Search This Blog

25.6.12

பெரியாரின் குறிக்கோள் சமதர்மமே! - அறிஞர் அண்ணா


சோவியத் ரஷ்யா, உலகின் கவனத்தை இழுக்கும் சக்தி பெற்றுவிட்டது. மலடோவின் புன்சிரிப்புக்குத் தவம் கிடக்க வேண்டிய நிலைமைக்கு வல்லரசுகள் இன்றுவந்துவிட்டன. அத்தகைய உச்சநிலை இந்த நாட்டுக்கு வந்துவிட்டது. முப்பதாண்டுகளுக்கு முன்பு வரை, அதே நாடு, வல்லரசுகளின் வலையில் சிக்கிக் கிடந்தது; மதவாதிகளின் மாயச்சேற்றிலே அமிழ்ந்து கிடந்தது, ஜாரின் பிடியிலே, ரஸ்புடீனின் கபடத்திலே, சீமான்களின் களியாட்டத்திலே சிக்கிச் சீரழிக்கப்பட்ட நாடாக இருந்தது. பஞ்சத்தையும் படுகொலையையும் கண்டது; கொடுங்கோலரையும் வறுமையையும் கொண்டு நெளிந்தது. அத்தகைய நாடு, இன்று, உலகில் வேறு எங்கும் காணமுடியாத சோபிதத்துடன் விளங்குகின்றது.

சோவியத் ரஷ்யாவின் இந்தப் புதுநிலையை மறுப்பார் இல்லை. புதிய சக்தி பெற்றுவிட்டது என்ப தற்கு விளக்கம் அதிகம் தேவையில்லை. வல்லரசுகள் பலவும் இன்று சோவியத்தின் பலத்தைக் கண்டு, பயம் கொண்டிருப்பதைக் காண்கிறோம்.

நோய் கொண்டிருந்த நாடு, இன்று பலம் பெற்று விளங்குகிறது. காட்டுமிராண்டிக்காலநிலை மாறிவிட்டது - கணப்போதில்! ஆம்! முப்பதாண்டுகள், ஒரு நாட்டு வாழ்நாளிலே, ஒருகணம்தானே! இதற்குள் கொடுங் கோலர்கள் விரட்டப்பட்டனர், கபட சன்யாசிகள் ஒழிக்கப்பட்டனர், முதலாளித்துவம் முறியடிக்கப்பட்டது, புதிய ஆட்சிமுறை ஏற்பட்டுவிட்டது. புதியதோர் உலகே தோன்றிவிட்டது. இதனை மறுப்பார் இல்லை - ஆனால் இதன் முழு உண்மை - முழுச் சித்திரம் - மக்களுக்குத் தெரிய ஒட்டாதபடி, தப்புப்பிரசாரம் எனும் மூடுபனிப் படலத்தை அமைக்கும் வேலையில் ஈடுபட்டவர்கள் பலர். நாம்அந்த மூடுபனியை நமது சக்திக்கேற்ற அளவு அழிக்க முயற்சிக்கிறோம். இந்த இதழ் மூலம் சித்திரவதைக்கு ஆளான மக்கள், சீறி எழுந்து போரிட்டு, சீரும் சிறப்பும் பெற்றது மானிட வர்க்க வரலாற்றிலே, முக்கியமான பகுதி. அவர்கள் பட்ட கஷ்டத்தை அவனி அறியாவண்ணம், முதலா ளித்துவம் தப்புப்பிரசாரம் செய்துவந்தது; வருகிறது. சமீபகாலம் வரையில் சோவியத்தை அழிப்பதற்கே, வல்லரசுகள் பலவும் தமது பணபலத்தைப் பயன் படுத்தி வந்தன. எனினும் வெற்றி அவர்கட்கு இல்லை. ஒவ்வோர் நாடும் இன்று தத்தம் எல்லையைப் பாதுகாக்கின்றன. “எப்பக்கம் வந்து புகுந்திடுமோ? ரஷ்யா, எத்தனை பட்டாளம் கூட்டிவருமோ?” என்று வீண் பீதிகொண்டு, பட்டாளம் தேவையில்லை - வரவும் வராது - ஏழையின் கண்ணீரிலே, பாட்டா ளியின் பெருமூச்சிலே, விவசாயியின் விசாரத்திலே, தேவையான அளவு பட்டாளம் இருக்க, சோவியத் படையை இங்கு அனுப்புவானேன்!

