவு முழுவதும் இருந்தேன். நீதிபதியின் ஆற்றலும், பதட்டப்படாது செயல்பட்ட முறையும் மெச்சத்தக்கது, ஒவ்வொரு வழக்காக எடுத்து வழக்குரைஞர் வாதத்தைக் கேட்டு, எழுத்தர்கள் எழுத ஆணையை வழங்கி வந்தார். இவரின் செயல் முறையை, நீதித்துறை பாராட்ட வேண் டும்.

நீதித்துறையில் இத்தகைய சாதனையை பொது நல நோக்கோடு செயல்படுத்திய நீதிபதி ஜகாங்கீர் கபீர் என்பவர். 50 வயதானவர். பெக்ராம் பூரை சேர்ந்தவர். இஸ்லாம்பூரில் இரண்டு ஆண்டுகளாக பணியில் உள்ளார்.

‘The Telegraph’ 11.10.2013 இதழில் வெளிவந்த செய்தி

தமிழ் ஓவியா said...


திருச்சி விலங்கின மருத்துவர் திரு.மா. கங்காதரக் கோனார்


ஜாதி செருக்கைச் சாடி நீதிக்குப் போராடிய மாமனிதர் திருச்சிராப்பள்ளி மாரிமுத்து கங்காதரக் கோனார். அவர் 1908ஆம் ஆண்டு பிறந்தார். சிறு வயதில் அவர் தந்தை அவரை மதுக்கடைக்குச் சென்று மது வாங்கி வரப் பணித்தார். ஆனால் கங்காதரர் எவ்வளவு வற்புறுத்தியும் மறுத்தார். வாழ் நாள் முழுவதும் மது அருந்துவதையோ, புகைத்தலையோ, புலால் உணவு உண்ணுவதையோ அவர் விரும்பவில்லை. பின்னாளில் விலங்கின மருத்து வராகப் பணியாற்றிய காலத்திலும் இப்பழக்கங்கள் அவர்பால் இல்லை.

முதல் உலகப் பெரும்போரில் போர்ப்படையில் பணி புரிந்தார். அப்பணியில் பெற்ற ஊதியத்தை இயன்றவரை சேமித்துச் சென்னை விலங்கின மருத்துவக் கல்லூரியில் பயின்று பட்டம் பெற்றார். அவர் படித்த கல்லூரி மாணவர் விடுதியில் அக்கால நிலைக்கு ஏற்ப பார்ப் பனருக்குச் சிற்றுண்டி உணவருந்தத் தனி இடம் ஒதுக்கப்பட்டிருந்தது.

அக்காலத்துப் பொது உணவு விடுதிகளிலும் இந்நிலை இருந்தது. அந்நிலை மாற கங்காதரக் கோனார் வெகுண்டெழுந்தார். உண்ணாநோன்பு மேற்கொண்டார். அக்காலத்தில் தந்தை பெரியாரின் குடியரசு ஏட்டிலும் இச்செய்தி வெளியிடப்பட்டது.

நன்னிலத்தில் அவர் கால்நடை மருத்துவராகப் பணியாற்றிய காலத்தில் அஞ்சல் அலுவலகத் தலைவர். வட்டாட்சியர், விலங்கின மருத்துவர் இம் மூவரைத் தவிர மற்ற உயர் அலுவலகப் பணிகளில் பார்ப்பனரே இருந்தனர். அஞ்சல் ஊழியர் பெரும்பாலானோர் தாழ்த்தப்பட்டவரே. இவர்கள் பார்ப்பனர் வாழும் இடத்துக்குச் செல்லும்போது வெயிலின் வெம்மையிலும் காலணி அணியக்கூடாது எனத் தடுக்கப்பட்டனர். கங்காதார் அவர்களைக் காலணி அணிந்து செல்லுமாறு அறிவுறுத்தினார். அவரை எதிர்க்கும் துணிவு பார்ப்பனருக்கு இல்லை. எனவே அக்கொடிய பழக்கம் ஒழிந்தது.

டாக்டர் கங்காதரனின் இளவல் திரு. கிருஷ்சாமிக்குச் ஜாதி மறுப்புத் திருமணம் செய்வித்தார்.டாக்டர் க. முத்துபாபு (இணை இயக்குநர் கால் நடைப் பராமரிப்பு), பேரா. க. பாஸ்கரன் (கல்லூரி கல்வி இணை இயக்குநர்) ஆகியோர் அன்னாரது திருக்குமாரர்களாவர். நெஞ்சுரங்கொண்ட கங்காதரரை நினைவில் நிறுத்துவோமாக.

- சி.சி. செல்லம்,
யாதவர் களஞ்சியம், பக்327

தமிழ் ஓவியா said...

இந்தி - ஆரியத்தின் வழித் தோன்றல்

இந்தி மொழியைப் பற்றி நாம் அறிந்து கொள்ள வேண்டுமானால் வட நாட்டில் மொழிகள் எவ்வாறு தோன்றின என்பதைப் பற்றி முதலில் விளங்கிக் கொள்ளுதல் வேண்டும். இந்திய நாட்டினுள் புகுந்த ஆரியர் எல்லோரும் ஒரே முறையிற் புகவில்லை அலை அலையாகப் பலமுறைகளில் புகுந்தார்கள். அவர்கள் எல்லோரும் ஒரேவகை மொழியைப் பேசவில்லை; ஆனால் அம்மொழிகள் எல்லாம் ஒரே இனத்தைச் சேர்ந்தனவாயிருந்தன. அம்மொழிகளுள் ஒன்றில் மாத்திரம் சமயப் பாடல்கள் செய்யப்பட்டன. இவை மிகக்கவனத்தோடு செவி வழக்கில் நீண்டகாலம் காப்பற்றப்பட்டு வந்தன. பிற்பாடு பிராமணர் இம்மொழிக்கு இலக்கணஞ் செய்து இதனைக் கடவுள் சம்பந்தமான புனித மொழியாகக் காப்பாற்றினர். ஆரியர் பிராகிருத மொழிகளைப் பேசினர். பிராகிருதமென்பது பொதுமக்கள் வழங்கிய இலக்கணவரம்பில்லாத கிராமியமொழி. அக்காலத்தில் கிராமிய மொழிகள் இருபத்திரண்டு வரையில் இருந்தன. அம்மொழிகள் அவையவை வழங்கிய இடங்களின் பெயரால் அறியப் பட்டன. புத்தசமய நூல்கள் மகதி (பாலி) என்னும் பிராகிருத மொழியிற் செய்யப்பட்டன. சைனநூல்கள் பெரி தும் மகாராட்டிர பிராகிருதத்தில் எழுதப்பட்டன.

தமிழ் ஓவியா said...


ஆரியமக்கள் வட நாட்டில் நுழைந்தபோது, வடநாடு மனித சஞ்சாரமற்ற நாடாக இருக்கவில்லை. அங்கு திருத்தம் மிக்க மக்கள் வாழ்ந் தார்கள்; திருந்திய மொழியைப் பேசி னார்கள். அங்கு வாழ்ந்து கொண்டிருந்த பழைய மக்களுக்கும், புதிய மக்களுக்கும் கூட்டுறவு உண்டாயிற்று கலப்பு மணங்களும் நிகழ்ந்தன. ஆரியருக்குத் தம் கருத்துக்களை விளக்கும் இலகு நோக்கி, ஆரியச் சொற்கள் சிலவற்றைப் பழைய மக்கள் கையாண்டனர். பழைய மக் களுக்குத் தம் கருத்துக்களை விளங்கும் இலகு நோக்கி ஆரியர் பல இந்தியச் சொற்களைக் கையாண்டனர். இவ்வாறு இரு மக்களுக்குமிடையே மொழிக் கலப்போடு இரத்தக் கலப்பு முண்டா யிற்று. இரத்தத்ககலப்பினால் புதிய மக்கள் தோன்றினார்கள். கி.மு.ஆயிரம் வரை விந்தியமலைக்கு வடக்கேயுள்ள நாடுகள், ஆரியவர்த்தம் எனப்பட்டன.

கி.மு. 600 வரையில், பாரசீகர் பஞ் சாப்பை வென்றார்கள். அப்பொழுது சத்ரப்ஸ் என்னும் பாரசீகத்தலைவர்கள் பஞ்சாப்பை ஆண்டார்கள். அக்காலத் தில் பாரசீகர் பஞ்சாப்பில் குடியேறி னார்கள். அரசாங்க ஆவணங்களை எழுதுவதற்கு கரோஷ்தி என்னும் புதிய எழுத்து பாரசீகரால், வழங்கப்பட்டது. இது இன்றையப் பாரசீகம் போல இடப்பக்கமிருந்து வலப்பக்கம் எழுதப் படுவது அக்காலத்தில் வடநாட்டில் பாரசீக மொழிக் கலப்பு இரத்தக் கலப்புகள் தோன்றின.

