Search This Blog

5.6.12

ஜாதி ஒழிப்புக்கு பெண்களே முன்வாருங்கள் ‍-பெரியார்

னக்கு முன்னால் பேசிய சில தோழர்கள் சொன்னார்கள். ஏதோ கலியாணம் (கலப்பு மணம்) செய்து கொண்டால் ஜாதி ஒழிந்து போகும் என்று. கலப்பு மணம் செய்வதால் ஜாதி ஒழிந்து போகும் என்று சொல்ல எனக்குத் தைரியமில்லை. அதை ஒரு ஜாதியாக ஆக்கிவிடுவார்கள்! எப்படி என்றால் கலப்பு மண ஜாதி என்றுதான் கடைசிக்குச் சொல்ல முடியுமே தவிர, ஜாதி அடியோடு போய்த் தொலைய முடியாது. அதுவும் சமஜாதியில்தான் கலப்பு மணம் நடைபெறும். பறையன், சக்கிலி பள்ளன் முதலிய ஜாதிகளில் மேல் ஜாதியான் லேசில் மணம் செய்யமாட்டான். நம் நாட்டிலே எத்தனையோ தாசிகள் இருக்கிறார்கள்; நாமாவது ஒரு கலப்பு மணத்தைச் சொல்லுகிறோம், இவர்கள் ஆயிரம் கலப்பு மணம் செய்து பிள்ளைகள் பெறுகிறார்களே. அந்த ஜாதிக்குள் கூட ஜாதி போவதில்லையே! அதையும் பல ஜாதிகளாகக ஆக்குகிறோமே. அவர்களும் மேல்ஜாதி ஆகத்தானே பார்க்கிறார்கள். பட்டிக்காட்டு தாசிகள் ஜாதி பார்த்துத் தான் புழங்குகிறார்கள். இதனால் கலப்பு மணத்தால் ஜாதி போய்விட்டதென்று கூற முடிகிறதா?

இப்போது நானும்தான் கலப்பு மணம் செய்து இருக்கிறேன். தோழர் சாமி சிதம்பரனார், தோழர் குருசாமி, தோழர்கள் எஸ். ராமநாதன் முதலியவர்களும்தான் கலப்பு மணம் செய்து இருக்கிறோம். அதனால் ஜாதி போய்விட்டதா? ஏதோ வசதி இருப்பதால் மக்கள் ஒன்றும் சொல்லாமல் சும்மா இருக் கிறார்கள். அது மட்டுமல்லாமல், எங்களுக்குக் குழந்தைகள் இருந்து அவர்களுக்குக் கலியாணம் ஆகவேண்டுமானால் அப்போது தகராறுதான். கலப்பு ஜாதியைச் சேர்ந்தவர்கள் என்று கூறி கலப்பு ஜாதியார்கள் தாம் ஒருவருக்குள் ஒருவர் திருமணம் செய்து கொள்ளுவார்கள். அன்றியும் எங்களுக்கு மதம் கடவுள் ஜாதி என்ற மூன்றைப் பற்றியும் கவலை இல்லை. அதனால்தான் மறுஜாதி மணம் செய்து கொள்ளவும், அதனால் தைரியமாக இருக்கவும் முடிகிறது.

எனவே இந்தக் கொள்கையையும் பரிட்சை செய்து பார்க்க வேண்டுமானால் செய்யலாம். நம்மிடம் அரசாங்கம் வந்த பிறகு ஜாதி ஒழிப்புக்கு ஏதாவது சட்டம் செய்யலாம். மத சாஸ்திரங்களை வைத்துக் கொண்டு ஜாதியை ஒழிப்பது கஷ்டம்.

************

த்தனை பேரும் இன்றைய தினம் ஜாதியை ஒழிக்க வேண்டுமென்று கூறிவிட்டு சும்மா இருந்து விடுவதனால் ஒரு பலனும் இந்த மாநாட்டால் ஏற்படமுடியாது. இந்த மாநாடு நல்ல முறையிலே கூட்டப்பட்டு இருக்கிறது. அந்த முறையிலே இன்றிலிருந்து நம்முடைய ஒவ்வொரு மக்களும் தங்கள் தங்களுடைய ஜாதி இழிவை போக்கிக் கொள்ள முயற்சி எடுத்துக் கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

