Search This Blog

20.6.12

பகுத்தறிவுவாதிக்கு எப்பற்றும் கூடாது - பெரியார்

தந்தை பெரியார் அவர்கள் வரவேற்புக்கு நன்றி தெரிவித்துப் பேசுகையில் குறிப்பிட்ட தாவது:-

கழகத் தொண்டு காரணமாக இந்த ஜெயங்கொண்டம் நகருக்கு வரநேர்ந்த சமயத்தில் இப்படி வரவேற்பு அளித்த பஞ்சாயத்து யூனியன் தலைவர், துணைத் தலைவர், உறுப்பினர்கள் ஆகியவர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். இந்த ஜெயங் கொண்டம் நகரம் நமது கழகத்துக்கு 25 ஆண்டுகளுக்கு மேலாகவே ஆக்கமும், ஊக்கமும் அளித்து வரும் ஊராகும். உங்கள் வரவேற்பிதழில் தொண்டிலே சிறந்தது அறிவூட்டுதல் என்று குறிப்பிட்டிருக்கின்றீர்கள்.

நம்நாட்டில் எல்லா வாய்ப்பும், எல்லா வளமும் இருக்கின் றது. ஆனால், அறிவு ஒன்றுதான் இல்லை. இதனை உணர்ந்து தான் கடந்த 40 ஆண்டுகளாக பகுத்தறிவுத் தொண்டு செய்து வருகின்றேன். அப்படித் தொண்டாற்றுவதற்கு ஊக்கமளிக்கும் வகையில் நீங்கள் வரவேற்பு அளித்து பாராட்டியுள்ளீர்கள் என்று கருதுகின்றேன்.

அறிவுத் தொண்டு செய்வது என்பது மற்ற காரியம் போல அல்ல. பகுத்தறிவுத் தொண்டு செய்கின்றவனுக்கு எந்தவிதமான பற்றும் இருத்தல் கூடாது. அறிவுப்பற்று ஒன்றுதான் இருக்க வேண்டும். அறிவுப் பற்று என்றால் அறிவு கொண்டு ஆராய்வது. ஆராய்ந்து முடிவு கட்டுவது ஆகும். ஏன் எந்தவிதமான பற்றும் கூடாது என்கின்றேன் என்றால் நீதிபதியானவருக்கு நீதிப் பற்றைத் தவிர மற்றைய பற்று இருந்தால் அவரை சறுக்கி விட்டுவிடும். அதுபோலத்தான் பகுத்தறிவுவாதிக்கு கடவுள் பற்றோ, ஜாதிப் பற்றோ இருக்கக் கூடாது. இவை காரணமாக பகுத்தறிவு ஆராய்ச்சியில் இருந்து வழுவிவிட ஏதுவாகும். இது போலத்தான் அறிவுவாதிக்கு தேசப்பற்றோ, மொழிப்பற்றோ கூட இருத்தல் கூடாது. எம் மொழி, எம் நாடு என்று ஆரம்பித்து நடுநிலைமையில் இருந்து பிறழ்ந்து விடுகின்றான்.

நமது அரசாங்கம் மேற்கொண்டு உள்ள சமதர்மத்தைப் பற்றிக் கூட நான் கூறுவது உண்டு. சமுதாயத் துறையில் சமத்துவம் வேண்டும் என்று கூறப்படுவதிலிருந்தே நம்மிடையே சமத்துவம் இல்லை. காட்டுமிராண்டிகள் பகுத்தறிவு இல்லாதவர்கள்நாம் என்பது புலனாகின்றது அல்லவா!

கடவுளை, மதத்தை, சாஸ்திரத்தை, முன்ஜென்மம், மறு ஜென்மத்தை நம்பிக் கொண்டு சமதர்மம் கொண்டு வருகின்றது. இல்லாவிட்டால் பித்தலாட்டம் என்பதுதான் பொருள்

