Search This Blog

12.6.12

இடஒதுக்கீடும் வருமான வரம்பும்மத்திய அரசுக்குச் சொந்தமான கல்வி நிறுவனங்களில் சேரவும், வேலை வாய்ப்பில் இடம் பெறவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 27 விழுக்காடு சட்டம் நடைமுறையில் உள்ளது. இதில் கல்வியில் முழுமையான அளவுக்குச் செயல்பாட்டுக்கு வரவில்லை.

மண்டல் குழுவின் பரிந்துரைகளின் காரணமாக வாய்ப்புப் பிற்படுத்தப்பட்டவர்களுக்குக் கிடைத்துள்ளது.

சாதாரணமாக எளிதான முறையில் இந்த வாய்ப்புகள் கிட்டவில்லை; மண்டல் குழுவின் பரிந்துரைகள் ஒரு பக்கம் இருந்தாலும் அவற்றை நடைமுறைப்படுத்த விடாமல் பார்ப்பன ஆதிக்க நிர்வாகக் கும்பல் அதற்குப் பல வகைகளிலும் முட்டுக்கட்டை போட்டு வந்திருக்கின்றன. ஒரு பக்கம் ஆளும் வர்க்கம், நிருவாக வர்க்கம் இப்படியென்றால் இன்னொரு பக்கம் நீதிமன்றம் தன்பங்குக்குச் சமூக நீதிக்கு எதிரான சாட்டையைச் சுழற்றியது.

1950-க்கும் 1977-க்கும் இடையில் இடஒதுக்கீடு தொடர்பான வழக்கினை விசாரித்த நீதிபதிகளின் எண்ணிக்கை 50. இதில் பார்ப்பன நீதிபதிகளின் எண்ணிக்கை 48.

இவ்வளவுக் கட்டுகளையும், தடைகளையும் மீறி மண்டல் குழுப் பரிந்துரைகளை ஓரளவு செயல்படுத்து வதில் வெற்றிபெற்றுள்ளோம்.

மண்டல் குழுவின் அறிக்கையை நாடாளுமன்றத்தில் வைத்து விவாதிக்க வைக்கவே பெரும் பாடுபட வேண்டியுள்ளது. அதற்காகவேகூட சென்னை சைதாப்பேட்டையில் திராவிடர் கழகம் மாநாடு நடத்தியதுண்டு. அம்மாநாட்டில் கருநாடக முதல் அமைச்சர் தேவராசு அர்ஸ் அவர்கள் கலந்து கொண்டு சமூக நீதிக்கான குரலை அழுத்தமாகக் கொடுத்தார்.

நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்பட்டும், அதனைச் செயல்படுத்த மத்திய அரசுக்கு மனம் வராத நிலையில், வீதிக்கு வந்து திராவிடர் கழகம் போராடியது. இந்த வகையில் 42 மாநாடுகளையும் 16 போராட்டங்களையும் திராவிடர் கழகம் நடத்தியதுண்டு; டில்லி சிறை வரை சந்தித்து வந்தனர் திராவிடர் கழகத் தோழர்கள்.

சமூக நீதிக் காவலர் மாண்புமிகு வி.பி.சிங் அவர்கள் பிரதமராக வந்தபோதுதான் வேலை வாய்ப்பில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 27 விழுக்காடு என்பது முதன் முதலாக அறிவிக்கப்பட்டது. வி.பி.சிங் தலைமையிலான ஆட்சியை வெளியி லிருந்து ஆதரித்துக் கொண்டிருந்த பி.ஜே.பி., வி.பி. சிங் அவர்களின் 27 விழுக்காடு அறிவிப்புக்குப் பின் தன் ஆதரவை விலக்கிக் கொண்டது. இதன் மூலம் தமது சமூக அநீதி முகத்தை ஒரு முறை பி.ஜே.பி. நாட்டுக்குக் காட்டிக் கொண்டது.

சமூக நீதிக்காக ஆயிரம் பிரதமர் நாற்காலிகளை இழக்கத்தயார் என்ற வரலாற்றுப் பிரகடனத்தை செய்த பெருமகனாக வி.பி.சிங் அவர்கள் என்றென்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் ஈர நெஞ்சில் குடியிருப்பார்கள்.

