திருட்டுப்பயல்கள் 4-பேர் சேர்ந்து நடத்துகிற அரசாங்கமாக இருந்தால் கூட இந்தக் கொடுமை நடக்குமா?
நீங்கள் கவனிக்க வேண்டியது இதுதான்; சிறை உள்ளே இருப்பவர்கள் வெளியே வரவேண்டும் என்று நினைக்காதீர்கள்! நீங்கள் எப்படி அங்குப் போவது என்று நினைக்க வேண்டும்.
நீங்கள் செய்ய வேண்டிய வேலை என்ன? அவர்கள் எல்லோரும் அவர்களுக்காகவேதான் சிறை சென்றார்களா? அவர்கள்தான் மனிதர்களா? நாமும் நமது பங்குக்குச் செல்ல வேண்டும் என்கிற உணர்ச்சி ஏற்பட்டு மளமளவென்று காரியம் ஆக வேண்டும். அதுதான் உண்மையான சமுதாயக் கொந்தளிப்பு ஆகும். அதற்குத் தான் உண்மையான சமுதாயப் புரட்சி என்று பெயர்.
வருத்தத்தோடு சொல்கிறேன். அரசாங்கத்திற்கு எச்சரிக்கை செய்கிறேன். அடக்குமுறையை நம்பாதீர்கள்! ஒரு காற்றில் அடித்துக் கொண்டு போய்விடும். இக்கிளர்ச்சி அடிக்க அடிக்க பந்து போல் கிளம்புமே தவிர அடங்காது. இது எங்கள் காரியம் அல்ல! எனக்கு மாத்திரம் ஆகக்கூடியதல்ல! அத்தனை பேருக்கும் சம்பந்தமான காரியம்! மந்திரிகளுக்கே சாதி ஒழியவேண்டாம் என்ற எண்ணம் இருக்காது. எனக்குத் தெரியும் அடக்குமுறையை நம்பாதீர்கள்! அடக்கு முறையை நம்பிப் பொதுமக்களின் உணர்ச்சியைத் தூண்டிவிட்டு விடாதீர்கள்! இந்த உணர்ச்சியை ஒருக்காலும் அடக்குமுறை மூலமே நசுக்கிவிட முடியாது. இன்று மந்திரிகள் என்னைப் பைத்தியக்காரனாக நினைக்கலாம். ஏன்? அவர்கள் இருக்கும் இடம் அப்படிப்பட்டது. 100-க்கு 97-பேர் ஆக உள்ள ஒரு இனத்திற்கு அவர்கள் மனம் புண்படும் காரியம் நடந்தால் நாட்டை இராணுவம்தானே ஆளவேண்டும்?
வடநாட்டான் விடாதே பிடி, அடை என்கிறான்! யாரைச் சொல்கிறான் என்பதைச் சிந்திக்க வேண்டாமா? உன்னைச் சொன்னால் என்ன? என்னைச் சொன்னால் என்ன?
அரசாங்க மரியாதை போய்விடும் என்று கருதினால் நீங்கள் என்ன செய்கிறீர்கள்? அதையாவது சொல்ல வேண்டுமே! நான் இப்போது விட்டுவிடுவதாகவே வைத்துக் கொள்ளுங்கள். அடுத்து என்ன? சும்மா கிடந்த சங்கை ஊதிக்கெடுத்தான் ஆண்டி என்றுதானே பார்ப்பான் என்னைச் சொல்லுவான்? அரசாங்கத்தின் கடமை, புத்திசாலித்தனம் என்ன என்பதைச் சிந்திக்க வேண்டும். சட்டம் கொண்டு வந்து அடக்கிவிடலாம் என்பதே போதுமா? ஒரு சட்டம் பண்ணினால் போதாதே? அடுத்த ஒவ்வொரு காரியத்திற்கும் சட்டம் செய்ய வேண்டுமே?