சோவியத் படை எடுப்பு - ரஷிய ஆதிக்கம் என்பன போன்றவைகள் கடைசிக் கட்டத்திலே வந்து நிற்கும் முதலாளித்துவத்தின் குளறல்.

இந்தப் பீதியைக் கிளப்பி விடுவதன் மூலம், சோவியத்தின் மீது மக்களுக்கு அருவருப்பு வருமாறு செய்து, அதைத் துணைகொண்டு, சோவியத் முறை யான சமதர்மத்தின்மீது வெறுப்பு ஏற்படும்படிச் செய்து, முதலாளித்துவம் சிறிதுகாலம் பிழைத்திருக்கலாம் என்று ஆசைகொண்டிருக்கிறது. அந்த ஆசை நிறை வேறாது! ஏனெனில் நாம் முன்பு குறிப்பிட்டபடி ஏழை யின் விழியில் நீர் வழிகிறது! இது சமூகம் புது அமைப்புத் தேடுகிறது என்பதற்கான அறிகுறி.

இந்த நிலையிலேதான், தப்புப் பிரசாரத்துக்கு இலக்கான ரஷியாவைப் பற்றிய சில உண்மைகளை எடுத்துக்கூறும் கடமையை நாம் களிப்புடன் ஆற்ற முன்வந்தோம். இதனை நமது கடமை என்று நாம் கொள்வதற்குக் காரணமும், உரிமையும் இருக்கிறது. ஏனெனில், பெரியாரின் இயக்கத்தைச் சார்ந்தவராகிய நாம், சமதர்மத்தையே குறிக்கோளாகக் கொண்டு பணியாற்றி வருகிறோம்.

“ஒருவன் உழைப்பில் ஒருவன் நோகாமல் சாப்பிடு கிறது என்கின்றதன்மை இருக்கின்ற வரையிலும், ஒருவன் தினம் ஒரு வேளைக் கஞ்சிக்கு மார்க்கமில் லாமல் பட்டினி கிடந்து சாவதும், மற்றொருவன் தினம் ஐந்து வேளை சாப்பிட்டுவிட்டுச் சாய்வு நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு வயிற்றைத் தடவிக் கொண்டிருக்கிறதும் ஆகிய தன்மை இருக்கிறவரையிலும், ஒருவன் இடுப்புக்கு வேஷ்டியில்லாமல் தீண்டாடுவதும், மற்றொருவன் மூன்று வேஷ்டி போட்டுக்கொண்டு உல்லாசமாகத் திரிவதுமான தன்மை இருக்கின்ற வரையிலும், பணக்காரர்களெல்லாம் தங்கள் செல்வம் முழுமையும், தங்களுடைய சுயவாழ்வுக்கே ஏற்பட்டது என்று கருதிக் கொண்டிருக்கிற தன்மை இருக்கின்ற வரையிலும், சுயமரியாதை இயக்கம் இருந்தே தான் தீரும்.”

பெரியார், ஜாதிமத ஊழல்களை மட்டுமல்ல, மக்களிடை காணப்படும் பொருளாதார ஏற்றத்தாழ்வு களையும் இதுபோலப் பலமாகக் கண்டித்து வருகிறார் என்பது அனைவருக்கும் தெரியும். உண்மையைக் கூறவேண்டுமானால், சமூக சீர்திருத்தத்துக்காகப் பாடுபடும் அவரை, விஷமிகள், “நாத்திகர்” என்று பாமரரிடம் கூறி வந்தது போலவே, “பொது உடைமை வாதி இவர்” என்றும், சர்க்காரிடம் சாடி கூறினர். அவருடைய வேலைத் திட்டத்தை ஒரு காலத்தில், காலஞ்சென்ற சத்தியமூர்த்தி போன்றவர்கள், பொது உடைமைத் திட்டம் என்று கூறினதுண்டு.

பெரியார், இவைகளைக் குற்றச்சாட்டுகளாகக் கருதிச் சளைக்கவில்லை.

சமதர்மப் பிரசாரத்தைத் தமிழகத்தில் தளராது செய்து வந்தார். அதுவும் ஏட்டுப்படிப்பின் பயனாக அல்ல - அனுபவத்தின் துணைகொண்டு மட்டுமல்ல - நேரடியாகச் சோவியத் சென்று, அங்குப் புது உலகு பூத்திருக்கும் அழகினைக் கண்டு உண்மை நிலை யினைத் தெரிந்து கொண்டு அந்தப் பிரசாரத்தைத் துவக்கினார்.

