Search This Blog

23.6.12

பெரியார் அவர்கள் பிரபாகரனுக்குச் சேர்த்துத் தலைவரும், வழிகாட்டியுமாவார்ஆனந்தவிகடன் லோகம்!

இந்த வார ஆனந்தவிகடனை (20.6.2012) ஒரு புரட்டு புரட்டியபோது சில பேட்டிகள் தென்பட்டன.

அந்தப் பேட்டிகளுக்குள் சில தகவல்கள்:

(1) சினிமா இயக்குநர் ஒருவரின் பேட்டி

பெரியார் பெயரை உச்சரித்து, பெரியாரின் பேரன் என்று அடையாளப்படுத்திக் கொண்டு, சற்று விளம்பரம் கிடைத்தவுடன் பெரியாரை விமர்சித்து, அதன் மூலம் பார்ப்பனர்களின் சடகோபத்துக்கு ஆளாவது ஒன்றும் அதிசயமல்ல. தமிழர்கள் போல மலிவான பொருள்கள் உலகத்தில் எங்கும் கிடைக்கப் போவதில்லை.

இன்று எனக்குள்ள குறையெல்லாம் தமிழர் சமுதாயத்தில் விபீஷணப் பரம்பரை வளர்ந்து வருவது தான் என்றார் தந்தை பெரியார். (விடுதலை 17-.9.-1969)

இனப்பாதுகாவலரான தந்தை பெரியார் அதையும் கடந்து உலக மக்களுக்கே வழிகாட்டும் சுயமரியாதை - பகுத்தறிவு - சமதர்ம ஒளியை உலகுக்குக் கொடுப்பவர்.

சுயசிந்தனையாளர்! - அவருக்கு வழிகாட்டி என்று யாரும் கிடையாது. தன் கருத்தை திருவள்ளுவரும் சொல்லி இருக்கிறார் என்று சொல்லக் கூடியவரே தவிர, -திருவள்ளுவர் சொன்னதைத் தான் நானும் சொல்லுகிறேன் என்று சொல்லாதவர்! காலத்தைக் கடந்து கருத்துக்களைக் கருத்தரிக்கச் செய்யக் கூடிய ஞானத்தந்தை அவர். அறிவாயுதத்தை எடுத்த களப்போராளி, தளகர்த்தர்! வாழ்நாள் முழுவதும் அந்தக்களத்திலேயே நின்றவர் - வெற்றிகளையும் குவித்தவர்.

வாழ்ந்த காலத்திலும் சரி, மறைந்த காலத்திலும் சரி அவரைத் தவிர்த்துவிட்டு சமூகமோ, அரசியலோ, சிந்தனையோ பயணித்தது கிடையாது.

மண்டைச் சுரப்பை உலகு தொழும் என்று புரட்சிக் கவிஞர் கூறியதும் கவனத்தில் கொள்ளத் தக்கதாகும்.

ஒன்றை தமிழர்களாக இருந்தாலும், வேறு யாராக இருந்தாலும் உணர்தல் தேவை.

தந்தை பெரியார் அவர்களையும் மாவீரன் பிரபாகரனையும் ஒப்பிடுதல் முதல் குற்றமாகும். தந்தை பெரியார் அவர்கள் பிரபாகரனுக்குச் சேர்த்துத் தலைவரும், வழிகாட்டியுமாவார். பிரபாகரன் படத்தைத்தான் மேடையில் வைப்போம் - பெரியார் படத்தை வைக்க மாட்டோம் என்று பேசுவது எல்லாம் அசல் சிறுபிள்ளைத்தனமே!

ஒரு மேடையிலே பெரியார் படம் வைக்கப் படாததாலேயே பெரியாரின் ஆளுமை சுருங்கிப் போய்விடுமோ!

(உலகப் பல்கலைக்கழகங்களில் பெரியார் உலா வருவது இந்தக் குப்பை களுக்குத் தெரியுமா?)

இப்படியெல்லாம் பேசுவது - எழுது வது பெரியாரையும் புரிந்து கொள்ளாத - தம்பி பிரபாகரனையும் தெரிந்து கொள்ளாதபேதைமை என்பதைத் தவிர வேறு என்ன இருக்கிறது?

என்ன முரண்பாடு என்றால் ஆனந்தவிகடன் பேட்டியில், தம்மையும் அறியாமல் வேறு ஓர் இடத்தில் எங்களின் பெருமைக்குரிய வழி காட்டி பெரியார்தான் என்று ஒப்புக் கொண்டு விட்டு பிறகு, -வழிகாட்டியின் படத்தை வைக்கப்போவதில்லை என்பது -குழப்பப் போதையில் அவர்கள் சிக்கிக் கொண்டு தவிக்கிறார்கள் என்பதை அறிய முடிகிறது.

பித்துக்குளித்தனமான ஆவணம் ஒன்றை வெளியிட்டுவிட்டு, ஆப்பதனை அசைத்துவிட்ட குரங்கின் நிலைக்கு ஆளாகி, நாலாதிசைகளிலும் சவுக்கடி கிடைத்தவுடன் நாக்குத் தொங்கி, விழி மேலேறி, கெண்டைக்கால் சதையும் பிடித்துக் கொள்ள, பெரியாரே துணை! என்று சரணம் பாடும் நிலைக்குத் தள்ளப்பட்டது நல்ல நகைச்சுவையே!

(ஆவணத்தை வெளியிட்டவரே கைவிட்டு விட்டாரே!)

அவர்களின் கண்ணோட்டத்தில் பார்ப்பான் என்றால் ஆய்வாளன் (அவர்களின் ஆவணத்தில் இவ்வாறுதான் குறிப்பிடப்பட்டுள்ளது.)

அந்த ஆய்வாளர்கள் சொல் பேச்சைக் கேட்டு 2012ஆம் ஆண்டு அனுமார்களாகவும், விபீஷணர்களாகவும், சுக்ரீவன்களாகவும் வாலையாட்டிப் பிழைத்துப் போகட்டும்! (தந்தை பெரியாரையும், திராவிடர் என்ற பார்ப்பனர் எதிர்ப்பு உணர்வையும் பெறாத எந்த அமைப்பும், தனி மனிதனும் இங்குக் கடையைக் கட்டிக் கொள்ள வேண்டியதுதான்).

(2) சரத் ஃபொன்சேகா

ஈழத் தமிழர்களைக் கொன்று குவித்ததில் வெறி பிடித்து அநாகரிகமாக செயல்பட்ட அன்றைய இலங்கை ராணுவத்து தளபதி பொன்சேகா ஆனந்தவிகடனுக்கு அளித்த பேட்டியில் பல தகவல்களைத் தெரிவிக்கிறார். அவை ஒருபுறமிருக்கட்டும்.

அடுத்து ஈழத்தில் என்ன நடக்கும் என்று அவர் சொன்னது மிக முக்கியமானதே.

இங்கு சுதந்திரம் இல்லை. ஜனநாயகம் இல்லை. யாருக்கும் எந்த பாதுகாப்பும் இல்லை. உங்களைச் சர்வ நேரமும் யாரோ கண்காணித்துக் கொண்டும் வேவு பார்த்துக் கொண்டும் உங்கள் உரையாடல்களை ஒட்டுக் கேட்டுக் கொண்டும் இருந்தால் நீங்கள் எப்படி உணர்வீர்கள்? நாங்கள் அப்படித்தான் இருக்கிறோம்.

