Search This Blog

27.6.12

ஆஷை சனாதன வெறிபிடித்த வாஞ்சி நாதன் கொலை செய்தது ஏன்?


ஆஷ் கொலை ஆரிய சனாதனத்தை காப்பாற்றவே!

ஜுனியர் விகடன் (27.6.2012) இதழில் திரு எஸ்.இராமகிருஷ்ணனின் எனது இந்தியா கட்டுரை வெளிவந்துள்ளது. 1911 ஆம் ஆண்டு பிரிட்டீஷ் அதிகாரி ஆஷை கொலை செய்த வாஞ்சி அய்யரை வர்ணித்து, இந்தக்கொலை பிரிட்டீஷ் காலனி ஆதிக்கத்துக்கு எதிராக இந்தியர் மனதில் வெகுண்டெழுந்த தார்மீக கோபத்தின் வெளிப்பாடு என்று குறிப்பிட்டுள்ளார் ஆய்வாளர் இராமகிருஷ்ணன்.

இது உண்மையா? ஆஷை சுட்டுக்கொன்றபோது வாஞ்சி நாதன் தன் சட்டைப்பையில் வைத்திருந்த கடிதத்தில் என்ன எழுதியிருந்தான்?
"ஆங்கில சத்துருக்கள் நமது தேசத்தைப் பிடுங்கிக் கொண்டு, அழியாத சனாதன தர்மத்தைக் காலால் மிதித்துத் துவம்சம் செய்து வருகிறார்கள்.

ஒவ்வொரு இந்தி யனும் தற்காலத்தில் தேசச் சத்துருவாகிய ஆங்கிலேயனைத் துரத்தி, தர்மத்தையும், சுதந்திரத்தையும் நிலை நாட்ட முயற்சி செய்து வருகிறான். எங்கள் ராமன், சிவாஜி, கிருஷ்ணன், குரு கோவிந்தர், அர்ஜுனன் முதலியவர் இந்து தர்மம் செழிக்க அரசாட்சி செய்து வந்த தேசத்தில், கேவலம் கோமாமிசம் தின்னக் கூடிய ஒரு மிலேச்சனாகிய ஜார்ஜ், பஞ்சமனை (George V) முடி சூட்ட உத்தேசம் செய்து கொண்டு, பெருமுயற்சி நடந்து வருகிறது. அவன் (George) எங்கள் தேசத்தில் காலை வைத்த உடனேயே அவனைக் கொல்லும் பொருட்டு 3000 மதராசிகள் பிரதிக்னை செய்து கொண்டிருக்கிறோம்.

அதைத் தெரிவிக்கும் பொருட்டு அவர்களில் கடை யேனாகிய நான் இன்று இச்செய்கை செய்தேன். இதுதான் இந்துஸ்தானத்தில் ஒவ்வொருவனும் செய்ய வேண்டிய கடமை.

இப்படிக்கு,
வாஞ்சி அய்யர்
R. Vanchi Aiyar of Shencotta.."

திரு. ரகுநாதன் தமது பாரதி காலமும் கருத்தும்' (1982) என்ற நூலில் இக்கடிதத் தின் தமிழ் மூல வடிவத்தைக் குறிப்பிட்டுள்ளார். நீதிமன்றத்தில் சாட்சியமாக அளிக்கப்பட்ட தடயங்களின் (நுஒவைள) தமிழ் அச்சுப் பிரதியிலிருந்து இதனை அப்படியே எடுத்து எழுதியதாக ரகுநாதனுடன் நிகழ்த்திய உரையாடலின் போது குறிப்பிட்டதாக பேராசிரியர் ஆ.சிவசுப்ரமணியம் தெளிவாக பதிய வைத்திருக்கிறார்.