நேரு படத்தை எரித்தால், சிலையை உடைத்தால் இப்போதுள்ள சட்டம் ஒன்றும் செய்ய முடியாதே! காந்தியாவது செத்துப் போனவர். அவர் பெயரை இழுப்பதால் நாமும் அவரை இழுக்கவேண்டியுள்ளது. உயிரோடு இருக்கிற நேரு படத்தைக் கொளுத்தினால் இனிமேல் அதற்கும் சட்டம் கொண்டு வருவார்களா? எதற்கு இவற்றையெல்லாம் செய்கிறோம்? பதவிக்குவரவா? அல்லது அரசாங்கத்தைக் கைப்பற்றவா? அரசினரைக் கவிழ்க்கவா?
இன்று கைதானவர்கள் பட்டியல் 3000-போட்டிருக்கிறார்கள். அதுவும் தப்பு. சரியான விவரம் கிடைக்கவில்லை. கொளுத்தப் போகிறோம் என்று அறிவித்திருந்த சில இடங்களுக்குப் போலீசே (காவல் துறையே) போய் எட்டிப் பார்க்கவில்லை. லால்குடி மாதிரி இடங்களில் பகுதிப் பேரைக்கூடப் பிடிக்கவில்லை. அதற்கே அங்கிருந்து லாரியில் அள்ளிப்போட்டுக் கொண்டு திருச்சிராப்பள்ளி வந்து திருச்சி சிறையதிகாரி இங்கு இடமில்லை என்று திருப்பி அனுப்பி மீண்டும் லால்குடிக்குக் கொண்டு போய்த் திரும்ப இடம் ஒழிக்கப்பட்டிருக்கிறது என்று செய்தி வரவே திரும்ப திருச்சிக்குக் கொண்டுவந்து இப்படிப் பந்து விளையாடியிருக்கிறார்கள்!
3000-பேருக்கு மேல் போயிருக்கிறார்கள் என்று பெருமைப் படவுமில்லை. 1000- பேர் போனாலும் வெட்கப்பட்டிருக்கவும் மாட்டேன்; ஏன் ஓட்டுக்கு, பதவிக்கு, விளம்பரத்திற்காகவா இந்தக் காரியத்தைச் செய்கிறோம்.
உண்மையில் பலமான முறையில் கிளர்ச்சி நடந்திருக்கிறது. போலீஸ்காரர்கள் (காவல்துறையினர்) இனிமேல் எங்களால் பிடிக்க முடியாது. சிறையில் இடமில்லை என்கிற அளவுக்கு நடந்துள்ளது. இன்னுமா பரீட்சை பார்க்க வேண்டும்?
சிலபேர் "இந்தக் காரியத்திற்கு இணங்கிவிட்டால் இன்னொரு காரியம் ஆரம்பிப்பார்" என்று யோசிக்கிறார்கள் என்று சொல்கிறார்கள். இன்னொரு காரியம் ஆரம்பிப்பதாயின் முக்கியம் என்று கருதி ஆரம்பிப்போமே தவிர விளையாட்டுக்கா செய்வோம்?
அடுத்த காரியம் திராவிட நாடு இல்லையென்றாலும் தமிழ்நாடு தமிழருக்கு வரவேண்டுமா வேண்டாமா? அடுத்த காரியம் அதுதான்!
இந்தச் சட்டம் என்றால் என்ன? வடநாட்டான் தூண்டுதல் தானே? என் மீது வழக்கு எப்படி வந்தது? 2-நாள் முந்தி 'ஹோம் மினிஸ்டர்' (உள்துறை அமைச்சர்) சி.அய்.டி ரிப்போர்ட்டைப் பார்த்தோம் பத்திரிகைக்காரர்கள் சொல்வதற்கும் அதற்கும் வித்தியாசம் இருக்கிறது. (பத்திரிகைக்காரர்களைப் பார்த்து) "உங்கள் ரிப்போர்ட்டைக் கொண்டு வாருங்கள்! ஒத்திட்டுப்பார்க்கலாம்; அவர் மீது நடவடிக்கை எடுக்க சட்டத்தில் இடமில்லை" என்று சொல்லி விட்டாரே!