அதோடு பெண்களும் இம் முயற்சியில் முன் வருவார்கள். ஆனால் கண்டிப்பாக ஜாதி ஒழிந்தே போகும் என்று தைரியமாகக் கூறலாம். ஏனென்றால், ஜாதியைப் பற்றி கெட்ட நம்பிக்கைகள் அவர்களிடம்தான் சீக்கிரத்தில் குடி புகுந்து கொள்கிறது.
எனவே பெண்கள் அந்த நம்பிக்கை எல்லாம் அடியோடு விட்டு விடவேண்டும். இந்த மாதிரி நடக்கும் மாநாடுகளுக்கும், பொதுக் கூட்டங்களுக்கும் தாங்கள் வருவதோடு அல்லாமல், தங்கள் புருஷனையும் அழைத்துக் கொண்டு வரவேண்டும்.

சில ஆண்கள் பெண்கள் பேரிலே குறை கூறுவது. அதாவது நான் சீர்திருத்தக்காரன் ஆகிவிட்டேன். ஆனால் என் வீட்டிலே உள்ளவர்கள் சரியில்லை என்று கூறுவது. இது நியாயமா?

நான் கூறுகிறேன். உண்மையில் இவர்களே பெண்களை பிசாசாக்கி விடுகிறார்கள். இவர்கள் மாத்திரம் தனியாக கூட்டங்களுக்கும் மாநாடுகளுக்கும் மற்றும் பல இடங்களுக்கும் போய் கருத்துகளை அறிந்து கொண்டு வருவது பழக்கமாக இருக்கின்றதே அன்றி, தங்களுடன் தங்கள் மனைவி மார்களையும் அழைத்துக் கொண்டு வந்து இந்த மாதிரியான கூட்டங்களில் கலந்து கொள்ளச் செய்வதன் மூலம் பெண் களுடைய பழைய மூட நம்பிக்கைகளை மாற்ற வழி காண்பது கிடையாது.

சுயமரியாதை இயக்கம் திராவிடர் கழகமாக மாறி வேலை செய்து வருவதன் பயனாக இன்றையத் தினம் ஓரளவு பயன் ஏற்பட்டு இருக்கிறது என்பதையும் யாராலும் மறைக்கவும் முடியாது; மறுக்கவும் முடியாது.
உதாரணமாக, இப்போது நடக்கின்ற திருவிழாக்களைப் பார்த்தாலே புரியும். தெருவிலே சாமி ஊர்வலம் போகிறது என்றால் ஒரு பிணம் சுடுகாட்டுக்குப் போவதற்கும், சாமி ஊர்வலம் போவதற்கும் வித்தியாசம் காணமுடியாத அளவு நிலைமை மாறிவிட்டது. வாகனத்தின் மேல் உட்கார்ந்து இருக்கும் ஒரு குருக்களையும், கோவிலினால் பிழைக்கும் ஒரு சிலரையும், குருட்டு நம்பிக்கைக்காரர்களையும் தவிர முன்னைப் போல மக்கள் திரளையோ, பிரமாண்டமான தாளமேளங் களோ, காணமுடியாத அளவில் திருவிழாக்கள் நடக்கின்றன.

இதிலிருந்து மக்களுடைய மனது ஓரளவு மாறிக் கொண்டே வருகிறது. ஆகையால் இந்த எண்ணத்தை மேலும் மேலும் வளர்த்துக் கொண்டே வரவேண்டியது நமது கடமையாகும். இன்னும் கொஞ்சநாள் போகப் போக நம்முடைய பிரச்சாரத் தால் அவற்றுக்குக் கெட்ட காலம் வருவது நிச்சயம்.

பல தோழர்கள் சொன்ன மாதிரி கம்யூனிஸ்ட் கட்சியும் திராவிடர் கழகமும் தங்கள் தங்களுடைய வேலை முறைகளை கலந்து வைத்துக் கொண்டு பிரச்சாரம் செய்வது என்று ஆரம்பித்தால் ஒரு வருட காலத்திலே நாம் நினைத்த காரியங்கள் வெற்றி அடைந்து விடும். அதனாலே ஒரு கஷ்டமும் இல்லை.

----------------- 30.1.1952இல் சென்னை திருவொற்றியூரில் நடைபெற்ற ஜாதி ஒழிப்பு மாநாட்டில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு (விடுதலை, 2.2.1952).