பேராசிரியர் சிவசுப்ரமணியம் நூலை மேற்கோள்காட்டி எழுதியிருக்கும் திரு. இராமகிருஷ்ணன், வாஞ்சிநாதன் ஆஷை கொல்வதற்கு முக்கிய காரணம் ஆங்கில சத்துருக்கள் நமது தேசத்தைப் பிடுங்கிக் கொண்டு, அழியாத சனாதன தர்மத்தைக் காலால் மிதித்துத் துவம்சம் செய்வதுதான் என்ற தகவலை வெளிப் படுத்தும் இந்த கடிதத்தை வெளியிட் டிருக்கவேண்டும். அன்றைய கால கட்டத்தில் ஆஷை நவீன இரண்யன் என்று பத்திரிகைகள் எழுதியதாக கட்டுரையாளர் குறிப்பிட்டிருக்கிறார்.

இரண்யன் யார்?

இரண்யன் அசுரர்களின் தலைவனாக கருதப்பட்டவன். பார்ப்பன குலதர்மத்தை எதிர்த்து சவால்விட்டவன். புராணகால இரண்யனின் கதை புரட்சிக்கவிஞரால் சிறிது மாற்றம் செய்யப்பட்டு இரணியன் அல்லது இணையற்ற வீரன் எனும் பேரில் நாடக வடிவம் பெற்றது.

வர்ணாஸ் ரமத்தை எதிர்த்து சூத்திரர்களின் பாதுகாவலனாய் நவீன இரண்யன் என்று பத்திரிகைகளில் எழுதப்பட்ட ஆஷை சனாதன வெறிபிடித்த வாஞ்சி நாதன் கொலை செய்தது எப்படி காலனி ஆதிக்க எதிர்ப்பாகும்?

ஆஷும் அவரது மனைவியும் பயணிக்கையில் பிரசவ வேதனையால் துடித்துகொண்டிருந்த தாழ்த்தப்பட்ட பெண்ணை தனது வண்டி யில் ஏற்றி அவசரம் கருதி அக்ரஹாரம் வழியாக அழைத்துச்சென்று மருத்துவ மனையில் சேர்த்தார் ஆஷ்.

தாழ்த்தப்பட்ட பெண்ணை அக்ர ஹாரத்தின் வழியாக அழைத்துச்சென்று பார்ப்பன சனாதனதர்மத்தை கெடுத்து விட்டார் ஆஷ்! இதுவே ஆஷ் கொலைக்கு காரணம் என்று சொல் லப்படுகிற வரலாறு இருக்க புதுச்சேரியில் இயங்கிவந்த வ.வே.சு.அய்யர் முடி வெடுத்து நீலகண்ட பிரம்மச்சாரி திட்டம் தீட்டி வாஞ்சி அய்யர் நடத்திய படுகொலை பார்ப்பன குலதர்மத்தை காப்பதற்கே என்பது நன்றாகப் புரிகிறது.

-------------- கி. தளபதிராஜ் அவர்கள் 27-6-2012 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

4 comments:

தமிழ் ஓவியா said...

தலைக்கவசம் உயிர்க்கவசம்

சைக்கிள் என்பது இப்பொழுது அரிதாகி விட்டது. இரு சக்கர மோட்டார்கள், ஸ்கூட்டர்கள் நடமாட்டம் பெருகிவிட்டது. இது ஏதோ மாநகர, நகர்ப் புறங்களில் மட்டுமல்ல - கிராமப்புறங்களிலும் இன்று அதிக புழக்கத்திற்கு வந்துவிட்டன. இது ஒரு வளர்ச்சிப் போக்கின் அடையாளம் என்பதில் அய்யமில்லை.

அதேபோல, நான்கு சக்கர வாகனங்களும் (கார்களும்) பெருகிவிட்டன. இதன் காரணமாகப் போக்குவரத்துப் பெரும் சிக்கலில் சிக்கிக் கொண்டு மூச்சுத் திணறுகிறது.

இதில் மாணவர்கள், இளைஞர்கள் என்பவர்கள் இரு சக்கர மோட்டார்களில் பயணம் செய்யும் முறை, போகும் வேகம் பெரும் அச்சுறுத்தலாகவே இருக்கிறது. இதன் காரணமாக சாலை விபத்துக் கள் அன்றாடம் நடந்துகொண்டே இருக்கின்றன!