இந்த மாதிரியெல்லாம் சொல்லி விட்டு திடீரென்று நடவடிக்கை எடுக்கிறார்கள் என்றால் என்ன அர்த்தம்? ஆச்சாரியார் சொல்கிற மாதிரி வடநாட்டான் உத்தரவு வந்தது நடவடிக்கை எடுக்கிறார்கள் அவ்வளவுதான்.
இன்று டெல்லியில் நேரு பேசியிருக்கிறார்; பத்திரிகையில் பார்த்தால் தெரியும்! "இவையெல்லாம் காட்டுமிராண்டித்தனம்; சிலபேர் அவர்களுக்கு உள் ஆளாக இருக்கிறார்கள் (அதாவது இந்த மந்திரிகள் உள் ஆளாக இருக்கிறார்களாம்) நானே நடவடிக்கை எடுக்க வேண்டுமா" என்று பேசியிருக்கிறார்.
இவர்களைக் தவறாக நினைத்துப் பயனில்லை. இந்த நாட்டை வட நாட்டான் ஆள்கிறான்; அவன் உத்தரவு போடுகிறான்; அதன்படி நடக்கிறார்கள்!
வடநாட்டுப் பத்திரிகையெல்லாம் நடவடிக்கை எடுக்காமல் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்று அலறுகின்றன. படம் போடுகிறார்கள் இது 'சங்கர்ஸ் வீக்லி' என்ற பத்திரிகை. இதில் படம் போட்டிருக்கிறான்; நான் பார்ப்பானை வெட்ட கையில் கோடாரி வைத்துக் கொண்டு ஓங்கிக் கொண்டு நிற்கிறேன். கருப்புச் சட்டைக்காரர்கள் பார்ப்பானைப் பிடித்து இழுக்கிறார்கள் பார்ப்பான்கள் மூலைக்கு மூலை ஓடுகிறான்கள். காமராசரை போலீஸ்காரன் போல போட்டிருக்கிறான். அவரைப் பார்த்து ஒரு பார்ப்பான் அய்யோ என்று கத்துகிறான். அவர் அந்தப் பக்கம் திரும்பிக் கொண்டு இதெல்லாம் சட்டத்திற்கு உட்பட்டது என்கிறாராம். இப்படிப் படம் போடுகிறான்.
இன்னொரு படம்: நான் நிற்கிறேன். வட நாட்டு மந்திரி - போலீஸ் மந்திரி பந்த் என் மீது நடவடிக்கை எடுக்க காமராசரைப் பிடித்தத் தள்ளுகிறார். அவர் அப்போதும் என்னிடம் நெருங்கப் பயப்படுகிறார். இப்படி ஒரு படம் போட்டிருக்கிறான். மந்திரிகள் நடுங்குகிறார்கள். மாஜிஸ்திரேட்டும் இந்த மந்திரி தயவை எதிர் பார்ப்பவர்கள். ஜில்லாதாஜிஸ்ரேட் மாத்திரமல்ல, அய்க்கோர்ட் ஜட்ஜ் கூட (உயர் நீதிமன்ற நீதிபதி) இப்போது மந்திரிகள் தயவை எதிர்பார்த்து ஆகவேண்டும்.
