Search This Blog

5.6.12

எதையும் சிந்தித்து பகுத்தறிவாளராகுங்கள்-பெரியார்



தந்தை பெரியார் அவர்கள் தமது உரையில் குறிப்பிட்ட தாவது:- நாம் நமது கழகத் தோழர் திரு. இராமசாமி அவர்களின் தந்தை திரு. மாணிக்க உடையார் அவர்கள் காலமானதற்கு முதலாண்டு நினைவு விழாவானது இன்று நடைபெறுகின்றது. இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளை நடத்த மிகத் துணிவு வேண்டும். நமது தோழர்களுக்குத்தான் இந்த துணிவு ஏற்படும்.

நமது தோழர்கள்தான் கடவுள், மதம், சாஸ்திரம், முன் ஜென்மம், பின்ஜென்மம், முன்னோர்கள் நடப்பு இவைகளில் நம்பிக்கை இல்லாதவர்கள். எங்களுடைய வேலை எல்லாம் மக்கள் சமுதாயத்தில் உள்ள மடமைகள், காட்டுமிராண்டித் தனங்கள் முதலியன ஒழிக்கப்பட வேண்டும் என்பதும்,மக்கள் பகுத்தறிவு உணர்ச்சியுடையவர்களாக மாற்றப்பட வேண்டும் என்பதும்தான் ஆகும். சாதாரணமாக ஜவுளிக் கடையில் ஒரு கெஜம் துணி வாங்குவதாக இருந்தாலும் பல கடைகளில் பார்க்கின்றோம். துணி கெட்டியானதா? சாயம் நிற்குமா? சரியான விலையா? என்று யோசனை பண்ணி பார்த்துத்தான் வாங்குகின்றீர்கள்.

அதுபோலவே ஒரு திருகாணி வாங்கப் போனாலும் இது நல்ல தங்கமா, கலப்பா என்று உரைத்துப் பார்த்து வாங்கு கின்றீர்கள். இப்படி ஒரு கெஜம் துணிக்கும், சிறு திருகாணிக்கும் சிந்திக்கிற அறிவு, கடவுள், மதம், சாஸ்திரம் போன்ற சங்கதிகளில் நீங்கள் சிந்திக்க மறுக்கின்றீர்கள். கண்ணை மூடிக் கொண்டு பின்பற்றுகின்றீர்கள். இதன் காரணமாக தான் நாம் இந்த 1964-ஆம் ஆண்டிலும்கூட காட்டுமிராண்டிகளாக உள்ளோம்.
இப்படி இறந்தவர்க்கு ஒரு ஆண்டு கழித்ததும் எங்கள் கழகத்தாரைத் தவிர மற்றவர்கள் எல்லாம் பார்ப்பானைக் கூப்பிட்டு திவசம் பண்ணுகின்றீர்கள். திவசம் பண்ணுவது என்றால் என்ன? பார்ப்பானை தமது தந்தையாக பாவித்து அவனுக்கு வழிபாடு செய்வது. அரிசி, பருப்பு, உப்பு, மிளகாய் முதலியவை களை மூட்டை கட்டிக் கொடுப்பது ஆகும்.


நம் நாட்டவர்கள் உருவத்தில்தான் மனிதர்களே ஒழிய, அறிவில் மனிதத் தோல் போர்த்திய மாடாகத்தான் உள்ளோம். நமக்குக் கவலையெல்லாம் மதம், ஜாதி, கடவுள் இவை பற்றித்தான் இவற்றை யெல்லாம் உண்டாக்கியவன் அயோக்கியன், நாணயமற்றவன் என்பதை அறிவு கொண்டு நாம் சிந்திப்பதில்லை. துலுக்கன், கிறிஸ்தவன் இடத்தில் மடத்தனம் இல்லை என்று சொல்லவில்லை. ஆனாலும், அவர்கள் நம்மைவிட எவ்வளவோ முன்னுக்கு வந்து விட்டார்கள். நாம் மட்டும் இரண்டாயிரம் ஆண்டுக்கு முன்பிருந்த மாதிரியே காட்டுமிராண்டியாக இருக்கிறோம். நமக்கு உள்ள முதல் கேடு, கடவுள் நம்பிக்கையே. கடவுளை உண்டாக்கியவன் உலகத்தில் நடக்கிற காரியங்கட்கு காரணம் தெரியாத ஒரு முட்டாளாகத்தான் இருந்திருக்க வேண்டும். அப்படி முட்டாள் செய்த கடவுள் நம்பிக்கையைக் கூட மன்னிக் கலாம். ஆனால், ஆத்மா, மோட்சம், பாவம், நரகம் இவற்றை உண்டு பண்ணியவன் மகா அயோக்கியன் ஆவான். இதுதான் மனிதனை மடையனாகவும், பேராசைக்காரனாகவும் ஆக்கியது. திதி, திவசத்திற்கு அடிப்படை, ஆத்மா உண்டு என்கிற நம்பிக் கைதான். ஆத்மா, சூட்சும சரீரமாக இருந்து மேல் உலகத்திற்குப் போகிறது என்றால் நாம் நம்பலாமா? என்று எடுத்துரைத்தார்.

--------------------------------------12.9.1964 அன்று லால்குடி வட்டம், புஞ்சை சங்கேந்தியில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய அறிவுரை - "விடுதலை" 12.10.1964

12 comments:

தமிழ் ஓவியா said...

போதிய நிதியில்லாமல் தேங்கும் சிந்துவெளி ஆய்வுகள்


சென்னை, ஜூன் 5- சென்னையில் இயங்கி வரும், சிந்துவெளிப் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தின் சிந்துவெளி குறித்த ஆய்வுகள், போதிய நிதியுதவி இல்லாமல் தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

சென்னையில், 1994இல் துவக்கப்பட்ட ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தில், சிந்துவெளிப் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம், 2007இல் துவக்கப் பட்டது. கடந்தாண்டு வரை, இந்நிறுவனத்தின் மதிப் புறு ஆலோசகராக, அய்ராவதம் மகாதேவன் இருந்தார். அவரைத் தொடர்ந்து, தற்போது பாலகிருஷ்ணன் அய்.ஏ.எஸ்., மதிப்புறு ஆலோசகராக உள்ளார்.

சிந்துவெளிப் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தில், தற்போது முழுநேர ஆய்வாளர் ச.சுப்பிரமணியன் மற்றும் ரோஜா முத்தையா நூலக இயக்குனர் ஜி.சுந்தர் ஆகியோர், ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

கணினிமயமாக்கம் ஆய்வுநிலை குறித்து சுந்தர் கூறியதாவது: உலகில் இதுவரை அதிகளவில் சர்ச்சைக்குள்ளானது, சிந்து வெளி ஆய்வு தான். 1977 வரை கிடைத்த சிந்துவெளி முத்திரைகளைத் தொ குத்து, அவற்றில் உள்ள குறியீடுகளை அடையாளம் கண்டறிந்து, குறியீட்டுச் சொல்லடைவு ஒன்றை, 1977இல் ஐராவதம் மகாதேவன் வெளியிட்டார்.

அதையடுத்து 2010இல், தமிழறிஞர் அஸ்கோ பர்போலா, 1977க்கு பின் கிடைத்த முத்திரைகளைத் தொகுத்து, அவற்றின் புகைப்படங்கள் அடங்கிய ஒரு தொகுப்பை மட்டும் வெளியிட்டார்.

அதில் முற்றிலும் புதிய குறியீடுகள் உள்ளன. இதுதவிர பிற ஆய்வாளர்களிடமும், அருங்காட்சியகங் களிலும், பல்வேறு குறியீடுகளைக் கொண்ட முத்திரைகள் உள்ளன. இவற்றை எல்லாம் தொகுத்து, புதிய குறியீட்டுச் சொல்லடைவு ஒன்றை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்.