ஊடகங்கள் முழுமையாக முடக்கி வைக்கப்பட்டு இருக்கின்றன. அரசு ஊடகங்கள் சொல்வதுதான் செய்தி. அரசுக்கு எதிராக யோசிப்பது கூடக் குற்றம் என்று நினைக்கிறது அரசு. தான் ஆட்சியில் இருப்பதற்காக எதையும் செய்யத் தயாராக இருக்கிறார் ராஜபக்ஷே.

எங்கள் நாட்டில் இப்போது சர்வ சுதந்திரத்துடனும் சகல வசதிகளுடனும் இருப்பது ஒரே ஒரு குடும்பம்தான். அது. . ராஜபக்ஷேவின் குடும்பம். நாட்டைச் சூறையாடிக் கொண்டிருக்கிறார்கள் அவர்கள். எங்கு பார்த்தாலும் ஊழல், ஊழல், ஊழல் . . . மக்கள் வெறுத்துப் போய் இருக்கின்றனர். குறிப்பாக, இளைஞர்கள் கொந்தளிப்பில் இருக்கின்றனர்.

ராஜபக்ஷேவின் அடக்குமுறையும் ஊழலும் மிக்க இந்தக் காட்டாட்சி தொடர்ந்தால், விடுதலைப் புலிகள் மட்டுமா? இன்னும் ஆயிரமாயிரம் பேர் வருவார்கள். வடக்கில் இல்லை; தெற் கிலேயே அரசுக்கு எதிரான இளைஞர் களின் புரட்சி வெடித்தாலும் ஆச்சரியப் பட ஒன்றும் இல்லை என்கிறார் பொன் சேகர். எங்கெல்லாம் அடக்கு முறைகள் திமிர் முறித்துக் கிளம்புகின்றனவோ, அங்கெல்லாம் புரட்சி வெடிக்கும் என்பது மனிதவியல் பாலபாடமாகும்.

விழுப்புரம் டெசோ (ஆகஸ்டு5) மாநாடு அழைப்புக் கொடுக்கும் -காத்திருங்கள்!

(3) சு.சாமி. பராக்!

கேள்வி: உண்மையிலேயே உங்களுக்குத் தமிழ் சுத்தமாகப் பேசவராதா? இல்லே, இதை ஒரு சாக்காக வெச்சு அவ, இவ, அவன், இவன்னு - கலாட்டா பண்றீங்களா?

சு.சாமி பதில்: இது என் ஸ்டைல். திராவிட இயக்கத்துக்காரங்க போல அடுக்கு மொழியில் மக்களுக்குப் புரியாத தமிழில் பேசி என்ன பிரயோஜனம்? அதனால்தான் நான் எப்பவும் போல பேசுகிறேன். அதுவும் தவிர, சமஸ்கிருத வார்த்தைகள் எல்லா மொழியிலயும் பரவிக்கிடக்கு. அதைப் பயன்படுத்திப் பேசினா, தமிழ், கர்நாடகம், தெலுங்கு, இந் தினு எல்லா மொழிக்காரங்களும் புரிஞ்சுக்குவா. சமஸ்கிருதத்தை மக்கள் மத்தியில் பிரபலமாக்கனும். நான் இப்படிப் பேச அதுவும் ஒரு காரணம் என்கிறார் சு.சாமி. ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண் வைக்கும் பார்ப்பனர்களை இங்கே தெரிந்து கொள்க!
இப்படித் தமிழ்ப் பேசும் இந்த வகையறாக்கள் எல்லாம் தமிழ் தேசியவாதிகள் கண்ணோட்டத்தில் பச்சைத் தமிழர்கள் தாம்.
ஏன்னா, நன்னா; தமிழ்ப் பேசுறாளே!

அவ, இவ என்று பேசுவதும் வேண்டு மென்றே!

சமஸ்கிருதத்தை பரப்புவதற்காகவே இந்த வேடம் என்பது கோணிப்பைக்குள் ளிருந்து பூனைக்குட்டி வெளியில் வந்து விட்டதே!

இந்தப் பார்ப்பனர் மட்டுமல்ல; எல்லாப் பார்ப்பனர்களுமே இந்த உணர்வு படைத்தவர்கள்தான். கோல்வாக்கரிலிருந்து லோக்கல் வாக்கர்கள் வரை இதே புத்தியைக் கொண்டவர்கள்தான்.

என் கைக்கு அதிகாரம் வந்தால், நான் சர்வாதிகாரியானால் இந்தியர்களை இந்தியுடன் சமஸ்கிருதத்தையும் கட்டாய பாடமாகப் படிக்கச் செய்வேன் என்று அடித்துக் கூறியவர்தானே சத்தியமூர்த்தி அய்யர்வாள்! (மெயில் 25.-7.-1939)

சமஸ்கிருதம் நாட்டு மொழியாக ஆக்கப்பட்டால் மொழிப் பிரச்சினையே இருக்காது. இதைத்தான் 1957 முதல் பிரச்சாரம் செய்து வந்திருக்கிறேன் என்று சொன்னவர்தான் வி.வி. கிரி என்ற பார்ப்பனர்.

(சிலப்பதிகார சமஸ்கிருத மொழி பெயர்ப்புப் புத்தக வெளியீட்டு விழாவில் ஆற்றிய உரையிலிருந்து -_ 2-.1-.1963)

(4) சி. ராஜகோபாலாச்சாரியார்

நமது முன்னோர்கள் நமக்கு வைத்து விட்டுப் போன பழைய பொருள்களைப் புறக்கணிப்பது தவறாகும். நமக்கிருக்கும் பெருமைகள் சமஸ்கிருதத்துடன் இணைக் கப்பட்டவை. பள்ளிக் கூடங்களிலிருந்தும், கல்லூரிகளில் இருந்தும் வெளியே வரும் மாணவர்களுக்கு நமது முன்னோர்கள் நமக்கு வைத்துவிட்டுப் போன பெருமைகளின் சாவி போன்ற சமஸ் கிருதம் தெரியாவிட்டால் மகா பெரிய விபத்தாகும்.

அது பணமிருக்கும் பெட்டியின் சாவியைத் தொலைத்துவிட்டு சாப்பாட்டுக்கு பிச்சை எடுப்பதற்கு ஒப்பாகும். ஒரு பள்ளிப் படிப்பில் சமஸ்கிருதம் சார்ந்திருக்க வேண்டியது மிகவும் அவசியம். இந்துவாய் இருந்தாலும், முஸ்லிமாய் இருந்தாலும், நமது பழைய பெருமைகளுக்கு திறவுகோல் சமஸ்கிருதம்தான்.

புத்தர்கள், இந்துக்கள், இந்தியக் கிறிஸ்துவர்கள் முதலியோர்களுக்கு சமஸ்கிருதத்தைத் தவிர வேறு பெருமைகள் கிடையாது. இப்போதைய நவீனக் கல்விகளுடன், சமஸ்கிருத்ததையும் சேர்த்துக் கற்றுக் கொண்டால் இன்னுமொரு தலை முறைக்குள் இந்து மதம் இப்போது இருப்பது போல் இராது. சமஸ்கிருதம் ரொம்ப அழகான பாஷை. அதை ஈஸ்வர பாஷை என்று கூடச் சொல்லலாம்.