நாலாம் நூற்றாண்டின் பிற்பகுதி யில் கிரேக்கர் இந்தியா மீது படை எடுத்தார்கள். வட இந்தியாவின் சில பகுதிகள் கிரேக்கர் ஆட்சிக்குட்பட் டிருந்தன. கிரேக்கர் பலர் வட நாட்டில் தங்கி வாழ்ந்தனர். அதனால் இரு ஜாதியாருக்குமிடையில் மொழிக் கலப்பும் இரத்தக் கலப்பு முண்டாயின. மவுரிய சந்திரகுப்த அரசன் கிரேக்க பெண்ணை மணந்திருந்தான். சில காலத்திற்குப் பின் பாரசீகத்தில் வாழ்ந்த கிரேக்கர், வடநாட்டின் சில பகுதிகளை வென்று ஆட்சி நடத்தினர். அக்காலத்தில் மிகப்பல கிரேக்கர் வட இந்தியாவில் குடியேறி வட நாட்டு மக்களோடு கலந்தார்கள்; இந்து மதத்தைக் கைக்கொண்டார்கள்; இந்தியப் பெயர்களையும் தமக்கு இட்டு வழங்கினார்கள். இக்காலத்தில் பிராகிருதமும், கிரேக்கமும் கலந்த ஒருவகை மொழியும் வடநாட்டில் வழங்கிற்று. வட நாட்டில் குடியேறிய கிரேக்கர் கிரேக்க நாட்டுக்கோ, பாரசீகத்துக்கோ செல்லவில்லை; இந்திய மக்களோடு கலந்து மறைந்து போனார்கள். பின்பு சகர் எனப்பட்ட சித்திய மக்கள் இந்தியா மீது படை எடுத்தார்கள். இவர்கள் வட நாட் டையும் தென்னாட்டின் சில பகுதி களையும் வென்று சில காலம் ஆட்சி புரிந்தார்கள். அக்காலத்தில் சித்திய மக்கள் பலர், வட நாட்டிலும் விந்தியத் திற்குத் தெற்கிலும் குடியேறினார்கள். இவர்களும் இந்து மதத்தைத் தழுவி இந் தியப்பழக்க வழக்கங்களை மேற் கொண்டு இந்தியராக வாழ்ந்தார்கள், இவர்கள் மொழிக்கலப்பும் இரத்தக் கலப்பும் வட நாட்டில் உண்டாயின. சகர் அரசர் ஆவணங்கள் தீட்டுவதற்குக் கிரேக்க எழுத்துக்களையே பயன்படுத் தினார்கள். ஒரு வகைக் கிராமிய கிரேக்க மொழியே அரசாங்க மொழி யாகவும் இருந்தது. பின்பு மங்கோலிய ஜாதியினர் வட இந்தியா மீது படை எடுத்து, வட இந்தியாவையும் விந்தியத் திற்குத் தெற்கிலுள்ள சில நாடுகளை யும் ஆட்சி புரிந்தனர். அக்காலத்தில் மங்கோலியரில் பலர் இந்தியாவிற் குடியேறினர். அக்காலத்தில் மங்கோலிய இரத்தக்கலப்பும், மொழிக்கலப்பும், வட நாட்டில் உண்டாயிற்று. பின்பு அவுணர் என்னும் மத்திய ஆசிய முரட்டு மக்கள் வட நாட்டை வெற்றி கொண்டனர். அப்பொழுது அவுணர் மொழிக்கலப்பும் இரத்தக்கலப்பும் வட நாட்டில் உண்டாயிற்று. பின்பு அரபுக்கள் இந்தியாவை வென்றார்கள். அக்காலத்தில் அரபுக்களும், பாரசீகரும், துலுக்கரும் வட நாட்டில் குடியேறினர். அதனால் அரபு, பாரசீக, துலுக்கு, இரத் தக்கலப்பும், மொழிக்கலப்பும் உண் டாயின. இவ்வாறு வட நாட்டில் மிக மிக முற்காலம் முதல் ஜாதிக்கலப்பு, மொழிக் கலப்புக்கள் உண்டாயிருந்து வருகின்றன.

- ந.சி.கந்தையா பிள்ளை (நூல்: திராவிட மொழிகளும் இந்தியும்)

தமிழ் ஓவியா said...


மங்கள்யான் பின்னணி அதிர்ச்சியூட்டும் தகவல்கள்
எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கடந்த ஞாயிற்றுக்கிழமையில் இருந்து செவ்வாய் வரை பரபரப்பாக வைத்துக்கொண்டு இருந்த ஒரு செய்தி மங்கள்யானைச்(செவ்வாய்க்கோளிற்கான விண்கலம்) சுமந்து கொண்டு வெற்றி கரமாக ஒரு ராக்கெட்டை செலுத்தி விட்டது. மகிழ்ச்சிகரமான செய்திதான், இந்த மகிழ்ச்சிகரமான செய்தியானது அதன் தலைமை இயக்குநரின் செயல் காரணமாக சுமார் 67 உயர் விண்ணி யல் ஆய்வாளர்களின் நீண்டகால உழைப்பு பின் தங்கிவிட்டது. காரணம் அந்த ஆய்வாளர்களின் உழைப்பைவிட இறுதிநாளிற்கு முன்பு அதன் இயக்குநர் குடும்பத்துடன் திருப்பதி சென்று திருமலை தெய்வத்தின் அருள் பெற்று வந்து பொத்தானை அழுத்தியவுடன் ராக் கெட் வெற்றிகரமாக பயணித்ததாம், மங்கள்யான் என்ற உடனே சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இது தான் அழுத்தமாக சொல்லப்படுகிறது. விண்வெளி ஆய்வாளர்களின் உழைப்பு ஒரு புறம் இருந்தாலும் அந்த பகவானின் அருள் தான் முக்கியத் துவம் மிக்கதாக உள்ளது. உண்மையில் அது பகவான் தானா, வரலாற்றை எடுத் துப்பார்த்தால் பலவித குழப்பங்கள் இந்து மத வித்தகர் ஒருவர் சொல்கிறார் அது பெண் சிலை என்று, பவுத்த மதத்தார் சொல்கிறார்கள் அது புத்தரின் சிலை என்று ஆனால் ஒன்று மட்டும் உறுதி அது சிறீ வெங்கடா சலபதி ஆனது 700 ஆண்டுகளுக்கு முன்புதான். அப்போது ஆட்சி புரிந்த மன்னர்களை கைக்குள் போட்டுக் கொண்டு ஆரம்பம் முதலே பல கதை களை சொல்லி பொன்னும், பொருளும் பெற்றுவர அது இன்றுவரை தொடர் கிறது, வர்ணகோட்பாட்டை ஆகமவிதி யாக கொண்ட கூட்டம் தென்னிந்தி யாவில் வரும் அத்தனைக் கோவில்களை யும் தங்கள் ஆளுமையின் கீழ் கொண்டு வந்து வேறு யாரையும் அங்கே விட வில்லை.

இந்த அர்ச்சகர் போஸ்டிற்கு எலிஜிபிலிடி ஒன்லி பார்ப்பனராக பிறந்திருக்கவேண்டும், சரி மங்கள் யானுக்கு வருவோம். தற்போது சமூக வலைத்தளங்களில் பல பிரபலங்கள் ஒரே கருத்தை சொல்கிறார்கள், அதாவது இஸ்ரோ தலைவர் தலைசிறந்த விண் வெளி ஆய்வாளர் என்றாலும் தான் சார்ந்த மதத்தின் மீது தளராத பக்தி கொண்டவர், அவரின் பக்தியின் காரண மாக அவருக்கு பகவான் அருள் கிடைத் தது அதன் காரணத்தால் மங்கள் யான் வெற்றிகரமாக பறந்தது என்கிறார்கள், இஸ்ரோ நிலையத்தில் இஸ்லாமியர்கள், கிருஸ்துவர்கள் பவுத்தர்கள் சீக்கியர் மற்றும் ஜைன மதத்தினரும் பணிபுரிகின் றனர், இவர்களின் ஆலயங்களுக்கும் சென்று பூசை செய்து வந்தால் ராக்கெட் இதைவிடவேகமாக பறந்திருக்குமே.

ஆனால் அவர் திருப்பதிக்கு சென்று பூஜை புனஸ்காரம் செய்து சதாபிஷேகம் வகையரா எல்லாம் முடித்து வெற்றிகர மாக நடக்க தங்க ராக்கெட் வழங்கி யுள்ளார் என்று சில பத்திரிகைகள் கூறுகிறது, தேவஸ்தானமும் தங்க ராக் கெட் என தைரியமாக சொல்லாமல் பகவானுக்கு ஆபரிங் செய்தார் என்று செய்தி வெளியிட்டுள்ளது. Isro Chief Offered Prayers To Lord Venkateswara | Tirupati News.

இங்கிலாந்தைச்சேர்ந்த ஒரு செய்தி நிறுவனம் அவர் சிறிய அளவிலான ராக்கெட் ஒன்று வழங்கியதாக கூறி யுள்ளது. (India’s Space Chief Offered Mini Rocket to Gods Before Mars Mission [VIDEO] IBTimes.co.uk ý)

திருப்பதி கோவிலுக்கு என்ன ப்ளாஸ்டிக் ராக்கெட்டா ஆபரிங் செய் வார்கள்!!! மனிதனுக்கு அறிவாற்றல் வந்து பல்லாயிரம் ஆண்டுகளாக மூட நம்பிக்கையில் மூழ்கி இருக்கையில் முதல் முதலாக மூடநம்பிக்கையினை தகர்த்து விண்னில் ஏறிப்பார்த்ததுதான் விண்வெளி ஆய்வு.

தமிழ் ஓவியா said...

புராண புரட்டுகள்

இதுவரை பல புராண புரட்டு களையும், அருவறுப்பான கதைகளை யும் தன்னகத்தே கொண்ட ஒரு மதம் அதன் அர்த்தமற்ற வழிபாடு போன்ற வைகளால் தான் இந்தியா இன்றுவரை பல நிலைகளில் பின்தங்கியுள்ளது, பல்லாயிரம் ஆண்டுகளாக இருந்து வந்த வர்ணபேதம்தான் இன்றும் சமூகத்தில் சமநிலையை இழந்து உறுதி யான ஓர் இலக்கை அடையமுடியாமல் இருக்க முக்கிய காரணம், மக்கள் வளம் தொழில் வளம், மற்றும் நிலவளம் போன்றவை இருந்தபோதும் வர்க்க பேதம் காரணமாக இவற்றை சரியாக பயன்படுத்த முடியாமல் எல்லா துறைகளிலும் தேக்க நிலையே நீடித்து வருகிறது, ஆம் இஸ்ரோவிலும் இந்த நிலைதான், இஸ்ரோ ஆரம்பித்ததில் இருந்து இன்றுவரை பட்டியல் இனத்தவருக்கு இடஒதுக்கீட்டின் படி பணி நியமனம் வழங்கப்படவில்லை, வேலைவாய்ப்பு விளம்பரங்களில் பட்டியல் பிரிவினருக்கும் இடம் உண்டு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று உள்ளது. ஆனால் இன்றுவரை யாரும் முதல் நிலைப்பணியில் சேர முடியவில்லை, அவர்கள் கேட்கும் தகுதிகளுக்கும் அதிகமாக முன்ன னுபவம் பெற்றவர்கள், விண்வெளி யியலில் பல முதுநிலைப்பட்டம் பெற்ற முனைவர்கள் உள்ளனர். அப்படி இருந்தும் ஏன் இன்றுவரை பட்டியல் இனத்தவர்கள் இஸ்ரோவின் முதன்மை பணிக்கு சேர்க்கவில்லை என்றால் இங்கு காணப்படும் பச்சை வர்ணபேதம் தான். காரணம். இந்த வெளிப்படையான உண்மையை கோவிலுக்குச்சென்ற பிறகு ராக் கெட்டை அனுப்பும் போதே தெரிந்து கொள்ளலாம்.. தான் சார்ந்த மதக் கடவுளை செயற்கைக்கோள் ஏவுவதற் காக சிறப்பு பூசைகள் செய்து ஆபரிங் கொடுத்தவர் கட்டாயம் அந்த மதம் சொன்ன கருத்துக்களை கடைப் பிடிக்கத்தானே வேண்டும்.