இந்த சொல்லடைவை கணினி மயமாக்க வும் திட்டம் உள்ளது. தேவைப்படுவோர் யாராயினும், ரோஜா முத்தையா நூலகத்திற்கு உரிய சந்தா தொகையைச் செலுத்தி, பயன் படுத்தும் வகையில் திட்டம் அமையும்.

சிந்துவெளிப் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம் துவக்கப்பட்ட உடன், ஆய்வுப் பணிகளுக்காக செம்மொழித் தமிழ் உயராய்வு நிறுவனம், 10 லட்ச ரூபாய் வீதம் இரு ஆண்டுகளுக்கு அளித்தது. அந்தப் பணத்தில், 4 கருத்தரங்குகள், இரு கண்காட்சிகள், ஆய்வு சொற்பொழிவுகள் என முடிந்தவரை செய் தோம். இதையடுத்து, அந்நிறுவனம் மூலம் நிதியுதவி பெறுவதில் சிக்கல் உண்டானது.

மொத்தம் இந்த ஆய்வுக்கு, நான்கரை ஆண்டு களுக்கு மேல் ஆகும். இதற்கு தற்போதைய நிலையில், 4 கோடி ரூபாய் வேண்டும். தற்போது, ஆர்வத்தினால் அந்த ஆராய்ச்சியைத் தொடர்ந்து நடத்தி வருகிறோம்.

சிந்துவெளி குறித்து தமிழில்...

நமது ஆவணங்களைப் பாதுகாக்க, முன்பு வெளிநாட்டு நிறுவனங்கள் நிதியுதவி அளித் தன. அந்த உதவியும் இப்போது குறைந்து விட்டது. இன்னும் எத்தனை காலம் தான், வெளிநாடுகளிடம் கையேந்தி நிற்கும் அவலம் தொடரும் எனத் தெரியவில்லை. இந்த நிலை மாற வேண்டும்.

கடந்த 1920க்குப் பின், சிந்துவெளி ஆய்வு குறித்து தமிழில் விரிவான ஆய்வுகள் வெளிவரவில்லை. அதனால், இந்த ஆய்வில் இதுவரை என்ன நடந்திருக்கிறது, எப்படி அணுகுவது என்பது குறித்து, தமிழிலும் ஆங்கிலத்திலும் ஆய்வு நூல் ஒன்றை வெளியிடவும் திட்டமிட்டுள்ளோம்.

சிந்துவெளியில் கிடைத்த குறியீடுகள் அங்கு திராவிடப் பண்பாடு நிலவியது என்பதைக் காட்டு வதாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
- இவ்வாறு சுந்தர் தெரிவித்தார்.

தமிழகத்தில் அகழாய்வு நடக்குமா?

சிந்துவெளி குறித்த முழுநேர ஆய்வாளர் சுப்பிரமணியன் கூறியதாவது:

மொகஞ்சதாரோ பகுதியில், தற்போது நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து வருவதால், அங்கு ஏற்கனவே அகழாய்வு நடத்தப்பட்ட இடங்கள் அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஹரப்பா மட்டுமின்றி இன்னும், 2,000 இடங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும். அப்போதுதான், சிந்துவெளி பற்றிய முழுமையான சித்திரம் கிடைக்கும்.

தமிழகத்திலேயே, கோவை மாவட்டம் சூலூர், செங்கல்பட்டு சாணூர், மயிலாடுதுறை அருகில் உள்ள செம்பியன் கண்டியூர் ஆகிய மூன்று இடங்களில் தான், சிந்துவெளிக் காலத்தோடு ஒப்பிடக் கூடிய பொருட்கள் கிடைத்துள்ளன. தமிழகத்தில் இன்னும் பல இடங்களில் அகழாய்வு மேற்கொள்ளப்பட வேண்டும்.

முன்வருமா தொல்லியல் துறை?

ஆதிச்சநல்லூரில் நடந்த அகழாய்வு பற்றி, 100 ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த தகவல்கள் தவிர, இதுவரை அதிகாரப்பூர்வமான தகவல்கள் இந்தியத் தொல்லியல் துறையால் (ஏ.எஸ்.அய்.,) வெளியிடப் படவில்லை. அவையும் வெளியிடப்பட்டு, அவற்றை ஆய்வுக்கு உட்படுத்தினால் தான், நமது வரலாற்றை நாம் முறையாக அறிய முடியும்.

இதற்கு, மத்திய, மாநில அரசுகள் மனது வைக்க வேண்டும். சிந்துவெளி ஆய்வுக்குத் தனியார் நிறுவனங்கள் உதவும் பட்சத்தில், ஆராய்ச்சியை மேலும் பல தளங்களுக்கு கொண்டு செல்ல முடியும் என நம்புகிறோம். அது குறித்து ஆலோசித்து வருகிறோம்.
- இவ்வாறு சுப்பிரமணியன் தெரிவித்தார்.5-6-2012

தமிழ் ஓவியா said...

சமச்சீர்க் கல்வியின் கண் கண்ட பலன்!


எஸ்.எஸ்.எல்.சி. (பத்தாம் வகுப்பு) தேர்வின் முடிவுகள் மகிழ்ச்சி அளிக்கும் வகையில் வெளி வந்துள்ளன. வழக்கம்போல மாணவர்களைவிட மாணவிகள் அதிக அளவில் வெற்றி பெற்று, வாய்ப்புக் கிடைத்தால் எந்த வகையிலும் ஆண்களுக்கு நிகராகவும் அதற்கு மேலாகவும் தங்களால் சாதித்துக் காட்ட முடியும் என்பதைப் பெண்கள் நிரூபித்து வருகின்றனர். அதற்காக மாணவிகளை வெகுவாகப் பாராட்டுகிறோம்.

கடந்த ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் வெற்றியின் விழுக்காடு 85.30 சதவீதம் இவ்வாண்டு 86.20 விழுக்காடு வெற்றி வரவேற்கத்தகுந்தது.

தமிழ்ப் பாடத்திலேயே நூற்றுக்கு நூறு மதிப்பெண்களை மூவர் பெற்றுள்ளனர் என்பது நம்ப முடியாத ஒன்றாகவே இருக்கிறது.

தமிழில் யாரும் நூற்றுக்கு நூறு மதிப்பெண் வாங்க முடியாது என்ற கருத்து நிலவி வந்தது. குறிப்பாகத் தமிழ் ஆசிரியர்கள் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் வழங்க மாட்டார்கள் என்ற எண்ணம் கெட்ட பெயர் இதன் மூலம் ஒழிந்து விட்டது.

ஆங்கில மோகம் அதிகரித்து விட்டது; தமிழில் மாணவ - மாணவிகள் அக்கறை காட்டுவதில்லை என்ற அச்சமும் ஓரளவுக்கு நீங்கியுள்ளது.

ஆங்கிலத்தைப் பயிற்று மொழியாகக் கொண்டாலும் தமிழ் கட்டாயம் என்பது மிகச் சரியாகச் செயல்படுத்தப்பட வேண்டும்.

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் வெற்றி பெற்றவர்களாக இருந்தாலும், +2 தேர்வில் வெற்றி பெற்றவர்களாக இருந்தாலும் சரி, அவர்களின் கல்வி மேலும் தொடரப்பட வேண்டும். அப்படித் தொடர முடியாததற்கு ஏதாவது காரணம் இருந்தால் அதனை அகற்றுவதற்கு அரசு முயல வேண்டும்.

சமச்சீர் கல்வி நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகு தேர்வு விகிதம் அதிகரித்துள்ளதும், குறிப்பாகக் கிராமத்து இருபால் மாணவர்கள் அதிகமாக வெற்றி பெறுவதையும் கருத்தூன்றிக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

பாடச்சுமை குறைவு ஒரு பக்கம், எல்லோருக்கும் ஒரே மாதிரியான கல்வி இன்னொரு பக்கம்; வெறும் நெட்டுருப்போடும் நிலைக்கு மாறாகப் புரிந்து கொண்டு படிக்கும் வாய்ப்பு சமச்சீர் கல்வியில் அதிகரித்துள்ளது என்பது இதன்மூலம் பெறப்படுகிறது.