----------------(சென்னை லயோலா கல்லூரி சமஸ்கிருத சங்கத்தின் துவக்கவிழாவில் 24-.7.-1937 அன்று பிரதம அமைச்சர் சி.ராஜகோபாலாச்சாரியார் பேசியது.)

சங்கராச்சாரியார், சர்.சி.பி. ராமசாமி அய்யர், ஆர்.வெங்கட்ராமன் என்று சமஸ்கிருத்தைச் சப்புக் கொட்டி உச்சி மோந்து உச்சரிக்கும் பார்ப்பனர்களின் பட்டியல் மிக நீளமாகவே உண்டு.

தமிழ் ஆய்வாளரான ந.சி.கந்தையா பிள்ளை அவர்கள் இந்தப் பார்ப்பனர்களைப் பற்றி வெகு நேர்த்தியாகவே படம் பிடித்துள்ளார்.

தமிழ்நாட்டில் பார்ப்பான் பிறந்த நாள் முதல் தமிழையே வழங்குகின்றார்கள். ஆயினும் அவர்கள் தாம் தமிழர் அல்ல என்றும் தமக்குத் தாய்மொழி ஆரியம் என்றும் உணர்கிறார்கள். ஆகவே அவர்களிடத்தில் தமிழனிடத்தில் எழுதுவது போன்ற தமிழ் மொழிப் பற்றை நாம் காணுதல் முடியாது. இவ்வுணர்ச்சி குன்றிய கூட்டத்தினரே இந்தி பிரச்சார சபைகளையும் வடமொழியைத் தமிழோடு கலந்து எழுதும் உரைநடைகளையும் தோற்று விக்கின்றனர்.

(நூல், தமிழ் வரலாறு)

சு.சாமி _ பார்ப்பனர்கள் எத்தகையவர்கள் என்பதற்கான எடுத்துக்காட்டு

இதைத் திராவிடச் சிந்தனையாளர்களால்தான் சுட்டிக் காட்ட முடியும். இடித்தும் காட்டவும் முடியும். தமிழ்த் தேசிய வாதிகள் எப்படி இருப்பார்கள் என்பதற்கு ம.பொ.சி. ஒருவர் போதாதா?

பெரியாரை விமர்சிக்கக் கூடாதா?

ஏன் தாராளமாக விமர்சிக்கலாமே! ஏன், அவர்தானே பகுத்தறிவைப் புகட்டினார். தாராளமாகவே விமர்சிக்கலாம்.

என்ன...?

அவர்தான் பார்ப்பனர் எதிர்ப்பை முன்னிறுத்தினார். அவர்தான் சூத்திர இழிவை ஒழிக்கப் பாடுபட்டார். அவர்தான் ஒடுக்கப்பட்ட மக்கள் பொது இடங்களில் புழங்கும் உரிமைக்காக வைக்கம் வரை சென்று போராடி சிறை சென்றார்.

அவர்தான் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும், பெண்களுக்கும் கல்வி உரிமை வேலை வாய்ப்பு உரிமைக்காக சமூக நீதிக் கொடியை உயர்த்தி பிடித்தார். இந்திய அரசமைப்புச் சட்டத்தை முதன் முதலாகத் திருத்தவும் செய்தார்.

அவர்தான் பெண்ணுரிமைப் பேரிகை முழங்கினார். அவர்தான் இந்தியை எதிர்த்து மொழி மானம் காத்தார். தமிழ் எழுத்துச் சீர் திருத்தத்தையும் கொண்டு வந்தார்.

அவர்தான் மூட நம்பிக்கை இருளில் மூழ்கிக் கிடந்த மக் களுக்குப் பகுத்தறிவு வெளிச்சத்தைக் காட் னார். தமிழ், தமிழன், தமிழ்நாடு உரிமை களுக்காகக் கடைசி மூச்சு அடங்கும் வரை போர்க்களத்தில் நின்றார். இவ்வளவும் தமிழ்நாட் டுக்கோ, தமிழ் மக்களுக்கோ, பொது மக்களுக்கோ தேவையில்லை என்றும், இவை யெல்லாம் ராஜதுரோகம் என்றும் உங்களின் நுண்மாண் நுழை புல அறிவு கூறுமானால் தாராளமாகப் பெரியாரை விமர்சியுங்கள் -_ விமர்சித்துக் கொண்டே இருங்கள்.

உங்கள் காலத்தையும் உழைப்பையும் இந்தப் பகுதிகளுக்கே செலவிடுங்கள். பிறப்பில் உயர்வு - தாழ்வு கற்பிக்கும் பார்ப்பன ஆதிக்கத்தைப்பற்றி வாய் திறக்காதீர்கள். விமர்சிக்க வேண்டாம்! நீங்கள்தான் பெரியாரை விமர்சிக்கக் கிளம்பி விட்டீர்களே!

மாநில உரிமைகளைக் கொத்துத் கொத்தாகத் தூக்கிச் செல்லும் டில்லி கழுகுகளைக் கண்டு கொள்ளாதீர்கள். (தேவைப்பட்டால் கருடதரிசனம் செய்யுங்கள்).

நுழைவுத் தேர்வை ஒழித்த தமிழ்நாட்டில் நுழைவுத் தேர்வை நுழைய விடும் ஒட்டகங்களுக்குத் தீவனம் தேடும் வேலையில் ஈடு படுங்கள் (அதுதான் இந்திய இறையாண்மைக்காக ஊசி முனையில் தவமிருக்க முடிவு கட்டி விட்டீர்களே!)

பார்ப்பானை -ஆராய்ச்சியாளன் - இளைஞன் என்று ரோமம் பிளந்து ஆய்வு செய்து கண்டு பிடித்து விட்டீர்களே! திராவிடன் தான் ஆரியன் என்று அடேயப்பா! ஏழேழுலோகம் சென்று கண்டு பிடித்து கனைத்துக் கொண்டு திரிகிறீர்களே!

அதனால் நன்றாக விமர்சனம் செய்யுங்கள். பெரியாரை விமர்சனம் செய்யுங்கள். அப்பொழுதுதானே ஆரிய ஏடுகளின் விளம்பர பாதுகா பட்டா பிஷேகம் சாங்கோ பாங்கமாக நடக் கும். சூத்திரப் பட்டமும் நிலைக்கும்.

தமிழனுக்குக் கொஞ்சம் விளம் பரம் கிடைத்தால் பார்ப்பான் கால் எங்கு இருக்கிறது என்று தேடிச் சென்று நக்கிக் கிடப்பான் என்று தந்தை பெரியார் சும்மாவா சொன்னார்?

--------------- மின்சாரம் அவர்கள் 26-6-2012 “விடுதலைஞாயிறுமலரில் எழுதிய கட்டுரை


9 comments:

தமிழ் ஓவியா said...