வர்ணபேதம்

அப்படி யென்றால் அந்த மதத்தின் கிளைகளான சோதிடத்தில் செவ்வாய் தீட்டு, செவ்வாய் தோஷம், சந்திர தோஷம், இதர கிரகப்பரிகாரம், ராகு, கேது இதர அத்தனையும் நம்புவார்கள், கட்டாயாம் நம்பித்தான் ஆகவேண்டும், இதை அவர் மறுத்தால் கோவிலுக்கு மட்டும் ஏன் சென்றார், தனது தலைமையில் ராக்கெட் விடுவதை பத்திரிகை விளம்பரப்படுத்த திருப்பதிக் குத்தான் செல்ல வேண்டும் என்ற நிலை இல்லையே, மக்களின் வரிப்பணம் அதில் வெற்றிகரமாக பயணித்த ராக்கெட் இது, புதிதாக கட்டப்பட்ட ஏவுதளம் 2 வாஸ்து சரியில்லை என்று நுழைவாயில் அமைப்பையே மாற்றி வைக்கும் பச்சை மூடநம்பிக்கை உள்ள ஒரு கூட்டத்தார் ஏவும் ராக்கெட் அதன் வெற்றிகரமான பயணம் மக்களுக்கு ஒரு தவறான செய்தியையே எடுத்துச் செல்லுமே தவிர உண்மையில் அறிவு சார் மக்கள் அதன் தலைவர் செய்த பூசை புனஸ்கரத்தால் வருத்தப்படுவார்களே தவிர பெருமைப்படு பவர்கள் அல்ல. தீட்டு வந்து விடுமா?

அந்த மதமே வர்ண பேதத்தின் முதுகெலும் பில் தானே நிற்கிறது, அதனால் தான் முதல் நிலைப்பணிகளில் சூத்திரர்களும், பஞ்ச மர்களும் பணியாற்ற இடம் கொடுக்க வில்லை, அப்படி கொடுத்திருந்தால் அவர்கள் தொட்ட ராக் கெட்டிற்கு தீட்டு வந்துவிடுமே, அவர்கள் பொத்தானை அழுத்தினால் ராக்கெட் விண்வெளியிலும் சென்று மங்களகரமான செவ்வாய் கோளையும் தீட்டாக்கி விடும் என்ற பயமோ என்னவோ? இங்கு ஒன்று மட்டும் உறுதிப்படுத்தப்பட்டு வருகிறது, உங்கள் போராட்டம் ஆர்ப்பாட்டம் எல்லாம் பூமியோடு நிப்பாட்டிக் கொள்ளுங்கள் விண்ணில் தீட்டுபட அனுமதிக்கமாட்டோம் என்கிறார் களோ என்னவோ?. . செவ்வாய்க்கிழமை அன்று சூரியன் (they mate, and out of this mating are born the Ashwini Kumar(s) – the twin sons of Surya. The name “Ashwini” is derived from the root “ashwa” meaning “horse”.)

இந்த அசுவினிகள் பிறந்த நாள் தான் செவ்வாய்க்கிழமையாம், ஆகையால் சூரியனின் பார்வையில் இருந்து பரிவு பிறக்குமாம். என்ன சொல்ல வருகிறார்கள் இங்கே நம் விஞ்ஞானிகள் இரவு பகலாக உழைத்து ராக்கெட்டை விட சூரியன் பிள்ளையைப்பெற்ற பிறகு சந்தோசமாக அவர்களைப்பார்க்க செல்வதால் வான்வெளியில் மகிழ்ச்சி யான தருமாக இருக்குமாம் இந்நேரம் ராக்கெட் விட்டால் சுபமாம்,

சோதிடம் பார்த்தார்களா?

மங்கள்யான் விட பல சோதிடர் களிடம் காலம் நேரம் எல்லாம் கேட் கப்பட்டதாம். இதை பொய்யென்று எப்படி மறுக்க முடியும்? தனிமனிதர் கோவிலுக்கு செல்வது தேவாலயங் களுக்கு செல்வது இதர தலங்களுக்கு செல்வது என்பது அவரவர் விருப்பம் ஆனால் நாடே எதிர்நோக்கிகொண்டு இருக்கும், ஒரு விஞ்ஞான வெற்றியை கடவுள் பெயருக்கு அர்ப்பணிக்கும் காரியத்தை செய்ததன் மூலம், நாட்டின் அறிவியல் திறனையே கேள்விக் குறியாக்கிவிட்டாரே?

தமிழ் ஓவியா said...


பிட்டி தியாகராயர்


சென்னை நகரை முதன் முதலாக 1867இல் 8 வார்டுகளாகப் பிரித்தார்கள். நகரில் குடியிருப்பவர்களிலிருந்து இரண்டு வார்டுகளுக்கு ஒருவர் வீதம் நான்கு கமிஷனர்களை நியமித்தனர்.

1878இல் 16 வார்டுகளுக்கு 32 கமிஷனர்கள் நியமிக்கப் பட்டார்கள். இவர்கள் நியமனம் வரி செலுத்துவோரிலிருந்து தேர்ந்தெடுக்கப்படுவதாய் இருந்தது.

1919இல் வார்டுகள் டிவிஷன்களாக மாறின. நியமன கமிஷ னர்கள் கவுன்சிலர்களாக்கப்பட்டுத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பிறகு சென்னை நகரம் 1947இல் 50 வட்டங்களாகவும், (டிவிஷன்கள்) 1961இல் 100 வட்டங்களாகவும், 1967இல் 120 வட்டங்களாகவும், இன்று 155 வார்டுகளாகவும் மாறி உள்ளன.

இப்போது டிவிஷன், வட்டம் என்று சொல்லாமல் வார்ட என்றே மீண்டும் குறிப்பிடுகிறார்கள். டி.எம். நாயர் அவர்கள் நகராட்சி உறுப்பினராகப் பணியாற்றிய காலம் வரை நகராட்சி, உறுப்பினர் பொறுப்பைக் கமிஷனர் என்றே கூறி வந்தனர்.

டாக்டர் நாயர் நகராட்சிப் பொறுப்பி லிருந்து விலகியதற்குப் பிறகு மனமாற்றம் ஏற்படக் கூடிய நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. டில்லி இம்பீரியல் சட்டமன்றத்துக்கு 1915ஆம் ஆண்டு சென்னைச் சட்டமன்ற உறுப்பினர்களிலிருந்து ஓர் உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.

இப்பொறுப்புக்குத் தாம் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என விரும்பினார் டாக்டர் நாயர். இந்த விருப்பத்தை தமது நண்பர்களிடம் தெரிவித்தார். டாக்டர் நாயரும் தேர்தலில் ஈடுபட்டு வேட்பு மனுத்தாக்கல் செய்தார்.

இறுதியில் டாக்டர் நாயர் தோல்வி அடைந்தார். அவருக்கு நான்கே வாக்குகள் கிடைத்திருந்தன. இத்தோல்விதான் நாயரின் மனமாற்றத்திற்குக் காரணமாக அமைந்தது. ஆனால், பிட்டி தியாகராயருக்கு வேறொரு வகையான அனுபவம் கிடைத் தது. பிட்டி. தியாகராயர் எவ்வளவுதான் சமூக நிலையில் உயர்ந்தவராக இருந்தாலும் அவரை ஒரு நிகழ்ச்சியில் பார்ப்பனர் ஒருவர் மேடைமீது ஏற்றாமல் சிறுமைப்படுத்தி, கீழே நாற்காலி போட்டு அமர வைத்து விட்டார். இத்தனைக்கும் அந்தப் பார்ப்பனர் அவரது அலுவலகத்தில் அவருக்குக் கீழே ஊதியம் பெறுபவராக இருந்தார்.

பார்ப்பனர் அல்லாதவராகப் பிறந்து விட்டார் என்பதற்காகவே சமூக நிலையில் தம்மைப் பார்ப்பனர்கள் எப்படி நடத்தினார்கள் என்பதை அவர் உணர்ந்து கொண்டார். இந்த நிகழ்ச்சி மயிலாப்பூரில் நடைபெற்றது. பிட்டி தியாகராயர் கடவுள் நம்பிக்கை உடையவர்.

(திராவிட இயக்கம் தொகுதி - 1 நீதிக்கட்சி வரலாறு க. திருநாவுக்கரசு பக்கம் 163)

- க. பழனிசாமி, தெ.புதுப்பட்டி

தமிழ் ஓவியா said...


கொடிது கொடிது (ஈ.வெ.ரா)


கொடிது கொடிது கோவிலுக்குப் போதல். அதனினும் கொடிது பார்ப்பான் பூசை செய்யும் கோவிலுக்குப் போதல். அதனினும் கொடிது குழவிக்கல்லையும், செம்பையும் கும்பிடுதல். அதனினும் கொடிது தேர்த் திருவிழா உற்சவத்திற்குப் போதல். அதனினும் கொடிது பெண்களை அங்கு கூட்டிப்போதல். அதனினும் கொடிது கோவில் கட்டுதல். அதனினும் கொடிது காணிக்கை போடுதல். அதனினும் கொடிது (அர்ச்சகப்) பார்ப்பானுக்கு ஈதல்.

- விடுதலை 21.10.1957

தமிழ் ஓவியா said...


கடவுளுக்குக் காணிக்கை ஏன்?


கடவுளை மற; மனிதனை நினை என்று அறிவுலக ஆசான் தந்தை பெரியார் அவர்கள் கூறியது கண்முன்னே உண்மையென காட்சியளிக்கும் செய்தி.