விபத்துகள் நடந்தாலும் உயிர் பிழைக்கவேண் டும் என்பதற்காகவே தலைக்கவசம் (ஹெல்மெட்) அணியவேண்டும் என்று அரசும், போக்குவரத்துக் காவல்துறையும் கூறுகின்றன.

சென்னை மாநகரைப் பொறுத்தவரையில் ஆண்டு ஒன்றுக்குச் சராசரியாக சாலை விபத்துக்குப் பலியாவோர் 1500 பேர்கள். இதில் இரு சக்கர வாகனங்களில் செல்வோர்களில் பலியாவோர் எண்ணிக்கை 375 பேர்.

இதில் 95 விழுக்காட்டினர் தலைக்கவசம் அணியாதவர்கள் என்று காவல்துறை தரும் புள்ளி விவரம் கூறுகிறது.

தலையில் காயம் இல்லை என்றால், பெரும் பாலும் பிழைக்க வைக்க வாய்ப்புண்டு. தலைக் கவசம் அணிந்திருந்தால் தலையில் காயம் ஏற்படாமல் தடுத்துக் கொள்ள வாய்ப்புகள் அதிகம்.

இந்த உண்மை வெளிப்படையாகத் தெரிந் திருந்தும், படித்தவர்களேகூட தலைக்கவசம் அணிவதைத் தவிர்ப்பது அசல் தற்கொலை யல்லாமல் வேறு என்னவாம்?

ஏதோ அரசோ, காவல்துறையோ அவர்களின் நன்மைக்குச் சொல்லுவதாக அல்லது சட்டப்படி சொல்லுகிறார்கள் என்று கருதுகிறார்களே தவிர, வாகனங்களில் செல்லுவோரின் நன்மைக்குத் தான் என்பதைக்கூட எண்ணிப் பார்க்கும் பக்குவமற்றவர்களாக இருப்பது பரிதாபமே!

அபராதம் உண்டு என்று சொன்னாலும்கூட அபராதம் கட்டினால் போச்சு என்ற அலட்சிய மனப்பான்மையில் பயணம் செய்கிறார்கள். காவல்துறையினரும் இதில் கண்டிப்பாக இருப் பதில்லை; கண்டும் காணாமல் இருக்கிறார்கள். இந்தத் துணிவில்தான் தலைக்கவசம் அணியாமல் சவாரி செய்கிறார்கள்.

இந்த அணுகுமுறையில் கண்டிப்பாக மாற்றம் வந்தாகவேண்டும். அமைச்சர் ஒருவர் மகனே தலைக்கவசம் அணியாததால் பரிதாபகரமாக மரணம் அடைந்ததைப் பார்த்தாவது வாகன ஓட்டிகள் திருந்திடவேண்டும் என்பதே நமது கனிவான வேண்டுகோள்!

போக்குவரத்துத் துறை சற்றுக் கறாராக இருக்கவேண்டும். சிக்னலை மதிக்காமல் செல்லு பவர்களைக் கண்டிப்பாகத் தண்டிக்கவேண்டும் - பச்சை விளக்கு வந்த நிலையில், பாதசாரிகள் நடக்க ஆரம்பித்தாலும் வாகனங்கள் நிற்பதில்லை.

நடந்துசெல்லும் பாதைகளை எல்லாம் வாகனங் கள்தான் ஆக்கிரமிக்கின்றன. இதனை போக்கு வரத்தினைஒழுங்குப்படுத்தும் காவல்துறையைச் சேர்ந்தவர்களும் கண்டுகொள்வதில்லை.

நடைபாதைகளில் குட்டிக் குட்டிக் கோயில்கள் (உண்டியலுடன்) வேறு!

வெளிநாடுகளுக்குச் சென்றுவரும் நம் அமைச்சர்களும், நமது அதிகாரிகளும் எதைத் தான் கற்றுக்கொண்டு வருகிறார்கள் என்று தெரியவில்லை.

போக்குவரத்தினை ஒழுங்கு செய்வதில் சற்றுக் கடுமை காட்டினால் விபத்துகளின் எண்ணிக்கை குறையவும் வாய்ப்பு இருக்கிறது.