எப்படி ஜாதி என்பது செயற்கையோ அதுபோல பொருளாதாரத்தில் பெரியவனாக இருக்கின்றதும் செயற்கையேயாகும். எவனும் பிறக்கும்போதே பூணூலுடன் பிறக்கவில்லை. அதுபோல எவனும் பிறக்கும்போதே பணத்தைக் கொண்டு வரவில்லை. எல்லாம் செயற்கையில் வந்ததுதானே? எனவே, மக்களுக்கு பகுத்தறிவுதான் லட்சியம். மாறானவைகளை எல்லாம் ஒதுக்கித் தள்ள வேண்டும். பொருளாதார சுதந்திரத்தை அறிவுப் போரால்தான் பெற முடியும். சமுதாய சுதந்திரமோ பொருளாதாரச் சுதந்திரமோ வேண்டும் என்று போராட வேண்டுமானால், பகுத்தறிவு கொண்டு போராடியாக வேண்டும். சாஸ்திர, புராணங்களை பார்த்தால் அறிவை ஆதாரமாகக் கொண்டு தர்க்கம் பண்ணுபவன் நாத்திகன். அவன் முகத்தில் விழிக்கக் கூடாது என்று எழுதி வைத்து இருக்கின்றார்கள்.

இதற்கு பயந்து கொண்டு எவரும் இந்தத் துறையில் பாடுபட வரவே இல்லை. 2,500 ஆண்டுகளுக்கு முன்பு புத்தன் என்ற ஒரு ஆள்தான் தோன்றினான். அவனுடைய இயற்பெயர் சித்தார்த்தன் என்பது அவன் புத்தியை ஆதாரமாகக் கொண்டு வாதம் செய்தமை காரணமாக புத்தன் என்று அழைக்கப் பட்டான். அவன் இந்த நாட்டையே அறிவு கொண்டு சிந்திக்கச் செய்து விட்டான். எப்படியோ தந்திரமாக அந்த அறிவுக் கொள்கையினை தந்திரக்காரர்கள் அழித்துப் போட்டார்கள். அறிவுப் பிரச்சாரம் என்பது எல்லாவற்றிற்கும் தாய். அதற்கு சுதந்திரம் கொடுத்து சிந்திப்பது மூலம்தான் எதையும் அடைய முடியும்.


-------------------6.7.1965 அன்று ஜெயங்கொண்டத்தில் நடைபெற்ற விழாவில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய அறிவுரை - விடுதலை 6.8.1965

4 comments:

தமிழ் ஓவியா said...

மாண்புமிகு அப்துல்கலாமை சர்ச்சைக்குட்படுத்தவேண்டாம்!


விஞ்ஞானி ஏ.பி.ஜே. அப்துல்கலாம் அவர்கள் இந்தியாவின் குடியரசுத் தலைவராக முன்பு வந்ததுகூட அவர் சற்றும் எதிர்பாராத ஒன்றுதான். இரண்டாவது முறையாகவும் அவர் தொடர விரும்பியிருந்தால் அந்த வாய்ப்பு எளிதாகவே கடந்த முறை அவரை நாடி வந்திருக்கும்.

இந்த முறைகூட அவர் பெயர் நல்லெண் ணத்தின் அடிப்படையிலேயே முன்மொழியப் பட்டது. அரசியலுக்கு அப்பாற்பட்ட ஒருவர் குடியரசுத் தலைவர் பதவிக்கு வருவது நல்லது என்ற எண்ணம் பொதுவாக இருந்து வருகிறது.

அரசியல் போட்டிகளின் இடையே அவர் சிக்கிக் கொள்ள விரும்பவில்லை என்பதுதான் உண்மை.

ஒருமித்த முறையில் அவர் தேர்வு செய்யப் படக் கூடிய வாய்ப்பு இருந்திருந்தால் கலாம் அவர்கள் இசைவு தந்திருக்கக் கூடும்.

அந் நிலை இல்லாத சூழலில் அரசியல் போட்டியில் தன்னை ஒரு பாத்திரமாகவோ, பகடைக் காயாகவோ ஆக்கிக் கொள்ள அவர் விரும்பவில்லை, காரணம் அவர் அரசியல்வாதி அல்லவே!

தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு, அய்க்கிய முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளரை எதிர்ப்பதற்குத் தக்கவர் கிடைக்காத நிலையில், கலாம் அவர்களை சிக்கெனப் பிடித்துக் கொண்டுள்ளனர் என்பதை எளிதாகப் புரிந்துகொள்ள முடிகிறது.

இந்தச் சூழ்நிலையைப் புரிந்துகொண்ட நிலையில்தான் விஞ்ஞானி அப்துல் கலாம் அவர்கள் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்பாளர் தாம் அல்ல என்பதை தக்க நேரத்தில் அறிவித்துவிட்டார்.