28.10.2013 தேதியன்று தினத்தந்தியில் வெளிவந்துள்ள செய்தி. திருப்பதி கோயிலுக்கு ரூ.35 இலட்சம் மதிப்புள்ள ஆம்புலன்ஸ் காணிக்கை எல்லாம் வல்ல இறைவன் தன்னையும், குடும்பத்தினரையும், மக்களையும் காப்பான் என்று எண்ணிச் செல்லும் மக்களைக் காக்க ஏழுமலையான் மறப்பானா?

மலைமேல் செல்லும் பேருந்துகள் உருண்டன பக்தர்கள் மாண்டனர். புலி, கரடி, சிறுத்தை தாக்கின பக்தர்கள் பாதிப்பு அடைந்தனர். பக்தர்கள் ஏழுமலையான் சன்னதியில் உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டனர்.

எதற்கும் பகவான் அசைந்து கொடுக்கவில்லை பக்தர்களை காக்கவில்லை. எந்த அவதாரமும் எடுக்கவில்லை. கடவுள் கைவிட்டார் மனிதன் கை கொடுத்தான் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டால் உடனடி சிகிச்சைக்கு ரூ.35 லட்சம் மதிப்புள்ள ஆம்புலன்ஸை கொடுத்து மக்களை காக்க அப்பல்லோ மருத்துவமனை அதிபர் வழங்கினார்.

(ஆண்டவன் காக்க மாட்டான் என அறிந்திருப்பாரோ) பச்சைக் குழந்தை பாலுக்கு அழுகையில் குழவிக் கல்லுக்கு பாலாபிஷேகம் செய்யும் நாடல்லவா?

ஆன்மிக நோக்கில் டாக்டர் பிரதாப் (ரெட்டி) அவர்கள் அளித்திருப்பினும் திருப்பதி வெங்கடாசலபதிக்கு வைரக் கிரீடம் தங்கத்தேர், தங்கப் பூணூல், உண்டியலில் பணம் என்று கொடுக்காமல் (ஏற்கெனவே கொடுத்திருந்தாலும்) உயிர் காக்கும் மருத்துவத்திற்கு தேவையான ஆம்புலன்ஸ் வாகனம் அளித்துள்ளார். அவரின் கடவுள் பற்றைவிட, மனிதநேயப் பற்று வென்று விட்டது. அவரின் மனிதநேயப் பற்றை நாமும் பாராட்டுவோம். என்ன பாராட்டத்தானே வேண்டும். ஏனெனில் வருத்தப்பட வேண்டியது நாமல்ல. நாமம் போட்ட பெருமாள்தானே!

- ச. மாரியப்பன், கோடம்பாக்கம், சென்னை

தமிழ் ஓவியா said...


சர்ச்சில் கூறியது ஒருமுறை


சர்ச்சிலை சொற்பொழிவு ஆற்ற அழைத்தார்களாம். எவ்வளவு நேரம்? என்று கேட்டார் சொற் பொழிவாளர். ஒரு மணி நேரம் பேசினாலும் மகிழ்ச்சியே! என்றனர். அப்படியானால் ஒரே நாளில் வந்து பேசி விடுவேன் என்றாராம்!

அரை மணி நேரம் என்ற போது, ஒரு வாரம் டைம் கேட்டாராம். பத்து நிமிடங்கள் பேச, இரண்டு வாரங்கள் வேண்டும் என்றார். குறுகிய காலத்திற்குள் பேசி முடிப்பது என்பது கடினமான காரியம். அதேபோல் சிறுகதை என்றால் கதை, தீம், இன்ட்ரெஸ்டிங் நடை, பஞ்ச் எல்லாம் இருக்க வேண்டும் என்பதால், நாவல் எழுதுவதைவிட சிறுகதை எழுதுவதே கடினம் நாவல் என்றால், ஒரு தீம் கிடைத்து விட்டால் மெல்ல மெல்ல கதையைக் கொண்டு வந்துவிடலாம்

தமிழ் ஓவியா said...


சூத்திரன் பாஞ்சாலிகள்


மணவறைப் பெண்ணின்

கூரைப் புடவையை மந்திரங்களால் அவிழ்த்து

முதலிலவளை சோமனுக்கு மணமுடித்து

பின் னவளை கந்தர்வனுக்கும் உத்திரனுக்குமென

நான்காவதாய் அக்னிக்கும் மனைவியாக்கி

மாற்றி மாற்றி மந்திரமோதும்

அந்தப் புரோகிதப் பார்ப்பான்

சூத்திரப் பாஞ்சாலியாய் அவளையாக்கி

அவளின் பதிவிரதத் தன்மையை

பலவாறாய்ப் பந்தாடி அழித்தபின்

பாவமந்த சூத்திரப் பையனை

அய்ந்தாவது கணவனாய் அவளுக்காக்கி

ஓதும் மந்திரத்தால் வெதும்பி

அந்த ஓமகுண்ட நெருப்பே

புகைவிட்டழுகிறது.

புரியாத ஜென்மங்களோ

அட்சதையை தூவுகிறது...

வைதீக திருமணங்களின் புரோகிதன் ஓதும் முக்கியமான மந்திரமீது: சோமசிறீ ப்ரதாமோ

- விவிதே கந்தர்வ விவிதே உத்ரஹ - த்ருதியோ அக்னிஸ்டே - பதிஸ துரியஸ்தே -

மனுஸ்ய ஜாஹா

இதன் பொருள்: இங்கு மணமகளாக இருக்கும் பெண்ணை முதலில் சோமனும், பின்னர்

முறையே கந்தர்வனும், உத்தி ரனும், அக்னியும் அடைந்து அனுபவித் தார்கள். இப்போது

அய்ந்தாவதாக மணமகனாகிய உனக்கு இவளை தானம் செய்து கொடுக்கிறேன்.

- பரமத்தி வேலூர் செல்மா காமராசன்

தமிழ் ஓவியா said...


நூல் வெளியீடு

திராவிடர் கழகம் கட்சி அல்ல ஒரு புரட்சி இயக்கமே! தந்தை பெரியார் கருத்துகள் பற்றி ஓர் ஆய்வு எனும் தலைப்பில் திராவிடர் கழகச் செயலவைத் தலைவர் சு. அறிவுக்கரசு அவர்களால் எழுதப்பட்டு, விழிகள் பதிப்பகத்தின் சார்பில் வெளியிடப்பட்ட அதனை திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் கருத்தரங்கத்தில் வெளியிட்டார். ரூ.160 விலையுள்ள அந்நூல் வெளியீட்டு விழாவின்போது ரூ.120-க்கு விற்பனை செய்யப்பட்டது.

திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் டாக்டர் பிறைநுதல்செல்வி, பேராசிரியர் அ. மார்க்ஸ், பகுத்தறிவாளர் பெரம்பலூர் ஓவியர் முகுந்தன், கவிஞர் நந்தலாலா ஆகியோர் கழகத் தலைவரிடமிருந்து பணம் கொடுத்துப் பெற்றுக் கொண்டனர்.

நூலைப்பற்றி கழகத் தலைவர் குறிப்பிட்டதாவது: இது பி.எச்.டி.க்குத் தகுதியானது. அறிவுக்கரசு பெயருக்கேற்ற அறிவுக்கு அரசாக இந்த நூலை எழுதியுள்ளார் என்று பாராட்டிய கழகத் தலைவர் நூலினைச் சிறப்பாக வெளியிட்ட விழிகள் பதிப்பக உரிமையாளர் வேணுகோபால் அவர்களையும் பாராட்டினார். வேணுகோபால் அவர்களும் நிகழ்ச்சிக்கு வந்திருந்தார்.

தமிழ் ஓவியா said...


படித்தவர்கள் மத்தியிலும் மூடநம்பிக்கை


இந்தியா குறைந்த செலவில் செவ் வாய் கிரக ஆராய்ச்சிக்கு விண்க லத்தை அனுப்பியுள்ளது குறித்து ஒவ்வொரு இந்தியனின் நெஞ்சும் சற்று உயர்ந்து நிற்கும் என்பதில் ஐயமில்லை. அதே வேளையில் படித்தவர்களின் மூடநம்பிக்கை கண்டு அவர்களின் தலை தரையை நோக்கியிருக்கும் என் பதிலும் அய்யமில்லை.

பாமரர்களின் மத்தியில் பரவலாக இருக்கும் மூட நம்பிக்கைகள் படித்த வர்கள் மத்தியில் புரையோடிப் போயிருக் கிறது.ஒவ்வொரு போலார் சாடிலைட் லாஞ்ச் வெகிகிள் என்னும் ஏவுகணை மூலமாக வானில் ஆராய்ச்சிக் கோள் கள் ஏவப்படும் போதெல்லாம் இன்றைய இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப் பின் தலைவர் டாக்டர் கே.ராதாகிருஷ் ணன் ஏவுகணையின் நகலுடன் திருப்பதி சென்று ஏழுமலையானின் காலில் அதை வைத்து வணங்கி விட்டு வந்த பின் தான் ஏவுகணை விண்ணில் செலுத்தப்படுகிறது என்ற தகவல் பகுத்தறிவாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது.

இது ஏவுகணை விஷயத்தில் மட்டும் அல்ல . புதிதாக கட்டப்பட்ட கப்பல் வெள்ளோட்டம் விடப்பட்டு பின்னர் கடலில் முதல் முதலாக பணி நிமித்தமாக இறக்கப்படும் போது கூட தேங்காய் உடைத்து திருஷ்டி கழித்து பூஜைபுனஸ்காரம் செய்த பின் னரே கப்பல் கடலில் இறக்கப்படுகிறது.

இஸ்ரோ அமைப்பு மொத்தத்தில் எவ்வித மூடநம்பிக்கையிலும் ஈடுபடுவ தில்லை என்று இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் ஐஏஎன் எஸ் செய்தியாளரிடம் இஸ்ரோ விஞ்ஞானி கள் கூறியுள்ளனர். அப்படியென்றால் போலார் சாடிலைட் லாஞ்ச் வெகிக்கிள் - சி 13 என்ற ஏவுகணை என்ன ஆயிற்று என்று கேட்ட போது அவர்களிடம் பதில் இல்லை. இஸ்ரோ பிஎஸ் எல்வி - சி 12 அய் ஏவிய பின்னர் ஓசன்சட்-2 மற்றும் ஆறு ஐரோப்பிய நாடுகளின் நானோ சாடிலைட்டுகளையும் அனுப்பிய ஏவு கணைக்கு பிஎஸ் எல்வி - சி 14 என்று பெயரிட்டனர்.