வி.பி. சிங் அவர்களின் அறிவிப்பினை எதிர்த்து வழக்கம்போல உயர் ஜாதி ஆதிக்கக் கூட்டம் உச்ச நீதிமன்றம் சென்றது. 1992 இல் ஒரு தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்கியது. அதில்தான் தேவையில்லாமல் இந்திய அரசமைப்புச் சட்டத்தில் எந்த இடத்திலும் குறிப்பிடப்படாத பொருளாதார அளவுகோல் ஒன்றை கிரிமீலேயர் என்ற புதிய சொல்லாக்கத்தைத் திணித்தது. அதன்படி ஆண்டு வருமானம் குறிப்பிட்ட அளவுக்கு உள்ள பிற்படுத்தப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீடு கிடையாது. அப்படி நிர்ணயிக்கப்பட்ட தொகை மாறி மாறி மாற்றி அறிவிக்கப்பட்டு வருகிறது. நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை இது மாற்றியமைக்கப்படுகிறது. 1993இல் ஒரு லட்சம் ரூபாயாக இருந்தது. 2004இல் நான்கரை லட்சம் ரூபாய் என்று நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. அது 7 லட்சம் ரூபாயாக நிர்ணயிக்கப்படும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

பி.வி. நரசிம்மராவ் அவர்கள் பிரதமராக இருந்தபோது உயர் ஜாதியில் ஏழைகளுக்கு 10 சதவிகித இடஒதுக்கீடு செய்ய முன்வந்தது. அவ்வழக்கில் இடஒதுக்கீட்டில் பொருளாதார அளவுகோல் கூடாது என்று தெரிவித்த அதே உச்சநீதிமன்றம் பிற்படுத்தப்பட்ட மக்களின் இடஒதுக்கீட்டில் கிரிமீலேயர் என்ற பொருளாதார அளவுகோலைத் திணித்தது முரண்பாடு அல்லவா!

இதை அன்று முதல் தொடர்ந்து திராவிடர் கழகம் சுட்டிக் காட்டி எதிர்த்து வருகிறது. இப்பொழுதும் மீண்டும் வலியுறுத்துகிறோம். இந்திய அரசமைப்புச் சட்டத்தில் சமூகரீதியாகவும் கல்வி ரீதியாகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்குத் இடஒதுக்கீடு என்று தான் கூறப்பட்டுள்ளதே தவிர, எந்த இடத்தில் கிரீமிலேயர்கள் இல்லை. இதனை முற்றாக நீக்குவதே சரி! புதிய சட்டத் திருத்தம் மூலம் இதனைச் செய்யுமாறு மத்திய அரசை வலியுறுத்துகிறோம்.

-----------------------"விடுதலை” தலையங்கம் 12-6-2012


4 comments:

தமிழ் ஓவியா said...

பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டுக்கான ஆண்டு வருமான வரம்பு 7 லட்ச ரூபாய்க்கு உயர்த்தப்படலாம்


புதுடில்லி, ஜூன் 12: பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டுக்கு தகுதி பெறுவதற்கான ஆண்டு வருமான வரம்பு தற்போது உள்ள 4.5 லட்சம் ரூபாயிலிருந்து 7 லட்ச ரூபாயாக மத்திய அரசு உயர்த்தக்கூடும் என்று கூறப் படுகிறது. இந்த வருமான உச்ச வரம்பு 1993 இல் ஒரு லட்சமாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது; பின்னர் 2004 இல் 2.5 லட்சமாகவும், 2008 இல் 4.5 லட்சமாகவும் உயர்த்தப் பட்டது. என்றாலும் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த உச்ச வரம்பு மறுபரிசீலனை செய்யப்பட்டு உயர்த்தப்பட்டு வருகிறது என்றாலும், பிற்படுத்தப் பட்டோர் தேசிய ஆணையம் உச்ச வரம்பாக ரூ.12 லட்சமாக நிர்ணயிக்க வேண்டும் என்று பரிந்துரைத்திருந்தது. 1993 இல் இருந்த 100 ரூபாயின் மதிப்பு 2011 இல் 29 ரூபாய்க்கு வீழ்ந்துவிட்டதை தேசிய ஆணையம் சுட்டிக்காட்டி யிருந்தது.

இடஒதுக்கீடு என்னும் ஆக்கபூர்வமான செயல்பாடு சமூகத்தில் வேற்றுமை பாராட்டப்பட்டு வருவதைச் சுற்றியே சுழல்வதாகும். பொருளாதார நிலையில் பெறும் முன்னேற்றத்தை மட்டுமே வைத்து அவர்களின் சமூக அளவிலான முன்னேற்றத்தை முடிவு செய்துவிட முடியாது என்று தேசிய ஆணையத்தின் தலைவர் எம்.என். ராவ் கூறுகிறார். 12-6-2012

தமிழ் ஓவியா said...