நெட்டுரு - மனப்பாடம் என்பது பார்ப்பனர்களின் கல்வி முறையாகும். பரம்பரை பரம்பரையாக பொருள் புரிந்தோ புரியாமலோ மந்திரங்களை மனப்பாடம் செய்வது என்பது அவர்களுக்குக் கைவந்த கலையும் வயிற்றுப் பிழைப்புமாகும்.

பெரும்பாலும் கல்வி அதிகாரிகளாகவும், ஆசிரியர்களாகவும் கல்விதொடர்பான கருத்துருக்களை உருவாக்குபவர்களாகவும் பார்ப்பனர்கள் இருந்து வந்ததால், அவர்களுக்கு வசதியான - மரபுவழி குணநலன்களுக்கு உகந்ததான மனப்பாடக் கல்வி முறையைச் செயல்படுத்தி வந்தனர்.

சமச்சீர்க் கல்வியைப் பார்ப்பனர்கள் ஒரே குரலில் எதிர்த்ததற்கும் இதுதான் முக்கிய காரணமாகும்.

இந்த உண்மைகளை எல்லாம் சமச்சீர்க் கல்வியின் அடிப்படையில், நடத்தப்பட்ட பாடங்களில் இருபால் மாணவர்கள் குறிப்பாகக் கிராமப்புறத்தைச் சேர்ந்தவர்கள் அதிகம் வெற்றி பெற்று இருப்பதன் மூலம் அறிய முடிகிறது. அனைவருக்கும் ஒரே மாதிரியான இந்தக் கல்வியில் பெறும் மதிப்பெண்கள்தான் ஏற்ற தாழ்வுக்கும் இடமில்லாததாகும். மதிப்பெண் முறையே ஒழிய வேண்டும் என்கிற நிலை ஏற்படும் வரை - இருப்பதில் இதுதானே சிறந்தது?

சமச்சீர் கல்வியைக் குறை கூறியவர்கள், இப்பொழுதாவது புத்தித் தெளிவார்களா? 5-6-2012

தமிழ் ஓவியா said...

ஆன்மீகமும் ஆதீனங்களும்!


- சிவகாசி மணியம்

காதினிலே குண்டலம் ஆட, கனத்த சாரீரம் பாட, காய்ச்சிய பால் தொண்டையில் ஒட, கண்கள் கதியற்று கன்னியரை நாட... 1950களில் அறிஞர் அண்ணா அவர்களின் பேனா முனையிலிருந்து துள்ளி விழுந்த வசனம் இது. படம் வேலைக்காரி அவர் யாரை அடையாளம் காட்ட இதை எழுதினாரோ அதே போன்ற ஆசாமிகளை இன்றும் நம் மக்கள் கொஞ்சமும் குற்ற உணர்வின்றி கொண்டாடி வருவதைப் பார்க்கிறோம். ஆன்மிகப் போர்வையில் உலவும் ஆசாடபூதிகள் பலர் இருந்தாலும் சட்டென நினைவுக்கு வருபவர் சி.டி.புகழ் நித்தியானந்தாதான். மதுரையின் அடுத்த ஆதீனம் அவர்தானாம்! வெட்கக் கேடு.

வௌக்க மாத்துக்கு பட்டுக் குஞ்சம் செருப்புக்கு வெள்ளி உறை போன்ற சொலவடை கள் நம் நினைவுக்கு வரும். நாம் இருக்கும் இடத்தை துப்புரவாகத் தூய்மையாக வைத்துக்கொள்ளவும், நம் பாதங்கள் பழுது படாமல் பாதுகாக் கவும் பயன்படும் கருவிகள் அவை. தன்னைத் தேய்த்துக் கொண்டு தன்னலமற்ற தியாகத்தை நமக்கு நினைவுப்படுத்தி அழிந்துபோகும் அவை நம் மரியாதைக்குரியவை. சுகபோக அரசவாழ்க்கையில் மூழ்கித் திளைக்கும் சாமியார்கள், ஆதீனங்கள் எந்தவகையில் இவற்றைவிட மேலானவர்கள்?

கெட்ட நடவடிக்கைகள் வெட்ட வெளிச்சத்துக்கு வந்து சந்தி சிரித்தால் அவர்களுக்குப் பெயர் போலிச் சாமியார்கள்! குட்டு வெளிப்படாமல் எச்சரிக்கையாய் நடமாடும் கபட சந்நிதானங்களுக்குப் பெயர் வணக்கத்திற்குரிய சாமிகள்.

அண்மையில் மதுரை ஆதீன இளவரசராக பெங்களூரு பிடதிக்காரருக்கு முடிசூட்டப்பட்ட அருவருப்புச் செய்தி ஆன்மிகவாதிகளிடையே அதிர்வலையைத் தோற்றுவித்துள்ளது. பாண்டிய மன்னன் கூன் பாண்டியன் மனைவி மங்கையர்க்கரசி திருஞானசம்பந்தனை அழைத்துவந்து மதுரை ஆதீனத்தைத் தொடங்கி வைத்தாளாம். 1500 ஆண்டுகளுக்குமுன் என்கிறது ஒரு நாளிதழ்! 2500 ஆண்டுகளுக்கு முன் என்கிறது ஒரு வார இதழ்! இடைவெளி 1000 ஆண்டுகளா?

(பார்வதி தேவியாரிடம் பால்குடித்து வளர்ந்தவனாம் திருஞானசம்பந்தன். பிரசவ வேதனை, குழந்தைப் பேறு என்றால் என்னவென்றே தெரியாத உமையவளுக்கு பால் எங்கிருந்து வரும்? எப்படிச் சுரக்கும்? பொய்மைக்கு ஏது எல்லை?)

சிவபெருமானும் பார்வதி தேவியும் நித்தியானந்தாவை அடையாளம் காட்டி னார்கள். அவர்களது உத்தரவை ஸ்டே பண்ணி வைக்கக் கூடாது. அதனால் அவசர அவசரமாக அவருக்கே பட்டம் சூட்டிவிட் டோம் என்கிறார் மதுரை ஆதீனம்! சிவனும் பார்வதியும் கூட்டாகச் சேர்ந்து கையெழுத்திட்டு அனுப்பிய உத்தரவு இவருக்கு கூரியரில் வந்ததா? ஸ்பீடு போஸ்ட்டில் வந்ததா? கனவில் வந்து சொன்னதாக இன்னும் எத்தனை தலைமுறைக்கு கதைவிடப் போகி றீர்கள்? அறிவியல் மேலாண்மை விரிந்து வரும் இந்நாளில் கடவுள்கள் கனவில் தான் வரவேண்டுமா? எத்தனை டி.வி. சேனல்கள்? எத்தனை ஊடகங்கள்? கடவுள் புகழ் பரப்புவதற்கென்றே தொலைக் காட்சிகள்! 24 மணி நேரமும் செய்திகள்! இவற்றில் ஏதாவது ஒன்றில் திறீணீலீ ழிமீஷ் என்று போட்டால் கூடப் போதுமே? கடவுளே சொல்லிவிட்டார். எதற்கு பிரச்னை பண்ணுவானேன் என்று வாளாதிருந்திருப்பார்களே? நீதிமன்றம் போனாலும் கடவுள் உத்தரவு. எங்களால் எதுவும் செய்யமுடியாது என்று நீதிபதிகள் கூறிவிட வாய்ப்பும் இருக்கிறதே?