2 comments:

தமிழ் ஓவியா said...

அவாள் அகராதி


பல்வேறு குளறுபடி களுக்குப் பின், சமச்சீர் கல்வித் திட்டத்தின்கீழ் நடந்த முதல் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவு சரியலாம் என்று எதிர் பார்க்கப்பட்ட நிலையில், 86.20 சதவிகித மாணவ, மாணவியர் தேர்ச்சி பெற்று அசத்தினர். கடந்த ஆண்டை விட, 0.9 சதவிகிதம் மாணவ, மாணவிகள் கூடு தலாகத் தேர்ச்சி பெற்றனர். இதற்குத் தாராள திருத்தம்தான் காரணம் என, தேர்வுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன - இப்படி செய்தி வெளி யிடுவது தினமலர் கும்ப லைத் தவிர வேறு யாராகத் தான் இருக்க முடியும்?

அதன் சொற்களையே பார்ப்போம்; பல்வேறு குளறு படிகளுக்குப் பின்.... என்று தினமலர் எழுதுகிறதே.... அது என்ன பல்வேறு குளறுபடிகள்? அவற்றைச் செய்தவர்கள் யார்? அறிவு நாணயத்தோடு வெளிப் படையாகச் சொல்லி இருக்கவேண்டாமா? இதில் என்ன பூடகம்?
பல்வேறு குளறுபடி களைச் செய்தது எல்லாம் தினமலர் தூக்கி வைத் துக் கொண்டாடும் அ.இ.அ.தி.மு.க. ஆட்சி தானே? எத்தனை மாதங் கள் பாழாயின- அரசின் பிடிவாதம்தானே காரணம்?

உச்சநீதிமன்றம்வரை சென்று கதவைத் தட்டியது யார்? நீதிமன்றம் குட்டிய வலி தாங்க முடியாத நிலை யில்தானே - வேறு வழி யின்றி ஒப்புக்குச் சப்பாணி யாய் சமச்சீர் கல்வித் திட்டத்திற்குப் பச்சைக் கொடி காட்டப்பட்டது?

அதிலும் ஆத்திரத்தைக் காட்டவில்லையா? பள்ளி ஆசிரியர்களுக்கு என்ன வேலை? திருவள்ளுவர் படம் உள்பட பெவிகால் வைத்து ஒட்டி மறைக்கப் படவில்லையா?

காந்தம் கறுப்பு - சிகப் பாக இருக்கிறது என்பதற் காக அதைக்கூட ஒட்டி மறைக்கவில்லையா?

இவ்வளவு குளறுபடி களையும் செய்த அரசை கம்பளி போட்டு மறைத்து விட்டு, யாரோ குளறுபடி களைச் செய்ததாக பந்தை வேறு பக்கம் அடிப் பானேன்?

கடைசியாக தினமலர் கொலம்பஸ் கண்டுபிடித் தது என்ன தெரியுமா? இவ் வாண்டு இருபால் மாணவர் கள் அதிக விகிதத்தில் வெற்றி பெற்றதற்குக் கார ணம் தாராள திருத்த மாம்!

இதற்குப் பெயர்தான் பார்ப்பனப் புத்தி என்பது! அதிகமாக வெற்றி பெற்ற னர் என்றால், அதன் பொருள் - பட்டிக்காட்டு மக்களும், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களும் அதிக வெற்றி பெற்றனர் என்பதுதான் அவாள் அக ராதி!

குறைந்த சதவிகிதத் தில் வெற்றி பெற்றால்தான் அவாள் அகராதியில் திறமையானவர்கள் பாசாகி விட்டனர் என்பார்கள். என்ன புரிகிறதோ! இதை எல்லாம் புரிந்துகொள்வ தற்கு ஈரோட்டுக் கண்ணாடி தேவை!

- மயிலாடன் 6-6-2012

தமிழ் ஓவியா said...

மீண்டும் நுழைவுத் தேர்வா? தமிழ்நாடு முழுவதும் 12 ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம்!