இந்த நிலையில், தேவையில்லாமல் கலாம் அவர்களை மய்யப்படுத்தி சர்ச்சைகளைத் தொடருவது பண்பாடானது அல்ல.

அதிலும் ஊடகங்களுக்கு ஏதாவது தீனி தேவைப்படுகின்றது. அதனால்தான், அப்துல் கலாம் அவர்கள் போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்துவிட்ட பிறகும்கூட அவரை மய்யப்படுத்தி சர்ச்சைகளை உருவாக்கும் ஒரு வேலையில் இறங்கியிருக்கின்றன.

தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் கலாம் என்று பயன்படுத்திய வார்த்தையைத் தவறான வகையில் திசை திருப்பி விளையாடிப் பார்த் தனர்.

இதில் வேடிக்கை என்ன தெரியுமா? திடீ ரென்று பி.ஜே.பி. மதச் சார்பற்ற தன்மையைப் பற்றிப் பேச ஆரம்பித்திருப்பதுதான். சிறு பான்மை சமூகத்தைச் சேர்ந்த கலாமை ஆதரிக்கவேண்டாமா என்று பேச ஆரம் பித்துள்ளது.

இந்தியாவை இந்து ராஜ்ஜியமாக ஆக்க வேண்டும் - ராம ராஜ்ஜியமாக உருவாக்கப் போகிறோம் என்று சொல்பவர்களா மதச் சார்பின்மைபற்றியும், சிறுபான்மையினர் நலம்பற்றியும் பேசுவது?

அயோத்தியில் 450 ஆண்டுகால வரலாறு படைத்த சிறுபான்மை மக்களின் வழிபாட்டுத் தலத்தை இடித்துத் தரைமட்டமாக்கியவர்கள், மக்களின் மறதியை மூலதனமாகக் கொண்டு அரசியல் நடத்த ஆசைப்படுவது அசாத்திய துணிச்சல்தான்.

அய்க்கிய முற்போக்குக் கூட்டணியும் சரி, தேசிய ஜனநாயகக் கூட்டணியும் சரி, மதிப் பிற்குரிய விஞ்ஞானி மாண்புமிகு அப்துல்கலாம் அவர்களை தேவையில்லாமல் சர்ச்சைக்கு உட்படுத்தாமல் இருப்பதுதான் அவருக்குக் காட்டப்படும் தலைசிறந்த மரியாதையாக இருக்க முடியும். 20-6-2012

தமிழ் ஓவியா said...

டெசோ கூறுவதைக் கேளுங்கள்! கேளுங்கள்!!



ஜெனிவா தீர்மானத்திற்குப் பிறகும்கூட இலங்கை சிங்கள அரசின் திமிர் அடங்கிப் போனதாகத் தெரியவில்லை.
போர் விதி முறை மீறப்பட்டுள்ளதா? ஈழத் தமிழர்கள் எந்த அளவு பாதிக்கப்பட்டனர் என்பதை - இந்தக் குற்றங்கள் இழைக்கப்படுவதற்குக் காரணமாக இருந்த இலங்கை அரசே விசாரிக்கும் என்றால், அந்த அரசுக்கு அச்சம் ஏற்படுவதற்கு வாய்ப்பு ஏது? அதனால்தான் இலங்கை அமைச்சர் சம்பிகாரன வாக வெறி முறுக்கேறிய வார்த்தைகளைக் கொட்டியிருக்கிறார். ஈழத் தமிழர்கள் உரிமை கிரிமை என்று போராடவும் பேசவும் ஆரம்பித்தால் முள்ளி வாய்க்கால் சம்பவம் போல நூறு முள்ளிவாய்க் கால்கள் நடைபெறும் என்று கூறியிருக்கிறார்.

இதற்குப் பிறகாவது இந்திய அரசு விழித்துக் கொள்ளுமா? ஜெனிவாவில் இலங்கை அரசு பக்கம் கை தூக்கிய அந்த நாடுகளாவது கண் திறந்து பார்க்கும் என்று நம்புகிறோம்.

இலங்கை அமைச்சரின் வெறிப் பேச்சைக் கண்டித்து திமுக தலைவரும் டெசோ அமைப்பின் தலைவருமான மானமிகு கலைஞர் அவர்கள் பிரதமருக்குத் தந்தி கொடுத்துள்ளார்.