பொதுமக்களும், அலுவலர்களும் மனது வைத்தால் சாலை விபத்துகள் அருகிட அதிக வாய்ப்பு உண்டு.

உயிர்மீது ஆசை உள்ளவர்கள் சிந்திக்கட்டும்! 27-6-2012

தமிழ் ஓவியா said...

மதுரையில் ஒரு பக்தர்கூட இல்லையா?

மதுரை என்றால் மீனாட்சிதானாம். அவள் தான் மதுரையை ஆட்சி செய்துகொண்டு இருக் கிறாளாம். அவ்வளவு சக்தி வாய்ந்தவளாம் அவள்!

இப்பொழுது போய்ப் பார்க்கவேண்டும் மீனாட்சியின் சங்கதியை - கதியை.



கடந்த ஞாயிறு அன்று மீனாட்சி அம்மையின் நான்கு சுற்றுப்புறச் சாலைகளையும் நேரில் காண நேர்ந்தது.

கோயிலின் ஒவ்வொரு நுழைவு வாயிலிலும் காவல்துறை வாகனம்! நான்கய்ந்து காவல் துறை அதிகாரிகள். கோயிலுக்குள் செல்ல வேண்டுமானால் பக்தர்களைப் பரிசோதிக்கும் மின்னணுக் கருவி (மெட்டல் டிடெக்டர்).

என்ன கூத்து இது? கடவுளை அசிங்கப் படுத்துகிறார்களே - கடவுள் என்பது வேறு ஒன் றும் இல்லை - அது ஒரு பொம்மை - அதற்குச் சக்தியாவது - வெங்காயமாவது! என்று காவல் துறை அதிகாரிகளே சொல்லாமல் சொல்லுவது போல் இல்லையா இது!

மக்களைக் கடவுள் காப்பார் என்று ஒரு பக்கத்தில் பிரச்சாரம் செய்துகொண்டு, இன்னொரு பக்கத்தில் கடவுளைக் காக்கிச் சட்டைக் காவல் துறையினர் இப்படி இரவும் - பகலுமாகக் காத்துக் கொண்டு இருக்கிறார்களே - கடவுளை மற - மனிதனை நினை என்று பெரியார் சொன்னதுதானே இங்கு நடந்து கொண்டு இருக்கிறது என்று சொன்ன பொழுது, மதுரை மண்டல திராவிடர் கழகத் தலைவர் மானமிகு செல்வம் சொன்னார்:

அவசரப்படா தீர்கள் - இன்னும் சில காட்சிகள் உண்டு என்று அவர் சொல்லி வாய் மூடுவதற்குள் காவல் துறையால் பழக்கப்பட்ட மோப்ப நாய்கள் கோயிலைச் சுற்றியுள்ள நான்கு வீதிகளையும் வலம் வந்தன.

தோழர் செல்வம் சொன்னதற்கான விளக்கம் இப்பொழுது கிடைத்துவிட்டது. கோயிலுக்குள் நுழைய வேண்டுமானால் மெட்டல் டிடெக்டர்! வெளியிலோ மோப்ப நாய்கள்! (வெடிகுண்டு பயமாம்!)

மனிதர்களும், இயந்திரங்களும், நாய் களும்தான் கடவுளைக் காப்பாற்ற வேண்டும் என்ற நிலை! என்னே பரிதாபம்!

மதுரையை ஆட்சி செய்யும் மீனாட்சியை இதற்குமேல் அவமானப்படுத்த முடியுமா?

கறுப்புச் சட்டைக்காரர்கள் கடவுள் இல்லை என்றால், நற நறவென்று பற்களைக் கடிக்கும் பக் தர்கள் இப்படி அரசாங்கமே அதிகாரபூர்வமாக கடவுள் இல்லை என்று 24 மணிநேரமும் சொல்லாமல் சொல்லிக் கொண்டு இருக் கிறார்களே - இவர்கள்மீது ஏன் கோபம் கொப்பளிக்கவில்லை?

இது கடவுளை அவமதிக்கும் செயல் அல்லவா! கடவுளுக்குச் சக்தியும் இல்லை, புடலங்காயும் இல்லை என்று சொல்லுவதுபோல் இருக்கிறதா, இல்லையா?