இது குறித்த கேள்விக்கு அது போன்ற எண்ணுடன் ஒரு ஏவு கணை இல்லை என்று இஸ்ரோ உயர் அதிகாரியொருவர் கூறியுள்ளார். எண் 13 ஐ ராசியில்லாத எண் என்று இஸ்ரோ கருதுகிறதா என்று கேட்ட போது அவர் மௌனம் சாதித்துள்ளார். ஆனால் அவர்கள் மூடநம்பிக்கையை முறியடித்து செவ்வாய் அன்று ஏவுகணையை ஏவியதாக மார்தட்டிக் கொள்கிறார்கள். இதுவரை செவ்வாய்க்கிழமையன்று ஒரு ஏவுகணை கூட ஏவப்பட்டதில்லை என்ப தற்கு செவ்வாய் வெறும் வாய் என்ற பழ மொழி உள்ளது போல் அது ஒரு ராசி யில்லா நாள் என்பதும் காரணமாகும்.

செவ்வாய் ராசியில்லை என்றால் அப்பெயர் கொண்ட கிரகம் குறித்து ஏன் ஆராய்ச்சி செய்யவேண்டும் என்ற கேள்விக்கு அவர்களிடம் பதில் இல்லை. இஸ்ரோ நிறுவனத்தின் மூத்த அதிகாரியொருவர் செவ்வாய் எனக்கு ராசியான நாள் என்று கூறியுள்ளார். அப்படியென்றால் அவரின் விருப்பப்படி செவ்வாய் ஏவுகணை அன்று ஏவப் பட்டதா? என்ற கேள்வி எழுகிறது. அந்த அதிகாரி தனது பெயரைக்கூற மறுத்துவிட்டார்.

செவ்வாய் கிரகத்துக்கு செவ்வாய் அன்று விண்கலத்தை அனுப்புவது பொருத்தமாக இருக்கும் என்று அவர்கள் கருதியிருக்கக் கூடும். மதநம்பிக்கைகளுக்கும், மூடநம்பிக் கைகளுக்கும் எதிரானது அறிவியல். அதேபோல் அறிவியலுக்கு மதநம்பிக் கைகளும், மூடநம்பிக்கை களும் எதிரானவை.

உலகம் உருண்டை என்று கலிலியோ கூறிய போது அவருக்கு மதம் வாய்ப்பூட்டு போட்ட சம்பவம் வரலாறாகும். பின்னர் மதம் அந்த உண்மையை ஏற்றுக் கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதும் வரலாறாகும். மதநம்பிக்கையும், மூடநம்பிக் கையும் இந்தியாவை சீரழித்து வரும் சமூகப்பிரச்சனைகளில் முக்கியமான இரண்டாகும்.

படிக்காதவர்கள் மத்தியில் தான் மூடநம்பிக்கை பரவலாக இருக்கிறது என்பதெல்லாம் பழங்கதை. இன்று அவை படித்தவர்களின் ரத்தத்தில் ஊறிக்கிடப்பதை இது போன்ற சம்பவங்கள் சுட்டிக்காட்டு கின்றன. திருஷ்டி கழித்தலும், பூனை குறுக்கே ஓடினால் ஆகாது என்பதும், கழுதை கத்தினால் சுபம் என்று கூறு வதும் காலம் காலமாக கூறப்பட்டு வரும் மூடநம்பிக் கைகளாகும்.

மதவாதிகள் அரசியலில் வேரூன்ற ஆரம்பித்த பின்னர் இவற்றுக்கு மவுசு கூடிவிட்டது. இன்றும் சமூக தளங்களில் செயல் பட்டுவரும் அரசியல், ஜனநாயக, சமூகநீதி இயக் கங்கள் அனைத்தும் மக்களிடையே கடுமையான வலுவான மூடநம்பிக்கை எதிர்ப்பு பணியில் ஈடுபட வேண்டும். மூடநம்பிக்கைகளை தடைசெய்யும் சட்டங்களை இயற்ற வேண்டும் என்று இவை அரசுகளை வற்புறுத்த வேண்டும்.

நன்றி: தீக்கதிர் 9.11.2013

தமிழ் ஓவியா said...


எருமை போவதுபோல்...

எவன் ஒருவன் முன்னோர்கள் சொன்னபடி, பெரியோர்கள் சொன்னபடி, புராணங்கள் சொன்னபடி, சாத்திரங்கள் சொன்னபடி என்று நடக்கின்றானோ அவன் எருமைக்கு ஒப்பாவான். அடித்து ஓட்டுகின்றவன் சொல் கின்ற பக்கம் எல்லாம் எருமை போவது போன்றே இவனும் செல்பவன் ஆவான்.

_ (விடுதலை, 13.8.1961)

தமிழ் ஓவியா said...


காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் பங்கேற்கவில்லை என அறிவிப்பு இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு மன்மோகன்சிங் கடிதம்

புதுடில்லி, நவ.11- இலங் கையில் சர்ச்சைக்குரிய காமன் வெல்த் மாநாட்டில் பிரதமர் மன்மோகன்சிங் பங்கேற்க வில்லை என அதிகாரப்பூர்வ மாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அவர் ராஜபக் சேவுக்கு கடிதம் அனுப்பினார்.

உள்நாட்டுப் போர் உச்ச கட்டத்தில் இருந்தபோது, லட் சத்துக்கும் அதிகமான தமிழர் களை இனப்படுகொலை செய்த இலங்கையின் தலைநகர் கொழும் புவில், 54 நாடுகள் பங் கேற்கும் காமன்வெல்த் மாநாட்டை நடத்துவதற்கு உலகமெங்கும் உள்ள தமிழ் அமைப்புகள், தமிழக அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து போர்க் கொடி உயர்த்தின.

இந்த மாநாட்டில் பிரதமர் மன்மோகன்சிங் பங்கேற்கவும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இது தொடர்பாக தமிழக சட்டப் பேரவையில் தீர்மானமும் நிறை வேற்றப்பட்டது. பல்வேறு அமைப்புகளின் சார்பில் போராட் டங்களும் நடைபெற்றன.

பலத்த எதிர்ப்புக்கு மத்தி யில், காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் மன்மோகன்சிங் பங் கேற்பது தொடர்பாக காங் கிரஸ் உயர்நிலைக்குழு இரண்டு முறை கூடியும், முடிவு எடுக்க முடியவில்லை. காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்பதா, வேண்டாமா என்பதை பிரத மரின் முடிவுக்கே காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி விட்டு விட்டதாக தகவல்கள் வெளியாகின.

இதற்கிடையே டெல்லியில் நேற்று பேட்டி அளித்த வெளி யுறவுத்துறை செய்தித் தொடர் பாளர் சையத் அக்பருதீன், இலங்கை காமன்வெல்த் மாநாட் டில் பிரதமர் மன்மோகன்சிங் பங்கேற்பது குறித்து முடிவு எடுக்கப்படவில்லை. அதே நேரத்தில் அமைச்சர்கள் அளவி லான கூட்டத்தில் வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் கலந்துகொள்கிறார் என அறிவித்தார். இதனால் பிரதமர் மன்மோகன்சிங் பங் கேற்கப் போவதில்லை என்பது கிட்டத்தட்ட உறுதியானது.

இந்நிலையில் காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் மன்மோ கன்சிங் பங்கேற்கப்போவ தில்லை என்பது அதிகார பூர்வ மாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு பிரத மர் மன்மோகன் சிங் அவசரக் கடிதம் ஒன்றை எழுதினார்.

அந்தக் கடிதம், கொழும்பு வில் உள்ள இந்திய தூதரகத் தின் மூலமாக ராஜபக்சேவிடம் ஒப்படைக்கப்பட்டது.

அந்தக் கடிதத்தில் என்ன எழுதப்பட்டுள்ளது என்ற விவ ரம் வெளியிடப்படவில்லை. இருப்பினும், சிறிய அளவிலான அந்தக் கடிதத்தில் தன்னால் காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ள இயலவில்லை என பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

அதே நேரத்தில் என்ன கார ணங்களால் காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்க இயல வில்லை என்பதை பிரதமர் மன்மோகன்சிங் கடிதத்தில் குறிப்பிடவில்லை என தெரிய வந்துள்ளது.

தமிழக அரசியல் கட்சி களின் கடும் எதிர்ப்பு, தமிழக சட்டப் பேரவையில் இயற்றப் பட்ட தீர்மானம், உலகத் தமிழ் அமைப்புகளின் எதிர்ப்பு ஆகியவற்றுக்குப் பணிந்துதான் பிரதமர் மன்மோகன்சிங், காமன்வெல்த் மாநாட்டில் பங் கேற்காமல் தவிர்த்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் ஓவியா said...


சென்னை - பெரியார் திடலில் அறிவியல் மனப்பான்மை வளர்ப்பு மற்றும் மந்திரமல்ல; தந்திரமே விளக்கப் பயிற்சிப் பட்டறை துவங்கியது!

அய்ந்து நாள் நடைபெறும் அறிவியல் மனப்பான்மை பயிற்சிப் பட்டறையினை தொடங்கி வைத்து திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் உரையாற்றினார். உடன் அகில இந்திய பகுத்தறிவாளர் கழக கூட்டமைப்பின் தலைவர் பேராசிரியர் நரேந்திர நாயக், பன்னாட்டு மனிதநேய நன்னெறி ஒன்றியத்தின் பொறுப்பாளர் பாபு கோகினேனி, பகுத்தறிவாளர் கழக மாநில பொதுச் செயலாளர் வீ.குமரேசன், திராவிடர் கழக மாநில மாணவரணி செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் ஆகியோர் உள்ளனர் (சென்னை-11.11.2013)

சென்னை, நவ. 11- சென்னை - பெரியார் திடலில் அறிவியல் மனப்பான்மை வளர்ப்பு மற்றும் மந்திரமல்ல தந்திரமே விளக்கம்(Development of Scientific Temper and Demystification of Miracles) பற்றிய 5 நாள் பயிற்சிப் பட்டறை (நவ. 11 முதல் 15 முடிய) துவங்கியது.