நூற்றுக்கணக்கான இனப்படுகொலைகள் நடைபெறும் என்று எச்சரித்ததுடன், ஒரு முள்ளிவாய்க்கால் போதுமென்றும், மேலும் நூறு முள்ளிவாய்க்கால்களுக்கு எவரும் முயற்சிக்கக் கூடாது என்றும் இலங்கை அமைச்சர் சம்பிகாரண வாக பேசியுள்ளதாக எங்களது கவனத்திற்கு வந்துள்ளது.

இலங்கை அமைச்சரின் பேச்சு மிகவும் ஆத்திர மூட்டுவது என்பதால் கண்டனத்துக்குரியது. இலங்கை அமைச்சரின் கண்டனத்துக்குரிய பேச் சினால் உலகெங்கும் உள்ள தமிழர்கள் பெருமளவு கலக்கம் அடைந்துள்ளனர். தாங்கள் இந்தப் பிரச்சினையை இலங்கை அரசிடம் எடுத்துக்கூறி கட்டுப்பாட்டுடனும், மனித நேயத்துடனும் நடந்து கொள்ளும்படி அறிவுறுத்த வேண்டும். இலங்கை அரசின் கடுமையான நிலைப்பாடு குறித்து ஐக்கிய நாடுகள் அமைப்புக்கும் தெரிவிக்கலாம். என்று கலைஞர் அவர்கள் பிரமதரைக் கேட்டுக் கொண் டுள்ளார்.

முள்ளி வாய்க்கால் படுகொலைக்குப் பிறகு ஒரு குறிப்பிட்ட நிலையில் இலங்கை அதிபர் ராஜபக்சே கொடுத்த வாக்குறுதிகள் எல்லாம் உலக மக்களின் கண்களில் மிளகாய்ப் பொடியைத் தூவும் தந்திரம் தான்; ராஜபக்சேவின் கடந்த கால நட வடிக்கைகளை அறிந்தவர்களுக்கு மிக நன்றாகவே தெரியும் - வாக்கைக் காப்பாற்றும் நாணயம் அந்த மனிதரிடம் அறவேயில்லை என்பது வெளிப்படை! சுஷ்மா சுவராஜ் எம்.பி. தலைமையில் சென்ற 12 பேர்கள் கொண்ட குழுவிடம் தெரிவித்ததையே, அந்தக் குழு இந்தியா வந்து சேர்வதற்கு முன்பாகவே மறுத்து விட்டாரே!

தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்ந்தளிப்பு குறித்து இந்திய எம்.பி.க்கள் குழுவிடம் எந்த உறுதியையும் அளிக்கவில்லை என்று இதே இலங்கை அரசு கூறவில்லையா!

தமிழர்களுக்கு அதிகாரம் பகிர்ந்தளிக்க வழி செய்யும் 13ஆவது சாசனம் குறித்து அதிபர் ராஜபக்சேவிடம் பேசியதாகவும் ராஜபக்சே அதனை நிறைவேற்ற முயற்சிப்பதாகவும் சுஷ்மா சுவராஜ் கூறினார்.

இதனை மறுப்பதாக இலங்கை அரசு கூறியதை தி அய்லண்ட் ஏடு வெளியிட்டதே!

நாடாளுமன்றக் குழுதான் ஈழம் சென்றதே - சுதந்திரமாக அவர்களால் செல்ல முடிந்ததா? இலங்கை அமைச்சர்களும், இராணுவத்தினரும் புலனாய்வுப் பிரிவினரும் இவர்களுடன் சுற்றித் திரிந்து கொண்டிருந்தனர் என்கிற தகவலை இந்தியா டுடே (2.5.2012) அம்பலப்படுத்த வில்லையா?

வடக்கு மாநிலத்தில் வாழும் தமிழர்களின் எண் ணிக்கை 13 லட்சம் என்றால், அங்கு குவிக்கப்பட்டு இருக்கும் இராணுவத்தினரோ ஒரு லட்சம்.

யாழ்ப்பாணத்தில் சிங்கள இராணுவத்தினரின் நில ஆக்கிரமிப்பைக் கண்டித்துப் பேரணி நடத்திய தமிழர்கள்மீது சிங்கள இராணுவம் கொடூர தாக் குதலைத் தொடுத்திருக்கிறது. முள்வேலி முகாமுக் குள் இன்னும் தமிழர்கள் ஆயிரக்கணக்கில்.

