Search This Blog

8.6.12

அவமானப்படும் ராஜபக்சேக்கள்!எவ்வளவுதான் அவமானப்பட்டாலும் இலங்கை அதிபர் ராஜபக்சே போன்றவர்கள் திருந்திட வாய்ப்பு இல்லவே இல்லை. இனவெறி பிடித்தவர்களுக்கு மனிதப் பண்பின் மெல்லிய இதழ்களின் வாசனை எங்கிருந்து தெரியப் போகிறது?

ஹிட்லரும், முசோலினியும் இடி அமீன்களும், மோடிகளும் மக்களால் வெறுக்கப்படத்தான் செய்தார்கள். அதற்காக வெட்கப்படவில்லையே! தங்களுக்குத் தலை குனிவு என்று நினைக்க வில்லையே!

அந்த வரிசையில் ராஜபக்சேக்கள் இடம் பிடித்துக் கொண்ட பிறகு, எங்கிருந்து கிளம்பப் போகிறது மான உணர்வு?

அமெரிக்கா சென்ற போதும் கடும் எதிர்ப்பு! இப்பொழுது லண்டன் சென்றபோதும் கடும் எதிர்ப்பு! எத்தனைத் தடவை இங்கிலாந்து வந்தாலும், அத்தனைத் தடவையும் எங்களின் எதிர்ப்புப் புயல் வெடித்துக் கிளம்பும் என்று அறிவித்து விட்டனர் - இங்கிலாந்தில் வாழும் ஈழத் தமிழர்கள் (பாதிக்கப்பட்டவர்கள் அவர்கள்தானே!)

இந்தியாவில் உள்ள பார்ப்பனர்களும், பார்ப்பன ஊடகங்களும் என்னதான் தூக்கிப் பிடித்தாலும் அவமானப்பட்டதுதான் மிச்சம்.

ஏதோ தமிழ் நாட்டில் உள்ள தமிழர்கள்தான், தமிழின அமைப்புகள்தான் ஈழத் தமிழர்களின் பிரச்சினையில் ஆவேசக் குரல் கொடுக்கின்றன என்று சொல்ல முடியாது.

சர்வதேச மனித உரிமை அமைப்பு (Amnesty International) ஈழத்தில் நடத்தப்பட்ட இனப்படுகொலை பற்றி விரிவான அறிக்கையை அளித்து உலக அரங்கில் சிங்களவர்களின் - சிங்கள ஆட்சியா ளர்களின் கோர முகத்தை அம்பலப்படுத்திக் காட்டி விட்டது.

போதும் போதாதற்கு லண்டனின் நான்காவது தொலைக்காட்சி அலைவரிசை சிங்கள அரசின் மிகக் கொடூரமான முகத்தைப் படம் பிடித்துக் காட்டி விட்டது!

அடால்ப் ஹிட்லர் ஒரு முறை சொன்னான்: இயற்கை அன்னை ஆரியனுக்குத்தான் அத்துணை வளங்களையும், கொடுத்திருக்கிறாள். அவ்வளவு மகத்தானவன்தான் இந்த ஆரியன்! எப்படி இந்த நிலையை ஆரியன் அடைகிறான்? அது மற்றவர் களின் உரிமைகளைப் பறிப்பதிலிருந்து பெறு கிறான் என்று சொன்னான்.

ஹிட்லரின் இந்த வாக்குதான் - ராஜபக்சேவைப் பொறுத்தவரை தேவ வாக்கு! அப்படியே கண் மூடித்தனமாகப் பின்பற்றி வருவது யாருக்குத்தான் தெரியாது?

முன்னாள் இலங்கைப் பிரதமரும் - இலங்கை அய்க்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரனில்விக்ரமசிங்கே ஒரு முறை மிகச் சரியாகவே சொன்னார்.