கனவில் வந்து கடவுள் சொன்னதாகவே இருக்கட்டும். 2004ஆம் ஆண்டில் தனது அத்தை மகளின் மகன் சுவாமிநாதனை மதுரை ஆதீன இளவரசராக விழா ஒன்றை நடத்தி பட்டம் சூட்டி மகிழ்ந்ததும் இதே ஆதீனத்தரசர்தான்!

அது யார் போட்ட உத்தரவு? 10 ஆண்டுகள் இளவரசரின் பதவி பறிக்கப்பட்டதே அது யார் போட்ட உத்தரவு?

தமிழ் ஓவியா said...

சர்ச்சைக்குப் பேர்போன நித்தியானந்தாவை மதுரை மடத்தின் 293வது குரு மகாசந்நிதானமாக பட்டம் சூட்டியது ஏன் என்று கேட்டதற்கு தந்தையும் மகனுமாக இருந்து ஒரு கம்பெனியை நிர்வகிப்பதுபோல் நடத்துவோம் என்கிறார். மடங்களெல்லாம் கம்பெனிகளா? அங்கே பணிபுரியும் தொழிலாளர்கள் எத்தனை பேர்? கம்பெனிகள் சட்டத்திற்கு கட்டுப்பட்டதுதானா? துறவிகளுக்குள் தந்தை மகன் உறவு எப்படி வந்தது? பொற்கிரீடங்கள், தங்க சிம்மாசனங்கள், வைர வைடூரிய ஆபரணங்கள் துறவிகளுக்குரியனவா? அவை வந்த வழி என்ன? கேள்விகள் முடியவில்லை. நாடு கேட்க இருப்பவை இன்னும் ஏராளம்!

இந்தியாவில் 3.50 லட்சம் கற்பழிப்பு வழக்குகள் நிலுவையில் உள்ளன! என்று கணக்கிட்டுச் சொல்பவர் வேறு யாருமல்ல. நித்யாவேதான். அவர் சம்பந்தப்பட்ட வழக்கை அவர் அறிந்து வைத்திருப்பதில் நமக்கு ஆச்சரியம் இல்லை! ஆண்டு ஒன்றுக்கு எத்தனை பேர் பட்டினியால் சாகிறார்கள் என்ற புள்ளி விபரம் இவரால் தரமுடியுமா?

மதுரை ஆதீனத்துக்கு உத்தரவு தந்த தகவல், தமிழகத்திலுள்ள மற்ற ஆதினங்களுக்கும் தெரிந்திருந்தால் பட்டாபிசேகம் களைகட்டியிருக்கும். எதிர்க்க எவரும் முன்வர மாட்டார்கள். தூங்கினால்தானே கடவுள் கனவில் வர வசதியாக இருக்கும்!

தாருகாவனத்து ரிசி பத்தினிகளைக் கெடுத்தவன் சிவன். வெகுண்டெழுந்த ரிசிகள் சிவனின் ஆண்குறியை அறுத்தெறிந்ததாக புராணம் கூறுகிறது. மோகினி வடிவில் வந்த விஷ்ணுவையும் சிவன் விட்டுவைக்கவில்லை. அதனால் அரிஹரபுத்திரன் அகிலத்திற்கு அறிமுகமானான். ஒழுக்கம் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கும் ஒருவனை உயரத்தில் நிறுத்தும் தகுதியும், யோக்கியதையும் சிவனுக்கு உண்டு. ஒப்புக்கொள்வோம்.

தமிழ் ஓவியா said...

உறக்கத்தில், கனவில் சிவன் வந்து சொன்ன இன்னொரு கதையும் இருக்கிறது. தென்காசி கோபுரத்தைக் கட்டிமுடித்த கையோடு பராக்கிரம பாண்டியன் ஓய்வில் உறக்கத்தில் இருந்த சமயம். கனவில் சிவபெருமான் வந்தார்.

பக்தா பராக்கிரம பாண்டியா, வடக்கே காசி, தெற்கே தென்காசி. சரி. இடையில் ஒரு காசி எழுந்தால் ரொம்பவும் மகிழ்வேன் என்றானாம். சிவகாசி வந்த கதை இதுதான் என்கிறது ஸ்தல புராணம்! சிவன் கோயில் இங்கு எழுந்தபோது ஒரு திண்ணைப் பள்ளிக்கூடம் கூட இங்கே இல்லை. அடிப்படை வசதிகளைப் பெற அநேக நூற்றாண்டுகளைக் கடக்க வேண்டியிருந்தது. நம் கடவுள்களுக்கு கோயில்தான் முக்கியம்.

உண்மையில், இங்குள்ள பழைமை வாய்ந்த உயர்நிலைப்பள்ளி ஒன்று விக்டோரியா மகாராணி காலத்தில் அதாவது வெள்ளைக்காரன் நாட்டை ஆண்டபோது உருவானது. சிவகாசி இந்து நாடார் விக்டோரியா மேல் நிலைப்பள்ளி என்பது அதன் பெயர். பல தொழில்களையும், தொழிலதிபர்களையும் தந்து இன்றும் ஆயிரக்கணக்கில் மாணவர்கள் பயிலும் பள்ளியாக வெற்றிகரமாக இயங்கி வருகிறது! கதை அளப்பவர்களுக்கு கனவு கண்டதாக உளறுவது வசதியானதொரு வாய்ப்பு! பலரும் பார்க்கும் வண்ணம் நேரில காட்சிஅளித்து உத்தரவு போடும் வல்லமை எந்தக் கடவுளுக்கும் இல்லை என்பதை மூட நம்பிக்கையாளர்கள் அனைவரும் உணரும் நாளே இனிய நாள்.

இப்படியெல்லாம் கருத்துக்களை முன் வைக்கிறபோது பெரியார் கட்சிக்காரர்கள், நாத்திகர்கள் இவர்கள் இப்படித்தான் என அலட்டிக் கொள்பவர்கள் அடுத்து வருவதையும் படிக்கட்டும்.

உலக வாழ்க்கை யைத் துறந்து விட்டதாக நம்பப் படும் ஆன்மீகவாதிகள் கூட உண்மையில் உலக நியதியில்தான் இயங்குகின்றனர். சாதாரண மக்களிடம் காணப்படும் அதே குறிக்கோள், ஒன்றை அடைந்துவிட எடுத்துக்கொள்ளும் அதே தீவிர முயற்சி, ஆசைப்பட்டதாகவே மாறிவிடத் துடிக்கும் துடிப்பு என்பவை அவர்களிடமும் உள்ளன. அறிந்துகொண்டுவிடவும், அடைந்துவிடவும், பிடியில் கொண்டுவந்து விடவும், தன்னிடமே பத்திரமாக வைத்துக்கொள்ள நினைத்தலும் இவர் களிடமும் இருக்கிறது. ஆன்மீகவாதிகள் எடுத்துக்கொள்ளும் முயற்சியின் நோக்கம் புனிதமானது போலவும் மற்றவர்கள் எடுக்கும் முயற்சிக்கு முற்றிலும் மாறுபட்டது போலவும் சொல்லப்படுகிறது.

ஆனால் உண்மையில் எந்த வேறுபாடும் இல்லை. அவர்கள் துறந்து சென்றதாக எண்ணும் உலகத்துக்கும் வாழ்ந்து கொண்டிருக்கும் ஆன்மீக உலகத்துக்கும் வித்தியாசம் எதுவுமில்லை. அதுவேதான் இது. இதுவேதான் அது. இப்படிச் சொன்னவர் யார் தெரியுமா? ஜே.கிருஷ்ணமூர்த்தி என்ற ஜே.கே.!

தமிழ் ஓவியா said...

10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் பெரியார் கல்வி நிறுவனங்கள் 100 சதவீதம் தேர்ச்சி


சமச்சீர் கல்வி முறையால் சிரமமம் இல்லாமல் இருந்தது - மாணவிகள் பேட்டி

பெற்றோர்கள் மகிழ்ச்சி - ஆசிரியர்கள் பாராட்டு

பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவி ஆர்.நிவீதாவிற்கு தலைமையாசிரியை நாகலட்சுமி வாழ்த்து தெரிவித்தார். உடன் பெற்றோர் பாலஅபிராமி - ரகோதமன்.