மய்ய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை மற்றும் பெங்களூரு கர்நாடகா அறிவியல் கழகம் உதவியுடன் தமிழ்நாடு பகுத்தறிவாளர் கழகம் நடத்திடும் தமிழ்நாடு மாநில அளவிலான கூட்டுப் பயிற்சிப் பட்டறையின் தொடக்க விழா அன்னை மணியம்மையார் அரங்கத்தில் நடைபெற்றது.

பயிற்சிப் பட்டறைக்கு வருகை தந்தோரை வரவேற்று திராவிடர் கழக மாநில மாணவரணிச் செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் உரையாற்றினார். தொடக்க விழாவிற்கு தலைமை வகித்த பகுத்தறி வாளர் கழகத்தின் மாநில பொதுச் செயலாளர் வீ.குமரேசன் தனது உரையில், அரசமைப்புச் சட்டம் அறிவியல் மனப்பான்மை வளர்ப்பதை குடிமக்களின் அடிப்படைக் கடமைகளுள் ஒன்றாக வலியுறுத்துகிறது. ஆனால் அரசே சில சமயம் அறிவியல் மனப்பான்மையுடன் நடந்து கொள்வ தில்லை.

அண்மையில் உத்திரப்பிரதேச மாநிலத்தில் சாமியார் ஒருவர் கண்ட கனவின் அடிப்படையில் 1000 டன் தங்கப் புதையல் கிடைப்பதாக அரசுத் துறையினரே மண்ணைத் தோண்டும் பணியில் ஈடுபட்டது, அறிவியல் மனப்பான்மை சார்ந்ததாக இல்லை. மக்களிடம் அறிவியல் மனப்பான்மை, விழிப்புணர்வு இருந்தால் அரசு இத்தகைய செயல் களில் ஈடுபடாது. அத்தகைய விழிப்புணர்வுக்கு, பிரச்சாரத்திற்கு இந்தப் பயிற்சிப் பட்டறை பயன்பட வேண்டும். பயிற்சியாளர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டார்.

தொடக்க உரை - கவிஞர் கலி.பூங்குன்றன்

பயிற்சிப் பட்டறையினை தொடங்கி வைத்த திராவிடர் கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் தனது உரையில் குறிப்பிட்டதாவது:

மூடநம்பிக்கை ஒழிப்புப் பணியினை, அறிவியல் சார்ந்த அணுகுமுறையினை கடைப்பிடிப்பதை தந்தை பெரியார் 1925ஆம் ஆண்டிலிருந்து அமைப்பு ரீதியாக பிரச்சாரம் செய்தார். அவர் நிறுவிய சுயமரியாதை இயக்கமும் தொடர்ந்து அறிவியல் மனப்பான்மையினை மக்களிடம் பெருக்கிட பிரச்சாரப் பணியில் ஈடுபட்டு வருகிறது. பாமர மக்களும் புரிந்து கொள்ளும் முறையில் பிரச்சாரம் செய்வது பெரியார் இயக்கத்தின் தனிச் சிறப்பு ஆகும்.

அறிவியலை ஒருவர் படிப்பது என்பது ஒன்று, அறிவியல் மனப்பான்மையுடன் வாழ்வது என்பது வேறு. அறிவியல் படிப்பவர்கள் அனைவரும் அறிவியல் மனப்பான்மையுடன் நடந்துகொள்வ தில்லை.

மூடநம்பிக்கை பலவற்றை பழக்கத்தின் காரண மாகக் கடைப்பிடித்து மனித வளர்ச்சிக்கு முட்டுக் கட்டையாக இருந்து தங்களது முன்னேற்றத்திற்கும் தடை விதித்துக் கொள்கின்றனர். அறிவியல் மனப்பான்மையுடன் மக்கள் அனைவரும் நடந்து கொண்டால் மானிடம் வளர்ச்சிப் பாதையின் பல்வேறு சிகரங்களை எட்டமுடியும்; வெற்றிகளை குவித்து மனித சமுதாயம் இணக்கமுடன் வாழ்ந்திட வழி ஏற்படும்.

இந்த பயிற்சிப் பட்டறையில் கலந்து கொண் டுள்ள அனைவரும் அறிவியல் மனப்பான்மையினை வளர்க்கின்ற பிரச்சாரகர்களாக மாறிட வேண்டும் என்று தமது உரையில் இவ்வாறு குறிப்பிட்டார்.

பன்னாட்டு மனித நேய நன்னெறி ஒன்றியத்தின் (IHEU) பொறுப்பாளர் பாபு கோகினேனி மற்றும் அகில இந்திய பகுத்தறிவாளர் கழகக் கூட்டமைப் பின் (FIRA) தலைவர் பேராசிரியர் நரேந்திர நாயக் ஆகியோர் உரையாற்றினர்.

பயிற்சிப் பட்டறையில் தமிழகத்தின் வட மாவட்டங்களிலிருந்து பல தோழர்கள், மகளிர் பங்கேற்று பயிற்சி பெற்று வருகின்றனர். அறி வியலாளர்கள் பலர் உரையாற்றிட உள்ளனர். நவம்பர் 15ஆம் நாள் வரை பயிற்சிப் பட்டறை நடைபெறும். காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வகுப்புகள், எடுத்துக்காட்டு விளக்க முறைகள் மூலம் பயிற்சிப் பட்டறை நடைபெறுகிறது.

பயிற்சி யாளர்களுக்கு உணவும், தங்குமிடமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அறிவியல் குறிப்புகள், புத்த கங்கள், பயிற்சியாளர்களுக்கு வழங்கப்பட உள்ளன. பயிற்சிப் பட்டறை பற்றிய விளக்கத்திற்கு 94442 10999 என்ற எண்ணில் தொடர்பு கொள் ளலாம்.

தமிழ் ஓவியா said...


பக்....தீ!


நமது தமிழ் நாளேடுகள் ஒவ்வொரு நாளும் இணைப்புகளை (Supplementary) வெளியிடுகின் றன. வியாபார யுக்தியோடு போட்டி போட்டு இலவச இணைப்பாக அவை வெளியிடப்படுகின்றன.

ஆன்மீகம், சோதிடம் இளைஞர், மகளிர் என்ற தலைப்புகளில் வெளி வந் தாலும் - தப்பித் தவறிக்கூட அறிவியல் என்றோ பகுத் தறிவு என்றோ இணைப் புகளை வெளியிட்டு விட மாட்டார்கள். மக்களுக்குப் பகுத்தறிவு வந்துவிடக் கூடாது என்பதில் அவ் வளவு அக்கறை.

பகுத்தறிவு வளர்ந்து விட்டால் இந்தக் குப்பை களைச் சீந்த மாட்டார்களே - அதன் பின் பத்திரிகை வியாபாரம் படுத்துவிடுமே - கல்லாப் பெட்டி நிரம் பாதே!

இது தெரியாத பைத் தியக்காரர்களா அவர்கள்? அதே நேரத்தில் பகுத்தறிவு வாதிகள் தோலுரித்துக் காட்டிக் கொண்டுதான் இருக்கிறோம்.

ஒரு நாளிதழ் வெளி யிட்ட ஆன்மிகக் கதையைக் கொஞ்சம் கேளுங்கள்.

கோபியர்களின் ஆசை என்பது தலைப்பு..

கிருஷ்ணனின் வீரம்; அலங்காரம், அவனது குழலோசை, தூய்மையான மனம் ஆகியவற்றால் ஈர்க்கப்பட்டு, அவனிடம் தங்கள் மனதைப் பறி கொடுத்தனர் கோபிகள். கிருஷ்ணன் தனக்குக் கண வனாக வர மாட்டானா? என எண்ணத் துவங்கினர். அவனது புல்லாங் குழல் இசையால் ஈர்க்கப்பட்டு, தங்களை மறந்து நிற்பார் கள். திருமணமான பெண் களும்கூட கண்ணனைக் காதலித்தனர். அவன்மீது அன்பு கொண்டிருந்தனர்.

கிருஷ்ணன் நடந்து செல்லும்போது, அவனது காலடிபட்டு அந்த மண் சிவந்து போகும். அந்த மண்ணை எடுத்துப் பெண் கள் மஞ்சளுக்குப் பதில் உடலிலும், முகத்திலும் பூசிக் கொள்வார்கள். அதன் காரணமாக அவர்களது காம இச்சைகள் அடங்கிப் போகும் என்பதுதான் அது.

இதற்கு ஆயிரம் ஆயிரம் விளக்கம் கூறி அச மடக்க முயற்சிப்பார்கள் பாகவதர்கள்.

யாராக விருந்தாலும் ஒரு கேள்விக்குப் பதில் சொல்லியாக வேண்டும் கடவுளைப் பார்த்தால் ஒரு பக்தைக்குப் பக்தி வருமா? காமம் வருமா என்பதுதான் அந்தக் கேள்வி.

காமம் வருகிறது என் றால் அது என்ன பக்தி? கண்ணனைக் கட்டிப் பிடிக்க முடியாவிட்டால் அவன் காலடி மண்ணை உடம்பெல்லாம் பூசி காம இச்சையை அடக்கிக் கொள்வது என்றால் இதற் குப் பெயர் பக்தியா? வக்கிரப் புத்தியா?

இதைச் சொல்லுவ தற்கு, தூண்டுவதற்குத் தான் ஆன்மிக இதழ்களா?

உள்ளதைச் சொன் னால் உபத்திரவமா? அறி வோடு சிந்திக்க வேண் டாமா?

- மயிலாடன் 12-11-2013

தமிழ் ஓவியா said...

காமன்வெல்த் மாநாட்டில் வெளியுறவுத்துறை அமைச்சர் பங்கேற்பதா?

பிரதமர் கலந்து கொள்ளாததால் ஏற்பட்ட நல்ல உணர்வினை இது வீணடித்து விட்டது!