காவிரியில் வருண யாகமாம்! அமைச்சர்கள் இதில் கலந்து கொள்ளலாமா? யாகம் நடத்தியும் மழை பெய்யவில்லையே!


- சர்ச்லைட்

கர்நாடகா மற்றும் தமிழகத்தில் மழை வேண்டி பாரதீய கிசான் சங்கம் சார்பில் 108 விவசாயிகள் பட்டினி விரதம் - யாகம், ஸ்ரீரங்கத்தில் காவிரி ஆற்றில் குழி தோண்டி தண்ணீர் நிரப்பி பர்ஜன்ய சாந்தி ஹோமம் நடத்தினார்களாம் வேத விற்பன்னர் களான பூணூல் திருமேனிகள்!

இதனை தமிழ்நாட்டு அமைச்சர் திருமேனிகள் இருவர் பொதுப்பணித்துறை அமைச்சர் திரு. கே.வி. ராமலிங்கம், கல்வி அமைச்சர் திரு. சிவபதி ஆகி யோர் தொடங்கி வைத்தார்களாம்!

மழை உடனே கொட்டு கொட்டு என்று கொட்டித் தீர்த்து, காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்தோடி விட்டதா?

இவ்வமைச்சர்கள் பதவிப் பிரமாணம் எடுத்த இந்திய அரசியல் சட்டத்தின் 51A(h) பிரிவின் கீழ், ஒவ்வொரு குடிமகனுடைய அடிப்படைக் கடமை அறிவியல் - மனப்பான்மை, ஏன், எதற்கு என்று கேள்வி கேட்பது, மனிதநேயம், சீர்திருத்தம் இவை களை உருவாக்குதல் ஆகும் என்று தெரிவிக்கப்பட் டுள்ளதே - அதற்கு நேர் முரணானது அல்லவா இந்(து)த மூடநம்பிக்கை - யாகம் என்பது!

யாகத்தால் - வேத விற்பன்னர்களால் மழையை வரவழைக்க முடியும் என்றால் அவர்களை அரசு தேசியமயமாக்கி, எங்கெங்கெல்லாம் மழை தேவையோ அங்கே மழை பெய்ய வைக்கலாமே!

அட மண்டூகங்களே, அறிவியல் ரீதியாக மேலை நாடுகளில் செயற்கை மழையை (செலவு அதிகம் அதற்கு) வரவழைக்கிறார்களே! விமானங்கள் மேகங்களுக்கு மேலே சென்று, சில்வர் நைட்ரேட் என்ற ரசாயனப் பொருளைத் தூவி செயற்கை மழையை வரவழைக்கலாமே!

கலைஞர் முன்பு முதல் அமைச்சராக இருந்த கட்டத்தில் இப்படி ஒரு செயற்கை மழையை சென்னைப் பகுதியில்கூட செய்து காட்டினாரே!

அதுதானே அறிவியல் அணுகுமுறை? அதை விடுத்து, யாகம், வேத முழக்கம் என்பதெல்லாம் பார்ப்பனர் பிழைக்கும் வழியான பித்தலாட்டம் அல்லா மல் வேறு என்ன? இதற்கு அமைச்சர்கள், அதிகாரிகள் ஆதரவு காட்டுவது, துவக்கி வைப்பது எல்லாம் மதச் சார் பின்மை தத்துவத்திற்கு விரோதம் - அறிவியலுக்கு எதிரான மூடநம்பிக்கையைப் பரப்பும் வெட்கக் கேடான செயல் அல்லவா?

தமிழ் ஓவியா said...

நுழைவுத் தேர்வை ரத்து செய்யாவிட்டால் - திராவிடர் கழக மாணவரணி - இளைஞரணி சார்பில் போராட்ட எரிமலை வெடிக்கும்!


தமிழ்நாடெங்கும் நுழைவுத் தேர்வை எதிர்த்து கழக ஆர்ப்பாட்டம்

நுழைவுத் தேர்வை ரத்து செய்யாவிட்டால் - திராவிடர் கழக

மாணவரணி - இளைஞரணி சார்பில் போராட்ட எரிமலை வெடிக்கும்!