திருச்சி, ஜூன்.5- பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் நேற்று (மே.4) வெளியிடப்பட்டன. இதில் திருச்சி பெரியார் மணியம்மை பெண்கள் மேனிலைப்பள்ளி, பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேனிலைப்பள்ளி, ஜெயங்கொண்டம் பெரியார் மெட்ரிக் மேனிலைப்பள்ளி, தஞ்சை, வெட்டிக்காடு பெரியார் மெட்ரிக்குலேசன் பள்ளி ஆகிய பள்ளி மாணவ, மாணவிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

பெரியார் மணியம்மை பெண்கள் மேனிலைப் பள்ளி

பெரியார் மணியம்மை பெண்கள் மேனிலைப்பள்ளி மாணவி ஆர்.நிவீதா 500க்கு 474 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதல் இடத்தை பெற்றுள்ளார். எஸ்.எல். ரசிதுன்னிசா 500க்கு 473 மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடத்தையும், என்.சாஜிதாபானு, எஸ்.திலக்ஷனா ஆகியோர் 500க்கு 463 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் மூன்றா மிடத்தையும் பெற்று உள்ளனர்.

பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் பள்ளி

பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேனிலைப்பள்ளி மாணவி எஸ்.சௌமியா 500க்கு 477 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தை பெற்றுள்ளார். எஸ்.கீர்த்தனா 500க்கு 475 மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடத்தையும் டி.ஐஸ்வர்யா 500க்கு 471 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடத்தையும் பெற்றுள்ளனர்.

ஜெயங்கொண்டம்: பெரியார் மெட்ரிக்குலேசன் மேனிலைப்பள்ளி

ஜெயங்கொண்டம் பெரியார் மெட்ரிக்குலேசன் மேனிலைப்பள்ளி மாணவி ஆர்.ரேணுகா 500க்கு 481 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடத்தைப் பெற்றுள்ளார். ஆர்.சிலம்பரசி 500க்கு 474 மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடத்தையும், எஸ்.தமிழ் குமரன் 500க்கு 473 மூன்றாமிடத்தையும் பெற்றுள்ளனர்.

வெட்டிக்காடு -பெரியார் மெட்ரிக்குலேசன் பள்ளி

தஞ்சாவூர், வெட்டிக்காடு பெரியார் மெட்ரிக்குலேசன் பள்ளி மாணவர் கே.அஜித்குமார் 500க்கு 421 மதிப்பெண் பெற்று முதலிடத்தையும், எம்.சின்னராஜ் 500க்கு 414 மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடத்தையும், எ.அருண், எஸ்.சரவணன் ஆகியோர் 500க்கு 407 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடத்தையும் பெற்றுள்ளனர்.

தமிழ் ஓவியா said...

மாணவ, மாணவிகள் பேட்டி

பெரியார் மணியம்மை பெண்கள் மேனிலைப்பள்ளியில் முதல் மதிப்பெண் மாணவி ஆர்.நிவீதா நமது செய்தியாளர்களிடம் கூறுகையில்: சமச்சீர் கல்வி முறை எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. மேலும் இப்பள்ளியின் தலைமையாசிரியை உள்பட அனைத்து ஆசிரியர், ஆசிரியைகள் எனக்கு ஊக்கமளித்தது பள்ளியில் முதல் மாணவியாக வருவதற்கு காரணமாக இருந்தனர். மேலும் பள்ளி செயலாளர், ஆசிரியர், ஆசிரியைகள், பெற்றோர் மற்றும் சகதோழிகள் ஆகியோருக்கும் இந்நேரத்தில் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் நான் 11 ஆம் வகுப்பில் அறிவியல் பிரிவில் (பயோ.டெக்னாலஜி) சேர்ந்து படிக்க விரும்புகிறேன். 12 ஆம் வகுப்பில் மாவட்ட அளவில் தேர்ச்சி பெற்று பள்ளிக்கு பெருமை சேர்ப்பேன் என மாணவி கூறினார்.

இரண்டாம் இடம் பெற்ற மாணவி எஸ்.எல்.ரசிதுன்னிசா கூறுகையில்: பத்தாம் வகுப்புத் தேர்வில் பள்ளியில் இரண்டாமிடம் பெற்றது மகிழ்ச்சியளிக்கிறது. நான் அதிக மதிப்பெண்கள் பெற காரணமாக இருந்த வகுப்பு ஆசிரியர், ஆசிரியைகள் , பெற்றோருக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் சிறப்பு வகுப்புகள் பள்ளியில் நடத்தப்பட்டன. மேலும் எங்களை ஊக்கப்படுத்தியதன் காரணமாகவே அதிக மதிப்பெண் பெற உறுதுணையாக இருந்தது. நான் 11 ஆம் வகுப்பில் அறிவியல் பிரிவில் சேர்ந்து படிக்க விரும்புகிறேன். மருத்துவர் ஆவதே எனது லட்சியம் என மாணவி கூறினார். மூன்றாமிடத்தை பெற்ற என்.சாஜிதா பானு கூறுகையில் நான் பொறியியல் துறையில் சேர்ந்து பயில விரும்புகிறேன். எனது தேர்ச்சி மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது என கூறினார். எஸ். திலக்ஷனா கூறுகையில்: கணினி அறிவியல் பாடத்தை எடுத்து படிக்க விரும்புகிறேன். நான் சாதாரணமாகத்தான் படித்தேன். அனைத்து பாடங்களையும் நன்கு படித்தேன். மேலும் பள்ளியில் அனைத்து ஆசிரியர் களும் ஊக்கமும், உற்சாகமும் தந்ததே இந்த வெற்றிக்கு காரணம் இவ்வாறு அவர் கூறினார். பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேனிலைப்பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவி எஸ்.சௌமியா கூறுகையில்: நான் இந்த பள்ளியில் 2 ஆம் வகுப்பு முதல் படித்து வருகிறேன். எனது தேர்ச்சி மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. சமச்சீர் கல்வி முறையில் படித்ததால் சிரமம் இல்லாமல் படிக்க முடிந்தது. அனைத்து பாடங்களும் எளிமையாக இருந்தது, இதனால் சாதிக்க முடிந்தது. மேலும் இப்பள்ளியில் சிறப்பு வகுப்புகள் தொடர்ந்து நடத்தப்பட்டன. எனது வெற்றிக்கு காரணமான பள்ளி முதல்வர் மற்றும் அனைத்து ஆசிரியர், ஆசிரியைகளுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்ளுகிறேன். நான் பயோ.அறிவியல் பாடத்தை படிக்க விரும்புகிறேன். எனது பெற்றோர் என்னை படிபடி என்று வற்புறுத்தவில்லை. நான் சாதாரண மாக படித்ததாலே என்னால் சாதிக்க முடிந்தது. இரண்டாமிடம் பெற்ற எஸ்.கீர்த்தனா கூறுகையில்: நான் அன்றாடம் நடத்தும் பாடங்க ளை தினமும் படித்து விடுவேன். நேரம் கிடைக் கும் போதெல்லாம் தொலைக்காட்சி பார்ப் பேன். மேலும் சிறப்பு வகுப்புகளுக்கும் செல் வேன். அதனால் தான் அதிக மதிப்பெண்கள் பெற முடிந்தது. எனது வெற்றிக்கு காரணமான வகுப்பு ஆசிரியர்கள், பெற்றோர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ் ஓவியா said...