திராவிடர் கழகமும், திமுகவும் இரட்டைக் குழல் துப்பாக்கி

இணைந்து நின்று ஈழத் தமிழர்களுக்கு விடிவு காலத்தை ஏற்படுத்துவோம்

திமுக தலைவர் கலைஞர் சூளுரை

சென்னை, ஜூன் 23- இரட்டைக் குழல் துப் பாக்கியாக திராவிடர் கழகமும், தி.மு.க.வும் இருக்கும். நாம் ஒன்று பட்டு நின்று ஈழத் தமிழர்களின் வாழ்வில் விடியலை ஏற்படுத்து வோம் என்றார் திமுக தலைவர் கலைஞர் அவர்கள்.
சென்னை புரசை வாக்கம் தானா தெரு வில் நேற்று (22.6.2012) மாலை நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றுகையில் அவர் குறிப்பிட்டதாவது:

நாம் அன்றைக்கு இலங்கையிலே உள்ள தமிழர் களைக் காப் பாற்ற இரண்டு முறை ஆட்சியை இழந்திருக் கிறோம். திராவிட முன் னேற்றக் கழக ஆட்சியை தமிழ்நாட்டில் இரண்டு முறை மத்திய அரசு கலைத்தது. ஒரு முறை அமைதிப்படை, இலங் கையிலிருந்த தமிழர் களையெல்லாம் வேட் டையாடி, தமிழ்நாட் டிற்கு திரும்பி வந்த போது, அவர்களை வரவேற்க முதலமைச் சர் என்ற முறையில் நான் செல்ல வேண்டும், என்று மத்திய அரசு சொன்னபோது, நான் முடியாது, என்னு டைய தமிழர்களையெல்லாம் வேட்டையாடி வரு கின்ற அந்தப் படையை நான் வரவேற்க மாட் டேன் என்று அன்றைக் குச் சொன்ன கருணாநிதி தான் இன்றைக்கும் சொல்கிறேன்.

அமைதிப்படையும், கழகமும்

அமைதிப்படை அன்றைக்கு எங்களால் அங்கீகரிக்கப்படவில்லை. காரணம், அது அமளிப் படையாக இருந்த காரணத்தால். அப்படிப் பட்ட சூழ்நிலையில் திராவிட முன்னேற்றக் கழகம் அன்றைக்கு நடைபெற்ற வித்தியாச மான சில போர்களால், வித்தியாசம் போர்க ளிலே மாத்திரமல்ல - போரை நடத்தியவர் களுடைய மனதிலே ஏற் பட்ட காரணத்தால் - அதிலே பெரும் வெற் றியைப் பெற முடிய வில்லை. அதிலே திராவிட முன்னேற்றக் கழகத் திற்கு எவ்வளவு பெரிய சோர்வு, எவ்வளவு சோ கம் என்பதை நீங்க ளெல்லாம் அறிவீர்கள். அதற்குப் பிறகு திரா விட முன்னேற்றக் கழ கம் வீழ்ந்து விட்ட இலங்கைத் தமிழர் களை, ஈழத் தமிழர் களை கைத்தாங்கலாக வாவது எழுப்பி நிற்க வைப்போம். அவர் களுக்கு தண்ணீர் தெளித்தாவது அவர் களுடைய மூச்சை வெளியே வரவைப் போம் என்ற அந்த எண்ணத்தோடுதான் டெசோ ஏற்கெனவே நானும், நண்பர் நெடு மாறனும், நம்முடைய பேராசிரியரும், தமிழர் தலைவர் வீரமணியும், வைகோவும், இவர் களெல்லாம் சேர்ந்து அன்றைக்கு உருவாக்கிய டெசோ - அதை இப் பொழுது மீண்டும் உரு வாக்குகிறோம். உருவாக்கி; அதனுடைய மாநாடு விழுப்புரத்திலே தம்பி பொன்முடியினுடைய நிர்வாகத்தில் நடை பெறுகின்ற மாநாட்டில் அது தொடங்கப்பட விருக்கிறது.

தமிழ் ஓவியா said...

ஆகஸ்டு 5 ஆம் தேதி அந்தப் பணி ஒரு பக்கம்; இந்தப் பணி இன் னொரு பக்கம்; இத் தனை பணிகளையும் நாம், திறமையாகச் செய்து முடிக்க வேண்டும். அப் படி முடிப்பதற்கு எங் களை மாத்திரம் நாங்கள் நம்பவில்லை. உங்களை யெல்லாம் நம்பித்தான் இந்தப் பணிகளை ஏற்றுக் கொண் டிருக்கிறோம். இந்தப் பணிகளிலே நாம் வெற்றி பெறுவோமேயானால், திராவிட இயக்கத்தினுடைய நோக்கம் நிறை வேறும். திராவிட இயக்கத்தினுடைய நோக்கம் நிறைவேறுமென்றால், என்ன நோக்கம்? நமக்கென்று ஒரு கலாச்சாரம் உண்டு. நமக்கென்று தனிக் கலை உண்டு. நமக்கென்று தனிப் பண்பாடு உண்டு. இவைகளை யெல்லாம் அழித்து ஒழிப்பதற்கு இங்கே வந்து புகுந்த ஒரு கூட்டம், நம்மை மனிதர்களாக அல்ல, மனிதனை மனிதன் தொடக் கூடாது என்ற அளவிற்கு மகாபாரதக் கதை களையெல்லாம் சொல்லி மிரட்டி வைத்திருந்த அந்த மாய்மாலத்தை வேரறுக்க, பெரியாரால், அண்ணா அவர்களால், சுயமரியாதை இயக்கத் தால் தோற்றுவிக்கப்பட்ட அந்த உணர்வை; என்றைக்கும் மாறாமல் நாம் பாதுகாக்க வேண்டும். அப்படிப் பாதுகாக்கிற நிலைதான்; முடியும் என்ற நம்பிக்கையின் அடையாளமே வட சென்னையிலே கூடியிருக்கின்ற இந்தக் கூட்டம் என்பது எனக்குத் தெரியும். (பலத்த கை தட்டல்).

தி.மு.கழகமும் திராவிடர் கழகமும்
இரட்டைக் குழல் துப்பாக்கி

இந்த வடசென்னையிலே திரா விட முன்னேற்றக் கழகம் கொட்டும் மழையில் பேரறிஞர் அண்ணா அவர் களால் தொடங்கி வைக்கப்பட்ட போது அண்ணா சொன்னார், நாம் திராவிடர் கழகத்திலே இருந்து பிரிந்து திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தொடங்குகிறோம், இரட் டைக் குழல் துப்பாக்கியாகிறோம் என்று சென்னார்.

அந்த இரட்டைக் குழல் துப்பாக்கி, இன்றைக்கும் நம்முடைய கைகளிலே இருக்கிறது. துப்பாக்கி என்றதும், இதோ வந்து விட்டார், கருணாநிதி வன்முறைக்கு என்று யாரும் எண்ணத் தேவை யில்லை. இவைகளெல்லாம் இலக் கியப் பேச்சுக்கள், கலை வழியிலே சொல்லப்படுகின்ற கருத்துக்கள். இதைப் புரிந்துக்கொண்டவர்கள் புரிந்து கொள்வார்கள். எனவே இந்த இரட்டைக் குழல் துப்பாக்கி திராவிட முன்னேற்றக் கழகம், திராவிடர் கழகம், இது இன்னும் பல போர்க் கருவிகளை தன்னகத்தே கொண்டு இலங்கை யிலே இருக்கின்ற தமிழர்களுக்கு ஒரு விடிவு காலத்தை ஏற்படுத்த வேண் டும். இன்றைக்குப் பார்த்தால் இலங் கையிலே உள்ள தமிழர்கள் எப்படி யெல்லாம் வேட்டையாடப்படு கிறார்கள். தமிழன் யாரையும் தாழ்த்த மாட்டான். யாருக்கும் தாழவும் மாட்டான் என்ற அந்த உணர்வை உருவாக்கி (பலத்த கை தட்டல்) அவன் இலங்கையிலே இருந்தாலும், யாழ்ப் பாணத்திலே இருந்தாலும், அவன் ஈழத் தமிழனாக இருந் தாலும், இங்குள்ள தமிழனாக இருந்தாலும், அந்த தமிழன் யாருக்கும் தாழான், யாரை யும் தாழ்த்த மாட்டான் என்ற அந்த உணர்வோடு பாடு படுவோம். அதை இந்தக் கூட்டத்திலே ஒரு சபதமாக ஏற்றுக்கொள்வோம் என்று கூறி விடைபெறுகிறேன். இவ்வாறு கலைஞர்அவர்கள் உரையாற்றினார்.