என் வழக்கில் முதலில் அவர்களேதான் சொந்த மூச்சலிகாவில் நீங்கள் போகலாம் என்றார்கள். பிறகு திடீரென்று 25-ஆம் தேதி மூச்சலிக்காவை ரத்து செய்ய வேண்டும். பழையபடி ஊர் ஊராகப் போய் குத்து வெட்டு என்று பேசுகிறான் என்று விண்ணப்பம் போடுகிறான். நினைத்தால் கஷ்டமாகத்தான் உள்ளது. எவ்வளவு ஆதிக்கம் செலுத்துகிறான்? 20-ஆம் தேதி எங்களிடம் கையொப்பம் வாங்கி இருக்கிறான்; 22-ஆம் தேதி மதுரையில் எனக்குச் சம்மன் சார்வு செய்தான்; 22-ஆம் தேதி மாலை வரையில் எங்கும் பேசவில்லை; கூட்டமுமில்லை நான் வாய் திறக்கவேயில்லை. பழையபடி 'குத்து வெட்டு என்று பேசுகிறான்' என்று சொல்கிறான். எப்போது பேசினார் என்றால் 17, 18, 19- ஆம் தேதி பேசியிருக்கிறார் என்கிறான். என்னிடம் கையொப்பம் வாங்கி கொண்டு 20-ஆம் தேதி விட்டிருக்கிறான். அதிலும் பேசக்கூடாது என்ற நிபந்தனை ஒன்றுமில்லை. இருந்தும் பேசாதே போதே 22-ஆம் தேதி சம்மன் வருகிறது 'ஏமாற்றி விட்டார்', 'நம்பிக்கைத் துரோகம் செய்துவிட்டார்', 'சாட்சிகளைக் கலைப்பார்', 'சாட்சிகளுக்குத் துன்பம் கொடுப்பார் அதாவது காயப்படுத்துவார்' இப்படி ஏதேதோ கேவலமாக எழுதியிருக்கிறான்.
ஜட்ஜே (நீதிபதி) கேட்டாராம். என் காதில் விழவில்லை. சாட்சியைக் கலைப்பார் என்கிறாயே எல்லா சாட்சியும் போலீஸ்காரர்கள்தானே? அதுவும் ரிக்கார்டு சாட்சிதானே; அதை எப்படி கலைப்பார்? என்று கேட்டதற்கு அந்த பப்ளிக் பிராசிக்யூட்டர் (அவர் பார்ப்பனர்) போலீஸ்காரர்கள் எல்லாரும் அந்த உணர்ச்சி உள்ளவர்கள்; அதாவது என் கட்சியைச் சேர்ந்தவர்கள்தான் என்று பதில் சொல்கிறார். என்ன அக்கிரமம்? நீதி கெடுத்துவிடுவார் என்கிறான்; நான்தான் எதிர் வியாஜ்ஜிமே (எதிர் வழக்கு) ஆடப்போவதில்லை என்கிறபோது நீதி எப்படிக் கெட்டுப்போகும்? அந்த நீதிபதிக்கு, எங்குப் பேசினார்? எந்த தேதியில் பேசினார்? ஆதாரமென்ன? என்று கேட்டு 20-ஆம் தேதிக்குப் பிறகு எங்கும் பேசவில்லையே! ஆகையால் இந்த மனுவைக் கேன்சல் (தள்ளுபடி) செய்கிறேன் என்று சொல்லத் தைரியம் வரவில்லையே? என்னைக் கேட்கிறார் "இனிமேல்" பேசவில்லை என்று எழுதிக்கொடு" என்கிறார்.
என்னய்யா, நான்தான் பேசவே இல்லை என்கிறேன் இனி மேல் பேசவில்லை என்று எழுதிக்கொடு என்கிறீர்களே என்றால் "உனக்கு நான் சொல்வது புரியவில்லை. நீ சொல்வதும் நான் சொல்வதும் ஒன்றுதான் எதையாவது எழுதிக் கொடு; இப்ப, நீ வாயால் சொல்கிறாயே அதையே எழுதிக் கொடு" என்கிறார். என்னய்யா இது உங்கள் எதிரேயே சொல்கிறான் போலீஸ்காரன் எல்லாம் என் கட்சி என்று; அய்க்கோர்ட் (உயர்நீதிமன்றம்) போனாலும் நீதிபதிகூட என் கட்சியைச் சேர்ந்தவன் என்பான். பூணூல் போடாதவனெல்லாம் என் கட்சியைச் சேர்ந்தவன் என்பான்.