மூன்றாமிடம் பெற்ற மாணவி டி.ஐஸ்வர்யா கூறுகையில், எனது தந்தை தேநீர்க் கடை நடத்தி வருகிறார். நான் விரும்பியபடி எனது படிப்பு விஷயத்தில் சுதந்திரம் கொடுத்தார்கள். எனது பெற்றோரின் கஷ்டத்தை உணர்ந்து நன்கு படித்தேன். இதனால் தான் அதிகமதிப்பெண் பெற முடிந்தது. இப்பள்ளியின் அனைத்து செயல்பாடுகளும் என்னை மிகவும் கவர்ந்தன. நல்ல சிந்தனையாள ராகவும், சமூக தொண்டாற்றவும் எண்ணத் தோன்றும். அதனாலே மருத்துவராகி கிராமங்களில் பணிசெய்ய விரும்புகிறேன் என்று மாணவி தெரிவித்தார்.

ஜெயங்கொண்டம் பெரியார் மெட்ரிக்கு லேசன் பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவி ஆர்.ரேணுகா கூறுகையில்: நாள்தோ றும் நடத்தும் பாடங் களை அன்றே படித்துவிடு வேன். நான் அதிக மதிப் பெண் பெறு வதற்கு ஊக் கமும், உற்சாக மும் தந்த பள்ளி முதல்வர் மற்றும் ஆசிரியர், ஆசிரி யைகள், பெற்றோர்கள் அனைவ ருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்ளு கிறேன். தொடர்ந்து 12 ஆம் வகுப்பு தேர்வில் மாநில அளவில் தேர்ச்சி பெற்று பள்ளிக்கு பெருமை சேர்ப்பேன் இவ்வாறு மாணவி கூறினார்.

பெற்றோர்கள் நேற்று பிற்பகல் முதலே தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ள மாணவர்களும், பெற்றோர்களும் பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகத்தில் குவிந்தனர். இப்பள்ளியில் பயிலும் அனைத்து மாணவ, மாணவிகளும் தேர்ச்சி பெற்றதால் அனைவரும் பெற்றோர்களுடன் வருகைதந்து, ஆசிரியர்களுக் கும், சக மாணவ, மாணவிகளுக்கும், நண்பர்களுக் கும் இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவி களுக்கு அனைத்து ஆசிரியர்களும் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

பெரியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் முதல் இடம் பெற்ற மாணவி எஸ்.சவுமியாவை பாராட்டுகிறார் தலைமையாசிரியர் நிர்மலா. உடன் மாணவியின் பெற்றோர்.

தமிழ் ஓவியா said...

அரசியலைப்புச் சட்டம் தொகுத்தலில் தாமதம் ஏன்?


- அம்பேத்கர் விளக்குகிறார்

11ஆம் வகுப்பிற்கான அரசியல் அறிவியல் முதலாம் பாடம் 18ஆம் பக்கத்தில் அம்பேத்கர் நத்தையில் அமர்ந்து நத்தை வேகத்தில் சட்டம் எழுதியதாகவும், பார்ப்பன நேரு கையில் சாட்டை கொண்டு அடித்து விரைவுப்படுத்தியதாகவும் சித்தரிக்கும் ஒரு கேலிச் சித்திரம் வெளியிட்டுள்ளது. (http://ncert.nic.in/NCERTS/textbook/textbook.htm?keps2=1-10) இந்த பாடபுத்தகம் 2006-லேயே வெளியிடப்பட்டிருந் தாலும், இது தொடர்பாக தற்போதுதான் எதிர்ப்பு கிளம்பியது. பார்ப்பன அதிகார வர்க்கம் எத்தனை நுட்பமாக இயங்குகிறது என்பதும், நம் ஊடகவியலாளர்கள் எத்தனை மெத்தனமாக இருக்கிறார்கள் என்பதும் தெளிவு பெறும். 11.-05.-2012 அன்றுதான் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு அந்த புத்தகத்தை தடை செய்யும் நிலை வந்திருக்கிறது. அம்பேத்கர் நத்தை வேகத்தில் அரசியலமைப்புச் சட்டத்தை தொகுக்கும் பணியில் ஈடுபட்டாரா? நேரு சாட்டையெடுத்து சுழற்றுவதுபோல் விரைவுபடுத்தினாரா? இந்த கேலிச்சித்திரம் தவிர மட்டமான இந்துத்துவ பொதுப்புத்தியில் அவர் காங்கிரசுக்கு அடிபணிந்தார் என்பவர்களும் உண்டு. அரசியல் சட்டம் இயற்றுவதில் ஏற்பட்ட தாமதம் குறித்து அம்பேத்கர் விளக்கியிருக்கிறார். படியுங்கள்.

ஏன் இந்த தாமதம்?

வரைவுக் குழுவைப் பொறுத்த வரை, அது அரசியல் நிர்ணய சபையால் 1947 ஆம் ஆண்டு ஆகஸ்டு 29 அன்று தேர்ந்தெடுக்கப்பட்டது. ஆகஸ்டு மாதம் 30 ஆம் நாளில் அது தன் முதல் கூட்டத்தை நடத்தியது. ஆகஸ்டு 30 ஆம் நாளிலிருந்து 141 நாள்கள் அது அமர்வில் இருந்தது. இந்த சமயத்தில் அது அரசியல் சாசன வரைவைத் தயாரித்தது. வரைவுக் குழுவின் பணிக்கு அடிப்படையாக, அரசியல் சாசனத் தயாரிப்பு ஆலோசகர் தயாரித்து, வரைவுக் குழுவின் பணிக்கு அடிப்படையாகக் கொடுக்கப்பட்ட அரசியல் சாசனம் 243 விதிகளையும் 13 அட்டவணை களையும் கொண்டிருந்தது. வரைவுக் குழு அரசியல் நிர்ணய சபைக்கு அளித்த முதலாவது அரசியல் சாசன வரைவில், 315 விதிகளும் 8 அட்டவணை களும் இருந்தன. பரிசீலனைக் கூட்டத்திற்குப் பிறகு அரசியல் சாசன வரைவில் அடங்கியிருந்த விதிகளின் எண்ணிக்கை 386 ஆக அதிகரித்தது. அதன் இறுதி வடிவத்தில் அரசியல் சாசன வரைவு, 395 விதிகளையும் 8 அட்டவணைகளையும் கொண்டுள்ளது. சுமார் 7,635 திருத்தங்கள் அரசியல் சாசன வரைவுக்கு முன் வைக்கப்பட்டன. இவற்றில் எதார்த்தத்தில் சபையில் முன்மொழியப்பட்ட திருத்தங்கள் 2,475 ஆகும்.

இந்தத் தகவல்களையெல்லாம் நான் ஏன் கூறுகிறேன் என்றால் ஒரு கட்டத்தில், இந்தப் பணியை முடிப்பதற்கு அரசியல் நிர்ணய சபை அதிக நேரம் எடுத்துக் கொள்கிறது என்று கூறப்பட்டது. அது, பொதுமக்கள் பணத்தை விரயம் செய்து ஆமை வேகத்தில் பணியாற்றுவதாகக் குறை கூறப்பட்டது. ரோமாபுரி எரியும்போது நீரோ மன்னன் பிடில் இசைத்ததைப் போன்றுள்ளது' என்று பழி சுமத்தப் பட்டது. இந்தக் குற்றச்சாட்டுகளில் ஏதாவது நியாயம் உள்ளதா?