டெசோ மாநாட்டுக்கு அழைப்பு


ஈழத் தமிழர்கள் எப்படியெல்லாம் துன்புறுத்தப்படுகிறார்கள் என்ற செய்திகள் அடிக்கடி அடுக்கடுக்காக ஏடுகளில் வருகின்றன. இவைகளை நாம் உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும். அந்தப் பணியை நாம் மேற்கொள்ள வேண்டும். அதற்கு நடைபெறுகின்ற டெசோ மாநாடு பயன்படும்.

மாநாட்டிற்கு வெளிநாட்டில் இருந்து கூட, அறிஞர்கள் வருகிறார்கள். பல அரசியல்வாதிகள் வருவார்கள். அவர்களையெல்லாம் நான் வருக வருக என்று வரவேற்கிறேன். அந்த மாநாட்டை மிகச் சிறப்பாக, எழுச்சியோடு நடத்த நீங்களெல் லாம் ஒன்று திரள வேண்டும் என்று உங்களை யெல்லாம் கேட்டுக் கொள்கிறேன். - கலைஞர் 23-6-2012

தமிழ் ஓவியா said...

தேவை மறுபரிசீலனை!


தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) யில் முக்கிய இடம் பெற்றுள்ள அய்க்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்த - பீகார் முதல் அமைச்சர் நிதிஷ்குமார் அவர்கள் ஒரு கருத்தினைக் கூறியுள்ளார்.

இந்தியாவிற்குப் பிரதமராக வரக் கூடியவர் மதச் சார்பற்ற தன்மை என்னும் கொள்கையை ஏற்றுக் கொண்டவராக இருக்க வேண்டும் என்ற அழுத்தமான கருத்து அது!

அவர் யாரையும், பெயரைக் குறிப்பிட்டுச் சொல்லவில்லையென்றாலும், விவரம் தெரிந்த ஒவ்வொருவரும் குஜராத் முதல் அமைச்சர் நரேந்திரமோடியை மனதிற் கொண்டுதான் இவ்வாறு அவர் கூறினார் என்பதை எளிதாகப் புரிந்து கொண்டு விட்டார்கள்.

இந்தக் குற்றச்சாற்றின் மரணப் பிடியிலிருந்து மோடி கண்டிப்பாகத் தப்பிக்கவே முடியாது. சமாதானம் சொல்ல அவர் முயன்றால், அது தலை சிறந்த கேலிக்கு உரியதாகவே கருதப்படும்.

குஜராத்தில் சிறுபான்மை மக்களான முஸ்லீம்களுக்கு எதிராக ஆட்சி அதி காரத்தைப் பயன்படுத்திக் கொண்டு, கொடூர மான தாக்குதலைத் தொடுத்து, ஆயிரக் கணக்கானவர்களைக் கொன்று குவித்ததை வரலாறு மன்னிக்காது.

பேக்கரி அடுப்பில் விறகுக் கட்டைகளைப் போல கட்டி துடிதுடிக்க ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இஸ்லாமியர்களை எரித்துக் குதி யாட்டம் போட்டதெல்லாம் சாதாரண மானதுதானா?

நிறை மாத கர்ப்பிணிப் பெண்களின் வயிற்றைக் கிழித்து அந்தக் கருவை வெளியில் இழுத்து நெருப்பில் போட்டுப் பொசுக்கிய பொல்லாத ஆட்சிக்குச் சொந்தக்காரர்தான் நரேந்திர மோடி.

மூன்று நாட்களைத் தாராளமாகத் தருகிறேன், அதற்குள் இஸ்லாமியர்களுக்கு எதிரான எந்த வன்முறையை மேற்கொண் டாலும் காவல்துறை கண்டு கொள்ளாது என்று கட்டளையிட்ட காட்டு விலங்காண்டி ஆட் சிக்குச் சொந்தக்காரர்தான் நர வேட்டை நரேந்திரமோடி! அன்றைக்குப் பிரதமராக இருந்த அடல் பிஹாரி வாஜ்பேயிகூட வெளிப்படையாக வெட்கத்தால் தாக்குண்டு கூறவில்லையா? எந்த முகத்தோடு நான் வெளிநாட்டுக்குச் செல்வேன்? என்ற வினாவை எழுப்பிட வில்லையா?
வீடுகளை இழந்து, வியாபார நிறுவனங் களைப் பறிகொடுத்து, முகாம்களில் முடங்கிக் கிடந்த சிறுபான்மை மக்களைக் கொச்சைப் படுத்திப் பேசிய குரூர மனம் படைத்தவர்தான் இந்த மோடி.

முகாம்களில் இருந்து கொண்டு முஸ்லிம்கள் மக்கள் பெருக்கத்திற்கான நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள் என்று சொல்லும் அளவுக்குத் தரம் கெட்டுப்போன ஒருவர்தான் இந்தியாவின் பிரதமராக வர வேண்டும் என்று வடிகட்டின முட்டாள்கூட விரும்பமாட்டான்; மனிதாபிமானம் என்ற ஈரப்பசை உள்ள எந்த மனிதனும் ஏற்கவே மாட்டான்.

இந்த நேரத்தில் மதச் சார்பின்மை கொள்கையில் நம்பிக்கையுள்ள அய்க்கிய ஜனதாதளம் கட்சி, பிஜேபி தலைமையில் உள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணியில் எப்படி அங்கம் வகிக்கலாம் என்ற கேள்வி நியாய மானது அல்லவா?

சரத்யாதவும், நிதீஷ்குமாரும் இதுபற்றி சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளனர். பிஜேபி என்பது பச்சையான இந்துத்துவாவை வலியுறுத்தும் கட்சியாகும்; இந்து ராஜ்ஜியத்தை, ராமராஜ்ஜியத்தை உருவாக்க தொடை தட்டி, தோள் தட்டி நிற்கும் ஒரு பாசிச அமைப்பு. அதனோடு உறவு வைத்துக் கொண்டு மதச் சார்பின்மை பற்றிப் பேசுவது நம்பத் தகுந்ததாக இல்லையே! அய்க்கிய ஜனதா தளம் மறுபரிசீலனை செய்யட்டும்! 23-6-2012

தமிழ் ஓவியா said...

பெண்ணினம் பெருமை பெறப் பிறந்தவரே, பெரியார்


- மா. பால் ராசேந்திரம்

தேன்சுரக்கப் பேசிஇந்து தேசத்தைத் தின்னுதற்கு
வான்சுரரை விட்டுவந்த பூசுரரும் வாழ்கின்றார் என்று புரட்சிக் கவிஞர் நொந்து பாடும் நிலையிலேயே இன்றும் ஆரியப் பார்ப்பனர் வாழ்ந்து வரு கின்றனர்.