இதற்குப் பிறகும் இலங்கை இறையாண்மைக்கு உட்பட்டு, ஒரே நாட்டின் கீழ் சிங்களவர்களோடு இணைந்து ஈழத் தமிழர்கள் வாழ வேண்டும் என்று எவரேனும் நாக்கைச் சுழற்றுவார்களேயானால் அவர்களைவிட மனிதநேய மற்ற மாக்கள் வேறு யாராகவும் இருக்க முடியாது.

தனியீழம்தான் ஒரே தீர்வு எனும் டெசோவின் குரலைக் கேளுங்கள் கேளுங்கள்!!

வரும் ஆகஸ்டு 5இல் விழுப்புரத்தில் கூடும் டெசோ மாநாட்டில் உலகத் தமிழர்களின் ஒட்டு மொத்த குரல் ஓங்கி ஒலிக்கப் போகிறது! உலகத் தமிழர்களே எதிர்பாருங்கள்! 21-6-2012

தமிழ் ஓவியா said...

பவானியாற்றின் குறுக்கே அணை: கலைஞர் கருத்து

பவானி ஆற்றின் குறுக்கே கேரள அரசு அணை கட்ட முயற்சிப்பது குறித்து தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் தெரி வித்துள்ள கருத்து வருமாறு:

திருப்பூருக்குக் குடிநீர் ஆதாரமாக விளங்கும் பவானி ஆற்றின் குறுக்கே அட்டப்பாடியில் கேரளா புதிதாக அணை கட்டி னால், நீர்வரத்து முற்றிலும் குறைந்து, திருப்பூர், கோவை மாநகராட்சிகள், மேட்டுப்பாளையம் நக ராட்சி, பெரியநாயக்கன் பாளையம், நரசிம்மநாயக் கன் பாளையம், சிறுமுகை, காரமடை ஆகிய பேரூ ராட்சிகளில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும். மேலும், ஈரோடு மாவட்டத்தின் பாசனமும் பாதிக்கப்படும்.

இப்படி அணைகள் கட்டி தமிழக மக்களின் குடிநீர் ஆதாரத்தையும், தமிழக விவசாயிகளின் வாழ்வா தாரத்தையும் கேள்விக்குறியாக்க முனையும் கேரளா வின் முயற்சிக்குத் தமிழக அரசு தடுப்பணை கட்ட முன்வருமா? என்று கூறியுள்ளார்.

இந்திய இறையாண்மை - இந்திய தேசியம்பற்றிப் பேசுபவர்கள்தான் கேரளத்தில் ஆட்சியில் இருக் கிறார்கள். இருந்தும் என்ன பயன்? தந்தை பெரியார் மொழியில் சொல்லவேண்டுமானால், வெங்காய தேசியம்தானோ! 21-6-2012

தமிழ் ஓவியா said...

சிருங்கேரி சங்கராச்சாரியார் சென்னையில் முகா மிட்டுள்ளார். அவர் ஒன்றைத் திருவாய் மலர்ந்துள்ளார். ஆள் பலம், பணம் செல்வாக்கால் ஒன்றும் சாதிக்க முடியாது என்று கூறியுள்ளார்.



சிருங்கேரியார் சொல்லும் ஒவ்வொன்றும் காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரரை மனதில் வைத்துக் கொண்டே சொல்வதுபோல் இருக்கிறது.

சங்கரராமன் கொலை வழக்கில் ஜெயேந்திரரின் பங்கை மனதில் கொண்டு சொன்னதுபோல் சில நாள்களுக்குமுன் திருவாய் மலர்ந்தார் சிருங்கேரியார்.

நாம் செய்யும் பாவ - புண்ணியங்களுக்கு ஏற்ப பலன்களை அளிக்க இறைவன் இருக்கிறான் என்றார்.

இப்பொழுதோ பண பலம், ஆள் பலம் பற்றியெல்லாம் சிலாகித்துள்ளார். சங்கரராமன் கொலையில் தாதாக்கள், ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்டதில் ஆள்கள் ஏற்பாடு என்பதையெல்லாம் பார்க்கும்பொழுது இப்படி யூகிப்பதில் நியாயம் இருக்கத்தானே செய்கிறது.21-6-2012