அரசியல் சாசனங் களை உருவாக்க மற்ற நாடுகளிலுள்ள அரசியல் நிர்ணய சபைகள் எடுத்துக் கொண்ட நேரத்தை நாம் பார்க்க லாம். சில எடுத்துக் காட்டுகள்: 1787 மே மாதம் 25 அன்று கூடிய அமெரிக்க கன்வென்ஷன், தன் பணியை 1787 செப்டம்பர் 17இல் அதாவது நான்கு மாதத்தில் முடித்தது. கனடா நாட்டு அரசியல் சாசன அமைப்பு கன்வென்ஷன், 1864 அக்டோபர் 10 இல் கூடியது; 1867 மார்ச்சில் அரசியல் சாசனம் ஏற்கப்பட்டது. இரண்டு ஆண்டுகளும் அய்ந்து மாதங்களும் எடுத்துக் கொண்டது. ஆஸ்திரேலியாவின் அரசியல் சாசனத் தயாரிப்பு அவை, 1891 மார்ச்சில் கூடியது; 1900 சூலை 9 இல் அரசியல் சாசனத்தை உருவாக்கியது. 9 ஆண்டுகள் எடுத்துக் கொண்டது. தென் ஆப்பிரிக்க கன்வென்ஷன், 1908 அக்டோபரில் கூடியது; 1909 செப்டம்பர் 20 இல் அரசியல் சாசனத்தை நிறைவேற்றியது. இதற்கு ஓராண்டுக்கால உழைப்பு தேவைப்பட்டது.

தமிழ் ஓவியா said...

அமெரிக்கா மற்றும் தென் ஆப்பிரிக்க அரசியல் சாசனத் தயாரிப்பு அமைப்புகளைவிட, நாம் அதிக காலம் எடுத்துக் கொண்டது உண்மைதான். ஆனால், கனடா கன்வென்ஷனைவிட அதிக காலம் எடுத்துக் கொள்ளவில்லை; ஆஸ்திரேலியா கன்வென்ஷனை விடக் குறைவாகவே நாம் எடுத்துக் கொண்டிருக்கிறோம். நாம் கால அளவை ஒப்பிடும் போது, இரண்டு விஷயங்களைக் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். அமெரிக்கா, கனடா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின் அரசியல் சாசனங்கள், இந்திய அரசியல் சாசனத்தைவிட மிகச் சிறியவை. நான் ஏற்கனவே கூறியபடி, நமது அரசியல் சாசனத்தில் 395 விதிகள் உள்ளன. அமெரிக்க அரசியல் சாசனத்தில் 7 விதிகள் மட்டுமே உள்ளன. முதல் நான்கு விதிகள் 21 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. கனடா நாட்டு அரசியல் சாசனத்தில் 147ம், ஆஸ்திரேலிய சாசனத்தில் 1283ம் தென் ஆப்பிரிக்க அரசியல் சாசனத்தில் 153 பிரிவுகளும் உள்ளன.

இரண்டாவது விஷயம் என்னவென்றால் - அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளின் அரசியல் அமைப்புச் சாசனங்களை உருவாக்கியவர்கள், திருத்தங்கள் சம்பந்தமான பிரச்சினையைச் சந்திக்க வேண்டியிருக்கவில்லை. முன்மொழியப்பட்ட வடிவத்திலேயே அவை ஏற்றுக் கொள்ளப்பட்டன. ஆனால், அதே நேரத்தில் நமது அரசியல் நிர்ணய சபை 2,473 திருத்தங்கள் வரை சந்திக்க வேண்டியிருந்தது. இந்த உண்மைகளை எல்லாம் கணக்கிலெடுத்துக் கொண்டு பார்த்தால், நாம் தாமதமாகச் செயல்பட்டோம் என்ற குற்றச்சாட்டு, முற்றிலும் ஆதாரமற்றது என்று எனக்குத் தோன்றுகிறது. இவ்வளவு கடினமான பணியை, இவ்வளவு விரைவில் நிறைவேற்றியதற்காக, அரசியல் நிர்ணய சபை கண்டிப்பாகத் தன்னைப் பாராட்டிக் கொள்ளலாம்... (25.11.1949ல் நாடாளுமன்றத்தில் அண்ணல் அம்பேத்கர் ஆற்றிய உரையின் ஒரு பகுதி)

உடலைத் தின்ற உழைப்பு

மூன்று ஆண்டுகள் கடின உழைப்பில் தொகுத்த அரசியல் சாசனம் எப்படியெல்லாம் அவரது உடல்நலத்தை தின்றுவிட்டிருந்தது என்பதை, அம்பேத்கரின் வரலாற்றை எழுதிய தன்ஞ்செய் கீர் குறிப்பிடுகிறார் கவனியுங்கள்..

அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்கும் பணி முடிவடைந்ததும் கட்டாயம் ஓய்வெடுக்க வேண்டும் என்கிற அளவுக்கு அம்பேத்கரின் உடல்நலம் குன்றி இருந்தது. எனவே மருத்துவம் செய்து கொள்வதற்காக அம்பேத்கர் பம்பாய்க்கு வந்தார். 1947 ஆகஸ்ட் முதலே அம்பேத்கர் அவருடைய உடல்நலம் பற்றி கவலைப்பட தொடங்கினார். அவருடைய உடல்நிலை சீர்கெட்டு வருவதாக அவரே கூறினார். 1947 ஆகஸ்ட் மாதத்தில் அவர் எழுதிய கடிதம் ஒன்றில், கடந்த பதினைந்து நாட்களாக கண்ணிமைக்கும் நேரங்கூட நான் தூங்கவில்லை. என்று குறிப்பிட்டிருந்தார். எனவே இரவுகள் அவருக்கு அச்சமூட்டுவனவாயின.

நாள்தோறும் நரம்புவலி நள்ளிரவில் தொடங்கி விடியும் வரை நீடித்தது. அப்போது அவர் இன்சுலின் மருந்தையும், ஓமியோபதி மருந்தையும் பயன்படுத்தினார்; அவற்றில் எதுவுமே பயன்தரவில்லை. குணப்படுத்த முடியாத ஒரு நோயைத் தாங்கிக் கொள்ள பழகிட வேண்டியதுதான். என்று அம்பேத்கர் கூறினார். (பக்கம்:598, 599)

அண்ணல் அம்பேத்கரைத் தவிர்த்துவிட்டு இந்திய வரலாற்றை எழுதிவிடமுடியாது. அவரது ஒவ்வொரு உழைப்பும் ஒடுக்கப்பட்ட மக்களை முன்னேற்றுவதற்கே பயன்பட்டுள்ளது.இந்தியா முழுதும் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவராக உயர்ந்து நிற்கிற அம்பேத்கரை இழிவு செய்யும் கேலிச்சித்திரத்தை பாடப்புத்தகத்தில் வெளியிட்டு மகிழ்வது கல்வியைக் காவி மயமாகத்துடிக்கும் இந்துத்துவத்தின் கோரமுகமே யாகும். அம்பேத்கர் நூற்றாண்டுக்குப் பின் அவரைத் தவிர்க்க முடியாது என்ற நிலையில்தான் தேசிய அரசியல் கட்சிகள் அம்பேத்கர் படத்தைப் போடுகின்றன.ஆனால்,பிறவி பேதம் கற்பிக்கும் இந்து மதத்தை விட்டு வெளியேறிய அம்பேத்கர் மீதான வன்மத்தை ஏதாவது ஒரு வகையில் அரசு நிர்வாகத்தில் ஊடுருவியுள்ள இந்துத்துவாக்கள் வெளிக்காட்டியபடியே இருக்கின்றனர்.அதன் ஒரு பணிதான் அம்பேத்கர் மீதான இந்தக் களங்கம் கற்பிக்கும் முயற்சி என்பதை ஒடுக்கப்பட்ட மக்கள் உணரவேண்டும்.

- நன்மொழி

தமிழ் ஓவியா said...

அவாள் அகராதி


பல்வேறு குளறுபடி களுக்குப் பின், சமச்சீர் கல்வித் திட்டத்தின்கீழ் நடந்த முதல் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவு சரியலாம் என்று எதிர் பார்க்கப்பட்ட நிலையில், 86.20 சதவிகித மாணவ, மாணவியர் தேர்ச்சி பெற்று அசத்தினர். கடந்த ஆண்டை விட, 0.9 சதவிகிதம் மாணவ, மாணவிகள் கூடு தலாகத் தேர்ச்சி பெற்றனர். இதற்குத் தாராள திருத்தம்தான் காரணம் என, தேர்வுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன - இப்படி செய்தி வெளி யிடுவது தினமலர் கும்ப லைத் தவிர வேறு யாராகத் தான் இருக்க முடியும்?