அது மட்டுமல்ல உண்மை. அவருடைய சாதி ஒழிப்புப் பிரசாரமுங்கூட, வெறும் மதத்திருத்தமோ, மக்களிடை ஏற்பட வேண்டிய மனத்திருத்தமோ மாத்திரமல்ல, சாதிமுறையையே - வர்ணாசிரமத்தையே, அவர் முற்காலத்தில் தந்திரசாலிகள் அமைத்துக் கொண்ட பொருளாதாரச் சுரண்டல் முறை என்று நம்புகிறார் - தக்க காரணம் காட்டி இதனை நிரூபித் திருக்கிறார். ஆகையால், சாதி முறையை அவர் எதிர்க்கிறார் என்றால், பொருளாதார பேத நிலையை உண்டாக்கியதும், நிலைத்திருக்கச் செய்வதும், இனி யும் வளரச் செய்யக் கூடியதுமான கொடிய ஏற் பாட்டைத் தாக்கித் தகர்க்கிறார் என்றே பொருள் - அதாவது சமதர்மத்துக்கான சூழ்நிலையை ஏற்படுத்துகிறார்.

தமிழகத்தாரின் மனதிலே கிடக்கும் பழங்காலக் கொள்கைகளை, அவர், சாதிய முறையின் மூலம் வளர்ந்துள்ள முதலாளித்துவத்தின் முடிக்கயிறுகள் என்று எடுத்துக்காட்டியே கண்டிக்கிறார். அவருடைய பெரும்படையின் பணி, சமதர்மத்துக்கே பயன் படுகிறது - பிறர் அதனை ஏற்றுக்கொள்ள மறுப்பினும் - மதிப்பிடக் கூசிடினும். இத்தகைய பணி, சோவியத் தில், தேவையான அளவுக்குமேல், புரட்சிக்கு முன்பு செய்யப்பட்ட காரணத்தாலே தான், புரட்சி, சாத்திய மாயிற்று. பாட்டு, கூத்து, கதை, காவியம், ஓவியம் முதலிய பல்வேறு துறைகளிலும், இதற்கான பிரச்சாரம் செய்யப்பட்டு, ஏழை ரஷியன் மனதிலே, தூவப்பட்டி ருந்த நெடுங்காலக் கருத்துக்களை அறவே ஒழித்த தால் தான், மாவீரன் லெனின், புரட்சி மார்க்கத்தைக் காட்டியவுடன் சிங்கக் கூட்டம் சீறி எழுந்தது, கிழித்து எறிந்தது பகைக் கூட்டத்தை.

இந்த மூலக்கருத்தை நன்கு தெரிந்ததாலேயே, இன்று பெரியார் நடத்திச் செல்லும் இயக்கம், நாட்டு மக்களிடை நல்லறிவுப் பிரச்சாரத்தை விடாமல் செய்து வருகின்றது; இலட்சியப் பாதையில் நடந்து சென்ற வண்ணம் இருக்கிறது. அதன் இறுதியில், சோவியத் சோபிதம் காண வேண்டும் என்ற உறுதியுடன்.

இதன் பயனாகவே, நாம், நவம்பர் புரட்சி சமயத் திலே, சோவியத் நாட்டுச் சோபிதத்தை விளக்கும் கட்டுரைகளையும், அதுபோன்ற புத்துலகம் காண வேண்டின், எதுபோன்ற சூழ்நிலை தேவை என்பதை விளக்கிடும் கட்டுரைகளையும் வெளியிட்டிருக்கிறோம். நாடோடியின் நிலைமை, விபசாரம் பிறக்கும் வழி என்ற பல்வேறு சித்திரங்களும் இன்று நாட்டிலே காணக்கூடியன. தெருக்கோடியில், பாதை ஓரத்தில், பட்டினத்தில், பட்டியில் எங்கும் நீங்கள் இவர்களைச் சந்திக்கலாம். இவர்கள் சமூகத்திலே உள்ளதற்கான காரணம் என்ன, என்ற சிந்தனையைக் கிளறவே, இக்கட்டுரைகள். இதழ்பெற்றுப் பயன் பெறுவர் தமிழர் என்று நம்புகிறோம்.

------------------அறிஞர் அண்ணா“திராவிட நாடு”, தலையங்கம், 17-11-1946

4 comments:

தமிழ் ஓவியா said...

