Search This Blog

10.3.10

அன்னை மணியம்மையார் பிறந்த நாள்

அன்னை மணியம்மையார் பிறந்த நாள்
மானிடப் புதுவாழ்வின் சகாப்தம்!


இன்று அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையாரின்
90 ஆவது ஆண்டு பிறந்த நாள்.
பெண்ணின எழுச்சியின் சின்னம் அவர்!
புரட்சித் தாயாக இருந்து புதிய வரலாறு
படைத்த பெண் சிங்கம் அவர்!
பேதைமை பெண்களுக்கு அடைக்கலம் என்ற
பழைய பத்தாம் பசலித்தனத்தை விரட்டி,
சாதனை படைத்த சரித்திரத் தலைவி அவர்கள்.
இல்லறம் என்ற குறுகிய வட்டத்துக்குள்
குதூகலத்துக் குடும்பச் சுழலில்
மாட்டி வாடிடும் மகளிர்
கூட்டத்தில், இல்லறம் என்பதைவிட
தொண்டறம் என்பதே எமது
தூய வழி என்று காட்டி வாழ்ந்து
தன்னைத்தானே எரித்துக்கொண்ட
மேன்மை வரலாற்றுக்கு உரிய மெழுகுவத்தி அவர்!
அடக்கம் அவரது அணிகலன்!
வீரம் அவரது குருதியோட்டம்!
விவேகம் அவரது தலைமைப் பண்பு.
தான் கண்ட _ கொண்ட
கொள்கைக்காக அதனைத் தந்த
தலைவருக்குத் தன்னைத் தந்து
செறிவான வாழ்வை அய்யாவுக்குத்
தந்து அவர்தம் ஆயுளை நீட்டித்த
ஒப்பற்ற செவிலியர்!
அய்யாவுக்குப் பின்னும் ஆற்றொழுக்காக
கழகம் வளர தலைமையேற்று
இயக்கம் வளர்த்த
இணையற்ற தலைவி!
பற்றற்ற உள்ளம் பகைக்கஞ்சா
படைத் தலைமை; ஈடு இணையற்ற
கொடை உள்ளம்.
தமக்குள்ள அத்தனை சொத்துக்களையும் பொதுவுக்கே
ஆக்கிய அருட்கொடை
அதன் அழியா வரலாற்றுச் சின்னம்
பெரியார் _ மணியம்மை
அறக்கட்டளையும் அதோ
உயர்ந்து நிற்கும்
பெரியார் _ மணியம்மை பல்கலைக் கழகம் உள்பட
எத்தனையோ கல்வி நிறுவனங்கள்
இவை எல்லாவற்றிற்கு மேலாக,
மனித நேயத்தின் மறுபெயர் அம்மா!
ஆம் திருச்சி நாகம்மை குழந்தைகள்
இல்லம் என்று அரை நூற்றாண்டு தாண்டி, அன்புத்
தொட்டிலாகி அவனியில் உயர்ந்து
அறநிலையம் ஆனது அவரது தாலாட்டினால்!
இப்படிப்பட்ட சாதனையாளர் எங்கள் அம்மாவின் பிறந்த நாள் என்றால், அது மானிடத்தின் புதுவாழ்வின் சகாப்தம் என்பதல்லாமல் வேறு என்ன?

அய்யா வாழ்க!
அம்மா வாழ்க!
தொண்டறம் வளர்க!

- கி. வீரமணி,
சென்னை தலைவர்,
10.3.2010 திராவிடர் கழகம்.


*************************************************************************************



உழைத்தாயே வளர்த்தாயே

தொன்னூற் றைந்து ஆண்டு
தொண்டு செய்து பழுத்த பழத்தை
தோள் கொடுத்து வளர்த்தாயே!
தொல்லை பலயேற்று உழைத்தாயே!
தொண்டு செய்பவருக்குத்
தொண்டு செய்வதுதான்
என் கடனென்று
எலும்புதேய நடந்தாயே
உற்றார் உறவெல்லாம்
உதிர சம்பந்த மல்ல
கொள்கைப் பற்றாளரென்ற
காவியம் படைத்தாயே
காலத் தலைவர் மறைந்தாலும்
கழகத்தைக் கண்ணாய்க் காத்தாயே!
நெருக்கடி நிலைகளுக்கும்
நேருக்கு நேர் முகம் கொடுத்தாயே!
இராவண லீலா நடத்தி
இந்தியாவையே குலுக்கி
இனமானத் தீயாகி
எழுச்சி முத்திரைப் பதித்தாயே
பிரசவ அறையினில்
தாயைப் பறிகொடுத்த
தனயன் வீரமணிமேல்
பாச மழை பொழிந்தாயே
கைவிடப்பட்ட குழந்தைகளை
கைவிடாமலே
கைமடிமேல் சாய்த்து
கண்மணியாய் வளர்த்தாயே!
கல்வி நிறுவனங்களையும்
கடமை உணர்வோடு
கண்ணும் கருத்துமாய்
காப்பதில் மகிழ்ந்தாயே
அம்மா உங்கள்மீது
ஒரே ஒரு குறை!
தொண்ணூற்றைந்து வரை
தூய தலைவரைக் காத்து வளர்த்து
திருப்பிப் போட்டு
அய்ம்பத் தொன்பதுக்குள்
கண்மூடி சென்றதென்ன!
கண்கலங்கக் கேட்கிறோம்
அம்மா உங்கள்மீது
இந்தக் குறைதான்!
ஆனாலும் அய்யாவும்
நீங்களும் காட்டிய
பாட்டையிலே பம்பரமாய்
பணியாற்றுகின்றோம்!
மகத்தான தலைமையினை
மண்ணுக்குத் தந்து சென்றீர்!
மானமிகு ஆசிரியர் தலைமையிலே
மாண்புகள் குவித்திடுவோம்!
அன்னையார் அவர்களுக்கு
ஆயிரம் வணக்கங்கள்!

- கவிஞர் கலி. பூங்குன்றன்


----------------------- "விடுதலை” 10-3-2010









1 comments:

வஜ்ரா said...

இவரும் உஜாலாவுக்கு மாறிட்டாராம்.

http://www.tntj.net/?p=12175

அப்ப நீங்க...?