ராஜபக்சேவின் குடும்ப நிர்வாகமும், அதன் அரசாங்கமும் யுத்தத்தை விற்று, அரசியல் பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கின்றன. நாட்டின் பிரச்சினையைத் தீர்க்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு இருக்கிறது. எனினும் அந்தப் பொறுப்பை நிறைவேற்ற முடியாத அரசாங்கம் யுத்தத்தை முன்னெடுக்கின்றது. அதனால் சகல தரப்புகளிலும் தலைக்குனிவை ஏற்படுத்தியிருக்கிறது. அத்துடன் அரசாங்கத்தின் யுத்தவாதக் கொள்கை தோல்வியை அடைந்திருப்பதுடன், சர்வதேச பகைமையையும் சம்பாதித்துக் கொண் டிருக்கிறது என்பதே உண்மை என்று ரணில் குறிப் பிட்டது இப்பொழுது நடந்து கொண்டுதானி ருக்கிறது.

ஜெனீவா தீர்மானத்தின்படி உண்மை நிலை கண்டறியப்பட்டு குற்றக் கூண்டில் ராஜபக்சே நிறுத்தப்பட்டு, உரிய தண்டனையை வாங்கிக் கொடுத்தால்தான், ஈழத்திலும் அடுத்து ஆட்சிக்கு வருவோர் யாரானாலும் ஓர் அச்சம் ஏற்பட முடியும். உலக நாடுகளில் பல்வேறு உருவங்களில் நடமாடும் ராஜபக்சேக்களின் கொடுங்கோலுக்கும் அப்பொழுது தான் ஒரு நிரந்தரமான முடிவும் ஏற்படும்.

இந்த நிலை ராஜபக்சேகளுக்கு ஏற்படும்பொழுது இந்தியா போன்ற நாடுகளும் தம் தவறுகளைத் திருத்திக் கொள்ள வாய்ப்பு இருக்கும் என்று நம்புவோமாக!

---------------- "விடுதலை” தலையங்கம் 8-6-2012

1 comments:

ராஜ நடராஜன் said...

தலையங்கம் உண்மைகளை பிரதிபலித்தாலும் கூட மக்கள் சார்ந்த புரட்சிகள் ஏற்படாதவரை மாற்றங்கள் உருவாவது மிகவும் கடினமே.

தற்போதைய நிலையில் கடல் வணிக நலன்கள் சார்ந்த ஒரு முக்கிய நிலமாகவும் உலகநாடுகளின் ஆளுமைக்குட்படுத்தப்பட்டதாகவும் இலங்கை விளங்குகிறது.சீனாவிடம் கடன் வாங்கிக் கொண்டு சீன சார்பு பொருளாதாரத்தை முன்னிறுத்த முயன்ற ராஜபக்ச சிந்தனைக்கு இப்பொழுது இந்தியாவும்,அமெரிக்காவும் இணைந்து முட்டுக்கட்டைப் போட்டு தங்கள் பக்கம் இலங்கையின் வெளியுறவுக்கொள்கைகள் இருக்க வேண்டும் என்ற நிர்பந்தத்தை உருவாக்கியுள்ளது.இதற்கிடையில் இலங்கை மீதான மேற்கத்திய அழுத்தங்களை எதிர்கொள்ளும் முகமாக இலங்கை ராணுவ தலைமையதிகாரி ஜெயசூர்யா தற்காப்புக்கொள்கையாக சீனாவின் ராணுவ அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தைகள் நிகழ்த்தி வந்துள்ளார்.ராஜபக்சேக்கள் மிக லாவகமாக இது வரை காய்நகர்த்திக்கொண்டு வந்துள்ளார்கள்.இனி வரும் நாட்களில் இந்தியாவுடனான இலங்கை நகர்வுகள் எப்படியிருக்கின்றன என்பதன் மூலம் ராஜபக்சேக்களின் எதிர்காலம் குறித்து ஓரளவு கணிக்க முடியும்.

நமது கவலையெல்லாம் உலக அரசியல் நகர்வுகளில் மக்களின் நலங்கள் பின் தள்ளப்படுகின்றதே என்பதுதான்.