சேலம் கோட்ட ரயில்வேயின் தலைமையிடத்தை சேலத்திலிருந்து பாலக்காட்டுக்கு மாற்றாதே! மாற்றாதே!! சேலத்தில் திராவிடர் கழகத்தின் சார்பில் இடி முழக்கம் - ஆர்ப்பாட்டம்!


சேலம், ஜூன் 26- சேலத்தைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கிவரும் கோட்ட ரயில்வே தலைமை யிடத்தை பாலக்காட்டுக்குக் கொண்டு செல்ல மேற் கொள்ளப்படும் முயற்சியைக் கண்டித்து 26.6.2012 இன்று காலை 11 மணிக்கு சேலத்தில் திராவிடர் கழகத்தின் சார்பில் எழுச்சியுடன் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மாநில இளைஞரணிச் செயலாளர் இரா. ஜெயக்குமார் தலைமை தாங்கினார். ஈரோட்டு மண்டலத் தலைவர் பொத்தனூர் க. சண்முகம், தலைமைச் செயற்குழு உறுப்பினர் பழனி. புள்ளை யண்ணன், சேலம் மண்டலச் செயலாளர் மு. தியாகராஜன் சேலம் மாவட்ட தலைவர் கே. ஜவஹர், சேலம் மாவட்ட செயலாளர் அரங்க இளவரசன் மேட்டூர் மாவட்ட தலைவர் சி.சுப்பிரமணியம் மாவட்ட செயலாளர் அ. சந்திரசேகரன், ஆத்தூர் மாவட்ட தலைவர் விடுதலை சந்திரன் மாவட்ட செயலாளர் கோபி இமயவரம்பன் ஈரோடு மாவட்ட தலைவர் ப. பிரகலாதன், தருமபுரி மாவட்ட தலைவர் தமிழ்ச்செல்வன், தருமபுரி மாவட்ட செயலாளர் சிவாஜி வேலூர் மண்டலம் செயலாளர் பழ. வெங்கடாசலம், மாநில ப.க. துணைத் தலைவர் அண்ணாசரவணன், மாநில சமூகப் காப்பணி இயக்குநர் அழகுமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இடி முழக்கம்!

ஆர்ப்பாட்டத்தில் மாற்றாதே, மாற்றாதே சேலம் கோட்டத்தை பாலக்காட்டிற்கு மாற்றாதே! - கண்டிக் கிறோம், கண்டிக்கிறோம் சேலம் கோட்டத்தை பாலக்காட்டிற்கு மாற்ற முயற்சிப்பதைக் கண்டிக்கிறோம்.

முழக்கங்களைத் தொடர்ந்து முனைவர் அதிரடி அன்பழகன் விளக்கவுரையாற்றினார்.

போன்ற முழக்கங்கள் ஒலி முழக்கம் எழுப்பப்பட்டது.

தமிழ் ஓவியா said...

கையாலாகாத கடவுளர் சிலை

கோவிலில் கொள்ளை : குழவிக்கல் என்ன செய்தது?

ஆவடி, ஜூன்.26- சென்னையை அடுத்த ஆவடி சி.டி.எச். சாலையில் சேக்காடு கிராமத்தில் உள்ள தேவி சின்னம்மன் கோவிலில் நேற்று முன்தினம் இரவு சிலர் பூட்டை உடைத்து உள்ளே சென்று உண்டியலை உடைத்து பார்த்தனர்.

அதில் பணம் எதுவும் இல்லாததால் அங்கிருந்த நான்கு பித்தளை குத்து விளக்குகள், 2 கிலோ எடையுள்ள முக கவசம் ஆகியவற்றை திருடிக் கொண்டு சென்றுவிட்டனர். கோவில் நிர்வாகி ராமகிருஷ்ணன்(வயது 72) நேற்று காலை 8 மணிக்கு கோவிலை திறந்து பார்த்தபோது பித்தளை, வெள்ளிப் பொருட்கள் திருடப் பட்டிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இது பற்றி அவர் ஆவடி காவல் நிலை யத்தில் புகார் கொடுத்தார். ஆவடி குற்றப் பிரிவு காவல் ஆய்வாளர் குமாரவேலு வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகிறார்.

ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட அர்ச்சகர்

சத்தியமங்கலம், ஜூன்.26- சென்னை யில் இருந்து சத்தியமங்கலத்துக்கு கோவி லில் யாகம் நடத்த வந்த புரோகிதர் ஆற்றில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் மீனாட்சி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 20-ஆம் தேதி முதல் 11 நாட்கள் அதிருத்த சண்டி மகா யாகம் நடக்கிறது. இந்த யாகத்தை நடத்துவதற்காக கோவிலின் நிர்வாகம் சென்னையில் இருந்து 140 புரோகிதர்களை வரவழைத்தனர்.

இதில் சென்னை பெரம்பூர் வெற்றி நகரைச் சேர்ந்த பிச்சைமணி என்ற ஆட்டோ ஓட்டுநரின் மகன்களான ஹரி பிரசாத், சாம்பிரசாத் ஆகியோரும் வந்திருந் தனர். இவர்கள் சென்னையில் உள்ள வேதபாடசாலையில் படித்து வருகின்றனர்.

யாகம் நடத்த வந்த இவர்கள் அனை வரும் அங்குள்ள திருமண மண்டபத்தில் தங்கி உள்ளனர். நேற்றுமுன்தினம் புரோ கிதர் ஹரிபிரசாத் அவருடைய நண்பரும் புரோகிதருமான அசுவின்குமார் (18), சிறீராம்(21) ஆகிய 3 பேரும் சத்தியமங்கலம் வழியாக செல்லும் பவானி ஆற்றில் மாலை 3 மணியளவில் குளிக்க சென்றனர்.

அப்போது ஹரிபிரசாத் ஆற்றின் ஆழமான பகுதிக்கு குளிக்க சென்றார். இதை அங்கு குளித்து கொண்டு இருந்த மற்ற வர்கள் பார்த்து, ஆழமான பகுதிக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரித்தனர். ஆனாலும் ஹரிபிரசாத் ஆழமான பகுதிக்கு சென்று குளித்தார். இந்த நிலையில் அவர் அங்குள்ள சுழலில் சிக்கினார். அவரை தண்ணீர் வேகமாக இழுத்து சென்றது.

இதை பார்த்த அவருடைய நண்பர்கள் சிறீராம், அசுவின்குமார் ஆகியோர் காப் பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என்று சத்தம் போட்டனர். இவர்களின் சத்தத்தை கேட்டு அங்கு குளித்து கொண்டு இருந்த பொது மக்கள் அவரை மீட்க முயன்றனர். ஆனால் அவர்களால் முடியவில்லை. இது குறித்து சத்தியமங்கலம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன் பேரில் காவல்துறையில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் அந்தப்பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் உதவியுடன், தண்ணீர் இழுத்து சென்ற ஹரிபிரசாத்தை தேடினார்கள். இந்த நிலையில் இரவு 7 மணியளவில் ஹரிபிரசாத் உடலை மீனவர்கள் மீட்டனர். ஹரி பிரசாத்தின் உடலை காவல் துறையினர் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து சத்திய மங்கலம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சாலையோரம் வீசப்பட்ட கடவுளர் சிலைகள் திருவிடைமருதூர்,

ஜூன்.26- திரு விடைமருதூர் அருகே சாலையோரம் வீசப் பட்ட கடவுளர் சிலைகள் கண்டெடுக்கப் பட்டன. தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூரை அடுத்த சீனிவாசநல்லூர் புறவழிச்சாலையில் செல்லியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் பின்புறம் புதர் அருகே நேற்று 3 கற்சிலைகள் கிடந்தன.

இந்த சிலைகளை அந்த வழியாக வந்தவர்கள் பார்த்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதன் பேரில் தாசில்தார் துரைராஜ், வருவாய் ஆய்வாளர் சிங்காரவேலு, கிராம நிர்வாக அலுவலர்கள் தாளமுத்து, குண சேகரன், மகேந்திரகுமார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று சிலைகளை கைப்பற் றினர்.

கைப்பற்றப்பட்ட சிலைகள் சுமார் 6 அடி உயரமுள்ள பெருமாள் சிலை, 4 அடி உயர சிறீதேவி, பூமிதேவி சிலைகள் என்பது விசாரணையில் தெரியவந்தது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு நாச்சியார்கோவில் அருகே நெடார் கிராமத்தில் உள்ள வரதராஜபெருமாள் கோவிலில் பெருமாள், சிறீதேவி, பூமிதேவி சிலைகள் திருட்டு போயின. இதுபற்றி வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்தது. தற்போது சாலையோரம் கிடந்து மீட்கப்பட்ட சிலைகள் அக்கோவிலில் திரு டப்பட்ட சிலைகள் என்பது விசாரணையில் தெரியவந்தது.