உடனே காவல்துறை அதிகாரிகள் வாபஸ் ஆகவேண்டும்; மோப்ப நாயை அனுமதிக்கக் கூடாது. கோயில் நுழைவு வாயிலில் வைக்கப் பட்டுள்ள மெட்டல் டிடெக்டரை உடனடியாக அப்புறப்படுத்தவேண்டும் என்று பொதுநல வழக்கு ஒன்றை மதுரைக் கிளையில் தாக்கல் செய்ய - உண்மையான ஒரே ஒரு பக்தர்கூட மீனாட்சி ஆட்சி செய்யும் மதுரையில் இல்லாமல் போய்விட்டார்களா? அங்கு டிராபிக் ராம சாமிகள் கிடையாதா?
வெட்கம்! மகாமகா வெட்கம்!! 27-6-2012

தமிழ் ஓவியா said...

புட்டபர்த்தி

புட்டபர்த்தி சாய்பாபா கடும் நோய்க்கு ஆளாகி மரணமடைந்துவிட்டார். அவர் உயிரோடு இருந்த காலத்தில் முட்டாள்தன மாக அவரைத் தரிசிக்க வரும் பக்தர்களின் எண் ணிக்கை இப்பொழுது படுத்துவிட்டது.

அந்த அப்பாவி பாமர மக்களின் கூட்டத்தை நம்பி வியாபாரம் நடத்தி வந்தவர்களின் பிழைப்பில் மண் விழுந்துவிட்டது.

எதையாவது செய்து எப்படியும் கூட்டத்தை வரவழைக்கும் வேலையில் வியாபாரிகளும், பக்தி வியாபாரிகளும் பெரும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

சாய்பாபா அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் சமாதி ஒன்றை எழுப்பி, அதற்கொரு மகத்து வத்தை உண்டாக்கி விட்டால் போதுமானது; மாட்டு மந்தைகளாகப் பக்தர்கள் வந்துகூடிவிடு வார்கள் என்று நினைக் கின்றனர்.

ஊடகங்களைப் பயன் படுத்தி அதற்கான பிரச் சாரத்திலும் ஈடுபட்டு விட்டார்கள்.

சாய்பாபாவுக்குக் கண்மூடித்தனமாக வந்து குவிந்த பெரு நிதியிலி ருந்து உள்ளூரில் மருத் துவம் உள்ளிட்ட பல நன் மைகளைப் பொதுமக்க ளுக்குச் செய்து கொடுத் திருக்கிறார் என்பதெல் லாம் உண்மைதான்.

அவர் மறைவிற்குப் பிறகு அந்தப் பணிகளில் எல்லாம்கூட சுணக்கம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப் படுகிறது! சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையை நிறுத்திவிட்டார்கள்.

நாள்தோறும் நடந்து வந்த இருதய அறுவை சிகிச்சைகளின் எண் ணிக்கை குறைந்து போயிற்று.

ஆண்டுதோறும் புட்ட பர்த்தியில் நடைபெற்று வரும் குருபூர்ணிமா நிகழ்ச்சியில் அந்தச் சின்னஞ்சிறு ஊரில் 5000 பேர் கூடுவார்கள்; இந் தாண்டு வெறும் 1500 பேர்கள்தான் வந்தார் களாம்.

இந்தக் கூட்டத்தை ஈர்க்கக் கூடிய வகையில் எதையாவது அற்புதத்தை அவிழ்த்துவிடத்தான் போகிறார்கள்.

அதேநேரத்தில், இன் னொன்று - சாய்பாபா இறந்தவுடன் லாரி லாரி யாகப் பணம் கடத்தப் பட்டு, பிடிக்கப்பட்டதே - அதுபற்றி, அதற்குப் பிறகு எந்தத் தகவலும் வெளி வரவில்லையே ஏன்? அதன் பின்னணியில் இருந்தவர் கள் பெரிய இடத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் அமுக்கப்பட்டுவிட்டதா?
மர்ம முடிச்சு அவிழ வில்லையே!