பெண்கள் விவாகரத்துப் பெறும் திருமணச் சட்டத் திருத்தத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்ததை வரவேற்று, தந்தை பெரியார் வெகு காலமாய்ச் சொல்லி வந்த கருத்து என்றார் தமிழர் தலைவர் அவர்கள்.

இதனை மறுப்பதாக எண்ணி, ஒழுங்கா கல்யாணம் பண்ணி, ஒழுக்கமா குடும்பம் நடத்தறது பத்தி உங்க அய்யா பெரியார் ஒரு வார்த்தை கூடச் சொல்லவே இல்லையா? என்று 2012 மார்ச் 28 தினமலர் டவுட்டாகத் தன் அறியாமையை அகிலத்திற்கு வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.
அட மண்டூகங்களா!

புலனற்ற பேதையாய்ப் ;பெண்ணைச்செய் தால்அந்
நிலம்விளைந்த பைங்கூழ் நிலைமையும் அம்மட்டே

என்பார் எங்கள் இனக் கவிஞர். எங்கள் அய்யா பெரியார் இம்மண் ணுலகில் மாமனிதராய்ப் பிறந்ததால் தான் புண்ணாகிச் சீழ் வடிந்த நிலையில், ஆரியச் சாத்திரங்களால் அடிமைப் பட்டுக் கிடந்த பெண்ணினம் இன்று உலகோர் போற்றிடும் உன்னத நிலை யினை அடைந்துள்ளனர் என்பது உங் களுக்குத் தெரியுமா? இன்பம் நிறைந்த இல்லற வாழ்விற்கு இடையூறாய் நீங்கள் ஓட்டிய குறுக்குச்சால் சம்பிரதாயக் கட்டுகளையெல்லாம் சிதைத்தழித்திட எவர் வருவாரென ஏங்கிக் கிடந்த பெண்ணினத்தின் வாழ்விற்கு ஒளி விளக்காய்த் தோன்றியவர்தாம் எங்கள் அய்யா பெரியார். தெரியுமா உமக்கு இது? அதனால்தான் ஆத்திகர்களா யிருந்தும் நாத்திகர் தலைவராம் அய்யா அவர்களுக்குத் தம் உளம் உவந்து பெரியார் எனும் பட்டத்தினை வழங்கி நன்றி செலுத்தியது தமிழ்நாட்டு மகளிர்குலம்.

காதல்நிசம் இக்கனிமுத்தம் மிக்க உண்மை!
மாதுதோள் உம்தோள் மருவுவது மெய்யாகும்!

என்று இல்லறத்தை நல்லறமாக நடத்திட முனைப்புடன் செயல்படும் மகளிரை மநு (அ)நீதி என்ற அநீதியில் இழிவுபடுத்திய ஆரியரின் சந்ததியாம் இனமலரா அய்யா பெரியாரை அவமதிப்பது?

நிலையற்ற மனம் கொண்டவர் மகளிர். நிறை பிறழ்பவர். இவை பிறப்போடு வருவன. அழகும் வயதும் பாராது ஆடவரிடம் மனமிழப்பதும் அவரியல்பு. நன்கு புரந்தபோதும் கண வரது காவலை அவர்கள் விரும்புவ தில்லை. அவர் ஒழுக்கம் கேடுறாது ஆடவர் கவனமாய்க் காக்க வேண்டும்

- மனு நீதி - (ரிக்வேதம்)

ஒழுக்கங் கெட்டவர் மகளிர். அவ் வொழுக்கக் கேடும் பிறக்கும்போதே அவரோடு சேர்ந்து பிறந்ததென்று பெண்ணினத்தையே கேவலப்படுத்தி எழுதி வைத்த அசிங்கங்களா பெண் களின் உயரிய பெருமைக்காக உழைத் திட்ட தலைவராம் அய்யாவைப் பற்றி அய்யங்கொள்வது!

பெறுமவற்றுள் யாமறிவது இல்ல அறிவறிந்த மக்கட்பே(று) அல்ல பிற

என்பார் மக்கள் செல்வங்களின் பெருமை பற்றித் திருவள்ளுவர் பெரு மகனார். தினமலர் சொந்தங்களோ என்ன சொல்லி எழுதி வைத்துள்ளன? பார்ப்போம்.

பெண் குழந்தைகள் மட்டுமே பெறுகின்றவளைப் பதினோரு ஆண்டுகள் கழித்து விலக்குக. வேறு மணம் புரிக. அன்னவர்க்கு வேறு பொருளெதுவும் தரவேண்டியதில்லை.

மனு அநீதி என்ற தொல்லைக்கு ஆளாகிப் பெண் குழந்தைகளைப் பெற்றெடுத்த காரணத்திற்காகக் குடும்ப வாழ்வை இழந்தோர் எத்தனை பேர்? அன்னையானவளை அனாதையாக்கி விட்டு அடுத்தொருத்தியைத் தாரமாக் கிடச் சொல்கிற ஆரியச் சட்டத்தை இன்னமும் வைத்துக் கொண்டிருக்கும் தினமலர் ஆரியக் கூட்டமா குடும்பம் நடத்துற நல்ல வழியை உங்கள் அய்யா கூறவில்லையா? எனக் கேட்பது.

தமிழ் ஓவியா said...

எப்பருவத்துப் பெண்ணாயினும் தன்னிச்சைப்படி
எப்போதும் எச்செயலையும் தன் வீட்டிலும் கூட இயற்ற
உரிமை அற்றவரே

என்று பெண்களைச் சுதந்திரமற்ற அசையாப் பொருளாய்க் கருதித் தீட்டி வைத்த முட்டுக் கட்டைகளுக்கு இன்றும் பெருமை கூறிடும் தின மலர்கள், பெண்களுக்குப் பெருமை சேர்த்த பெரியாரைப் பேசலாமா! பெண்களுக்குச் சொத்து இருக்கக் கூடாது. அவர்களிடத்தில் புருஷர்கள் உண்மை பேசக்கூடாது. ரகசியம் சொல்லக்கூடாது. இந்த சாத்திரங்கள் பெண்களை நல்லகுடும்பமாய் வாழ்ந் திடவா வகுத்தனர்? பாழுங்கிணற்றில் தள்ளிப் பலியிடத்தானே வகுத்து வைத்தனர்.

தோசைக் கணக்கென்று கரிக்கோடு போடவோ
அவருண்டு வீட்டில்இந்த ஒழுங்கெலாம் நம்மாதர்
வாரத்தின் ஏழுநாள் உயர்விரதம் அநுஷ்டிப்பதால்

என்றிருந்த நிலையினை மாற்றிச் சொத்துக் குரியோராய்ச் சொந்தக் கணக்கினைச் சுவரின்றிச் சுவடியில் பார்த்திடும் நன்னிலைக் கண் ஏற்றி யவரே அய்யா பெரியார். மானமிகு சுயமரியாதைக்காரர் கலைஞரால் சட்டமாகிய வரலாறு ஓலமிடும் ஓநாய்களுக்குத் தெரியாமலா போனது? தெரியும். உலகோர் உயர்த்திடும் உன்னத நிலைக்குத் திராவிடர் சென்றிடக் கூடாதென்ற காழ்ப்புணரச்சியேதான் காரணம். ஆனாலும், அய்யா அவர்கள் சர்வாதிகாரத்தின் உச்சத்தில் தன்னை நிறுத்திக் கொண்டு பெண்கள் உயர்ந்திடப் பாடுபடுவேன் என்கிறார்.