தஞ்சையில் தமிழர் தலைவர் எச்சரிக்கை

தஞ்சாவூர், ஜூன் 12- நுழைவுத் தேர்வை ரத்து செய்யாவிட்டால் திரா விடர் கழக மாண வரணி, இளைஞரணி சார்பில் அடுத்த கட்டப் போராட்டம் எரி மலையாக வெடித்துக் கிளம்பும் என்றார் திராவிடர் கழகத் தலை வர் கி.வீரமணி அவர்கள்.

நுழைவுத் தேர்வை எதிர்த்து தஞ்சாவூரில் இன்று காலை 11 மணி யளவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் தலைமை வகித்து கண் டன உரையாற்றினார் கள். தனது உரையில் குறிப்பிட்டதாவது:

கடந்த பல ஆண்டு களாக நுழைவுத் தேர்வு என்பது ரத்து செய்யப்பட்டு, அதுவும் திமுக ஆட்சியில் சட்ட மாக வடிவமைத்து நீதிமன்றத்தில் தீர்ப்பு அளித்து, நுழைவுத் தேர்வு ரத்து செய்யப் பட்டுள்ளது. மீண்டும் கொண்டு வருவதற்கு முயற்சிக்கிறார்கள். கான்பூர் அய்.அய்.டி. டில்லி அய்.அய்.டி. போன்றவற்றிலேகூட அகில இந்திய அளவில் எதிர்க்கிறார்கள்.

ஒரே வகை கல்வி பொருந்துமா

இந்தியாவில் பன் மொழி பல தரப்பட்ட கலாச்சாரம் உள்ளது. நாட்டில் அனை வருக்கும் ஒரே கல்விக் கொள்கை, நுழைவுத் தேர்வு என்பது தேவை யற்றது. கல்வியில் சீர்மை என்ற பேரில், எல்லோ ரும் கோதுமையை சாப்பிட முடியுமா?

சி.பி.எஸ்.சி. பாடத் திட்டத்தில் அம்பேத் கர்பற்றி கார்ட்டூன் போட்டு கொச்சைப் படுத்துவது, மொழிப் போரை கொச்சைப் படுத்துவது தேவை யில்லாத ஒன்று. பாடத் திட்டத்தில் இந்தி எதிர்ப்புப் போர் தவ றாகப் பதிவு செய்யப் பட்டு, தவறாக வரலாறு சொல்லி தருவதையும், உடனடியாக பாடத் திட்டத்தில் இருந்து நீக்க வேண்டும். நுழை வுத் தேர்வு என்பதை கை விட வேண்டும். இல் லையென்றால் தமிழ் நாடு முழுவதும் திரா விடர் கழக மாண வரணி, இளைஞரணி சார்பில் போராட்டம் எரிமலையாக வெடிக் கும். இப்போராட்டம் இப்பொழுது நடை பெறுவது ஒரு தொடக் கம்தான்.

மதவாத சக்திகள் உள்ளே புகுவதைவிட வெளியில் இருப்பவர் களைவிட கபில்சிபல் போன்றவர்கள் உள்ளே இருந்து சமூகநீதியை அழிக்கின்றனர்?

மாணவர்களுக்கு தேவையற்றது நுழைவுத் தேர்வு! பெற்றோர் களின் தலையில் கல்லை போடுவது போன்றது நுழைவுத் தேர்வு. மாநி லப் பட்டியலிலுள்ள கல்வியை மத்திய பட் டியலுக்கு கொண்டு சென்றது மாற்றப்பட வேண்டும். கிராமத்து பிள்ளைகளின் வயிற்றில் அடிக்கும் முயற்சிதான் நுழைவுத் தேர்வு என்று பல செய்திகளை எடுத் துக் கூறி கண்டன எழுச்சி யுரையாற்றினார். 12-6-2012

தமிழ் ஓவியா said...

நித்யானந்தா தலை மறைவு - விரைவில் கைது செய்யப்படுவார் பெங்களூரு ஆசிரமத்துக்குப் பூட்டு: அரசு நடவடிக்கை!


பெங்களூரு, ஜூன் 12- கருநாடக மாநிலத்தில், பெங்களூரு அருகே உள்ள பிடதியில் நித்தியானந்தாவின் தியான பீட ஆசிரமம் உள்ளது.

இங்கு நித்தியானந்தா கடந்த ஏழாம் தேதி பத்திரிகையாளர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்து இருந் தார். அப்போது தனியார் தொலைக் காட்சியை சேர்ந்த செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு அவரு டைய சீடர்கள் எதிர்ப்பு தெரி வித்ததால் இருதரப்பினருக்கும் இடையே கைகலப்பு, ரகளை ஏற்பட்டது.