பகவான் விஷயமென் றால் சட்டமெல்லாம் சப்தம் இல்லாமல் சப்த நாடியும் ஒடுங்கிப் பதுங்கு குழி யைத் தேடிவிடுமோ!

- மயிலாடன் 27-6-2012

தமிழ் ஓவியா said...

மாணவர்களிடம், போதை - பாலியல் உறவு: குருதியை உறைய வைக்கும் தகவல்கள்

சர்வதேச போதை ஒழிப்பு தினம் கொண்டாடப் படும் இந்த நாளில்தான் மாணவர்கள் போதைக்காக சீரழிவதும், பாதுகாப்பற்ற உடலுறவு கொள்வதும் அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகி யுள்ளன.

போதைப்பொருள், அதை பயன்படுத்துபவரை மட்டும் பாதிப்பதில்லை. அவரது குடும்பத்தையும், சமுதாயத்தையும் பாதிக்கிறது. அனைத்து வகையான நோய்களுக்கும் முன்னோடியாக இருப்பது போதைப்பொருள்தான். ஆனால் அவற்றிற்கு இளைய தலைமுறையினர் பலரும் இன்றைக்கு அடிமையாகி வருகின்றனர் என்பது கவலைக்குரியது.

அந்த போதையின் பாதையில் இருந்து மீள வழி தெரியாமல் அதில் மூழ்கிப் போவோர் பலர் இருக்கின்றனர். அவர்களை காப்பதற்காகவே பெங்களூருவில் அபயம் என்ற நிறுவனத்தை தொடங்கியுள்ளார் பி.ஜெ. ஆல்பர்ட். இவர் போதை பொருளுக்கு அடிமையானவர்களை மீட்டு மறுவாழ்வு அளிக்கும் மய்யத்தை நடத்தி வருகிறார்.

பெங்களூருவைச் சேர்ந்த இளைஞன் அர்ஜூன் பார்க்க அழகானவன், வசதி படைத்தவன். அவன் காரில் வருவதைப் பார்த்தாலே பொறாமையால் பொசுங்குபவர்கள் இருக்கின்றனர். ஆனால் அவனோ தலை குனிந்தபடி அபயம் இல்லத்தை தேடிச் செல்கிறான். அதற்குக் காரணம் அவனது போதை, பாலியல் உறவு பழக்கம்தான். அவன் தொடர்பு வைத்திருந்த பெண்ணிற்கு 13 வயதிலேயே போதைப் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது.

இதனால் போதைக்காக எதையும் செய்ய துணிந்து செயல்படுகிறாள். அவளுடன்தான் அர்ஜூனுக்கு தொடர்பு ஏற்பட்டி ருக்கிறது. இப்பொழுது எப்படியோ அங்கிருந்து மீண்டு மறுவாழ்வு மய்யத்தை அடைந்திருக்கிறான்.

அர்ஜூனைப் போன்ற இளம் சிறார்கள் போதைக்கு அடிமையாவதோடு பாதுகாப்பற்ற உடலுறவிலும் ஈடுபடுகின்றனர் என்ற அதிர்ச்சிகரமான தகவலையும் ஆல்பர்ட் கூறியுள்ளார். பெங்களூருவில் நடத்திய கணக்கெடுப்பின்படி 70 சதவிகித மாணவர்கள் பாலியல் உறவு பற்றி தெரிந்திருக்கிறார்கள்.

உடல் ரீதியாக அதை உணர்ந்தும் இருக்கிறார்கள். இது போன்ற பாதுகாப்பற்ற உறவினால் பெரும்பாலானோர் எய்ட்ஸ் போன்ற நோய் தாக்குதலுக்கு ஆளாகியிருக்கின்றனர் என்றும் ஆல்பர்ட் கூறியுள்ளார்.

குழந்தைகளுக்கு போதை மருந்து பற்றியும், பாலுணர்வு (செக்ஸ்) பற்றியும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கல்வி முறையில் மாற்றம் கொண்டு வரவேண்டும் என்றும் அவர் வலியுறுத் தியுள்ளார் 27-6-2012