இந்த சிலைகளை தாசில்தார் துரைராஜ், நாச்சியார்கோவில் காவல் துறையில் ஒப்படைத்தார். கோவிலில் சிலை களை திருடிய கும்பலை சேர்ந்தவர்கள், இச்சிலைகளை அப்பகுதியில் வீசிச்சென் றார்களா? என்று காவல்துறையினர் விசா ரணை நடத்தி வருகிறார்கள். 26-6-2012

தமிழ் ஓவியா said...

கருநாடகம் ஒன்று போதாதா?


பி.ஜே.பி. ஆளும் கருநாடக மாநில அரசு பல விபத்துக்களைச் சந்தித்துச் சந்தித்து உயிர் தப்பினாலும், இந்த முறை தப்பவே தப்பாது என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

ஊழல் புகாரின் காரணமாக முதல் அமைச்சர் பதவியிலிருந்து எடியூரப்பா விலகினார். அந்த இடத்தில் எடியூரப்பாவின் நண்பரான சதானந்த கவுடா நியமிக் கப்பட்டார்.

சிறிது காலம் அவரை முதல் அமைச்சர் நாற்காலியில் உட்காரச் செய்துவிட்டு, பிறகு அந்த நாற்காலியில் உட்கார்ந்து விடலாம் என்ற நப்பாசையில் இருந்தார் எடியூரப்பா.

ஒருமுறை பதவி நாற்காலியில் உட்கார்ந்து விட்டால் அவ்வளவு சுலபத்தில் விட்டுக் கொடுப்பார்களா? மத்திய பிரதேசத்தில் உமா பாரதியின் கதை என்னாயிற்று?

பல முறை நெருக்கடிகளைக் கொடுத்தார் எடியூரப்பா. கட்சியின் மேல் மட்டத் தலைவர் கள் ஓடோடி வந்து கை கால்களைப் பிடித்து கண்ணாடியை ஒட்டுகின்ற வேலையில் ஈடுபட்டு, தோல்வியைத்தான் சந்தித்தனர்.

பி.ஜே.பி.யின் அகில இந்தியத் தலைவர் நிதின்கட்காரி வீட்டுத் திருமணத்திற்கு கருநாடகத்தின் முன்னாள் முதல்வர் எடியூரப்பா மற்றும் அவரின் சகாக்கள், அதே போல இந்நாள் முதல் அமைச்சர் அவரின் சகாக்கள் படை எடுத்தனர்.

கலியாண வீட்டிலேயே கலகக் கொடி ஊன்றப்பட்டது. சதானந்த கவுடாவை நீக்க வேண்டும் என்று அழுத்தமாகக் கூறப்பட்டது.
அதனைத் தொடர்ந்து பெங்களூரில் மள மளவெனக் காய்கள் நகர்த்தப்படுகின்றன.

சட்டவிதிகளை மீறி வீட்டுமனை ஒதுக்கீடு பெற்றதாக சட்டத் துறை அமைச்சர் சுரேஷ் குமார்மீது குற்றம் சுமத்தப்பட்டது.

இதன் காரணமாக பதவியை அவர் ராஜினாமா செய்தார்; ஆனால் இந்த விலகலை முதல் அமைச்சர் ஏற்றுக் கொள்ள வில்லை. இதற்கு முக்கிய காரணம் அரசியல் நெருக்கடி முற்றியிருக்கும் இந்தக் கால கட்டத்தில் சட்ட அமைச்சரின் பதவி விலகலை ஏற்றுக் கொண்டால் மேலும் ஒரு தலைவலி ஏற்படக் கூடும் என்ற அச்சமே! குற்றஞ்சாட்டப்பட்டவர் பதவி விலகல் கடிதம் கொடுக்கும் நிலையில், அதனை ஒரு முதல் அமைச்சர் ஏற்றுக் கொள்ளாதது விசித்திரமா? ஊழலுக்குத் துணை போகும் கேவலமா?

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றஞ் சாட்டப்பட்ட அத்வானி, முரளி மனோகர் ஜோஷி முதலியோர் மத்தியில் அமைச்சர் களாக இருந்தனர். அந்த நேரத்தில் நாடாளு மன்றத்தில் பெரும் அமளி ஏற்பட்டது.