துரதிருஷ்டமாக நான் எப்போதாவது ஒரு சமயம் மந்திரியாக நேருமானால் குறைந்தது ஒரு பத்து வருஷத்திற்காவது ஆண் பிள்ளைகள் படிப்பிற்குச் செலவு செய்வதை அடியோடு விட்டுப் பெண்மக்களின் கல்விக்காகவே எல்லாம் பணங்களையும் செலவு செய்வேன் என்று தைரியமாகச் சொல்லுகிறேன் என்கிறாரே.

(22-7-1928 குடிஅரசு).

இதை விடப் பெண்களின் வாழ்விற்கு நல்வழி வகுத்த, பேராண்மை படைத்தோர் யாராவது அகிலத்தில் உண்டா? இல்லையே. பின் ஏன் மறைபொருளாய் எழுதுகிறார்கள்? பெரியாரென்றால் புளியைக் கரைப்பதைப் போல் அக்கிரகாரத்தார் அடிவயிறு பிசைந்து வலிக்கிறதோ!

கணவன் சூதாடியாய் இருக்கலாம்; குடியனாய் இருக்கலாம்; பரத்தையர் உறவோடு இருக்கலாம்; தொழு நோயாளியாய்க்கூட இருக்கலாம். மனைவி என்பவள் இது தகுமா? எனக் கேள்வி கேட்காது வாய் பொத்தி மண்ணாந்தையாய் வாழ்ந்திட வேண் டும்.

கணவனை இழந்தவளோ வித வைக் கோலம் பூண்டு, உணர்ச்சிகளை உள்ளடக்கம் செய்து உத்தமியாய் வாழ வேண்டும். மனைவியை விட்டவன் மறுமணத்திற்கு மார்தட்டி எழலாம். ஆண்மகன் என்ற ஆணவத்துடன் கொண்டவளைக் கண்டவனுக்கும் விற்கலாம். கட்டியவளைக் கண்டவன் பின் தாரமாய் அனுப்பிடலாம். அண்ட வந்தவளை மன்றில் வைத்துச் சூதாட லாம். ஆடவர் குழாம் முன் ஆடை களைந்து அம்மணமாக்கலாம்.

முகஞ்சுழித்தால் அடிக்கலாம்; உதைக் கலாம். இதையெல்லாம் மனங்குமுறி வெளிக் காட்டாது வாழவேண்டும் பெண்கள் என்பதுதானே தினமலர் கூட்டத்தார் சட்டம். இதனால் மாண் டழிந்த மகளிர் குலம் எத்தனை? இதனை மாற்றியமைத்திட, ஆடவரின் ஆணவத்திற்கு அடைக்கல் ஏற்பாடு செய்து பெண்ணினத்தைப் பெருமை பெற வாழச் செய்தவர்தான் அய்யா பெரியார்.

தமிழ் ஓவியா said...

வாழ்க்கைத் துணைவராக விரும்பும் பெண்ணும், ஆணும் ஒருவரையொருவர் தெரிந்து, புரிந்து, தங்களுக்குள் திருப்தி உண்டானபின் வாழ்க்கையை இன்பத்தின்படி ஒப்பந்தம் செய்து கொள்ளவே விரும்புகிறேன் என்கிறார் அய்யா.
துணைவராய் இருப்பதிலும் இணையராய் இருந்து பேதமில்லாப் பெருவாழ்வு வாழ்ந்திடக் கூறுகிறார் அய்யாவின் அடியொற்றித் தொண்டாற்றும் தமிழர் தலைவர் அய்யா கி.வீரமணி அவர்கள்.

மாறுபாடு என்பது இணையர் இருவருக்குமே இருக்கலாகாது. இருப்பின், விலகிடுவது என்ற உரிமை இரு வருக்குமே எங்கும், எவ்விடத்தும் வேண்டுவதே. அதனால் தவறில்லை. உயர்வே பின் வாழ்வில் ஏற்பட்டிடும். அய்யாவின் அரும்பணியில் அவதி நீக்கிக் கொண்ட அக்கிரகார அம்மாமிகளோ ஏராளமுண்டு. சொல்லத் தயங்குகிறார் ஆரியப் பார்ப்பனர்.

கல்யாணம் செய்து ஒழுங்காகக் குடும்பம் நடத்திட அய்யா கூறிடும் அறிவுரைகள்:

குழந்தைகள் ஒன்றோ இரண்டோ பெற்றுக் கொள்ளுங்கள். குழந்தைகட்கு ஒழுங்கும் கட்டுப்பாடும் கற்றுத் தாருங்கள். இன்பமும் அன்பும் நிர்ப்பந்தத்தால் இல்லாமல் சுதந்திரத்தோடு இருக்கட்டும். தம் சொத்தின் உரிமையை பெண்ணுக்கும் தகப்பன் தர வேண்டும். விதவையையும் ஒரு புருஷனோடு வாழச் செய்ய வேண்டும்.

பெண்கள், ஆண்களைப் போல் பொது இடத்தில் கூடிப்பேசி, விளையாடி மகிழ வேண்டும். பத்திரிகை படிப்பதோடு படியாதோர்க்கும் கற்றுத் தரவேண்டும். வீட்டுவேலைதான் நமது கடமை என்பதை மறந்துவிட வேண்டும். புருஷனுக்குத் தலைவியாய், குடும்பத்து எஜமானியாய் இருப்பதே கடமை என்பதை உணரவேண்டும்.

(13.-7.-1930 இல் விருதுநகர் சுயமரியாதைத் திருமண விழாவில்)

பெண்ணினம் பெருமை பெறப் பிறந்திட்ட பெரியாரின் புகழை எவரால், எதனால், எவ்வகையில் மறைத்திட இயலும். அஃது இதயத்தைத் திரையிட்டு மறைத்தற்கு ஒப் பாகுமேயன்றி குழவிக் கல்லுக்குத் துணி மறைத்துக் குளிப்பாட்டிய கதை போலாகாது.

சிறியார் உணர்ச்சியுள் இல்லை பெரியாரைப் பெணிக்கொள் வேம்என்னும் நோக்கு வேறுபாடில்லாது பெண்ணினமே பெருமை பெற உழைத்திட்ட, உயர் கருத்துக்களை வழங்கிட்ட அய்யா பெரியாரைச் சிறுமைக் குணமுடையோர் பெருமையாய்ப் பேசிடார். நன்றிபாராது நன்னலன் பேணிய அய்யாவைக் குறையுறாது பேணிக் காப்பது நன்றியுடையோர் கடன் என உழைத்திடுவோம் நாளும்.23-6-2012

தமிழ் ஓவியா said...

நினைவு நாள்: 18.07.1919 திராவிட இயக்க இலெனின் டி.எம். நாயர்


- புலவர் குறளன்பன்

கல்விக்களம்: கேரள மாநிலம் பாலக்காட்டை ஒட்டித் திருத் என்றொரு சிறு நகரம்.. அதன் அருகில் உள்ள ஊர் தாரவாட். அங்கு பிறந்தவர் தான் நம்முடைய மாதவன் நாயர் அவர்கள்.

அவருக்குப் பிறப்பும், பள்ளிப் படிப்பும் மட்டும்தான் கேரளம். மற்றபடி அவர் கல்லூரிக் கல்விக்கு நாடிய இடம் சென்னை மாநிலக் கல்லூரி. பின்னர் மருத்துவம் கற்கப் போன இடம் இங்கிலாந்து. கற்றதும் திருப்பி வராமல் இங்கிலாந்தில் கால் கொண்டு மருத்துவமனை ஒன்றை நடத்திப் பெரும் பொருள் ஈட்டிய கருத்தாளர்.