அதன் சொற்களையே பார்ப்போம்; பல்வேறு குளறு படிகளுக்குப் பின்.... என்று தினமலர் எழுதுகிறதே.... அது என்ன பல்வேறு குளறுபடிகள்? அவற்றைச் செய்தவர்கள் யார்? அறிவு நாணயத்தோடு வெளிப் படையாகச் சொல்லி இருக்கவேண்டாமா? இதில் என்ன பூடகம்?
பல்வேறு குளறுபடி களைச் செய்தது எல்லாம் தினமலர் தூக்கி வைத் துக் கொண்டாடும் அ.இ.அ.தி.மு.க. ஆட்சி தானே? எத்தனை மாதங் கள் பாழாயின- அரசின் பிடிவாதம்தானே காரணம்?

உச்சநீதிமன்றம்வரை சென்று கதவைத் தட்டியது யார்? நீதிமன்றம் குட்டிய வலி தாங்க முடியாத நிலை யில்தானே - வேறு வழி யின்றி ஒப்புக்குச் சப்பாணி யாய் சமச்சீர் கல்வித் திட்டத்திற்குப் பச்சைக் கொடி காட்டப்பட்டது?

அதிலும் ஆத்திரத்தைக் காட்டவில்லையா? பள்ளி ஆசிரியர்களுக்கு என்ன வேலை? திருவள்ளுவர் படம் உள்பட பெவிகால் வைத்து ஒட்டி மறைக்கப் படவில்லையா?

காந்தம் கறுப்பு - சிகப் பாக இருக்கிறது என்பதற் காக அதைக்கூட ஒட்டி மறைக்கவில்லையா?

இவ்வளவு குளறுபடி களையும் செய்த அரசை கம்பளி போட்டு மறைத்து விட்டு, யாரோ குளறுபடி களைச் செய்ததாக பந்தை வேறு பக்கம் அடிப் பானேன்?

கடைசியாக தினமலர் கொலம்பஸ் கண்டுபிடித் தது என்ன தெரியுமா? இவ் வாண்டு இருபால் மாணவர் கள் அதிக விகிதத்தில் வெற்றி பெற்றதற்குக் கார ணம் தாராள திருத்த மாம்!

இதற்குப் பெயர்தான் பார்ப்பனப் புத்தி என்பது! அதிகமாக வெற்றி பெற்ற னர் என்றால், அதன் பொருள் - பட்டிக்காட்டு மக்களும், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களும் அதிக வெற்றி பெற்றனர் என்பதுதான் அவாள் அக ராதி!

குறைந்த சதவிகிதத் தில் வெற்றி பெற்றால்தான் அவாள் அகராதியில் திறமையானவர்கள் பாசாகி விட்டனர் என்பார்கள். என்ன புரிகிறதோ! இதை எல்லாம் புரிந்துகொள்வ தற்கு ஈரோட்டுக் கண்ணாடி தேவை!

- மயிலாடன் 6-6-2012

தமிழ் ஓவியா said...

மீண்டும் நுழைவுத் தேர்வா? தமிழ்நாடு முழுவதும் 12 ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம்!


தமிழர் தலைவர் விடுத்துள்ள மிக முக்கிய அறிக்கை



இந்தியா முழுவதற்கும் ஒரே கல்விக் கொள்கை, ஒரே நுழைவுத் தேர்வு என்பது போன்ற கூட்டாட்சித் தத்துவத்திற்கே உலை வைக்கும் திட்டத்தை மத்திய மனித வள அமைச்சகம் செய்வதைக் கண்டித்து திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அறிக்கை வருமாறு:

கல்வி என்பது முன்பு மாநிலப் பட்டியலில் (State List) அரசியல் சட்டக் கர்த்தாக்களால் வைக்கப் பட்டது - நீண்ட ஆலோசனைக்குப் பிறகு.

ஆனால், எந்தவித கலந்தாலோசனைக்கும் இடம்தராது, நெருக்கடிகால நிலை அமுலில் இருந்தபோது, 1976 இல், இது திடீரென்று நாடாளுமன்றத்திலோ, மாநிலங்கள் கருத் தறிந்தோ - இது ஏதும் நடைபெறாமல், அது பொதுப் பட்டியலுக்கு (Concurrent List) மாற்றப் பட்டது.

உச்சநீதிமன்றத்தால் ஏற்கப்பட்ட பிறகும்...

இப்போது இந்தியா முழுவதற்கும் ஒரே கல்விக் கொள்கை, ஒரே நுழைவுத் தேர்வு என்பது போன்ற கூட்டாட்சித் தத்துவத்திற்கே உலை வைக்கும் திட்டத்தை மத்திய மனித வள அமைச்சகம் செய்வது தவறான நிலைப்பாடாகும். மறைமுகமாக மாநிலப் பட்டியலை மத்தியப் பட்டியலுக்குக் கொண்டுவரும் மகாசூழ்ச்சியாகும்.

ஏற்கெனவே தமிழ்நாடு அரசு - தி.மு.க. அரசு எதிர்த்து அதை ஒழித்து தனி ஏற்பாட்டினை சட்ட ரீதியாக செய்தும், அது உச்சநீதிமன்றத்தால்கூட ஏற்கப்பட்டது.

கபில்சிபலின் பிடிவாதம்

இப்போது கபில்சிபல் பிடிவாதமாக இதை அறிவித்திருப்பது வன்மையாகக் கண்டிக்கத் தக்கது. நுழைவுத் தேர்வை ரத்து செய்வதன் மூலமாகத்தான் தமிழ்நாட்டில் பெற்றோர்கள் நிம்மதி அடைந்தனர்; கிராமப்புற மாணவர் களுக்கும், ஏழை, எளிய மாணவர்களுக்கும் ஏராளமான வாய்ப்புகள் கிடைத்தன!

மீண்டும் இந்த ஏற்பாட்டின்மூலம் ஒருவகை பன்முக கலாச்சாரம், மொழி, கிராமப்புற மாணவர்களின் முன்னேற்றம் இவைகளுக்கு ஆப்பு அடிக்கப்படுகிறது!

தமிழக முதலமைச்சரும் எதிர்த்துள்ளார்

இதனை முழு மூச்சாக எதிர்த்து தடுத்து நிறுத்தவேண்டியது - கட்சி வேறுபாடுகளைத் தாண்டிய முக்கிய கடமையாகும்!

தமிழ்நாடு அரசுக்கும் இதில் முக்கிய கடமை உள்ளது. முதலமைச்சர் அவர்களும் இந்த நுழைவுத் தேர்வு ஏற்பாட்டை எதிர்த்துள்ளார் எனினும், இப்போது எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும்.

எனவே, உடனடியாக அனைத்துக் கட்சிகளும், அமைப்புகளும், கல்வியாளர்களும் இந்தப் பிரச்சினை - தமிழ்நாட்டு மாணவர்களின் எதிர்காலத்தைக் கெடுக்கும் இந்த ஏற்பாட்டினை - கையில் எடுத்து, தங்களது பலத்த எதிர்ப்பைக் காட்டி, இந்தப் புதிய சதித் திட்டத்தை ஒழிக்க முன்வரவேண்டும்!

திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம்

இதைக் கண்டித்து வருகிற 12.6.2012 செவ்வாய் அன்று மாவட்டத் தலைநகரங் களில் திராவிடர் மாணவர்கள், இளைஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவார்கள்.

ஒத்த கருத்துள்ளவர்களும் இதில் இணைந்து கொள்ளலாம்.

கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம் 6-6-12