காலந் தாழ்ந்து விடவில்லை - மறுபரிசீலனை செய்திடுக! தமிழர் தலைவரின் வழிகாட்டும்
முக்கிய அறிக்கை

இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில், பிரதமர் கலந்து கொள்ளாததால் ஏற்பட்ட உணர்வை வெளியுறவுத்துறை அமைச்சர் பங்கேற்பதால் வீணடித்து விட்டது என்றும், இன்னும் காலந் தாழ்ந்துவிடவில்லை; வெளியுறவுத் துறை அமைச்சரும் பங்கேற்பதைத் தவிர்க்க வேண்டும் என்றும் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

இலங்கையில் இவ்வாரம் தொடங்கவிருக்கும் காமன்வெல்த் தலைவர்கள் மாநாட்டினை இந்தியா புறக்கணிக்க வேண்டும்; காரணம் அந்நாடு கொத்துக் குண்டுகளை வீசி சொந்த நாட்டு மக்களான ஈழத் தமிழர்களை இனப்படுகொலை செய்ததோடு மனித உரிமைகள் அனைத்தையும் பறித்துக் கொண்டு, வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தேர்தல் நடைபெற்ற பின்புகூட, அவர்களுக்கு எவ்வித உரிமைகளையும் தராது, இராணு வத்தை அங்கே இன்னமும் நிறுத்தி வைத்துள்ளது;

அய்.நா.வின் மனித உரிமை ஆணையத் தலைவர் நவநீதம்பிள்ளை ஆய்வுக்கு வந்தபோதுகூட, அவமதிப்புச் செய்து கொச்சைப்படுத்தியது; கருத்துச் சுதந்திரம் எதுவும் கிடையாது;

சிங்களவர் ஆன போதிலும் - அது கிடையாது என்பதுபோல அங்கே தலைமை நீதிபதியான பெண்மணி ஒருவரையே பதவி நீக்கம் செய்த ஜனநாயக விரோத சர்வாதிகாரப் போக்கு என்பதையெல்லாம் சுட்டிக் காட்டி, உலகத்தார் குரல், தமிழர் வாழ்வுரிமையைப் பாதுகாப்பது - இவற்றையெல்லாம் உள்ளடக்கிய காரணிகளால்தான் தமிழ்நாட்டில் டெசோ தீர்மானம் மூலம் முதன்முதலாக குரல் கொடுத்து, நாடு தழுவிய அளவில் பெருந் திரள் ஆர்ப்பாட்டத்தை நடத்தியது.

தமிழ்நாட்டில் தொடர்ந்து எதிர்ப்பு

தமிழக சட்டமன்றத்தில், தமிழக அரசு சார்பாக முதல் அமைச்சரால் முன்மொழியப்பட்ட காமன்வெல்த் மாநாட்டினை இந்திய அரசு புறக்கணிக்க வேண்டும் என்ற தீர்மானம், அனைத்துக் கட்சியினராலும் வழிமொழியப் பட்டு ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.

இதற்கிடையே, தமிழ்நாடே கொதி நிலையில் உள்ளது - இப்பிரச்சினையில் என்று காட்டும் வகையில், மாணவர்கள், வணிகர்கள், விவசாயிகள் போன்ற அனைத்துப் பிரிவினர்களும் அறப் போர்கள் மூலம் இதே உணர்வை, மத்திய அரசுக்குத் தெரியப்படுத்தினர்!

மத்திய அரசும் மவுனத்தைக் கலைத்தது; பிரதமர் கலந்து கொள்ள மாட்டார் என்று கூறியது, தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கிறது என்று ஆறுதல் கொள்ளும் வண்ணம் அமைந்தது.

பாதிக் கிணறு தாண்டிய புத்திசாலிகள்

ஆனால் வெளி உறவுத்துறை அமைச்சர் திரு சல்மான் குர்ஷித் என்பவர் அதிகாரிகளுடன் கலந்து கொள்ளுவார் என்றுகூறி, அனுப்பி வைப்பதன் மூலம், எந்த நோக்கத் திற்காக பிரதமர் திரு. மன்மோகன் சிங் கலந்து கொள் வதைத் தவிர்த்தாரோ, அந்த நோக்கம் நிறைவேறாத வண்ணம் - இருபுறத்தினரும் ஏற்காத ஒரு இரண்டுங் கெட்ட நிலையைத்தான் ஏற்படுத்தி விட்டது; இது ஒருபோதும் இராஜதந்திரம் ஆகாது, பாதிக் கிணறு தாண்டிய புத்திசாலித்தனமாக(?) தான் கருதப்படும்.

பாம்புக்குத் தலை, மீனுக்குவால் என்ற விலாங்குத் தன பாசாங்காகத்தான் உலகத்தார் கண்முன் இது தென்படக் கூடும்.

பிரதமர் கலந்து கொள்ளாத உணர்வை வீணடிப்பதா?

இன்று மாணவர்களின், மக்களின் அனைத்துக் கட்சிகளின் உணர்வுகளையெல்லாம் புறந்தள்ளி விட்டு, வெளி உறவுத்துறை அமைச்சரை அனுப்புவதன் மூலம், புறக்கணிக்கவில்லை என்று பதிவு செய்வது, பிரதமர் கலந்து கொள்ளாததன் காரணமாக ஏற்பட்ட உணர்வையே வீணடித்து விட்டதாகத்தானே ஆகும்!

எனவே, இன்னமும் காலந் தாழ்ந்து விடவில்லை; இதையும் மத்திய அரசு மறுபரிசீலனை செய்வது அவசரம் அவசியம். அரசியல் ரீதியாக காங்கிரஸ் கட்சியின் எதிர்காலமும் - ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமைக்கான பாதுகாப்பும்கூட இதில் அடங்கியுள்ளது.

காலந்தாழ்ந்து விடவில்லை

புறக்கணிப்பு என்பது ஒருவகையான எதிர்ப்பு (Protest) என்னும்போது அதை முழுமையாகச் செய்து காட்டுவது தானே சரியானது?

எனவே இன்னமும் காலந்தாழ்ந்துவிடவில்லை; அதிகார வர்க்கம், உயர் ஜாதி ஊடக வர்க்கம் - இவை திட்டமிட்டே காங்கிரசைக் கவிழ்த்து விட்டு, பா.ஜ.க., பதவிக்கு வருவதற்கு இப்படி இந்திய அரசின் மூக்கைச் சொறியும் தந்திரத்தை - பழைய காக்கை - நரி வடை கதை போல் செய்கின்றன. ஏமாந்து விடக் கூடாது. உலகத் தமிழர்கள் உணர்வுகளும், டாட்டு பாதிரியார் போன்ற மனித உரிமை ஆர்வலர்களின் கருத்துக்களை அலட்சியப் படுத்தக் கூடாது என்று மத்திய அரசை வற்புறுத்து கிறோம்.


சென்னை
12.11.2013

வீரமணி
தலைவர்,திராவிடர் கழகம்

தமிழ் ஓவியா said...


கழகக் கோரிக்கைக்குக் கிடைத்த வெற்றி! 13,500 மக்கள் நலப்பணியாளர்களின் பணி நீக்க உத்தரவு ரத்து உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் தடை


புதுடில்லி, நவ.12-மக்கள் நலப்பணியாளர் கள் 13,500 பேரை பணி நீக்கம் செய்தது செல் லும் என்று சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் நேற்று ரத்து செய்தது. உயர் நீதிமன்றத்தின் தீர்ப் புக்கு தடை விதித்த துடன், வழக்கை மீண் டும் விசாரித்து, ஆறு மாதத்தில் தீர்ப்பளிக்கும் படியும் அதிரடி உத்தரவு போட்டுள்ளது. வழக் கில் இரு தரப்பினரும் வாய்தா கேட்டு கால தாமதம் செய்யக் கூடாது என்றும் அறிவுறுத்தி உள்ளது.

தமிழகத்தில் மக்கள் நலப் பணியாளர்கள் 13,500 பேர் கடந்த 1989ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் நியமிக்கப் பட்டனர். அதிமுக ஆட்சிக்கு வந்ததும் அவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். அதை எதிர்த்து மக்கள் நலப்பணியாளர்கள் சங்கம் உயர் நீதிமன்றத் தில் மனு தாக்கல் செய் தது.

அதை நீதிபதி சுகுணா விசாரித்து, மக்கள் நலப் பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்க உத்தரவிட்டார். அதை எதிர்த்து தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. உயர்நீதிமன்ற டிவிஷன் அமர்வு நீதிபதிகள் விசா ரித்தது. விசாரணைக்கு பின்னர், மக்கள் நலப் பணியாளர்களுக்கு 5 மாத ஊதியத்தை நிவார ணமாக அளித்து, அவர் களை பணி நீக்கம் செய் யலாம் என்று தீர்ப்பு அளித்தது. பணி வழங் கக் கோரிய மக்கள் நலப்பணியாளர்களின் வழக்கையும் நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.

இந்த உத்தரவை மறு பரிசீலனை செய்யக் கோரி மக்கள்நலப் பணி யாளர்கள் சங்கத்தின் புதிய தலைவர் மதி வாணன், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

அதை உயர் நீதிமன்றம் தள்ளு படி செய்து விட்டது. அந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மக் கள் நலப் பணியாளர் கள் சார்பில் மேல்முறை யீடு மனு தாக்கல் செய் யப்பட்டது.

இந்த மனுவை நீதி பதிகள் ஜெயின், மதன் லோக் ஆகியோர் விசா ரித்தனர். அப்போது, கடந்த 1989ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் பணி யில் சேர்ந்த 13 ஆயிரத்து 500 மக்கள் நலப் பணி யாளர்கள், அதிமுக ஆட்சிக்கு வந்ததும் பணி நீக்கம் செய்யப்பட்ட னர். இதுபோல 3 முறை இப்படி திமுக ஆட்சிக்கு வந்ததும் அவர்களை நியமிப்பதும், அதிமுக ஆட்சிக்கு வந்ததும் அவர்களை நீக்குவது மாக தொடர்ந்து நடந் துள்ளது. அவர்களை கால்பந்து என்று கருதி அரசு விளையாடியிருக் கிறது. எனவே மக்கள் நலப் பணியாளர்கள் 13 ஆயிரத்து 500 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டது ஏன் என்று தமிழக அரசிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இந்த வழக்கு கடந்த ஒரு ஆண்டாக நிலுவை யில் இருந்தது. இந்நிலை யில், இந்த வழக்கு நீதிபதிகள் அனில்தவே, தீபக் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய டிவிஷன் அமர் வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதி பதிகள், மக்கள் நலப் பணியாளர்களை பணி நீக்கம் செய்த உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்கிறோம். உயர் நீதிமன்றம் இந்த வழக்கை மீண்டும் விசா ரித்து தீர்ப்பளிக்க வேண் டும். 6 மாதத்தில் விசா ரணையை முடித்து தீர்ப்பு அளிக்க வேண் டும் என்று அதிரடியாக தீர்ப்பளித்தனர்.