இப்படிப் பித்தலாட்டம் செய்கிறவர்கள் நான் ஏதாவது எழுதிக் கொடுத்தால் "எழுதிக் கொடுத்துவிட்டான்! எழுதிக் கொடுத்துவிட்டான்" என்று பத்திரிக்கைக்காரன் எல்லாம் பிரச்சாரம் செய்வானே? நான் பொதுவாழ்வில் இருப்பவன் அது பற்றியும் கவலைப்பட வேண்டும். நான் வேண்டுமானால் உடனடியாக 'வெட்டு' 'குத்து' என்று சொல்லவில்லை என்று எழுதித் தருகிறேன் என்றேன். 'உடனடியாக' என்று போட்டிருக்கிறாயே அந்த வார்த்தையை எடுத்துவிடு என்றார்.
"நான் சில திட்டங்கள் வைத்திருக்கிறேன். அது முடியாவிட்டால் வெட்டு, குத்து என்று சொல்ல வேண்டிய அவசியம் வந்தால் சொல்லுவேன் என்றுதான் இப்போதும் சொல்கிறேன். வேண்டுமானால் உங்கள் விசாரணை முடியும் வரையில் அதுபோலச் சொல்லவில்லை. அதற்குமேல் என்னைத் தொந்தரவு செய்யாதீர்கள் மன்னிக்க வேண்டும்; நான் மூட்டை முடிச்சோடு வந்துவிட்டேன்; என்னைத் ஜெயிலுக்கு அனுப்பிவிடுங்கள்; நிம்மதியாக இருப்பேன்", என்றேன். பின்னர் ஏதேதோ செய்து எழுதி வாங்கியதாகப் பேர் செய்து கொண்டு விட்டார்கள்.
நான் 23-ஆம் தேதி இருக்கக்கூடாது என்பது எண்ணம்; அதற்கு ஏதேதோ காரணம் சொல்லி (சிறையின்) உள்ளே பிடித்துப் போடு என்றான் திரும்ப சீரங்கம் கூட்டத்திற்குப் புறப்படும் நேரம் வந்ததும் அழைத்துக் கொண்டு போய்விட்டார்கள். எதற்கு இதைச் சொல்லுகிறேன் என்றால் பார்ப்பான் மிரட்டினால் எல்லாம் நடுங்குகின்றன. ஒரு மந்திரி நினைக்க வேண்டாமா?
ஆகவே வடநாட்டு தென்னாட்டை அடிமை மாதிரி நடத்துகிறது; எதுவும் எதிர்த்துக் கேட்க முடியவில்லை; எனவே தென்னாட்டைத் தென்னாடே ஆளவேண்டும். அடுத்து இந்தக் காரியம் தான் செய்யப்போகிறோம்.
இந்திய ராஜ்ஜிய - இந்திய யூனியன் ராஜ்யப் படத்தைக் கொளுத்தப் போகிறேன். அதற்கும் ஒரு சட்டம் கொண்டுவர தடுப்புக்காவல் சட்டத்தின்படி பிடித்துப்போடுவேன் என்கிறான். அதாவது முத்துராமலிங்கத் தேவரைப் போட்ட மாதிரி எனது நாற்பதாண்டு பொது வாழ்க்கையில் யாருக்கும் ஒரு சிறு கேடும் இல்லாமல் அமைதியாக நடத்திக் கொண்டு வருகிற எனக்கும் அதுவா? நடக்கட்டுமே!