தமிழர் தலைவர் விடுத்துள்ள மிக முக்கிய அறிக்கை



இந்தியா முழுவதற்கும் ஒரே கல்விக் கொள்கை, ஒரே நுழைவுத் தேர்வு என்பது போன்ற கூட்டாட்சித் தத்துவத்திற்கே உலை வைக்கும் திட்டத்தை மத்திய மனித வள அமைச்சகம் செய்வதைக் கண்டித்து திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அறிக்கை வருமாறு:

கல்வி என்பது முன்பு மாநிலப் பட்டியலில் (State List) அரசியல் சட்டக் கர்த்தாக்களால் வைக்கப் பட்டது - நீண்ட ஆலோசனைக்குப் பிறகு.

ஆனால், எந்தவித கலந்தாலோசனைக்கும் இடம்தராது, நெருக்கடிகால நிலை அமுலில் இருந்தபோது, 1976 இல், இது திடீரென்று நாடாளுமன்றத்திலோ, மாநிலங்கள் கருத் தறிந்தோ - இது ஏதும் நடைபெறாமல், அது பொதுப் பட்டியலுக்கு (Concurrent List) மாற்றப் பட்டது.

உச்சநீதிமன்றத்தால் ஏற்கப்பட்ட பிறகும்...

இப்போது இந்தியா முழுவதற்கும் ஒரே கல்விக் கொள்கை, ஒரே நுழைவுத் தேர்வு என்பது போன்ற கூட்டாட்சித் தத்துவத்திற்கே உலை வைக்கும் திட்டத்தை மத்திய மனித வள அமைச்சகம் செய்வது தவறான நிலைப்பாடாகும். மறைமுகமாக மாநிலப் பட்டியலை மத்தியப் பட்டியலுக்குக் கொண்டுவரும் மகாசூழ்ச்சியாகும்.

ஏற்கெனவே தமிழ்நாடு அரசு - தி.மு.க. அரசு எதிர்த்து அதை ஒழித்து தனி ஏற்பாட்டினை சட்ட ரீதியாக செய்தும், அது உச்சநீதிமன்றத்தால்கூட ஏற்கப்பட்டது.

கபில்சிபலின் பிடிவாதம்

இப்போது கபில்சிபல் பிடிவாதமாக இதை அறிவித்திருப்பது வன்மையாகக் கண்டிக்கத் தக்கது. நுழைவுத் தேர்வை ரத்து செய்வதன் மூலமாகத்தான் தமிழ்நாட்டில் பெற்றோர்கள் நிம்மதி அடைந்தனர்; கிராமப்புற மாணவர் களுக்கும், ஏழை, எளிய மாணவர்களுக்கும் ஏராளமான வாய்ப்புகள் கிடைத்தன!

மீண்டும் இந்த ஏற்பாட்டின்மூலம் ஒருவகை பன்முக கலாச்சாரம், மொழி, கிராமப்புற மாணவர்களின் முன்னேற்றம் இவைகளுக்கு ஆப்பு அடிக்கப்படுகிறது!

தமிழக முதலமைச்சரும் எதிர்த்துள்ளார்

இதனை முழு மூச்சாக எதிர்த்து தடுத்து நிறுத்தவேண்டியது - கட்சி வேறுபாடுகளைத் தாண்டிய முக்கிய கடமையாகும்!

தமிழ்நாடு அரசுக்கும் இதில் முக்கிய கடமை உள்ளது. முதலமைச்சர் அவர்களும் இந்த நுழைவுத் தேர்வு ஏற்பாட்டை எதிர்த்துள்ளார் எனினும், இப்போது எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும்.

எனவே, உடனடியாக அனைத்துக் கட்சிகளும், அமைப்புகளும், கல்வியாளர்களும் இந்தப் பிரச்சினை - தமிழ்நாட்டு மாணவர்களின் எதிர்காலத்தைக் கெடுக்கும் இந்த ஏற்பாட்டினை - கையில் எடுத்து, தங்களது பலத்த எதிர்ப்பைக் காட்டி, இந்தப் புதிய சதித் திட்டத்தை ஒழிக்க முன்வரவேண்டும்!

திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம்

இதைக் கண்டித்து வருகிற 12.6.2012 செவ்வாய் அன்று மாவட்டத் தலைநகரங் களில் திராவிடர் மாணவர்கள், இளைஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவார்கள்.

ஒத்த கருத்துள்ளவர்களும் இதில் இணைந்து கொள்ளலாம்.

கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம் 6-6-12