மேலும், அவர்கள் கூறுகையில், மக்கள் நலப் பணியாளர்கள் சங்கத் தலைவர் பதவியி லிருந்து நீக்கப்பட்ட பழனியப்பன் தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்றம் ஏற்றுக் கொண்டு, அவர் 5 மாதம் ஊதியம் கொடுத் தால் போதும் என்று கூறியதை ஏற்று உத்தர விடப்பட்டுள்ளது சரி யான நடைமுறையா காது.

இந்த தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ததை டிவிஷன் அமர்வு ஏற்க மறுத்ததும் தவறானது. பல ஆண்டுகளாக பணி யாற்றிய மக்கள் நலப் பணியாளர்களை தமி ழக அரசு பணி நீக்கம் செய்தது தவறானது. அவர்கள் வாழ்க்கையை அரசு விளையாட்டாக கருதியுள்ளது என்றும் தெரிவித்தனர்.

எனவே, உயர்நீதிமன் றத்தில் இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும். 6 மாத விசாரணைக் காலத்தில் அரசுத் தரப்பும், மக்கள் நலப் பணியாளர்கள் தரப்பிலும் வாய்தா கோரி வழக்கில் காலதா மதத்தை ஏற்படுத்தக் கூடாது என்றும் நீதிபதி கள் கண்டிப்புடன் தெரிவித்தனர்.

தமிழ் ஓவியா said...


குஜராத்தில் மதுவிலக்கு படும்பாடு

இந்தியாவிலேயே காந்தி பிறந்த குஜராத்தில் மட்டும் தான் மதுவிலக்கு அமலில் உள்ளது என பெருமை பேசுவதுண்டு. ஆனால், அங்கு மதுவிலக்கு என்ன பாடுபடுகிறது தெரியுமா?

குஜராத்தில் குடிகாரர்கள் நல்லமுறையில் உபசரிக்கப்படுகிறார்கள். உள்ளூர் முறைகேடான சாராய வியாபாரிகளுடன் தொடர்பு வைத்திருப்பவர் களுக்கு குஜராத் நகரங்களில் எந்த நேரமும் மதுபானம் கிடைக்கும்.

சட்டப்படி அனுமதி பெற்றுள்ள மதுபானக் கடை களும் உள்ளூர் சாராயத்திற்கு அதிக இடமளிப்ப தால் அரசுக்கு சேர வேண்டிய வரி, காவலர் கலால் அதிகாரிகள், அரசியல்வாதிகள் ஆகியோர் களுக்கு கிரிமினல் குற்றவாளிகள்மூலம் கிடைக் கிறது. சட்டத்துக்கு புறம்பான மதுபான விற்பனையால் அரசியல்வாதிகளுக்கு அதிக லாபம் கிடைப்பதால் அங்கு ஒரு போதும் மதுவிலக்கு நீக்கப்படாது. அவர் களின் பாதுகாவலில் இந்த முழு வேலைகளும் நடப்பதால் மதுவிலக்கு அங்கு நீடித்து நிலைக்கும்.

இந்த சாராய விற்பனையால் குஜராத்தில் அரசுக்கு வருவதைவிட ஆளும் கட்சிக்கு அதிக பணம் கிடைக்கிறது. இதுதான் குஜராத் மது விலக்கு. இது நாட்டுக்கு தேவையா?
நன்றி: டைம்ஸ் ஆஃப் இந்தியா அக்.23 பக்.7 இதழிலிருந்து...

தமிழ் ஓவியா said...


மதக் குறி


மதக் குறி என்பது மாட்டு மந்தைக்-காரன் தனது மாடுகளுக்குப் போடும் அடையாளம்போலவே, மதத் தலைவன் தன் மதத்தைப் பின்பற்றுகிறவர்கள் என்பதைக் காட்ட ஏற்படுத்திய குறியேயாகும்.

(விடுதலை, _ 25.5.1950)

தமிழ் ஓவியா said...


மதவாதத்தை நிராகரிப்போம்!

திருச்சிராப்பள்ளியில் கடந்த 9ஆம் தேதி திராவிடர் கழகத்தின் சார்பில் நடத்தப்பட்ட திராவிடர் எழுச்சி மாநாடு பல வகைகளிலும் சிறப்பையும், பெருமையையும் பெற்று விட்டது. காலங் கருதி நடத்தப்பட்ட அம்மாநாட்டில் காலத்தின் அவசியம் கருதி நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் அதன் தனித் தன்மையை மேலும் உயர்த்தி விட்டன. மதவாதத்தை நிராகரிப்போம் என்னும் தலைப்பில் நிறைவேற்றப்பட்ட இரண்டாவது தீர்மானம் மிகவும் குறிப்பிடத்தகுந்ததாகும்.

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் தொடக்கமே இப்படியாக இருக்கிறது.

பாரத தேசத்தை மதச் சார்பற்ற சமதர்மக் குடியரசாக அமைப்பதற்கு இந்திய மக்களாகிய நாங்கள் உறுதி பூண்டு, இந்திய மக்கள் அனைவருக்கும் சமூக, பொருளதார, அரசியல் நீதி, எண்ண, எழுத, எடுத்துச் சொல்ல நம்பிக்கை வைக்க, வழிபாடு செய்ய, சுதந்திரம், தரத்திலும், தகுதியிலும், வாய்ப்பிலும் சமத்துவம் ஆகியவற்றை அளிப்பதற்கும் எங்களிடையே தனி மனிதனின் கவுரவம் மற்றும் தேசிய ஒற்றுமையையும், ஒருமைப் பாட்டையும் உறுதியளிக்கத்தக்க சகோதரத் துவத்தை வளர்க்கவும் உறுதி எடுத்துக் கொள் கிறோம் எடுத்த எடுப்பிலேயே மதச் சார்பற்ற சமதர்மக் குடியரசு என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த அடிப்படைக்கு விரோதமாக பாரதீய ஜனதா என்னும் கட்சி இந்து ராஜ்ஜியம் அமைப்பதாகக் கூறும் நிலையில், தேர்தலில் நிற்பதற்கே தகுதி உடையது தானா என்பது மிக முக்கிய கேள்வியாகும்.

பா.ஜ.க.,வினால் பிரதமருக்கான வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள திருவாளர் நரேந்திரே மோடி என்பவர் தன்னைப் பற்றிக் கூறும்போது இந்து நேஷனலிஸ்ட் என்றே கூறியுள்ளார்.

திருச்சி திராவிடர் எழுச்சி மாநாடு இதனை எடுத்துக்காட்டி, இப்படிச் சொல்லுகிற ஒருவரைப் பிரதமராக அறிவித்திருப்பது - இந்திய அரசமைப்புச் சட்டப்படி குற்றமானதல்லவா என்ற வினாவை எழுப்பியுள்ளது.

மதச் சார்பின்மை என்பதற்கு தங்கள் விருப்பம் போல வியாக்கியானம் செய்வது திசை திருப்பும் வேலையாகும்.

என்னைப் பொறுத்தவரையில் அனைத்துத் தரப்பு மக்களும் பயன் பெறும் வகையில் வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்றுவதுதான் மதச் சார்பின்மை என்று கூறியுள்ளார் (துக்ளக் ஆண்டு விழாவில் மோடி பேசியது).

மதச் சார்பின்மை என்பதற்கான உண்மையான பொருளை எதிர் கொள்ள முடியாத நிலையில், அதனைத் திசை திருப்புவதைக் கவனிக்கத் தவறக் கூடாது.

செக்குலரிசம் (மதச் சார்பின்மை) என்ற சொல் எந்த மொழியைச் சேர்ந்தது? அந்த மொழியில் இந்தச் சொல்லுக்கு என்ன பொருள் கூறப்பட்டுள்ளது என்பது மிகவும் முக்கியமானதாகும்.

சென்னைப் பல்கலைக் கழக முயற்சியால் டாக்டர் அ. சிதம்பரநாதச் செட்டியார் அவர்களைத் தலைமை பதிப்பாசிரியராகக் கொண்டு வெளியிடப்பட்ட ஆங்கிலம் - தமிழ்ச் சொற் களஞ்சியம் என்ன கூறுகிறது?

செக்குலர் என்றால் இவ்வுலகுக்குரிய, உலகியல் சார்ந்த, சமயஞ் சாராத என்று தெளிவாகவே வரையறை செய்துள்ளது. ஆக்ஸ்போர்டு அகராதி என்ன கூறுகிறது? Not Concerned with Religion மதம் சாராத - மதத் தொடர்பில்லாத என்னும் பொருள் கூறப்பட்டுள்ளது. இந்த உண்மைக்கு மாறாக தன் விருப்பத்திற்கு ஏற்ப இந்திய அரசமைப்புச் சட்டத்தில் வலியுறுத்தப் பட்டுள்ள மதச் சார்பின்மைக்கு விளக்கம் கூறக் கூடியவர்தான் அடுத்த பிரதமருக்கான வேட்பாளரா?

ஏன் இப்படி வியாக்கியானம் செய்கிறார்கள் என்றால், அவர்களின் உள்ளத்தில் தேக்கி வைத் திருக்கும் இந்துத்துவாவுக்கு எதிரானதாயிற்றே அதனால்தான்!

உண்மையான மதச் சார்பின்மைமீது மோடிக்கு நம்பிக்கை இருக்குமானால், குஜராத்தில் சிறு பான்மை மக்கள் ஆயிரக்கணக்கில் கொன்று குவிக்கப்பட்டு இருப்பார்களா?

காரில் போகும்போது அடிபடும் நாய்க்குச் சமம் என்று சிறுபான்மை மக்கள் கொல்லப்பட்டதைக் கருதுகிறார் என்றால் அவரிடம் உண்மையான மதச் சார்பின்மையை எப்படி எதிர்பார்க்க முடியும்? மதவெறியைத்தான் எதிர்பார்க்க முடியும்.

இந்த நிலையில் தான், பிஜேபியின் முகத் திரையைக் கிழித்துக் காட்டி, மக்களையும் அரசியல் கட்சிகளையும் எச்சரிக்கை செய்திருக்கிறது திரா விடர் கழகம் நடத்திய திராவிடர் எழுச்சி மாநாடு