பி.ஜே.பி. அமைச்சர்கள் வேறு வழியின்றிப் பதவி விலக முன் வந்தனர். பிரதமர் வாஜ்பேயிடம் கடிதங்களையும் கொடுத்த நிலையில், அதனை ஏற்க மறுத்துவிட்டார். பிரதமர் வாஜ்பேயி. இது போன்ற தவறான மோசமான வழிகாட்டுதல்களைக் கொடுத்திருக்கும் இந்தப் பிஜேபிதான் நாட்டில் ஊழலை ஒழிக்கப் போகிறதாம். இவர்கள் தார்மீக உணர்வுகளைப் போற்றி மதிக்கக் கூடிய வர்களாம்!

இந்துத்துவா என்றால் தில்லுமுல்லுதானே! அதனைக் கண்களாகக் கொண்டவர்கள் வேறு எந்த மாதிரி சிந்திக்க முடியும்? நடந்து கொள்ளவும் முடியும்?

பிஜேபி ஆளும் நிலைக்கு அறவே தகுதியில்லை என்பதற்குக் கருநாடகம் ஒன்று போதாதா! 26-6-2012

தமிழ் ஓவியா said...

நாசமோ நாசம்!


பொது மக்களுக்கு பொது விநியோகத் திட் டத்தின் கீழ் வழங்கப்படும் 66 லட்சம் டன் கோது மைக்கு உரிய பாது காப்பு இல்லாமல் திறந்த வெளி யில் கொட்டப்பட்டு கிடக் கின்றது என்பது செய்தி!

பஞ்சாப், அரியானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநி லங்களில் இந்த அவல நிலை. இது ஏதோ இப் பொழுது மட்டும் நடப்ப தல்ல; இது ஒரு மோச மான தொடர்கதை யாகும்.

இதுவரை உணவு தானி யங்கள் பயன்படுத்தப்படா மலேயே நாசமாகிப் போன பட்டியல்:

2008 இல் 20,114 டன்
2009 இல் 670 டன்
2010 இல் 634 டன்
2011 இல் 1346 டன்

மேற்கண்ட அளவில் உணவு தானியங்கள் பயன் படுத்தப்படாம லேயே நாசமா யின என்று மத்திய உணவுத் துறை அமைச்சகத்தின் அதி காரியே ஒப்புக் கொண் டார் என்பது வெட்கக் கேடு மட்டுமல்ல; மனித நேயமற்ற - சிறிதும் பொறுப்பற்ற செயலே!

இரவு உணவு இல் லாமல் பட்டினியாகக் கிடக்கும் மக்கள் இந்தி யாவில் கோடானுகோடி என்று இன்னொரு பக்கத்தில் சொல்லுவதும் இதே மத்திய அரசுதான். இந்தியாவில் 36 கோடி மக்கள் ஏழைகளாக இருப் பதாக திட்ட ஆணையம் மற்றொரு பக்கத்தில் கூறுகிறது. (தகவல்: திட்டக்குழு துணைத் தலைவர் மாண்டேகு அலுவாலியா - நாள் 8.4.2012)

கிராமங்களில் நாள் தோறும் ரூபாய் 35, நகரங்களில் ரூபாய் 66 க்கும் குறைவாக சம் பாதிப்பவர்கள் வறுமைக் கோட்டுக்கும் கீழே இருப் பவர்கள் என்று திட்டக் குழு கூறுகிறது.

உண்மையைச் சொல்லப்போனால் இந்த புள்ளி விவரம் கூட பொய்யில் புழுத்ததுதான்.

சாதாரண உணவு விடுதியில் காலைச் சிற் றுண்டி சாப்பிடுவதற்கே இப்பொழுதெல்லாம் குறைந்த பட்சம் ரூபாய் 50 தேவை என்ற நிலைதான். பெரும்பாலான மக்கள் அரசியல் கட்சிகளின் கொள்கைகளை, சித் தாந்தங்களை எல்லாம் பார்ப்பதில்லை. அன்றா டம் வீட்டுச் செலவுக் கணக்குப் பட்டியலைத் தான் பார்க்கிறார்கள் என்பது நினைவிலிருக் கட்டும்!

வாக்குக் கேட்கப் போகும்போது மக்கள் என்ன கேட்கிறார்கள், என்ன சொல்லுகிறார்கள் என்பது கூடவா மறந்து போயிற்று?

- மயிலாடன் 26-6-2012