இது தொடர்பாக பிடதி காவல் நிலையத்தில் இரு தரப்பினர் சார்பிலும் புகார் செய்யப்பட்டது. இந்த புகார்கள் அடிப்படையில் பிடதி காவல் நிலையத்தில் 4 வழக் குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கைகலப்பு-ரகளை உள்ளிட்ட வன்முறை சம்பவங்கள் தொடர்பாக கன்னட அமைப்பைச் சேர்ந்த 25 பேர் கைது செய்யப்பட்டனர். இதேபோல நித்தியானந்தாவின் சீடர்கள் 18 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இவர்களில் 5 பேர் பெண் சீடர்கள்.

மேலும் அசம்பாவிதங்கள் எது வும் நடைபெறாமல் தடுக்க பிடதி ஆசிரம பகுதியில் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டு பலத்த காவல்துறை பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

முதல் அமைச்சர் பேட்டி

இதைத்தொடர்ந்து, நித்தியானந் தாவின் பிடதி ஆசிரமத்துக்கு `சீல்' வைக்கவும், அவரைக் கைது செய்ய வும் கர்நாடக அரசு நடவடிக்கை எடுத்து உள்ளது.

நித்தியானந்தா ஆசிரம பிரச்சினை குறித்து விவாதிப்பதற்காக முதல் அமைச்சர் சதானந்த கவுடா தலை மையில் நேற்று பெங்களூரு விதான சவுதாவில் உயர்நிலைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், நித்தி யானந்தா மீது என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது குறித்து விவா திக்கப்பட்டது.

இந்த கூட்டத்துக்கு பிறகு சதானந்தகவுடா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

``பெங்களூரு அருகே பிடதியில் உள்ள நித்தியானந்தா தியான பீடத்தில் சட்டவிரோத செயல்கள் நடைபெறுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. கடந்த சில நாட்களாக அங்கு நடைபெற்ற பிரச்சினைகள் பற்றி நாங்கள் உன்னிப்பாக கவனித்து வந்தோம்.

நித்தியானந்தாவை கைது செய்ய காவல்துறையினருக்கு உத்தரவிட்டு இருக்கிறேன். இன்னும் 2 நாளில் அவர் கைது செய்யப்படுவார். நித்தியானந்தா ஆசிரமத்தில் நடந்த சட்டவிரோத சம்பவங்கள் குறித்து உயர்மட்ட விசாரணை நடத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. அதனால் அதுகுறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யு மாறு அய்.ஏ.எஸ். அதிகாரியான மண்டல ஆணையர் சம்புதயாள் மீனாவுக்கு உத்தரவிட்டு இருக்கிறேன். அந்த அறிக்கை கிடைத்தபிறகு உறுதியான முடிவு எடுக்கப்படும்.

மேலும், நித்தியானந்தா தியான பீடத்தை கைப்பற்றி தற்காலிகமாக `சீல்' வைக்குமாறும், அங்கு நடை பெறும் நடவடிக்கைகள் குறித்து தகவல்கள் மற்றும் ஆதாரங்களை திரட்டவும் ராம்நகர் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறைக் கண்காணிப்பாளருக்கு உத்தர விட்டுள்ளேன்.

பாலியல் புகார் தொடர்பான வழக்கில் நித்தியானந்தா தற்போது பிணையில் வெளியே இருக்கிறார். அதை ரத்து செய்ய உயர்நீதிமன்றத் தில் மனு தாக்கல் செய்வது குறித்து சட்டத்துறை அதிகாரிகளுடன் விவா தித்து முடிவு எடுக்கப்படும். நித்தி யானந்தா கைது செய்யப்பட்ட பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து உரிய முடிவு எடுக்கப்படும்.''இவ்வாறு முதல் அமைச்சர் சதானந்தகவுடா கூறினார்.

வெளியேறுகிறார்கள் சீடர்கள்

கர்நாடக அரசின் இந்த முடி வினை அடுத்து, நித்தியானந்தா ஆசிர மத்தில் தங்கியிருந்த அவருடைய சீடர்கள் தங்களது பொருட்களுடன் வெளியேறினர்.

கடந்த ஏழாம் தேதி பிடதி ஆசிர மத்தில் நடந்த கைகலப்பு சம்பவத் துக்கு பிறகு நித்தியானந்தா எங்கே சென்றார் என்று தெரியவில்லை.12-6-2012