ஓர் அதிசயமான சம்பவம்! நான் சிறையிலிந்து வந்ததும் சொன்னார்கள்: சிறையிலிருந்து வரும் போதே போலீஸ்காரர்களைக் கேட்டேன். காரில் வரும்போது சொன்னார்கள் - ஏதோ நாலுபேர் குடுமி பூணூல் வெட்டப்பட்டிருப்பதாகப் புகார் கொடுத்துள்ளார்கள்; செய்தவர்கள் யாரென்று தெரியவில்லை என்றார்கள். இங்கு வந்ததும் சிலர் சொன்னார்கள். சேர்ந்து பார்ப்பனர் தாங்களே இப்படிச் செய்து கொண்டு புகார் கொடுத்துள்ளார்கள். இதற்கு ஒரு பார்ப்பன மிராசுதாரர் தூண்டிவிட்டிருக்கிறார். தன் ஆட்களை வைத்தே இதுபோல ஒரு காரியம் செய்து இருக்கிறார்.
நம் தோழர்கள் மீது பழி சுமத்த முயற்சி நடக்கிறது; (காவல்துறையினர்) போலீஸ்காரர்கள் இதற்குக் குப்பைக்கூளம் சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களே இது போலச் செய்து கொள்கிற நிலை வந்துவிட்டது என்றால் மகிழ்ச்சிதான்.
இன்றும் சொல்கிறேன். கழகக்காரர்கள் அதுபோல நடந்திருப்பார்களானால், வெட்கப்படாமல் சொல்கிறேன், அது தவறு. அவர்கள் கழக்கக்காரர்கள் அல்ல; கழகக்காரர்கள் அதுபோல நடந்திருக்க மாட்டார்கள், பூணூல் அறுப்பதும் குடுமி வெட்டுவதும் என் திட்டத்தில் இல்லாமலில்லை; ஆனால் அதை இப்போது செய்தால் அது தவறுதான்.
உயர்ந்த சாதிக்காரன் என்பதற்காக அதைக் காட்டிக் கொள்ளத்தானே உச்சிக்குடுமி, பூணூல். அதைப் பார்க்கும்போது எங்கள் இரத்தம் தொதிக்குமா இல்லையா?
ஆகவே ஓட்டல் போர்டுகளில் (உணவகப் பெயர்ப் பலகைகளில்) பிராமணாள் என்பதை அழிக்க வாய்தா கொடுத்ததுபோல் இதற்கும் வாய்தா கொடுப்பேன். ஆனால் இப்போது நடந்திருப்பது கழகத் தோழர்களால் என்று சொல்வது தப்பு உங்களுக்குத் தெரியாது. சென்னையில் பார்ப்பான் முகத்தில் தார் ஊற்றியதாகப் புகார் வந்தது. அவனே ஊற்றிக் கொண்டானா? யார் ஊற்றினார்கள் என்பது தெரியாது. போலீஸ்காரர்கள் என் வீட்டிற்கு வந்தார்கள். "எங்களுக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது. யாரையாவது ஒருவரை ஒத்துக் கொள்ளச் சொல்லுங்கள். எச்சரிக்கை செய்து விட்டுவிடச் சொல்கிறோம். இல்லாவிட்டால் எங்களுக்குக் கஷ்டமாகும் என்றார்கள்" நானும் ஏமாந்துதான் போய்விட்டேன். தோழர்களிடம் சொல்லி ஒருவரை ஒத்துக் கொள்ளுமாறு சொல்லச் செய்தேன். ஒரு குற்றமும் அறியாத ஒருவர் ஒத்துக் கொண்டார். அபராதம் போட்டார்கள். அதைக்கூட போலீஸ்காரர்கள் தான் தந்தார்கள். ஆனால் அது என்ன ஆயிற்று என்றால் அதை வைத்துத்தான் தடையுத்தரவு போட்டார்கள்; போட முடிந்தது.
-------------------------- 28.11.1957-அன்று திருச்சி டவுன்ஹால் மைதானத்தில் ஈ.வெ.ரா பெரியார் சொற்பொழிவு.-"விடுதலை" 30.11.1957