காதல் களம்: தன்னுடைய தாயகமாய் அவர் கருதிய சென்னைக்குத் திரும்பிய ஆண்டு 1897. பண வெறி மருத்துவராய் வாழ்ந்த அவர் பொதுப் பணி புரிய விரும் பினார் பேராய (காங்கிரஸ்) கட்சியில் புகுந்தார்.

பேராயக் கட்சியின் பார்ப்பனத் தலைமை வழக்கம் போல திராவிடரான நாயரையும் புறக்கணித்தது. தியாகராயர் திராவிட இயக்கத்திற்குத் திரும்பியது போல நாயரும் திரும்பினார்.

வாழ்வுக்களம்: வகுப்புவாரி உரிமை: கோவையில் 19.8.1917ஆம் நாள் திராவிடர் இயக்க மூத்த அமைப்பான தென்னிந்திய நலவுரிமைச் சங்கம் நடத்திய மாநாட்டில் நம்முடைய நாயர் முன்னிலை யராய் நின்று கருத்துரையாற் றினார்.

சென்னை வந்த மாண்டேகு செம்சுபோர்டு அவர்கள் (15.12.1917) தியாகராயர் தலைமை தாங்கிய வரவேற்புக் குழுவில் இடம் பெற்று வகுப்பு வாரிப்படி கல்வி, வேலையில் ஒதுக்கீடு தருமாறு வலியுறுத்தி விண்ணப்பித்தார்.

மாண்டேகு செம்ஸ்போர்டு ஆரியச் சார்பு அன்னிபெசண்டு, சி.பி. இராமசாமி அய்யர் பேச்சில் மயங்கிச் சாய்ந்ததை அறிந்து பிரிட்டன் பாராளுமன்றம் சென்று மாண்டேகு செம்ஸ் போர்டு அறிக்கைக் கருத்தாடலில் (விவாதம்) பங்கேற்று வகுப்புவாரி உரிமையை வலியுறுத்தி வந்தார்.

நடுவுநிலை: சென்னை நகராட்சியில் ஒரு தீர்மானம், கொண்டு வந்தவர் தியாகராயர். அவர்நம் நாயரின் நண்பர். நயன்மைக் (நீதி) கட்சியில் கூட்டுப் பணியாளர். அப்படிப்பட்ட அவர் கொண்டு வந்த தீர்மானம். திருவல்லிக் கேணி பார்த்தசாரதி கோவில் குளத்திற்கு வரி வாங்காமல் தண்ணீர் தர வேண்டும் என்பதாகும்.

வருவாய் கோவில்களுக்கு நிறைய வரு கிறது. வரி கட்டுவதுதான் முறை என்று கூறி நாயர் மறுத்து விட்டார். நண்பருக்காக நயன்மையை விட்டுத் தராத நடுவு நிலையராய் நின்றார்.

போலி பத்தி: மதச் சார்பில் லாத பகுத்தறிவாளராய் இங்கிலாந்திலிருந்து தென் நாட்டிற்கு வந்தவர். பிறகு மனம் மாறிப் பிரம்ம ஞான சபையின் தலைமைப் பொறுப்பேற்றவர். அதன்பின் கண்ணன் மறுபிறப்பு எடுக்கப் போவதாகக் கதை அளந்தவர். அளவில்லாமல் பொய்யை விற்றுப் போலியாய் பத்தி (பக்தி) வேடமிட்டு வாழ்ந்து வந்த பெண்மணி அன்னி பெசண்ட் ஆவார்.
சமுதாய வீதியில் குறிக்கோள் இல்லாமல் கும்மாளம் போட்டு அலைந்த அவரின் அழுக்குச் செயற்பட்டினை ஆங்கில நூல் ஒன்றின் வாயிலாகத் தோலுரித்துக் காட்டிய வீறு நம் தா.மா. நாய ருக்கே உரிய தனித்திறனாகும்.

வெற்றிக்களம்: தலைநகர் சென்னையில் நம்முடைய பெரியார் திடல் அமைந்துள்ள வேப்பேரிப் பகுதியில் எத்திராசு முதலியார் இல்லத்தில் 20.11.1916 ஆம் நாள் நடைபெற்ற பார்ப்பனர் அல்லாதார் கூட்டத்தில் தா.மா. நாயர் தென்னாட்டு பிராமணர் அல்லாதார் நலனுக்காக என் உயிரையும் தருவேன் - என்று தெரிவித்தபடி இலண்டன் பாராளுமன்றம் கூட்டுக் குழு விடம் வேண்டுகோள் முன் வைக்க விழைந்த காலத்தில் (18.07.1917) வாழ்க்கை நிறைவுச் சூழலுக்குத் தள்ளப்பட்டுத் தன் உயிரைத் தர நேரிட்டு விட்டது.

அரசியல், பொருளியல், குழுகாயவியல் என்னும் மூன்று தளங்களிலும் அவர் ஆற்றிய பணி அனைத்தும் மிக மிக அருமையானவை.

அவர் போலும் அஞ்சாமை, நடுவு நிலைமை உடைய அறிவுப் பணியாற்ற நாம் நம் இளையரை எழுப்பி அமைவோமாக. 23-6-2012

தமிழ் ஓவியா said...

யஜுர் வேதத்தில் பசுவைக் கொன்று யாகம்!


சமஸ்கிருதத்தில் யாகத்துக்குப் பெயர் தமிழில் பொருள்

1. கோஸவம் பசுமாடு காளைமாடு இவைகளைக் கொல்லும் யாகம்

2. வாயவீய ஸ்வேதபக வாயு வேதனைக்காக வெள்ளைப் பசு யாகம்

3. லத்ஸோப கரணம் கன்றுக்குட்டியை கொலை செய்து நடத்தும் யாகம்.

4. அஷ்டதச பசு விதானம் பதினெட்டு பசுக்களைக் கொலை செய்து நடத்தும் யாகம்

5. ஏகாதசீன பசுவிதானம் பதினொன்று பசுக்களை கொல்லும் யாகம்

6. க்ராமாரண்ய பசு ப்ரசம்ஸா நாட்டிலும் காட்டிலும் உள்ள பசுவைக் கொன்று யாகம் செய்தல்.

7. உபாகரண மந்த்ரம் யாகத்தில் கொல்லப்படும் பசுவைச் சுத்தி செய்யும் மந்திரம்.

8. கவ்ய பசுவிதானம் பசு மாட்டைக் கொன்று நடத்தும் யாகம்

9. ஆதித்ய தேவ தாகபசு சூரிய தேவதைக்கு பசு யாகம்

- மத விசாரணை நூல். பக்கம் 79,80 -சிவானந்த சரஸ்வதி

பசுவதைத் தடைச் சட்டம் கோரும் பார்ப்பனீயமே! இதற்கென்ன பதில்? 23-6-2012

பாண்டியன் said...

மோடிக்கு அண்ணனா, தம்பியா பிரபாகரன். முஸ்லீம்களை படுகொலைகள் செய்து தம் வெறியை தீர்த்து கொண்டதில். அத்தகையவர் தான் திராவிட வீரமணியின் உடன்பிறப்போ.